Advertisement

அத்தியாயம் ஐம்பத்தி எட்டு :

நடப்பவை நன்மைக்கே என  எப்போதும் சொல்லிவிடலாகாது!

அன்று தான் ராஜாராமின் காரியங்கள் செய்யப் பட இருக்க, எல்லோரும் வீட்டினில் குழுமியிருந்தாலும் முரளி வருவதற்காக காத்திருந்தனர். வீட்டு ஆட்கள் மட்டுமே வேறு யாரும் இல்லை. ஆம்! அன்று தான் முரளி வருவதாக இருந்தது.. நேற்று இரவு தான் ஷாலினிக்கு பிரசவ வலி எடுத்து ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தார்கள், இரண்டு நாட்களுக்கு முன் வந்தவன், ஷாலினி திரும்ப தொலைபேசியில் அழைத்திருந்ததால் உடனே சென்றிருந்தான்.. இப்போது வந்து திரும்ப செல்வதாக இருக்க..

எல்லா வேலைகளும் பத்துவும் ரஞ்சனியும் செய்து கொண்டிருக்க, வர்ஷினி பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“நீயும் போய் ஹெல்ப் பண்ணு வர்ஷி” என ஈஸ்வர் சொல்ல, “இல்லை! வேண்டாம்! நான் போகலாமோ இல்லையோ தெரியலை. பூஜை இல்லையா.. நான் போகக் கூடாது”  

“ஓஹ்” என்றவன்.. எழுந்து சென்று “ஏதாவது ஹெல்ப் வேணுமா ரஞ்சி” என,

“வேண்டாம் விஷ்வா, முடிஞ்சது, முரளிண்ணாக்கு தான் வெயிடிங்” என சொல்லும் போதே முரளி வந்திருந்தான்.

மிகுந்த களைப்பாய் இருந்தவனை பார்த்து “சீக்கிரம் குளிச்சிட்டு வா முரளி” என்று தாத்தா சொல்ல, வேகமாய் அவன் குளித்து வர சடங்குகள் முடியவும்.. “ஷாலினி ரொம்ப பயப்படறாம்மா. நான் கிளம்பறேன்!” என்று அம்மாவிடம் சொல்லி அனைவரிடமும் சொல்லி கிளம்ப,

“என்ன ஸெல்ப் டிரைவிங்கா? வேண்டாம்!” என்ற ஈஸ்வர்.. தாஸ் இருந்தவனை அழைத்து “அவனோட போ” என.. அவனும் உடனே கிளம்ப..

“ரொம்ப டென்ஷனா இருக்கியோ? நானும் வரட்டுமா?” என ஈஸ்வர் கேட்க, “நானும் வரட்டுமா அண்ணா?” என்று ரஞ்சனியும் கேட்க,

“இப்போ வேண்டாம்! இங்கே பாருங்க.. முடிஞ்சா ஈவ்னிங் வாங்க!” என்று சென்றான்.

அவன் சென்ற பிறகு ஆரம்பித்தது தான் பிரச்சனைகள்.. பத்து வந்து வர்ஷினியிடம், “இதுல ஒரு கையெழுத்து போடு வர்ஷினி!” என,

“என்ன அண்ணா இது?” என்றாள் சாதரணமாகவே..

“இது நம்ம கம்பனில உன்னோட வொர்க்ஸ் நாங்க பார்க்கிறதுக்கான பவர், அதாவது பவர் ஆஃப் அட்டர்னி” என விளக்கம் சொல்ல,

உடனே தன்னுடைய மொபைலை எடுத்தவள் “பவர் ஆஃப் அட்டர்னி” என்றால் என்ன என்று பார்த்தாள்.

ஏதோ மெசேஜ் பார்க்கிறாள் போல என்று பத்து நினைக்க..

சற்று தூரமாக இருந்தாலும் அவள் என்ன செய்கிறாள் என்று ஈஸ்வருக்கு புரிய.. “பவர் ஆஃப் அட்டர்னின்னா என்னன்னு பத்து கிட்டயே கேளு, அதுக்கு எதுக்கு மொபைல் பார்க்கிற!” என்றான்.

