திவ்யபாரதியின் சிரிப்பில் அந்த கோர்ட்டில் இருந்தவர்களோ, ‘இவளுக்கென்ன பைத்தியம் பிடிச்சிருச்சா..? தூக்கு தண்டனைன்னு சொன்னதும், இப்படி சிரிக்குதே இந்தப் பொண்ணு.’ என்று அதிர்ந்த படி பார்க்க,
நீதிபதி கூட அந்த சந்தேகத்தில் தான் திவ்யபாரதியை அதிர்ச்சியாகப் பார்த்திருந்தார். ஆனால், செழியனுக்கு மட்டுமே, அந்தச் சிரிப்பு, வேறு செய்தி ஒன்றைச் சொன்னது.
அப்போது அனுமதி வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்த காவல் அதிகாரி ஒருவர், நேரே நீதிபதி விஜயலஷ்மியிடம் வந்து குனிந்து ஏதோ சொல்லவும், அதிர்ச்சி விலகாமல் ஒரு முறை திவ்யபாரதியை ஏறெடுத்துப் பார்த்தவர், பின் உதவியாளரை அழைத்து, அங்கிருந்த டிவியை ஆன் பண்ணச் சொல்லிப் பணித்தார். டிவி ஆன் ஆகவும், நியூஸ் சேனல் மாற்றச் சொல்ல, டிவியில் பிரேக்கிங் நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது.
டிவியில் பெண் ஒருவர், “தற்போது கிடைத்த முக்கியச் செய்தி, கடத்தப்பட்ட மந்திரி மகனும், அவரின் நண்பரும் சடலமாக புற நகர்ப் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியின் அருகே மீட்கப்பட்டனர். அவர்களின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக கிடைக்கப் பெற்றுள்ளது. உடல்களை வெவ்வேறு குப்பைத் தொட்டிகளின் அருகே வீசிச் சென்றுள்ளனர். அவர்களின் தலைப்பகுதியை வைத்து மட்டுமே உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் ஒருவரின் காது மட்டும் சற்று தூரம் தள்ளி, தனியாக கிடைத்திருப்பதாகத் தகவல் தெரிய வந்துள்ளது.
இதற்கு முந்தைய தொடர் கொலைகளிலும், இது போல் காது மட்டும் கிடைக்காமல் போலீஸ் தேடி அலைந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.” என்று செய்தி வாசித்துக் கொண்டிருக்க, கேட்ட திவ்யபாரதியோ, இன்னும் விடாமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.
நீதிபதிக்கு, திவ்யபாரதியின் சிரிப்பு இப்போது பயத்தை ஏற்படுத்தியது. நியூஸ் முடிந்ததும், டிவி அணைத்து வைக்கப் பட..
சிரிப்பை நிறுத்தியவள். “சபாஷ் ஹென்றி! நான் சொன்ன மாதிரி கதைய கச்சிதமா முடிச்சிட்ட.” என்றாள்.
அந்த மந்திரியோ, நியூஸை கேட்டு விட்டு வாயிலும் வயித்திலுமாக அடித்துக்கொண்டு கதறி அழ, “உன்னை சும்மா விடமாட்டேன்டி” என்றார் கோர்ட் என்றும் பாராமல்.
அலட்சியமாக சிரித்த திவ்யபாரதியோ, “இப்படித்தானே இருந்திருக்கும் அந்தப் பொண்ணை பெத்தவங்களுக்கும், போ, போய் உன் புள்ளைய பொறுக்கிட்டு போய் கொள்ளி வை!” என்றாள்.
கோபமுற்ற நீதிபதியோ “யாரும்மா அந்த ஹென்றி..? இங்கிருந்துகிட்டே ஆள் வச்சி கொலை பண்றியா..? நீயும் அவனும் கூட்டா..? அதான் விசாரிச்சி தண்டனை வாங்கிக் கொடுக்கறோம் என்று தான சொன்னோம், இப்படி பண்ணிட்டியே? பிள்ளைய பெத்தவரு எப்படி கதறுறார் பாரும்மா.” என்று ஆதங்கத்துடன் வரிசையாக கேள்விகளை அடுக்கினார்.
பாரதியின் மேல் கரிசனம் இருந்தாலும், விசாரணை முடிவதற்குள் இப்படி நடக்குமென்று சற்றும் அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. மத்திய மந்திரி மகனாக வேறு இருப்பதால், பிரச்சனைகளை வேறு அவர் எதிர்கொண்டாக வேண்டுமே!
அசராத திவ்யபாரதியோ, “இந்த நாதாரி நாயிங்கள கொல்றதுக்குக் கூட்டு வேற வைப்பாங்களா?” என்று கேட்டவள் “ஹென்றிங்கறது விசுவாசமுள்ள நாய், அவனுங்ககிட்டதான் இந்தப் பரதேசிங்கள பாத்துக்கச் சொல்லி விட்டுட்டு வந்தேன். நான் இரண்டு நாள் வராததுனால அவனுங்கள கடிச்சி குதறி கொண்டு வந்து போட்டுட்டு போயிருப்பானுங்க. அவனுங்களுக்கு அப்படித்தான் ட்ரெயினிங் குடுத்து வச்சிருக்கேன். இதுக்கு முன்னாடி, உடல் துண்டு துண்டா கடிச்சி குதறி இறந்தவங்களக் கூட, ஹென்றி தான் டீம் ஹெட்டா இருந்து கச்சிதமா பண்ணான். அவன் கூட இன்னும் மூன்று பேர் இருக்கானுங்க. அவன் எப்பவுமே வேலையில பர்பெஃட்” என்றவள், “அவனுங்களை எல்லாம் நீங்க ஜெயில்ல பிடிச்சி போட முடியாது.” என்று சிரித்தாள்.
