Advertisement

அத்தியாயம் அறுபத்திரண்டு :

நீயாகிவிட்டேன் நான் என நிழல் சொன்னால்.. சூரியன் என்னால் தான் நீ என்றது! வெளிச்சம் என்னால் தான் நீ என்றது! நிஜம் நானில்லாவிட்டால் நீயில்லை என்றது!  இருள் நானே நீ என்றது!    

காலை எழுந்தது முதலே ஒரு சோர்வு வர்ஷினிக்கு, “என்ன வாழ்க்கை இது” என்பது போல… உறங்கும் ஈஸ்வரை பார்த்து இருந்தாள். எப்போது வந்தான், உறங்கினான் என்றே தெரியவில்லை.. அவனை பார்க்கப் பார்க்க ஒரு கோபம் பொங்கியது.

தன்னை ஏதோ ஒரு வகையில் அவன் ஏமாற்றி விட்டானோ எனத் தோன்றியது. 

எழுந்து வெளியே வந்து பார்த்தாள், உணவு தொடப் படாமலேயே இருந்தது, இட்லி சாம்பார் என இருக்க.. அது நன்றாகவும் இருக்க.. செக்யுரிட்டிய அழைத்து “எடுத்துக்கங்க” என்று சொல்லிய போது திரும்பவும் காலை உணவு வந்திருக்க..  அதை வாங்கி வைத்து குளித்து வந்து உண்ணும் வரையிலும் ஈஸ்வர் எழவில்லை.. வர்ஷினியாக அவனை எழுப்பவும் இல்லை..

“நான் காலேஜ் கிளம்பறேன்” என்று அவனுக்கு ஒரு மெசேஜ் செய்து வீட்டை பூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டாள். கல்லூரி சென்ற பிறகு தான் நினைவு வந்தது, அன்று ஒரு முஸ்லிம் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என

“ஊப்ஸ், என்ன செய்கிறேன் நான்” என்று அப்படியே அமர்ந்து கொண்டாள். தன்னிலை மறக்கச் செய்யும் தனது நிலையை அவளே வெறுத்தாள். இப்போதா அப்போதா என வெடிக்கும் நிலையில் இருந்த கோபம் வெடித்து அவளிடம் கிளம்பியது.

அப்போது சரியாக தொலைபேசி அடிக்க “வர்ஷ், காலேஜா? இன்னைக்கு லீவ் தானே!” என,

சிறிது நேரம் வர்ஷினி ஒன்றுமே பேசவில்லை…

“வர்ஷ், இருக்கியா?” என அவன் பல முறை கத்திய பிறகு, “இருக்கேன்” என்று அவளின் குரல் சோர்வாய் ஒலித்தது.

“என்ன? என்னாச்சு? ஏன் இப்படி பேசற?” என்று ஈஸ்வரின் குரல் பதட்டத்துடன் ஒலிக்க..

“இல்லையே, நல்லா தான் இருக்கேன், ஃபோன் சரியா கேட்கலை, இன்னைக்கு எனக்கு ஸ்பெஷல் கிளாஸ்” என்று சொல்லி விட.

“ஓஹ், அப்படியா? எப்போ முடியும்? ஏன் என்னை எழுப்பலை?” என்று ஈஸ்வர் கேள்வியாக அடுக்க…

“எனக்கு உன்னை பார்க்கப் பிடிக்கலை!” என்று கத்த வேண்டும் போல மனதில் ஒரு ஆங்காரம் தானாய் எழ..

அதில் வர்ஷினியே பயந்து போனாள்.. “மதியம் வரை தான் இருக்கும்னு நினைக்கிறேன்.. கால் பண்றேன், இப்போ வெக்கறேன்” என்று சொல்லி வைத்து விட்டவளுக்கு எங்கே போவது என்று தெரியவில்லை..

எப்படியும் இன்னும் சிறிது நேரத்தில் அவன் ஆஃபிஸ் கிளம்பிவிடுவான், பின்பு வீட்டிற்கு சென்று விடலாம் என்று நினைத்து பக்கத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் சென்றாள்.

அங்கே அதுவரை எந்தக் கடையும் திறக்கப் படவில்லை.. புஃட் கோர்ட் ஒன்று திறந்திருக்க.. அங்கே சென்று காஃபி ஒன்றை வாங்கி அமர்ந்து கொண்டாள்.. எதுவுமே பிடிக்கவில்லை, எரிச்சலாக வந்தது அழுகையும் வந்தது..    

