Advertisement

அத்தியாயம் அறுபத்தி நான்கு :

ஞாபக வேதனை தீருமோ!

வர்ஷினியிடம் உன்னை விட எனக்கு யாரும் அழகில்லை என்று பேசிக் கொண்டே இறங்க.. வர்ஷினியின் முகம் க்ஷண மயக்கத்தைக் காட்டி பின்பு மறைத்தாலும் வெகு நாட்களுக்கு பிறகு முகம் ஒரு இளக்கத்தை காட்டியது.

புகழ்ச்சிக்கு மயங்காத பெண்கள் உண்டோ! என்ன தான் புத்திசாலிகளாய் இருந்தாலும் சில சமயம் தடுமாற்றங்கள் சகஜம்!  

இருவர் முகத்தையும் அப்போது பார்க்க அன்யோன்ய தம்பதிகளாய் தோன்ற.. அப்போது தான் அவர்களை பார்த்த ஐஸ்வர்யாவின் மனம் எரியத் துவங்கியது.

ஐஸ்வர்யா பார்க்கவுமே ஈஸ்வரும் அவளைப் பார்த்து விட்டான். ஈஸ்வர் தன் கண்களில், பாவனைகளில், ஒரு குற்ற உணர்ச்சியைக் காட்டியிருந்தாளோ இல்லை மன்னிப்பை யாசித்து இருந்தாளோ ஐஸ்வர்யாவிற்கு பெரிதாக எதுவும் தெரிந்திருக்காது. ஒரு தயக்கம் கூட தெரியவில்லை. அவன் தெரிந்தவர் போல ஸ்வாதீனமாய் ஒரு பார்வை பார்க்கவும், ஐஸ்வர்யாவின் மனம் கொந்தளிக்கத் துவங்கியது.   

ஈஸ்வர் தான் க்ஷண நேரம் என்றாலும் வர்ஷினியின் கண்கள் காட்டிய ஜாலத்தில் இருந்தானே!

அதன் தாக்கத்தில் ஈஸ்வர் ஒரு சிறு புன்னகையோடு ஐஸ்வர்யாவைப் பார்க்க.. அவளால் தாளவே முடியவில்லை!

ஒரு முறைப்போடே ஈஸ்வரை பார்க்க.. அதன் பிறகு புன்னகையை விட்டவன், வர்ஷினி கேட்டதற்கு பதிலாக.. “அது ரூபா அண்ணியோட தங்கை, ரஞ்சனிக்கு ஃபிரண்ட், அதுதான் பின்னாடி வர்றானே ஒருத்தன், அவன் தங்கை” என அஸ்வினைக் காட்டினான்.  

“ஓஹ் அஸ்வின்” என்று அப்போது தான் அவனைக் கவனித்தவள், அவர்கள் அருகில் வரும் போது “ஹாய் அஸ்வின்” என்றாள் தயக்கமின்றி..

அதனைக் கொண்டு அங்கே எல்லோரும் தேங்க.. வீட்டின் ஆளாக “எப்படி இருக்க விஸ்வா?” என்றார் ரூபாவின் அம்மா.

“நல்லா இருக்கோம் அத்தை” என்றவன்.. “இது வர்ஷினி, என் மனைவி” என,

அவரும் புன்னகைக்க.. ஐஸ்வர்யா கடினமான முகத்தோடு இருக்க.. வர்ஷினி “நீங்க சிரிச்சா இன்னும் அழகா இருப்பீங்க, ரஞ்சனி அண்ணி மாதிரி நீங்களும் ரொம்ப அழகு” என்றாள் தன் இயல்பாய்.

வர்ஷினியைப் பொறுத்தவரை ஐஸ்வர்யா அஸ்வினின் தங்கை, ரூபாவின் தங்கை..

“இவ வேற நிலைமை புரியாம” என்று வர்ஷினியைப் பற்றி ஈஸ்வர் நினைத்தாலும்.. முகத்தில் எதையும் காட்டாமல் அமைதியாய் நின்றான்.

