Advertisement

அத்தியாயம் ஐம்பத்தி ஏழு :

அடக் காதல் என்பது மாயவலை,
கண்ணீரும் கூட சொந்தமில்லை…

அடக் காதல் என்பது மாயவலை,
சிக்காமல் போனவன் யாருமில்லை…

காலையில் அப்படியே கல்லூரி சென்று மாலையில் இங்கே கமலம்மாவை பார்க்க வந்தாள்.

ரஞ்சனி அப்போதுதான் கல்லூரியில் இருந்து வந்து, மாலையில் செல்லும் ஹாஸ்பிடலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். ஷாலினியை அவளின் அப்பா வீட்டினர் பிரசவத்திற்காக அன்று காலை தான் அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றிருந்தனர்.. முரளி அவர்களுடன் ஷாலினியை விட சென்றிருந்தான்.

வர்ஷினியைப் பார்த்ததும் கமலம்மா, “ஏன் வர்ஷி நேத்து ஃபோன் பண்ணவே இல்லை, நான் கூப்பிட்டப்போவும் போகவேயில்லை” என,

அவள் தான் ஃபிளைட் மோடில், வைத்திருந்தாளே.. “ஏன்ம்மா?” என,

“உனக்கு அங்க பிடிச்சிருச்சான்னு கேட்க தான் வர்ஷி.. நீ எங்கேயும் இருந்தது இல்லை தானே!”

“அதெல்லாம் அட்ஜஸ்ட் ஆகிட்டேன்ம்மா, எல்லோரும் நல்லா பேசறாங்க, பார்த்துக்கறாங்க!” என வர்ஷினி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,  

“அதுதானே! விஸ்வா எல்லாம் பார்த்துக்குவான் அத்தை!” என்றபடி ரஞ்சனி வர, வர்ஷினியின் மலர்ந்த முகம் அப்படித் தான் என்று சொல்லாமல் சொன்னது.

“அழகா இருக்க!” என்று ரஞ்சனி வர்ஷினியை திருஷ்டி எடுக்க… “உங்களை விடவா அண்ணி!” என்றாள் வர்ஷினி.

“தோடா, எனக்கேவா?” என்றவள், “நான் ஹாஸ்பிடல் கிளம்பறேன், டைம் ஆகிடுச்சு!” என,

“சாப்பிடலை, காபி குடிக்கலை, போ ரஞ்சனி, சாப்பிட்டு தான் போகணும்!” என கமலம்மா சொல்ல, ரஞ்சனி உள்ளே சென்றாள்.

“எங்கேம்மா பத்துண்ணா?”

“இன்னும் வரலை”  

“அப்போ அண்ணி எப்படி போவாங்க?”  

“இப்போல்லாம் டிரைவர் தான் கூட்டிட்டு போறான்”  

“ஏன்? அண்ணாக்கு அப்படி என்ன வேலை, காலையில காலேஜ் போறாங்க, ஈவ்னிங் கிளினிக் போறாங்க, அண்ணி பிசியா தான் இருக்காங்க.. அண்ணாக்கு நம்ம வேலை தானே, அட்ஜஸ்ட் பண்ண மாட்டாரா?” என வர்ஷினி கேட்க,

“யார் கேட்பா? எல்லோரும் வளர்ந்த பசங்க, இனி ஷாலினி வேற இல்லையா வீடே வெறிச்ன்னு இருக்கு! எல்லோரும் போயிடறாங்க!”   

“இன்னும் மூணு மாசம் தானே, அப்புறம் குட்டிப் பாப்பா இங்க வந்திடும்!” என வர்ஷினி உற்சாகமாக பேச, கமலம்மா அதை மகிழ்வோடு பார்த்திருந்தார். இப்படி உற்சாகம் அவளிடம் வருவது அரிது.

அப்போது பார்த்து பத்து வந்தவன் வர்ஷினியை பார்த்து, “வர்ஷி எப்போ வந்தே?” என,

“இப்போ தான் அண்ணா!” என்றவளின் குரலில் இருந்த உற்சாகம், முகத்தில் இருந்த பொலிவு, பத்துவிற்கும் நன்கு புலப்பட்டது.

