Advertisement

அத்தியாயம் ஐம்பத்தி ஒன்று :

 

நாடகம் முடிந்த பின்னாலும்,
நடிப்பின்னும் தொடர்வது என்ன,
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே,
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே,

இறங்கி வந்தவனின் முகத்தை சிறிது நேரம் விடாது பார்த்தவளுக்கு தன்னிடம் பேசியது வேறு எவனோ என்ற தோற்றம் தான் தோன்றியது. அவனின் முகம் இறுகி ஒரு கம்பீரம் மீண்டு இருந்தது.

மீண்டும் சடங்குகள், சம்ப்ரதாயங்கள், பேச்சுக்கள் என்று நேரம் ஓடியது. வர்ஷினியின் மனது முழுவதும் ஈஸ்வரை பற்றிய சிந்தனைகளே, “என்னிடம் கெஞ்சி நிற்கின்றானா இவன், முன்பும் பணிந்து பேசியிருகின்றான் தான், ஆனால் அது வேறு இது வேறு அல்லவா?” என ஓடியது.

திருமணம் முடிந்து விட்டது.. அது மனதில் பதிந்து விட்டது.. இனி ஈஸ்வர் தன் வாழ்வில் முக்கியமானவன் எனத் தெரியும். ஆனால் கணவன் உணர்வு அது பதிந்து விட்டதா தெரியவில்லை. அதன் முக்கியத்துவம் தெரியுமா தெரியவில்லை. நிறைய உறவுகளுக்கு மத்தியில் வளரவில்லை. நிறைய உறவுகளை பார்க்கவும் இல்லை. அதன் முக்கியத்துவங்கள் அதனால் அதிகம் தெரிவது கடினமே. அப்பா என்ற உறவை மட்டுமே அதிகம் அறிந்தவள், பின்பு அம்மா, அண்ணா, தாத்தாவாகிப் போனர். 

உறவுகளை தெரியாவிட்டாலும் மனிதர்களை தெரியும். அதற்குரிய மரியாதை கொடுக்கத் தெரியும். அதன் உணர்வுகளை மதிக்கத் தெரியும். அதன் பொருட்டே ஈஸ்வரிடம் அந்த பிரதிபலிப்பு. அவனின் உணர்வுகளுக்கு கொடுத்த மதிப்பு.     

நிறைய உறவுகள் இப்போது அவளை சுற்றி அமர்ந்திருக்க, யாரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். ஈஸ்வர் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் யாரிடம் பேசிக் கொண்டு இருந்தாலும் பார்வை அவ்வப்போது வர்ஷினியைத் தழுவி மீண்டது.

அதனால் வர்ஷினி அவனை யோசனையாகப் பார்ப்பதும் தெரிந்தது. “ரொம்ப உளறிட்டேனோ?” என்று மனம் நினைக்க ஆரம்பித்தது.

அதற்குள் பெண்ணின் வீட்டில் இருந்து அவர்களை அழைத்துப் போவதற்காக ரஞ்சனியும் பத்துவும் வந்தனர். திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீடு தான் போக வேண்டும் அது தான் எங்களின் பழக்கம் என்று அவர்கள் சொல்ல, இங்கே பெண்ணின் வீட்டில் எங்கள் வீட்டிற்கு தான் வரவேண்டும் அது எங்கள் பழக்கம் என்று சொல்ல..

ஒரு வழியாக முதலில் மாப்பிள்ளை வீடு போய் பின் பெண்ணின் வீட்டிற்கு செல்வது. அங்கே ஒரு நாள் இருந்து விட்டு பின் மறுநாள் ஈஸ்வர் வீட்டிற்கு வந்து விடுவது என்று முடிவாக, அதன் பொருட்டே இப்போது ரஞ்சனியும் பத்துவும் வந்திருந்தனர்.

“போகலாமா?” என்று வந்ததும் பத்து கேட்க…

“இது என் வீடு, கொஞ்சம் நேரம் இருந்துட்டு தான் வருவேன்” என்று ரஞ்சனி முறைக்க, வெகு நாட்களுக்கு பிறகு சண்டையிடவாவது உரிமையாகப் பேசுகின்றாள் என தோன்ற, பத்து அமைதியாகிவிட்டான்.

அருகில் வந்த ரூபா, “ரஞ்சி, என்ன இது? எங்க மாப்பிள்ளை சாரை நீ மிரட்டிட்டு இருக்க” என்று பத்துவிற்கு பரிந்து வர,

“பின்ன வந்த உடனே போகலாமா கேட்கறாங்க?” 