“உன்னோட டிப்ஸ்க்கு ரொம்ப தேங்க்ஸ்” என்று வர்ஷினியிடம் கத்த வேண்டும் போல ஐஸ்வர்யாவிற்கு தோன்றினாலும், அப்படி வர்ஷினியின் முகத்தைப் பார்த்து அலட்சியமாய் அவளால் சொல்ல முடியவில்லை என்பது தான் உண்மை..

அதற்குள் “ரூபா, குழந்தைங்க எல்லோரும் எப்படி இருக்காங்க?” என்று அவர்களின் அம்மா கேட்க,

“நல்லா இருக்காங்க” என்றும் பதில் சொன்னது வர்ஷினி தான்.. “இதோ சரண் பெயிண்டிங்ல ஃபர்ஸ்ட் வந்திருக்கான்.. அது..” என்று தன் மொபைலை திறந்து வாட்ஸ் அப்பில் இருந்த புகைப் படத்தைக் காட்டினாள்.

“இந்த திமிர் பிடிச்சவனுக்கு, இந்த ஏமாத்துக்காரனுக்கு, இப்படி ஒரு மனைவி” என அஸ்வின் பார்த்திருக்க.. ஐஸ்வர்யாவிற்கு அங்கே நிற்கவே முடியவில்லை..

ஈஸ்வரைப் பார்க்க பார்க்க, கோபம், வெறுப்பு, கூடவே இவனை இழந்து விட்டோம் என்ற ஆற்றாமையும் கூட. ஆம்! என்ன முயன்றும் அந்த எண்ணத்தை அவளால் ஒதுக்கவே முடியவில்லை”

முதலில் பார்த்த புன்னகையுடன் சரி, அதன் பிறகு ஈஸ்வர் ஐஸ்வர்யாவின் புறம் பார்வையைத் திருப்பவேயில்லை.. மிகவும் கவனமாக இருந்தான்.

ஆனால் பார்த்த அந்த நேரத்திலேயே இன்னும் ஐஸ்வர்யா இயல்புக்கு திரும்பவில்லை என புரிய.. அதுவும் அவன் மனதில் பாரமாய் அமர்ந்து கொண்டது.

“போகலாம் வர்ஷி” என்று விட்டான் தான், ஆனாலும் தன் பேரப் பிள்ளைகளை ஆர்வமாய் பார்க்கும் ரூபாவின் அம்மாவை பார்த்தவன், “ரூபாவை அனுப்பி விட சொல்றேன் அத்தை” என்றவன், “வா வர்ஷி” என அவளை கிளப்பினான்.  

ஐஸ்வர்யாவை விட அஸ்வின் தன்னை முறைப்பதை பார்த்தவன்.. அவர்கள் மேலேறவும் இவர்கள் கீழிறங்கவும்..

அவர்கள் சில படிகள் ஏறிய பிறகு “அஸ்வின்” என அழைத்தான்.  

அவன் நிற்கவும் “வா” என்பது போல ஒற்றை விரலை அசைக்க.. எவ்வளவு அலட்சியமாய் என்னை பார்த்து விரல் அசைக்கிறான் என்று தோன்றிய போதும், அதில் என்னவோ ஒரு ஆளுமை தானாக அஸ்வின் இறங்க.. அவன் இறங்குவதைப் பார்த்து இவன் ஓரிரு படிகள் மேலே ஏறியவன்..

