Advertisement

அத்தியாயம் ஐம்பத்து மூன்று :

காற்று நுழைவதை போல் உயிர் கலந்து களித்திருந்தேன்!

அயர்வுடன் கண்மூடி சாய்ந்திருந்த வர்ஷினியை பார்த்திருந்தான். ஃப்ளைட்டில் அவனின் அருகில் அமர்ந்து இருந்தாள். ஆனால் உறங்கவில்லை என புரிந்தது.

“தூங்கு வர்ஷி” என..

கண்களை திறக்காமலேயே “தூக்கம் வரலை” என்றாள். அவள் உறங்கவேயில்லை என்று புரிந்து தான் இருந்தான். ஈஸ்வரின் மனதில் அலைபுருதல்கள் எல்லாம் நீங்கி ஒரு அமைதி வந்திருந்தது.

பின்னிரவு முடிந்த நேரம் ஈஸ்வர் வர்ஷினியை விட்டு முயன்று விலகி, “உனக்கு எதுவும் தொந்தரவா இல்லையே! நான் உன்னை கஷ்டப்படுத்தலையே” என கேட்க..

ஈஸ்வரின் முகத்தில் தெரிந்த தவிப்பில் “இல்லை! இல்லவே இல்லை!” என்று வர்ஷினி ஸ்திரமாக பதில் சொன்னாள்.  அதன் பிறகே நிம்மதியானான். பின்னே இப்பொழுது வேண்டாம் என மனதை அவ்வளவு குழப்பி, பின்பு அவனையும் மீறி செய்கைகள் இருக்க.. அதுவே அவனின் தவிப்பிற்கு காரணம். 

பல தேடல்கள் வர்ஷினியிடம் இருந்த போதும், திருமணமாகி விட்ட போதும், ஏதாவது தப்பு செய்கிறோமோ, இன்னும் பொறுத்திருக்க வேண்டுமோ என்ற எண்ணம் ஒரு மூலையில் ஓடிக் கொண்டு தான் இருந்தது.

முழுமையாக அவனால் அனுபவிக்க முடியவில்லை… ஆனாலும் மனதில் ஒரு அமைதி மீண்டிருந்தது. பின் அவன் உறங்கிவிட..

வர்ஷினிக்கு உறக்கம் என்பதே இல்லை, அது வரவேயில்லை.. உறங்கும் ஈஸ்வரை பார்த்தே விழித்துக் கிடந்தாள். “அப்பா சொன்னதற்காக திருமணம் செய்தாலும், அதனை கொண்டு அவனோடு நீ இணக்கமாக நடக்க முற்பட்டாலும்.. இது அல்ல உன் வாழ்க்கை. அவனை காதலிக்க கற்றுக் கொள்!” என நினைத்து விடியும் வரை அவனையே பார்த்திருந்தாள்.

“வருமா எனக்கு இவன் மீது காதல் வருமா?” என யோசித்த படியே.. “உண்மையில் ஒரு ஈர்ப்பு இல்லாவிட்டால் இவனின் அத்தனை பெரிய தவறை யாரிடமும் சொல்லாமல் மறைத்திருப்பாயா? அல்லது திருமணம் செய்ய ஒப்புக் கொண்டிருப்பாயா? அல்லது இப்போது நீ அவனுடன் இழைந்திருப்பாயா?”

ஆம்! இழைந்து தான் இருந்தாள், அவனில் கரைந்து தான் இருந்தாள். அதுவே அவளின் உறக்கமின்மைக்கு காரணம்.

ஈஸ்வர் தான் முழுமையாக அனுபவிக்கவில்லை. ஆனால் வர்ஷினி அனுபவித்தாள். அவனின் ஒவ்வொரு செய்கையும், வாய்மொழியின் பிதற்றல்களையும். அவளை அடித்துச் சென்ற அலை அவளுக்கு மிகவும் இஷ்டமாகத் தான் போய்விட்டது.

மனதிலும் ஒரு பரவசம்! உடலிலும் ஒரு பரவசம்! எப்படி எனக்குள் இப்படி என்ற யோசனைகளும் கூட. அதனாலேயே  உறக்கம் கிஞ்சித்தும் அணுகவில்லை.         

