அத்தியாயம் – 1

ஓம் சாய் நமோ நமஹா!

ஸ்ரீ சாய் நமோ நமஹா!

ஜெய் ஜெய் சாய் நமோ நமஹா!

சத்குரு சாய் நமோ நமஹா!

சுற்றிலும் பசுமை போர்த்திய அழகிய மலைக்கிராமம். மேகத்தை கொஞ்சம் கிள்ளி, தேகத்தில் பூசிக்கொள்ளலாம், அவ்வளவு அருகில் மேகக் கூட்டங்கள்.

அதிகாலைச் சூரியன், மலைகளோடு முத்தமிட்டுக் கொண்டிருந்த அந்த அதிகாலை வேளையில், கொஞ்சம் உயரமான பகுதியில் அமைந்திருந்தது, அந்தக் கல் வீடு. சுற்றிலும் ஓடுகளால் வேயப்பட்டு, மலைமகளின் மடியில் தவழ்ந்த அந்த மலைக் குடிசையின், வெளி வாசலில்.. ஆறு ஒன்று ரம்மியமாக ஓடிக்கொண்டிருந்தது.

அந்த ரம்மியத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல், குடிசையின் உள்ளே, மெல்லிய ஒலியில் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசித்துக் கொண்டிருக்க, சொல்லப்பட்ட செய்தியில் கண்கள் நிலைக்க, வெறித்த பார்வையுடன் உடல் குறுக அமர்ந்திருந்தாள், பெண்ணொருத்தி. அதில் காட்டப்பட்ட காணொளியில் அவள் உடல் விறைக்க ஆரம்பித்தது. கை, கால்கள் நடுங்க,  உடல் வெட வெடக்க தன்னை கட்டுப்படுத்த முடியாது போனவள், அருகில் பழக்கூடையில் வைக்கப் பட்டிருந்த கத்தியை எடுக்க கை நீட்டிய நேரம், போர்வையின் உள்ளிருந்து நீண்ட வலிய கரம் ஒன்று, அப்படியே அவளை இழுத்து தன்னுள் சுருட்டிக் கொண்டது.

அவனின் நீண்ட ஒரு கை தொலைக்காட்சியை அணைத்திருக்க, மற்றொரு கை தன்னவளை அணைத்து வளைத்துக் கொண்டது.

சற்று தாமதித்து இருந்தால், நடக்கவிருந்த விபரிதத்தை நினைத்துப் பார்த்த அந்தக் கைகளுக்கு உரியவன்  சற்றும் தாமதிக்காமல், அதற்கான தண்டனையை பெண்ணவளுக்குத்  தர ஆரம்பித்தான்.

இப்போது பெண்ணவளுக்கு தேவை காயங்கள், உலகையே மறக்க வைக்கும் காயங்கள். அதைத்தான் அவன் தந்து கொண்டிருந்தான், காயப்படுத்தும் காயங்களாக இல்லாமல், அவளை ஆற்றுப்படுத்தும் இன்பக் காயங்களாக தன் இதழ் கொண்டு இதழ் மூடி… அவளை தன்னிலை இழக்கச் செய்திருந்தான்.

பெண்ணவளை இழுத்து மார்பில் போட்டுக்கொண்டவன், அவள் விழிகளில் வழிந்த கண்ணீரை பெருவிரல் கொண்டு துடைத்து, அவள் விழிகளுக்குள் ஊடுருவிப் பார்த்தவன், “என்ன கண்ணம்மா, மறந்துருடா” என்று சொல்லி, அவள் கூந்தல் வருடி, தட்டிக்கொடுக்க, மெது மெதுவே துயில் கொண்டாள் பாவை.

பெண்ணவள் தூங்கியதும், அந்த பிரேமிட்ட ஃபோட்டோ முன் வந்து நின்றவன், சீக்கிரமாவே உன்னைத் தேடி வருவேன், உன்னைய என்னைக்குப் போடுறேனோ, அன்னைக்குத்தான் என் மனசு சாந்தி அடையும் என்று சபதமிட்டான்.

