அத்தியாயம் : 10

பழைய நினைவுகளிலிருந்து வெளி வந்த வெற்றி தன் காதல் முளைவிடும் முன்னே கருகியதை எண்ணி பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டான்.

அருகில் அதே பெருமூச்சின் சத்தத்தில் திரும்பிப் பார்க்க மயிலாதான் கூண்டுக்குள்ளிருந்து காதை சொறிந்தது.

“ஓய்! என்ன கொழுப்பா? நான் செய்றத அப்படியே செய்வியா நீ?” அதன் செய்கையில் சுவாரஷ்யம் மிக தன் படுக்கையின் அருகே இருந்த கூண்டை நோக்கிச் சென்றான்.

அவனைக் கண்டதும் அது மீண்டும் மூச்சை இழுத்து விட, “அடியே ராங்கி! விட்டேன்னா பாரு” என்றவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

மருத்துவமனையிலிருந்து திரும்பியதுமே மயிலாவின் உரிமையாளரை தேடச்சொல்லி கான்ஸ்டபிள் ஒருவரை அனுப்பி இருந்தான். ஆனால் அவர் ஒரு நாடோடி போலும். ஒவ்வொருநாளும் வேறு வேறு இடங்களுக்குச் சுற்றுபவர். அவரைப்பற்றிய ஒரு விவரமும் அங்கிருப்பவர்களுக்கும் தெரியவில்லை.

பறவைகள் சரணாலயத்திலும் விட்டுப் பார்த்தான். அவன் கண்முன்னே மற்றக் கிளிகள் சிறகுடைந்த இதனைக் கொத்த இவனுக்குப் பாவமாயிற்று. பற்றாததிற்கு இவன் இரண்டடி எடுத்து வைத்ததுமே விசிலடித்து வேறு கூப்பிட்ட மயிலாவில் உருகிப் போனவன் ஆனது ஆகட்டும் என தன்னுடனையே திரும்ப அழைத்து வந்துவிட்டான்.

கையோடு அதற்கு என்ன கொடுக்க வேண்டும், எப்படி பராமரிக்க வேண்டுமென அங்கேயே கேட்டுக்கொண்டு அதற்கான கூண்டு ஒன்றையும் வாங்கிவிட்டே வீடு வந்தவன், அதை வளர்ப்பதற்கான உரிமைக்கும் (License) விண்ணப்பித்திருந்தான்.

(நம் நாட்டுப் பறவையான பச்சைக்கிளிகள் அழியக் கூடிய உயிரினங்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பதால் அதனை வளர்ப்பது வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1948 படி தண்டனைக்குரிய குற்றமாகும்)

(ஆஃப்ரிக்கன் க்ரே பேரட்)

மயிலாவை வளர்ப்பது என்று முடிவெடுத்தவுடன் அதைப்பற்றிய தகவல்களைக் கூகுளில் தேடினான்.‌ 

மயிலா ஆஃப்ரிக்கன் க்ரே பேரட் (சாம்பல் நிற கிளி) வகையைச் சார்ந்தது. மனிதர்களின் சத்தங்களை உள்வாங்கி அதை அப்படியே பிரதிபலிக்கும் திறன் கொண்டது. 

ஜப்பானில் தப்பியோடிய இந்த வகைக் கிளி ஒன்று அதன் உரிமையாளரின் பெயரையும் முகவரியையும் திரும்ப திரும்பச் சொன்னதில் மீண்டும் அதன் உரிமையாளரிடமே ஒப்படைக்கப் பட்டதாக தரவுகள் இருப்பதைக் கண்டவன் வியந்தான்.

“நீ அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?” அதன் மூக்கை ஆட்காட்டி விரலால் ஆட்ட, “மயிலா..மயிலா” என்றது தன் கீச்சுக் குரலால்.

இதுவரை அம்மு மட்டுமே அவன் தனிமையின் துணையாகி இருக்கிறாள். இன்று ஒரு துணை கிடைத்த மகிழ்ச்சியில் “என் அம்முகுட்டி” என்று கொஞ்சியவனை, கண்களை உருட்டி,”மயிலா” என்றது மீண்டும். சிரித்துவிட்டான் அவன்.