ஆம்! பிட் என்ற ஒன்றை தான் வர்ஷினி முதன் முதலில் போனில் தேடும் போது கவனித்தான். ஆனால் அதன் பிறகு பல முறை கவனித்து விட்டான், ஒரு சிறு விஷயம் விளக்கம் தெரியவில்லை என்றால் யாரிடமும் கேட்பது இல்லை. அவளாக ஃபோன் எடுத்து பார்க்க ஆரம்பித்து விடுகிறாள் என கவனித்தவனுக்கு அந்த விஷயம் திருப்தியாக இல்லாத காரணத்தால், அதை உடைக்கும் விதமாக “எதுன்னாலும் என்னை கேளு! தெரியலைன்னா பிறகு நான் பார்த்து சொல்றேன்!” என சொல்லியும் விட்டான். அதனைக் கொண்டே பத்துவிடம் கேள் என சொல்ல…      

அதையா இவள் பார்த்தாள் என்ற பத்துவின் கண்களில் அதிருப்தியின் சாயல்.. எப்போதும் எதுவும் வர்ஷினியிடம் எதுவும் விளக்கம் கொடுத்ததில்லை. எப்போதும் பத்து நீட்டிய இடத்தில கையெழுத்து போடுவாள். எதற்கு என்றெல்லாம் கேட்டதில்லை. அவன் லாயர் என்பதால் எப்போதும் எல்லாவற்றிலும் அவன் தான் கையொப்பம் வாங்குவான்.  

அந்த ஒரு முறையில் பத்து இப்போதும் அப்படியே செய்ய, அவனுக்கு மறந்திருந்தது ராஜாராம் இப்போது உயிரோடு இல்லை என,

அதிலும் அவன் பேசிக் கொண்டு இருந்த போது ஈஸ்வர் பேசியது, என்னவோ அவனை கேள்வி கேளு என்பதாக ஒரு அர்த்தம் கொடுக்க,

“ஏன் பவர் குடுக்க முடியாதுன்னு சொல்றீங்களா? இல்லை குடுக்கக் கூடாதுன்னு சொல்றீங்களா?” என ஈஸ்வரை நோக்கி சொல்ல,  

பத்து கேட்பது தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை ஈஸ்வருக்கு. அதையும் விட பத்து பேசிய த்வனி ஈஸ்வருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நான் இதிலே எங்கே வந்தேன் என நினைத்தாலும், ஈஸ்வர் எதுவும் பேசவல்லை. ஆனால் முகத்தில் ஒரு இறுக்கமும் முறைப்பும் வந்து ஒட்டிக் கொண்டது. 

வர்ஷினி இதனை கவனிக்கவில்லை. ஆனாலும் அங்கிருந்த தாத்தா, கமலம்மா மற்றும் ரஞ்சனி இவர்களைப் பார்த்து தானே இருந்தனர்.

ரஞ்சனிக்கு மிகுந்த பதட்டமாகி விட்டது, ஈஸ்வர் செய்வதை யாரும் கேள்வி கேட்பதே அவனுக்குப் பிடிக்காது. அப்படியிருக்கையில் இந்த விஷயத்தில் ஈஸ்வர் எதுவும் சொல்லியிருப்பான் எனத் தோன்றவில்லை. ஏனென்றால் இப்போது தானே வர்ஷினியிடமே பத்து பேசுகின்றான் போலத் தோன்றியது.    

ஈஸ்வர் பல முறை எதற்கெடுத்தாலும் ஃபோன் பார்க்காதே என்று சொல்லியிருந்ததால், ஈஸ்வர் சொன்னாலும் கூட அதை கவனத்தில் கொள்ளாமல் அதை படித்துக் கொண்டு இருந்தவள், பத்துவின் கேள்வியோ அது ஒலித்த விதமோ வர்ஷினியின் கவனத்தில் பதியவில்லை.

