Advertisement

அத்தியாயம் ஐம்பத்தி ஐந்து :

எனை மாற்றும் காதலே!

ஏர்போர்டில் இருந்து நேரே ஹாஸ்பிடல் சென்று இருவரும் ஈஸ்வரின் வீடு வந்த போதும், அடுத்த நாள் உடனே ஹாஸ்பிடல் சென்று விட.. பின்பு அப்பாவும் தவறி விட.. வர்ஷினி அவளின் வீட்டிலேயே தான் இருந்தாள். இங்கு வரவில்லை அதனால் ஈஸ்வரின் குடும்பத்தினருடன் அதிகம் பழகும் வாய்ப்பு இல்லை.

ஈஸ்வரை “இரு” என்று சொல்லவில்லை.. அதனால் அவன் அவனின் வீட்டில் இருந்து வந்து வந்து தான் போய் கொண்டிருந்தான். வர்ஷினியாகவும் அவனை தேடவில்லை.. அவனாலும் அருகில் செல்ல முடியவில்லை.

சரி வீட்டிற்கு வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என விட்டு விட்டான். மூன்று நாள் காரியங்களும் முடிந்து விட.. அழைப்பதா வேண்டாமா என்ற தயக்கம் ஈஸ்வருக்கு. மதியம் எப்பொழுதும் போல அவனின் வேலைகளைப்  பார்க்க கிளம்பிவிட்டான். ஆனால் மாலைக்கு மேல் அவளை தனியாக விட மனதேயில்லை. அவளின் வீட்டுனருடன் தான் இருந்தாள், ஆனாலும் அவளை தனியாக விட்டு விட்டது போன்ற உணர்வு தான் ஈஸ்வருக்கு.    இரவு வந்தவன், “இன்னைக்கு வீட்டுக்கு வந்துடறியா வர்ஷி” என,

“சரி” என்பது போல தலையாட்டியவள், உடனே கமலாம்மாவிடம் சொல்லிக் கொண்டு அவனுடம் வந்தும் விட்டாள். வந்த பிறகு கிடைத்த இரவின் தனிமையில் தான் அவனால் வர்ஷினியிடம் பேசவே முடிந்தது.

ஆனாலும் ஈஸ்வருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.. என்ன கேட்க முடியும்.. நீயேன் என்னிடம் எதையும் சொல்லவில்லை என்றா.. சொல்வதற்கு என்ன இருக்கின்றது உண்மையில் ஒன்றுமில்லை தான்.

“காலேஜ் எப்போ இருந்து போற?”  

“இன்னும் ஒரு ரெண்டு மூணு நாள் கழிச்சு” என்றவளிடம், வேறு என்ன பேசுவது என்றே தெரியவில்லை ஈஸ்வருக்கு.

“சரி, நீ தூங்கு!” என்று லேப் டேப்பை எடுத்து அமர்ந்து கொள்ள.. ஒன்றும் பேசாமல் வர்ஷினியும் படுத்துக் கொண்டாள். தன் வேலையில் ஈஸ்வர் மூழ்கி விட.. கிட்ட தட்ட அரை மணிநேரம் கழித்து அவன் தன் கவனத்தை வர்ஷினியிடம் திருப்பிய போது.. படுத்த படி இருந்தாலும் விழித்து இருந்தாள்.. கண் மூட வில்லை.

“ஏன், தூக்கம் வரலையா வர்ஷி?”

“வரவில்லை” என்பது போல ஒரு தலையசைப்பு மட்டுமே… லேப்பை வேகமாக மூடி வைத்து எழுந்து அவளின் அருகில் அமர்ந்தான். ஈஸ்வர் அமர்ந்ததும் வர்ஷினியும் எழுந்து சுவர் சாய்ந்து அமர்ந்து கொள்ள,  

“உங்கப்பாவோட இழப்புக்காக உனக்கு வருத்தம் இருந்தா ஓகே… ஆனா யாருமில்லைன்னு நீ நினைக்கக் கூடாது.. நமக்கு கல்யாணமாகிடுச்சு, நான் உன் கணவன், அப்படின்றது கூட ரெண்டாம் பட்சம்.. ஆனா இந்தக் கல்யாணம் நடந்து இருக்கலைன்னா கூட எப்பவும் நான் உனக்கு இருந்திருப்பேன்” என்றான் உணர்வுப் பூர்வமாக.

அவனே அப்படி பேச வேண்டும் என்று நினைக்கவில்லை ஆனால் இப்போது பேச பேச.. தான் அப்படி தான் இருந்திருப்போம் என்று அவனுக்கே தோன்றியது.

ஈஸ்வர் பேச ஆரம்பித்த பொழுது சாதரணமாக அவனை பார்த்திருந்தவள்.. பேச பேச அவனையே விழிஎடுக்காமல் பார்த்தாள்.

