Advertisement

அத்தியாயம் எழுபத்தி எட்டு :

உன்னை காணாதுருகும்  நொடி நேரம் 

பல மாதம் வருடம் என மாறும் 

நீங்காத ரீங்காரம் நான்தானே 

நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே… 

சீரியசாக இருந்த அவளிடம் பேசவே ஒரு தயக்கம் வந்தது ஈஸ்வருக்கு. அமைதியாக அமர்ந்து வந்தான். ஆனால் அவளின் முகம் பார்த்து பார்த்து வர, வர்ஷினி உணர்ந்தாலும் எதுவும் பேசவில்லை.

மனதில் அவளை நினைத்து அவளிற்கே எரிமலை தான் குமுறிக் கொண்டிருந்தது.. “ஒவ்வொரு முறையும் இப்படி ஏதாவது செய்து வைத்து விடுகிறாய் நீ.. பிறப்பு தான் சொல்லும்படி இல்லையென்றாலும், வளர்ப்பிலும் தவறா? அதனை நீ காட்டிக் கொண்டே இருப்பாயா?” என யோசிக்க யோசிக்க.. கண்களை இறுக மூடி மனதை சமன்படுத்தி அந்த தாக்கத்தில் இருந்து வெளியே வந்தாள்.  

ஈஸ்வருக்கு மிகவும் சோர்வு கண்களைத் தானாக மூடிக் கொள்ள.. அதுவரை அவன் புறம் திரும்பிக் கூட பார்க்காமல் இருந்தவள்.. இப்போது அவனின் கைகளை பிடித்துக் கொள்ள.. எங்கே கண் திறந்தால், கை எடுத்து விடுவாலோ என ஈஸ்வர் கண் திறக்கவேயில்லை.. வர்ஷினியும் கை எடுக்கவேயில்லை..

கைகளில் அப்படி ஒரு சூடு இருக்க, அவனின் காய்ச்சல் குறையவில்லை என்று உணர்ந்தாள்.. அதற்குள் வீடு வந்திருக்க.. இறங்கினார்கள்.. பின்பு தாஸிடம் வர்ஷினி, “ரஞ்சனி அண்ணி வருவாங்க .. நீங்க போய் அவங்களை கூட்டிட்டு வந்துடுங்க” என்று ரஞ்சனி இருக்குமிடம் சொல்ல..  

ஈஸ்வர் “வேண்டாம்” என..

“சும்மா என்னை காமெடி பீஸ் ஆக்கக் கூடாது. எனக்கு தெரியும் என்ன பண்ணனும்னு, நீங்க போங்க.. அவனவன் எனக்கு கௌன்சிலிங்க்கு அட்வைஸ் பண்றான்.. அவன் சொன்னது தப்பில்லை, ஆனா சொன்ன விதம் தப்பு”

“நீ உன் வேலையை சரியா செய்டான்னா என் மேல திருப்பி விடறான்” என கோபத்தில் பொரிந்தவளை பார்த்து ஏனோ ஈஸ்வருக்கு புன்னகை வந்தது.. அவள் மீண்டிருந்தால் எனவும் புரிந்தது. ஆனால் இது நிரந்தரம் என்று சொல்லவும் முடியாது எனவும் தோன்றியது.  

இருக்கும் க்ஷணத்தை இழக்க விரும்பாமல், “அவனை உன்கிட்ட கௌன்சிலிங் வரச் சொல்றேன், ஓகே வா” என

“ஏன் செய்ய மாட்டேனா?” என அவள் கேட்ட விதத்தில், கேட்ட பாவனையில் மனம் மயங்கத்தான் செய்தது. என்ன நடந்திருந்தாலும், அந்த நொடி, அந்த லகுத்தனமையைய் ஈஸ்வருக்கு இழக்க முடியவில்லை.. அவளின் கவனம் சிதறாமல் காப்பது முக்கியம் என்று தோன்றியது.. ஆனால் நொடி விட்டால் கூட எதையாவது தேவையில்லாமல் யோசிப்பாள் எனப் புரிந்து பேச்சை வளர்த்தான்.     

