Advertisement

அத்தியாயம் பதினொன்று :
அணைத்து இருந்தவளை மெதுவாக விளக்கியவன், “உங்க வீட்ல வேற இதுக்கு ஒரு டாக்டர் இருக்குறா? உங்கம்மாக்கும் தெரியலை?” என்று குறைபட்டான்.  
“ரெண்டு மாசமா அவ வீட்ல இல்லை, எங்கயோ திருநெல்வேலி பக்கம் அவளுக்கு போஸ்டிங் போட்டிருக்காங்க, இதோட அவளுக்கு படிப்பும் முடியுது! எனக்கே தெரியலை அம்மாக்கு எப்படி தெரியும்!”   
“நான் யாரையும் எதுவும் சொல்லலை? போதுமா! அவளுக்கு கூப்பிட்டு வீட்ல எப்படி டெஸ்ட் பண்றதுன்னு முதல்ல கேளு, நாமளாவும் நினைக்க கூடாது!” என்றான். மனதிற்குள் இது குழந்தையாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதல் ஆவல் அத்தனையும் அவனுக்கு பொங்கியது.  
“ம்ம்” என்றவள், அவனின் தொலைபேசியில் இருந்து அழைத்து, வீட்டில் இருந்து எப்படி டெஸ்ட் செய்வது என்று கேட்க,
அவளானாள் பதில் சொல்லாமல் “ஏன்? எதற்கு?” என்று ஆயிரம் கேள்வி கேட்டாள்.
“சொன்னா சொல்லு, சொல்லாட்டி போடி!” என்று தங்கையிடம் அப்போதும் காரணம் சொல்லாமல் சண்டையிடும் துளசியை தான் பார்த்திருந்தான்.
பின் ஒரு வழியாக அவள் மெசேஜ் செய்கிறேன் என்று சொல்லி வைத்த நிமிடம் மெசேஜ் வந்து குதிக்க, “நீ இங்கேயே இரு, கீழ இறங்காத, வந்துடறேன்!” என்று விரைந்து கீழே இறங்கினான்.
படியின் மேலேயே கண் வைத்திருந்த அகிலாண்டேஸ்வரி இவன் மட்டும் இறங்கி வரவும் “என்னடா?” என்று வந்து ரகசியம் பேசினார்.
“மா ஒன்னுமில்லை, நீ இங்க வேலையை பார், யார் கேட்டாலும் சமாளி” என்று சொல்லி பத்து நிமிடத்தில் வாங்கி மேலே ஏறி வந்தவன், அங்கிருந்த பாத்ரூமில் டெஸ்ட் செய்ய சொல்ல,
பதட்டம் பதட்டம் மட்டுமே! துளசிக்கு அல்ல திருவிற்கு!
துளசி வந்து “ஆம்” என்று சொல்லும் வரையிலுமே!
பல முறை நினைத்திருக்கிறான், ஏன் இன்னொரு குழந்தை வரவில்லை என்று, இப்போது “ஆம்” என்று துளசி சொல்லவும்,
“தேங்க் யு, தேங்க் யு வெரி மச்” என்றான் திருநீர்வண்ணன்.
இந்த மாதிரி பாவனைகளுக்கு பழக்கப் படாத துளசி “இவர் எதுக்கு நமக்கு தேங்க்ஸ் சொல்றார்” என்ற பாவனையில் பார்த்தாள். துளசியை திரு உணர்ந்த அளவிற்கு துளசி திருவை உணர்ந்தாளா தெரியாது! ஆனால் துளசியின் காதல் அளவிற்கு திருவிற்கு இருக்குமா தெரியாது! இருவரின் உணர்வுகளுமே முன்னுக்கு பின் முரண்!    
அதற்குள் அகிலாண்டேஸ்வரி தன்னுடைய கணமான சரீரத்தை தூக்கி என்னவோ ஏதோவென்று மேலே ஏறி வந்து விட்டார்.
யாரோ வரும் அரவம் கேட்க திரு விரைந்து வந்து பார்க்க, “என்னடா பண்ற? அவளை ஏதாவது அடிச்சிட்டியா?” என்று கேட்டார்.
அவரை முறைத்து பார்த்தான் திரு!
“என்னடா என்னை முறைக்கிற? நீ செய்யற வேலையெல்லாம் அப்படி தான்! என்னவோ அவளை அடிக்காத மாதிரி முறைக்கிற” என்று நொடித்தவர் துளசியை தேட,
அவள் அவரை தயங்கி தயங்கி பார்த்தாள். ஒரு கூச்சம் வந்து ஒட்டிக் கொண்டது அவளிடம்.  
“என்னடா பண்ணின அவளை?” என்று மகனிடம் சண்டைக்கு கிளம்ப, திருவின் முகத்தினில் ஒரு புன்னகை.
“என்னடா மிரட்டுனா சிரிக்கிற?” என்றவர், துளசியை பார்க்க அவளின் முகத்தில் ஒரு தயக்கம், ஒரு கலக்கம்!