“விடு, விடு, அவங்க அப்படிக் கேட்கறதால நாம் போயிடுவோமா என்ன? அதுக்காக எல்லாம் நீ மாப்பிள்ளை சாரை மிரட்டக் கூடாது” என்று சொல்லி சூழலை சற்று கலகலப்பாக்கி,

“உனக்கு தெரியுமா. இன்னைக்கு ஐஷ் ஃபோன் பண்ணினா ஈஸ்வர் கல்யாணத்துக்கு விஷ் பண்ண” என,

“என்ன? ஐஷ், ஈஸ்வர்கிட்ட பேசினாளா?” என்று அதிர்ந்த விதத்தில், ரஞ்சனியை பத்து எதற்கு இப்படி அதிருகின்றாள் என சந்தேகமாகப் பார்த்தான்.

அவன் பார்க்க, ரூபா அதைவிடவும் “பேசினா என்ன? எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகிற?” என கேட்கவே செய்தாள்.

சட்டென்று சமாளித்தாள், “பின்னே, என்னோட எவ்வளவு க்ளோஸ் அவ. ஆனா என்கிட்டே பேசவே இல்லை” என்றாள். சமாளிக்க சொன்னாலும், மனதில் இருந்து தான் அந்த வார்த்தைகள் வந்தன.

“சரியாகிடும்!” என ரூபா அவளைத் தேற்ற, பத்துவை அமர்த்திவிட்டு மற்ற உறவுகளுடன் பேசச் சென்றால் ரஞ்சனி. ஆனாலும் ஐஸ்வர்யா எதற்கு ஈஸ்வருக்கு அழைத்திருப்பாள் என்ற எண்ணம் தான் ஓடிக் கொண்டிருந்ததது.

ஈஸ்வரை பார்த்தவுடனே மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்குமாறு “எதுக்கு விஷ்வா ஐஸ்வர்யா கூப்பிட்டு இருந்தா?” எனக் கேட்க,

அதற்குள் இவளுக்கு எப்படி தெரிந்தது என நினைத்து “உனக்கு யாரு சொன்னா?”  என..

“ரூபா அண்ணி” என்றவளிடம்,

“விஷ் பண்ணக் கூப்பிட்டா!” என்றான், என்ன சொல்வது என்று தெரியாமல்..

அவனின் பாவனையைப் பார்த்து “நீ பொய் சொல்ற?” என,

“தெரியுதுல்ல, அப்புறம் எதுக்கு கேட்கற? எல்லாம் எல்லார் கிட்டயும் சொல்ல முடியாது! புரிஞ்சதா?” என்று வார்த்தைகளை கடித்துத் துப்ப,

தூரமாக இருந்து பத்து பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு ஏதோ ரஞ்சனி கேட்பதும், அதற்கு ஈஸ்வர் திட்டுவது போலவும் தான் தோன்றியது.

ரஞ்சனிக்கு ஈஸ்வர் பேசிய விதத்தில் கண்களில் இருந்து வேகமாக நீர் இறங்க, யாரும் அறியா வண்ணம் கண்களை துடைத்த படி இடத்தை விட்டுப் போக.. அதை பார்த்த பத்துவிற்கு கோபம் கனன்ற ஆரம்பித்தது. “எவ்வளவு தான் பார்த்துக்கிட்டாலும், அவ அண்ணன் கிட்ட தான் போறா! அவன் சொல்றதை தான் செய்யறா! இப்படி திட்டு வாங்கி அழறா!”

ரஞ்சனி அழுவதை பார்த்ததும் ஈஸ்வர் இன்னும் திட்டினான், “பலதடவை சொல்லிட்டேன், இதை பத்தி பேசாதேன்னு! நீயா வந்து பேசற. அப்புறம் நீயா அழற. உனக்கும் இதுக்கும் என்ன? என்ன பண்ணியிருந்தாலும் அது நான்தானே, நீ எதுக்கு இப்படி ஃபீல் பண்றன்னு புரியவேயில்லை” என அடிக்குரலில் சீற,

ரஞ்சனிக்கு இன்னும் அழுகை வர, வேகமாக மேலே தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டாள்.

ஈஸ்வர் சமாதானம் செய்ய பின்னே செல்ல நினைத்தாலும் அதற்குள் யாரோ அவனை பேசப் பிடித்துக் கொள்ள, அவனால் நகர முடியவில்லை.