“நானும் அதுதானே சொல்றேன், நீ ரொம்ம்ம்ம்பபபப் புத்திசாலியா போயிட்ட, அதனால தான் எதுவும் காம்ப்ரமைஸ் பண்ண முடியாம உன்னை நீயே கஷ்டப் படுத்திக்கற, கூட கொஞ்சமா என்னையும்” என கிண்டல் பேச..

“லெட் அஸ் நாட் டால்க் அபௌட் திஸ்,  ஓகே” என சீரியசாக சொல்ல..  

“ஓகே” என்று சொல்ல முயலாமல் செய்கையால் கைக் கட்டி, வாய் பொத்தி நிற்க..

“அய்யே சகிக்கலை” என வர்ஷினி பாவனையாகச் சொல்ல, சிரித்து விட்டான்.. 

“ரொம்பப் பண்ணக் கூடாது, மறுபடியும் கடிச்சு வெச்சிருவேன்” என சீரியசாக சொல்ல..

“ரத்தக் காட்டேறி தாண்டி நீ” என ஒரு மென்னகையுடன் சொல்லிக் கொண்டே வீட்டின் உள் ஏறினான்…

“இப்போ நான் போகட்டுமா? வேண்டாமா?” என தாஸ் மெதுவாகக் கேட்டான். அவன் இருப்பதையே இருவரும் மறந்து இருந்தனர்.. இன்னும் ஒருவனும் அங்கே இருந்தான்! அவன் அஸ்வின்! வந்ததில் இருந்து இருவரும் பேசிக் கொண்டிருக்க தள்ளி நின்று பார்த்து கொண்டிருந்தான். அவன் யார் முன்பும் வரவில்லை, அவனையும் யாரும் கவனிக்க்கவில்லை..       

“அச்சோ, இவர் முன்பா பேசிக் கொண்டு இருந்தோம்” என நொந்தவள்.. “இன்னும் நீங்க போகலையா?” என வர்ஷினி கோபத்துடன் தாஸைப் பார்த்து திரும்பும் போதே…    

ஒரு ஆட்டோ வந்து நிற்க.. அதில் இருந்து ரஞ்சனி இறங்கினாள்.. ரஞ்சனியைப் பார்த்ததும் தானாகவே மறைவாக நின்று கொண்டான் அஸ்வின்.

“நான் இப்போ தான் அண்ணி போகச் சொல்லிட்டு இருந்தேன், அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்களா?” என்றபடி வர்ஷினி அவளிடம் சென்றவள், “என்ன அண்ணி ஆட்டோல வர்றீங்க, எங்கே உங்க டிரைவர்?” என,

அவள் பத்துவை சொல்கிறாள் எனப் புரிந்து “உதை வாங்கப் போற நீ” என,  

“உண்மையைச் சொன்னா உதைப்பீங்களா?” என வர்ஷினி சிரிக்க..

“அதெல்லாம் ஓபன் சீக்ரெட் சொல்லக் கூடாது” என்று ரஞ்சனியும் சிரிக்க.. விழிஎடுக்காமல் அதனை பார்த்து இருந்தான் அஸ்வின்.

“பத்து கிட்ட எதுவும் சொல்லிக்கலை, நானே வந்துட்டேன்” என்றபடி உள்ளே வந்தாள்..

இருவரும் உள்ளே படியேற, ரஞ்சனி முன் செல்ல, அப்போது தான் பக்கவாட்டில் தள்ளி சற்று மறைவாக நிற்கும் அஸ்வினை உணர்ந்தவளாக வர்ஷினி தேங்க.. அஸ்வின் அவளைப் பார்த்ததும் “உள்ளே செல்லுங்கள், நான் போகிறேன்” என்பது போல சைகை செய்தான்.