அதிகாலையிலேயே எழுந்து குளித்து வெளியே வந்தாள். தாத்தா எழுந்து ஹாலில் அமர்ந்திருக்க.. வேலை செய்பவர் அவருக்கு காஃபி கொடுத்துக் கொண்டிருந்தார்.

நேரம் காலை ஆறு கூட ஆகவில்லை.. அதற்குள் குளித்து ஒரு சுரிதாரில் கீழே வந்தவளை வியப்போடு பார்த்தவர்..

“போ! போய் கையோட சாமி ரூம்ல விளக்கேதிட்டு வந்து உட்காரு!” என்றார்.

“என்னிடமா பேசினார்?” என வியப்பாக பார்த்தவள், ஆனாலும் நிற்காமல் அவர் சொன்னதை செய்தாள். கடவுளிடம் வணங்கி வந்தவள், தாத்தாவின் எதிர்புறத்தில் அமர..

“இங்கே வந்து உட்காரு!” என்று அருகில் அழைக்க.. அமர்ந்தவளிடம்.. “நாம அதிகம் பேசினதில்லை.. ஆனாலும் சில உண்மைகளை உள்ள படி பேச விரும்பறேன், பேசட்டுமா?” என,

“பேசுங்க!” என்பதாக ஒரு தலையசைப்பு அவளிடம்… அதில் இருந்த ஆளுமை அவருக்கு நன்கு தெரிந்தது. இதனால் தான் ஈஸ்வர் இவளை பிடிவாதமாக மணந்தானோ என தோன்றியது.   

சற்று யோசித்த போதும் வெகு நாட்களாக அவளிடம் பேச வேண்டும் என நினைத்தது தான். ஆனால் திருமணம் முடியாமல் பேச வேண்டாம் என இருந்தார். இப்போது பேசினார், “உன் பிறப்பு எப்படியோ.. உன் வளர்ப்பு சிறப்பா இருந்தது.. அதையும் விட உன் கல்யாணம் இன்னும் சிறப்பா அமைஞ்சிருக்கு.. நம்ம கிட்ட நிறைய பணம் இருக்கலாம், ஆனா அவங்க குடும்ப பாரம்பர்யம் வேற.. ரொம்ப பெரிய ஆளுங்க.. அப்படி ஒரு குடும்பத்துல உன்னை கடவுள் நுழைச்சிருக்கார்.. அதை சிறப்பா அமைச்சிக்கோ.. உன்னோட அப்பாவோட அம்மாவோட நிழல் எதுலயும் வேண்டாம்” என்றார்.

அவளின் முகம் மாறுவதைக் கண்டு, “தப்பான அர்த்தத்தில எடுக்காதே.. எவ்வளவோ சொன்னேன் உன்னோட அப்பா கேட்கலை.. நான் இன்னும் நல்லா இருக்கேன், ஆனா அவன் இப்போ இப்படி இந்த வயசுலயே போறான்.. சொத்துக்களும் எல்லாம் பிரிச்சிட்டான்.. உனக்கு நிறைய குடுத்திருக்கான்.. எல்லாம் எடுத்துக்கோ! ஆனா என் பேரனுங்க எங்கயும் எதுலயும் யாருக்கும் கீழ போயிடக் கூடாது”

“அவனோட நிழல்லயே இருந்து பழகிட்டாங்க! தனிச்சு நிற்கணும், வளரணும்! அதுக்கு எந்த பாதிப்பும் வந்துடக் கூடாது!” என நிறுத்த..  

“இதை நீங்க ஏன் என்கிட்டே சொல்றீங்க! அப்பா கிட்ட சொல்லலாமே!”

“சொல்லலாம் தான்! ஆனா அதுக்குள்ள அவனுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. அவனோட உடல் கஷ்டங்களே அதிகம் அதுல மனசு கஷ்டமும் நான் கொடுக்க விரும்பலை.. எல்லாம் உன்னோட ராசின்னு அவனோட நினைப்பு.. நேரம் ஒருத்தருக்கு நல்லா இருந்தா எப்படியும் எல்லாம் வந்து சேரும்!” என்றார்.

அவர் சொல்ல வருவது வர்ஷினிக்கு நன்றாக புரிந்தது, “நீ இப்போது நல்ல இடத்தில வாழ்க்கை பட்டு விட்டாய். எவ்வளவு சொத்து வேண்டுமானாலும் எடுத்துக் கொள், ஆனால் என் வீட்டின் அடையாளம் என் பேரன்களாக தான் இருக்க வேண்டும்” என்று உரைக்கிறார் என புரிந்தது. அதில் தவறாக ஒன்றும் அவளுக்கு தெரியவில்லை.   

