Advertisement

அத்தியாயம் ஐம்பத்தி நான்கு :

ஈருடல் ஓருயிர் அல்ல ஓருடல் ஈருயிர்!

ஒரு வாரம் நாட்கள் எப்படி போனதென்று வர்ஷினியைக் கேட்டால் நிச்சயம் அவளுக்கு தெரியாது. எல்லாம் மறந்த நிலை தான் அவளுக்கு.. மறக்க வைத்திருந்தான் ஈஸ்வர்!

ஆம்! வந்த நாளே அவன் எப்போதும் போகும் விசைப் படகில் கடலில் சிறிது தூரம் அழைத்து போய், “நீ இல்லாத போது இந்த கடல் தான் எனக்கு அமைதி கொடுத்தது.. உன் கண்ணை இதற்குள் தான் தேடினேன்” என்று முகம் பார்த்து, அவளின் கண் பார்த்துச் சொல்ல, அந்த ஏகாந்தத்தில் மயங்கி தான் போனாள்.

அதன் பின் அந்த மயக்கத்தை ஈஸ்வர் தெளிய விடவே இல்லை.. ஊனாகி உயிராகி என்ற நிலை.. அதையும் விட, உண்ட நேரத்தை விட, அவனை உணர வைத்த நேரம் அதிகம்.. அவளை உணர்ந்த நேரம் அதிகம்..

எல்லாம் மறந்த நிலை மட்டுமல்ல! எல்லாம் துறந்த நிலையம் கூட!

வெட்கமும் தயக்கமும் வர்ஷினியிடம் இருந்து விடை பெற்று சென்றிருந்தது.

ஒரு பதின் வயது முடியும் நிலையில் இருக்கும் பெண்ணை வசியப் படுத்தும் கலை நன்கு வந்தது. அவன் வசியப் படுத்தினானா இல்லை தானாகாவே அவனின் செய்கைகள் அவளை வசியம் செய்ததா.. காலம் தான் சொல்லும்.

உண்மையில் ஈஸ்வர் மயக்கவெல்லாம் இல்லை.. தன்னுடைய உணர்வுகளுக்கு வடிகால் தேட.. அதுவும் அவளால் மட்டுமே முடியும் என அறிந்து தேட.. தானாகவே பெண் மனம் அவன் மேல் பித்தானது.  அவன் சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்தாள்.  ஈஸ்வர் வர்ஷினியிடம் தேடியதை விட.. வர்ஷினியை தன்னிடம் தேட வைத்தது அதிகம்.

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே.. வர்ஷினியாகத் தேடினால் வேறு, ஆனால் இவன் தேட வைத்தான் என்பது வேறு. ஈஸ்வருக்கு தான் செய்யும் செயலின் வீரியங்கள் புரியவில்லை.   

அவளின் வயதிற்கு அதிகமான பக்குவங்கள் வர்ஷினிக்கு இருந்தாலும், அந்தப் பக்குவங்கள் எல்லாம் யோசிக்க கூட இயலாத சூழ்நிலையில் இருந்தாள். தானாகவே இத்தனை வருடங்கள் இருந்த தனிமையை அவனுள் மறக்க முயன்று கொண்டிருந்தாள்.

அன்று தான் வந்த நாளாக “வர்ஷ் ஷாப்பிங் போகலாமா?” என்று ஈஸ்வர் கேட்க..

“ஷாப்பிங்கா, என்ன வாங்க?” என்று கேட்ட வர்ஷினியிடம் “ஏதாவது வாங்கலாம் வா.. கொஞ்சம் தூரம் அப்படியே நடந்து போகலாம், சிங்கப்பூர் பார்க்கலாம்” என,

“நடந்தா? என்னால முடியாது! எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு!” என,

“இன்னும் மூணு நாள்ல ஊருக்கு போகணும்.. இப்போவாவது சிங்கப்பூர் பார்ப்போம் வா.. என்ன பார்த்தீங்கன்னு யாரவது கேட்டா சொல்ல ஏதாவது உனக்கு தெரியணும் தானே!” என்று கண்ணடித்தான்.  

“நீங்க என்னை பார்த்தீங்க, நான் உங்களை பார்த்தேன்னு சொல்லிடறேன்” என்று வர்ஷினி பதிலுக்கு வாயடிக்க..