வர்ஷினி அவனின் அருகில் செல்ல முற்பட,

“வேண்டாம்” என்ற பாவனையைக் காட்டியவன், மீண்டும் உள்ளே செல்லக் காட்ட, வர்ஷினி பின் உள்ளே செல்ல, அவன் சத்தமில்லாமல் வெளியே சென்றான். 

“என்ன காய்ச்சல்?” என்றபடி வந்து ஈஸ்வரின் கைபிடிக்க அது இன்னுமே கொதித்தது.. “என்ன விஸ்வா இது? இவ்வளவு காய்ச்சல் எப்படி?” என்றபடி ரஞ்சனி கேட்க,

“அதுவா நான் கடிச்சிட்டேன்” என்றாள் சுவாதீனமாக வர்ஷினி. ஈஸ்வரின் முகம் முற்றிலும் ஒரு அதிருப்தியைக் காட்டியது. 

“சும்மா விளையாடக் கூடாது வர்ஷ், என்ன ஆச்சு?” என்று ரஞ்சனி அதட்ட,

“நிஜம்மா அண்ணி” என்றாள்.

“உண்மையா?” என்பதுப் போல ஈஸ்வரைப் பார்க்க,

“ஆம்” என்று கண்களால் அவன் பேச,

“அவ கடிக்கற அளவுக்கு நீ என்ன பண்ணின விஸ்வா?” என்றாள் ரஞ்சனி.

வர்ஷினி ரஞ்சனியையே சில நொடிகள் பார்த்து இருந்தாள். அதனைப் பார்த்த ஈஸ்வரின் முகத்தில் ஒரு விரிந்த முறுவல். “தெரியலை.. எப்பவோ பண்ணினதுக்கு எப்போல்லாம் தோணுதோ, அப்போல்லாம் கூப்பிட்டு வச்சு செய்யறா போல என்னை” என்ற போது ஈஸ்வரின் முகத்தினில் புன்னகையைத் தவிர வேறில்லை..

சோர்வோடு அவன் புன்னகைத்த விதம் சில நொடிகள் வர்ஷினியை அவன் மீதும் பார்வையை நிலைக்கச் செய்தது..

“என்ன?” என்பது போல புருவம் உயர்த்தி ஈஸ்வர் கேட்க,

ரஞ்சனியும் அவனைத் தான் பார்த்து இருந்தாள்.. “நீ இங்க டாக்டரா வந்திருந்தாலும் சரி, என் தங்கையா வந்திருந்தாலும் சரி, இதை நீ வெளில சொல்லக் கூடாது!”  

“நீ என்ன நினைக்கிற? நான் சொல்வேன்னா! அப்படி உன்னோடது எதை நான் சொல்லியிருக்கேன் , முதல்ல இவ சொல்லாம இருக்காளா பாரு!” என்று வர்ஷினியிடம் திருப்ப,

“அதுக்கு நான் கியாரண்டி கொடுக்க முடியாது” என்று வர்ஷினி அசால்டாக சொல்ல,

“ப்ச் வர்ஷ், இது விளையாடுற விஷயமில்லை.. ஏன் இப்படி செஞ்சன்னு நான் கேட்க மாட்டேன். ஆனா நீ செஞ்சது தப்பு!” என்று சொல்லிக் கொண்டே காயத்தை ஆராய,

“நான் எப்போ உங்ககிட்ட தப்பில்லை சொன்னேன், தப்பு தான்! செஞ்சிட்டேன்! இப்போ என்ன செய்ய முடியும்?  வேணும்னா திரும்ப என்னை கடிச்சிக்கச் சொல்லுங்க!”  

சீரியசாக பேசிக் கொண்டிருந்த ரஞ்சனி சிரிக்க ஆரம்பித்து விட.. ஈஸ்வரின் முகமும் புன்னகையை பூசிவிட,

“பாரு! விஸ்வாவை வெக்கப் பட வைக்கற நீ”   

“ஏன்? வெக்கப்படற அளவுக்கு என்ன சொன்னேன்?” என்றவள்.. பின்பு புரிந்து “ப்ச், போங்கண்ணி” என சலித்தவளிடம், அதற்கான பிரதிபலிப்பு எதுவும் இல்லை.

