Advertisement

அத்தியாயம் ஐம்பத்தி ஆறு :

நான் கொண்ட சொந்தம் நீதானே!

அடுத்த நாளே வர்ஷினியை காலேஜ் கிளப்பி விட்டான் ஈஸ்வர்.. “இன்னும் ஒரு வாரம் கழிச்சு போறேன்” என்றவளை விடவில்லை…

“நான் ரொம்ப டையர்ட், எனக்கு தூக்கமா வரும்” என்று எத்தனை கரணங்கள் சொன்ன போதும் விடவில்லை.

“நீ எப்பவும் ரொம்ப யோசிக்கற.. நீ முதல்ல உன்னோட அன்றாட வாழ்க்கையை ஆரம்பி.. இன்னும் ஒரு வாரம் கழிச்சு தான் உங்கப்பாக்கு காரியம் செய்வாங்க. அப்போ லீவ் போட்டுக்கலாம். ஏற்கனவே கல்யாணத்துக்கு லீவ் எடுத்துட்ட, இப்போ ட்வென்டி டேஸ் லீவ் ஆகிடுச்சு”

“அதெல்லாம் முடியாது! என்னால முடியலை! நீங்க என்னை தூங்கவே விடலை!” என சிணுங்க..

“பொய் சொல்லாத, நீ தூங்கிட்ட”  

“எங்க தூங்கினேன்?” விரல் விட்டு எண்ணியவள், “மூணு மணி நேரம் தான் தூங்கினேன்” என,

“ஷ்! என்ன இது?” என்று ஈஸ்வர் மிரட்ட..

“நான் உண்மையை தானே சொன்னேன்!” என்றாள்.. எல்லாம் படுத்துக் கொண்டே.. அசையவேயில்லை என்பதை விட, கண்களைத் திறக்கவே முடியவில்லை.

அருகில் அமர்ந்தவன், “இதெல்லாம் இனிமே நம்ம ரொட்டீன், புரிஞ்சதா, இதெல்லாம் சாக்கு கிடையாது!” என,

“என்ன?” என்று விழி விரித்தவளின் கண்களை நெருங்க, “போங்க, போங்க” என்று இறுக்கமாக கண்களை மூட.. அதுதான் சாக்கென்று அவளின் கண்களில் அழுத்தமான முத்தங்களை பதித்தான்.

அவன் விட்டவுடன், மெதுவாக கண்களை திறந்தவள்,

“ம்ம்! எனக்கு நிஜமா ரொம்ப தூக்கம் வருது!” என்றாள் பாவமாக. சிறு பெண் தானே..

“இங்க இப்படி வீட்ல தூங்க முடியாது வர்ஷ், புரிஞ்சிக்கோ.. மணி இப்போவே ஏழு.. என் பாட்டி பூஜை ரூம்ல புகுந்திருப்பாங்க.. முதல்ல குளிச்சு முடி” என்றவன்.. அவளை அப்படியே தூக்கி குளியலறை முன் விட்டான்.

“போ! சொன்னா கேட்கணும்! உன்னை யாரவது ஏதாவது சொன்னா அப்புறம் எனக்கு கோபம் வரும், திரும்ப சண்டை வரும், அந்த மாதிரி சூழ்நிலை வர விடக் கூடாது. எனக்கு என்னோட வர்ஷ் எல்லாத்துலையும் ஃபெர்பெக்ட்டா இருக்கணும்.. நீ தூங்க ஏதாவது பண்றேன் போ!” என கெஞ்சி, கொஞ்சி..

வர்ஷினியை கிளப்பி காலேஜ் கொண்டு வந்து ஈஸ்வரே விட்டான். முகத்தை தூக்கி வைத்திருந்தவளிடம், “மதியம் வரை அட்டென்ட் பண்ணு, மதியம் கூட்டிட்டு போறேன்!” என்று சொல்லிச் சென்றான்.

