Advertisement

“என்ன அண்ணா பதிலே காணோம்” என்ற நிருபமாவின் குரல் ஓங்கி ஒலிக்க, இப்படியாக வீடு களை கட்டியது. 
இந்த சப்தத்தில் பாதிக்கப்படாத இரு ஜீவன்கள் திருவும் துளசியும்!
துளசியின் கவனம் முழுவதும் மகளிடம் இருக்க, திருவின் கவனம் முழுவதும் துளசியிடம்.
எல்லோரும் இருப்பதால் மீனாக்ஷியின் வாய் பூட்டுடைத்து பேசிக் கொண்டிருந்தது. 
மேகநாதன் அகிலாண்டேஸ்வரி மூலமாக திருவிடம் எதோ கேட்க வர, “உங்களுக்கும் அம்மாக்கும் என்ன தோணுதோ பண்ணிக்கங்க, நானும் ஒன்னும் சொல்ல மாட்டேன், துளசியும் சொல்ல மாட்டா!” என்று விட்டான் அவரிடம் நேரடியாக.
தன்னிடமா மகன் பேசினான் என்று வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார். 
திருவின் கவனம் எல்லாம் துளசியிடம் மட்டுமே!  
அவனுக்கு மனது அடித்து சொல்லியது அப்படித் தான் என, ஆனால் துளசியை பார்க்க அவள் மிக இயல்பாய் இருந்தாள். அவளுள் நடந்திருந்த மாற்றம் அவளுக்கு தெரியவில்லையோ என்று தான் தோன்றியது.
ஆம்! முதல் பார்வையிலேயே துளசியின் தோற்றத்தை படம் பிடித்தவனுக்கு, அவளின் அந்த சோர்ந்த, லேசாக கருவளையத்தோடு கூடிய கண்கள், அவள் மீனாக்ஷியை கருவில் தாங்கி இருந்த போது இருந்த முகத்தினை ஞாபகப் படுத்தியது.
எப்போது அவளுடன்… யோசிக்க, மாதக் கணக்கு வந்தது. உற்று பார்த்த போது லேசாக மேடிட ஆரம்பித்து இருந்த அவளின் வயிறும் தெரிய, அதைக் கூட தெரியாமல் இருக்கிறாளா? இல்லை சொல்ல விருப்பமில்லையா? குழம்பி போனான்!
துளசி உடுத்தும் காட்டன் புடவைகளில் அந்த லேசான மேடிட்ட வயிறு யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை! ஆனால் மனைவியை அணு அணுவாய் கண்களிலேயே அளக்கும் திருவின் கண்களுக்கு தப்பவில்லை! 
அவனுக்கு தெரிந்தே ஆகவேண்டும், ஒரு வேளை என்னிடம் சொல்ல விருப்பமில்லையா? அப்போது திரும்ப போய் விடுவாளா? மனது அப்படித் தடுமாற, அவனால் ஒன்றும் முடியவில்லை. 
அவள் பாட்டிற்கு அந்த பக்கமும் இந்த பக்கமும் திரிந்து வந்தவர்களை கவனித்து கொண்டிருக்க,       
துளசி அவனின் புறம் வந்த போது, “எனக்கு உன்கிட்ட பேசணும் மேல வா” என்று சொல்லி மாடிக்கு சென்று விட்டான்.
அவன் சொன்ன த்வனி ஒரு பயத்தை கொடுக்க, இப்போது என்னவோ என்றும் தோன்ற, துளசியின் முகம் கலக்கத்தை தத்தெடுத்தது.
திரு எதோ சொல்வதையும், இவளின் முகம் கலங்குவதையும் பார்த்திருந்த அகிலாண்டேஸ்வரி அருகில் வந்து “என்ன துளசி?” என்றார்.   
“அத்தை அவர் என்னவோ பேசணும்னு மேல கூப்பிடறார்”  
“போயிட்டுவா, அவன் கோபப்பட்டாலும், திட்டினாலும் பொறுமையா பேசு! சண்டை போடாத!”  
“நாம எப்போடா சண்டை போட்டோம்? அவர் எப்போடா திட்டினார்? இவங்க ஏன் இப்படி சொல்றாங்க? எல்லோரும் இருக்காங்க, திரும்ப எல்லோர் முன்னையும் பிரச்சனையா? என்னால முடியாது!” என்று யோசித்துக் கொண்டே ஏறினாள்.
அது பெரிய மொட்டை மாடி, அவள் வந்ததும் அதன் கதவை தாளிட்டான். அவனின் செய்கையில் என்ன செய்கிறான் என்று விழிவிரித்து பார்க்கும் போதே, நடந்து யார் கண்ணிலும் எங்கே இருந்து பார்த்தாலும் தெரியாத ஒரு நிழலான இடத்திற்கு சென்று நின்று கொண்டவன்,
“உனக்கு ஏதாவது என்கிட்ட சொல்லணுமா?” என்றான் அங்கிருந்தே! பார்வையால் மீண்டும் அவளின் தோற்றத்தை ஆராய்ந்து கொண்டே!