“நானே உன்கிட்ட பேசணும்னு இருந்தேன் வர்ஷி, கொஞ்சம் பேப்பர்ஸ் சைன் பண்ணனும்”

“என்ன பேப்பர்ஸ் அண்ணா? எதுக்கு?” என வர்ஷனி கேட்கும் போதே ரஞ்சனி, “அத்தை, நான் சாப்பிட்டுட்டேன், டைம் ஆச்சு கிளம்பறேன்” என்றபடி வர,

பத்துவின் பார்வை ரஞ்சனியின் மீது திரும்ப.. வர்ஷினியின் பேச்சை கவனித்தாலும், பதில் சொல்லாமல் மனைவியின் மீது பார்வையை திருப்பினான். திரும்ப வர்ஷினியின் கேள்வியே பின்னுக்கு போய்விட்டது.

ஆம்! வர்ஷினி சொல்லியது போல அழகாக இருந்தாள் ரஞ்சனி.. அவளையே பார்த்திருந்தான். பத்து அங்கிருப்பதை அப்போது தான் பார்த்தாள் ரஞ்சனியும். “பார்த்தே காலத்தை ஓட்ராண்டா இவன்!” என்று தான் மனதிற்குள் தோன்றியது.

ஆம்! அந்த பிரச்சனைக்கு பிறகு சகஜ மனப்பான்மை இருவருக்குள்ளும் இல்லவே இல்லை. இந்த முறை ரஞ்சனி என்ன ஆனாலும் முதல் அடி எடுத்து வைப்பதாக இல்லை, பத்து தான் வரவேண்டும் என்பதில் தெளிவாய் இருந்தாள். எப்போதையும் விட தன்னை கவனமாய் தான் அலங்கரித்துக் கொண்டாள், மிகவும் எளிமையாய் அதே சமயம் கண்களுக்கு குளிர்ச்சியாய்..

ஆனால் பத்து, அவனுக்கு எங்கே இருந்து தான் ஒரு தயக்கம் வந்து ஒட்டிக்கொண்டதோ.. அதுவும் வருடமாய் இருந்ததை விட இப்போது இன்னும் அதிகம்.

தன்னை விடாது பார்க்கும் அவனின் பார்வை ஏதோ செய்ய, நீண்ட நாட்களுக்கு பிறகு அவளாகவே “என்னை கொண்டு போய் விடறீங்களா?” எனக் கேட்டாள்.

“என்னிடமா கேட்டாள்” என்பது போல பத்து பார்த்து நிற்க,

“அண்ணா! அண்ணி உங்க கிட்ட தான் கேட்டாங்க!” என வர்ஷினி அவனை உலுக்க, “ஓஹ் எஸ், போகலாமே!” என்று அவன் உடனே கிளம்ப,

“ஹச்சோ, இந்த அண்ணி பாவம்!” என்று தான் வர்ஷினிக்கே தோன்றியது. அதை தன் கண்களிலும் காட்ட,

“அச்சச்சோ! வர்ஷ் பேபி ரொம்ப பெரிய பொண்ணு ஆகிட்டா போலவே!” என்று ரஞ்சனி கிண்டல் செய்ய,

“போங்க அண்ணி!” என்று வர்ஷினி சிணுங்க,

“எதற்கு” என்று புரியாமல் பத்து பார்த்திருக்க.. அவனின் முக பாவனையை பார்த்து ரஞ்சனிக்கும் புன்னகை, வர்ஷினிக்கும் புன்னகை..

“என்ன சிரிக்கறீங்க ரெண்டு பேரும்” என்று வர்ஷினியிடம் கேட்டே விட்டான்.

வாய் விட்டு சிரித்தவள்.. “அண்ணி, அழகா ஆகிட்டாங்க தானே! அது தான்!” என,

“நீ ரொம்ப வாலு ஆகிட்ட!” என ரஞ்சனியும் சொல்ல.. வெகு நாட்களுக்கு பிறகு அவர்களுக்குள்ளும் இயல்பான பேச்சு,

“போங்க! போங்க! டைம் ஆச்சு!” என்று வர்ஷினி விரட்ட, “ஆமாம்!” என்று நேரம் பார்த்தவள், “தோ போறேன், உன்னை கூப்பிட விஷ்வா வருவானா?” என,

“ம்ம்! வருவாங்க அண்ணி!” என,

“ஓகே” என்றபடி ரஞ்சனி விரைய பத்துவும் விரைந்தான்.  அதனால் எதற்கு கையொப்பம் கேட்டான் என சொல்ல மறந்திருந்தான்.