தலை தூக்கியவள், “அண்ணா இது என்ன? என் வேலை செய்யறதுக்கான பவர் சொன்னீங்க. ஆனா என் ஷேர்ரை நீங்க என்ன வேணா பண்ணலாம், அதுவும் என் சம்மதம் கூட தேவையில்லை எனப் போட்டிருக்கு” என்று அவள் கேட்க..

“உன் சம்மதம் இல்லாம என்ன பண்ணுவோம் வர்ஷினி” என்றான் பத்மநாபன்.

“சம்மதம் இல்லாம எதுவும் செய்ய மாட்டீங்கங்றது வேற. ஆனா இதுல அப்படி தானே போட்டிருக்கு, இதுல நான் எதுக்கு கையெழுத்து போடணும். எதுன்னாலும் நீங்க என்கிட்டே கேட்கலாமே” என, அவள் பத்துவை கேள்வி கேட்ட விதம் தாத்தாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை அவரின் முகம் சுருங்கியது.  

“இப்படி தான் வர்ஷி முன்னமே இருந்தது. அப்பா பேர்ல உன்னோட பவர் இருந்தது” என்று இறுக்கமாகவே பத்து பதில் குடுக்க,

“அது அப்பா பேர்ல இருந்தது, ஆனா இப்போ நான் உங்களுக்கு எதுக்கு குடுக்கணும்” என வர்ஷினி அத்தனை பேர் முன்னும் கேட்டுவிட, பத்துவிற்கு அவமானமாகப் போய்விட்டது.

“என்ன பேசற நீ வர்ஷி? நான் நீ இப்படி பேசுவேன்னு எதிர்பார்க்கலை” என்றான்.

“என்ன நான் தப்பா பேசிட்டேன்? நீங்க முன்னமே என்கிட்டே கேட்டிருக்கணும்!”  

கேட்டுருக்க வேண்டும் என்ற அவனின் தவறு பத்துவிற்கு பிடிபட்ட போதும் அதை அத்தனை பேர் முன்பும் ஒப்புக்கொள்ள மனமின்றி “என்ன கேட்கணும்? என்ன கேட்கணும்? இப்போ கூட கையெழுத்து வாங்கும் போது சொல்லிட்டு தானே வாங்கறேன், உனக்கு புரியற மாதிரி, உன்னோட வேலைகளை பார்க்கன்னு!”

ரஞ்சனியும் கமலம்மாவும் இருவரின் வாதத்தையும் வாயடைத்துப் போய் பார்த்திருந்தனர். பத்து தன்னை குற்றம் சாட்டி பேசியதால் ஈஸ்வருக்கு அதில் தலையிட மனதில்லை. 

“ஆனா பவர் ஆஃப் அட்டர்னிக்கு அர்த்தம் அது கிடையாதே!”

“அர்த்தம் எதுவா இருந்தாலும், நாங்க வாங்கறது அந்த பர்பஸ்க்கு தானே! அப்போ அதுதானே சொல்ல முடியும்!” என்றான் பத்துவும்.  

“ஆனாலும்..” என்று வர்ஷினி இழுக்க..

“அப்போ நீ எங்களை நம்பலையா.. அப்பா உனக்கு அத்தனையும் தூக்கி குடுத்தப்போ நானோ முரளியோ ஒரு வார்த்தை பேசியிருப்போமா! பேசினதில்லை.. ஏன் குடுக்கக் கூடாதுன்னும் சொன்னதில்லை.. அப்போவே ஒன்னும் சொல்லலை! இப்போ என்ன செஞ்சிடுவோம்?” என கோபமாகப் பேசினான்.

தாத்தா இதில் தலையிடாமல் நிற்க, “பத்து பொறுமையாப் பேசு எதுக்கு கோபப்படற.. நீ முன்னமே சொல்லியிருக்கணும்” என்று கமலம்மா சொல்ல..

வர்ஷினி எப்போதும் அவனிடம் எதற்கும் மறுத்து ஒரு வார்த்தை பேசியதில்லை… இப்போது பேசுகின்றாள் எனவும் பத்துவால் தாளமுடியவில்லை..