**************************

கோயம்பத்தூர் போலீஸ் தலைமையகம்:

முகப்பில் போலீஸ் என்று பொறிக்கப்பட்ட  இன்னோவா கார் ஒன்று கிரீச்சிட்டு வந்து நிற்க, அதன் கதவைத் திறந்து கொண்டு, காக்கி யுனிஃபொர்ம் சரசரக்க, தன் அடர்ந்த மீசையை முறுக்கிக்கொண்டு இறங்கினான், டெபுட்டி சூப்பரின்டெண்டன்ட் ஆஃப் போலீஸ் (DEPUTY SUPERINTENDENT OF POLICE) DSP செழியன்.

ஒட்டவெட்டப்பட்ட கேசம், பார்வையால் ஸ்கேன் செய்யும் தீட்சணய விழிகள், முறுக்கேறிய தேகம், என்று அக்மார்க் குத்தப்பட்ட பக்கா போலீஸ்காரன் அவன். காக்கி யூனிஃபொர்ம், அவன் காதலி.

அவன் வீறு கொண்ட நடையில், எதிர்வரும் ஒவ்வொருவரும் விலகி வழிவிட, எதிர்ப்பட்ட காவலர்கள் அவனுக்கு சல்யூட் வைத்தனர். ஒவ்வொருவருக்கும் அவரவர் பதவிக்கேற்ப தலையசைப்போ, சின்னதாய் புன்னகையோ வைத்துக் கடந்தான். அவனின் ஒற்றைப்புன்னகை நண்பர்களுக்கு மயக்கத்தையும், எதிரிகளுக்கு கிலியையும் தரும்.

எதிரில் குற்றவாளி ஒருத்தனை அழைத்துக் கொண்டு காவலர் ஒருவர் வந்து கொண்டிருக்க, அந்தக் குற்றவாளியோ இவனைக் கண்டதும் பயந்து அங்கிருந்த தூணின் பின் மறைந்து கொண்டான்.

செழியன் கடந்து சென்றதும் அந்தக் காவலரை முறைத்தவன், “யோவ், இவன் முன்னாடி போய் என்னை கூப்பிட்டு வந்துருக்க.., என் நாளே போச்சு போய்யா” என்று சொல்ல,

அந்தக் காவலரோ, “உன் கேஸ் அவர் கண்ட்ரோல்ல இருக்க ஸ்டேஷன்ல தான் வருது பார்த்துக்க.” என்று சொல்லவும்,

“யோவ் அதுக்கு ஒரு முழம் கையித்த குடு. நான் தொங்கிடுறேன்.” என்று பயத்துடன் சொன்னான்.

“இத நீ  அவர் ஏரியால கைய வைக்க முன்னாடி யோசிச்சு இருக்கணும்.” என்றவர், கடந்து சென்ற செழியனுக்கு சல்யூட் ஒன்றை வைத்தார்.

காவலருக்கு தலையசைத்துக் கடந்தவன், DIRECTOR GENERAL OF POLICE (DGP) என்று பெயர் பொறிக்கப்பட்ட அறையின் முன் நின்று லேசாக கதவைத் தட்ட,

உள்ளிருந்து “வாங்க மிஸ்டர் செழியன்” என்று DGP ராஜேந்திரனின் குரல் அழைத்தது.

உள் நுழைந்தவன், விறைத்து நின்று ஒரு சல்யூட் அடிக்க, “அட நீ வேறய்யா, எப்ப பாரு விறைப்பா நின்னுகிட்டு.” என்று சலித்தவர், “என்னதாய்யா நடக்குது, தொடர்ந்து கொலைக்கு மேல கொலை, இதுவரைக்கும் நாலு கொலை நடந்திருக்கு, பத்திரிக்கையில போட்டு கிழி கிழின்னு கிழிக்கிறாங்க, இந்த மீடியா காரங்க அதுக்கும் மேல.. அவங்களே ஒரு கதைய ஜோடிச்சி எழுதி, மக்கள பயமுறுத்துறாங்க.”