அந்த நீல நிறக் கண்களை பார்க்கும் போது மனதில் எழும் அலைபுருதல் இப்போது இல்லை.. அந்த கண்களை பார்க்கும் பொழுது உண்மையில் அவன் மனம் அமைதியாக உணர்ந்தது.  “நான் சொன்னது உண்மை” என்ற நம்பிக்கையை அதனுக்கு கொடுக்க விழைந்தான். ஈஸ்வரின் பார்வையில் உடல் மொழியில் இருந்த உறுதி வர்ஷினியை அதனுள் இழுத்தது.

புன்னகைக்க முயன்றாள்.. ஆனாலும் முடியவில்லை..

“ஏன்? என்ன விஷயம்?” என..

“ஒன்னுமில்லையே” என்றாள்..

“அப்பா இறந்து இருக்காங்க.. அந்த துக்கம் உனக்கு அதிகமா இருக்கும். யார் கிட்டயாவது பேசினா தானே குறையும். நீ ஏன் என்கிட்ட எதுவுமே பேசலை” என்று நேரடியாக கேட்டு விட்டான்.

“என்ன பேசணும்?” என்றாள் புரியாமல்.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இப்போது ஈஸ்வர் தான் விழித்துப் பார்த்தான்.

பிறகு “கஷ்டமா இருக்குன்னு தானே அழுத, அந்த கஷ்டத்தை ஏன் சொல்லலை? என்னோட பகிர்ந்துக்கலை?” என்று வாய் விட்டே கேட்டான்.. அவனிற்கு வர்ஷினியோடு எந்த இடைவெளியும் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாய் இருந்தான். அதனால் என்ன நினைத்தானோ அதை வாய் விட்டுக் கேட்டான்.

“நான் எப்பவும் தனி தானே, அதனால எப்பவும் யாரோடையும் ஷேர் பண்ண மாட்டேன்.. இப்போ புதுசா அதனால வரலையோ என்னவோ”  

“என்ன நீ தனி.. எப்பவும் உங்கப்பா பார்த்துக்கிட்டார் தானே”

“நான் ப்ளஸ் டூ முடிச்ச பிறகு தான் வீட்ல தங்க ஆரம்பிச்சேன்.. அதுக்கு முன்ன லீவ்க்கு மட்டும் தான் வருவேன்.. எல்லோரும் நல்லா பேசினாலும் பழகினாலும் லீவ்க்கு மட்டும் வந்து போகும் போது நான் இருந்த ஹாஸ்டல் தான் எனக்கு வீடு.. இது இல்லைதானே!”  

அவள் சொல்லிய விதம் மிகவும் சாதரணமாய் இருந்தது.. அப்படி ஒன்று ஏங்கி வருத்தப்பட்டு சொன்ன மாதிரி எல்லாம் இல்லை.

“முன்னே ரொம்ப ஃபீல் பண்ணுனியோ?” என்ற அவனின் கேள்விக்கு..

“தெரியலை எனக்கு இப்போ அந்த ஞாபகங்கள் எல்லாம் இல்லை.. கொஞ்சம் எனக்கு புரிய ஆரம்பிச்ச உடனே இதுதான்னு என்னால அக்சப்ட் பண்ண முடிஞ்சது. அதனால் பெருசா ஒன்னும் ஃபீல் பண்ணலை. அதனால் தான் திரும்ப எனக்கு அந்த மாதிரி ஒரு பற்றில்லாத வாழ்க்கை இருக்கக் கூடாது.. எனக்கு என்னோட வீடு வேணும்… என்னை மட்டுமே லவ் பண்றவங்க வேணும்னு நினைச்சேன்”

“உனக்கு நான் இன்னும் அந்த ஃபீல் குடுக்கலையா?” என நேரடியாகக் கேட்டான் அவளின் கண்களைப் பார்த்து..

இப்படி ஒரு கேள்வியை வர்ஷினி எதிர்பார்க்கவும் இல்லை அவளுக்கு தெரியவும் இல்லை. அந்த கண்கள் சற்று கலவரமாக ஈஸ்வரை பார்க்க.. “நான் இருக்கும் போது எதுக்கும் இப்படி பார்க்கக் கூடாது சொன்னேன் இல்லையா?”

“இல்லை, நான் இப்படி எல்லாம் யோசிச்சது இல்லை”  

“இது யோசிக்கற விஷயம் இல்லை, தானா வர்ற விஷயம்.. ஓகே தூங்கு!” என்றவன் லைட் ஆஃப் செய்து வெளியே போகப் போக,

“எங்கே போறீங்க?”  