“பிடித்ததா? பிடிக்கவில்லையா?” என்ற யோசனையில் நடந்த திருமணம், அதை பிடித்ததாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே ஈஸ்வருக்கு பிரதானமாக இருந்திருக்க வேண்டும்.. முட்டாள் தனமாகக் குடும்பப் பிரச்சனைகளை இழுத்து விட்டு கொண்டான்..

சொன்னதெல்லாம் கேட்டதால், வர்ஷி எப்போதும் எதுவும் பிடித்தமின்மையைக் காட்டாததால் வர்ஷினி விஷயத்தில் ஈஸ்வர் சறுக்கி விட்டான் என்பது தான் உண்மை.

சறுக்கியது மட்டுமல்ல சுயநலவாதியாகவும் மாறிவிட்டான்..

ஆம்! பிரச்சனை வந்தவுடன் ஈடுபட்ட சுய அலசலில் அவனுக்கு தெரிந்தது ஒன்று தான். வர்ஷினியின் நீல நிறக் கண்களில் தொலைந்து தன்னை தொலைத்து விட்டான் என்பது தான்..

ஆம்! எத்தனை வேலைகள் இருந்தாலும் வர்ஷினியை எப்படி மறக்க முடியும்.. நித்தமும் மனதோடு போராட்டம் தான், ஆனாலும் ஜெயிக்கும் வெறி.. வர்ஷினியின் நினைவுகளையும் ஜெயிக்க மிகுந்த உந்துதல்.. அதன் பொருட்டே இந்த விலகல்..

ஆனால் பேச்சில் செயலில் எதிலும் அக்கறை குறையவில்லை. அந்த நீல நிறக் கண்களை தான் வெற்றி கொண்டால் தான் வாழ்க்கையில் வெற்றி கொள்ள முடியும் என்று தோன்றியது.

ஈஸ்வருக்கு புரியாதது, வாழ்க்கை வர்ஷினியாகிப் போன போது அவளை வெற்றி கொண்டு என்ன பயன்.. அந்த வெற்றி அவளை தோற்க வைக்கும் அவளிடம் என்று அந்த முட்டாளுக்குப் புரியவில்லை.. அவள் தோற்றுப் போனால் அவனும் தானே தோற்றுப் போவான்..

காதல் மாயை, காதல் போதை இரண்டும் மறைந்து விட்டது ஆனால் காதல் மறையவில்லை. அதை இந்த மூன்று மாதங்களில் ஈஸ்வர் தெரிவிக்கவும் மறந்து விட, ஆயினும் அவளுக்கு தெரியாமல் போகவில்லை, தெரிந்தாலும் அது அவளுக்கு பிடித்தமில்லை..

ஆம்! ஈஸ்வருக்கு தன்னை பிடித்திருக்கின்றது என்பதில் எல்லாம் அவளுக்கு எந்த ஐயம்முமில்லை.. அதன் பொருட்டே தன்னை சமாதானம் செய்து கொண்டிருந்தாள். ஆனால் என்னவோ தன்னுடைய பிடித்தத்திற்கு எந்த மதிப்பும் இல்லாதது போல ஒரு தோற்றம்.

திருமணதிற்கு முன் தன் மீது காட்டிய அக்கறை கூட திருமணதிற்கு பின் குறைந்து விட்டதாக தான் உணர்ந்தாள். “எங்கே இருக்கிறாய்? உண்டாயா? உறங்கினாயா? என்ன வேண்டும்? இதுவா வாழ்க்கை! இதற்கு திருமணம் அவசியமில்லையே!”

அதுவும் பத்து பதினைந்து நாட்கள்.. இப்போது அதை நினைக்கவும் அவளுக்குப் பிடிக்கவில்லை, நினைக்க நினைக்க ஆத்திரம் பொங்கியது..  அந்த வகையில் இன்னும் ஏமாற்றப் பட்டதாக உணர்ந்தாள்.

தன்னுடைய வேலைகள் முடிந்து, அந்த உணர்வே இல்லாதது போல நடந்து கொண்டது இன்னும் ஆத்திரத்தைக் கிளப்பியது. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்னை என்று நினைக்கும் போது ஆங்காரமாய் ஓங்காரமாய் ஆத்திரம் கிளம்பியது.

