Advertisement

அத்தியாயம் அறுபத்தி ஒன்று :

நீலவிழி உரைக்கும் செய்தி கண்திறந்தால் தானே தெரியும்!

காரை வேகமாக செலுத்திக் கொண்டிருந்த சங்கீத வர்ஷினிக்கு வீட்டிற்கு போகவே பிடிக்கவில்லை.. யார் இருப்பர் வீட்டில், யாரும் இருக்க மாட்டார்.. ஹாஸ்டலிலாவது பார்ப்பதற்கு ஆட்கள் இருப்பர்.. பிடித்தால் பேசுவாள் பிடிக்காவிட்டால் அமைதியாக தனிமையை நாடி விடுவாள்.

ஆனால் இங்கே பிடித்தாலும் பேச ஆளில்லை, பிடிக்காவிட்டாலும் பேச ஆளில்லை..     

வீட்டை விட்டு தனியாக வந்த விஷ்வேஷ்வரன் என்ற மனிதன் பணத்தின் பின் மட்டுமல்ல, வெற்றியின் பின்னும் ஓட ஆரம்பித்து இருந்தான்.. ஈஸ்வர் ஃபைனான்சில் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டவன்.. என்ன செய்வது ஏது செய்வது என்ற யோசனைகள் மட்டுமல்ல செயலாற்றவும் ஆரம்பிக்க..

அவன் வீட்டில் இருக்கும் நேரங்கள் குறைந்து போக சங்கீத வர்ஷினி மீண்டும் தன்னுள் சிறிது சிறிதாய் தொலைய ஆரம்பித்தாள்.. யாரு மற்ற தனிமை..

அதையும் விட.. சில புதிய உணர்வுகளை இனம் காண வைத்தவன்.. பின்பு அதனைப் பற்றிய நினைவே இல்லாதவனாக தொழில் உழைப்பு என்று கவனத்தை திருப்பி விட..

மிகுந்த பசியோடு இருந்தவளுக்கு அறுசுவை உணவின் முன் அமர்த்தி வைக்கப் பட்டு, இரு வாய் உண்ட பின் அவளின் முன் இருந்த உணவு அகற்றப்பட்ட கொடுமை தான்..

வர்ஷினியால் எதுவும் ஈஸ்வரிடம் சொல்லவும் முடியவில்லை.. இரவு பகலாகிப் போனது அவனின் உழைப்பு.. வாழ்க்கையை மிகவும் கடினமாக்கிக் கொண்டான் ஈஸ்வர். 

தன்னுடைய தனிமையும் கொல்ல, ஈஸ்வரின் உழைப்பும் அவன் படும் துன்பமும் கொல்ல..

வாழ்க்கையில் என்ன இருக்கின்றது என்ற உணர்வு சிறிதாக அவளை ஆட்கொள்ள ஆரம்பித்தது.. ஈஸ்வருக்கு ஏன் இந்த ஓட்டம் என்று புரியவில்லை.

தனிமையும் கொன்றது உணர்வுகளும் கொன்றது..   

 வீட்டை திறந்து உள்ளே சென்றவள், சுருண்டு படுத்துக் கொண்டாள்.. பீரியட்ஸ் அதனால் வயிறு வலி வேறு.. மனதினில் அதனையும் விட வலி..

வலிக்கிறது என்று சொல்லக் கூட ஆள் இல்லையே..

நேரம் பார்த்தால் மாலை ஐந்தரை மணி தான்.. ஏழு மணிக்கு தான் உணவு வரும்.. மலர் காலை உணவோடு சேர்த்து இவளுக்கு மட்டும் மதியத்திற்கும் உணவு அனுப்பி விடுவார்.. இரவு ஏழு மணிக்கு வரும்..

எப்போதையும் விட மனது மிகவும் சோர்வாக உணர்ந்தது.. அந்த நாட்களில் வரும் ஹார்மோனல் மாற்றங்களோ என்னவோ..