அவளின் பாவனையில் அசடு வழிந்தவன் “அது உண்மையா இருந்தாலும் யார் கிட்டயும் சொல்லக் கூடாது.. வா ரெண்டு ஃபோட்டோவாவது ஒரு ஞாபகத்துக்கு எடுத்துக்கலாம்” என்று வற்புறுத்தி அவளை வெளியே அழைத்துக் கொண்டு போனான்.         

“எனக்கு நடக்க முடியாது!” என்ற போதும் விடவில்லை..

“தினமும் காலையில உன்னை முதல்ல வாக்கிங் போக வைக்கணும்”

“நான் ரொம்ப குண்டா இருக்கேனா?” என்று கவலையாக கேட்க..

“குண்டான்னு இல்லை, ஆனா உடல் உழைப்பு இல்லை” என சொல்லி.. கூடவே “இந்த வாட்டர் பெட் நல்லா தான் இருக்கு” என்று குறும்பு பேச,

“என்ன வாட்டர் பெட்?” என்று புரியாதவளிடம்.. அவளின் உடல் என கண்களால் காட்ட, முறைக்க முயன்று தோற்றாள்.

“வா” என்று அவன் நடக்க “மெதுவா போங்க” என்று அவனுக்கு ஈடு கொடுக்க முயன்றவள்.. “என்ன பண்ணுனீங்க அதை” என்று கேட்க,

புரியாதவன் “எதை?”

“அதுதான் அந்த லம்போகினி”

“அது உனக்காக வெயிட் பண்ணிட்டே இருக்கு. உனக்கு காலேஜ்ல காட்டின அன்னைக்கு நிறுத்தினவன், பின்னே எடுக்கவேயில்லை”

புன்னகைதவள் வேறு ஒன்றும் சொல்லவில்லை.. அந்த புன்னகையில் ஏதோ இருப்பதாக தோன்ற “என்ன?” என்றான்.

“ஒன்னுமில்லையே”

“இல்லை! எதோ இருக்கு சொல்லு!” என்று வற்புறுத்த..

“அன்னைக்கு நீங்க மட்டும் தான் என் பர்த்டே ஞாபகம் வெச்சிருந்தீங்க. எல்லோரும் மறந்துட்டாங்க!” என,

“இட் ஹேப்பன்ஸ்… இது ரொம்ப மெக்கானிக் வேர்ல்ட், எல்லோரும் ஏதாவது டென்ஷன்ல இருந்திருப்பாங்க, மறந்திருப்பாங்க.. அன்னைக்கு உங்க வீட்ல ஒருத்தன் இருக்கானே, அவன் எல்லோரையும் மறக்க வெச்சான்!” என்று பத்துவை சொல்ல..

“அப்படி சொல்ல முடியாது, ரஞ்சனி அண்ணி என்னை பேச ஆரம்பிச்சாங்க…” என்றவள், பின்பு அதை விடுத்து, “உங்களுக்கு ஏன் பத்துண்ணாவை பிடிக்கலை” என்றாள்.

“எனக்கு எங்க பிடிக்கலை? அதுவும் இப்போ ரஞ்சியோட வீட்டுக்காரன்… அதுக்குரிய மரியாதை நான் எப்பவும் கொடுப்பேன்.. என்னவோ அவன் தான் என்கிட்டே முட்டிக்கிட்டே இருக்கான். ஏன்னு தெரியலை? சரியான முட்டாள் அவன்!”  

“என்ன முட்டாள்?” என வர்ஷினி கேட்க..

“பின்னே, கல்யாணமாகி வருஷத்துக்கும் மேல ஆச்சு.. அதுவும் ரஞ்சனி அவளா கல்யாணம் செய்துகிட்டா.. இவன் என்ன பண்றான், அவளுக்கு டிரைவர் வேலை பார்க்கிறதை தவிர.. அதுவும் இப்போ குறைஞ்சிடுச்சு.. பல சமயம் மனசுக்கு அதுதான் கஷ்டமா இருக்கு… அவனை மட்டும் சொல்ல முடியாது, இந்த ரஞ்சனி என்ன பண்றா தெரியலை? அவளே ஏற்படுத்திகிட்ட வாழ்க்கை நல்லா வாழணும்!”