பிடிக்காததைச் செய்யும்போது இப்படித்தானே அவளும் முறைப்பாள்.

அவளின் நினைவுகளை மட்டுமே தனிமையில் சுமந்தவன் பரம குஷியாகிப்போனான். அவளைப்பற்றி பேசவும் ஆள் கிடைத்த உணர்வு.

“இங்கப் பாரு! எனக்கும் உன்னை கூண்டுக்குள்ள வைக்க விருப்பம் இல்ல! அடிபட்ட சிறகுல திரும்ப அடிபடாம பத்திரமா இருந்துக்குவியா சொல்லு திறந்து விடுறேன்” அதனிடம் டீல் பேசினான்.

“மயிலா…மயிலா…” என்றது திரும்பவும்.

“சரி சரி! கத்தாத” என்றவன் கூண்டைத் திறந்துவிட மெல்ல அடிபட்ட சிறகை இழுத்துக்கொண்டு அன்ன நடை நடந்து வந்த மயிலா ஒய்யாரமாய் அவன் தோளில் ஏறிக்கொண்டது.

“மனுஷங்க கிட்ட உனக்கு கொஞ்சமும் பயமே இல்ல” என்றவனும் கூண்டுக்குள்ளிருந்த வாழைப்பழத்தை சிறிதே தோல் நீக்கி அதனிடம் நீட்டினான். அவன் தோளில் இருந்தபடியே கொத்தித் தின்ற மயிலாவிடம், “ப்ரண்ட்ஸ்” என்று அவன் கை முஷ்டியை மடக்கி நீட்ட என்ன புரிந்ததோ அதன் அலகால் முட்டியது மைலாவும்.

“எங்க நான் சொல்றதை அப்படியே சொல்றியா பார்க்கலாம்!” என்று உற்சாகமாகினான் அவனும்.

பத்திரம் காட்டியே பத்திரமாய் என்னை உனக்குள் பதுக்கிக் கொண்டவளே!

அன்னையாய் அரற்றி மிரட்டி அருகிருந்து அமுதளித்தவளே!

தீயது துளியேனும் நான் தீண்டிவிடாமல் தீயாய் முறைத்துக் காத்தவளே!

நண்பனுக்காய் நாண் ஏற்றி நின்றேன். அம்பெய்திக் கொன்றாய்…

தோற்றாலும் ஆழிப்பேரலையாய் மீண்டும் மீண்டும் படையெடுப்பேன்…

உன் காலடித் தீண்டி தீண்டியே காதலால் உன்னைச் சிறையேடுப்பேன்.

அன்பில் மிரட்டும் அன்னையாய் நீ வேண்டும்…

தோள் சாய தோழியாய் நீ வேண்டும்…

உன் முந்தானைச் சிறையினில் மூச்சு முட்டும் வரம் வேண்டும்…

என் எழிலரசியின் இளவரசியாய் நீயே என் மடித் தவழ வேண்டும்… 

அத்தனையும் அருளிவிடு என் அன்னமே அம்முவே!

தன்னவளைப் பற்றி மெய்மறந்து அவன் கவிபாட உற்சாகமாய் தலைசாய்த்துக் கேட்டது மயிலா.

*****

 “மாமா”

“ம்ம்..”

“மா…மா…” ஊரிலிருந்து திரும்பிய தன் மாமனுக்கு தலையில் எண்ணெய் வைத்துத் தேய்த்துக் கொண்டிருந்தாள் அம்மு எழிலரசி.

“காதுக்குள்ள கத்தாத அம்முகுட்டி” அரைக்கண்ணை மட்டும் திறந்து குரல் கொடுத்தான்.

மருமகள் டப் டப் என எண்ணெய் வைத்து அடித்துப், பரக்க பரக்கத் தேய்த்து, மெதுவே அழுத்திக் கொடுத்ததில் விடிந்த பின்னும் தூக்கம் சொக்கியது கார்த்திக்கு.

மீண்டும் “மா..மா” என்றாள் அழுத்தி.

மருமகள் செல்ல அழைப்பே ஏதோ என காட்டிக் கொடுக்க, “இந்த மாமன் தலையில இன்னைக்கு என்ன‌ மிளகாய் அரைக்கப் போற அம்முக்குட்டி!” என்றான். 