இன்னும் முதல் முதலாக அவள் பெரிய மனுஷி ஆன தினம் நினைவில் இருந்தது.. ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பன்னிரண்டு வயது சிறுமி.. காலை எழுந்து குளிக்க செல்லும் போது தான் கண்டாள்..

என்ன வென்று தெரியவில்லை.. தனக்கு எதோ நோய் வந்து விட்டது தான் இறக்கப் போகிறோம் போல என்று பயந்தது இன்று நடந்தது போல ஞாபகத்தில் இருந்தது..

ஆனால் யாரிடமும் இதை சொல்லவும் முடியாமல் போய் படுத்துக் கொண்டாள்.. வார்டன் வந்த போது.. லூஸ் மோஷன் என்று சொல்லி அப்படியே படுத்துக் கொள்ள.. மதிய உணவிற்கும் செல்லவில்லை..

மாலை வரை யாருக்கும் தெரியவேயில்லை.. அவள் வகுப்பிலோ இல்லை ஹாஸ்டல் அறையில் இருப்பவர்களோ அவளின் வயதை ஒத்தோ இல்லை இன்னும் சிறிய வயதோ தான் இருந்தனர்.. அதுவரை வர்ஷினியின் வட்டத்தில் யாரும் ஆகவில்லை, அதனால் அது என்னவென்று தெரியவில்லை..

மாலை தேநீர் அருந்தும் நேரத்திற்கு தோழி ஒருத்தி..

“கம் வர்ஷினி, ஏன் இப்படிப் படுத்திருக்க?” என்று வற்புறுத்தி அழைக்க.. பசிக்கவும் செய்ய, எழுந்தாள். அவளின் பின் புறம் படுக்கை எல்லாம்.. அவளுக்கு தான் என்னவென்று தெரியவில்லை.. சொல்லிக் கொடுத்திருக்க அம்மாவும் இல்லை.. பெண் குழந்தைகள் இல்லாத, கூட வைத்து வளர்த்திராத கமலம்மாவிற்கும் இதை எல்லாம் வர்ஷினிக்கு சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும் என்று தெரிந்ததில்லை..

அந்த தோழிக்கு தெரிய.. “மேம்” என்று உடனே ஓடி வார்டனை அழைத்து வர.. “வொய் டிட்ன்ட் யு சே” என்று வார்டனிடம் முதலில் திட்டு தான் கிடைத்து..

அன்று அழுத அழுகை இன்னும் ஞாபகத்தில் இருக்க.. இப்போதும் கண்களில் கண்ணீர் பெருகியது..

ஏதேதோ ஞாபகங்கள்.. ஒன்றும் முடியவில்லை.. வீட்டை உள்ள்ளிருந்து பூட்டி படுத்துக் கொண்டாள்.. ஈஸ்வரிடம் ஒரு சாவி இருக்க.. திறந்து வரட்டும் என..

ஈஸ்வருக்கு “ஃபீலிங் ஸ்லீப்பி, ஸ்லீபிங், நீங்க கதவு திறந்துக்கங்க” என மெசேஜ் செய்து.. ஃபோனையும் சுவிச் ஆஃப் செய்து படுத்துக் கொண்டாள்.. இரவு உணவுடன் வந்த வேலையால் பெல் அழுத்தி அழுத்திப் பார்த்து கதவு திறக்காததை கண்டு மலருக்கு அழைக்க .. அவர் வர்ஷினிக்கு அழைக்க, போன் சுவிச் ஆஃப் என்று வர.. உடனே ஈஸ்வருக்கு அழைத்தார்..   

அவனிடம் சொல்ல.. அவன் அப்போது தான் தன் ஃபோனை பார்த்தவன், “தூக்கம் வருது, தூங்கறேன்னு மெசேஜ் பண்ணியிருக்கா மா.. செக்யுரிட்டி கிட்ட கொடுத்துடுங்க.. நான் போய் வாங்கிக்கறேன்!” என்று சொல்லி திரும்ப வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான்.