சொன்னது போல மதியம் வந்து அவளை அழைத்துப் போனவன்.. அவன் முன்பு ஒரு முறை அழைத்துச் சென்ற அவனின் அபார்ட்மென்ட் வீட்டிற்கு அழைத்து சென்று, “தூங்கு” என,

“இப்போ எனக்கு தூக்கம் வரலை” என்று வர்ஷினி சிரிக்க..

“எனக்கு தூக்கம் வருது!” என்று சீரியசாக சொன்னவன்.. “ப்ளீஸ், தூங்கலாம் வா” என சொல்லி அலாரம் வைத்து படுக்கையில் படுத்தது தான்.. “அம்மா! இவர் தூங்கிட்டார் போலவே” என்று தான் வர்ஷினிக்கு தோன்றியது.

ஆம்! காலையில் ஆறு மணிக்கே எழுந்து குளித்து  கீழே வந்து விட்டான். பின்னே, வர்ஷினியால் எழ முடியும் என்று அவனுக்கே தோன்றவில்லை. பின்பு ஏழுமணிக்கு சென்று தான் அவளை அந்த பாடாய் படுத்தி எழுப்பியவன்..

“இனிமே இப்படி செய்யக் கூடாது, சீக்கிரம் தூங்கிடணும்!” என்ற உறுதி மொழி வேறு எடுத்துக் கொண்டான்.

“ஹ, ஹ, மணமாகி ஒரு பத்து நாளில் எடுக்கும் முடிவா இது?” இதை மாலை திரும்ப அவளை வீட்டிற்கு அழைத்து சென்று கிடைத்த தனிமையில் சொன்ன போது வர்ஷினிக்கு அப்படி ஒரு சிரிப்பு தான்.

“எனக்கு ஒன்னுமில்லை” என குறும்பு பேச..

“எனக்கும் ஒன்னுமில்லை” என்ற ஈஸ்வரின் வார்த்தைகள், அவனுக்கே கேட்கவில்லை. வார்த்தைகளே கேட்கவில்லை, எனும் போது உறுதி எங்கே நிற்கும்.. ஆனால் அவனையும் மீறி நிற்கத் தான் போகின்றது.   

கீழே இறங்கிப் போய் எல்லோரிடமும் பேசிக் கொண்டு சிறு சிறு வேலைகளை வர்ஷினி செய்ய ஆரம்பிக்க… ஈஸ்வர் திரும்ப வெளியே சென்றவன்.. இரவு வந்த போது..

“அத்தை தோசை சுட சொல்லிக் கொடுத்தாங்க, நான் உங்களுக்கு சுடட்டுமா” என,

“ம்ம்ம்!” என்ற ஈஸ்வரை சோதனை எலியாக்கி ஒரே தோசை அவள் சுட்டுக் கொடுத்ததில், தோசை என்ற ஒன்றை அவன் அறவே வெறுத்து விடும் நிலைக்கு வர.. வீடே அவனை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்தது.

ஆனால் விளையாட்டுக்கு கூட அதை வர்ஷினிக்கு தெரிய விடவில்லை. அந்த சிரிப்பு வர்ஷினியை கொண்டு அல்ல ஈஸ்வரைக் கொண்டு, பின்னே ஈஸ்வர் செய்யும் ஆர்பாட்டங்கள் அளவில்லாதது. இப்படி ஒரு தோசை சாப்பிடுபவர் பக்கத்தில் கூட அவன் அமர மாட்டான்.

தோசை அவன் முன் இருக்க.. என்ன செய்யப் போகிறான் அவன் என்று வீடே பார்த்திருக்க..

“நான் சுட்ட தோசை, எப்படியிருக்கு?” என ஆர்வமாய் வர்ஷினி கேட்கவும்..  