அரைத்தூக்கத்திலும் புன்னகையில் லேசாக உதடு வளைய கேட்டவனின் உச்சிமுடியை கொத்தாகப் பற்றி இழுத்து, “தூங்கறமாதிரி நடிக்கிறீங்களா மாமா?” மெல்லச் சிணுங்கினாள்.

ஒரு ஏஎஸ்பி இப்படி குழந்தையாகச் சிணுங்குவதை யாரேனும் கண்டால் வாயில் விரல் வைப்பார்கள்.

அவளின் குழந்தைத் தனம் மொத்தமும் அவள் மாமனிடம் மட்டுமே! செழியனிடம் கூட அவ்வளவு உரிமை எடுக்க மாட்டாள்.‌ 

ஏன் தாய் திவ்யபாரதியிடம் கூட ஒரு எல்லைக்குமேல் நெருங்கமாட்டாள். இதனால் அன்னை தந்தையின் ஏகபோக உரிமையைப் போட்டியின்றி அனுபவித்தவள் மிருத்யூஸ்ரீ.

இருவருமே பெற்றதோடு சரி! ‘இந்தா உன் அம்மு நீயே வளர்த்துக்கொள்’ என்று தள்ளி நின்றுவிட்டார்கள்.

திருமணமே வேண்டாம் என்று பிடிவாதமாக நின்றுவிட்டவனுக்கு சிறுவயதில் அவன் தொலைத்த அம்முவை திருப்பித் தருவதை விட வேறு கைமாறு என்ன செய்துவிட முடியும்?

பால்குடிக்கும் நேரம் தவிர கார்த்தியிடமே தஞ்சமாகினாள் கார்த்திக் இளவரசனின் எழிலரசி. பேருக்குத்தான் மாமனே தவிர அம்முவின் அனைத்தும் அவன்தான்.

எப்போதும் வெள்ளை வேட்டி கருப்புச் சட்டையும், முறுக்கு மீசையுமாக ஊருக்குள் அடங்காத காளையாக சுற்றி வருபவன், சின்னவளின் கைப்பொம்மையாகி அடங்கி நிற்பதை அவர்கள் வளர்ந்த மலைக்கிராமமே வியப்போடு கண்டுச் சென்றதுண்டு. 

தன்னைக் கடந்துச் செல்லும் கன்னியரின் கடைப் பார்வையினை காலனா காசுக்கு கூட மதிக்காதவன், அம்முவின் அகலவிழிச் சுட்டிக் காட்டும் பொருட்களை அரைநொடியில் கொண்டுவந்து இறக்குவான். அதுதான் அவளது மாமன்.

அவனின்றி அசையாது உலகு என்பதுபோல் அம்முவை அசைத்துப் பார்க்கும் ஒரே சக்தி கார்த்தி மட்டுமே!

“என் மண்டையக் கழுவாம என்ன விசயம்னு நேரடியாச் சொல்லு அம்முக்குட்டி”

“அது வந்து… வந்து”  அம்முவின் விரல்கள் தலையில் தந்தி அடித்தன.

“அதான் ட்யூட்டிக்கு கூடப் போகாம விடியமுன்ன வந்துட்டியே குட்டிமா! விசயத்துக்கு வா!” குலுங்கிச் சிரித்தவனை தோளில் அடித்தாள்.

“போங்க மாமா! ரொம்ப நாள் ஆச்சே நாம இரண்டு பேரும் வெளில போயின்னு லீவு போட்டா ரொம்பத்தான். போங்க நான் ட்யூட்டிக்கே போறேன்” கோபம்போல் நடித்து எழுந்தவளை இழுத்துத் தன் முன் உட்கார வைத்தான்.

“உனக்கு நடிக்கக் கூடத் தெரியல குட்டிமா. உன்‌ மாமானிட்ட என்ன சொல்லணும்?” பேசிக்கொண்டே தன் முன்னால் அமர்ந்திருந்தவளின் கொண்டையாக முடிந்திருந்த கற்றைக் கூந்தலைத் தளர விட்டான். 

இளஞ்சூடான எண்ணெயை அவள் தலையில் தடவி அதன் வேர்களில் அழுத்தம் கொடுக்க, பேச வந்த விசயமே மறந்து போயிற்று மாதரசிக்கு.