“நாம இருக்குற இந்த நிமிஷங்கள் தான் நிஜம் வர்ஷினி. சும்மா எதையாவது நினைச்சு மனசை குழப்பாதே! நீயும் சந்தோஷமா இரு! உன்னை சுத்தி இருக்குறவங்களையும் சந்தோஷமா வெச்சிக்கோ!” என ரஞ்சனி பேச,

“அச்சோ, அண்ணி!” என கத்தியவள், “என்னவோ வாய் அசைக்கறீங்கன்னு தெரியுது, ஆனா எனக்குக் காதே கேட்கலை” எனச் சொல்லி, “எனக்குப் பசிக்குது” என்று இடத்தை விட்டு நகர,

அவள் சென்றதும் “எதையாவது பேசாத ரஞ்சனி, திரும்ப போயிடப் போறா, ரொம்ப கஷ்டப் பட்டு வரவெச்சிருக்கேன். திரும்ப எதுக்காகவும் அவளை என்னால மிஸ் பண்ண முடியாது” என்றவனை ஆச்சர்யமாகத் தான் பார்த்தாள் ரஞ்சனி.

இப்படி எதையும் ஒப்புக் கொடுப்பவன் ஈஸ்வர் கிடையாதே!   

எதோ பேச வந்தவள் பிறகு “என்ன ஆச்சு?” என்று கேட்க,  அவன் ஹாஸ்பிடல் சென்றது, அங்கு நடந்தது எல்லாம் சொல்ல..

“உன்னை யாரு என்னைக் கூப்பிடாம போகச் சொன்னா? ஊர் பூராவும் நீயே டமாரம் அடிச்சிருக்க” என்றவள், “ஐஷ்வர்யாவை பார்த்தியா? அங்கேயா இருக்கா? எப்படி இருக்கா?” என வரிசையாகக் கேள்விகளை அடுக்க..

“வேற பேசுவோம்” என்று ஈஸ்வர் முடித்துக் கொண்டான்.

கூடவே “வர்ஷினி முன்ன ஐஸ்வர்யா பத்திப் பேசாதே” எனவும் சொல்ல,

“ஏன்?” என்றவளிடம், “அவளுக்கு ஐஸ் பத்தி தெரியும்! அதனால தான் என்னை விட்டுட்டுப் போனா!” என,

இத்தனை நாட்களாக வர்ஷினி ஏன் சென்றாள் என்று மண்டையைக் குடைந்த விஷயம் வெளியே வர, “எப்படி எப்படித் தெரியும்?” என அதிர்ச்சியாகக் கேட்க,

“நானே சொல்லிட்டேன்” என்றான் ஒரு பெருமூச்சோடு.  

“ஆங்” என்று வாய் பிளந்தவள், “என்ன நீ சொன்னியா? ஏன் சொன்ன? அறிவில்ல உனக்கு? ஐஸ்வர்யா பத்தி சொல்ல நீ யார்?” என்று ஆக்ரோஷ்மாக சண்டைக்கு கிளம்ப,

“ப்ச், நான் என்னைப் பத்தி தான் சொன்னேன். என்னை பத்தி வர்ஷினிக்கு எதுவும் தெரியாம இருக்க வேண்டாம்னு நினைச்சு சொன்னேன். மறைச்சு, மறைச்சு, எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா போச்சு, இதுக்கு உண்மையை சொல்லிடலாம்னு சொல்லிட்டேன்!”