ப்ரச்சனையில் இருக்கிறான் இன்று சரியாகிவிடுவான், நாளை சரியாகி விடுவான் என்று நினைத்தால், உழைப்பதற்கே பிறந்தவன் போல அதையே செய்து கொண்டிருந்தால், அப்போது நான் எதற்கு இவன் வாழ்க்கையில். எல்லாம் முடித்து திருமணதிற்கு யோசித்து இருக்கலாம் தானே!

தன்னை கைப்பாவையாய் ஆட்டி வைக்கிறான் என்பது போல தான் தோற்றம்!    

எதிரில் இருந்த காஃபி ஆறிவிட.. வாழ்க்கையும் ஆறிப் போன உணர்வு தான்.. அமைதியாக அமர்ந்திருந்தாள். பார்க்கத் தான் அமைதியாய் தெரிந்தாள், உள்ளுக்குள் எரிமலை கனன்று கொண்டிருந்தது. கனன்ற எரிமலை ஈஸ்வர் எனும் புள்ளியை நோக்கித் தான் திரும்பியது.. எழுந்தவள் வாயிலை நோக்கி நடக்க.. அப்போது திரும்ப தொலைபேசி அடித்தது.

எடுத்துப் பார்த்தால் முரளி, எடுத்து “என்ன அண்ணா?” என்றாள் இறுகிய குரலில்.

“குழந்தையை இன்னைக்கு கூட்டிட்டு வர்றோம், வர்றியா வர்ஷி வீட்டுக்கு!” என்றான்.

“நானா? நான் எதுக்கு அங்கே?” என,

“என்ன வர்ஷி? என்ன ஆச்சு? நீ குழந்தைக்கு அத்தைடா! மத்த நாள் தான் வர்றது இல்லை, எத்தனை நாள் இப்படியே இருக்க முடியும். நான் ஈஸ்வரை சமாதானம் பண்றேன்!”  

“அத்தையா? நானா? அதெல்லாம் அப்பா இருந்தவரைக்கும் தான் அண்ணா!” என்றாள் ஒட்டாத குரலில்.

“வர்ஷி, என்ன பேசற?” என்றான் அதிர்ந்து. “உறவுகள்னா சில சமயம் சண்டை சச்சரவுகள் வர்றது தான். ஆனா அதுக்காக சொந்தம் இல்லைன்னு ஆகிடாது!” என, 

“ப்ச், இல்லைன்னு ஆகிட்ட மாதிரி தான் அண்ணா எனக்கு தோணுது” என்றவள் பட்டென்று வைத்து விட.. முரளி திரும்ப திரும்ப முயற்சித்தும் அவள் எடுக்கவில்லை.

மனது பதைக்க முரளி ஈஸ்வருக்கு அழைத்தான், “என்ன ஈஸ்வர் ஏதாவது சண்டையா?” என,

“என்ன சண்டை? யார் கூட சண்டை?” என்று ஈஸ்வர் கேட்க,

“வர்ஷினி கிட்ட இப்போ தான் பேசினேன், குழந்தை வீட்டுக்கு வர்றா வான்னு இன்வைட் பண்ணினேன், அத்தையா நானா அதெல்லாம் இல்லை, அப்பாவோட போச்சுன்னு சொல்லி வெச்சிட்டா!”

“உங்க கிட்ட கோபமா இருக்கும்” என ஈஸ்வர் சொல்ல,

“இல்லை ஈஸ்வர், எங்க கிட்டன்றது மட்டும் இல்லை, குரலே சரியில்லை, மொத்தமா கோபமா இருக்கா” என,

“சரி, நான் என்னன்னு பார்க்கிறேன்!” என்று ஈஸ்வர் வைத்து விட்டவன், காலையில் தன்னிடம் பேசிய போது அப்படித்தானே இருந்தாள்.. உடனே அவளுக்கு அழைக்க,

வெகு நேரம் எடுக்கவில்லை.. ஈஸ்வரும் விடாமல் அடித்த படி இருக்க,

எடுத்து “இப்போ எதுக்கு இப்படி ஃபோன் பண்றீங்க” என்றாள் எரிச்சலாக,

“எங்கே இருக்க?” என,

“எங்கே இருந்தா உங்களுக்கு என்ன?” என்றாள் எரிச்சல் மறையாத குரலில்,

“வர்ஷ், ஏன் இப்படிப் பேசற, என்ன ஆச்சு?” என,

“ஏன்? இன்னும் வேற ஏதாவது ஆகணுமா, இது எனக்கு போதாதா?” என,

“எது? எது? என்ன ஆச்சு?” என்றான் பதட்டமாக.