தூங்குகிறாள் என்ற நினைவில் எப்போதையும் விட இன்னும் அதிக நேரம் ஆஃபிசில் இருந்து கிளம்பினான். அவன் கிளம்பும் போது இரவு நேர செக்யுரிட்டி தவிர யாருமில்லை.. பின்னே நேரம் பதினொன்றையும் கடந்து இருந்தது..

உறக்கம் அவனை விட்டுப் போய் வெகு நாட்கள் ஆகிவிட்டது.. மீண்டு வரவேண்டும் என்பது மட்டுமல்ல, மீண்டும் வரவேண்டும் என்பது கூட நோக்கமாகிப் போக.. புதிய புதிய திட்டங்கள் ஃபைனான்சில் வகுக்க.. அது எப்படி செயல் படுகின்றது என்பதை நேரடிப் பார்வையாக பார்க்க வேண்டிய அவசியம் மிக மிக அதிகம்..

ஃபைனான்ஸ் மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்பதும் மனதின் ஒரு ஓரத்தில் ஓடிக் கொண்டே இருக்க.. வேறு தொழில் இதனுடன் என்ன செய்யலாம் என்பதும் எண்ணமாகிப்.. இப்படி எல்லாம் ஓடும் போது வர்ஷினியிடம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது பின்னுக்கு போனது.. பின்னுக்கு தான் போனதே தவிர மறைந்து விடவில்லை.

ஈஸ்வரை பொறுத்தவரை அவள் மிகுந்த புத்திசாலி எல்லாம் பார்த்துக் கொள்வாள் என்பது போல தான்.. திருமணதிற்கு முன் சில முறை இனம் கண்டு கொண்டிருந்த தனிமையை இப்போது மறந்து போனான்.

வர்ஷினியும் தன்னைக் காட்டிக் கொண்டதே இல்லை.  

“எப்போ வருவீங்க, சீக்கிரம் வாங்க, ஐ மிஸ் யு” என்பது போல எல்லாம் எதுவும் இல்லை.. அவளுக்கு ஈஸ்வரின் ஓட்டம் நன்கு புரியும் போது அதில் தடையாக எப்படி இருப்பாள்.

வீட்டிற்கு வரும் போது இரவு பன்னிரண்டு.. கதவைத் திறக்க.. அவனுக்கே சோர்வு.. டைனிங் டேபிளில் உணவை வைத்தவன்.. வர்ஷினியை சென்று எழுப்ப..

மெதுவாக கண்ணை திறந்தவள் “எனக்கு தூக்கம் வருது” என..

“சாப்பிட்டிட்டு தூங்கு” என்ற அவனின் வார்த்தைகள் அவளின் செவியை எட்டியது போலக் கூட தெரியவில்லை.. மீண்டும் உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.

எழுப்பி எழுப்பி பார்த்தவன், முடியாமல் அவன் மட்டும் வந்து பெயருக்கு உணவை கொறித்து விட்டு.. உடை கூட மாற்றாமல் அவனும் சென்று உறங்க..

வீடா? தங்கும் இடமா?… பகுத்தறிய முடியவில்லை..

வர்ஷினி மட்டும் தனிமையை உணரவில்லை.. உணர்ந்த மற்றொரு ஜீவன் பத்மநாபன்..

ஆம்! ரஞ்சனி வீட்டிற்கு வந்து விட்டாள் தான், ஆனால் பத்துவுடன் பேசுவதில்லை.. என்ன ஏதென்ற அவசியமான வார்த்தைகள் கூட மிகுந்த யோசனையோடு வந்தது..

ஆம்! ஈஸ்வர் வீட்டை விட்டு சென்றது மனதளவில் ரஞ்சனியை மிகவும் பாதித்து இருந்தது.. தான் இப்படி திருமணம் செய்யாமல் இருந்திருந்தால், பிரச்னையை ஈஸ்வரே சமாளித்து இருப்பானோ..

தொழிலை விட்டவன், வீட்டையும் விட்டு விட்டானா?, மனதொடிந்து விட்டாள்..