“தண்ணி இல்லை, எடுத்துட்டு வர்றேன்” என.. “எனக்கு பசிக்குது பால் குடிக்கட்டுமா?” எனக் கேட்டாள்.

“ஹேய், என்ன நீ? என்னை கேட்கற? இது உன் வீடு, வா கீழ போகலாம்” என அவளை அழைத்து கீழே வந்த போது.. வீடு உறங்கியிருக்க.. மலர் மட்டும் ரூமை விட்டு எதற்கோ வந்தவர், இவர்களை பார்த்து, “என்ன?” என்க..

“பால் குடிக்கலாம்னு வந்தோம் மா!” என ஈஸ்வர் சொல்ல..

“முதல்லயே குடிச்சிருக்க வேண்டாமா? இப்போ கேட்கற, நேரம் பாரு பதினொன்னு!”  

“நான் தான் பசிக்குது சொன்னேன் அத்தை” என்றாள் உடனே வர்ஷினி..

“நீ தான் சொன்னாயா, அப்போ ஓகே! இந்த பையன் எதையுமே நேரத்துக்கு செய்ய மாட்டான்” என்று சொன்னவர், “கொஞ்சமா பசிக்குதா? ரொம்ப பசிக்குதா?” என்று ஒரு கேள்வியைக் கேட்க..

“எதற்கு?” என்பது போல வர்ஷினி பார்க்க..

“கொஞ்சமா பசிச்சா பால் போதும், ரொம்ப பசிச்சா தோசை சுட்டு தர்றேன்” என அவரின் பாவனையில், “ரொம்பப் பசிக்குது” என்று அவள் சொல்லி விட,

“சரி வா!” என்று அழைத்துப் போனவர்.. வேகமாக தோசைக் கல்லை வைத்து..

கொஞ்சம் சட்னியும் அரைக்க.. இதையெல்லாம் ஆச்சர்யமாகப் பார்த்திருந்தாள் வர்ஷினி.. உண்மையில் அவளுக்கு எதுவும் தெரியாது.. ஏன் தோசை ஊற்றக் கூட தெரியாது.

எதிலும் தலையிடாமல் ஈஸ்வர் பார்த்திருந்தான்.

“என்ன சாப்பிட்ட நீ ராத்திரி?” என,

“ம்ம்ம்” என யோசித்தவள், “ஞாபகமில்லை” என சொல்ல,

“என்ன ஞாபகமில்லையா?” என்றார் ஆச்சர்யமாக மலர்.. “ம்ம், ஞாபகம் வரலை” என்று அவள் தலையைப் பிடிக்க.. என்னவோ அவளின்  செய்கைகள் குழந்தைத்தனமாகத் தான் இருந்தது. திருமணம் நிச்சயம் ஆன நாள் முதலாக அவளைப் பார்க்கும் போது எல்லாம் அவளைத் தான் கவனித்தார். பல சமயம் வளர்ந்த பெண் என்றாலும் சில சமயம் தடுமாறும் குழந்தையாக தான் தோன்றினாள். 

உண்மையில் அவள் உண்ணவே இல்லை. அதுவும் அவளுக்கு நினைவில் இல்லை. அப்படி மனதில் ஒரு அலைபுருதல் தடுமாற்றம் அப்பா இறந்த நாளாக. வெளியில் எதையும் காட்டிக் கொள்ளும் வழக்கமில்லாததால் யாருக்கும் தெரியவில்லை.    

“சரி வா, முதல்ல சாப்பிடு!” என.. நான்கு தோசைகள் சாப்பிட்ட பிறகே நிமிர்ந்தாள்.. “நல்லா இருந்தது அத்தை” என..

“மா! எனக்கு இப்படி எப்போவாவது நெய் ரோஸ்ட், ஆனியன் ரோஸ்ட், தக்காளி ரோஸ்ட்ன்னு, வெஜிடபள் ரோஸ்ட்ன்னு இப்படி வரிசையா சுட்டு போட்டு இருக்கியா? அதுவும் ராத்திரி பதினோரு மணிக்கு என்னை பால் குடிக்க திட்டுட்டு” என ஈஸ்வர் வாய் பேசினான். உண்மையில் அப்படி தான் மலர் வர்ஷினிக்கு மளமளவென்று சுட்டுக் கொடுத்தார்.  

“ஏன்டா பேச மாட்டீங்க? சமைக்க ஆள் இருந்தாலும், நானே பார்த்து பார்த்து பசங்களுக்கு சமைச்சு போட்டேன் தானே! நீ இதுவும் பேசுவ? இன்னமும் பேசுவ?” என முறுக்கியவர், “இவ சாப்பிட்ட மாதிரியே எனக்கு தெரியலை, முதல் முதல்லா நான் சமைச்சு தர்றேன் வர்ஷினிக்கு, எப்படி சாதா தோசை சுட முடியும்?”   