அதுவும் ஒரு குறிப்பிட்ட பத்திரிக்கையின் பெயர் சொன்னவர், “அதில ஒரு ஆர்ட்டிக்கிள், ‘தப்பியோடும் ரவுடிகள், போட்டுத்தள்ளும் கொலைகாரர்கள், பூப்பறிக்கும் போலீஸ்கள்.’ அப்படின்னு டிப்பார்ட்மென்ட் மானத்த ஏலம் போட்டு வித்துட்டு இருக்காங்க.” என்று சொல்லி நிறுத்தினார்.

அவர் பத்திரிக்கையின் பெயர் சொன்னதுமே.. அது யாராக இருக்கும் என்று மனதில் நினைத்துக்கொண்டவன், கோபத்தில் “பாப்பு…” என்று பல்லை கடித்துக்கொண்டான்.

“இந்த கேஸ்ல என்னன்னு நீயே இறங்கி பாரு, ஒரு பக்கம் பொலிடிக்கல் பிரஷர் வேற” என்று சொல்லியவர் கேஸ் ஃபைலை, அவன் முன் தூக்கிப்போட்டார்.

அதுவரை பின்னால் கை கட்டிக்கொண்டு எதுவும் பேசாமல் நின்ற செழியனோ, “சார், செத்தவங்க நாலு பேர் மேலயும் சின்ன சின்னதா நிறைய கேஸ் இருக்கு, செத்தவங்கள்ல ஒருத்தன் அரசியல் வாதி, ஒருத்தன் தொழிலதிபர், மத்த ரெண்டு பேருக்கும் எந்தத் தொடர்பும் இல்ல. அதுல ஒருத்தன் கஞ்சா விக்கறவன். அவங்க போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் படி, மூன்று பேர் ஒருமாதிரியும், மத்த ஒருத்தன் ஒரு மாதிரியும் கொல்லப்பட்டிருக்காங்க. இவங்க நாலுபேரையும் சாகடிக்சது ஒருத்தரா? இல்ல.. இது சீரியல் கொலையான்னு, இனி விசாரணையிலதான் சார் கண்டு பிடிக்கனும்.” என்று சொல்லி நிறுத்தினான்.

DGP யோ புன்னகைத்தவர், “இதுக்குதாய்யா இந்த கேஸ உங்கிட்ட குடுக்கறது. நான் கூப்பிட்டவுடனே எதுக்காக கூப்பிட்டுருப்பேன்னு தெரிஞ்சி, பைல பாக்காமயே கேஸ அப் டு டேட் வக்சிருக்க பாத்தியா, அதான், DSP செழியன்!” என்று தட்டிக் கொடுத்தவர், “கவனம் செழியா..! எனக்கு என்னவோ இது இத்தோட முடியும்னு தோணல.” என்றவர் “உங்கப்பன கேட்டதா சொல்லு” என்று உரிமையுடன் தன் நண்பனை கேட்டு விடையளித்தார்.

டேபிளில் இருந்த ஃபைலை எடுத்துக்கொண்ட செழியனோ, “அவர் வெளிநாட்டுல, பொண்ணு வீட்ல ஜாலியா இருக்கார் அங்கிள்.” என்று சிரித்து விடைபெற்றான். இப்போது தன் மீது அக்கறை கொண்ட அங்கிளாக மாறி இருந்த DGPயிடம்.

DGPயின் அறையில் இருந்து திரும்பி வந்த செழியன், அங்கே ஓரமாக அமர்ந்திருந்த காவலரை அருகே அழைக்க, அவர் எழுந்து அருகே வரவும், அவன் உள்ளே போகும் போது, ஒழிந்து கொள்ள முற்பட்ட அந்த ரவுடியை பார்த்தவன், “உனக்கு வேற தனியா சொல்லனுமா, வாடா!” என்று அழைத்தான்.

உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்த அந்தக் குற்றவாளி எழுந்து அருகில் வரவும், “குடும்ப பொண்ணு கழுத்துல இருந்து தாலிய அத்துருக்க.. ராஸ்க்கல்” என்று ஓங்கி அறைந்தவன், “தூணூக்குப் பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டா, உன்னை விட்டருவேன்னு நினைச்சியா..? உன் மச்சான் போலீஸ்னா.., என்ன வேணா செய்வியா நீ..? அதுவும் வண்டில போகும் போது நீ செயின இழுத்ததுல, அந்தப் பொண்ணு மண்டையில அடிபட்டு கிடக்கு, அந்தப் பச்சப் புள்ளைக்கு தாயில்லாமப் போனா, நீ பாப்பியா..? இல்ல, உன் மச்சான் வந்து பார்ப்பானா..?” என்று சொல்லி மீண்டும் கை ஓங்க,

அறை வாங்கிய ரவுடியோ, “சர்…” என்று அலறியவன், தானே, எவ்ளோ பேரிடம் நகை அடித்தேன், அதை எந்த சேட்டிடம் அடகு வைத்தேன் என்று அனைத்தையும் ஒப்பித்திருந்தான்.

உண்மையில் அவன் இங்கு வந்தது, அவன் போலீஸ் மச்சானின் மூலம் ஹெல்மெட் அணிந்து இருந்ததால், அது தான் இல்லை என்றும், தன் வண்டி ஒரு வாரம் முன்பு களவு போனதாகவும் சொல்லி, அந்த கேசை  முடிக்கத்தான்.

(நிறைய சினிமா பார்த்துருப்பான் போல பக்கிப்பய, என்னமா ஜோடிக்குது கேஸ, யார்கிட்ட செழியன் டா).

ஆனால், செழியனின் ஓரே அறையில் உண்மை அத்தனையும் ஒத்துக் கொண்டவன், தானாக கம்பி எண்ணத் தயாராக இருந்தான்.

“இன்னொரு வாட்டி இந்த தப்ப பண்ண…” என்று முறைத்த செழியன், “திங்கறதுக்கும், கழுவறதுக்கும் கை இல்லாமப் பண்ணிடுவேன், ஜாக்கிரதை!” என்று எச்சரித்தான்.

காவலருக்கு பார்த்துக்கொள்ளும்படி கண் காட்டிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தான்.

காவலருக்கோ, தான் சொல்லாமலே குற்றவாளியைப் பார்த்து கேசை புரிந்து கொண்டவன் மேல் பெரும் அதிர்ச்சி. அவன் ஒருமுறை பார்த்தாலே, பார்வையில் ஸ்கேன் செய்து கொள்வான் என்று அவருக்குத் தெரியவில்லை போலும்.

***********************

அந்த அறையின் ஏசி குளிரிலும், வியர்வை பூக்க தலையை இடமும் வலமுமாக உருட்டிக் கொண்டிருந்தான் அவன், திடீரென “அம்மா” என்று அலறியபடி, தூக்கத்திலேயே தன் ஒரு பக்க தலைய பிடித்துக்கொண்டான்.

உடலை முறுக்கிக்கொண்டு, தலையை அங்கும் இங்குமாக உருட்டியவன் “அம்மு….” என்று அலறிக்கொண்டு எழுந்து அமர்ந்தான்.

ஒரு பக்கமாக, தலையில் கை வைத்து தடவிப் பார்த்தவனுக்கு, இத்தனை நேரம் தான் கண்டது கனவு என்று புரிய, “ஆ…ஆ….” என்று கத்திக்கொண்டு, சுவற்றில் ஓங்கிக் குத்தினான்.

இவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக, தினமும் அவன் கனவில் வதைக்கும் ஞாபகங்கள். இந்த வதைக்கும் வலியை, வெல்லும் வழி இதுவரை அவன் அறிந்திருக்கவில்லை. அவன் அறிந்து கொள்ளவும் விரும்பவில்லை.

கர்ணன் வாழ்வதற்கு கவசகுண்டலம் எவ்வளவு முக்கியமோ, இவன் வாழ்வதற்கும் அவளின் நினைவுகள் முக்கியம்…!