Advertisement

வீடு வந்து போது எட்டரை மணி,
ஆட்டோவில் இருவரும் வந்து இறங்கிய போது வீடே அதிசயமாய் பார்த்தது. சாரதா, சித்ரா, ராதா என்று அந்த வீட்டின் பெண்கள் எல்லாம் வந்திருக்க, “வாங்க சித்தி, வாங்க அண்ணி” என்றாள் எதுவும் முகத்தினில் காண்பித்தது கொள்ளாமல்.
மேகநாதன் வீடு சென்று அழைக்கவில்லை என்றாலும், தொலைபேசியில் சொல்லியிருக்க, அவர்களும் உடனே வந்து விட்டனர். அத்தனை பிரச்சனைகளுக்கு பிறகும் சாரதாவும் வந்து விட்டார். என்ன சொல்ல?  
“என்னம்மா, எங்க போயிட்டு வர்றாங்க?” என்று ராதா அகிலாண்டேஸ்வரியிடம் கேட்க,
“ஹாஸ்பிடல்க்கு” என்றார்.
“எதுக்கு?” என்றவளிடம்,
“தெரியலடி உங்கண்ணன் சொல்லிட்டு போனான், இனிமே தான் கேட்கணும்” என்று ஒன்றுமே தெரியாதவர் போல அகிலாண்டேஸ்வரி பேசினார்.
“இந்தம்மா இருக்கே” என்று திரு அவரை பார்க்க,
அவரோ “என்ன துளசி? எதுக்கு போனீங்க?” என்றார் எல்லோர் முன்னுமே,
“சொல்லிவிடு” என்ற த்வனி அதில் இருக்க,
“அது அத்தை செக் அப்க்கு” என்றாள்.
அவளின் சின்ன அத்தைகள் “என்ன செக் அப்” என்றனர் உடனே!
“மாசமா இருக்கேன் அத்தை” என்று விட, அங்கே அப்படியே ஒரு நிஷப்தம்!
“என்ன நிஜமாவா?” என்றவர்கள்,
“சந்தோஷம்” என்று முகத்தினில், வார்த்தைகளில், மகிழ்ச்சியை காட்டினர்.
அந்த வீட்டின் இன்னொரு பெண் பிள்ளையான சித்ரா தான் “பொண்ணு வயசுக்கு வந்துட்டா இப்போ போயா?” என்று சொல்லிவிட்டார்.
துளசியின் முகம் கூம்பி விட, அவள் அங்கேயிருந்து அடுத்த நொடி நகர்ந்து விட்டாள். சற்று தூரத்தில் இருந்த திரு அதை பார்த்திருந்தவன் அவனும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான். இருந்தால் ஏதாவது பேசிவிடுவோம் என்றே நகர்ந்து விட்டான்  
“நான் என்ன கேட்டேன்னு துளசி இப்படி முகத்துல அடிச்சா மாதிரி போகுது?” என்று சித்ரா கோபப் பட்டார்.
“பின்ன என்ன சித்ரா? மீனாக்ஷி சீக்கிரமே பிறந்துட்டா, இப்போ என்ன வயசு துளசிக்கு, நாங்களே என்னடா ஒத்தை பிள்ளையோட நின்னுடுமோன்னு வேண்டாத தெய்வமில்லை, நீ இப்படி பேசற?” என்று அகிலாண்டேஸ்வரி சண்டைக்கு கிளம்பியவர்,
“எனக்கு அப்புறம் இங்கே துளசி தான், எத்தனை முறை சொன்னாலும் உங்களுக்கு ஏன் புரியறது இல்லை. வீணே எதுக்கு பேச்சு” என்று ஆரம்பிக்க,
“அம்மா” என்று அவரை அடக்கிய ராதா, பின்..     
“நீங்க சும்மா இருங்கத்தை, அப்புறம் அம்மா மாதிரி அண்ணாக்கு கோபம் வந்துடப் போகுது! அப்புறம் என் பொண்ணுக்கு பொண்ணு வந்தா கூட நான் பெத்துக்குவேன்! உங்களுக்கு என்னன்னு சொல்லும்!” என்று அடக்கி விட்டாள்.
அவள் கிண்டல் செய்கிறாளா? இல்லை திரு பேசும் விதத்தை கொண்டு சொல்கிறாளா! என்று யாருக்கும் புரியாத போதும், அந்த இடம் அமைதியாகிவிட்டது.
ஆளாளுக்கு வீட்டிற்கு கிளம்பும் போது வந்து துளசியிடம் “உடம்பை ஜாக்கிரதையா பார்த்துக்கோ துளசி” என்று சொல்லிச் செல்லவும் மறக்கவில்லை.