“உனக்கு என்னை பிடிக்குதோ இல்லையோ? ஆனா கல்யாணம் ஆகிடுச்சு. அதை சரி பண்ணிக்கணும், நல்லா வாழணும்ன்னு நீ நினைக்கிற இல்லையா? அந்தப் பக்குவம் ஏன் ரஞ்சனிக்கிட்ட இல்லை!” என 

“தன்னை ஓரளவிற்கு சரியாய் தான் அனுமானித்து இருக்கின்றான்” என ஈஸ்வரை வர்ஷினி பார்த்திருக்க, அதை கவனியாமல் அவன் தொடர்ந்தான். 

“குடும்ப பிரச்சனையில அவ தன்னை பணயம் வெச்சிட்டாளோன்னு.. ஒரு வார்த்தை கூட என்கிட்ட பேசலை.. அதுக்கு முன்ன நானும் அவளும் அவ்வளவு க்ளோஸ்.. எதுன்னாலும் நான் அவ கிட்ட தான் சொல்வேன், அவ என்கிட்டே தான் சொல்வா.. இப்போ பல முறை நானும் சரி செய்ய நினைச்சேன், அவளும் நினைச்சா.. ஆனாலும் எதுவும் சரியாகலை. அந்த க்ளோஸ்நெஸ் வரலை!” என்றான் வருத்தமாக..

“பத்துவும் அவளும் க்ளோசா இருந்தா கூட போதும். அப்படியும் தெரியலை” என்ற போது ஈஸ்வரின் குரலில் அவ்வளவு கணமாக ஒலித்தது.. கூடவே “எல்லாம் இந்த அஸ்வின்னால” என்று சட்டென்று கோபத்தை காட்ட..

“அஸ்வின் என்ன பண்ணினாங்க.. அவங்க பயப்படுதினா அண்ணி ஏன் பயப்படணும். ரஞ்சனி அண்ணி பண்ணினதுக்கு அவங்க எப்படி பொறுப்பாக முடியும். நான் பார்த்திருக்கேன், பொண்ணுங்க கிட்ட மரியாதையா தான் நடந்தாங்க.. நாம பண்றதுக்கு எப்பவும் அடுத்தவங்களை பொறுப்பாக்க கூடாது.. எனக்கு நானே எஜமானன் சொல்றீங்க இல்லையா? அது மாதிரி நம்ம செயல்களுக்கு நாம தான் பொறுப்பு!” என நீளமாக பேசி முடித்தாள்.  

“அம்மாடி என்னை விடவும் நீ பேசற” என்றவன்.. “ஸ்டில் அஸ்வின் ரொம்ப ஆபத்தானவன்” என,

“நான் நம்ம கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணினேன்!” என்றாள் வர்ஷினி.

“எப்போ? எங்கே?” என்றான் அவளை திரும்பிப் பார்த்து கூர்மையாக..

அந்த ஊடுருவும் பார்வை வர்ஷினிக்கு கோபத்தை கொடுக்க.. “ஏன் நான் கூப்பிடக் கூடாதா?” என விறைப்பாக வினவினாள்.

உடனே இறங்கியவன் “நான் எப்போ அப்படி சொன்னேன்!” என்றான் தன்மையாகவே.

“நீங்க கேட்ட விதம் அப்படி தான் இருந்தது!”  

“அது உன்னை கொண்டு இல்லை, அவனை கொண்டு” என,

அப்போதும் அவளின் முகம் சமாதானம் ஆகவில்லை.. “ப்ச், வர்ஷ்! என்ன இது?” என்று சலித்தவன்.. “உனக்கு ஆளுங்களை அடையாளம் கண்டுபிடிக்க தெரியாது” என,

“எனக்கு தெரியும் ஆளுங்களை” என முறுக்கினாள்.

“உனக்கு தெரியாது” என்றான் மீண்டும் ஸ்திரமாக.  

“ஆமாம்! எனக்கு தெரியாது! நிஜம் தான்! உங்களை எனக்கு தெரியலை தானே! எனச் சொல்ல…

“என்ன தெரியலை?” என்றவனின் குரலில் பொறுமை போய் கோபம் ஏற ஆரம்பித்தது.