சொக்கிய விழிகளை விரட்டியடித்து, “மாமா நான் ஒரு விசயம் சொல்லட்டா?” என்றாள் பீடிகையுடன்.

“சொல்லத்தானே வந்திருக்க குட்டிமா ஆரம்பி” என்றவன் தன் பணியைத் தொடர,

“நான் ஒருத்தர லவ் பண்றேன் மாமா! நீங்கதான் அப்பாட்ட பேசணும்” என்றாள் பட்டென்று.

இதமாய் தலையைப் பிடித்துவிட்ட கார்த்தியின் கரங்கள் நொடிநேரம் தயங்கிப் பின் தன்‌ பணியைச் செவ்வனேத் தொடர, ‘என்ன இன்னுமே குதிக்கக் காணோம்?’ குழம்பினாள் அவள். 

“என்ன மாமா ஒன்னுமே சொல்ல மாட்றீங்க?” தலையைத் திருப்பி தன்‌ மாமனின் முகம் கண்டாள்.

எந்தச் சலனமுமில்லாது தன்னை நோக்கிய விழிகளில் என்ன கண்டாளோ? 

மனதில் நின்ற பொய்யுடன் மாமனின் விழிகளைச் சில நிமிடங்களுக்கு மேல் அவளால் எதிர்கொள்ள முடியவில்லை. தடுமாறி, தானே தலை கவிழ்ந்து கொள்ள மெல்லப் புன்னகைத்தான் அந்த தாயுமானவன்.

“உங்களுக்கு பிடி…பிடிக்கலையா மாமா?” பொய்யாக ஒரு விசயத்தை அரங்கேற்றுவதில்தான் எத்தனைத் தடுமாற்றம்.

“இப்போ நான் என்ன சொல்லணும் குட்டிமா? நீ சொன்னதை நம்பிட்டேன்னா? இல்ல பார்க்காமலே பையனைப் பிடிச்சிருக்குன்னா?”

அவன் கேள்வியே நான் உன்னைச் சுத்தமாக நம்பவில்லை என்று சொல்லாமல் சொன்னது. உள்ளுக்குள் பெருமூச்சு விட்டாள். 

‘எப்படி நம்ப வைக்கப் போறேன்னு தெரியலையே?’ படபடத்தது உள்ளம். ‘அந்த வெற்றியைத்தான் கட்டிக்கணும்னு நீங்க சொல்லிட்டா என்னால மறுக்க முடியாது மாமா. நீங்க நம்பறீங்களோ இல்லையோ என்கிட்ட பிரச்சனை பண்ணித்தான் ஆகணும். வேற வழி இல்ல எனக்கு. மனதில் உருப்போட்டாள்.

“உங்க அம்முகுட்டி பொய் சொல்லுமா? காட் ப்ராமிஸ் மாமா!” வழக்கம் போல் தொண்டையைப் பிடித்து சத்தியம் செய்தாள்.

மெல்லிய சிரிப்புடன் அவன் எண்ணெய்த் தேய்ப்பதை தொடர, “நீங்க நம்பலைல்ல! டேய் இங்க வாடா!” அந்தப்பக்கமாய் சென்று கொண்டிருந்த துருவனை அழைத்தாள்.

வாலாட்டிக்கொண்டு அருகில் வந்தவனின் தலைமேல் கை வைத்தவள், “இவன் மேல சத்திய…” என

அவள் முடிப்பதற்குள், “லொள்” என்று குரைத்துவிட்டு தெறித்து ஓடினான் துருவன்.

“அந்த நாய்கூட உன்னை நம்பலையே குட்டிமா” அடக்க மாட்டாமல் விழுந்து விழுந்து சிரித்தான்.

எழுந்து நின்று காலைத் தரையில் உதைத்துச் சிணுங்கினாள். “நீங்க யாரும் நம்பலைல்ல… ஒருநாள் அவனைக் கூட்டிட்டு ஓடப்போறேன் பாருங்க!”

“சரி சரி! இந்த மாமா நம்பறேன் போதுமா? அவன்‌யாரு? பெயர் என்ன ஊர் என்ன?” மருமகளை மீண்டும் அமரவைத்து சீப்பு கொண்டு அழுத்தி வாரி, மொத்தமுடியும் சேர்த்து மீண்டும் கொண்டையிட்டான்.