“இல்லையே” என்பது போல தலையாட்டியவளுக்கு, ஒருவேளை கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்றதற்கு சொல்கிறானோ?” என்று தோன்ற,
“இனிமே நீங்க பேசாம இருந்தாலும், நீங்க என்னை பார்க்கலைன்னாலும் நான் போக மாட்டேன்” என்று சொன்னாள்.
உண்மையில் அவளுக்கு தெரியவில்லை! எப்போதும் நாட்கள் தள்ளி தள்ளி தான் வீட்டிற்கு தூரம் ஆவாள். சில சமயம் இரண்டு மூன்று மாதம் கூட ஆகும். அதனால் கவனிக்கவில்லை, அதையும் விட திருவின் ஞாபகமும் பெண்ணின் ஞாபகமும் இருக்க, வேறு எதிலும் சிந்தனை செல்லவில்லை. இப்படியும் இருக்கக் கூடுமோ என்று கிஞ்சித்தும் தோன்றவேயில்லை.
அவளின் முகத்தை பார்த்து பேசும் அத்தனை பேருக்கும் அவளுள் இருந்த சோர்வோ, அது எதனால் வந்ததோ என்று கண்டுபிடிக்க முடியாமல் இருக்க,
முகம் பார்த்து பேசாமல் எங்கோ பார்த்து பேசுபவனுக்கு இன்று பார்த்துமே அவளுள் இருந்த வித்தியாசத்தை கண்டு கொண்டான்!
அவளுக்கு தெரியவேயில்லை என்று புரிய, ஒருவேளை நான் தான் தப்பாக நினைக்கிறோமோ என்ற குழப்பம் வர,
“இங்கே வா” என்பது போல முகத்தினை சீரியசாக வைத்து அழைத்தான்.
அவனின் அருகில் நடக்க நடக்க துளசிக்கு பயம் தான் வந்தது! கால்கள் பின்னியது அவனின் பார்வையின் தீட்சண்யத்தில்! எதுக்கு விட்டுட்டு போன என அடிப்பாரோ என்ற பயமே வந்து விட்டது! இப்படி என்று தோன்றவேயில்லை அதுவரையிலுமே!  
அருகில் வந்ததும் துளசியின் கலங்கிய முகத்தை பார்த்ததும் மனதிற்குள் ஏதோ பிசைய அவளே எதிர்பாராமல் இறுக்கமாக அணைத்து கொண்டான்.
அவனின் அணைப்பில் அடங்கி அப்படியே நிற்க, நிமிடமாக அப்படியே நின்றவன், அணைப்பை விலக்காமல் முகம் நிமிர்த்தியவன் “என்னை பாரு” என்றான்.
துளசி அவன் முகம் பார்த்ததும் “உனக்கு ஏதாவது சொல்லணுமா?” என்றான் மீண்டும்.
அவளுக்கு சத்தியமாய் என்ன எதிர்பார்க்கிறான் என்று புரியவில்லை, “எனக்கு என்ன கேட்கறீங்கன்னு புரியலை” என்று கலங்கிய முகத்தோடு சொல்ல,
அதற்கு மேல் அவளின் முகத்தினை அருகில் பார்த்து தாள முடியாமல், துடிக்கும் அவளின் இதழ்களை வெறிக்க பார்த்தவன், அவளின் இதழ்களில் சத்தமின்றி முத்தமிட்டான்! உதடுகள் பிரியாத நீண்ட முத்தம்!
துளசியின் மனதினில் தானாக ஒரு ஆசுவாசம் பிறக்க அப்படியே நின்றாள்.
கூடவே கைகள் புடவைக்குள் நுழைந்து அவளின் மணி வயிற்றை தடவிக் கொடுக்க, உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடிய போதும்,
துளசிக்கு அப்போது தான் அவன் சொல்ல வருவது புரிய, மெதுவாக நாள் கணக்கு எல்லாம் பார்க்க, இத்தனை நாட்களாக கவனிக்காதது புரிய, எப்படி எப்படி கவனிக்காமல் விட்டோம் என்று தோன்ற, கடகடவென்று பயத்தில் கண்களில் இருந்து நீர் வழிந்தது.
அவனின் முத்தம் உப்பு கரித்தது!   
துளசிக்கு ஒரு பதட்டம், பயம், மகிழ்ச்சி எல்லாம் ஒருங்கே தோன்றியது, அவளிடம் இருந்து விலகியவன் “அழக் கூடாது” என்றான்.
ஆனாலும் அவளிற்கு கண்ணீர் பெருகியது!
கண்களில் இருந்து நீர் இறங்க, அவனின் உதடுகளாலேயே கண்ணீரை துடைத்தவன், “நாலு மாசமாவது இருக்கும்!” என்று சரியாகச் சொன்னான்.
ஊடலோ கூடலோ துளசியினது எதுவும் அவன் மறப்பது இல்லையே! 
கீழே மகள் இருப்பாள், தேடுவாள், என்றெல்லாம் மனதில் ஓடிய போதும் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் துளசி.   
