Advertisement

அத்தியாயம் ஐம்பது :

காதலிற்கு கண்ணில்லை என்பது பொய்! காதலிற்கு எதுவுமே இல்லை என்பது தான் உண்மை!  வெட்கமும் அறியாது! மானமும் பாராது!

வானத்தை வசப்படுத்திவிட்ட ஒரு உணர்வோடு ஈஸ்வர் இருக்க, மாப்பிள்ளையும் பெண்ணும் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தனர். தனியாக விடப்பட்ட ஒரு உணர்வில் இன்னுமே தவித்து போனால் சங்கீத வர்ஷினி.

உண்மையில் ஹாஸ்டல் விட்டால் ராஜாராமின் வீடு, அவ்வளவு தான்! அது தவிர யார் வீட்டிற்குமே சென்றது இல்லை. சென்றாலும் மிஞ்சிப் போனால் அரை நாள் இருந்திருந்தாலே அதிகம். இப்போது இங்கே எனும் போது மறைந்திருந்த கலக்கம் மீண்டு இருந்தது.

அவர்களின் வீடு முழுவதும் உறவினர்கள் கூட, ஈஸ்வர் எல்லோருடனும் வளைத்து வளைத்து பேசிக் கொண்டிருந்தான். பொம்மை போல வர்ஷினி அருகில் அமர்ந்திருந்தாள். யாருடனும் பேசும் மனநிலையில் இல்லை என்பதால் அவள் அமைதியாக அமர்ந்திருக்க அதன் பொருட்டே ஈஸ்வர் எல்லோருடனும் பேசும் கட்டாயத்திற்கு ஆளானான். அமைதியாக தன்னுடைய இந்த சந்தோஷத்தை அனுபவிக்க ஆசைப்பட்டான். ஆனாலும் விடாமல் பேசிக் கொண்டு இருந்தான். 

வர்ஷினி மொட்டு மொட்டு என்று அமர்ந்திருப்பதை பார்த்தான், அவளுடன் பேசவும் முடியவில்லை, “உள்ளே போ!” என்றும் ஈஸ்வரால் சொல்ல முடியவில்லை, பிறகு அது உறவினர்கள் மத்தியில் தப்பாகி விடும். யாராவது வந்து வர்ஷினியை அழைத்து போவார்களா என்று பார்க்க, யாரும் வருவதாயில்லை.

சற்று மனதினில் கோபம் வர ஆரம்பிக்க, முயன்று புன்னகையாய் முகத்தை வைத்து கொண்டிருந்த போது, ரூபா வந்தவள் “விஷ்வா, ஐஸ்வர்யா உன்கூட பேசணுமாம். கல்யாணத்துக்கு விஷ் பண்ண..” என்று சொன்ன போது அவளின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.

பின்னே ஒரு வருடமாக பேசாத தங்கை தொலைபேசியில் அழைத்து விட்ட மகிழ்ச்சி.

“என்ன ஐஸ்வர்யாவா?” என்று மனதினுள் அதிர்ந்தான். இப்போது எதற்கு அழைக்கிறாள் என்ற குழப்பம் கூட, “கொடு” என்று வாங்கியவன் சற்று தள்ளிப் போக,

“ஹலோ” என்ற ஈஸ்வரின் குரலைக் கேட்டதும், “கல்யாணமாகிடுச்சு! அதுவும் ரொம்ப நல்லா விமரிசையா நடந்தது! வாழ்த்துக்கள்!” என்றவளின் குரல் எங்கோ இருந்து ஒலிப்பது போல இருந்தது.

ஃபோனை சரியாக வைக்கவில்லை போல என நினைத்து,  “ஐஸ்வர்யா ஃபோன் காதுல நல்லா வை!” என,

விசும்பல் ஒலி தான் கேட்டது.

எல்லோரும் அவனை பார்த்திருக்க முகத்தில் உணர்வுகளையும் காட்ட முடியவில்லை, என்ன என்றும் கேட்க முடியவில்லை. எதுவும் முடியவில்லை!