“இந்தம்மா வேற அடிச்சன்னுது, என்ன பண்ணுனன்னுது, முதல்ல நான் இங்க இருந்து எஸ்கேப் ஆகணும்” என்று நினைத்துக் கொண்டான்.
“என்ன துளசி?” என்று அவளின் அருகில் போக, பார்த்திருந்தவன் “நீயே சொல்லிக் கொள்” என்று சைகை காண்பித்து கீழே இறங்கி செல்ல ஆரம்பித்தான்.
அகிலாண்டேஸ்வரி அருகில் வரவும், “எனக்கு தெரியவேயில்லை அத்தை” என்றாள்.
“என்ன தெரியலை?” என்றவர் திரும்பக் கேட்க,
“அது இப்போ நாலு மாசம் இருக்கும்” என்றாள் தயங்கி தயங்கி.
புரிந்தும் புரியாமலும் மருமகளின் முகம் பார்த்தவர், “மாசமா இருக்கியா?” என,
“ம்ம்ம்” என்று தலையசைத்தவள், “இப்போ இங்கே வந்து தான் பார்த்தேன்” என்றும் அவசரமாக சொன்னாள். தான் சொல்லாமல் விட்டுவிட்டோம் என்று நினைத்துக் கொள்வாரோ என்று.
அவர் முகம் மலர்ந்து “நல்லா இரு” என்றார்.
“இப்போ யார் கிட்டயும் சொல்ல வேண்டாம்” என்றாள் கூடவே,
“ஏன்மா?” என்றவரிடம்,
“பொண்ணு வயசுக்கு வந்திருக்கா, இப்போ நான் மாசமா இருக்கேன்னு சொன்னா சிரிக்க மாட்டாங்க!”  
“இதுல சிரிக்க என்ன இருக்கு, உனக்கு சின்ன வயசுல கல்யாணம் ஆகிடுச்சு, இன்னும் உனக்கு முப்பது வயசு கூட ஆகலை, இது ஒன்னும் அதிக வயசெல்லாம் கிடையாது. மனசுல இப்படி ஒரு எண்ணத்தை கொண்டு வராத, அப்புறம் நான் சும்மா கலாட்டாக்கு உன் புருஷன் அடிச்சிட்டானான்னு கேட்கறதை, அவன் நிஜம்மா பண்ணிடுவான்!” என்று மிரட்டியவர்,
“இப்போ உடனே சொல்லலை, ஆனா விஷேசம் முடியறதுக்குள்ள சொல்லிடுவேன், என் வீட்டுக்கு வாரிசு வருது, இது எவ்வளவு சந்தோஷமான விஷயம்” என்று அவருக்கு அவரே பேசிக் கொண்டு நடக்க,
“நான்கு மாதம் எப்படி கவனிக்காமல் போனோம். குழந்தை நன்றாக இருக்க வேண்டுமே” இப்படி எண்ணங்கள்! அதனையும் விட மகள் எப்படி எடுத்துக் கொள்வாள். மிகுந்த குழப்பம்.
கணவனோடான மனத் தாங்கல்கள் எல்லாம் எங்கோ மறைந்து போயின!
இதே குழப்பத்தோடே அவள் இறங்கி வந்து மகளிடம் செல்ல, “அவளை குளிக்க வச்சு இந்த பாவாடை தாவணி போட்டு விடுங்க” என்று துவைக்கும் அம்மா கொண்டு வந்து கொடுக்க, மகளை குளிக்க வைக்க அழைத்து சென்றவளிடம் கிடைத்த முதல் தனிமையில் “ஏன்மா ஒரு மாதிரி இருக்க?’ என்றாள் மகள் அவளிடம்.
“ஒன்னுமில்லையே”
“அப்பா திட்டினாரா? சண்டை போட்டாரா?” என்று கேட்டாள். இந்த சில மாதங்களில் குழந்தைக்கு எப்படியான ஒரு எண்ணத்தை கொடுத்திருக்கிறோம் என்று வருத்தம் வர,  
‘சே, சே, இல்லைடா, காலையில ஊருல இருந்து வந்தேன் இல்லையா, அதான் லேசா தலைவலி!” என்று பதில் கொடுத்தாள்.
“அப்போ நீ போய் படுத்துக்கோ, எல்லோரும் இருக்காங்க தானே, நான் என்னை பார்த்துக்குவேன்!” என்று மகள் பெரிய மனுஷியாய் சொல்ல,
“அதெல்லாம் ஒன்னுமில்லை, தலைவலி தைலம் தடவினா சரியாகிடும்!”  
“ம்ம் சரி” என்று அவள் குளித்து வந்தாள்.
“பேன்ட் அளவு சரி வராது” என்பதால் திரு அவனின் புது வேஷ்டி சட்டையை பிரசன்னாவிற்கு எடுத்து கொடுத்திருக்க,
அதனை அணிந்து வந்தவன் தாய் மாமனாக அக்காள் மகளுக்கு குடிசை கட்ட, எல்லோர் பார்வையும் அவன் மீது தான்.  பின்பும் ஆட்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
துளசியின் பார்வை திருவிடம் படிந்து படிந்து மீள, அதை உணர்ந்தவனாக “என்ன?” என்றான் அவளிடம்.
“ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடறேன், டாக்டர் கிட்ட காமிச்சிடலாம், அத்தை கிட்ட சொல்லுங்க” என்றவளிடம் நேரம் பார்த்தான், மாலை ஐந்து மணி தான்.
பின் அகிலாண்டேஸ்வரியை தனியாக தள்ளி சென்று அவரை விட்டு டாக்டரிடம் பேச வைத்தான் திரு. அவர்களுக்கு எங்கோ ஒரு முறையில் தூரத்து சொந்தம், அதனையும் விட நன்கு அறிந்தவர் தான்.
துளசி மீனாவிடம் ரகசியமாக “அம்மாக்கு காய்ச்சல் வர்ற மாதிரி இருக்கு, ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடறேன். நீ என்னை தேடக் கூடாது!” என்று ரகசியம் பேசி, பிரசன்னாவை ஊருக்கு அனுப்புவது போல அந்த டேக்சியிலேயே அவளும் திருவும் வந்து ஹாஸ்பிடலில் இறங்கினர். ஆம்! அகிலாண்டேஸ்வரி வருவார் என எதிர்பார்த்திருக்க, திரு உடன் வந்தது இன்னும் அவளால் நம்ப முடியவில்லை. இன்னும் அந்த அதிசயித்தில் இருந்தாள்.
டாக்டருக்கு காத்திருந்து பார்த்து, அவர் ஸ்கேன் சொல்ல, அதுவும் செய்து, நான்கு மாத கர்ப்பம் என உறுதி செய்தார்கள்.
“எனக்கு தெரியவேயில்லை பெரியம்மா, குழந்தை நல்லா இருக்குது தானே, நான் கவனிக்கவேயில்லை” என்று ஒரு பயத்தோடும் பதட்டத்தோடும் கேட்ட துளசியிடம்,
“குழந்தை நல்லா இருக்கு, எதுக்கு இவ்வளவு பயம். எல்லோருக்கும் ஒரே மாதிரி, வாமிட்டிங், தலைசுத்தல் இப்படி இருக்காது, சிலருக்கு ஒன்னுமே தெரியாது. சிலருக்கு ஒரு சோர்வு, பதட்டம், பயம் இப்படி இருக்கும். சிலருக்கு கோபம், எரிச்சல் இப்படி இருக்கும். எதுவும் சொல்ல முடியாது”   
“என்ன திரு நீ தான் சொல்லணும், துளசி எப்படி இருக்கா”
“கொஞ்சம் நாள் அம்மா வீட்ல இருந்தா அத்தை, அதனால எனக்கு சரியாத் தெரியலை, இருந்தாலும் கோபமா, எரிச்சலா, இயல்புக்கு மாறா இருந்தான்னு இப்போ யோசிச்சா தோணுது!” என்றான்
பின்னே துளசியாவது அவனை விட்டு போவதாவது, சென்றால் என்றால் அது இயல்புக்கு மாறானது தானே! ஏன் போனால்? ஏன் போனால்? என்ற அவனின் குழப்பத்திற்கு ஒரு விடை கிடைக்க, அது தான் சரியான விடையா என்று தெரியாத போதும், அதுதான் விடை என நினைத்து ஆசுவாசப் பட்டுக் கொண்டான்.         
குழந்தை நன்றாக இருக்கிறது என்று சொல்லி, பின் சத்து மாத்திரைகள், போட வேண்டிய ஊசி, அட்வைஸ் அது இதென்று முடிந்து மீண்டும் ஆட்டோவில் வீடு வரும்வரை தேவையான ஒன்றிரண்டு பேச்சுக்கள் மட்டுமே இருவரிடமும்.
ஆட்டோவில் வருவது திருவிற்கு ஒரு எரிச்சலை கொடுத்தது. பின்னே புது கார் வாங்கியதும் நாகேந்திரன் எடுத்து போனவர் இன்னும் இதுவரை கொடுக்கவில்லை. அப்பாவின் பழைய பிரிமியர் பத்மினி இவனுக்கு செட்டாகாது.
எங்கேயும் குடும்பமாக போவதில்லை என்பதால் டூ வீலர் மட்டுமே அவனிற்கு போதுமானது. இப்போது இப்படி ஆட்டோவில் அவனின் வசதி வாய்ப்பிற்கு போவது ஒரு எரிச்சலை கொடுக்க அந்த யோசனையில் இருந்தான்.     
துளசியோ, முதல் குழந்தைக்கு அகிலாண்டேஸ்வரி தான் முழு நேரமும் கூட! இப்போது கணவன் உடன் போவது ஒரு புதிய உணர்வு, அவன் சகஜமாக பேச முயல்வது, அது இன்னும் ஒரு புதிய உணர்வு! மகளிடம் எப்படி சொல்வது ஓர் கலக்கம்! இப்படியாக ஒரு வித மோன நிலையிலேயே இருந்தாள்.  

Advertisement