“இப்படி என்னை முறைச்சு பார்க்கறதை விட்டு, உருப்படியா பல வேலைகள் செய்யலாம் நீ” என,

அஸ்வின் பதில் பேசாமல் “என்ன வேலை?” என்பது போல பார்க்க, “ஒழுங்கா உன் குடும்பத்தைப் பார்க்கலாம்.. இனியும் எவன் பணத்துக்கும் நீ ப்ளான் பண்ணாம ஒரு வேலை தேடலாம்.. உன் தங்கைக்கு மாப்பிள்ளை கூடப் பார்க்கலாம்” என,

“என் குடும்பம், என் வேலை, என் தங்கை, எனக்குப் பார்த்துக்க தெரியும்! நீ உன் வேலையைப் பார்!” என சொல்ல விழைந்தாலும், சொல்ல முடியவில்லை. ஈஸ்வரின் தீட்சண்யமான பார்வை அவனை சொல்ல விடாமல் தான் தடுத்தது.. ஒரு பயம் இருக்கத் தான் செய்யும் எப்போதுமே!

அது ஏன் ஏன் என்று அஸ்வினுக்குள் இருக்கும் கேள்வியே இன்னும் ஈஸ்வருக்கு எதிராக சிந்தனைகளைத் தூண்டும்.

அதற்குள் வர்ஷினி அருகில் வருவதைப் பார்த்ததும் ஈஸ்வர் கீழிறங்க.. அஸ்வின் இன்னும் ஒரு முறைப்போடு பார்க்க,

“என்ன பேசினீங்க?” என்றாள் வர்ஷினி.. “ம்ம், என்னை முறைச்சு பார்க்கறதை விட்டு உருப்படியா எதாவது வேலை பார்க்கச் சொன்னேன்” என்றான்.

“வர்ஷினி என்ன இது?” என்று புருவத்தைச் சுளிக்க.. “பண்ணினதெல்லாம் இவன், ஆனா என்னை முறைக்கறான்” என்றான் ஈஸ்வர் அஸ்வினை காட்டி.  

அன்று ஒரு நாள் அஸ்வின் சொல்லியதை கடகடவென்று திரும்ப வர்ஷினி சொல்ல,

“அவன் செஞ்சானா இல்லையா வேற வர்ஷி, ஜகன் அண்ணா செஞ்சதை சொல்லலை, இவனும் கூட இருந்தான். அது ரொம்ப தப்பு” என்று ஈஸ்வரும் அவன் சொன்னதையே சொல்ல..

இங்கே ஐஸ்வர்யா அஸ்வினிடம், “என்ன சொன்னான் அவன்” என,

“ம்ம், உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கறதாம்” என,

ஐஸ்வர்யாவின் வெண்மையான் முகம் அப்படியே கோபத்தில் சிவந்து விட்டது..

“விடு ஐஷ், அவன் தப்பை மறைக்க நம்மளை சொல்லிப் போறான்” என,

ஆனாலும் ஐஸ்வர்யா உடனே ஈஸ்வருக்கு கைபேசியில் அழைத்தாள்.. “என்ன பண்ற? விடு ஐஸ்வர்யா!” என அஸ்வின் தடுத்த போதும்.. “நீ பேசாம இரு” என்றவள், அஸ்வினை விட்டு தள்ளி வந்து,

ஈஸ்வர் எடுத்ததும் “எனக்கு கல்யாணம் பண்ணிவெக்க சொல்ல நீங்க யாரு? முதல்ல நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க! இன்னும் பெரிய ஆள் மாதிரி அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணிட்டு திரியாதீங்க.. இந்தப் பொண்ணையாவது விட்டுடாம ஒழுங்கா குடும்பம் நடத்துங்க” என..

ஏற்கனவே பல பல உளைச்சல்கள்… வர்ஷினியை நெருங்காமல் விட்ட குற்ற உணர்ச்சி.. என்று பலதிலும் இருந்தவன்.. ஐஸ்வர்யாவிடம் பதிலுக்குப் பாய்ந்தான்.  

வர்ஷினியிடம் இருந்து சற்று தள்ளி வந்தவன்..  “ஏய் என்ன? நான் என்ன உன்கூட குடும்பமா நடத்தினேன், இந்த பொண்ணையாவது விட்டுடாம நீ குடும்பம் நடத்துன்னு சொல்றதுக்கு” என பதிலுக்கு பொரிந்தான்..