கூடவே பயம் மகள் சமைந்து இருக்க இப்போது தான் கர்ப்பமா?
அவனை அணைத்துக் கொண்டே மீண்டும் கண்ணீர் உகுக்க, அவனின் சட்டை நனைந்தது.
“என்ன துளசி?” என்று ஆதூரமாகக் கேட்டான்.
“இப்போ நான் இப்படின்னா எல்லோரும் கிண்டல் பண்ண மாட்டாங்களா?” என்றாள்.
“எதுக்கு பண்ணுவாங்க? நாம என்ன கிழவன் கிழவியா ஆகிட்டோம். நிறைய பேருக்கு இப்போல்லாம் நம்ம வயசுல தான் முதல் குழந்தையே பிறக்குது!  எங்கப்பா நமக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வெச்சிட்டார். சொல்லப் போனா நீ மேஜர் கூட ஆகலை, குழந்தை பிறந்திடுச்சு!” என்று வெகுவாக சமாதானம் செய்தான்.
துளசியின் கலங்கிய முகம், அழுகை எல்லாம் அவனை சமாதானம் சொல்ல வைத்த போதும்,
ஒரு கூச்சம் தயக்கம் துளசியினுள் வந்து அமர்ந்து கொண்டது!                  
கூடவே இது தங்களின் யோசனை தானே ஒருவேளை இல்லாவிடடால்,  அவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்கள் அதனை பிரதிபலிக்க,
அதனை உணர்ந்தவன் “நிச்சயம் அதுதான்! நீ மீனாக்ஷி வயத்துல இருக்கும் போது இப்படி தான் இருப்ப, இப்போ கொஞ்சம் உயரமாகிட்ட, அப்போ இருந்ததை விட உடம்பு கொஞ்சம் வந்துடுச்சு, முகமும் சின்ன பிள்ளை முகத்துல இருந்து ஒரு பொண்ணோட முகமா மாறிடுச்சு” என்று மாற்றங்களை பட்டியலிட்டவன், “ஆனாலும் எனக்கு உள் மனசு சொல்லுது, நீ இப்போ அப்படி தான்னு” என்று சொல்லும் அவனை விழிஎடுக்காமல் பார்த்திருந்தாள்!
என்னை இவன் இவ்வளவு உணருகிறானா என்று!
ஆம்! அப்போது அவ்வளவாக பிடித்தம் என்பது இல்லாத போதும் குழந்தைக்காக என்று ஒரு உறவு என்ற போதும், துளசி அவனை கவர்ந்தாள். “அப்போது எனக்கு முன்பிருந்தது என்ன? அது என்ன காதல்?” என்று அவன் குழம்பியதும் உண்டு!    
மனம் ஒரு விசித்திர ஜந்து! அதனையும் விட கணவன் என்ற உறவுக்கு எப்படி பெண்கள் அடிமையோ அப்படி தானே மனைவி என்ற உறவும்!
பெண்களுக்காவது தாலி என்ற ஒன்று இருக்க, ஆண்களுக்கு அது இல்லாத போதும் பிணைப்பு இல்லையா என்ன?    
“இப்படி பார்க்காதே, அப்புறம் திரும்ப திரும்ப கிஸ் பண்ணத் தோணும். அதுக்கு தான் நான் உன்னை நீ பார்க்கும் போது பார்க்கறதில்லை. உன்னை தொட்டுட்டே இருக்கத் தோணும். நாம என்ன தனி தீவுலையா இருக்கோம். உனக்கு சொன்னா புரியாது. கூடவே என்னோட காரணங்கள். எங்கப்பா முன்னாடி நான் நல்லா இருக்க முடியாது. ஆனாலும் இப்போ குழந்தை வந்துடுச்சு. பரவாயில்லை நம்ம பொண்ணுக்கு பொண்ணு பிறந்ததுக்கு அப்புறம் வராம போச்சு, ம்ம், இப்போவே அதை சொல்லவும் முடியாது” என்றும் புன்னகையோடு பேசினான்.
என்னவோ புதிதாய் காதல் வந்த கன்னி பையன் போல!  
அவனின் பேச்சில் என்ன என்ற ஆச்சர்யத்தை அவளின் கண்கள் காண்பிக்க, அவன் பேச்சில் முகமும் செம்மையுற, என்ன அவளின் வாழ்க்கை வண்ணமயமாகிவிட்டதா! நம்பத் தான் முடியவில்லை!  
ஆனாலும் திருவை நம்பவும் முடியவில்லை, தனிமையில் பிதற்றுகிறவன் எப்படி மாறுவான் என்றும் சொல்ல முடியாது.  அவனோட பதிமூன்று வருடங்கள் ஆகிற்றே! அவன் எப்படி இருந்தாலும் பிடித்தமே அதில் மாற்றமில்லை!  
அவளின் நெற்றியில் மென்மையாக முத்தம் பதித்து அணைத்துக் கொண்டவன் மனது பிள்ளை செல்வத்துக்காக ஒரு வேண்டுதல் வைக்க,
துளசியிடம் கூட அவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை என்பது தான் உண்மை!                       

Advertisement