“என்ன ஆச்சா? உங்களோட எனக்குக் கல்யாணம் ஆச்சு!” என்றவள் ஃபோனை அணைத்து தூக்கிப் பைக்குள் போட்டாள்.

ஈஸ்வர் அந்த பதிலில், அந்த குரலில், அப்படியே நின்று விட்டான். அலுவலகம் அப்போது தான் வந்தவன், உடனேயே எழுந்து அவளின் கல்லூரி நோக்கி கிளம்ப, அங்கே யாருமில்லை. எந்த ஸ்பெஷல் கிளாசும் இல்லை..

“ஏன்? ஏன் பொய் சொன்னாள்? எங்கே சென்றிருப்பாள்?” என்று மனம் பதைக்க, மீண்டும் அவளை அழைக்க ஃபோன் சுவிச் ஆப் என வந்தது. பயந்தவன் திரும்ப வீட்டிற்கே செல்ல, செல்லும் வரையிலும் அவனின் இதயம் துடிக்கும் ஓசை அவனிற்கே கேட்டது. அங்கே அவளின் லம்பாகினி நிற்பதை பார்த்ததும் தான் சற்று மனது ஆசுவாசப் பட்டது.

ஆம்! இங்கே தனியாக வந்தது முதலே லம்பாகினி தான் உபயோகிக்கின்றாள்.

வாயிலில் நின்று காலிங் பெல் அடிக்க.. கதவு திறக்கவேயில்லை, பதட்டத்தில் அவனிடம் சாவி இருப்பதே ஞாபகமில்லை,  சில நொடிகளுக்கு பிறகே ஞாபகம் வர திறந்து உள்ளே போனான்.

உள்ளே சென்றால் வர்ஷினி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.. அவ்வளவு கோபமாக பேசினால், அதற்குள் உறங்குகிறாளா என்ற யோசனையோடு அமர்ந்தான்.

எழுப்பினான், ஆனால் வர்ஷினி அசையவேயில்லை.. பயந்தவன், அவளைத் தட்டி தட்டி எழுப்ப.. “தூக்கம் வருது” என்ற முனகல் மட்டுமே வர.. அதுவும் வித்தியாசமாய் தோன்ற,

“ஹேய் வர்ஷி, என்ன பண்ற? ஏன் இப்படித் தூங்கற?” என்று கன்னத்தில் வலிக்கும் படி அடித்து எழுப்பினான்.

“மாத்திரை சாப்பிடேன்” என்று சொல்லி கண்களை மூடிக் கொள்ள.. அதிர்ந்து அமர்ந்து விட்டான். அவன் நினைத்தது தூக்க மாத்திரை, அதற்கே அதிர்ந்து விட்டான். 

இரவு வரையிலும் வர்ஷினி எழவில்லை..  ஈஸ்வர் எதுவுமே செய்யாமல் அவளை பார்த்தது பார்த்தபடி அமர்ந்திருந்தான், மதிய உணவும் உண்ணவில்லை.. ஏதோ மனதிற்கு சரியாகப் படவில்லை.. இதயத்தில் ஒரு அழுத்தம்.. மனதில் ஒரு இனம் புரியாத பயம்..   

முரளி அழைத்தான், மலர் அழைத்தார், எல்லோருக்கும் “கொஞ்சம் பிசியா இருக்கேன், அப்புறம் பேசறேன்” என வைத்து விட்டான்.

காலையில் பதினொரு மணிக்கு உறங்கியவள்.. விழித்த போது இரவு மணி ஒன்பது..

மெதுவாக கண் திறந்தவளின் முன் அமர்ந்திருந்த ஈஸ்வர் பட.. கண்ணை தேய்த்து விட்டு பார்த்தால், அவன் தானா என்பது போல.. அவனே தான் எனத் தெரிந்ததும்..

நேரத்தை பார்த்தால் அது ஒன்பது என..  “அதுக்குள்ள வந்துடீங்க?” என,

“நான் காலையில பதினோரு மணில இருந்து இங்க தான் இருக்கேன்” என்றான்.