“என்ன பண்ணினே நான் உன்னை? என்ன பண்ணினேன்? தொட்டுக் கூட பேசினதில்லை”

“அப்போ காதல் சொல்லி விட்டுடலாமா?” என ஐஸ்வர்யா பதில் கேள்வி கேட்க,   

“விட்டுடேன், என்ன பண்ணலாம் அதுக்கு இப்போ? எத்தனை முறை விளக்கம் குடுத்துட்டேன். நான் செஞ்சது தப்பு தான்! ஒத்துக்கறேன்! இன்னும் என்ன செய்ய?”

“நான் உன்கிட்ட சொன்னது காதலே இல்லை! போதுமா!” என ஆவேசமாகப் பேச,  

ஐஸ்வர்யா அப்படியே வாயடைத்து போனாள், தெரிந்தும் பேசியது தன் தவறு என புரிந்து.. “செஞ்சதுக்கு ஒரு வருத்தமும் இல்லாம என்னைத் திட்டுறியா? நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட” என,

“இன்னும் எத்தனை தடவை நான் நல்லா இருக்க மாட்டேன்னு சொல்வ,  நான் நல்லா இருக்கேன் இருக்காம போறேன், அதை நான் பார்த்துக்கறேன்.. முதல்ல நீ உன் வாழ்க்கையை பார் எப்போ இருந்து இப்படி பிசாசு மாதிரி பேசக் கத்து கிட்ட.. பரவாயில்லை நான் தப்பிச்சிட்டேன்” என்றான்.

“நான் பிசாசு மாதிரி பேசறேனா? அந்தப் பொண்ணு கிட்ட நீ என்ன பாடு பட போறப் பார்” என்று ஐஸ்வர்யாவின் மனது சாபம் தான் இட்டது.

“உன்னைப் பொறுத்தவரை நான் செத்துப் போயிட்டேன்னு நினைச்சிக்கோ!” என்று சொல்லி வைத்து விட,   

ஐஸ்வர்யாவிற்கு அழுகை தான் முட்டியது.. கூடவே இப்படி பேசுகிறான் என்று மனதும் பதறியது. வைத்த ஈஸ்வர் சிறிது குறைவாக பேசி இருக்கலாமோ என தோன்ற அப்படியே நின்றிருந்தான். பின்னே இந்தப் பெண் நிதர்சனத்தைப் புரிந்து கொள்ள மறுக்கிறாளே என்று கோபம் வந்தது.

ஐஸ்வர்யாவிற்கு கண்ணீர் பெருக, “நான் ஒரு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்குப் போறேன், நீ அம்மாவோட வா!” என்றபடி நிற்காமல் சென்றுவிட்டாள்.

ஆம்! இன்னுமே ஈஸ்வரின் இழப்பை ஜீரணிக்க முடியவில்லை.. அந்த இழப்பு தான் இப்படி ஐஸ்வர்யாவை தப்பு தப்பாக பேச வைத்தது.. சாபமிட்டது.  

அஸ்வினிற்கு தெரியும், ஆனால் தெரியாது நிலை தான்! அவள் டெல்லியில் இருக்கும் போது ஐஸ்வர்யாவின் அறையில் ஈஸ்வரின் புகைப் படத்தை பார்த்து “என்ன இது?” என்று கேட்க..

“கொஞ்சம் நாள் என் பின்னாடி சுத்தினான், நான் சரின்னு சொல்றதுக்குள்ள வேற பொண்ணு பின்னாடி போயிட்டான்” என்று தான் சொல்லியிருந்தாள்.. பின்னே என்ன சொல்வாள்.. “என்னை காதலித்து வேண்டாம் என்று விட்டான் என்றா?” அதனை விட என்ன அவமானம் இருக்கின்றது.  