“தாத்தா எங்கேம்மா?” என்ற வர்ஷினியிடம், “கட்சி மீட்டிங்ன்னு போயிருக்கார்” என,

“ரொம்ப நாளா போகலை தானே!” என, “ஆம்!” என்பது போல தலையசைத்தவர், “திரும்ப தீவிர அரசியல்ல குதிக்கறார் போல” என்றவரிடம்,

“போகட்டும்! போகட்டும்! சும்மா இருந்து என்ன பண்ணுவார்! என்னை நோன்டிட்டே இருப்பார்!” என நொடித்தாள்.

“என்ன?” என்று கேட்க வந்த கமலம்மா, அப்போது தான் ஈஸ்வர் வீட்டுக்குள் நுழைவதை பார்த்தவர், “வாங்க மாப்பிள்ளை!” என,

“அச்சோ மா! நீங்க என்ன? என்னை எப்பவும் போல ஈஸ்வர்னே கூபிடுங்க! இல்லை உங்க கிட்ட பேசமாட்டேன்!” என்றான்.

சங்கடமாக “சரி” என்பது போல தலையசைத்தவர், “அப்போ! அப்போ! இவளை கூட்டிட்டு வா ஈஸ்வர்!” என,

“கண்டிப்பா!” என ஈஸ்வர் சொல்ல, திரும்ப சாப்பிட வைத்தே விட்டார்.

“முரளி எப்போ வரான்மா?” என, “நான் ஒரு நாலைஞ்சு நாள் இருந்துட்டு காரியத்துக்கு வந்தா போதும் சொல்லியிருக்கேன். அங்க அவங்க மாமனார் வீட்ல கொஞ்சம் வேலைன்னு ஷாலினி சொன்னா, அதான் உதவியா இருக்கட்டும்னு இருக்க சொன்னேன்” என விளக்கம் கொடுத்து, பின்பு தாத்தவை பற்றி ரஞ்சனி, பத்து, பற்றியும் சொல்ல..

“அப்போ இப்போ நீங்க தனியா இருக்கீங்களா?”  

“ம்ம்! இனிமே தனி தானே!” என விரக்தியாக அவரின் குரல் ஒழிக்க, அவரும் யோசனைகளுக்கு போய்விட, அவரை பார்த்த ஈஸ்வருக்கு பாவமாக இருந்தது.

“அப்போ ஒரு ரெண்டு நாள் இங்கே இருக்கியா வர்ஷினி, ரொம்ப தனியா ஃபீல் பண்றாங்க போல!” என்று ஈஸ்வர் ஒரு சம்பிரதாயத்திற்கு வர்ஷினியிடம் கேட்டான், அதுவும் மிகவும் மெதுவான குரலில், அவளுக்கு மட்டும் கேட்குமாறு..

உடனே திரும்பி அவனை முறைத்தாள் வர்ஷினி.. “போங்களேன்! விட்டுட்டுப் போங்களேன்!” என்றும் முகத்தை சுருக்க..      

“கேட்டேன், ஒரு வேலை நீ கேட்கலைன்னு நினைச்சா!” என ஈஸ்வர் விளக்கம் கொடுத்த போதும் வர்ஷினி இயல்புக்கு திரும்பவில்லை.

வீடு வந்து சேர்ந்த பிறகு, மற்றவர்களிடம் எதையும் காட்டாமல் சகஜமாக பேசினாலும், ஈஸ்வரிடம் முகம் திருப்பி தான் நின்றாள்,   உறங்க போன பிறகும் அது தொடர்ந்தது.. ஒரு சிறு விஷயம் அதற்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம் என்று தான் ஈஸ்வருக்கு தோன்றியது.