“ஆனா ஐஸ்வர்யாக்கு இதனால எந்தப் பிரச்சனையும் கிடையாது. வர்ஷ் இதைப் பத்தி எங்கேயும் வாயை திறக்க மாட்டா? ஏன் என்கிட்டயே பேசினது இல்லை..  இனி நாமளும் இதைப் பத்தி பேச வேண்டாம்!” என்று கடினமாகச் சொல்ல,

ரஞ்சனியும் ஒரு பெருமூச்சோடு வேறு பேச ஆரம்பித்தாள். “அவங்க என்ன மேனேஜ் பண்ணினாங்கன்னு தெரியணும்” என்றவள்.. ரூபாவிடம் பேசி ஐஸ்வர்யாவின் நம்பர் வாங்கி அவளுக்கு அழைத்தாள்.. வெகு சில வருடங்களுக்கு பிறகான அழைப்பு.. ஆம்! ஐஸ்வர்யா நம்பர் மாற்றி இருந்தாள்..

அழைப்பை எடுத்ததும் “ஐஸ், நான் ரஞ்சனி!” என,

“ம்ம் சொல்லு?” என்றாள் என்னவோ எதிர்பார்த்தவளைப் போல..   

“எப்படி இருக்க ஐஸ்?”

“நல்லா இருக்கேன்னு பொய் சொல்லனும்னு நீ எக்ஸ்பெக்ட் பண்றியா?” என,

ரஞ்சனி ஒரு நிமிடம் ஸ்தம்பித்தவள், “வாழ்க்கையில தினம் பார்க்கறவங்க கிட்ட எல்லாம் ஹவ் ஆர் யு ன்னு கேட்கறோம். எல்லோரும் ஐ அம் ஃபைன் தான் சொல்றாங்க. அதுக்காக அவங்க எல்லோரும் ஃபைன்னா என்ன? பொய் பல நேரங்களில் யதார்த்தமானது. நம்ம வாழ்க்கையை அடுத்தவங்களுக்குக் காட்டாம மறைக்க செய்யறது!” என

“இந்த பேச்சுக்கு நான் நல்லா இருக்கேன்னு சொல்லிட்டுப் போயிருக்கலாம்” எனவும்

“என்கிட்ட கேளு, நான்  நல்லா இருக்கேன்னு தான் சொல்வேன்?” என,

“ஏன்? ஏன் இப்படிப் பேசறா?” என்று உள்ளம் பதறிய போதும், “சொல்லு எதுக்குக் கூப்பிட்ட?” என்றாள் ஐஸ்வர்யா.  

“என்ன மேனேஜ் பண்ணாங்க விஸ்வாக்கு, இனி நான் என்ன பண்ணனும்னு ப்ளான் பண்ணனும்” என,

“தெரியலை, அந்த கிறுக்கன் விதார்த் தான் பண்ணினான். எது எப்படியோ அவன் ட்ரீட்மென்ட் பக்காவா தானே இருக்கும்”

“எந்த விதார்த்?”  

“அதுதான் நம்ம கிளாஸ் மேட் ஒருத்தன், அவங்க அம்மா கூட ஃபேமஸ் கைனகாலஜிஸ்ட். அவங்க கிட்ட இப்போ தான் நான் வந்தேன்.. ரெண்டு மாசம் தான் ஆச்சு” என்று தானாக விவரங்களை சொல்லி விட்டாள்.

“சரி! அவன் நம்பர் கொடு, நான் பேசறேன்” என, கொடுத்து விட்டவள் ஃபோன் வைக்கப் போக,

“ஒரு நாள் நம்ம மீட் பண்ணலாமா ஐஸ், எனக்கு உன்னை பார்க்கணும் போல இருக்கு!” என்று ரஞ்சனி சொல்லிவிட,

“நீங்கல்லாம் தான் என்னை மறந்து போனீங்க! நான் இல்லை!” என்ற ஐஸ்வர்யா ஃபோனை வைத்து விட,

ரஞ்சனிக்கு மனதிற்கு மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது.

ஈஸ்வர் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாலும் என்ன என்று கேட்கவில்லை.. எதிலும் அவனுக்கு தலையிட விருப்பமில்லை. சிறு அக்கறையும் பலப் பல விளைவுகளை ஏற்படுத்தும் என அறிந்தவன்..

ஐஷ்வர்யாவை பார்த்தும் சலனமற்று வர்ஷினி இருப்பது இன்னும் அவனுக்கு புரியவேயில்லை. எப்போது வெடிக்குமோ என்ற பயம் மனதினில் இருந்தது..