“நீங்க என்கிட்டே தப்பா நடந்துக்குவீங்கன்னு தெரியலை!” என,

அஸ்வின் பற்றி பேசும் போது வர்ஷினி தன்னை பற்றி பேசியது ஈஸ்வருக்கு அவ்வளவு கோபத்தை கொடுத்தது.

“அவனைப் பத்தி பேசும்போது, நீ என்னை அதுல சேர்ப்பியா. நான் அவ்வளவு தானா உனக்கு” என்றவனின் குரலில் இருந்த தீவிரம் வர்ஷினியை அச்சுறுத்தியது.

“அது.. நான்.. என்னை சொன்னேன்!” என்றாள் சுருதி இறங்கிய தடுமாறிய குரலில்…

“தப்பிக்கூட இந்த தப்பை பண்ணாதே… நீ என்னை என்ன வேணா பண்ணு, திட்டு, அடி, கோபப்படு.. ஆனா அடுத்தவங்களோட கம்பேர் பண்ணாதே.. அடுத்தவங்களை பத்தி பேசும் போது என்னை அதுல கொண்டு வராதே. நான்.. நான் தான்! அது தப்போ! சரியோ!” என அடிக்குரலில் சீற..

“ம்ம்!” என்று தலையாட்டி, “சாரி” என்றாள்.

“சாரி கேட்டா மட்டும் எல்லாம் சரியாகிடாது வர்ஷ்.. பேசும் போது யோசிச்சு பேசு… இப்போ நமக்கு கல்யாணமாகிடுச்சு, ஆனாலும் நான் உன்கிட்ட அப்போ நடந்தது சரியாகிடாது புரிஞ்சதா.. நடந்த தப்பு, தப்பு தான்! அதை சரி பண்ண எல்லாம் முடியாது! ஆனா அதுக்கான தண்டனை வாழ்க்கை முழுசும் குடுக்கணும்னு என்ன? மறந்துடுவோம் அதை! ஏன்னா அந்த தண்டனை எனக்கு நீ குடுக்கும் போது, உனக்கும் சேர்த்து தான் அது!” என்றான் சற்று சோர்வாகவே.

மௌனமாக அதை கிரகித்து நடந்தாள், பதில் பேசவில்லை.. அவனும் பதிலை எதிர்பார்க்கவெல்லாம் இல்லை.. அவனும் நடக்க..

அதற்குள் அவனின் கைபேசி சிணுங்க, எடுத்து யாரென்று பார்த்தால் முரளி..

“சொல்லுடா” என..

“அப்பாக்கு ரொம்ப சீரியஸ்டா.. ஒரு நாள் கூட தாண்டறது கஷ்டம் சொல்றாங்க! நீங்க வந்துடறீங்களா?” என்று நேரடியாக விஷயத்திற்கு வர,

“ஓஹ்” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டவன்.. “நான் டிக்கெட் பார்த்துட்டு கூப்பிடறேன்” என வைத்து உடனே ஏஜென்டிற்கு அழைத்தான்….

 வர்ஷினி அவன் சொன்னதன் தீவிரத்தை புரிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தாள். அதனால் அவன் யாரிடம் ஃபோன் பேசினான்? என்ன பேசினான்? எதையும் கவனிக்கவில்லை.

அவன் ஏஜென்டிடம் பேசி டிக்கெட் கேட்டு கன்ஃபர்ம் செய்தது கூட தெரியவில்லை.

பேசி முடித்தவன்.. “வீட்டுக்கு போகலாம் வர்ஷ்!” என அவளிடம் சொன்ன போது தான் சுற்றம் உணர்ந்தவள், “ஏன் கோபமா?” என,

“கோபமா?” என திரும்பக் கேட்டவன்.. “நான் ஃபோன் பேசினது கவனிக்கலையா?” என,

“இல்லையே!” என்பது போல தலையாட்டியவளிடம்.. “அப்பாக்கு கொஞ்சம் சீரியஸ் போல, வந்தா பரவாயில்லைன்னு முரளி சொன்னான்” என,

“ஓஹ்” என்றாள் ஈஸ்வரை போலவே…

“இன்னும் நமக்கு ரெண்டரை மணி நேரத்துல ஃபிளைட்.. கிளம்பணும்” என..