“அரை மணிநேரம் ஊறட்டும். அப்புறம் ஹீட்டர் போட்டுக் குளி” அக்கறையாக சொல்லி முடித்தவன், “இப்ப சொல்லு” என்றான்.

“அது வந்து… மாமா” தயங்கினாள்.

இப்படியெல்லாம் தயங்குபவளா அவன் வளர்த்த செல்லக்கிளி! 

அன்று செழியன் வெற்றியைப் பற்றி பேசியதற்கும், ஊரிலிருந்து வந்ததும் வராததுமாக இன்று விடியும்முன் மருமகள் வந்து நிற்பதற்கும் தொடர்பு இருப்பதை மனம் யூகித்திருந்தது.

என்னவாக இருந்தாலும் அவளேச் சொல்லட்டும் என வேடிக்கை மட்டும் பார்த்திருந்தான்.

“அன்னைக்கு ஏர்போர்ட்ல… அந்த தங்க பிஸ்கட் அவர்தான்” என்றவள் தலையை குனிந்துகொள்ள விரல்கள் கையில் பிடித்திருந்த சீப்பின் இடைவெளியை ஆராய்ந்தது.

மீண்டும் தன் மாமனிடமிருந்து பதில் எதுவும் வராமல் போகவே மெல்ல தலையை நிமிர்த்தினாள். 

அவனும் அவளைத்தான் விழி அகலாமல் பார்த்திருக்க, “அது சூழ்நிலை மாமா” என்றாள் தயங்கி.

“எனக்காக திருந்தி…” என்றவளுக்கு அதற்குமேல் முடியவில்லை. மாமனின் பார்வையில் பொய்கூட சரியாக சொல்ல வரமாட்டேன் என்று நிற்க கலங்கி நின்றாள்.

இப்படி பொய் சொல்லித்தானாக வேண்டுமா? அவளுக்கே சலிப்பு வந்தது. தங்கையிடம் சொல்லும்போது இருந்த உற்சாகமும் தைரியமும் தன்னைத் தூக்கி வளர்த்தவன்முன் வரவில்லை.

அவள் ஒவ்வொரு அசைவுகளையும் அவதானித்தவனுக்கா புரியாது? அவன் நம்பவேண்டுமே என மருமகள் பிரம்மப் பிரயத்தனம் செய்வதை புரிந்தவனின் இதழ்களில் மெல்லிய சிரிப்பு.

“ஏன் குட்டிமா முதல்லயே சொல்லல? நீ மாமாட்ட எதும் மறைச்சி பழக்கமில்லையே!” மருமகளுக்காக நம்புவதுபோல் நடித்தான்.

மாமன் சிரிக்கவும்தான் அவள் இதழ்களிலும் மெல்லியப் புன்னகை மலர்ந்தது. 

“காதெல் வந்தா சீக்ரெட் மெயின்டைன் பண்ணுவாங்களாம் மாமா” அவன் காதருகில் மெல்ல குசுகுசுத்தவள் வெட்கப் படுவதுபோல் வேறு நடித்து வைத்தாள்.

தாய் அறியா சூல் உண்டா? தான் பெரியப் பெண்ணானதையே தாயிடம் சொல்லாமல் ஓடிவந்து மாமனிடம் தயங்கி தயங்கி நெளிந்துகொண்டு நின்றவள் இவனிடம் மறைக்கிறாளாமா? மருமகளின் பொய்யில் அவனுக்கு சிரிப்பு வந்தது.

“அதான் அவன் உன் பின்னாடிச் சுத்தினதை இந்த மாமன்கிட்டருந்து மறைச்சிட்டியா குட்டிமா!” என்றதும் படக்கென நிமிர்ந்தாள். 

வெற்றியின் நினைவு வந்தது. அவன்தானே அவள் பின்னால் சுற்றியது. கலக்கமாக மாமனை ஏறிட்டாள்.

“யாரு… யாரு..மாமா பின்னாடி சுத்தினா?” என்றாள் மெல்லிய படபடப்புடன்.