“சாப்பிட்டா தானே தெரியும்! சாம்பார் எங்கே?” என அவன் கேட்க,

“அய்யே! இதை சாப்பிடப் போறீங்களா, நான் சுட்டேன்னு காட்ட தான் வந்தேன்.. இது சாப்பிட முடியாது, பார்க்கவே நல்லா இல்லை, இன்னும் சுட்டு பழகறேன், முதல்ல நான் சாப்பிடறேன், நல்லா இருந்தா உங்களுக்கு கொடுக்கறேன்!” என,

இப்போது ஈஸ்வர் எல்லோரையும் கெத்தாக ஒரு பார்வை பார்க்க.. “இவன் அடங்க மாட்டானா இல்லை இவனை அடக்க ஆள் கிடையாதா?” என்று ரூபா பார்க்க..

அவன் அடங்குகின்றான், அவனை அடக்கும் ஆளிடம், அவனை அடக்கும் முன்னே என்று புரியவில்லை. யாருக்கும் அதை எப்போதும் புரிய விடுவானா தெரியவில்லை. சந்தர்ப்பங்கள் அமையாதா? அமைய இருந்தாலும் அமைய விட மாட்டானா? இல்லை வாய்ப்பு அடக்குபவரிடமா? 

மலருக்கு வர்ஷினியின் இந்த பேச்சு மிகவும் திருப்தி.. “கொடு, நான் சாப்பிட்டு பார்த்துட்டு சொல்றேன்” என்று அவர் சொல்ல,

“அச்சோ அத்தை! நீங்க வேற, இவர் வேறயா?” என சொல்ல,    

ஈஸ்வர் இன்னும் கெத்தாக ஒரு பார்வை பார்க்க, “எனக்கு” என்று தளிர் நடையிட்டு ப்ரணவி அருகில் வர , “அச்சோ பேபி, உன் சித்தப்பாவுக்கே கொடுக்கலை, உனக்கு கொடுப்பேனா?” என ப்ரணவியை கையினில் தூக்க,

“நல்லா தான் சித்தி இருக்கு!” என்று சரண் சர்டிஃபிகேட் கொடுக்க,

நிறைய நாட்களுக்கு பிறகு இயல்பாய் இருந்த சூழலை ஜகன் ரசித்து கொண்டிருந்தான்.  பின்னர் ஈஸ்வர் விலகிய பிறகு என்னால் தானே என்று மனம் அறுத்தது அவனுக்கு தானே தெரியும். கணவனின் முகத்தில் தெரிந்த நிம்மதியில் ரூபாவின் மனம் கூட லேசானது. 

வர்ஷினி அவளை அறியாமல், அந்த வீட்டின் இயல்பை திருப்பிக் கொடுத்து கொண்டிருந்தாள்.  

சிறிது பேச்சுக்களுக்கு பிறகு மேலே வந்த போது, அவளை அப்படியே தூக்கிக் கொண்டான். தூக்கி ஒரு சுழற்று சுழற்ற, உற்சாகமாக  “என்ன” என்றவளிடம்..

“நீ ஒரு இடத்திலையும் என்னை கீழ இறங்க விடலை, பெருசா செஞ்ச போதும் இல்லை, இப்போ இந்த ஒன்னுமில்லாத விஷயத்துக்கும் இல்லை.. ரியல்லி நான் லக்கி தான்” என, 

அப்போதும் புரியாமல் பார்த்தவளிடம், “தோசை வேகாம இருந்தாலும் கத்துவேன், தீஞ்சி போனாலும் கத்துவேன், மொத்தமா இருந்தாலும் கத்துவேன், மெலிசா இருந்தாலும் கத்துவேன். அம்மாவை தவிர எனக்கு யாரும் சுட முடியாது. அவசரத்துக்கு இந்த ரூபா, ரஞ்சி, பெரியம்மா, பாட்டி, யார் சுட்டாலும் கத்தி தீர்த்துடுவேன், ஒரு தோசை கூட சுட தெரியாதான்னு”

“நீ தோசை என் முன்ன வெச்சவுடனே, எல்லோரும் என்னை பார்த்து சிரிச்சாங்க, பாரு எங்களை திட்டினியே, உன் பொண்டாட்டிக்கு தெரியலைன்னு. அப்போவும் தோசை சாப்பிடப் போனேனா, ஆனாலும் நீ எடுத்திட்டியா? சோ, ப்ராப்ளம் சால்வ்ட்! இல்லை, என்னை ரொம்ப கிண்டல் செஞ்சிருப்பாங்க”  

“ஏன், யாருக்கும் தெரியாதா?”