திரும்பவும் “இப்ப இதை என்கிட்டே ஏன் பேசறீங்க?” என,  

“நீ உன் வீட்டுக்குப் போயிடுவ.. திரும்ப நீ தனியா கிடைப்பியோ? என்னவோ? அதுதான் சொல்லணும் தோணிச்சு சொல்லிட்டேன்!” என்றார். கூடவே ஒரு கவலையும் கூட, “நான் பேசியதை வைத்து ஏதும் பிரச்சனையோ கலாட்டாவோ செய்து விடுவாளோ” என..

ஆனால் மிக தெளிவாக வர்ஷினி, “எனக்கு அப்பா நிறைய சொத்து கொடுத்திருந்தாலும், இதுவரைக்கும் இது அப்பாவோட சொத்து தான், இங்க அடையாளமும் அப்பா தான். அதனால் உங்களுக்கு பயம் வேண்டாம்! அப்பாக்கு அப்புறம் அண்ணாங்க தான் இருப்பாங்க!”

“அதுக்காக எனக்கு குடுத்தது திருப்பி எல்லாம் குடுக்க மாட்டேன், என்னோட பேர் வெளில தெரியணும்னு அவசியமில்லை. அண்ணாங்க தான் முன்ன நிற்பாங்க! சரியா?” என சொல்லி அவரை பார்த்தாள்.

பேசிய விதத்திலும், பார்வையின் தீட்சன்யதிலும் அசந்தவர், “என் மகனோட புத்திசாலித்தனம் எல்லாம் இவளுக்கு தான் வந்திருக்கு போல” என நினைத்தவர்..

“திரும்பவும் சொல்றேன், உனக்கு இனி ஈஸ்வரோட அடையாளம் இருக்கு, இங்க முரளியும் பத்துவும் தான் இருக்கணும்!” என..

“அதுல உங்களுக்கு எந்த பயமும் வேண்டாம் தாத்தா! கம்பனி அடையாளத்தில அவங்க தான் முன்ன நிற்பாங்க. ஆனா அதுக்காக சொத்து எல்லாம் கண்டிப்பா நான் திரும்ப குடுக்க மாட்டேன்!” என சொல்ல,

“எனக்கு அது போதும்” என்று விட்டார்.

அப்போதுதான் கமலம்மா எழுந்து வந்தவர்…. “வர்ஷினி எழுந்திட்டியா” என்றவர், “அப்பா இப்போ தான் சொன்னார் வர்ஷினி எழுந்ததும் என்னை பார்க்கச் சொல்லுன்னு, பார்க்கறியா?” எனக் கேட்க..

“ம்ம்ம் மா!” என்று சொல்லி ராஜாராமிடம் பேசச் செல்ல.. அங்கே கிட்ட தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் ராஜாராம் பேசிக் கொண்டிருந்தார்.

அதற்குள் வீடு விழித்து விட.. வெளியே வந்த வர்ஷினியிடம்.. “எங்கே ஈஸ்வர்?” என முரளி கேட்க…

உறங்குகின்றான் என சொல்ல மனமின்றி.. “குளிக்க போனாங்க அண்ணா, நான் பார்த்துட்டு வர்றேன்!” என மேலே சென்றவள்,

அவனை எழுப்பி “எட்டு மணி ஆச்சு எல்லோரும் கேட்கறாங்க! நீங்க குளிக்கறீங்க சொல்லியிருக்கேன், சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க!” என சொல்ல, அவளின் முகத்தை தீவிரமாக ஆராய்ந்தான். முகத்தில் இருந்து ஒன்றும் தெரியவில்லை. குறிப்பாக அந்தக் கண்களில் ஒரு வித்தியாசமும் இல்லை.

ஈஸ்வருக்கு ஒரு மாதிரி தான் ஆனது.. ஒரு வெட்கமும் இல்லை, கோபமும் இல்லை, எந்த உணர்வுகளும் இல்லை..