எதுவும் பேசாமல் எழுந்து குளியலறை செல்ல, வருவதற்காகக் காத்திருந்தான்.. முகம் கழுவி வந்தவளிடம்.. எழுந்து நெருங்கி நின்றவன் “என்ன ஆச்சு வர்ஷ்?” என்றான் அமைதியாகவே.

“என்ன ஆச்சு?” என்றாள் திரும்ப என்றால் ஒரு தூக்க கலக்கத்தோடே,

அந்த நீல நிறக் கண்களில் ஒரு வித்தியாசம், உறக்கம் இன்னும் கண்ணை விட்டு அகலவில்லையோ என யோசித்த படி..

“ஃபோன்ல எதுக்கு அப்படி பேசின?” என்றான்.

“என்ன பேசினேன்? ஞாபகமில்லை சொல்லுங்க!” என்றாள் அவனைப் போலவே.

உண்மையாகவே அவளுக்கு ஞாபகமில்லை, அவள் எடுத்திருந்த மாத்திரையின் வீரியம் மூளையை மழுங்கடித்து இருந்தது.

“என்ன ஆச்சு வர்ஷ்? தூக்க மாத்திரை போட்டுத் தூங்கற அளவுக்கு”

“தூக்க மாத்திரையா? உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள் கண்களில் சிறிது கலவரம் எட்டிப் பார்க்க

“நீதானே நான் எழுப்பினப்போ மாத்திரை சாப்பிட்டேன் சொன்ன”  

“ஓஹ், நான் தான் சொன்னேனா? வேற என்ன சொன்னேன்?” என்றாள் சற்று ஆசுவாசப் பட்டு. ஆனாலும் அந்த கண்களில் இருந்த ஏதோ ஒன்று ஈஸ்வருக்கு அப்படி ஒரு பயத்தைக் கொடுக்க..

“என்ன வர்ஷ்? என்ன பிரச்சனை?” என்றான் பயத்தோடு.

“சொன்னா, சொன்னா சரியாகிடுமா? ஆகாது! ஆகாது!” என்று அப்படியே படுக்கையில் அமர..

“என்ன? என்ன பிரச்சனை?” என்றவனுக்கு குரலே வரவில்லை.  

“நீதான்! நீதான் பிரச்சனை! அப்போ எப்படி இது சரியாகும்.. சரியாகாது!” என்றபடி எழுந்தவள் “பசிக்குது” என்றாள். குரலில் ஒரு ஆத்திரம் கோபம் எதுவும் இல்லை, எதோ செய்தி சொல்வது போலவே இருந்தது.  

“என்னன்னு சொல்லு” என்றான் மனம் பதைக்க.. அவனுக்குள்ளேயே ஒரு குற்ற உணர்ச்சி, தனிமையை உணர்ந்ததால்..   

“என்ன சொல்ல? நீ ஒரு சுயநலவாதி, உன்கிட்ட நான் என்ன சொல்ல?” என்றவளின் குரலில் சற்று அழுத்தம் எட்டிப் பார்த்தது.  

“சொல்லு வர்ஷ் சொன்னாதானே தீரும்?” என்றான் இறங்கிய குரலில்.

“சொன்னாலும் தீராது, எப்படித் தீரும், எனக்கு உன்னை பிடிக்கலை!” என்று சங்கீத வர்ஷினி நிறுத்த.. 

இதை ஈஸ்வர் எதிர்பார்க்கவேயில்லை, இதயம் நின்று தான் துடித்தது! அப்படியே பார்த்தது பார்த்தபடி நின்றான். குறை சொல்வாள், குற்றம் சொல்வாள், திட்டுவாள் என்று எதிர்பார்க்க இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை.  

“எப்படி இனி தீரும்? அது தீராது! தீராது! கண்டிப்பா தீராது! இதோட தானே நான் வாழணும்!” என்றவளின் குரலில் அடக்கப்பட்ட ஆத்திரம்.

“ஒன்னுமே பண்ண முடியாது!” என்றவளின் கண்களில் வேகமாக கண்ணீர் இறங்கியது.

“நீ என்கிட்டே தப்பா நடந்தப்போவே நான் அப்பா கிட்ட சொல்லியிருக்கணும். ஆனா சொல்லலை, ஏன் சொல்லலைன்னு நம்ம கல்யாணம் வரை கூட நினைக்கலை.. ஆனா இந்த வீட்டுக்கு வந்த பிறகு பலமுறை நினைச்சிட்டேன்”  

“சொல்லியிருந்தா நம்ம கல்யாணம் நடந்திருக்காது!”