“ஹ, ஹ, தெரியும், நல்லா தான் சுடுவாங்க. ஆனா அம்மா மாதிரி வராது”  

“ஆனாலும் இது ரொம்ப ஓவர், அவங்க விட்ட சாபமோ? தோசை சுட தெரியாத நான் உங்க வாழ்கையில வந்துட்டேன்”  

“சாபம்” என்ற வார்த்தை ஈஸ்வரை அசைத்தது. உடனே ஐஸ்வர்யாவின்… அவள் உச்சரித்த வார்த்தைகளின்.. ஞாபகம் வர, இருந்த உற்சாகம் எல்லாம் வடிய.. கூடவே அவள் எப்படி இருக்கின்றாளோ, நான் இங்கே இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் போது, அவள் வருத்தத்தில் இருப்பாளோ?” என தோன்ற,

அமைதியாக வர்ஷினியை கீழே இறக்கி விட்டான்.

அவனின் முகத்தை பார்த்து, “என்ன ஆச்சு?” என்றவளிடம், “ப்ச், சாபம்ன்ற வார்த்தை எல்லாம் யூஸ் பண்ணாத”  

“அது சும்மா விளையாட்டுக்கு!” என்றவளிடம், “விளையாட்டுக்கு கூட வேண்டாம், புரிஞ்சதா” என,

“ம்ம்” என்று தலையாட்டிவளிடம், “இன்னைக்கு சீக்கிரம் தூங்கலாம்” என சொல்லி படுத்துக் கொண்டவனின் உள்.. ஐஸ்வர்யாவின் யோசனைகள்.. “ஏதாவது மாப்பிள்ளை அவளுக்கு பார்க்கின்றார்களா, ஆனால் யார் பார்ப்பார், இந்த ரூபா என்ன செய்கின்றாள், காலையில் அவளிடம் பேச வேண்டும்” என்று நினைத்துக் கொண்டிருந்தவனை உறக்கம் அணுகவே இல்லை.

“இந்த அஸ்வின் தான் என் திருமணத்தை அவளிடம் சொல்லி இருக்கின்றான், அப்போது என்னை கவனித்துக் கொண்டிருக்கின்றானா இல்லை வர்ஷினி திருமணத்திற்கு அழைத்ததால் தெரியவந்ததா?”  

“தூங்கணும் சொன்னீங்க? இன்னும் தூங்கவேயில்லை!” என வர்ஷினியின் குரல் கேட்க..

அப்போது தான் வர்ஷினியை கவனித்தான், “வர்ஷ், சீக்கிரம் தூங்கிடு! அப்புறம் ஆறு மணிக்கு முழிச்சிக்கோ! இன்னைக்கே பாட்டி நம்ம வீட்டு பழக்கம் சொல்லிக் கொடுக்கலையா? ஏழு மணி ஆச்சு, எழலை, சொன்னாங்க!” என,

எதுவும் மறுத்தோ திரும்பவோ பேசாமல், “ஓகே, நாளைக்கு கமலம்மாவை போய் பார்க்கணும், இன்னைக்கு போன்ல கூட நான் பேசலை, ரஞ்சி அண்ணி அத்தை கிட்ட சொன்னாங்களாம். மா! இவ உங்க வீட்டுக்கு வந்ததுல இருந்து எங்க யார் கூடவும் பேசக் கூட இல்லைன்னு, நாளைக்கு போகணும்” என்று சொல்லியபடி கண்களை மூடிக் கொள்ள..