அம்மாவின் செய்கை ஈஸ்வருக்கு அப்படி ஒரு மன நிறைவை கொடுத்த போதும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் “மா, இந்த டைலாக் எல்லாம் அப்புறம் பேசு, முதல்ல எனக்கு ரெண்டு தோசை சுடு” என அதட்ட,  

வர்ஷினி உண்டு முடித்திருந்ததனால், தன் கணவனுக்கு சுட விரும்புவாளோ என நினைத்து, “நீ தோசை ஊத்துறையா வர்ஷினி” எனக் கேட்டார்..

“எனக்கு சுடத் தெரியாது அத்தை” என்றாள் தயங்கி தயங்கி..

“என்ன தோசை சுடத் தெரியாதா?” என்றார் ஆச்சர்யமாக.

“ம்கூம் தெரியாது?” என,

“அப்போ சிங்கப்பூர்ல என்ன பண்ணுனீங்க?” என, “வெளில சாப்பிட்டோம் அம்மா” என அவசரமாக ஈஸ்வர் சொல்ல வரும் முன்னே,  

“இவர் தான் சமைச்சார்!” என்று வர்ஷினி உண்மையை போட்டு உடைத்து விட,

“என்ன?” என ஈஸ்வரை முறைத்தவர், “விஸ்வா! இதுக்கு பேர் தான் சமையல் கட்டுன்னு, உனக்கு தெரியும்னு கூட எனக்கு தெரியாதேடா” என மலர் சொல்ல,   

“அதும்மா அங்க சிங்கப்பூர்ல தனியா இருந்த போது, நான் தானே சமைச்சிக்கிட்டேன். அதனால கொஞ்சம் பழக்கம், நம்ம மாதிரி எல்லாம் இல்லைம்மா, இருக்குற இலை தலை எல்லாம் போட்டு அப்படியே டிஷ் பண்ணிடலாம்” என்று அசடு வழிந்தவன், “இனிமே தானேம்மா உன் கூட இருக்கப் போறா, எல்லாம் நீ சொல்லிக் குடுத்துடு!” என்று ஈஸ்வர் சமாளிக்க..

வர்ஷினியும் அவசரமாக “நான் கத்துக்கறேன்!” என்று சொல்ல,

“கத்துக்கணும், கண்டிப்பா!” என்று வர்ஷினியிடம் சொன்னவர்.. “குழந்தைங்க பிறக்கும் போது நீதான் பார்த்துக்கணும், அவங்களுக்கு வேண்டியதை சமைச்சி குடுக்கத் தெரியணும்!” என,

“நீங்க பார்க்க மாட்டீங்களா ம்மா!” என்று ஈஸ்வர் இடை புக,

அவனை விட்டு வர்ஷினியிடம் திரும்பியவர்.. “எத்தனை பேர் இருந்தாலும் அம்மா பார்த்துகிட்ட மாதிரி வராது.. நாம எவ்வளவு தான் விழுந்து விழுந்து பார்த்தாலும்.. நாளைக்கு அவங்க நம்மளை எந்த அளவுக்கு கன்சிடர் பண்ணுவாங்கன்னு தெரியாது..இருந்தாலும் குழந்தைங்கன்றது கடவுள் நமக்கு குடுக்குற வரம் மட்டுமில்லை, பொறுப்பும் கூட.. அவங்க அவங்களை பார்க்கற வரை நம்ம அவங்களைப் பார்த்துக்கணும்.. அப்புறம் கடவுள் விட்ட வழி!” என,

“மா! என்ன இப்படி பேசறீங்க?” என,

“ப்ச்! தோணினது சொன்னேன்!” என்று ஈஸ்வரிடம் சொன்னவர்.. உடனே வர்ஷினியிடம் திரும்பி,

“அப்பப்போ நான் இவன் கிட்ட ரஞ்சனி கிட்ட எல்லாம் இப்படி தான் பேசுவேன், அதையெல்லாம் நீ கண்டுக்கக் கூடாது, தப்பாவும் எடுக்கக் கூடாது. இது அவங்களுக்கு மட்டும் தான் சரியா?” என்று குழந்தைக்கு சொல்வது போல சொல்ல..

“ம்ம்!” என்று வர்ஷினி தலையை தலையை ஆட்டினாள்.