சில நிமிடங்களிலேயே சமன்பட்டு ரஞ்சனி கீழே வந்து விட்டவள், “பாட்டி, அழைச்சிட்டு போகலாமா?” என்று சௌந்தரி பாட்டியிடம் கேட்க,

“என்னடிம்மா கதையா இருக்கு, வந்து பத்து நிமிஷம் தான் ஆச்சு.. நீ இன்னும் எதுவும் சாப்பிடக் கூட இல்லை.. உன் வீட்டுக்காரர் காஃபி குடுத்தா கூட குடிக்க மாட்டேங்கறார் ரஞ்சனி வரட்டும் சொல்றார், இரு சின்னதா டிஃபன் செய்ய சொல்லியிருக்கேன். அதை சாப்பிட்டு தான் கூட்டிட்டு போகணும். வா, முதல்ல உன் வீட்டுக்காரரை பார்!” என்று பத்துவிடம் அழைத்துப் போக,

“பாட்டி! என்னால சாப்பிட முடியாது!” என்று ரஞ்சனி சலிப்பாக சொல்ல,

“பாருங்க! உங்க வீட்டுக்காரம்மா சாப்பிட மாட்டேங்கறா, இப்போவே கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகிடுச்சு, குழந்தை தாங்கற அளவுக்கு சத்து வேண்டாமா! நான் குடுக்கறதை சாப்பிடாம நீங்க ரெண்டு பெரும் இடத்தை விட்டு அசையக் கூடாது! அப்புறம் மாப்பிள்ளை பொண்ணை அனுப்ப மாட்டோம்” என்று கடிந்தவர்..

“ரூபா!” என்று அவளுக்கு குரல் கொடுக்க..

“என்னை குடுக்க சொன்னாங்க பாட்டி!” என்று வர்ஷினி அதை தூக்கிக் கொண்டு வந்தாள்.

ஆம்! பத்துவும் ரஞ்சனியும் வந்தவுடனே மலர் வர்ஷினியை உள்ளே அழைத்துக் கொண்டு சென்று, “அவர்களுக்கு நீ கொண்டு போய் கொடு!” என்று சொல்ல,

வர்ஷினிக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை, “என்ன கொண்டு போய் கொடுக்கணும்?” என,

“என்ன கொண்டு போய் கொடுக்கணும் கேட்கக் கூடாது! என்ன கொண்டு போய் கொடுக்கணும் அத்தை கேட்கணும்!” என்றவர், யாரை எப்படி அழைக்க வேண்டும் என்று ஒரு மினி கிளாஸ் எடுத்து, அவளிடம் டிஃபன் வகைகளை கொடுத்து விட்டார்.

எது எப்படியோ திருமணம் நடந்து விட்டது, இனி வர்ஷினி தங்கள் வீட்டுப் பெண், அவளுக்கு தங்கள் பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுத்து யாரும் எந்த குறையும் சொல்ல முடியாதபடி அவளை மாற்றி விட வேண்டும் என்ற முடிவுடன் இருந்தார்.

அதன் பொருட்டு அவளிடம் கொடுத்து விட, தழைய தழைய கட்டிய புடவையில் நடப்பதற்கு சற்று சிரமமாய் இருக்க.. மெல்ல அடிமேல் அடி எடுத்து வைத்து, கையில் இருப்பதை கெட்டியாக அவள் பிடித்துக் கொண்டு ஸ்ரத்தையோடு நடந்து வந்த விதம் பார்த்த ஈஸ்வருக்கு புன்னகையை வரவழைத்தது.

அந்த நிமிடம் பிரணவியின் கையினில் ஒரு பொருளை கொடுத்தால், அவள் எப்படி எடுத்து வருவாளோ அந்த தோற்றம் தான். அந்த நொடி ஈஸ்வரிடம் எந்த மாயையும் இல்லை.. சில நிமிடத்துளிகளுக்கு முன் வர்ஷினியிடம் பேசிய பேச்சுக்களுக்கும் நடந்து கொண்ட முறைக்கும் நேர் மாறான மனநிலை.

பாட்டியின் அருகில் அவள் நிற்க.. பத்து அப்போது தான் வர்ஷினியை பார்த்தவனாக “கொடு” என்று எழுந்து அவளின் கையினில் இருந்ததை வாங்கி கீழே இருந்த மேசை மேல் வைத்தான்.