வீட்டிற்கு வந்து அவசரமாக பேக் செய்து பார்த்தால்.. வர்ஷினி தடுமாறிக் கொண்டிருந்தாள்.. கவனம்.. செய்யும் செயல்களில் இல்லை எனப் புரிந்தவன்..

“விடு! நான் பண்றேன்!” என வேகமாக செய்து.. அவர்கள் விமான நிலையம் வந்த போது.. இன்னும் நேரம் இருக்க.. “நாம இது எதிர்பார்த்தது தானே வர்ஷி” என,

“ம்ம்!” என்பது போல தலையாட்டல் மட்டுமே, பேசவில்லை. திரும்பவும் ஈஸ்வர் சமாதானம் சொல்ல வர.. “அப்புறம் பேசலாமா?” என்று கண்களை மூடிக் கொண்டாள்.

வர்ஷினியின் கைகளை பிடித்துக் கொண்டவன், “ரொம்ப ஸ்ட்ரெஸ் குடுக்காதே! நிறைய யோசிக்காதே!” என்று மட்டும் சொன்னான்.

ஆனால் ஃபிளைட்டின் கால் கேட்கும் வரை, பிடித்த கைகளை மட்டும் விடவில்லை.

இந்தியா வரும் வரையிலுமே வர்ஷினியின் அமைதி நீடித்தது.. இந்த நாட்களாக பார்த்த வர்ஷினியாகத் தெரியவில்லை ஈஸ்வருக்கு.. எதையும் பகிராமல் அவனிடம் இருந்து தள்ளி நிற்பது போன்ற உணர்வு…

உண்மையில் தன்னை பகிர்ந்தவளால் தன்னுடையை உணர்வுகளை பகிர முடியவில்லை.. ஏனென்றால் அது அவளுக்கு பழக்கமில்லை.. ஈஸ்வரிடம் மட்டுமல்ல யாரிடமுமே.. அதனால் ஈஸ்வரிடம் எதுவும் பேசாமல் அமைதியாகவே வந்தாள். 

அவர்கள் வந்த போது மாலை ஏழு மணி.. நேரே ஹாஸ்பிடல் தான் சென்றனர்.. செயற்கை சுவாசத்தின் உதவியுடன் இருந்தார். நினைவு தப்பவில்லை, விழிப்பதும் கண்களை மூடுவதுமாய் இருந்தார்..

ரூமின் உள் அவர் மட்டுமே.. கூட கமலம்மாவும்! ஆனால் வெளியில் எல்லோரும் இருந்தனர்.. தாத்தா, முரளி, பத்து, ரஞ்சனி என, ஷாலினி மட்டுமில்லை.. நிறை மாத கர்ப்பிணி என்பதால் அவளை ஹாஸ்பிடல் அழைத்து வரவில்லை…

ரஞ்சனி இவர்களை பார்த்தும் வர்ஷினியை அழைத்து உள்ளே செல்ல, ஈஸ்வர் வெளியே தேங்கி நின்றான். முரளி அவனின் அருகில் வந்தவன்..

“வர்ஷினியை பார்க்க தான் உயிரை பிடிச்சிட்டு இருக்கார் போல… ரொம்ப கஷ்டப் படறார்” என்று சொல்லும் போது குரல் கமறியது. ஈஸ்வர் எதுவும் பேசாமல் அவனின் புஜங்களை ஆதரவாய் பிடித்தான்.

பத்துவும் அவனருகில் வரவில்லை. ஈஸ்வரும் அவனின் அருகில் செல்லவில்லை. பின்பு முரளியிடம் இருந்து தள்ளி தாத்தாவிடம் போய்  அமர்ந்து கொண்டான்.     

பெற்ற மக்களை தாங்கள் இருக்கும் போதே தூக்கிக் கொடுப்பது என்பது பெரிய சாபம்.. அமைதியாய் அவர் அமர்ந்திருக்க.. ஈஸ்வரும் அவரின் சென்று அமர்ந்து கொண்டான்.