இருவரையும் முறைத்துப் பார்த்தான். “உன்கிட்ட பேசி பேசியே எனக்கு பசிக்குது, போடா! தோசை சுடு! உன் பொண்டாடிக்கு மட்டும் தான் சுடுவியா! எனக்கு மாட்டியா?” என,

பதிலே பேசாமல் ஈஸ்வர் எழுந்து சமையல் அறை சென்றான். “ஏன் அத்தை அப்படி பேசறீங்க? அவர் என்னைக் கல்யாணம் பண்ணினது உங்களுக்கு பிடிக்கலையா?” என,

“ஆங்! இவள் என்ன கேட்கிறாள்?” என்று பார்த்தார் மலர்.. எல்லாம் மனதிற்குள் வைத்து ஒன்றுக்கு இரண்டாய் கற்பனை செய்து, திரித்து சண்டையிடும் மாமியார் மருமகள் மத்தியில் வர்ஷினியின் இந்த நேரடியான கள்ளமில்லா கேள்வி, அவரை சற்று ஆச்சர்யப்படுத்தியது.

“உண்மையை சொல்லட்டுமா? பொய் சொல்லட்டுமா?” என்றார்.

அவர் கேட்ட பாவனையில் “உண்மையே சொல்லுங்க அத்தை!” என்றாள் ஒரு மென்னைகையுடன்,   

“எனக்கு பதினேழு வயசுல கல்யாணமாகினது.. இங்க வீட்ல எனக்கு பெருசா வேலையே கிடையாது! எல்லாம் அத்தையும் அக்காவும் பார்த்துக்குவாங்க, அதனால ஈஸ்வரும் ரஞ்சனியும் பிறந்த பிறகு என்னோட முழு நேரமும் அவங்களோட மட்டும் தான். என் பிள்ளைகள்ன்னு பார்த்து பார்த்து வளர்த்தேன்.. என் பசங்க எல்லாத்துலயும் சிறந்தவங்கன்னு கர்வம் கூட”

“ஆனா வாழ்க்கையோட ரொம்ப முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது ஈஸ்வராவது என்கிட்டே தகவல் சொன்னான், ஆனா அவனும் கேட்கலை.. இந்த ரஞ்சி என்கிட்டே அந்த தகவலைக் கூட சொல்லலை”

“நான் இந்த மாதிரி பிள்ளைகள்ன்னு அவங்க பின்னாடியே சுத்தி முடிச்சிட்டேன்.. ஆனா அவங்க..?” என்று அவர் பேசும்போது குரல் கலங்கிற்று.

“அது அந்த வருத்தம் தான் அப்பப்போ பேச வைக்கும்.. எங்கே தப்பிப் போயிட்டனோன்னு” என,

“அது அப்படி இல்லை அத்தை.. நீங்க அவங்களுக்கு சின்ன வயசுல இருந்தே முடிவெடுக்குற சுதந்திரத்தை கொடுத்து அவங்களை வளர்த்து இருக்கீங்க. உங்க முடிவுகளை அவங்க மேல திணிச்சு இருக்க மாட்டீங்க. அதன் வெளிப்பாடு தான் இது.. இதுல நீங்க எங்க தப்பிப் போனிங்க?”

“பாருங்க! நான் அப்பாவோடவே இல்லை! ஆனா எல்லா விஷயத்தை அவர்க்கிட்ட கேட்காமையோ, சொல்லாமையோ செஞ்சது இல்லை.. அதுக்காக அவர் என்னை சிறப்பா வளர்த்தாரா என்ன? லீவ்ல தான் வீட்டுக்கு வருவேன்.. எப்போவாவது தான் என்னை வந்து பார்ப்பாங்க.. நான் மட்டுமில்லை பத்துண்ணாவும் முரளிண்ணாவும் கூட அப்படித் தான்!”

“பிறப்பு வளர்ப்புன்னு ஒன்னு இருக்கு! ஆனா அதையும் விட அவங்க அவங்க தனித்தன்மைன்னு ஒன்னு இருக்கு.. நடக்கற எதுக்கும் யாரும் பொறுப்பாக முடியாது!” என,

சற்று முன் தன்னிடம் தடுமாறி நின்ற பெண்ணா இவள்? என தான் மலருக்கு தோன்றியது. “உன்கிட்ட ஏதோ இருக்கு, இல்லை என் பையன் எப்பவும் நான் தான் பெஸ்ட், எனக்கு பெஸ்ட் தான் வேணும்னு சொல்றவன், உன்னை செலக்ட் பண்ணியிருக்க மாட்டான்” என்று அவர் சொல்லும் போது ஈஸ்வர் தோசையுடன் வந்தான்..

“நான் எங்கே செலக்ட் பண்ணினேன்.. நானே என்னையும் மீறி போனேன் நான் செலக்ட் பண்ணின ஐஸ்வர்யாவை விட்டு” என மனதினில் நினைத்துக் கொண்டே வந்தான்.

ஆனாலும் எதுவும் பேசாமல் தோசையை வைத்துப் போக, மலர் சாப்பிட ஆரம்பித்தார்.     