பத்து வாங்கினாலும் அவனின் முகத்தில் ஒரு உற்சாகமின்மை தெரிய, கேள்வியாக அவனை நோக்கினால் வர்ஷினி. பத்து எப்போதும் அமைதி தான், ஆனால் அதையும் மீறி ஒன்று குறைந்தது.

தன்னையும் மீறி “அண்ணா ஏன் டல்லா இருக்கீங்க?” என கேட்டு விட,

அங்கிருந்த எல்லோருக்குமே கேட்டது. ஈஸ்வர் அப்போது தான் அவர்களை நெருங்கியிருந்தான் அவனுக்கும் கேட்டது.

என்ன சொல்வது என்று தெரியாமல் அவனும் “லேசா தலைவலி” என,

“என்ன அண்ணா? இன்னைக்கு தலைவலிடே வா, இப்போ இவங்க கூட சொன்னாங்க!” என சகஜமாக ஈஸ்வரை காட்டவும்,

“அடுத்தவங்களுக்கு தலைவலி கொடுக்கறது தானே இவனோட வேலை! இவனுக்கு எப்படி தலைவலி வரும்!” என்பது போல ஈஸ்வரை பத்து பார்க்க,

ஈஸ்வர் ரஞ்சனியை பார்த்து நேரடியாக முறைத்தான், “இவரை பார்க்கறதை விட்டு தேவையில்லாத எல்லாம் பார்ப்ப நீ!” என வாய் விட்டு அவளுக்கு மட்டும் கேட்குமாறு பேசியவன், “பேசிட்டு இருந்தா காஃபியே ஆறிடும் வர்ஷி. அவருக்கு சூடா எடுத்துக் கொடு” என,

வர்ஷினி எடுத்துக் கொடுக்கும் முன் ரஞ்சனி எடுத்துக் கொடுக்கவும் கையினில் வாங்கிக் கொண்டான் பத்து, பின்பு சிறிது நேரம் இருந்து அளவளாவி.. மணமக்களை அழைத்துக் கொண்டு கிளம்ப..

பத்து ரஞ்சனியின் முகங்களை பார்த்து ஈஸ்வரின் உற்சாகம் குறைந்து விட்டது என்பது தான் நிஜம். அவர்களை தான் பார்த்து இருந்தான். கூடவே “முட்டாள் பசங்க” என்று தோன்ற எரிச்சலாகவும் வந்தது.

ராஜாராமின் வீடு வரவுமே வாசலிலேயே தாஸ் நின்றிருந்தான்.. பார்த்த ஈஸ்வருக்கு புன்னகை. வீட்டினரை விட அவனின் முகத்தில் தொணித்த கவலை தான் அதிகம்.

“இன்னும் விளையாட்டுப் பொண்ணுங்க, எதுவும் தெரியலைன்னாலும் சொல்லிக் குடுங்க.. கூடவே எதுவுமே தெரியாது” என்று மலரிடமே போய் சொல்லி நின்றான்.

இப்போதும் வாசலில் நிற்க… “உன் தாசண்ணா பாரு, அவன் பண்றது தாங்க முடியலை” என்று வர்ஷினியிடம் சொல்ல,

வர்ஷினி இறங்கியவள் சிறிது நேரம் அவனோடு பேசி தான் வந்தாள். அதுவரை ஈஸ்வர் வாயிலில் நிற்க, “நீங்க உள்ள போங்க!” என்று சைகை செய்ய..

“நீ வா” என்று சைகை காட்டியபடி நின்றான். அதை பார்த்து “நீங்க போங்கன்னு சொன்னேனே” என

“ரெண்டு பேரும் சேர்ந்து தான் போகணும்” என்று அவளுக்கு சொல்லிக் கொடுக்க, அதற்குள் ஷாலினி ஆராத்தியோடு வாயிலுக்கு வர.. பின்பே உள்ளே சென்றனர்.

இதையெல்லாம் ஹாலில் அமர்ந்தபடி ராஜாராம் பார்த்திருந்தார். அவருக்கு மனதிற்கு மிகவும் திருப்தியாக இருந்தது. ஒரு வகையில் வற்புறுத்தி தான் இந்த திருமணம் என்பதால் சிறு சஞ்சலம் இருந்தது, வர்ஷினி எப்படி நடந்து கொள்வாளோ என..