“உனக்குப் பார்த்தது விதார்த், எங்களோட யு ஜி கிளாஸ் மேட்” என்றவள்.. “அவங்கம்மாக்கு ரொம்ப நல்ல பேர், அவங்க ஹாஸ்பிடல் புதுசா போனது எல்லாம் பார்த்தேன் பேப்பர்ல. ஆனா ஐஸ்வர்யா அங்க போனது எனக்குத் தெரியாது! ரூபா அண்ணி கூட சொல்லலை” என்றவள்..

“அந்த விதார்தோட அண்ணன் ஒருத்தன் இருப்பான், எனக்குப் பேர் தெரியலை. இந்த ஐஸ் பின்னாடி கொஞ்சம் நாள் சுத்துனான்.. ஒரு நாள் ரொம்ப திட்டிட்டேன்.. பயங்கர சண்டை எனக்கும் அவனுக்கும்.. பின்னாடி சுத்தக் கூடாதுன்னு சிவியரா வார்ன் பண்ணினேன். ஐஸ் சைட்ல இருந்து ஒரு ரிஃப்லக்ஷனும் இல்லை ஐஸ்க்கு அவனோட இன்ட்ரஸ்ட் கூட தெரியலை.. நானும் சொல்லிகலை வீணா கவலைப் படுவான்னு.. அப்புறம் போயிட்டான்”

“ஆனா இப்போ அவங்க ஹாஸ்பிடல் எப்படி அவ போனா?”  

“நீ சொல்லலை! அவளுக்குத் தெரியாது! சோ, நல்ல ஆஃபர் பண்ணியிருப்பாங்க, போயிருப்பா எய்ம்ஸ்ல படிச்சிருக்கா, அதோட கேலிபர் இருக்கும் இல்லையா?”

“எஸ், அதுக்கு அப்புறம் டெஸ்ட் டியுப் பேபி அதுல எதோ ஸ்பெஷலைசேஷன் செஞ்சிருக்கா. ஆனா அங்க ஏன் போனா? அவன் திரும்ப ஏதாவது ட்ரபிள் பண்ணினா?” என்றாள் கவலையாக.

“பின்னாடி சுத்துறவங்க எல்லாம் ட்ரபிள் பண்ணுவாங்களா என்ன? நான் இன்னைக்கு அவனைப் பார்த்தேன் டீசன்ட் ஃபெல்லோ வா தான் தெரிஞ்சான். அவன் தம்பி மாதிரி இல்லை. ஐஸ்வர்யாவும் அவ்வளவு தெரியாம ஒன்னுமிலை, ஏதாவதுன்னா வெளில வந்துடுவா.. அண்ட் அந்த ஹாஸ்பிடல்க்கு நாம தான் ஃபைனான்ஸ் பண்ணியிருக்கோம்.. எதுன்னாலும் பார்த்துக்கலாம்.. நம்மை மீறி அவங்களால ஒன்னும் பண்ண முடியாது.. அப்புறம் அவங்க ஹாஸ்பிடல் அவங்களுக்குக் கிடையாது”    

பேசும் போதே வர்ஷினி வந்துவிட்டவள், “சாரி அண்ணி, செம பசி, நான் சாப்பிட்டுட்டேன்.. இல்லைன்னா நானும் உங்களுக்கு பேஷன்ட் ஆகியிருப்பேன்” என்றவள்,

“நீங்க என்ன சாப்பிடறீங்க, இவருக்கு என்ன குடுக்கட்டும்?”  