அப்படி தான் அஸ்வினும் நினைத்து இருந்தான்.. காதலித்து விட்டு விட்டான் என்றால், இன்னுமே அவன் கோபம் அதிகமாகி இருக்கும்.

அது தெரியாத போதே ஈஸ்வரை முறைக்க.. அவனுக்கு எதுவும் தெரியும் என்று ஈஸ்வர் அனுமானிக்காததால் தான் தைரியமாக திருமணத்தை பற்றி பேசினான்.  

சில முறை ரூபாவிடமும் பேசியிருந்தான் தான்.. “முதலில் இந்தப் பணத்தை கொடுத்து தீர்த்து பின் இவளுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும். அவளின் மனதை திசை திருப்ப வேண்டும். இல்லையென்றால் தேவையில்லாதது எல்லாம் நினைத்துக் கொள்வாள்”

எப்பொழுதும் போல மனது அவசரமாக கடவுளிடம் பிரார்த்தனை வைத்தது.. “என்னை மறக்கச் செய்யும் அளவிற்கு இவளுக்கு மணாளன் அமைய வேண்டும், நல்ல காதல் வாழ்க்கை அமைய வேண்டும்” என,

யோசித்துக் கொண்டே வீடு வந்து விட..

காரில் ஏறியதில் இருந்து ஈஸ்வர் எதுவும் பேசாமல் இருக்க, வர்ஷினியும் பேசவில்லை… இறங்க முற்ப்பட்டவனிடம்.. “எனக்குப் பசிக்குது” என்றாள். அப்போதுதான் ஹோட்டல் போகலாம் என்று சொன்னதே ஞாபகம் வர…

“சாரி, மறந்துட்டேன்!” என்றவன்.. திரும்ப ஹோட்டலை நோக்கி விட்டுக் கொண்டே.. “முதல்லயே சொல்லி இருக்கலாம் தானே” என,

“நீங்க சீரியஸா யோசிச்சிட்டு இருக்கீங்க, நான் என்ன சொல்ல?” என்றவள், “அஸ்வின் கிட்ட என்ன பேசினீங்க?” என்றாள் திரும்ப,

“நிஜம்மா, உருப்படியா ஏதாவது வேலை பார்க்கச் சொன்னேன்” என்றான் கவனமாக ஐஸ்வர்யாவை தவிர்த்து.. அவளின் பெயரை எடுக்கவே பயமாக இருந்தது.

“நாம ஏதாவது ஹெல்ப் பண்ணலாமா? பிசினெஸ் செய்ய!” என,

“நாமளா? நாம் ஏன் செய்யணும்?” என்று கூர்மையாகக் கேட்க.

“அப்பானால தானே ஜெயில் போனாங்க அதனால.. லைஃப்ல அதை யோசிக்க யோசிக்க வீணா பழிப்பாங்க, இல்லை சபிப்பாங்க. அதை சரி பண்ண!”  

“செஞ்சா மட்டும் பழிக்க மாட்டான்னு என்ன நிச்சயம்?”

“நம்ம சைட்ல இருந்து செஞ்ச தப்பை சரி பண்ணறோம். அதுக்கு அப்புறமும் பண்ணினா பண்ணிட்டு போறான்!” என,

“ஏற்கனவே நிறைய பணம் லாஸ் அவனால, பணம் மட்டுமில்லை நிறைய பிரச்சனை பண்ணினான் வர்ஷ்.. பணம் நமக்குள்ள மட்டும் பிரச்சனையா இருந்த போது, மீடியால நம்ம பணம் ஏமாத்தறோம் சொன்னான். பணம் திரும்பக் குடுக்க மாட்டாங்க சொன்னான்”

“அப்புறம் நம்ம ஃபோட்டோஸ் போட்டான். இப்படி நிறைய வர்ஷ்! பணம் தொலைச்ச நாளா என் தூக்கம் போச்சு! என் நிம்மதி போச்சு! என் வாழ்க்கையே மாறிடுச்சு! எல்லோர் முன்னாடியும் கீழப் போயிட்டேன். என் ஃபைனான்ஸ் எனக்கு இல்லைன்னு ஆகிடுச்சு. யாரோ தொலைச்ச பணத்துக்கு நான் உழைக்கறேன். இதுல எனக்கு எந்த லாபமும் இல்லை. இது எல்லாமே பிரயோஜனமில்லாத உழைப்பு! இப்படி நிறைய!”