ராதா கூட வந்து “உடம்பை பார்த்துக்கங்க அண்ணி, மெலிஞ்சு தெரியறீங்க” என்று சொல்லி சென்றாள். ராதா பெரிதாக உறவு பாராட்டாவிட்டாலும் சண்டை போடமாட்டாள். இப்போது மாற்றி மாற்றி வீட்டினரால் துளசிக்கு கொடுக்கப் படும் அதீத முக்கியத்துவம் துளசியின் பால் தானாக சென்று பேச வைத்திருந்தது.   
சாரதா தனியாக “த பாரு, அவ கூட இத்தனை வருஷம் கழிச்சு மறுபடியும் உண்டாகிட்டா. நீ சீக்கிரம் குழந்தை பெத்துக்க பாரு!” என்று ஷோபனாவிடம் சொல்ல,
“எங்க இன்னைக்கு தான் வீட்டுக்கே வந்திருக்கேன்! நீயும் அப்பாவும் என்னை இங்க நிம்மதியா இருக்க விடுங்க, நீ என்னை சரியாவே வளர்க்கலை, நான் என்ன பண்ண?” என்று பதில் கூறினாள்.
“ஆ” என வாய்பிளந்து பார்த்தவர், “நல்லதுக்கே காலமில்லை” என்று சொல்லிச் சென்றார்.
எல்லோரும் சென்ற பிறகு, ஹாலில் தான் மீனாக்ஷி அமரவைக்கப் பட்டு இருக்க, இப்போது அவள் குடிசைக்குள் தூங்க தயார் செய்து, துளசி வெளியில் தூங்கத் தயாராக,
“என்ன பண்ற நீ, பிள்ளதாச்சி பொண்ணு நீ இங்க தூங்க வேண்டாம், உள்ள படு! நான் இங்க படுத்துக்கறேன்!” அகிலாண்டேஸ்வரி வந்தார்.
ஓய்ந்து போயிருந்தார் அவர்! வேலைகள், கூடவே மக்கள் துணைகளை விட்டு இருந்தது. இப்போது துளசி வந்ததும் ஒரு பலம் வந்திருந்தது. கூடவே ஒரு வாரிசு வரப் போவது அப்படி ஒரு மகிழ்வையும் கொடுத்திருக்க, துளசியிடம் எப்போதையும் விட கனிவுடன் நடந்து கொண்டார். அவரின் வீட்டின் மகிழ்ச்சி துளசியிடம் இருப்பது போல ஒரு தோற்றம் வந்திருந்தது. இல்லாத மூன்று மாதமாக வீடே களையிழந்து இருந்தது.    
அதுவுமன்றி இப்போது பேத்தியிடம் சிநேகமாகி விட்டார் தானே! அதனால் அவளுடன் இருக்க தானாகவே ஒரு பிரியம் வந்திருந்தது.  
“நீங்க எப்படி கீழ தூங்குவீங்க அத்தை?”  
“கீழ எங்க தூங்கறேன், இப்போ கட்டில் எடுத்து போட்டுக்கலாம், பின்ன காலையில கொண்டு போய் போட்டுக்கலாம், மாமா தான் என்னை இங்க தூங்கச் சொன்னாங்க! உன்னை வேண்டாம் சொன்னாங்க!” என்று மேகநாதன் மேல் காரணம் சொல்ல,
அதற்கு பிறகு துளசி ஏன் பேசப் போகிறாள்!
திருவும் வெங்கடேசும் சேர்ந்து கட்டிலை தூக்கி வந்து போட, “பாட்டி எனக்கு ரெண்டு நாள் கதை சொன்னிங்க தானே, இப்பவும் சொல்லுங்க” என்று மீனாக்ஷி கேட்டாள்.
“இப்போவே கேட்டுக்கோ, இன்னும் கொஞ்சம் மாசத்துல புது ஆள் வரப் போறான் என் கதையை கேட்க!” என்று விஷயத்தை போட்டுடைத்தார்.
“யாரு? யாரு வரப் போறா?” என்று மீனாக்ஷி கேட்க,  துளசி தடதடக்கும் இதயத்தோடு நின்று மகளை பார்த்திருந்தாள்.
“சொல்லு துளசி, அவளுக்கு தம்பியோ தங்கச்சியோ வரப் போறான்னு சொல்லு!” என்று அகிலாண்டேஸ்வரி சொல்ல,
முதலில் புரியாத மீனாக்ஷி புரிந்த உடன் “மா நிஜம்மாவா?” என்று துளசியை பார்த்து கேட்டாள்.
“ஆம்” என்பது போல தலையாட்டியவள், “இன்னைக்கு ஹாஸ்பிடல் போனேன் இல்லையா அப்போ தான் தெரியும்” என்று சொல்ல, மகள் குடிசையை விட்டு வெளியே அவளை அணைக்க ஓடி வந்தாள்.
“இரு, இரு, அங்கேயே இரு” என்று துளசி உள்ளே போக, அவளை அணைத்துக் கொண்டாள் மீனாக்ஷி.