“அம்மா அவ பேசுவாம்மா! அவ சேர்ந்த இடம் அப்படி!” என இதற்கு ஈஸ்வர் தான் காரணம் என்று நினைத்து வார்த்தையை விட..

அந்த வார்த்தைகளின் வீரியம் அவனுக்கு புரியவில்லை..

அடுத்த நொடி அமர்ந்திருந்த ஈஸ்வர் எழுந்து விட்டான்.. அவனின் முகத்தில் இருந்த கோபமும் ஆவேசமும் வர்ஷினிக்கு அப்படி ஒரு பயத்தைக் கொடுத்தது.

ரஞ்சனிக்கு எங்கே விட்டால் ஈஸ்வர் பத்துவை அடித்து விடுவானோ என்றே தோன்றியது. இந்த பத்து ஏன் இப்படி முட்டாள் தனமாகப் பேசுகின்றான் என பதறி..

“ஏன் இப்படி பேசறீங்க? இது சரியில்லை!” என்று தாழ்ந்த குரலில் தான் பத்துவிட சொன்னாள்.

“என்ன சரியில்லை? வர்ஷினி இப்படி பேச மாட்டா! யாரோ அவளைப் பேச வைக்கிறாங்க” என்று பத்து ஈஸ்வரை பார்த்தபடி பேச..

அதற்கு மேல் எல்லாம் அமைதியாக ஈஸ்வரால் இருக்க முடியவில்லை. அதுவரை அவனுக்கே ஒரு எண்ணம் கூட வர்ஷினி இன்னும் பக்குவமாக இதை கையாண்டு இருக்கலாமோ என்று. பத்து கண்டிப்பாக அவளுக்கு தீங்கு இழைக்க என்ன, நினைக்க கூட மாட்டான் என்று தெரியும். 

இப்போது ஈஸ்வரை குற்றம் சாட்டுகின்றான். நான் இல்லை என்பது போல பேசினால், அது வர்ஷினியின் தவறாகும்! இரண்டையுமே அவனால் அனுமதிக்க முடியாது, அதிலும் பின்னதை கண்டிப்பாக அனுமதிக்க முடியாது!

“ஆமாம்! நான் தான் சொல்லிக் கொடுக்கறேன்! என்ன இப்போ?” என்று கைகளை கட்டியபடி தீர்க்கமாக பத்துவை பார்த்தபடி ஈஸ்வர் வினவ,

முரளி இருந்தால் வேறு.. ஆனால் அவன் இல்லையே.. நிலமை கைமீறி தான் விட்டது.  ஒரு முட்டாளுக்கு கூட புரிந்து விடும் ஈஸ்வர் வேண்டுமென்றே சொல்கிறான் என, ஆனால் பத்துவிற்கு புரியவில்லை.

தாத்தா ஈஸ்வரின் பாவனை புரிந்தவராக, “பத்து வார்த்தையை விடாதே!” என்றபடி வர..

“இவ்வளவு நேரம் வேடிக்கை தானே பார்த்தீங்க தாத்தா! இப்போ மட்டும் என்ன?” என்றான் ஈஸ்வர். ஆம்! பத்து வார்த்தைகளை விட்டாலும் பெரியவராய் அவர் கண்டித்து இருக்க வேண்டாமா? செய்யவில்லை! பிறகு நீ யாராய் இருந்தால் எனக்கென்ன? இனி தலையிடாதே! என்ற பாவனை தான் ஈஸ்வரிடம்.   

“அவர் உங்ககிட்ட பேசலை! என்கிட்டே பேசறார்” என தாத்தாவை பேசியது பிடிக்காமல் பத்து சொல்ல..

“உங்கிட்ட பேசினா நான் பேசக் கூடாதா? எங்கே அவர் சொல்லட்டும் நான் பேசக் கூடாதுன்னு” என..