ஈஸ்வருக்கு தெரியாதே, இரவு முழுவதும் அவனைப் பார்த்தபடி விழித்திருந்தாள் என.. காலையில் தன் தாத்தாவுடன் பேசியிருகின்றாள், அப்பாவுடன் பேசியிருகின்றாள், அவனை நினைக்க முடியாதபடி வர்ஷியின் உள் வேறு சில எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருக்கின்றது என எப்படி தெரியும்.

அட இதுவரை தான் அவளை பாதிக்கவில்லை, நேற்று இரவின் தாக்கம் கூட இல்லையா என யோசித்தபடி எழுந்தான்.

அவன் எழுந்த போதே இன்று அவளாகவே சென்று.. டவல் எடுத்து தர.. முகத்தில் சிறு புன்னகை மலர்ந்தது. “எப்போ எழுந்த?” எனக் கேட்க,

“தூங்கவேயில்லை! காலையில சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டேன்!”

“ஏன்? ஏன் தூங்கலை?” என்றான் பதட்டமாக.

“தெரியலை” என்றவளிடம்,

“உன்னை எதுக்கும் கட்டாயப்படுத்திட்டேனா?” என,

“எதுக்கு?” என்றாள் புரியாமல்,

என்னவென்று சொல்வான்.. “அது.. நைட்..” என இழுக்க,

“இல்லையில்லை” என்றவளின் முகத்தில் சிறு வெட்கத்தின் சாயல் கூட..  

அவளை அணைத்தவன், “தேங்க் யு, தேங்க் யு வெரி மச்” என்று நெற்றியில் முத்தமிட,

“எதுக்கு?” என்றவளிடம்..

“அட்லாஸ்ட் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு ரொம்ப நாளைக்கு பிறகு என்னோட காலை நேரம் சந்தோஷமா விடிஞ்சிருக்கு” என்று குளிக்க போக..

அவனை ஒரு புன்னகையோடே பார்த்திருந்தாள். அவனின் இந்த பேச்சில் தாத்தாவிடமும் அப்பாவிடமும் பேசிய மன இறுக்கம் குறைந்து இருந்தது.

 

 

          அமைதியாக ஈஸ்வர் வரும் வரை அமர்ந்திருந்தாள்.. தனக்கு சந்தோஷமா எனத் தெரியவில்லை. ஆனால் ஈஸ்வரின் மகிழ்ச்சி தானாக வர்ஷினியை இலகுவாக்கியது.

ஈஸ்வர் வரவும்.. தயாராகும் அவனையே பார்த்திருக்க.. வர்ஷினியின் பார்வையை பார்த்தவன்.. “இப்படி எல்லாம் என்னையே பார்த்த.. அவ்வளவு தான் நான்! என்னால ஒரு வேலையும் செய்ய முடியாது.. திரும்ப எப்படி கீழ போவோம்” என..

“ஓகே பார்க்கலை!” என்று முறுவலோடு அவள் வேறு புறம் திரும்ப, வேகமாக தயாரானவன் “போகலாமா!” என,

கீழே இருவரும் இறங்கும் போது அவர்களை தான் பார்த்திருந்தால் ரஞ்சனி.. ஈஸ்வரின் முகத்தில் இருந்த ஒரு பொலிவு.. எப்படி எந்த உறுத்தலுமின்றி இவனால் இவ்வளவு மகிழ்வாக இருக்க முடிகின்றது என்று தான் தோன்றியது.

வர்ஷினியை கவனித்தால், அந்த முகத்தில் ஒரு ஆழ்ந்த அமைதி.. அதீத உற்சாகம் மகிழ்ச்சி இது போல எதுவும் தெரியாவிட்டாலும் முகத்தில் புது மணப்பெண்ணிற்கான களை நன்கு தெரிந்தது.

“நடந்ததை விடு! இனி இவனாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும்!” என மனதை தேற்றி.. ஈஸ்வரிடம் சகஜமாக பேசத் துவங்க…

பின்பு காலை விருந்து அங்கே, மதியம் ஈஸ்வரின் வீட்டில்.. இதோ இப்போது ஃப்ளைட்டில் இருவரும் அமர்ந்து இருந்தனர்.

என்னவோ ஒரே நாளில் தான் மிகவும் பெரிய பெண்ணாகிவிட்டது போல ஒரு உணர்வு வர்ஷினிக்கு.. தாத்தாவும் அப்பாவும் பேசியதை அசை போட்டபடி கண்மூடி இருந்தாள்.