“அப்புறம் என்ன கேட்டீங்க, பெத்த அப்பன் கதறுறானா…? ஏன், இவன் கசக்கி ஏறிஞ்சி கொளுத்தி சாகடிச்சானே, அவளைப் பெத்தவங்க கதறல, அன்னைக்கு எங்க போயிருந்தீங்க எல்லாம்? இந்த மாதிரி நாயிங்க வந்து மேஞ்சிட்டுப் போறதுக்கா பெத்து விட்டு இருக்காங்க எங்கள..?” என்று ஆத்திரம் பொங்கக் கேட்ட திவ்யபாரதி, மேலும் ஆத்திரம் தனியாதவளாக, “நீங்க விசாரிச்சி தண்டனை தர உங்களுக்கு ஆயிரம் ஃபார்மாலிட்டிஸ், மனித நேயம்னுவீங்க, அவன் திருந்தி வாழ சந்தர்ப்பம் குடுக்கனும்னு சொல்வீங்க, ஏன் அவனோட ஐடென்டில அவன் செய்த குற்றத்தை சேர்க்கறதுக்குக் கூட உங்க சட்டமும், தனி மனித உரிமையும் இடம் குடுக்காது. ஏன்னா, வெளிய வந்தா அவனுக்கு வேலை கிடைக்காது, பொண்ணு கிடைக்காது, வாழ்க்கை வீணாயிடும் இப்படி ஆயிரம் காரணம் இருக்கு உங்களுக்குச் சொல்ல.”.
“ஆனால்…” என்று சற்று நிறுத்தி அனைவரையும் ஒருமுறை சுற்றிப் பார்த்தவள், “அப்படி அவன் செத்தாத்தான் என்ன..? இந்த சமூகத்தால ஒதுக்கப்பட்டு, ஒருத்தன் இல்ல நாலு பேர் கூட சாகட்டுமே! எனக்கும் இவனுங்க இப்படி சட்டுனு செத்துப் போறதுல கொஞ்சமும் உடன்பாடு இல்ல. வேற வழி இல்லாமத்தான் இப்படி..” என்று கையை விரித்தாள்.
“நீங்க மட்டும் ஒருத்தன் ஐடென்டிய மாத்திப்பாருங்க. அவன் தலையெழுத்தே மாறுதா? இல்லையான்னு தெரியும். பெருமையா தன்னுடய ஆதார் கார்டயோ, இல்ல… எந்த ஐடி கார்டையோ அவனால வெளிய நீட்ட முடியாது. அதுக்குப் பயந்தே, ஒவ்வொருத்தனும் தப்பு செய்ய யோசிப்பான், யோசிக்க வைக்கனும். அதுல இருக்கு இந்த நாட்டோட உண்மையான வெற்றி.” என்று முடித்தாள்.
நீதிபதி விஜயலஷ்மியோ, ‘திரும்ப திரும்ப சாத்தியம் இல்லாததை பேசுபவளை, நிச்சயம் இவளுக்குப் பைத்தியம் தான்’ என்று தான் பார்த்திருந்தார்.
இருந்தாலும் திவ்யபாரதியின் கூற்று முற்றிலும் தவறானது என்று அவளுக்குப் புரிய வைத்துவிட வேண்டும் என்ற வேகத்தில், “நீ சொல்றபடி அவங்க ஐடென்டில அவங்க குற்றத்தை சேர்க்கறாதாவே, வச்சிப்போம். இந்த சமூகம் அவனை ஒதுக்கியும், ஒருத்தன் முட்டி மோதி வாழ்ந்துட்டான்னா, அவன் அதே ஐடென்டியோடத்தான் கடைசி வரைக்கும் வாழனுமா..? இது அவன் சந்ததியையும் சேர்த்து பாதிக்காதா..?” என்று திவ்யபாரதியிடம் கேள்வியை வைத்தார்.
சிறு புன்னகை சிந்திய திவ்யபாரதி, “திருந்தி வாழ்ந்தா மட்டும் அவன் முன்ன செஞ்ச தப்பு இல்லன்னு ஆகிடுமா மேடம்.” என்றவள் “சரி, நீங்க சொல்ற மாதிரி, மேலும் குற்றம் பதிவாகாம திருந்தி வாழ்ந்தா, அவன் அஞ்சி வருஷமோ, இல்ல பத்து வருஷமோ தான் வாழ்ந்த நேர்மையான வாழ்க்கைய நிருபிச்சி சர்டிஃபிகேட் வாங்கித் தன் ஐடென்டிய மாத்திக்கட்டுமே..! நாம பெயர், அட்ரஸ் தப்பா பதிவாகி இருந்தா மாத்திக்கறது இல்லையா என்ன..?” என்றவளோ..