தாளமாட்டாமல் “அது ஒரு பேச்சுக்கு கேட்டது, அதுக்கு ஏன் இவ்வளவு ரியாக்ட் பண்ணற” என,

“அது எப்படி ஒரு பேச்சுக்கு கூட கேட்கலாம்!” என வெடித்தாள்.ஈஸ்வர் அவளின் இந்த வெடித்தலை ஏன் இப்படி என்று அதிர்ச்சியாக பார்த்திருந்தான்.

“அப்போ நேத்து நைட் நான் என்ன உங்க கிட்ட பேசினேன். திரும்ப என்னை தனியா தூங்கு சொல்றீங்களா? அப்போ நான் ஏன் உங்க கிட்ட அதை சொல்லியிருக்கணும்? இவ்வளவு தான் என்னோட உணர்வுகளுக்கு மரியாதையா?” என்று வர்ஷினி பொறிய, அவளையே பார்த்திருந்தான். அவன் இப்படி ஒரு கோணத்தில் நினைக்கவேயில்லையே.. இப்படி வருகின்றதோ என்று மனம் கனத்துப் போனது.

முகத்தில் அவ்வளவு கோபம் மட்டுமல்ல, ஒரு மாதிரி தன்னை அடக்கி இருப்பது போன்ற தோற்றம்.

“சாரி! நான் இப்படி யோசிக்கலை!” என ஈஸ்வர் சொல்ல,

“எல்லாம் சாரின்ற ஒரு வார்த்தைக்குள்ள அடங்காது!” என்றவளின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிய,

“சாரி பேபி! ரியல்லி சாரி! கமலம்மா ரொம்ப வருத்தமா பேசினாங்களா, அந்த ஒரு இதுல சொல்லிட்டேன்!”  

அப்போதும் அவள் தேம்பி தேம்பி அழ, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தான். அவள் இப்படி அழுவாள் என எதிர்பார்க்கவில்லை. அவளின் அப்பா இறந்த போது கூட அவன் முன் அழுது பார்க்கவில்லை தானே.    

எதற்கென்றே தெரியாமல் அப்படி ஒரு அழுகை வந்தது வர்ஷினிக்கு, அப்படியே படுக்கையில் அமர்ந்து முகத்தை மூடிக் கொண்டு தேம்ப..

கீழே அவளின் காலடியில் அமர்ந்தவன்.. “நான் இப்படி ஒரு மீனிங் வரும்னு நினைக்கவேயில்லை.. அப்பா இறந்திருக்காங்க! ஒரு மகளா நீ அவங்களுக்கு சப்போர்ட் பண்ணனும்னு தான் நினைச்சேன்!” என்றான் ஆழ்ந்த குரலில்..

முகத்தில் இருந்த கையை எடுத்து “நான் ஏன் பண்ணனும். எனக்கு யாரு பண்ணினா?” என,

“நமக்கு பண்ணினா தான் நாம அடுத்தவங்களுக்கு பண்ணனும்னு நினைச்சா அது வாழ்க்கை கிடையாது.. யோசிச்சுப் பாரு, அவங்க உன் அம்மா கிடையாது, ஆனாலும் உன் அப்பா சொன்னதுக்காவாவது முகம் சுளிக்காம எல்லாம் செய்யறாங்க தானே. அது அன்பா இல்லை கடமையான்னு யோசிக்காதே!”

“கமல்லம்மா இடத்துல இருந்து யோசி, எத்தனை பொண்ணுங்களோட உங்கப்பாக்கு பழக்கம், வெளில காட்டினதில்லைன்னாலும் அவங்க எப்படி அதை கடந்து வந்திருப்பாங்க.. உனக்கு செய்யணும்னு அவங்களுக்கு என்ன?”

 “உன்னை மாதிரியே அந்த சொத்துக்கள் அவங்களுக்கும் சரி பாதி தான். அவங்க பேரையும் சேர்த்து தான் உங்கப்பா ஆரம்பிச்சார்.  நிஜம்ன்னு ஒன்னு இருக்கு வர்ஷி, அது எவ்வளவு கசப்பா இருந்தாலும், நாம அதை நினைக்கலைன்னாலும் அது இல்லைன்னு ஆகிடாது!” 