“என்னால அவனுக்கு எந்த ஹெல்பும் பண்ண முடியாது! எப்பவுமே!” என்று பொறுமையாகவே விளக்கம் கொடுத்தான்..

“நீங்க ஏன் அவர் அப்பாவைக் கடத்துனீங்க. அதுல இருந்து தான் நிறைய பண்ணினேன் சொல்றார்! அது தப்பு தானே!” என,

“கடத்தினதால தான் இவன் வந்தான். அதுவரைக்கும் ஆள் கண்ணுலயே படலை. அடுத்தவங்க பணத்துல வேர்ல்ட் டூர் போறான். அவங்கப்பன் எப்படி பேசினான்? எனக்கு அந்த சமயத்துல வேற ஆப்ஷன் இல்லை!” என,

“இருந்தாலும் சம்திங் டெல்ஸ் மீ, அவரை கன்சிடர் பண்ணலாம், ஹெல்ப் பண்ணலாம்னு.. நாம அவரோட எதிர்காலத்தை ஸ்பாயில் பண்ணிட்டோம். அது எனக்கு கில்டியா இருக்கு” என,

“பார்க்கலாம் வர்ஷ், முதல்ல நாம நம்ம பிரச்சனைகள்ள இருந்து வெளில வருவோம், பின்ன யோசிக்கலாம்” என்றான்.

பல நாட்களுக்குப் பிறகு இயல்பாய் வர்ஷினி பேச, அதற்காக மேலே மேலே மறுத்துப் பேசாமல் சமாதானமாகப் பேசினான்.

மன்னிக்கும் மனப்பான்மை அறவே இல்லாத போதும், வர்ஷினிக்காக எதிரியை கூட மன்னிக்கத் தயாராய் இருந்தான். ஆம்! அவனை அறியாமல் சுயநலமாய், தான், தன்னை, என அவன் பிரச்சனைகளில் இருந்தாலும், இன்னுமே காதல் பித்தன் தான்!  அதீதமாய்!     

ஹோட்டலிற்கு சென்று வர்ஷினி உணவை சாப்பிட, ஈஸ்வர் அவளை சாப்பிட்டான்.. பார்வையால் மட்டுமே!

அவனை உணர்ந்தவளாய் “என்ன முன்னால இருக்குறது எல்லாம் அப்படியே இருக்கு” என்று கிண்டல் பேச,  

“நீ கூட தான் என் முன்னால இருக்கே” என,

“சாப்பிட்டா சாப்பிடுங்க, இல்லை விடுங்க, எனக்கென்ன?” என்று சொல்லி வர்ஷினி உண்பதில் கவனமாய் இருக்க,

“நீ எதை சொல்ற?” என்று விஷமமாய் ஈஸ்வர் கேட்க,

“என்னை சொல்லலை! சாப்பாடை மட்டும் தான் சொன்னேன்!” என்று பளிச்சென்று வர்ஷினி சொல்ல..

வர்ஷினி சொன்ன விதத்தில் ஈஸ்வருக்கு சிரிப்பு பொங்க, பல நாட்களுக்குப் பிறகு ஈஸ்வர் வாய் விட்டு சிரித்தான்.

அவனை பிடிக்கவில்லை என்று சொன்ன போதும், அந்த சிரிப்பை ரசித்து தான் பார்த்து இருந்தாள், வர்ஷினி!  

எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்!

 

 

Advertisement