ஈஸ்வரின் தோரணையே தாத்தாவிற்கும் பதட்டத்தை கொடுத்தது. பார்த்திருந்த வர்ஷினி “நானும் பத்துண்ணாவும் பேசி தீர்த்துக்கறோம். நீங்க தலையிடாதீங்க!” என ஈஸ்வரிடம் சொல்ல..

அவளை ஒரு பார்வை பார்த்தவன், “அண்ணாவும் தங்கையும் என்னவோ பேசிக்கங்க? நான் தலையிட்டேனா! தள்ளி தானே நின்னேன்! சரி, அதையும் விடு! என்னை பேசிட்டு கூட போகட்டும். ஆனா சேர்ந்த இடம் அப்படின்னு எதை சொல்றான்? எங்க வீட்டை இழுக்கறானா? தப்பு! அது ரொம்ப தப்பு! நான் உன்னை கல்யாணம் பண்ணினது என்னோட முடிவு! பத்துவை கல்யாணம் பண்ணினது ரஞ்சனியோட முடிவு! ஒரு வார்த்தை கூட மறுக்காம எங்க வீட்ல ஒத்துகிட்டாங்க! அப்போ இந்த மரியாதையை தான் நாங்க அவங்களுக்கு தேடித் தருவோமா?” என அங்கிருந்த அனைவருமே வாயடைத்து விட்டனர்.     

“பொண்ணு கொடுத்திருக்கோம்! பொண்ணு எடுத்திருக்கோம்! இதுதான் இவன் குடுக்கற மரியாதையா?” என்று அடிக்குரலில் சீற..

“பொண்ணு நீங்க ஒன்னும் குடுக்கலை, நீங்க தான் குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்களே, அவளே தான் வந்தா!”  

“நீ என்ன வேலை செய்திருக்கிறாய் பார்!” என்பது போல ஈஸ்வர் ரஞ்சனியை பார்த்தான்.

“என்ன பேசறீங்க நீங்க?” என ரஞ்சனி பத்துவை அடக்க முயல..

பத்துவிற்கு அன்று வாயில் சனி தான் பிடித்துவிட்டதோ! ஈஸ்வரிடம் பணிந்து போக மனமில்லை, “என்ன பேசறேன்? நிஜத்தை தானே பேசினேன்! இவங்க ஒன்னும் எனக்கு பொண்ணு குடுக்கலையே, நீதானே கல்யாணம் பண்ணலாம்னு வந்தே!”  

“நீங்க பொண்ணு கேட்டீங்க! எங்க வீட்ல பொண்ணு குடுக்கலை! அப்போ தான் வந்தேன்.. உங்க விருப்பம் இருந்ததால தான் வந்தேன்!” என்று விளக்கம் கொடுத்தாள், ஆனாலும் இப்படி ஒரு விளக்கம் கொடுக்க உள்ளுக்குள்ளே நொறுங்கி போனாள்.  

“என் விருப்பத்துக்காக மட்டும் தான் வந்தாயா.. இல்லையே! உனக்கு தேவை இருந்தது வந்தே!” என்றும் சொல்லிவிட..  

கோபமாக இருந்தாலும், நிதானமாக தான் இருந்தான் ஈஸ்வர். வார்த்தைகள் ரஞ்சனிக்குள்ளும் பத்துக்குள்ளும் தடிப்பதை உணர்ந்து, இந்த வார்த்தைகளை ரஞ்சனி தாங்கமாட்டாள் என புரிந்து.. நிதானம் பிரள ஆரம்பித்தான்.

“எனக்கு என்ன தேவை?” என்று ரஞ்சனி பேசும் போதே கண்கள் கலங்கிவிட, குரலும் அடைத்துக் கொண்டது.

“அண்ணா! என்ன பேசறீங்க? நீங்க தானே அண்ணிக்கிட்ட சாரி கேட்க சொன்னீங்க! நான் தானே பேசினேன்! அப்படி தானே உங்க கிட்ட பேசவே வந்தாங்க!” என்ற போதும்..