ஈஸ்வர் சுட்டு முடித்து மூவருக்கும் பால் எடுத்து வரும் வரை மலர் வர்ஷினியிடம் பேச.. அவளும் பேசிக் கொண்டிருந்தாள். இயல்பிலேயே மலர் அதிகம் பேசுபவர் என்று வர்ஷினிக்கு நன்கு புரிந்தது.

அதிகம் பேசும் வழமை வர்ஷினிக்கு இல்லாவிட்டாலும் அவருக்காக பேசிக் கொண்டிருந்தாள்.

பால் எடுத்து வந்த ஈஸ்வர் “சீக்கிரம் தோசை சுட கத்துக்கோ வர்ஷி” என,

“ஏண்டா? ரெண்டு தோசை அம்மாக்கு சுட்டு குடுக்கறதுக்குள்ள உனக்கு முடியலையா?”  

“மா! நான் அப்படி சொல்லலை, அவளையும் கத்துக்க சொல்றேன்”

“ஏன் வர்ஷி உனக்கு எந்த வேலையும் கத்துக் கொடுக்கலை, கமலம்மா உன்னை கவனிக்க மாட்டாங்களா?” என மலர் கேட்க,  

“வீட்ல ரெண்டு சமையல்காரங்க இருக்காங்க.. சோ, நாங்க யாருமே கிச்சன் பக்கமே போகமாட்டோம்.. அதுவுமில்லாம நான் இங்கே வந்த பிறகு அப்பாக்கு ரொம்ப முடியாம போச்சு, அதனால எப்பவும் அம்மா அப்பா கூடத் தான்”

“ஆனாலும் அப்பா சொன்னா செஞ்சிருப்பாங்க. அப்பா சொல்லாம எதையுமே செய்ய மாட்டாங்க!” என விளக்கம் கொடுக்க..

இவள் இதை முன்னமே யோசித்து இருக்கின்றாள் என்பது போல ஈஸ்வருக்கு தோன்றியது. நிறைய அவளுக்காக அவளே யோசித்து இருக்கின்றாள் என புரிந்தது.

“அதெல்லாம் விடு, இங்க அம்மா அற்புதமா சமைப்பாங்க. நீ அவங்க கிட்ட கத்துக்கணும்னு இருக்கு! சரி தானே ம்மா!” என,

அவன் சரிதானேம்மா என்று சொன்ன விதத்திலேயே, சரி என்று சொல்லுங்க என்பது போன்ற த்வனி இருக்க..

“நீ என்னடா என்னை மிரட்டுற?”  

“நீங்க என்னமா என் பொண்டாட்டி இருக்கான்னு தைரியமா என்கிட்டே சண்டை போடறீங்க”  

“எப்பவும் இவருக்கு எல்லோரையும் மிரட்டியே பழகமாகிடுச்சு அத்தை, நீங்க சண்டை போடுங்க, இவர் என்ன பண்றார்ன்னு பார்ப்போம்” என இடுப்பில் கை வைத்து அலட்சியமாய் சொல்ல,

“என்ன பண்ணுவேன்? உனக்கு தெரியாம எங்கம்மா கால்ல விழுவேன்! எங்கம்மாக்கு தெரியாம உன் கால்ல விழுவேன்! இதை யாருக்கு தெரியாம பார்த்துக்குவேன்! ரொம்ப சிம்பிள்!” என,

“டேய் பொண்டாட்டி கால்ல விழுவேன்னு தைரியமா அம்மா கிட்ட சொல்ற?” என்று குறும்பாக அதட்ட,

“அத்தை! இவர் சொல்றதை செய்ய மாட்டார்! செய்யறதை சொல்ல மாட்டார்!” என்று வர்ஷினி இப்போது கிண்டல் பேச..

“பாரும்மா! பத்து நாள்ல என்னை கண்டுபிடிச்சிட்டா! நீயும் இருக்கியே!” என்று அம்மாவை வார..        

“நிஜம்மா ஈஸ்வர் என்கிட்டே இப்படி பேசியே சில வருஷம் ஆச்சு!” என்றார் ஈஸ்வரையே பார்த்தபடி,

அம்மா சொல்வதும் உண்மை என ஈஸ்வருக்கும் தெரியும்.. அம்மா அவனின் பின்னாலேயே சுற்றிக் கொண்டு இருந்தாலும், அவன் பாட்டியிடம் பெரியம்மாவிடம் தான் இன்னும் அதிகம் பேசுவான். மலருக்கு அதிகம் எதுவும் தெரியாது என்ற எண்ணம் தான் அவனிற்கு. அதில் அவனை அதிகம் தப்பும் சொல்ல முடியாது. கூட்டு குடும்பமாய் போய் விட எல்லாம் பாட்டியும் பெரியம்மாவும் செய்ய பார்க்கும் போது மலருக்கு அதிகம் தெரியாது என்ற எண்ணம் தான் மக்களுக்கு.