அம்மாவை அணைத்தவாறே பாட்டியைப் பார்த்து, “நீங்க முதல்ல எனக்கு சொல்லுங்க, நான் அதை பாப்பாக்கு சொல்லிக்குவேன்!” என்று பேசினாள்.
இந்த பதிலில் பயந்து இருந்த துளசியும் மகளை  அணைத்துக் கொள்ள, திரு அவர்களை விழி எடுக்காமல் பார்த்து நின்றான். எங்கேயும் அவன் பேச்சுக்கள் இல்லை. பார்வைகள் மட்டுமே!    
அகிலாண்டேஸ்வரி “வாயை பாரு, வாயை” என்று நொடித்தவர், “பேய் கதை சொல்லப் போறேன்” என்று கண்களை உருட்டினார்.
“ஒரு பேயே பேய் கதை சொல்கிறதே” என்று மீனாக்ஷி உடனே சொல்ல,
“அடடே ஆச்சர்ய குறி!” என்று வெங்கடேஷ் சொல்ல, எல்லோருக்கும் சிரிப்பு வர சிரித்தனர்.
“அடி கழுதை, இரு, பத்து தலை பேய் கதை சொல்றேன்!”
“ராவணன் கதையா பாட்டி!” என்று மீனாக்ஷி கேட்க,
“முதல்ல உங்க அம்மாவை தூங்க அனுப்பு”  
“நீ போய் தூங்கும்மா” என்று சொல்லி மீனாக்ஷி அவளின் இடத்தில் படுத்துக் கொள்ள, அவரின் இடத்தில அகிலாண்டேஸ்வரியும் படுத்துக் கொண்டு கதை சொல்ல ஆரம்பிக்க, வெகு மாதங்களுக்கு பிறகு ஒரு நிம்மதி பெரியவர் சிறியவர் என அனைவர் மனதிலும்.
எல்லாவற்றையும் பார்த்திருந்த மேகநாதன், எல்லாம் சரியாகிவிட அவசர வேண்டுதல் கடவுளிடம் வைத்தார்.  
மகளை விட்டு செல்ல மனமே இல்லாமல் துளசி ரூம் உள் செல்ல, அதனை கவனித்த மீனாக்ஷி “பாட்டி என்னை பார்த்துக்குவாங்க, நீங்க தூங்குங்க போங்க!” என்று பெரிய மனுஷியாய் மகள் சொன்னாள்.
இதனையெல்லாம் திரு பார்த்திருந்தான்.
அப்போதும் மனதே இல்லாமல் துளசி உள்ளே செல்ல, சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த திரு “அப்போ மீனாக்ஷிக்காக தான் இங்கே வந்த, எனக்காக இல்லைல்ல” என்று கேட்டான்.
என்ன கேள்வி இது என்று துளசிக்கு தோன்றினாலும், அதற்கு பதிலே சொல்லாமல், “எனக்கு ஒரு மாதிரி களைப்பா இருக்கு தூங்கட்டுமா” என்று கேட்க,
“தூங்கு” என்றவன்,
“ஆனா இங்கே தூங்கு” என்று அவனின் படுக்கையை காண்பித்தான்.
எதுவும் சொல்லாமல் அங்கே சென்று படுத்துக் கொண்டாள். கர்ப்பம் என்று தெரிந்ததில் மகிழ்ச்சியாகவும் இருந்தது, இத்தனை வருடம் கழித்து என்பதில் கலக்கமாகவும் இருந்தது. எல்லாம் விட திரு தன்னை முதன் முதலில் கண்டு கொண்டது, ஒரு உவகையை கொடுக்க, அதனை அனுபவிக்க வேண்டி கண்களை மூட, அப்படியே உறங்கிவிட்டாள்.
திரு அருகில் சென்று அமர்ந்து கொண்டான் அவ்வளவே! உறங்கவேல்லாம் இல்லை. உறங்கும் துளசியை தான் கண்களில் நிரப்பிக் அப்படியே அமர்ந்திருந்தான்.
மனதில் ஒரு நிம்மதி இருந்தாலும் ஒரு கோபமும் இருந்தது, “அப்போ மீனாக்ஷி இல்லைன்னா இன்னைக்கு வந்திருக்க மாட்டாளா? அப்போ நான் யாரும் இல்லையா?” என்ற எண்ணம்.
“நான் எப்படி நடந்தேன் அவளிடம்” என்ற எண்ணம் மட்டும் அவனிடம் சிறிதும் இல்லை. அப்படி ஒரு உரிமையுணர்வு தலை தூக்கியது!  
துளசி அந்த புறம், இந்த புறம், என புரண்டு புரண்டு படுக்க, திரு அவளின் தலையை கோதி, மெதுவாய் அவளை தோளில் தட்டி கொடுக்க, அசைவின்றி உறங்க ஆரம்பித்தாள்.    

Advertisement