அவளை நெருங்கி படுத்துக் கொண்டு, அவளை கையணைப்பில் கொண்டு வந்தவன், நேத்து தானே இவ வந்தா என நினைத்த படி “வர்ஷ், நீ அஸ்வின் எங்கே பார்த்தே? எப்படி இன்வைட் பண்ணின?” என,

கணவனின் கை அணைப்பில் சுகமாக அடங்கியிருந்தவளுக்கு, முதலில் அவனின் கேள்வியே புரியவில்லை. “யாரு அஸ்வின்?” என ஆரம்பித்தவள், ஞாபகம் வரப் பெற்றவளாக.. “ஏன் கேட்கறீங்க?” என,

கோபப்படாமல், “சொல்வியா, மாட்டியா? ஏற்கனவே எங்களுக்கு அவனுக்கும் பிரச்சனை, நீ திரும்ப தேவையில்லாம சிக்கல்ல மாட்டிக்கக் கூடாது” என நல்லவிதமாகவே சொல்ல,

“நானா தான் இன்வைட் பண்ணினேன், எதேச்சையா பார்த்தப்போ.. என் மேரேஜ்க்கு என் ஃபிரண்ட்ஸ் பார்ட்டி கொடுத்தாங்க, ஒரு ஹோட்டல்ல அங்க பார்த்தேன்” என,

“எந்த ஹோட்டல்?”

வர்ஷினி சொல்லியது ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல், “அங்க இருந்த பப்ல அவன் இன்சார்ஜ் போல, அங்க தான் பார்த்தேன்!”

“வாட் நீ பப் போனியா?” என ஈஸ்வர் கேட்டு தன் அணைப்பில் இருந்த வர்ஷினியை விலக்கி எழுந்து அமர்ந்த விதத்தில், “எஸ், போனேன்!” என்றவள், அவளும் எழுந்து எதற்கு இவ்வளவு அதிர்ச்சி என்பது போலப் பார்க்க,

“நீ பப் போவியா?” என்றான் அதிர்ச்சி மாறாமல்.  

“எஸ், எப்போவாவது போவேன்.. ஸ்கூல் டேஸ்லயே  போயிருக்கோம்” என,

“அங்கெல்லாம் இனி போகாத வர்ஷ், எனக்கு அது பிடிக்காது.. இப்போ அதெல்லாம் சகஜம் சொல்றாங்க, ஆனா அது நமக்கு அவ்வளவா செட் ஆகாது, முக்கியமா எனக்கு, பொண்ணுங்க அப்படி போறது, ஊர் சுத்தறது, குதிக்கறது, யாரோட வேணா டான்ஸ் பண்றது, இதெல்லாம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது, புரியுதா?” என,

“எப்பவும் எல்லாம் போக மாட்டேன், எப்போவாவது போவேன், நீங்க சொன்ன ஊர் சுத்தறது, குதிக்கறது, டான்ஸ் பண்றது எல்லாம் பண்ணியிருக்கேன், ஆனா டான்ஸ் தனியா தான் பண்ணியிருக்கேன்” என,

எனக்கு எதுவுமே தெரியவில்லை என்ற யோசனைகள் மனதில் ஓடிய போதும், “எப்போவாவது கூட நீ போகக் கூடாது, புரிஞ்சதா!” என்றான் திரும்பவும் கட்டளை போலவே…   

ஈஸ்வரின் கோபத்தை பார்த்தவள் “ஈசி, போகமாட்டேன்!” என்றாள் ஸ்திரமாக.. அவனுக்காக.. 

“எந்த பிரண்ட்ஸ் கூட காலேஜ் பிரண்ட்ஸ் கூடவா? யார், யார், உனக்கு பிரண்ட்ஸ்?” என்று கேள்விகளை அடுக்கினான்.  