“ஏன் தூக்கம் வரலை! கண்டிப்பா தூக்கம் தேவை! தூங்கு!”  

“வந்தா தூங்க மாட்டேனா? வரலை!” என்று கண் திறந்து அவனைப் பார்த்து பேச..

“அப்படி என்ன டிஸ்டர்ப் பண்ணுது?”

“காலையில குளிச்சிட்டு கீழ வந்தேனா.. தாத்தா பேச பிடிச்சிட்டாங்க, அப்புறம் அப்பா கிட்ட அதை சொன்னேனா அப்பா பிடிச்சிக்கிட்டாங்க, அதெல்லாம் என்னவோ டிஸ்டர்ப்டா இருக்கு!” என்றாள் மனதை மறையாமல்.

“என்ன பேசினார் உன் தாத்தா?”

“எனக்கு உங்க அடையாளம் இருக்காம், இனிமே அதனால அவங்க வீட்டு அடையாளம் அவங்க பேரனுங்களுக்கு தானாம். நான் அதுல தலையிடக் கூடாதாம்!”  

“அவங்க வீட்டு அடையாளம் அவங்க பசங்களுக்கு தான், இதுல என்ன?” என்று புரியாமல் ஈஸ்வர் கேட்க..

“அது அப்படி இல்லை, நான் பாதி ஷேர் ஹோல்டர். பாக்கி பாதி முரளிண்ணாவும் பத்துண்ணாவும். சோ! நான் அவங்களை டாமினேட் செஞ்சு, நான் தான் அதோட ஒனர்ன்னு காட்டக் கூடாது நினைக்கறாங்க!” என,

மனிதர்களை புரிந்து கொள்ளும் அவளின் தன்மை வியக்க வைத்தது, “நீ என்ன சொன்ன?” என,

“கண்டிப்பா நான் எதுலயும் முன்னே வரமாட்டேன். ஆனா அதுக்காக அப்பா கொடுத்தது எல்லாம் திருப்பிக் கொடுக்க மாட்டேன். அது என்னோடது தான்னு சொல்லிட்டேன்!”

“அவங்களுக்கு சொத்து முக்கியம்னா, குடுத்துடு! நாம இதை விட சம்பாதிப்போம்! எனக்கு நம்பிக்கை இருக்கு!”  

“அது எங்கப்பா எனக்கு குடுத்தது! நான் ஏன் குடுக்கணும்? நாம சம்பாதிக்கலாம் நீங்க சொல்றீங்க தானே, அந்த மாதிரி அவங்க சம்பாதிக்கட்டும்.. நீங்க உணர்ச்சிவசப்பட்டு எல்லாம் தூக்கி குடுப்பீங்க, ஆனா அப்படி என்னால செய்ய முடியாது”

“பாசம் வேற! மரியாதை வேற! இங்க வீட்ல எல்லோருக்கும் என் மீது பாசம் இருந்தாலும், என்னோட மரியாதை நானும் அங்க அந்த பிசினெஸ்ல இருக்கேன்னு தான். அதை என்னால இழக்க முடியாது. அண்ட் அது என் பேர்ல ஆரம்பிச்சது தானே, நான் ஏன் கொடுக்கணும்?” என்றவள் அவனின் முகத்தை ஆராய்ந்தாள்.

ஈஸ்வர் எதுவும் பேசாமல் அவளை பார்த்திருந்தான்.. பிரச்சனைகளை எப்படி அணுகுகின்றாள் என.. “ஆம்! முதல் நாள் என்னை கண்களில் ஆர்வத்தோடு பார்த்தாலும், நான் பேசிய பேச்சில் போடா என்பதாக தானே அவளின் நடவடிக்கை இருந்தது!” என யோசித்தபடி பார்த்திருந்தான்.  

“நான் பணம் பின்னாடி போறேன்னு நீங்க நினைக்கறீங்களா?” என கேட்க,

“ச்சே சே!” என அவன் சொல்ல..

“இது என்னோட உரிமை! உங்களுக்கு புரியுதா?” என கண்களில் கலவரத்தோடு கேட்க..

“அச்சோ! நான் இருக்கும் போது உன் கண்ல இந்த பாவனை வரக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்றது.. உனக்கு தான் புரியலை!” என ஈஸ்வர் கோபப்பட்டவன்..