“அண்ணி!” என்று ரூபாவை அழைத்தவன், சரியா கேட்க மாட்டேங்குது, என் ஃபோன்ல இருந்து பேசிக்கறேன்” என்று ஐஸ்வர்யாவிற்கு கேட்குமாறு சொல்லி ஃபோனை வைத்து, ஃபோனை எடுத்துக் கொண்டு தன்னுடைய ரூம் போகப் போனவன்,

அப்போதும் ரூபாவிடம் “வர்ஷியை தனியா விடாதே, என்னோட ரூம்க்கு கூட்டிட்டு போ. நான் வந்ததும் கூப்பிட்டுக்கறேன்” என்று சொல்லி வெளியே செடிகள் இருக்கும் இடத்திற்கு சென்றவன்,

ஐஸ்வர்யாவிற்கு அழைத்தான்.. எடுத்தவுடன் “ஐஸ்வர்யா என்ன பண்ற?” என்று சற்று கடினமாகக் கேட்க,

“என்ன பண்றேன்? வெயிட் பண்ணிட்டே இருந்தேன். நீ  வந்திடுவன்னு மனசுல எதோ ஒரு நம்பிக்கை. நீ என்னை விட மாட்டேன்னு… ஆனா நீ வரலை!” என்று மீண்டும் அவள் தேம்ப,

“ஐஸ்வர்யா” என அதட்டியவன், “என்ன பேசற நீ?” என,

“நீ என்னை ஏமாத்திட்ட!” என்று மீண்டும் தேம்ப,

ஐஸ்வர்யாவின் அழுகை மனதை அசைக்க, என்ன பேசுவது என்று தெரியவில்லை, வார்த்தைகள் தொண்டைகுழியில் சிக்கிக் கொண்டன ஈஸ்வருக்கு.

அங்கிருந்த ஒரு சேரில் தலையை பிடித்து அமர்ந்து கொண்டான். அவளின் அழுகை ஒலி தொலைபேசியில் கேட்டுக் கொண்டே இருக்க,

“ஐஸ்வர்யா, இது முடிஞ்சு போன ஒன்னு, முடிஞ்சிடுச்சுன்னு உனக்கும் தெரியும், இப்போ திரும்ப பேசாதே. என்னை விட நல்ல மாப்பிள்ளை உனக்கு கிடைப்பாங்க, உன்னை ரொம்ப லவ் பண்ணுவாங்க, எதிர்காலத்துல நான் உன் கிட்ட லவ் சொன்னதை நீ நினைக்கவே மாட்ட, உனக்கே சிரிப்பா வரும்” என்றான் பொறுமையாக.

“எனக்கு அவங்க எல்லாம் வேண்டாம், நீ தான் வேணும்!”  

“ஏய், உளறாதே! எப்பவும் அதுக்கு வாய்பே இல்லை” என கர்ஜித்தான்.

மீண்டும் தேம்பல் ஒலி தான் பதிலாக கிடைத்தது.

“ஐஷ், நீ எந்த வகையிலும் குறைவு கிடையாது, நான் எந்த வகையிலும் பெஸ்ட் கிடையாது. நீயே சொல்ற இல்லையா, நான் உன்னை ஏமாத்திட்டேன்னு. சோ, ஜஸ்ட் லீவ்! ஓகே!”

“நான் அழுதுட்டு இருக்கேன், உன் கல்யாணம் எவ்வளவு கிராண்டா நடந்தது, அதையும் விட உன் முகத்துல எவ்வளவு சந்தோஷம்” என,

“எங்கே பார்த்த நீ” என்றவனிடம்,  

“நீதான் அதை லைவ் டெலிகாஸ்ட் பண்ணினயே” என மீண்டும் தேம்ப,

“ஊப்ஸ்!” என்று அவன் செய்த தவறு புரிந்தது. ஆம் இணையதளம் மூலமாக திருமணம் நேரடி ஒளிபரப்பு ஆகி இருந்தது.