மருமகளை இன்னும் சீண்டிப் பார்க்கும் ஆவல் எழ, “யாரா? என்ன குட்டிமா இப்போதானே சொன்ன!” என்றான் மர்மப் புன்னகையுடன். 

உன்‌பின்னாடி சுத்தாமலா என் பட்டுக் கிளியை கொத்திட்டுப் போக பார்க்கிறான் அவன்” யாரென்று சொல்லாமலே அவனும் சீண்டிப்பார்த்தான்.

“நான் எ..ன்ன சொன்னேன்?” அந்நிமிடம் வெற்றியைத் தவிர அவள் நினைவில் தான் காதலிப்பதாகச் சொன்ன ஜெர்க்கின் மனிதன் வரவே இல்லை.

தலைசுற்றியது அவளுக்கு. வெற்றியைப் பற்றி அவள் மூச்சுக்கூட விட்டதில்லையே! அதன் காரணம் அவளும் அறியாள். 

மாமனின் முரட்டுக் கோபம் அறிந்ததாலா? இல்லை மாமனுக்குப் பிடித்த மாணவனை அவனிடம் காட்டிக்கொடுக்க விரும்பவில்லையா? 

சிறுவயதிலிருந்தே வெற்றிதான் தன் ஆயக்கலைகளின் வாரிசு என மீசை முறுக்கிச் சொல்லும் மாமன்‌ நினைவில் வந்ததாலா!

ஏதோ ஒன்று இன்றுவரை வெற்றியைப் பற்றி தாயுமானவனிடம் மூச்சு விட்டதில்லை அவள். சொல்லப்போனால் கார்த்தியிடம் அவள் மறைத்த ஒரே விசயமும் இதுதான்.

தான் சொன்னப் பொய்யான காதலன் நினைவில் நின்றாலல்லவோ புரிந்துகொள்ள!. அதில் மாமனின் கேள்வி புரியாமல் தடுமாறினாள்.

“அதான் அந்த திருட்டுப் பய!” கள்ளச்சிரிப்புடன்‌ மாமன் சொல்லவும்தான் அவள் முகத்தில் சிரிப்பே எட்டிப் பார்த்தது.

அந்த திருட்டுப் பயலும் வெற்றிதான் என்று அவளெங்கே அறிவாள்!

அன்று செழியனுக்கு அழைத்தக் கையோடு, கார்த்தியின் அலைபேசி எண்ணை வாங்கி ஆதியோடு அந்தமாக செழியனிடம் சொல்லாததையும் சேர்த்து கார்த்தியிடம் ஒப்பித்துவிட்டப் பிறகே ஒருவன் உறங்கினான் என்பதை அறியாமலே மாமனிடம் கதை அளந்து கொண்டிருந்தாள்.

“நீங்க வளர்த்த கலை அத்தனையும் எனக்கு சொல்லிக்குடுத்தீங்க அதேப்போல நீங்க வளர்த்த எழிலரசியையும் எனக்கே குடுத்துடுங்கப்பா” தயக்கமும், ஏக்கமும் போட்டிப்போட தவிப்புடன் ஒலித்த வெற்றியின் குரலில் கார்த்தியின் முகத்தில் புன்னகை மலர்ந்திருந்தது.

அம்மு எப்படியோ வெற்றியும் அப்படியே. 

கார்த்தி எனும் மாமனிதன் மறுத்துவிட்டால் அதைமீறி ஒரு துரும்பைக்கூட வெற்றியால் அசைக்க முடியாது. ஏன் அசைக்கவும் மாட்டான். குருதட்சனையாக நினைத்து தன் காதலை தனக்குள் பொத்திக்கொள்வான் இறுதிவரை.

அவ்வளவு அன்பும் மரியாதையும் அவன்மேல். 

அவளும் அப்படியேதான். கார்த்தி மறுத்தான் என்றால் அவன் எந்த நாட்டின் இளவரசனாகவே இருந்தாலும் திரும்பியும் பார்க்க மாட்டாள்.

கார்த்தியும் மருமகள் விரும்பாத எதையும் அவள் இருக்கும் திசைப்பக்கம்கூட அண்டவிடமாட்டானே! மூவருக்குள்ளும் அப்படி ஒரு பிணைப்பு.