ஈஸ்வரின் வார்த்தைகளைக் கேட்டதும் இன்னும் அழுகை அதிகரிக்க.. “என்னோட வர்ஷ் பேபிக்கு யாரும் தேவையில்லை! இதுவரை அவளை அவ பார்த்துக்கிட்டா, இனி நான் பார்த்துக்குவேன். உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியுமா.. நீ சொல்லு..” என கேட்டவன் அவளின் கண்களில் ஆழ்ந்து பார்க்க..

அந்த கண்களில் நீர் நிற்காமல் வழிந்த போதும், அவனின் கண்களை எதிர்கொண்டாள். “இந்த கல்யாணம் நடக்க நிறைய தப்பு பண்ணியிருக்கேன், நிறைய போராடி இருக்கேன், இந்த ஒரு வருஷமா நான் நானா இல்லை! இது தான் உண்மை!” என்றவனிடம்.

“நானும் தான் நிறைய போராடினேன், நீங்க எப்படி என்கிட்டே அப்படி நடந்துக்கிட்டீங்கன்னு. அப்புறம் வேற யாரையாவது கல்யாணம் பண்ணினாலும் உன்னை விட மாட்டேன் சொன்னீங்க. அதுல இருந்து நான் வெளில வர எவ்வவளவு கஷ்டப்பட்டேன்னு எனக்கு தான் தெரியும்” என்றவளின் நீல நிறக் கண்கள் கண்ணீரில் மிதந்த போதும் அவனை ஆழ்ந்து பார்த்தது.           

அந்த நீல நிறக் கண்களில் மூழ்கியவன், “நான் அவ்வளவு சகிக்க முடியாமையா இருக்க்கேன்!” என, வர்ஷினி பதிலே பேசவில்லை.  ஆனாலும் ஈஸ்வரை, அவனின் தோற்றத்தை, தன் காலடியில் சற்றும் கூச்சமோ தயக்கமோ இல்லாமல் அவனின் பாவத்தை பார்த்திருந்தாள்.

வர்ஷினியின் கண்களில் இளக்கத்தை கண்ட போதும் சொல்ல மாட்டாள் என புரிந்தவன், “வர்ஷ், ஜஸ்ட் அம்மாகூட இருக்கியான்னு கேட்டதுக்கு இவ்வளவு அழுவியா?” என,

“சில சமயம் இப்படி தான் ஆகிடும், என்னையும் மீறி, ஏன்னு எனக்கே தெரியாது”

“இது சின்ன விஷயம்”

“இருக்கலாம்! ஆனா யார் பண்ணினாலும் எனக்கு ஒண்ணுமில்லை, ஏன்னா நான் யாரையும் மைன்ட் பண்றது இல்லை.. ராத்திரி முழுக்க நான் அழுதாலும் யாருக்கும் தெரிய போறது இல்லை. ஆனா நீங்க… அப்படி இல்லை.. இல்லையா? இல்லைதானே!” என பேச,  

“என்ன கேள்வி இது?” என்று ஈஸ்வர் கோபப்பட்டான்.

“அப்போ அப்படி தான் ஃபீல் பண்ணுவேன். எல்லோரும் நீங்களுக்கு எனக்கு ஒன்னா. நீங்க எப்படி அப்படி சொல்லலாம்!” எனத் தேம்பினாள்..

ஈஸ்வர் எழுந்து நின்று வர்ஷினியை அணைக்க.. அவனை வயிற்றினில் கட்டிக் கொண்டவளுக்கு அப்படி ஒரு அழுகை. அவளுக்கும் புரிந்தது இது ஒரு விஷயம் அல்ல என்று, ஆனாலும் அவள் மனதை அவளே சமாதனம் செய்ய முடியவில்லை. பின்னே நேற்று தான் “என் அருகில் எனக்கு நினைவு தெரிந்த நாளாக நீதான் உறங்கியிருகின்றாய்” எனச் சொல்ல..