தன் பெண் எப்போதுமே வயதிற்கு மீறிய பக்குவத்துடன் இருக்கின்றாள் என்று தெரியும். இப்போது அதையும் விட அதிகம் என்று தோன்றியது. எந்த கவலையையும் முகத்தினில் காட்டவில்லை. எல்லோரிடமும் நன்றாகவே நடந்தால், அதையும் விட ஈஸ்வரிடம் நன்றாக நடந்தால் என்று பார்த்த போதே தெரிந்தது.

ஈஸ்வர் சொல்வதை கேட்டாள், செய்தாள், மறுத்து எதுவுமே பேசவில்லை. ஒரு சுமுக பாவம் ஏற்படுத்திக் கொண்டாள் என புரிந்தது. திருமணத்திற்கு சரி என்று விட்ட போதும் மனது முழுவதும் ஒரு சஞ்சலதுடனே இருந்தாள். பேசிப் பேசிப் கரைத்திருந்தார் ராஜாராம்.

இப்போது மகளைப் பார்க்கவும் அவளின் முகம் தெளிவாக இருந்தது புரிந்தது.

அமர்ந்திருந்த அவரைப் பார்த்து வர்ஷினி புன்னகைத்த விதத்திலேயே வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள தயாராகி விட்டால் என புரிந்தது.

அவரும் பதிலுக்கு புன்னகைக்க, “என்னபா செய்யுது?” என்றாள் உடனே.

“என்ன பண்ணினாலும் இனிமே எனக்கு கவலை இல்லைம்மா.. இனி நிம்மதியா போவேன்!” என,

“ப்பா, என்ன பேசறீங்க?” என்று கடிந்தவள், “கமலம்மா ஏன் அப்பா டல்லா இருக்கார்?” என கேட்டு,

“இன்னைக்கு எல்லோர் கிட்டயும் இந்த கேள்வி தான் நான் மாத்தி மாத்தி கேட்கறேன். “இவர் கிட்ட, பத்துண்ணா கிட்ட, இப்போ அப்பா கிட்ட கேட்கறேன். ஒரு வேலை என் கண்ணுல தான் பிரச்சனையோ” என,

“இவ கண்ணில் பிரச்சனையா? எதுக்கு இப்போ கண்ணை இழுக்குறா?” என்று ஈஸ்வரின் மனம் சுணங்கியது.    

“இல்லை வர்ஷினி, அப்பாக்கு கல்யாண அலைச்சல், டல்லா தான் இருக்கார்” என்ற கமலம்மா மகனிடம் பார்வையை செலுத்த,

“நான் நல்லா தான்மா இருக்கேன். லேசா தலைவலிச்சது, அவங்க வீட்ல வர்ஷினி காஃபி கொண்டு வந்து கொடுத்தாளா, போயிடுச்சு!” என்று புன்னகைக்க..

“நான் கொண்டு தான் வந்தேன், எடுத்து கொடுத்தது அண்ணி” என்று வர்ஷினி ரஞ்சனையை பார்த்து முறுவலிக்க..

அதுதானே வர்ஷினிக்கு இருக்குற அறிவு கூட அவ அண்ணனுக்கு இல்லையே என்று தான் ஈஸ்வர் பத்துவின் மீது பார்வையை ஓட்டினான். பின்பு ரஞ்சனியிடம் அதே பார்வையை செலுத்த..

ரஞ்சனி ஈஸ்வரின் எண்ணப் போக்கை புரிந்தவளாக.. “எல்லோரும் உன்னை மாதிரியே தலை குப்புற விழ மாட்டாங்க” என்று பதில் பார்வை பார்த்து,  

“ஹச்சோ! ஒரே நாள்ல நீ பெரிய பொண்ணு ஆகிட்டியே, எல்லாம் கண்டு பிடிக்கிற” என்று வர்ஷினியை பார்த்து புன்னகையுடன் கூற..

“என்னை கிண்டல் பண்றீங்க!” என்று முகத்தை சுருக்கி வர்ஷினி அழகு காட்டிய விதத்தில், ஈஸ்வர் முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் இருக்க பெரும் முயற்சி எடுத்தான்.

ஆம்! இனிமேல் அவளின் அருகில் தான் இருக்கப் போகின்றான், ஆதலால், முகத்தினில் எதையும் காட்டாமல் இருக்க பழக வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்தது. பின்னே அவன் வழிவது அவனுக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்ற எண்ணம் தான்.

ஆனால் ஈஸ்வருக்கு தெரியவில்லை அவன் வர்ஷினியை கவனிப்பது போல அவளும் இவனை கவனிப்பாள் என..