பத்து “சாரி” என்ற வார்த்தையை ரஞ்சனியிடம் கேட்டான் தான்.. ஆனால் அதற்கு மேல் எப்படி சரி செய்து கொள்வது என்று தெரியவில்லை..  அவனின் கிரக நிலைகளோ என்னவோ முட்டாளாகிப் போனான்.      

நடந்த பிரச்சனைகள் தெரிந்த பிறகு முரளி இன்னுமே பொங்கி விட்டான்.. “என் ஃபிரண்ட் அவன், அதை விடு, வர்ஷினியோட கணவன், அதைக் கூட மறந்து எப்படிடா இப்படிப் பேசின”

“எது செய்யறதுன்னாலும் சொல்லி நேரடியா செய்வான்டா வர்ஷினிக்கு சொல்லிக் கொடுத்து செய்யணும்னு எந்த அவசியமும் அவனுக்கு இல்லை. அதுவுமில்லாம வர்ஷினி யார் சொன்னாலும் அப்படி உடனே கேட்கற பொண்ணும் கிடையாது. என்ன நீ லாயரோ? என்னத்த ப்ராக்டிஸ் பண்றயோ?”

“அப்பா கிட்ட பேசி வர்ஷினி மேலயும் அம்மா மேலயும் மட்டும் இருந்ததை நம்ம மேல மாத்த வெச்சதே அவன் தாண்டா” என, இதெல்லாம் புதிய செய்தி பத்மனாபனுக்கு.. 

“அவன் என்ன அனுப்ப மாட்டேன்னா சொன்னான்.. பொறுமையா பேசியிருக்கலாம், இல்லை என் கிட்ட சொல்லியிருக்கலாம். மூணு பேரும் கிளம்பிப் போய் என்ன ஆச்சு.. வீட்டை விட்டு போயிட்டானாமேடா.. வர்ஷிக்கு ஒரு வீட்டை பார்த்துக்கற அளவுக்கு என்னடா தெரியும்? ஒன்னுமே தெரியாதுடா!” என..

பத்துவிற்கு மிகுந்த குற்ற உணர்ச்சியாகப் போய்விட்டது, “நீ பேசேன் முரளி” என நிற்க..

“அவன் பேச ரெடியாவே இல்லை.. இதைப் பத்தி பேசறதா இருந்தா நீ என்கிட்டே பேசாதேன்னு முடிச்சிடறான், நானும் இப்போ அவன் கூட சண்டை போடவா முடியும், போடா!” என்றவன் தான் அவனும் சரியாகப் பேசுவதில்லை..  

ரஞ்சனி மருத்துவம் படித்தாலும் இதுவரை இல்லாத ஒரு உணர்வோடு தன்னை அதில் ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பிக்க.. படிப்பு, மருத்துவமனை என்று மிகவும் பிசியாக தன்னை மாற்றி கொண்டாள், எந்த யோசனைகளும் இல்லாத வகையில்..  ஆம்! ஈஸ்வரின் நினைப்பு குறைந்து விட, பத்துவை திரும்பிக் கூட பார்ப்பது இல்லை, அம்மா வீட்டிற்கும் செல்வது இல்லை.. எல்லாம் தன்னால் தானோ என்ற குற்றுணர்ச்சி அவளுக்கும் அதிகமாய்.. 

வர்ஷினி வீட்டினர் யாருடனும் சரியாகப் பேசுவதில்லை.. கமலம்மா போனில் அழைத்தாலும் ஒரு முறை எடுப்பாள், பல முறை எடுக்கக் கூட மாட்டாள்..

முரளியின் குழந்தையைப் பார்க்க வந்ததுடன் சரி.. அன்று வீட்டினருடன் பேசியவள் தான்.. பிறகு தனியாக இருக்கும் வேதனை அதிகமாகத் தெரிய.. எல்லாம் இவர்களால் தான் என்று இரு வீட்டினர் மீதும் கோபம்.