“இல்லை! இது ஸ்கூல் மேட்ஸ், நம்ம கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க” என விளக்கம் சொல்லி, யார் என்பது போல சொல்ல, எல்லாம் அடையாளம் சொல்லும் படி இருக்கும் பெரிய பெரிய ஆட்களின் மக்கள் தான். ஆனாலும் ஈஸ்வருக்கு திருப்தியில்லை.

ஆம்! வர்ஷினி நிறைய பேரை தன் நண்பர்கள் என்று அறிமுகப் படுத்தினால் தான், ஈஸ்வர் தான் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை. இப்போது அவளிடம், “உன்னோட பிரண்ட்ஸ் ஏன் எனக்கு தெரியலை, நான் உன்னோட அவங்களை பார்த்ததே இல்லையே!” என,

“உங்களுக்கு என்னை பத்தி என்ன தெரியும்?” என்றாள் புருவம் உயர்த்தி பாவனையாக..

ஈஸ்வர் மௌனமாய் அவளை பார்க்க.. “முரளிண்ணா கல்யாணத்துல இருந்து தானே உங்களுக்கு என்னை தெரியும்”

“ஆனா முரளிக்கு தெரியும் தானே! உன்னை பத்தி சொல்லியிருக்கான்!” என்று பதில் சொன்னவனிடம்,  

“இல்லை! தெரியாது! இங்க என்னை பார்க்கறதோட சரி! யாரும் என்கிட்டே முன்ன ரொம்ப க்ளோஸ் கிடையாது, அவங்களை சொல்ல முடியாது, நான் எல்லோரையும் தள்ளி வைப்பேன், ரொம்ப அளவா பேசுவேன், இப்போ பேசறதுல கால்வாசி கூட பேச மாட்டேன், பத்துண்ணாவாவது பேசுவாங்க, முரளி அண்ணா என்கிட்டே பேசறதே ரொம்ப ரேர், இப்போ ஷாலினி அண்ணி வந்த பிறகு தான் பரவாயில்லை!”

“என்னோட வாழ்க்கையில நான் இங்க வர்ற வரை நண்பர்கள் தான் அதிகம், அவங்க நிறைய ஊர் சுத்துவாங்க, எனக்கு அப்பா ரொம்ப கட்டுப்பாடு விதிப்பார், அதனால அதிகம் போகலைன்னாலும் எப்போவாவது பப் எல்லாம் போறது தான்!”

“பட்! நீங்க ஸ்கூல் ஸ்டுடன்ட்ஸ்!”

“ஹ, ஹ, நைன்த் படிக்கும் போது இருந்தே போவாங்க, அது ஒரு டிஃப்பரன்ட் வேர்ல்ட்! எனக்காவது அம்மா இல்லை, அவங்களுக்கு இருந்தாலும் பேரன்ட்ஸ் ரொம்ப பிசி அதனால தான் ஹாஸ்டல், சோ நாங்க என்ன பண்ணுவோம், ஊர் சுத்துவோம், அது ரொம்ப சகஜம்” என,

“ஹாஸ்டல்ல எப்படி பாசிபிள்? என்னவோ நான் ஸ்கூல் போகாத மாதிரி பேசற நீ!” என்றான் கடுப்பாக.  

சிரித்தவள், “உங்களுக்கு தெரியுமா ரூல்ஸ்ன்னு ஒன்னு போடறதே அதை பிரேக் பண்ண தான், எங்களுக்கு கேப்சரிங் வொர்ட்ஸ்சே பிரேக் தி ரூல்ஸ் தான். அப்புறம் வொய் பாய்ஸ் ஷுட் ஹேவ் ஆல் தி ஃபன் இப்படி நிறைய” என்று உற்சாகத்தோடு பேசியவள், “நீங்க போனது இல்லையா?”

“நிஜம்மா இல்லை, எனக்கு அது பிடிக்காது!” என,

“அதனால நீங்க போகலை அவ்வளவு தான்.. இப்போ இதெல்லாம் ரொம்ப சகஜம், பட் காலேஜ் பிரண்ட்ஸ் கூட போனதில்லை. அவங்க யாரு என்னன்னு எனக்கு அதிகம் தெரியாதில்லையா?”