“ஐஸ்வர்யா, இதையும் விட உன் கல்யாணம் இன்னும் நல்லா நடக்கும், நான் உன் லைஃப்ல இப்போ எங்கேயும் வரலை. ஏன்னா உனக்கு என் ஞாபகம் வரக் கூடாதுன்னு, ஆனா நீ நல்லா இல்லாம, நான் மட்டும் நல்லா இருக்க முடியாது! புரிஞ்சதா?” என தன்மையாக சொன்னவன்,

“நான் உன்கிட்ட சொன்னது காதல் இல்லை ஐஸ்வர்யா, அது ஜஸ்ட் ஒரு அட்ராக்ஷன்” என நிறுத்தியவன், ஒரு தடவை உண்மை பேசிடறேன், உனக்கு கஷ்டமா இருந்தாலும் கேட்டுடு..” என்றவன்,

“நீ ரொம்ப அழகா இருக்க, நீ டாக்டர், நீ ரொம்ப அமைதியான பொண்ணு, நீ என்னோட மனைவின்னு வெளில காமிக்க நல்லா இருக்கும். இப்படி எல்லாம் எனக்கு தோணினதுனால உன்கிட்ட காதல் சொன்னேன். உன் பின்னாடி சுத்தினேன். சம்மதிக்கவும் வச்சேன். நீ என்னை லவ் பண்ணலை. என்னோட காதலை நீ ஏத்துகிட்ட! அவ்வளவு தான், புரிஞ்சிக்கோ!”

“ஆனா வர்ஷினி கிட்ட, நான் பார்த்தவுடனே தெரிஞ்சது அவளோட குறைகள் மட்டுமே. அவளை உண்மையா நான் மரியாதையா கூடப் பார்க்கலை.. அதையும் மீறி இப்போ கல்யாணம் முடிச்சிருக்கேன்னா, இது என்னையும் மீறி நடந்த ஒன்னு.. இதுதான் காதலோ என்னவோ?”

“அவ கிட்ட எத்தனை குறைகள் இருந்தாலும் அது என் கண்ணுக்கே தெரியலை! சொல்லப் போனா அழகு அப்படின்னு பார்க்கப் போனா, அவளை விட நீதான் ரொம்ப அழகு! கண் இருக்குற யாருமே இதை தான் சொல்வாங்க! யோசிச்சுப் பார், உன் மேல இருந்தது தான் காதல்ன்னு தப்பா நினைச்சு, நான் கல்யாணம் செஞ்சு, அதுக்கு அப்புறம் எனக்கு இந்த மாதிரி தோணியிருந்தா என்ன ஆகும். வாழ்க்கையில எல்லாமே ரெண்டு பேருக்குமே முடிஞ்சு போயிருக்கும். அதுக்கு இது ஒன்னுமே இல்லை!”

“இனி இந்த மாதிரி பேசாதே! பேசி, நமக்கு மட்டும் தெரிஞ்ச விஷயத்தை எல்லோருக்கும் காமிச்சிக் கொடுத்துடாத. அது உனக்கு நிறைய பாதிப்பு, புரிஞ்சிக்கோ!” என பலதும் பேசி அவளை சமாளித்து, இவன் திரும்பிய போது கிட்ட தட்ட அரைமணிநேரம் கடந்து இருந்தது.

பேச்சின் இடையில், “நீ ரூபாவோட பேசறது இல்லை, ரஞ்சனி கூடவும் பேசறது இல்லை, இந்த வெப் சைட் அட்ரஸ் எல்லாம் எப்படி கிடைச்சது?” என,

“அஸ்வின்! அஸ்வின் கொடுத்தான்!” என,

மனதின் ஓரத்தில் சுருக்கென தைத்தது. “அஸ்வின்! அவனை எப்படி நான் மறந்தேன், இனியும் தொல்லை செய்வானோ? கவனமாக இருக்க வேண்டும்!” என்று மூளையில் செதுக்கினான்.    