“ஹனி மூன்னு நான் கூட்டிட்டு வந்தா, எத்தனை பிரச்சனையை பேசி அனுப்பியிருக்காங்க உங்க வீட்ல!” என அவளை முறைக்க..

“ஹனி மூன் நமக்கு தான்! அவங்க, அவங்க விஷயம் பேசறாங்க, தாத்தாக்கு பயம்!” என,

“இந்த விஷயம் எல்லாம் யாரும் எதுவும் பண்ண முடியாது.. அவங்க அவங்க வாழ்க்கைக்கு, அவங்க அவங்க தான் பொறுப்பு!” என்றான்.  

“அப்போ எனக்கு நான் பொறுப்பு சொல்றீங்களா? நான் சங்கீத வர்ஷினி விஷ்வேஷ்வரன் சொன்னீங்க?” என சற்று கிண்டலாக கேட்டாள்.

“கண்டிப்பா நீ சங்கீத வர்ஷினி விஷ்வேஷ்வரன் தான்.. உன் பேரோட இருக்குற விஷ்வேஷ்வரன்க்கு நான் எவ்வளவு பொறுப்போ, அது மாதிரி என் பேரோட இருக்குற சங்கீத வர்ஷினிக்கு நீ பொறுப்பு. உன்னோட நன்மை தீமை என்னோட அதே மாதிரி என்னோட நன்மை தீமை உன்னோட இனிமே..” என மிகவும் சீரியசாக சொல்லி நிறுத்தியவன்,

“இது இப்படி இருந்தாலும், ஒரு வார்த்தை ரொம்ப உண்மை! உனக்கு நீயே எஜமானன்! உன்னோடது எப்போவும் உன் கூட தான் இருக்கும், யாராலையும் மாற்ற முடியாது! அவங்கவங்களுக்குன்னு இருக்குறது தான் அவங்களுக்கு!”

“அதனால தான் ஈஸ்வர் ஃபைனான்ஸ் என்னோடது! என்னோட அடையாளம்னுன்னு கர்வத்தோட சுத்திட்டு இருந்த என்னால அதை ஈசியா தூக்கி குடுக்க முடிஞ்சது. நான் என்னோட அடையாளத்தை உருவாக்கிக்கறேன்னு என் மனசை கொண்டு வர முடிஞ்சது.. அதை செய்யவும் செய்வேன்!” என்ற அவனது பேச்சில் மீண்டும் அதீத கர்வம்.

“ஐயோ! இவனும் இவனின் கர்வமும் ஒட்டிப் பிறந்த இரட்டைகளோ?” என தான் வர்ஷினிக்கு தோன்றியது. 

“ம்ம்ம் அப்புறம்…” என்று அவள் இழுக்க..

கிண்டல் செய்கிறாள் என்று புரிந்த போதும், சற்றும் கோபம் வரவில்லை.. “ம்ம்ம் அப்புறம்,  இந்த என்னோட மாற்றங்கள் உன்னை பார்த்த பிறகு தான் வந்தது” என்று இன்னும் சீரியசாக  சொல்ல..

கைகளை இரண்டு கன்னத்திலும் கொடுத்தவள்.. கவலையாக, “அச்சச்சோ நீயே உனக்கு எஜமானனா, சாமியார் மார்கள் தத்துவம் பேசற மாதிரி இருக்கு, இதுக்கா நாம போறோம்! நாம ஹனிமூன் போறோம்னு இப்போ தான் சொன்னீங்க!” என கொஞ்சல் மொழி பேச,     

“ஹ, ஹ” என வாய்விட்டு சிரித்தவன்.. “நாம அப்போ சிங்கப்பூர் போகலையா?” என பாவனையாக கேட்க..  

“தோடா! சிங்கப்பூரா போறோம்! ஓகே ஃபைன், சிங்கப்பூர் மட்டும் தான் போறோம்! ஹனி மூன் போகலை!” என்று இன்னும் பாவனையாக சொல்ல..

“அய்யயோ என்ன இது?” என்று பரிதாபமாக ஈஸ்வர் விழிக்க.. 

“ஹ, ஹ” என்று கலகலவென்று சிரித்தாள் வர்ஷினி.