யாருடனும் அதிகமோ அல்லது இயல்பாயோ பேசுவதே இல்லை.. அதுவும் ஈஸ்வரின் சிரமத்தை பார்த்த பிறகு பத்துவுடன் பேசுவதை அறவே தவிர்த்து விட்டாள்.

எல்லோரும் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறார்கள், நாங்கள் மட்டும் ஏன் இப்படி என்ற கேள்வி தான் பூதாகரமாய் தெரிந்தது..

“எதுக்கு இவ்வளவு டென்ஷன், முழு நேரமும் வேலை,  என்னோட பணம் எல்லாம் அப்படியே தானே இருக்கு, யூஸ் பண்ணிக்கங்க” என்று சொன்னாலும் ஈஸ்வர் கேட்கவில்லை..

மொத்தத்தில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளான இரு ஜீவன்கள் விஷ்வேஸ்வரனும் சங்கீத வர்ஷினியும் மட்டுமே.. ஆயிற்று மூன்று மாதங்கள் முடிந்துவிட்டது.

யாராலும் ஈஸ்வரை சரி செய்ய முடியவில்லை, அதன் தாக்கம் எல்லாம் வர்ஷினியிடம்.. யாராயிருந்தாலும் இங்கே வந்து பார்த்துப் போவதோடு சரி..

ஈஸ்வர் யார் வீட்டிற்கும் செல்வதில்லை.. அவனின் வீட்டிற்கும் சரி, வர்ஷினியின் வீட்டிற்கும் சரி..

இந்த மூன்று மாதத்தில் வர்ஷினி கற்றுக் கொண்டிருந்த சமையல் வேலை, பாலைக் காய்ச்சி காஃபி போடுவது மட்டுமே.. வேறு அவசியங்கள் இருக்கவில்லை, மூன்று வேளையும் மகனிற்கும் மருமகளிற்கும் கொடுத்து அனுப்பி விடுவார் மலர். வர்ஷினிக்கும் அவருக்கு இடையில் நன்கு ஆரம்பித்த ஒரு பந்தம் அப்படியே நின்றது.

ஆம்! என்ன முயன்றும் வர்ஷினி தொடரவில்லை.. “அவரை கன்வின்ஸ் பண்ணி அண்ணியை அனுப்பி இருக்கலாம் தானே, அவருக்கு பிடிக்காதுன்னு  தெரிஞ்சும் ஏன் அனுப்பினீங்க” என்று மலரிடம் கேட்க வேறு செய்தாள்.

அவளின் நீல நிறக் கண்களில் தொலையும் ஈஸ்வர் தொலைந்து போயிருந்தான்.. அதுவும் கூட ஒரு வகையில் வர்ஷினியை பாதித்தது.  

காலையில் வர்ஷினி எழுந்து குளித்து பாலைக் காய்ச்சி காஃபி போட்டுக் கொண்டு அமர்ந்த போது ஈஸ்வர் அழ்ந்த உறகத்தில்.. உணவு வகைகளை பார்த்தால் அதிகம் உண்ணப் படாமல் இருக்க.. ஈஸ்வரும் சரியாக உண்ணவில்லை என்று புரிந்தது.

ஈஸ்வரை சென்று எழுப்ப.. கண்ணை திறந்தவன்.. எழுந்து அமர.. அந்த நேரம் காலை உணவு வர.. வர்ஷினி அதை வாங்கி வைக்கப் போக..

இவன் தன்னை சீர் படுத்த குளியலறை போக.. சீர் படுத்தி வந்த போது வர்ஷினி காலை உணவை உண்டு கொண்டிருந்தாள்.. ஆம்! நேரம் எட்டரை மணியை தொடப் போக.. நேற்று உண்ணாததால் பசி வேறு, கல்லூரிக்கும் நேரமாக, உண்டு கொண்டிருந்தாள்.

ஈஸ்வருக்கு காலையிலேயே தலை வலி.. ஆனாலும் வர்ஷினியோடு இருக்கும் சிறிது நேரத்தை இழக்க விரும்பாதவனாக.. எழுந்து அமர்ந்திருந்தான்.  