சிறிது நேரத்தில் கதவை திறந்த வந்த ரஞ்சனி.. “நீ போ விஸ்வா, அவர் கண் திறக்கலை. பல்ஸ் ஹார்ட் பீட் எல்லாம் அதிகமா இருக்கு” எனச் சொல்ல.. உள்ளே சென்ற போது வர்ஷினி ராஜாராம் கண் பார்வையில் படும் படி நின்றிருந்தாள். அவரின் கண்கள் மூடி இருக்க..

வர்ஷினியின் கைகளை எடுத்து, அவரின் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்த கை மேல் ஈஸ்வர் வைக்க .. மெதுவாக கண் திறந்தார்..

“அப்பா!” என்ற வர்ஷினியின் குரல் அவளுக்கே கேட்கவில்லை.. ஒரே வாரத்தில் இன்னும் உருக்குலைந்து போயிருந்தார்.

கண்கள் வர்ஷினியை பார்த்ததும் அவளின் மீது தேங்கி நிற்க.. ஈஸ்வர் அவளின் பின்னால் வந்து நின்றான். வர்ஷினியும் அவளுக்கு பின்னால் நின்ற ஈஸ்வரும் ராஜாராமின் அலைபாயும் மனதிற்கு அமைதி கொடுத்தனர். ஈஸ்வரின் கண்களும் அவரிடம் அதை தான் உரைத்தது.. “நானிருக்கிறேன் வர்ஷினிக்கு” என்பது போல.. தானாக கண்களை திரும்ப மூடிக் கொண்டார்.

அதன் பிறகு கண்களை அடுத்த நாள் அவரின் எல்லா இயக்கமும் நிற்கும் வரை திறக்கவேயில்லை. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாகவே அவரை காடு கொண்டு சென்றனர் முரளியும் பத்துவும்.

வர்ஷினியும் தன் தோள் சாய்வாள், தன்னை தேடுவாள் என்று ஈஸ்வர் நினைக்க.. அவனை தேடவே இல்லை.. தனிமையை தான் தேடினாள். அவனாக தேடி சென்றாலும் தனிமையை மட்டுமே விரும்பினாள்.

நன்றாகத் தான் பேசினாள்.. ஆனால் அவளின் துக்கத்தை பகிரவே இல்லை!

ஈஸ்வர் மனதளவில் மிகவும் சோர்ந்து போனான்.. அப்போது திருமணம் ஆனா நாள் முதலாக நான் அவளுக்கு உணர்த்தியது என்ன? ஏன் என்னை தேடவில்லை? ஏன் என்னுடன் எதையும் பகிரவில்லை?

துக்கத்தை அடக்கியபடி கலங்கிய முகத்தோடு தான் அமர்ந்திருந்தாள். எந்த நேரமும் அழுதுவிடும் பாவனை தான் ஆனால் அழவில்லை.

ஈஸ்வருக்கு நன்கு புரிந்தது, அவள் தனிமையில் நிறைய அழுதிருக்கின்றாள், ஆயினும் யார் முன்னிலையிலும் அழவில்லை என. யார் முன்னிலையில் அழுதால் என்ன அழாவிட்டால் என்ன .. தன் முன் கூட அழவில்லை?

அப்போது உடளவில் மட்டும் தான் நெருக்கமா? மனதளவில் இல்லையா? இந்த திருமணம் என் மூலம் அதை மட்டும் தான் அவளுக்கு கொடுத்திருக்கின்றதா?

ஆனால் நான் திருமணம் முடிந்த பின்னும்.. இன்னும் அவளை தான் பார்க்கிறேன்! அவளை மட்டும் தான் தேடுகின்றேன்! கண்டிப்பாக உடல் ஈர்ப்பு மட்டும் கிடையாது எனத் தெளிவாக புரிய, “எனக்கு அவளை பிடித்திருக்கின்றது, மிகவும் பிடித்திருக்கின்றது.. எஸ், ஐ லவ் ஹெர் எ லாட்” என தனக்குள் சொல்லிக் கொண்டான்.  

“அவளுக்கு அப்படி இருக்கின்றதா இல்லையா?” என்று யோசனைகள் மேலிட அவளை பார்த்திருந்தான்.   

சிதைத்தாயா நீ? சிதைந்தாயா நீ? சிதைய வைப்பதும் நீயே! சிதைந்ததும் நீயே! சிதைத்ததும் நீயே!

 

Advertisement