அவளை தோளோடு அணைத்துப் பிடித்தவன்.. “வாழ்க்கை இன்னும் எங்கயோ இருக்கு, இப்போ அதை அனுபவிக்க மட்டும் செய். எந்த கவலையும் வேண்டாம். எல்லாம் நான் பார்த்துக்கறேன்..”

“கொஞ்சம் வருஷம் போன பிறகு, நம்ம பசங்க ஸ்கூல் போக ஆரம்பிச்ச பிறகு, ராஜாராம் அடையாளமும் வேண்டாம், ஈஸ்வர் அடையாளமும் வேண்டாம், நீ உன்னோட அடையாளத்தை உருவாக்கிக்கோ.. நான் எப்பவும் உன் கூட இருப்பேன்!” என ஆத்மார்த்தமாக சொல்ல,  

ஈஸ்வரின் இந்த பேச்சினில், “நீ உன்னுடைய வாழ்க்கையை இவனுடன் இணைத்துக் கொண்டதில் எந்த தவறும் இல்லை. ஏதோ இருக்கின்றது இவனிடம். நான் தான் எல்லாம் என்ற கர்வம் இருந்த போதும், அடுத்தவர்கள் எனக்கு மேல் செல்லக் கூடாது என்ற எண்ணம் எல்லாம் இல்லை!” என்று வர்ஷினியின் மனம் சொல்ல, திரும்பி அவனை விழிஎடுக்காமல் பார்த்தாள்.  

ஆனாலும் மனதில் ஓடுவதை காட்டிக் கொள்ளாமல் “அது என்ன குழந்தை பிறந்த பிறகு?” என..

“அதுவரைக்கும் எனக்கு டைம் வேணும்.. என்னோட அடையாளத்தை உருவாக்க.. அண்ட் அதுவரை நீ எனக்கு ரொம்ப வேணும், எல்லா நிமிஷமும், எல்லா நொடியும்.. அப்போ தான் என்னால அந்த அடையாளத்தை உருவாக்க முடியும்!” என தோளோடு இறுக்கி பிடிக்க..

திரும்பவும் ஈஸ்வரை பார்த்தாள்.. அந்தப் பார்வையில் “என்ன? என்னை பைத்தியம்னு நினைக்கறியா?” என..

“ஷ் பா, யு ஆர் ப்ரில்லியன்ட், எப்படி கண்டுபிடிச்சீங்க?” என சிரித்தாள்.

“அதுதான் நேத்து நைட் முழுசும், நான் எவ்வளவு பைத்தியம் உன் மேலன்னு காட்டிக் கொடுத்தேனே, அப்புறம் எப்படி உனக்கு தெரியாம இருக்கும்!” என ஈஸ்வர் சிரிக்காமல் ரசனையோடு கேட்ட பாவனையில், வர்ஷினியின் முகத்தில் பெரிதாக ஒரு புன்னகை மலர்ந்தது.

“ஆமாம்ன்னு சொன்னா, இப்போதைக்கு தப்பிப்ப! இல்லைன்னு சொன்னா இப்போவே காமிப்பேன்!” என மிரட்ட,

“இல்லைன்னு சொல்ல ஆசையா தான் இருக்கு! ஆனா இது ஃபிளைட் அதனால இப்போதைக்கு ஆமாம் மட்டும் சொல்றேன்!” என்று ஈஸ்வரின் முகம் பார்த்து ரசித்து சொல்ல..

வர்ஷினியின் பேச்சினை ஈஸ்வரின் ஒவ்வொரு அணுவும் ரசித்தது! அனுபவித்தது! இறுக்கிய அணைப்பை லேசாக்கியவன்.. நன்றாக பின்னால் சாய்ந்து, அவளின் தளிர் கை விரல்களை எடுத்து, தன் உதடுகளின் மேல் வைத்து கண் மூடிக் கொண்டு முத்தமிட..

ஈஸ்வரின் எந்த செய்கையையும் விட அது ஒரு ஆத்மார்த்தமான சிலிர்ப்பை கொடுக்க, அது வர்ஷினியின் உயிர் வரை தீண்டியது. அவளும் கண்மூடி சுகமாக உறங்க ஆரம்பித்தாள். 

பழகும் போது குமரியாகி

என்னை வெல்வாய் பெண்ணே!

படுக்கையறையில் குழந்தையாகி

என்னை கொள்வாய் கண்ணே!

 

 

Advertisement