இவனைப் பார்த்ததும், “லேட் ஆகிடுச்சு, சாப்பிட ஆரம்பிச்சிட்டேன்” என,

“நேத்து நைட் சாப்பிடாம தூங்கிட்டியா வர்ஷ்” என்றவனிடம்,

“எஸ், தூக்கம் வந்திடுச்சு” என்று பொய் சொல்லிவிட்டாள்.. தனிமை உணர்ந்ததை சொல்ல வில்லை, ஏன் வயிறு வலி என்று கூட சொல்லவில்லை.. சொல்லக் கூடாது என்றில்லை அவளுக்கு அது வரவில்லை.

“நேத்து ஈவ்னிங் என்ன தான் பண்ணின?”

“வந்த உடனே தூங்கிட்டேன்” என முடித்துக் கொள்ள..

அப்போதும் “ரொம்ப டயர்டா தெரியற, ஆர் யு ஓகே” என,

“எஸ்” என்றவள்.. “உங்களுக்கு காஃபி” என,

“நீ சாப்டுட்டு கிளம்பு, நான் பார்த்துக்கறேன்” என்று முடித்து விட்டான். கூடவே “தாஸ் எப்போ வர்றான்?” என,

“இன்னும் ரெண்டு நாள் ஆகும் சொன்னாங்க” என்றாள். தாஸ் ஏதோ பங்காளி வீட்டுத் திருமணம் என்று முன்தினம் தான் விடுப்பு எடுத்து ஊர் சென்றான். இன்னும் வர்ஷினியை கல்லூரியில் விடுவது, திரும்ப அழைத்து வந்து வீடு விடுவது அவனின் பொறுப்பே!

“நான் வந்து ட்ராப் பண்ணட்டுமா?”

“வேண்டாம், நீங்களும் டயர்டா தான் தெரியறீங்க. நான் போயிக்கறேன்” என திரும்ப முடித்து விட..

“காலேஜ் எப்படி போகுது” என்று பேச ஆரம்பிக்கும் போதே,

“அது போகலை, அங்கேயே தான் நிக்குது” என்றபடி எழுந்து கொள்ள.. ஈஸ்வருக்கு சிரிப்பு வந்தது.

“வர்ஷ், வீட்ல ஈவ்னிங் போர் அடிச்சா ஆபிஸ் வந்துடேன்” என,

“எதுக்கு? நீங்க அங்க எல்லோர்கிட்டயும் கத்துறதை பார்க்கவா? நான் இங்கேயே இருக்கேன்”

ஈஸ்வருக்கு அவளை தனியாக விட மனதில்லாததால் “அங்கே வந்துடேன்” என்று சொல்லியிருக்க, இரண்டு மூன்று நாட்கள் சென்றாள் தான்.. ஆனால் ஈஸ்வர் முழு நேரமும் அங்கே வேலையில் இருக்க.. தனியாக அமர்ந்திருப்பது பிடிக்கவில்லை.

“இதை பாரேன்” என்று ஈஸ்வர் அவளை எங்கேஜ் கூட செய்ய.. அந்த அக்கௌண்ட்ஸ்.. ஸ்பெஷல் ஸ்கீம்ஸ் எதுவும் அவளுக்கு பிடித்தமில்லை.. அதனால் அது மண்டையில் ஏறவில்லை..

“இல்லை, நான் பார்க்கலை” என்று விட.. அதன் பிறகு அங்கேயும் செல்வதில்லை..

ஈஸ்வருக்கு என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் மனதில் ஒரு மூலையில் வர்ஷினி இருப்பாள் தான்… ஆனால் அதையும் மீறி வேலைகள் அவனை ஆக்கிரமித்தன.. நிறைய நிறைய இழுத்துப் போட்டுக் கொண்டான், புலி வாலை பிடித்தது போல, இனி விட முடியாது..

அப்போதும் “தினமும் வரலைன்னா போகுது, இன்னைக்கு வா!” என,

“பார்க்கலாம்” என்று பேகை எடுக்க..