மனதில் பாரம் ஏறிக் கொள்ள, இருந்த உல்லாசம் எல்லாம் மாயமாய் மறைந்தது.  திரும்ப அவன் உள்ளே வந்த போதும் வர்ஷினி அங்கே தான் அமர்ந்திருந்தால், பிரணவியை மடியில் வைத்தபடி, இவன் உள்ளே வரவும் இவனையே பார்த்தாள். 

“இன்னும் இங்கேயா உட்கார்ந்து இருக்க? அண்ணி ரூம் அழைச்சிட்டுப் போகலை!” என,

“கேட்டாங்க, நான் வேண்டாம் சொல்லிட்டேன்!”

“வா!” என்று அவனாக அழைத்துச் சென்றான்.

ஆனாலும் ஈஸ்வரின் முகம் சீரியசாக இருக்க, அவனையே பார்த்திருந்தவளிடம், “என்ன?” என்பது போல புருவம் மட்டும் உயர்த்திக் கேட்க,

“ஏன் சீரியஸ் ஆகிட்டீங்க?” என்று கேட்கவும்,

“என்னோட மூட் சேஞ்சஸ் உனக்கு தெரியுதா?” என,

“ஏன் தெரியாம? முதல் நாள் பார்த்ததுல இருந்து தெரியுது!” என அவனை ஆழ்ந்து பார்க்க,

ஈஸ்வரின் மனநிலை நிமிடத்தில் மாறியது. ஐஸ்வர்யாவின் நினைவுகள் பின்னுக்கு போக, அந்த கண்களை எந்த தடைகளும் இல்லாமல் ரசிக்க ஆரம்பித்தான்.

அவனின் மாற்றத்தை ஆச்சர்யமாய் பார்த்தவள், படியேறும் இடமாய் இருக்க, வர்ஷினி வேகமாக மேலே ஏற ஆரம்பித்தாள்.

அவளின் பின்னே ஏறியவன், “அது நம்ம ரூம்” என்று அழைத்துப் போக,

ரூபா கீழிருந்து “எங்கே போறீங்க!” என்றாள். பின்னே அவர்களை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை வீட்டின் பெரியவர்கள் அவளிடம் தானே விட்டார்கள்.  

“ரூப்ஸ், அவளை பாத்ரூம் கூட போக விட மாட்டீங்களா” என மெலிதாய் வாய் அசைத்தான்.

அசடு வழிந்து, “இப்போ தனியா கூட்டிட்டு போகாதே!” என ரூபாவும் அதை போல மெதுவாக சொல்லவும்,  

“என்ன?” என்று ஈஸ்வர் புரியாமல் கத்தவும், கடுப்பான ரூபா,  

“இப்போ தனியா கூட்டிட்டு போகாதே, இன்னும் இங்க கொஞ்சம் சாங்கியம் பாக்கி இருக்கு” என கத்த, ஆங்காங்கே இருந்தவர்கள் திரும்பிப் பார்த்தனர். இருவருமே அசடு வழிய,

வர்ஷினி லேசாக வெட்கம் எட்டிப் பார்க்க, ரூமின் உள் ஓடியே போனாள்!

ரூபாவை பார்த்து செல்லமாய் தலையில் அடித்து கொண்டு ஈஸ்வர் செல்ல, பார்த்தவர்களிடம் “ரெஸ்ட் ரூம் போறா!” என்றபடி ரூபா நகர்ந்தாள்.

உள்ளே வந்த வர்ஷினியின் முகம் புன்னகையை பூசி இருக்க, கூட உள்ளே வந்த ஈஸ்வர் அதை பார்த்து சிரிக்கவும், “நிஜமாவே பாத்ரூம் போகணும்” என்று சிரித்தவளை திரும்பவும் பார்க்க ஆரம்பித்தான்.