ஈஸ்வரின் கல்லூரி படிப்பு ஆரம்பித்த உடனேயே அவனிடம் ஒரு பெரிய மனிதத் தோரணை வந்துவிட.. அம்மாவிடம் சகஜமாக பேசினாலும், அதில் மகன் என்பதை விட ஒரு ஆளுமை, எனக்கு எல்லாம் தெரியும் என்பது போன்ற பாவனைகள் தான் அதிகம்.. அதிலும் தொழிலை கையினில் எடுத்த பிறகு நேரங்கள் அவனுக்கு குறைந்து விட்டது. பின்பு இந்த பிரச்சனைகள் வந்த பிறகு முற்றிலுமாக தன்னை தொலைத்து விட்டான்..

இதையெல்லாம் யோசித்து பார்த்திருந்தான்.. மூன்று நாட்களாக தன்னிடம் சகஜமாக பேசினாலும் வர்ஷினி சகஜ நிலைக்கு வரவில்லை என்று உணர்ந்து தான் இருந்தான். ஆனால் மலர் அதை மிகவும் எளிதாக கொண்டு வந்து விட்டார் என்பதை ஆச்சர்யமாக உணர்ந்தான்.

“என்னவோ போங்க, ரெண்டு பேரும் சேர்ந்து இப்போ என்னை மிரட்டுறீங்க” என சிரிக்க..

“அச்சோ, நீ பயந்துட்டாலும்” என நொடித்தார்.   

பின்பு “போங்கடா, போய் சீக்கிரம் தூங்குங்க!” என,

எழுந்தவர்கள் .. நடக்கத் துவங்கும் முன்.. “நான் தான் குழந்தைங்களை வளர்க்கணும் சொல்றீங்க, அம்மா தான் பார்க்கணும் சொல்றீங்க.. ஆனா எனக்கு அம்மா இல்லை தானே அத்தை, அதுவுமில்லாம யாரும் என்னை வளர்க்கவும் இல்லை, எல் கே ஜி ல இருந்தே ஹாஸ்டல் தான், அதனால எனக்கு எதுவும் தெரியாது… நீங்க எனக்கு சொல்லிக் குடுங்க, நான் செய்துக்குவேன்!” என வர்ஷினி சொல்ல..

அம்மாவும் மகனும் அப்படியே சமைந்து தான் நின்றனர். “இல்லையில்லை, நான் வருத்தமா சொல்லலை! உண்மையை தான் சொன்னேன்!” என,

ஆசுவாசப்பட்ட மலர், “அது யாரும் கத்துக் கொடுக்க வேண்டியதில்லை, தானா வரும்.. அதுல ஏதாவது நீ மிஸ் பண்ணினா நான் சொல்றேன்!” என,

“தேங்க்ஸ் அத்தை!” என்றாள்.

“விஷ்வா, உனக்கு டெய்லி எத்தனை தேங்க்ஸ்டா சொல்றா!”  

“இல்லையில்லை, தேங்க்ஸ் வாபஸ்!” என்றாள் அவசரமாக,

அது என்று அவர் சொல்லிப் போக.. இருவரும் ரூம் வந்தனர்.

“தேங்க்ஸ்!” என்றான் ஈஸ்வர் வர்ஷினியைப் பார்த்து, எதற்கு என்பது போல வர்ஷினி பார்க்க.. “அம்மா ரொம்ப நாளைக்கு அப்புறம் இயல்பா இருக்காங்க”

“இல்லாதவங்களுக்கு தான் அதோட அருமை தெரியும்! இருக்குறவங்களுக்கு தெரியாது!” என்று வர்ஷினி சொல்ல,

“நான் பேசவே மாட்டேன்!” என்பது போல ஈஸ்வர் சைகை செய்ய,

“அது!” என்று வர்ஷினி மலரை போலச் சொல்ல, ஈஸ்வரின் முகத்தில் புன்னகை விரிந்தது. “எப்படி இந்த வீட்டில் இவள் இருப்பாளோ? எல்லோருடனும் நன்றாக பழகிக் கொள்வாளா?” என்ற யோசனைகள் எப்போதும் ஈஸ்வரின் உள் உண்டு. இப்போது அந்த சஞ்சலம் விலகியது.

“அம்மா இவளை பார்த்துக் கொள்வார், இவளும் அம்மாவுடன் நன்றாக பேசிக் கொள்கிறாள். அது போதும்!” என ஆசுவாசித்தவன்..