இவனா என்னிடம் அப்படி நடந்து கொண்டான்.. இப்போது பார்வையில் அதைப் போல எதுவும் தெரியவில்லையே என்ற குழப்பம் தான் அவளின் மனதினில்.

பின்பு அங்கிருந்த அவர்களின் நெருங்கிய உறவினர்களை ஈஸ்வருக்கு மீண்டும் முரளி அறிமுகப்படுத்த.. “தெரியும்டா! நாம எத்தனை வருஷமா ஃபிரண்ட்ஸ்” என,

“உனக்கு தெரியும்! ஆனா அவங்களுக்கு தெரியலைன்னா!” என சொல்லி, அவனை எல்லோருடனும் சிறிது நேரம் பேச வைத்த பிறகே விட்டான்.

உணவு நேரம் ஆகிவிட.. மாப்பிள்ளை பெண்ணை உணவு உண்ணச் செய்து, நலங்கு வைத்து தனிமையில் விட..

அவர்களின் வீடு என்றாலாவது பரவாயில்லை, வர்ஷினியின் வீடு, ஈஸ்வருக்கு மிகவும் சங்கோஜமாக இருந்தது. ரூம் வந்ததும் “ஷப்பா” என்று மூச்சு விட்டு அமர்ந்தவன் .. “நிஜமாவே பொண்ணுங்களுக்கு புது இடத்துல அடாப்ட் ஆகறது ரொம்ப கஷ்டம்” என்று வர்ஷினியை பார்த்து புன்னகைத்தான்.

“எஸ்” என்று வர்ஷினி கையை கட்டி பதில் சொன்ன விதத்தில்… அவளை ரசித்து பார்த்தான். அவளின் கண்களை எந்த தடையும் இல்லாமல் பார்த்திருக்க..

அவன் பார்த்த விதத்தில் “என்ன பார்க்கறீங்க?” என,

“உன் கண்ணை”

“என்ன தான் இருக்கு என் கண்ல” 

“அதை தான் கண்டு பிடிக்கணும்” என புன்னகைக்க,

“எப்படி கண்டுபிடிப்பீங்க”

“எப்படி கண்டு பிடிக்கணும்னு அதையும் கண்டு பிடிக்கணும்” என,

“ஷ்.. பா முடியலை” என்றவளை பார்த்து..   “நாளைக்கு நம்ம சிங்கப்பூர் போகலாமா.. ஒரு டென் டேஸ் இருந்துட்டு வரலாமா?” என்றான்.

“ஆங்” என்றவள், “எதுக்கு?” என,

“இதுக்கு பேரு எங்க ஊர்ல ஹனி மூன் சொல்லுவாங்க” 

“ஓஹ், அப்படியா! அப்போ எங்க ஊர்ல என்ன சொல்லுவாங்க” என பதில் கேள்வி கேட்க..

அவளின் இந்த இயல்பான பதிலில் பெரிதாக முறுவல் மலர… “தெரியலை அதையும் கண்டுபிடிக்கலாம்” என்றவன்,

அவளின் கண்களை விட்டு அவளின் உடையை ஆராய்ந்தான். அவன் வெண்பட்டு வேஷ்டி சட்டையில் தான் அவனின் வீட்டினில் வந்ததில் இருந்து இருந்தான்.

“விஷ்வா குளிச்சி டிரஸ் சேஞ் பண்ண சொன்னாங்க?” என்று ரஞ்சனி சொன்ன போது,

“நான் வீட்ல இருந்து வரும் போது குளிச்சு டிரஸ் மாத்தினேன்” என்று ஒரு காரணம் சொல்லி விட்டிருந்தான். உண்மையில் குளிக்கவெல்லாம் இல்லை..      

“நான் டல்லாக இருக்கிறேனோ அவள் முன்னால்.. என தோன்றி, வெண்பட்டு புடவையில் இருந்தவளை பார்த்திருக்க..

அவனின் பார்வையை பார்த்து, ஏதாவது வேணுமா என்றவளிடம் “குளிக்கணும்” என்றா சொல்ல முடியும்.. ஒன்றுமில்லை என்பது போல தலையாட்டினான். ஒரு பெரும் தயக்கம் அவனுள் வந்து அமர்ந்திருந்தது.  நான் ஈஸ்வர் என்ற கர்வம் எங்கே தொலைந்தது அவனிடம் என்று தெரியவில்லை

இருவிழி உனது இமைகளும் உனது கனவுகள் மட்டும் எனதே எனது!!! 

    

 

Advertisement