அதில், செழியனிடம் கூட சொல்லாத அவர்களின் சந்திப்பில் நடந்த நிகழ்வுகளை அப்படியே கார்த்தியிடம் பகிர்ந்திருந்தான் வெற்றி. 

அம்முவுக்கும் தன்மீது விருப்பமே என தெளிவாய்க் கோடிட்டுக் காட்டிவிட்டான். அதற்குமேல் யோசிக்க அந்த மாமனுக்கு ஒன்றுமில்லை.

அதுவும் ஆசான் என்றழைத்து பேசத்தொடங்கியவன் முடிக்கும்போது அப்பா என்றழைத்தல்லவா முடித்திருந்தான். 

‘கேடிப்பய என்‌மருமகளை என்கிட்டருந்து ஆட்டையைப்போட ஒத்தை இராத்திரியில என்னையவே தத்து எடுத்துக்கிட்டான்’ கிண்டலாய் நினைத்தாலும் சொல்லமுடியா ஆசுவாசம் அந்த கற்பாறைக்குள்.

இதே கருப்புச் சட்டை மனிதன்தான், இதேப்போல் ஒரு நடுநிசியில், நிலவின் சாட்சியாய், வெற்றியைத் தனக்கு கொல்லிப் போடும் வாரிசாய் பிரகடனப்படுத்தினான் என்பதை காலத்தின் ஓட்டத்தில் கார்த்தி மறந்துவிட்டிருந்தான்.

இந்த காதலின் தொடக்கப் புள்ளி, பல வருடங்களுக்கு முன்பு அவன் போட்டுவைத்தப் புள்ளையார் சுழி! என்பதை அறிந்திருக்கவில்லை கார்த்தி.

வெற்றியின் அழைப்பு அம்முக்காக மட்டும் வந்த வெறும் வாய் வார்த்தையல்ல என்பதை உணரும் நாளில் அந்த கற்பாறை உருகிக்கொள்ளட்டும்!

வெற்றியின் நினைவில் சிலையாக அமர்ந்திருந்தவனை “மாமா…” என்று சத்தமிட்டு உலுக்கினாள்.

“என்ன ஃபீலீங்ஸ்ஸா? அவர்‌ ஒன்னும் பரம்பரைத் திருடன் கிடையாது” என்று சிணுங்கிக்கொள்ள, தூங்கி எழுந்து அக்காவைத் தேடி வந்திருந்த மிருத்யூஸ்ரீ, அனைத்தையும் கேட்டதும், “எக்கோவ் பின்ற போ” என்றாள் படிக்கட்டில் பாதி ஏறி நின்றபடி. 

‘ஆத்தி! என்னமா நடிக்கிறா? இவளைப் போலீஸ்ல சேர்த்ததுக்குப் பதிலா நடிகையாக்கி இருக்கலாம். ஒரு நடிகையர் திலகத்தை தமிழ்நாடு மிஸ் பண்ணிடுச்சி. ம்ம்..’ மனதிற்குள் புலம்பியவளை,

“படிக்கட்டுலருந்து புடிச்சித் தள்ளிடுவேன் போடி” முகத்தை வெட்டினாள் தமக்கை.

“ம்ம்… நீ நடத்து” என்று சைகைக் காட்டிய மிருத்யூ, “மாமு, காட் மஸ்ட் பீ சேவ் யுவர் பிரைன்” என்றவள் தமக்கை அடிக்கும்முன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள்.

“நிஜம்மாவே அவர் திருடன் கிடையாது மாமா நம்புறீங்கதானே?”  பச்சைப்பொய் என்று தெரிந்தே சொன்னாள். 

“என்‌ அம்முக்குட்டி மனசைத் திருடினத் திருடன் போதுமா?” என்றவன் மெல்ல அவள் மூக்கைப் பிடித்து ஆட்டி,

“கொலைகாரனான உன் மாமனையே வீட்டில வச்சி சோறு போடுற உன் அப்பன் ஒரு திருடனைத் தன் மருமகனா ஏத்துக்க மாட்டானா என்ன?” என்றான் அலுங்காமல் குலுங்காமல். 

விழிகள் மருமகளைக் கூறு போட, “மா…மா” என அலறி அதிர்ந்து நின்றாள் பாவை.