அவள் சொல்லிய விதத்திலும், அவள் சொல்லிய விஷயத்திலும் ஈஸ்வரின் கண்களில் கண்ணீர் வருவேனா என்றது. 

“ஏற்கனவே அப்பாவோட இல்லீகல் சைல்ட் நான்.. நான் இல்லீகல் இல்லை, இதுதான் என்னோட அம்மான்னு அதையும் சொல்ல முடியாது!”

“அப்போ எனக்கு பிடிக்கலைன்னு உன்னை விட்டு எப்படிப் போக முடியும்.. இந்த சொசைட்டி ல திரும்ப நான் ஒன்னுமே இல்லாம போயிடுவேன். அதை என்னால் செய்ய முடியாது இல்லையா? அப்போ எனக்கு பிடிக்கலைன்னாலும் உன்னோட தானே நான் இருக்கணும்!” என்றாள் தெளிவாக.

“என்ன உளர்ற நீ?” என்று பயத்தோடும் ஆத்திரத்தோடும் ஈஸ்வர் பேச..

“கேட்டீங்க சொன்னேன், அப்புறம் உளறல்ன்னு சொன்னா நான் என்ன சொல்வேன், இதுக்கு தான் நான் எதுவுமே சொல்லலை! சாப்பிடலாமா?” என்றபடி நடக்க..

வேகமாக அவள் முன் சென்று நின்றவன்.. “ஐ லவ் யு வர்ஷ், கண்டதையும் நினைச்சு குழப்பாதே!” என,

“நீங்க என்னை லவ் பண்ணலைன்னு நான் எப்போ சொன்னேன்.. எனக்கு அதுல எந்த சந்தேகமும் இல்லை!”

“அப்புறம் ஏன் இப்படிப் பேசற?”

“ஏன்னா நீங்க உங்க வாழ்க்கையை அமைச்சிக்கிட்டீங்க, ஆனா எனக்கு அமைச்சிக் கொடுக்கலை.. என்னால எல்லாம் சொல்ல முடியாது, விடுங்க!” என்றபடி  நடக்க,

“வர்ஷ்” என நின்றான்.

ஆம்! வர்ஷினியால் எல்லாம் சொல்ல முடியாது! அவள் எடுத்துக் கொண்டது தூக்க மாத்திரை அல்ல, நார்காடிக்ஸ் எனப் படும் வகையை சேர்ந்தது.. மிகுந்த வலியில் இருப்பவர்களுக்கு கொடுக்கப் படுவது..

வலியை போக்குவதோடு, மனநிலை மாற்றம், உடல் நிலை மாற்றம், செயல் நிலை மாற்றம், ஒரு மயக்கம் எல்லாம் கொடுக்கும், சட்டத்திற்கு புறம்பானது.. இன்னொரு வகையில் சொல்ல வேண்டும் என்றால் போதை வஸ்து..

சிறிது சிறிதாக சாப்பிடுபவரை அடிமையாக்கும்! 

வர்ஷினியிடம் ஈஸ்வர் தவறாக நடந்த போது அவளுக்கிருந்த மனஉளைச்சலில் தான் முதன் முறை அதை எடுத்தாள். ஹாஸ்டலில் இருந்த போது தோழி ஒன்றிரண்டு பேர் எடுத்துப் பார்த்திருக்கிறாள் அப்படித் தான் தெரியும். அவர்களிடம் இது தவறு என்று அடித்துப் பேசியவள், அதனை இப்போது தானாகவே எடுத்தாள்.

அது தவறென்று தெரியும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்றும் தெரியும். அதனை பற்றிய ஒரு ஆராய்ச்சியே இணையதளம் மூலமாக செய்து விட்டாள். அவளின் லேப் முழுக்க இதனைப் பற்றிய செய்திகளே!

அது தான் ஈஸ்வர் எடுத்ததும் கண்டு கொண்டானோ என்று பயந்து விட்டாள். ஈஸ்வர் அவனுடைய வேலையை மட்டுமே செய்தான் என்ன இருக்கிறது என்றெல்லாம் பார்க்கவில்லை.  