அந்தப் புன்னகை வாடாமல் படுக்கைக்கு சென்றான். வர்ஷினிக்கும் மலருடன் பேசிக் கொண்டிருந்தது மனதை லேசாகியிருந்தது. ஏதாவது தனக்கு தெரியவில்லை என்றாலும் அவர் சொல்லிக் கொடுப்பார் என்ற நம்பிக்கை வந்திருந்தது.

படுக்கையில் படுத்து விட்டாலும் பின்பும் அவளுக்கு உறக்கமில்லை. ஈஸ்வருக்கு களைப்பாய் இருக்க .. படுத்துக் கொண்டவன் “குட் நைட் வர்ஷ்” என்று சொல்லி, எப்பொழுதும் போல அவளை நெருங்கி அந்த கண்களின் அருகினில் உதடுகளை கொண்டு செல்ல..

வர்ஷினியின் இமைகள் தானாக மூடியது. மென்மையாக அந்த இதழ்களின் மேல் உதடுகளை ஒற்றி எடுக்க, எப்போதையும் விட அந்த முத்தமே அவளை புரட்டிப் போட்டது. வாகாக தன் கன்னத்தை ஈஸ்வரின் உதடுகளை நோக்கி திருப்பினாள்.

எப்பொழுதும் அவனாக தான் செல்வான், அதன் பிறகு அவளை தேட வைப்பான், அவளை தன்னிடம் வர வைப்பதற்கும், அவள் தன்னை அழைப்பதற்கும் வித்தியாசம் உண்டலவ்வா?

அப்பாவை இப்பொழுது தான் இழந்திருகின்றாள், இப்போது அணுகுவது தவறு என்று ஈஸ்வர் முயன்று தள்ளி இருக்க.. வர்ஷினி கன்னத்தை திருப்பியதும் தானாய் அதில் புதைந்தது ஈஸ்வரின் உதடுகள்.

“வர்ஷ் பேபி” என முனகியவன்.. “ப்ரொசீட் பண்ணட்டுமா? அப்புறம் என்னால விடவே முடியாது!” என,

வர்ஷினியிடம் இருந்து பதிலே இல்லை..  கன்னத்தில் புதைந்த உதடுகள் முற்றிலும் விலகாமல் அசைந்த விதத்தில் முற்றிலுமாக கிறங்கி இருந்தாள்.

“வர்ஷ்” என திரும்ப அழைக்க.. “ம்ம்” என்றவளிடம்.. “நீ என்னை மிஸ் பண்ணுனியா?” என,

“தெரியலை” என்றவளின் கைகள் அவனை சுற்றி படர்ந்து இருக்கமாக அணைத்திருக்க.. அதுவே சொல்லாமல் சொன்னது மிஸ் செய்திருக்கின்றாள் என, அது அவனுக்கும் புரிந்தது. மனதில் ஒரு திருப்தி படர..   

“நான் ரொம்ப மிஸ் பண்ணினேன் உன்னை, நீயில்லாம தூக்கமே வரலை!”

“அப்படியா” என்று நிமிராமல் தன் கன்னத்தை அவன் உதடுகளில் அழுத்திக் கொண்டு, “இப்போ குட் நைட் சொன்னீங்க!”

“அது உனக்கு! எனக்கு இல்லை!” என்று ரகசியம் பேசினான்..

“எனக்கு குட் நைட் வேண்டாம்!” என்று அவளின் குரல் முனக.. அவளை நிமிர்ந்து பார்க்க.. அந்த கண்களில் முதன் முறையாக தெரிந்த அழைப்பில், “பார்த்த நாளா கொல்றடி என்னை!” என,

மெல்லிய வெளிச்சத்தில் பளிச்சிட்ட அந்த நீல நிறக் கண்கள் “அப்படியா” என்ற பாவனையைக் காட்டியது. அதில் தெரிந்த அலட்சியம், அந்த அலட்சியத்தில் ஒளிந்திருந்த ஒரு மயக்கம், ஒரு புதிய பரிமாணமே வர்ஷினியிடம். ஆம்! அவளுக்கே அவளுக்காய் அவள் பின் சுற்றுபவனாக தான் ஈஸ்வர் அப்போது தெரிந்தான்.   

தனக்காய் இவன் என நெஞ்சம் கர்வம் கொள்ள, பார்வையில் சற்று காதலும் கலக்க.. ஈஸ்வருக்கு இதையும் விட என்ன வேண்டும்!    

அப்படித்தான் என்று சொல்லாமல் ஈஸ்வர் அதை செயலில் காட்ட.. அந்த மணித்துளிகளில் கொல்பவளும் அவளே ஆகிப் போனாள், வெல்பவளும் ஆகிப் போனாள்.  

முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி…          

 

Advertisement