“ஒருத்தன் சொத்து சேர்க்கிறது தன் சந்ததிக்குத்தான், அப்படிப்பட்ட சந்ததி, தான் செய்யற தப்புனால பாதிக்கப்படும்னு தெரிஞ்சா தான், தப்பு செய்ய பயம் வரும், கைகள் நடுங்கும். சின்ன வயசுல, நம்ம பாட்டிங்க எல்லாம் தப்பு செஞ்சா அது உன் புள்ளைய பாதிக்கும்னு சொல்லித்தான் வளர்த்தாங்க, இப்போ அவனவன் புள்ளைங்களுக்கு சொத்து சேர்த்து வச்சிட்டா, அது போதும்னு நினைக்கிறான். அது இருக்க தைரியத்துல தப்பு செய்யுறான். கடவுள் வந்து தண்டிப்பார்னு அவனுக்கு எந்த உத்திரவாதமும் இல்ல. அப்படி இருக்கும் போது, கடவுள் செய்யறாரோ இல்லையோ, அரசாங்கம் செய்யட்டுமே..!” என்றாள் கண்களில் மின்னிய கனவுடன்.
எல்லாவற்றிருக்கும் ஒரு பதில் தயாராக வைத்திருப்பவளிடம் இனிப் பேசி ஒரு பயனும் இல்லை என்று முடிவு செய்த நீதிபதி, கடத்தப்பட்ட இருவரும் கூட கொலை செய்யப்பட்டு விட்டதால், திவ்யபாரதியை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்கும் அவசியமும் இல்லாமல் போக, ‘தூக்கு தண்டனை தேதி அறிவிக்கப்படும் வரை, திவ்யபாரதியை கோவை மத்திய சிறைச்சாலையில் ஒப்படைக்க வேண்டும் என்றும். தேவையான பார்மாலிட்டீசுகளை முடித்துக்கொண்டு, இரண்டொரு நாளில் அதற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ளும்படியும், திவ்யபாரதியிடம் ஏதும் கேட்க வேண்டி இருந்தாலும், அதனை இந்த இரண்டு நாட்களில் முடித்துக் கொள்ளும் படியும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.’
ஜீப்பில்.. செழியன், அழுத்தமாக திவ்யபாரதியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். செழியனுக்கு தெரியும், நிச்சயம் அவர்களை உயிரோடு விடமாட்டாளென்று. ஏன், அவன் இந்த கேஸில் நுழைந்திருக்காவிட்டால், சரணடைந்திருக்கவே மாட்டாள்.” என்று நினைத்துக்கொண்டவன்
‘உன் உயிரையும் துச்சமென நினைத்து, எனக்காக நீ செய்திருக்க இந்தச் செயலுக்கு பேர் காதல் இல்லனா வேற என்னடி?” என்று தன் விழிகளால் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவன் பார்வையை, எங்கோ பார்த்துக்கொண்டு கவனமாக தவிர்த்து வந்தாள், திவ்யபாரதி. யாருக்கு எந்த பதில் வைத்திருந்தாலும், செழியனின் கேள்விகளுக்கு மட்டும் அவளிடம் பதில் இல்லை.
செழியனின் பார்வையில், இப்போது இரண்டு கேள்விகள் இருந்தன. அந்த இரண்டுக்குமே அவளால் என்றுமே பதில் சொல்ல முடியாது, சொல்லவும் மாட்டாள் அவனின் ராட்சஷி என்று அறிந்தே இருந்தான் செழியன்.
ஒன்று விடை தெரிந்த பதில்தான். ஆனால், அதை ஒத்துக்கொள்ளும் தைரியமோ மனப்பக்குவமோ அவளிடம் இல்லை, அது அவனுடைய காதல்.
மற்றொரு கேள்விக்கான விடையையும் அவனேதான் தேடிக் கண்டறிய வேண்டும். ஏற்கனவே அவனுக்குள் முளை விட்டிருந்த சந்தேகம், திவ்யபாரதி கோர்ட்டில் சொன்ன பதிலில்.. இப்போது மேலும் உறுதியாகி இருந்தது. அவளுக்கு ஏதும் நேர்ந்து விடக் கூடாது என்றுதான், எதையும் விசாரிக்காமல் அவசரம் அவசரமாக திவ்யபாரதியை கோர்ட்டில் ஒப்படைத்திருந்தான். ஆனால் கோர்ட்டில் அவள் முற்றிலும் உண்மையை சொல்லவில்லை என்று அவனுக்கு உறுத்தியது.
கோர்ட்டில் சொல்லாதவள் இனி யார் கேட்டாலும், ஏன் அவனே கேட்டாலும் கூட சொல்லப்போவதில்லை என்று அறிந்திருந்தான்.
விடை தெரியாத பல கேள்விகளுடன், திவ்யபாரதியை அழைத்துக்கொண்டு செழியன் ஸ்டேஷனை நோக்கிப் பயணப்பட்டான்.