“நீ பேசாதே வர்ஷி!” என்றவள், “என்ன தேவை? எனக்கு இப்போ தெரியணும்!” என,

கமலம்மாவும் தாத்தாவும் அவசரமாக “அவன் ஏதோ முட்டாள் தனமா உளறுறான், அவனுக்கு பேசவே தெரியலை” என ரஞ்சனியை அமைதிப்படுத்த அவள் அமைதியாகவே இல்லை.

ஈஸ்வர் ரஞ்சனியையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தாளவே முடியவில்லை.. “எப்படி அருமை பெருமையாய் வளர்த்தோம், இந்த பேச்சினை கேட்பதற்கா!” எனத் தோன்ற,

“விடு ரஞ்சி, வர்ஷி சேர்ந்த இடம் அப்படி பேசறான்னா, இவன் பிறந்த இடம் அப்படி பேச வைக்குது!” என்று சொல்ல..

“என்ன பிறந்த இடம்? ஆமாம்! நாங்க வசதியில்லாம தான் பிறந்தோம்! பணத் தேவைக்காக எதுவும் பண்ணலை! உங்க பணப் பிரச்சனைக்கு தானே இவ என்னை கல்யாணம் செய்துகிட்டா!” என்று சொல்லிவிட..

ரஞ்சனி அப்படியே தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள். கண்களில் இருந்து நீரும் வர,

“பத்து! என்ன இப்படி பேசிட்ட? தப்பு! மன்னிப்பு கேள்! மன்னிப்பு கேள்!” என்று தாத்தா அதட்ட..

கமலம்மாவும் வர்ஷினியும் ஈஸ்வரின் முகத்தை பயத்தோடு பார்க்க..

ரஞ்சனியிடம் விரைந்தவன், “எழுந்துரு” என்றான். ரஞ்சனி தலையை நிமிர்த்தி பார்த்த போதும் எழவில்லை.. கண்களில் இருந்த நீர் எதிரில் நின்ற ஈஸ்வரை கூட மறைத்தது.

பத்துவும் உடனே தான் சொன்னது தவறென்று புரிய.. “சாரி!” என்றான் ரஞ்சனியைப் பார்த்து..

கைபிடித்து அவளை இழுத்து எழுப்பினான் ஈஸ்வர், எழுந்து அவள் மலங்க மலங்க விழிக்க..

“நான் குடுத்த ஈஸ்வர் ஃபைனான்ஸ் பேப்பர்ஸ் யார் கிட்ட இருக்கு!” என்றான்.

“ஆங்!” என்று விழிக்க.. “ரஞ்சி” என்று அவன் போட்ட அதட்டலில் “என்கிட்டே தான் பீரோல!” என,

“போ! போய் எடுத்துட்டு வா!” என்றான் கர்ஜனையாக.

பதில் பேசாமல் ரஞ்சனி செல்ல..  “அதான் சாரி சொல்லிட்டேன் தானே! இன்னும் என்ன பண்ணனும்? இதை விட்டுடுவோம்!” என்று பத்து சற்று தணிவாகவே பேச..

ஈஸ்வர் அவன் புறம் திரும்பக் கூட இல்லை.

வர்ஷினி வேகமாக வந்து, “அதான் அண்ணா சாரி கேட்கறாங்க தானே! எங்களால தானே ப்ராப்ளம். நான் எங்க வேணா சைன் பண்றேன். கொடு அண்ணா!” என பத்துவின் அருகில் போக முயன்றவளை நகரவிடாமல் கை பிடித்து நிறுத்தினான்.  

தாத்தா வேகமாக வந்து “பத்து தெரியாம பேசிட்டான்! அதான் மன்னிப்பும் கேட்கறானே!” என்று அவரும் பேச..

“சில விஷயத்துக்கு மன்னிப்பு கிடையாது, தீர்ப்பு தான்!” என்றவன், அதற்குள் ரஞ்சனி அந்த பத்திரங்களை எடுத்து வந்திருக்க..