“ஆனா ஸ்கூல் ஃபிரண்ட்ஸ், நாங்க பல வருஷமா ஹாஸ்டல் மேட்ஸ் அண்ட் ஸ்கூல் மேட்ஸ், பல சமயம் பேசுவேன், சில சமயம் அவங்களோட பேச கூட மாட்டேன். எல்லோருக்கும் என்னை நல்லா தெரியும். சோ, என்னோட மூட் தகுந்த மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்க!”

  “நிஜமாகவே இவளை பற்றி எனக்கு என்ன தெரியும்?” என்று தான் ஈஸ்வருக்கு தோன்றியது. 

யோசனைகளில் ஆழ்ந்தவன், “அஸ்வின்” என எடுத்துக் கொடுக்க, “அந்த ஹோட்டல்ல வேலைக்கு இருக்கார் போல, பார்த்தேன், இன்வைட் பண்ணினேன், எங்கே? எப்போ? எல்லாம் கேட்டார், ஆனா வரலை போல!”      

“வரலைன்னா என்ன? வேலையை கரக்டா செஞ்சிருக்கான்!” என்று மனதிற்குள் நினைத்தான், “ஒரு மாப்பிள்ளை அவளுக்குப் பார்க்கணும்னு அந்த மடையனுக்கு ஏன் தோணலை” என கூடவே நினைத்தான். அப்போதும் தன்னை பற்றியும் ஐஸ்வர்யாவைப் பற்றியும் அவனுக்கு தெரிந்திருக்குமோ என நினைக்கவில்லை! அந்த சந்தேகமே வரவில்லை!

அந்த யோசனைகளோடே ஈஸ்வர் இருக்க, வர்ஷினிக்கு தூக்கம் கண்களை சுழற்றியது. பார்வையை அவளிடம் திருப்பியவனுக்கு, தான் படுத்தால் தான் படுப்பாள் என்று புரிய, படுத்தான். அவன் மேலேயே படுத்து உறங்க ஆரம்பித்தவள்,

“உங்களுக்கு ஒன்னு தெரியுமா?” என படுத்தபடியே பேசினாள். “என்ன வர்ஷி?” என்றவனிடம்,

“நீங்க தான் என் பக்கத்துல என் நினைவு தெரிஞ்ச நாளா படுத்து இருக்கீங்க!” என்று அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டவள், “அம்மா, அப்பான்னு யார் கூடவும் படுத்தது இல்லை, எப்பவும் தனி தான்! தனி பெட் தான்! தனி ரூம் தான்!” என்றவளின் குரல் ஆழ்ந்து ஒலித்தது.

அவளின் குரலில் என்ன இருந்தது என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆனாலும் அது வெகுவாக ஈஸ்வரை அசைத்தது.    

அந்த குரலில், அந்த அணைப்பில், ஈஸ்வரின் மயக்கங்கள் எல்லாம் தூர ஓடிப்போயின.. அந்த நொடியில், சரண் சிறு குழந்தையாக இருக்கும் போது அவன் மேலேயே உறங்கிவிடுவான். அப்படி ஒரு குழந்தை போல தான் அவனுக்கு தோன்றினாள். “நான் இருக்கின்றேன் உனக்கு!” என்று வாய் வார்த்தையாக சொல்லாமல், தன் அணைப்பில் காட்டினான்.

“நான் இருக்கிறேன் உனக்கு” என்று காட்ட வேண்டிய சூழல்கள் இனி நிறைய வரும் என்று புரியவில்லை. “கடந்து வந்த நாட்கள் எல்லாம் என்ன? இனி இருக்கின்றது உனக்கு!” என காலம் அவனை பார்த்து சிரித்தது. 

என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணின் அசைவிலே!

Advertisement