மீண்டும் மீண்டும் அவன் திருமணதிற்கு வற்புறுத்திய போது சில முறை எடுத்திருந்தாள். அதிகமாக எடுத்தது, ஈஸ்வர் வர்ஷினியை பார்த்து மிரட்டிச் சென்ற நாள், “நான் திரும்பவும் வருவேன், நீ யாரையாவது திருமணம் செய்திருந்தாலும் வருவேன்” என்று சொல்லிச் சென்ற நாள்.

பிறகு இந்த நினைவுகளின் தாக்கம் வரும் போது எப்போதாவது, ஈஸ்வர் திரும்ப சிங்கப்பூரில் இருந்து வந்த நாளின் முந்தைய இரவு கூட எடுத்திருந்தாள்.. அதனால் தான் அந்தக் கண்களில் வித்தியாசம் தெரிந்தது ஈஸ்வருக்கு..

யாரோடும் எதையும் பகிராமல் இருந்த ஒரு சிறு பெண்ணிற்கு கொடுத்த மன அழுத்தம் ஈஸ்வருக்கு புரியவேயில்லை! அது செய்திருக்கும் நாசமும் அவனுக்குத் தெரியவில்லை!

திருமணதிற்கு பின் அதனை நாடியதில்லை, இப்போது இரண்டு நாட்களாக..   

(என்ன திடீர்ன்னு இப்படி எழுதிடீங்கன்னு கேட்க கூடாது மக்களே! இதுக்கான ஹின்ட் அப்போ அப்போ அந்தந்த சீன்ஸ் எழுதும் போது கொடுத்திருக்கேன். இதுதான் கதையோட போக்கு. இது திடீர்ன்னு வந்தது இல்லை )        

நடந்திருந்தவள் ஆவேசமாக திரும்பி “என்னவோ பெரிய இவன் மாதிரி டைலாக் விட்ட, என்ன ஹேண்டில் பண்ண உன்னைத் தவிர யாராலையும் முடியாதுன்னு அவ்வளவு கர்வமா சொன்ன?”

“என்ன பண்ணியிருக்க தெரியுமா நீ? ஒழுங்கா இருந்த பொண்ணை கல்யாணம்ன்ற பேர்ல ஸ்பாயில் பண்ணியிருக்க, யாரோ ராஜகுமாரன் நமக்காக வருவான்னு காத்திருந்த பொண்ணை சிதைச்சு இருக்க!” என்றாள் ஆவேசமாக.

“என்னவோ யாரும் இல்லாத இடத்துக்கு என்னை கூட்டிட்டு போயிடுவ சொன்ன.. ஆனா இந்த மூணு மாசமா என்னை பார்க்கக் கூட இல்லை.. எனக்கு புரியுது நீ உன்னை கண்ட்ரோல் பண்ற என்னை முன்ன வெச்சுன்னு”

“ஆனா அதுக்கு நீ என்னை கல்யாணம் பண்ணியிருக்க வேண்டாம், நான் என்ன நீ ஆராய்ச்சி பண்ற பொருளா? என்று ஆங்காரமாய் கத்தியவள், அந்த ரூமை விட்டு அகன்று விட..

வாழ்க்கையில் மிக மிக மோசமாக ஈஸ்வர் எனும் கர்வி காயப்பட்டான்..  அப்படியே சில நிமிடங்கள் நின்று விட்டான். வர்ஷினி பேசியது மட்டும் தான் இதற்கு தெரியும்.. இன்னும் அவளின் செயல் தெரியவில்லை. தெரிந்தால் தன்னை மன்னிக்க என்றும் அவனால் முடியாது என்பது தான் உண்மை.    

ஈஸ்வர் வராததைப் பார்த்து உள்ளே வந்தவள்..  ஈஸ்வர் அப்படியே நின்றிருப்பதைப் பார்த்து, “மை இன்ட்டென்ஷன் வாஸ் நாட் டு ஹர்ட் யு.. பட் ஸ்டில்.. எனக்கு புரியுது வாழ்க்கையோட உண்மைகள், நம்ம கனவு வாழ்க்கையோட மேட்ச் ஆகாதுன்னு.. எந்த தப்புமே பண்ணாம யாருக்காகவோ நீங்க பணத்துக்கு பின்னால ஓடறீங்கன்னு புரியுது, ஆனாலும் அதுக்கு நான் விக்டிம் ஆக முடியாது இல்லையா?” என்று நிறுத்தி அவள் பார்த்திருக்க..