இவன் இன்றே “நீ அம்மாவுடன் இருக்கின்றாயா?” என எப்படிக் கேட்கலாம் என ஒரு ஆற்றாமை மனதினில் பொங்கியது. அவனை அணைத்து ஒரு பாட்டம் அழுதவள், பின்பு நிமிர்ந்து “ரொம்ப சைல்ட்டிஷா பிஹேவ் பண்றேனா?” என,

இது அவளின் உணர்வுகளின் வெளிப்பாடு அதுவும் தன்னிடம் மட்டும் என புரிந்தவன் இல்லை என்பது போல தலையாட்டினான். ஆனாலும் மனம் கனத்து போனது.  

பின்பு திரும்ப அவனை அணைத்துக் கொண்டவள், “இப்படி தான், ஒரு நாள் நீங்க என்கிட்டே நைட் பேசினீங்க, ஞாபம் இருக்கா?” என,

“இல்லை” என்பது போல தலையாட்ட,

“அன்னைக்கு அப்படிதான் நீங்க என்கிட்டே போன் பேசினீங்க. எங்க வீட்ல யாரும் கேட்காத என் படிப்பு பத்தி எல்லாம் கேட்டீங்க, என் கண்ல வித்தியாசம் சொன்னீங்க, நான் குண்டாகிட்டேன் சொன்னீங்க, அப்புறம் எனக்கு ரொம்ப பேசற மாதிரி ஒரு ஃபீல் போன் வெச்சிட்டேன்”

“ரொம்ப அழுகை வந்துச்சு, ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணினேன், வெளிய வந்து பார்த்தா யாருமே காணோம்.. திரும்ப நீங்க தான் எனக்கு சஷ்டி கவசம் அனுப்பி வெச்சீங்க, அப்புறம் படிச்சிகிட்டே தூங்கிட்டேன்!” என்றவள்,

“நான் எப்பவும் யாரையும் அதிகம் தேடினதில்லை, தேடின சில சமயமும் உங்களால தான்.. நீங்க என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிடீங்க.. எந்த லெவல்ன்னு என்னால சொல்ல முடியாது.. ஆனாலும் இப்போ உங்களோட தான் இருக்கேன்.. மறுபடியும் என்னை யாரையும் தேட வெச்சிடாதீங்க!” என தேம்ப,

“யாரை சொல்கிறாள்?” என்று புரியவேயில்லை. “யாரை சொல்ற?” என்று கேட்டவனிடம்..

“யாரையாவது.. அப்பா, அம்மா, அண்ணா, அண்ணி, யாரையாவது… அதுக்கு முன்ன யாரையும் தேடினது இல்லை ஆனா உங்களால நான் யாரையாவது டிபண்ட் பண்றேன்!” என்று தேம்பி தேம்பி அழ..

“உன் ஆளுங்க தானே! இதுக்கு எதுக்கு இப்படி அழற?” என்றவனிடம்… “உனக்கு புரியாது போ!” எனச் சொல்லி, திரும்பவும் அவனை இடையோடு இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.

நிஜமாகவே ஈஸ்வருக்கு புரியவில்லை.. வெகு நேரம் அவளை சமாதானம் செய்தான்.. ஆனாலும் தெளிந்த மாதிரி தெரியவில்லை.. அவனுக்கு வேறு வழியே இருக்கவில்லை.. தான் எவ்வளவு முக்கியம் வர்ஷினிக்கு புரிய வைக்க..

ஒரு ஆழ்ந்த வன்மையான முத்தமொன்றை யுத்தமாக இதழில் ஆரம்பிக்க.. முதலில் முடியாது போ என்பது போல திமிறியவளை விடாமல் ஆக்ரமித்தான்… விடாமல் அவளும் எதிர்த்தாள்.  ம்கூம் அசையக் கூட முடியவில்லை. அவனைக் காயப்படுத்தவும் மனதில்லை. 

ஒரு கட்டத்தில் தன்னால் எதிர்க்க முடியாது, விடமாட்டான் என புரிந்தவள், அந்த முத்த யுத்தத்தை தனதாக்கினாள். ஈஸ்வருக்கு சற்றும் குறையாத முற்றுகை போராட்டம். நீயா நானா பார்த்துவிடலாம் என்பது போல செய்கை இருக்க..  இருவருமே தன்னிலை மறந்து போயினர்.

சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்                                                                   எனது ரத்தத்தினால் காதல் யுத்தத்தினால்…

           

 

Advertisement