அதை கையினில் வாங்கியவன் “எதுவும் உடனே ஈஸியா கிடைச்சிட்டா, அதோட மதிப்பு தெரியறதில்லை. நான் பணம் வாங்கினேன். அதுக்கு இந்த ஃபினான்ஸ் எழுதிக் கொடுத்துட்டேன்.. வேற எங்க, எந்த பணம் வந்தது!” என்றவன்,

சற்றும் யோசியாமல் கையினில் இருந்த பத்திரத்தை கிழித்து போட்டான்.

“என்ன செய்கிறான்?” என்று எல்லோரும் ஸ்தம்பித்து பார்க்க, “உன்கிட்ட வாங்கின பணம் அப்படியே இருக்கு. இனி ஈஸ்வர் ஃபைனான்ஸ் ரஞ்சனிக்கு இல்லை.. நான் எப்போ வாங்கின பணத்தை திரும்ப குடுக்கிறேனோ, அதுக்கு அப்புறம் இவளை இந்த வீட்டுக்கு அனுப்பறதை பத்தி யோசிக்கிறேன். இனி இவ இங்க இருக்கமாட்டா, இருக்கவும் நான் விடமாட்டேன்!” என்றவன்,

ரஞ்சனியின் கைபிடித்து “வா” என்பது போல இழுத்துப் போக.

வர்ஷினி அப்படியே பார்த்து நிற்க.. “உனக்கு தனியா சொல்லணுமா, முன்னாடி போ.. இனிமே என்னோட பெர்மிஷன் இல்லாம நீ எந்தக் கையெழுத்தும் போடக் கூடாது.. இவன் சொன்ன மாதிரி இனி உன்னோட முடிவுகள் எல்லாம் என்னோடது தான்!” என்று சொல்லி, தாத்தா கமலம்மா என யார் பேச்சிற்கும் செவி சாய்க்காமல்,

ரஞ்சனி வருகிறாளா இல்லையா என்று கூட கேட்காமல், கால்கள் நகர மறுத்த அவளை தர தரவென்று இழுத்து தான் காரில் சென்று ஏற்றினான்.

பத்து உணர்வு பெற்று வேகமாக, “தெரியாம பேசிட்டேன் மன்னிச்சிக்கங்க! இனி இப்படி நடக்காது! அவளை கூட்டிட்டு போகாதீங்க!” என சொல்லி நிற்க.. அவனின் உடல் மொழியில் வார்த்தைகளில் பணிவு, கண்களில் கெஞ்சல் இருந்த போதும் ஈஸ்வர் அசையவில்லை.

“பணத்தை கொண்டு வராதீங்கன்னு உங்கப்பாகிட்ட, உன்கிட்ட அவ்வளவு தடவை சொன்னேன்.. உங்கப்பா பொண்ணு கேட்டது எப்படிக் கேட்டார், கல்யாணம் செஞ்சுக் குடுங்க பணத்தை திரும்பக் கொடுக்க வேண்டாம்னு. அப்போவே அதுக்காக அவ்வளவு பேசினேன். முடியாது சொன்னேன். அப்போவும் எதோ ஒரு வகையில உன்னை நம்பி இவ கல்யாணம் செய்துகிட்டா, அதுக்காகத் தான், இந்த வார்த்தை நீங்க பேசிடக் கூடாதுன்னு தான் ஃபைனான்ஸ் அப்படியே தூக்கி கொடுத்தேன்”

“ஆனாலும் எங்க பணப் ப்ரச்சனைக்காக கல்யாணம் பண்ணினா சொல்லிட்ட இல்லை, இனி நான் பணம் திரும்பக் கொடுக்காம அவ இங்க வரமாட்டா! என்ன ஆனாலும் சரி?” என்று சொல்லி வர்ஷினியைப் பார்க்க, வர்ஷினி அவன் பார்வையில் அவளே வந்து ஏறிவிட, கார் அவனின் வீட்டை நோக்கி வேகமெடுத்தது.

 பத்து அப்படியே தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட, கமலம்மா கணவர் இறந்த போது கூட அழாத அழுகையை அப்போது அழுதார்.  

காலம் கடந்து போய்விடும் ஆனால் அதன் சுவடுகள் நின்று விடும்!

       

Advertisement