“வாயேன் வர்ஷ்.. நான் வரும் போது இப்போல்லாம் நீ தூங்கிடற”

“நீங்க வரும் போது நான் தூங்கலை, நான் தூங்கும் போது நீங்க வர்றிங்க” என,

“என்ன பதில் இது?” என்று  ஈஸ்வர் ஆராய முயலும் போதே “ஃபோன் பண்ணுங்க, சொல்றேன்” என்று கிளம்பிவிட்டாள்.

ஆஃபிஸ் சென்றதும் ஈஸ்வரை வேலைகள் இழுத்துக் கொள்ள.. மறந்து விட்டான்..

ஆறு மணிக்கு மேல் தான் ஞாபகம் வர.. அவசரமாக அழைத்து “வர்ஷ் இங்கே வர்றேன்னு சொன்ன?”

“எப்போ சொன்னேன், நான் வீட்டுக்கு வந்துட்டேன்” என்று முடித்து கொண்டாள்.

“சாரி, ஃபோன் பண்ண மறந்துட்டேன் வர்ஷ்.. இப்போ வாயேன்” என,

“ஃபோன் பண்ணவே ஞாபகம் இல்லை, அப்போ நிறைய வேலைன்னு அர்த்தம், நான் அங்கே வந்து என்ன செய்ய, இனிமேல முடியாது” என்று விட..

இவன் செல்லலாம் என்றால், அன்று மதுரையில் இருக்கும் கிளையின் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தான் காலையில் இருந்து.. இடையில் விட்டால் எங்கே நிறுத்தினான் என்று அவனுக்கே தெரியாது..

வர்ஷினியின் பதில்கள் திருப்தி தராததால், “சரி, அங்கே அம்மா வீட்டுக்குப் போறியா?” என,

“நீங்க போகமாட்டீங்க, நான் எப்படிப் போக?” என்று முடித்து விட,

“நான் சீக்கிரம் வரப் பார்க்கிறேன்!” என்று சொல்லிவிட..

அவனால் உண்மையில் அசையக் கூட முடியவில்லை, தினமும் அவன் தாமதமாக செல்கிறான் என்று அன்று ஜகனும் இருந்தான், “என்னன்னு சொல்லு, நான் செய்யறேன், நீ போ!” என்பது போல..

அவனிடமும் கொடுக்கவில்லை.. “இல்லை பாதில இருந்து உனக்குத் தெரியாது” என்று விட.. ஆனாலும் ஜகன் பிடிவாதமாக அமர்ந்து இருந்தான். என்ன செய்கிறான் ஈஸ்வர் வீட்டில் வர்ஷினியை தனியாக விட்டு என்ற கவலை ஜகனிற்கும்..

மனது தாளாமல்.. “விஷ்வா, எல்லாம் வித்துக் கூட பணம் கொடுத்துக்கலாம்.. புதுசா சம்பாதிக்கலாம்.. இவ்வளவு கஷ்டப் படாதே, வீட்டுக்குப் போ!” என,

“விக்கறதா அதுக்கா இவ்வளவு சிரமப் படறேன், நீ வாயை மூடு!” என்று அவனிடம் கத்த.. ஜகன் எதிர்த்து பேசவும் இல்லை, சண்டை போடவும் இல்லை, வீடு செல்லாமல் அமைதியாக அமர்ந்து விட்டான்.. எல்லாம் என்னால் தான் என்ற எண்ணம் அவனுக்குள் திரும்பவும் ஓங்கியது.  ஈஸ்வர் கிளம்பவும் தான் ஜகன் கிளம்பினான்.      

ஈஸ்வர் அன்றைக்கும் வீட்டிற்கு போகும் போது நடு நிசியைத் தொட்டுவிட,

அன்று போய் வர்ஷினியை எழுப்பி உண்ண வைக்கக் கூட முயலவில்லை.. அவனுமே உண்ணாமல் படுத்து விட்டான்..     

நயன பாஷை காட்டவும் கண் வேண்டும்! காணவும் கண் வேண்டும்!    

 

Advertisement