“எனக்கு ஏதாவது ப்ரூட் ஜூஸ் … இவனுக்கும் இட்லி இருந்தா கொடு, பட் காரம் ரொம்ப வேண்டாம் கொஞ்சமா சாம்பார்” என,

வர்ஷினி அதை எடுக்க உள்ளே சென்று விட.. அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வரைப் பார்த்த ரஞ்சனி “ஹேய், என்ன நீ இப்படி பப்ளிக்கா உன் பொண்டாட்டியை சைட் அடிக்கற?” என,

முகத்தில் ஒரு முறுவல் பூக்க, “தனியா இருக்கும் போதே சைட் அடிக்க முடியலை, இதுல பப்ளிக்கா வா?” என்றவன், மனதிற்குள் நினைத்தது.. “பார்த்து இரண்டே நாட்கள் ஆகின்றது, அதற்குள் இன்னும் ஒரு யுகம் வாழ்ந்த ஒரு உணர்வைக் கொடுத்து விட்டாள். வாழவும் ஆசை கொடுக்கின்றாள், சாகவும் ஆசை கொடுக்கின்றாள், வாழ்ந்தே ஆகவேண்டிய கட்டாயத்தையும் கொடுக்கின்றாள்.. இப்போதும் மனதினில் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றாள் ஐஸ்வர்யாவைப் பார்த்த பிறகு.. எந்த  எரிமலையை அடக்கிக் கொண்டிருக்கிறாள் என்றும் தெரியவில்லை” என யோசித்துப் பார்த்திருக்க,

“என்ன விஷ்வா?” என்றாள் கவலையாக ரஞ்சனி, பல வருடங்களுக்குப் பிறகு ஈஸ்வர் அவளிடம் சகஜமாகப் பேசுகின்றான்.  

“ஐ லவ் ஹெர் அ லாட். ஆனா அதை நான் தெரிஞ்சிக்க ரொம்ப டைம் எடுத்துட்டேன். அதுதான் தப்பா போச்சு!” என்றான் ஆழ்ந்த குரலில்.

அதற்குள் ஜூசுடனும் இட்லியுடனும் வர்ஷினி வர, ஜூசை கையினில் வாங்கிய ரஞ்சனி.. “நான் விதார்த் கிட்ட என்ன மேனேஜ் பண்ணினான்னு கேட்டுட்டு வர்றேன்” என்று ஃபோனுடன் எழ,

“கை வாஷ் பண்ண தண்ணி கொண்டு வரட்டுமா” என்று வர்ஷினி ஈஸ்வரிடம் கேட்க..

“என்னது வாஷ் பண்ண தண்ணியா? ஒழுங்கா அவனுக்கு ஊட்டி விடு, பாரு அவன் கையெல்லாம் எப்படி நடுங்குது. அதுவுமில்லமா அவனை சாப்பிட சொன்னா காரமா சாப்பிடுவான், கொஞ்சமா தொட்டு வை!” என,

“நானா?” என,

“பின்ன நீதான், இப்போவே பிராக்டிஸ் எடுத்துக்கோ, நாளைக்கு உனக்கு குழந்தை பிறந்தா யார் செய்வா?” என்று அதட்டி ரஞ்சனி செல்ல..

“ரொம்ப தான் மிரட்டுறாங்க, இந்த பத்து அண்ணா எப்படி இவங்களை மேனேஜ் பண்றாங்க” என்று பேசினாலும், ரஞ்சனி சொன்னதை தட்டாமல் செய்தாள்.  இட்லியைப் பிய்த்து சாம்பாரில் தோய்த்து ஈஸ்வருக்கு வாயில் வைக்கப் போக அதனை வாங்காமல்..   

“நாம குழந்தை பெத்துக்கலாமா வர்ஷி?” என்றான் ஈஸ்வர் ஆழ்ந்த குரலில், அவளின் பார்வையோடு முழுதாகத் தன்னை கலக்க விட்டு.. 

ஒரு காதல் கடிதம் விழி போடும் 

உன்னை காணும் சபலம் வரக்கூடும் 

நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும் 

நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும் 

கண்ணே என் கண் பட்ட காயம் 

கை வைக்க தானாக ஆறும் 

முன்னாலும் பின்னாலும் தள்ளாடும் 

என் மேனி என் மேனி உன் தோளில் ஆடும்  நாள்.. 

 

 

                   

 

Advertisement