புதைந்து போக விரும்பும் அந்த நீல நிறக் கண்கள் அவனை எரித்தது தான் உண்மை!

“மே பீ நான் யோசிக்கிற விதம் தப்பாக் கூட இருக்கலாம், நான் கேட்டா நீங்க எனக்காக எல்லாம் செய்வீங்க தான். ஆனா எனக்கு இதெல்லாம் தான் வேணும் வேணும்ன்னு கேட்டு வாங்கறது வாழ்க்கை இல்லையே”

“பிரிஞ்சிரிவோம்னு சொல்ற அளவுக்கு எனக்கு தைரியம் கிடையாது.. கூடவே எனக்கு வீடும் கிடையாது.. முடிஞ்சவரை என்னை கன்வின்ஸ் பண்ண பார்க்கிறேன்” என்று முயன்று புன்னகை செய்தவள்..

“எஸ், நீங்க என்னை தான் லவ் பண்ணுனீங்க பண்ணறீங்க பண்ணுவீங்கன்னு சொல்லி தான் கன்வின்ஸ் பண்ணிக்கறேன்” எனச் சொல்லி, “பசிக்குது வாங்க” என்று திரும்ப நடக்க..

அவள் பேசியதைக் கேட்க கேட்க.. ஒரு பயத்தை உணர்ந்தான் ஈஸ்வர்.. பயம் பயம் பயம் மட்டுமே!  பூமியுள் புதையுண்டு விட தான் விரும்பினான்!

வாழ்க்கையில் எல்லாவகையிலும் தோற்று விட்ட ஒரு உணர்வு!  அப்போதும் அவனின் தவறுகளை நோக்கி தான் அவனின் பார்வை திரும்பியது.. இன்னும் முழுதாக அவன் வர்ஷினியை அறியவில்லை.. 

ஆம்! இன்னும் அவள் கோபத்தைக் காட்டவேயில்லையே.. தன்னை சிதைக்கும் தன்னுடைய செய்கையையும் அறிய விடவில்லை. அதனை அறியாத போதே பயம்..

இந்த பயம் வாழ்க்கையில் தவறிய மனிதர்களுக்கு தோன்றும் பயம்!    

எவராகினும் பெண்ணிடம் தவறிழைத்த மனிதனை வாழ்க்கை விடுவதில்லை.. இவன் பெண்களிடம் அல்லவா தவறிழைத்து இருக்கிறான்.. ஒரு பெண்ணின் உடலை தீண்டி! இன்னொரு பெண்ணின் மனதை தீண்டி! பெண்களிடம் தவறிழைக்கும் மனிதனை வாழ்க்கை அவ்வளவு சுலபத்தில் விடுவதில்லை.

அது தவறு என்று உணர்ந்து விட்டாலும் செய்த செயலின் பயனை அனுபவித்து தானே ஆகவேண்டும்!

மனிதனுக்கும் மிருகத்திற்கும் அது தானே வித்தியாசம்! தன்னை கட்டுக்குள் வைக்காத மனிதன் மனிதன் அல்ல! நாளும் பொழுதும் அந்த நீல நிறக் கண்களில் தொலைந்து, தன்னை தொலைத்து, ஒரு பெண்ணை நீ வேண்டாம் என்று சொல்லி, இன்னொரு பெண்ணை திருமணதிற்கு கட்டாயப் படுத்தி, என்ன செயல் இது?   

திருமணதிற்கு பின் தானே காதல் என கண்டறிந்தான் தன் மயக்கங்கள் தெளிந்த பிறகு… வேறாகிப் போயிருந்தால்?

எவ்வளவு நேர்மையாக இருந்தாலும், எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், எவ்வளவு ஓடினாலும், வெற்றி சுலபத்தில் அணுகிவிடாது, வாழ்க்கையில் நிம்மதியும் கிட்டாது!

இதில் மிகவும் வருந்தத்தக்க விஷயம் விஸ்வேஷ்வரனின் தோல்வி அவனின் நிம்மதியின்மை சங்கீத வர்ஷினியையும் பாதிக்கும் என்பது தானே!

இது விதிப் பயன் அல்ல செய்த செயலின் பயன்! 

மீண்டு வருவானா? மீட்டு வருவானா?

நின்புகழ் நின்னை மறைத்த நின் செயல் நின்னைக் கொல்லும்!

                         (இரண்டாம் பாகம் முற்றும்)   

Advertisement