“அப்பப்ப ஃப்ரீஸ் ஆகிடறீங்க” என்றவளிடம்,

“எஸ்! உன்னை பார்த்தா அப்படி தான்!” என்றவன், “பார்த்த நாள்ல இருந்து உனக்கு என்னோட மூட் சேஞ்சஸ் தெரியுதா?” என்று குறும்பாக வினவியவனிடம்,

“ஏன் தெரியாம? முதல் நாள் உங்களை பார்த்துட்டே இருந்தேன். அதனால தான் நீங்க என்னை அலட்சியமா வேலை செய்யறவங்களை பார்க்கற மாதிரி பார்த்தது தெரிஞ்சது. அடுத்தநாள் நீங்க எங்க வீட்டுக்கு வந்தப்போ, நீங்க சரியா இல்லைன்னு புரிஞ்சது. இளநீர் சாப்பிட சொன்னா என்னவோ கிண்டலா நினைச்சீங்க, அப்புறம் இடிச்சிக்கிட்டீங்க, அவசரமா பீன் பேக் எடுத்துட்டு வந்து உட்கார சொன்னேன். அப்புறம் நான் கார் ட்ரைவ் பண்ணறேன்னு சொல்லி வந்தேன்” என்று எல்லாம் படமாய் விளக்க…

வர்ஷினி சொல்ல சொல்ல, “அழகான காதல் கூட மலர்ந்திருக்கலாம், தான் ஏற்கனவே காதல் சொன்னதால் வர்ஷினியை சரியாக நினைக்காததால் எல்லாம் தவறி விட்டது” என தோன்ற, திரும்பவும் ஃபிரீஸ் ஆகி நின்றான்.

கண்டிப்பாக என்னை மிகவும் கவனித்து இருக்கின்றாள் என்று புரிய ஒரு புன்னகை மலர்ந்தது.

“திரும்பவுமா, அய்யோடா!” என்று நினைத்தவள், அவள் பாட்டிற்கு எங்கே என்று பார்த்து பாத்ரூம் சென்றாள்.

அதற்குள் ஈஸ்வரின் அலைபேசிக்கு ஒரு செய்தி, “சாரி! உன்கிட்ட பேசினது என்னோட இன்னொரு முட்டாள்தனம், என்னவோ உன்னோட கல்யாணம் பார்த்து எமோஷனல் ஆகிட்டேன். ஜஸ்ட் இதை மறந்துடு, என்னை மறந்த மாதிரி!” என்று ஐஸ்வர்யாவிடம் இருந்து வந்தது.

ஈஸ்வருக்கு மனதில் தன் செயலை குறித்து மிகுந்த வெட்கமும் வருத்தமும் இருந்தாலும் அதை காட்ட மனதின்றி, “நானும் நடந்ததுக்கு சாரி!” என்று அனுப்பியவன், அடுத்ததாக “எஸ்! என்னை விட்டு பிரிஞ்ச மாதிரி, இது உன்னோட இன்னொரு புத்திசாலித்தனமான முடிவு!” என்று அனுப்பினான். 

“உன்னோட திமிர் குறையவேயில்லை, ஆனாலும் அதை என்கிட்ட காட்டி, என் வாயை பிடுங்காத! கடவுள் கிட்ட இந்த நொடி கூட நீ நிம்மதியா இருக்கக் கூடாதுன்னு தான் வேண்டறேன், அதை நல்லா இருக்கக் கூடாதுன்னு மாத்திடாத!” என செய்தி அனுப்ப,

“நான் தான் ஏமாத்திட்டேனே, என்னை நினைக்கிறதை விட்டு, முதல்ல எவனையாவது கல்யாணம் பண்ணி செட்டில் ஆகற வழியை பாரு”  என்று ஒரு மெசேஜ் கூட அடித்து விட்டவன்,

“ப்ச்! ரொம்ப திமிர் பண்ணாதடா” என நினைத்து, ஃபோனை அணைத்து தூக்கி தூரப் போட்டான். பின் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான். “கடவுளே! அவளுக்கு என் நினைவே வராத அளவிற்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து விடு” என்ற வேண்டுதலோடு.

ரெஸ்ட் ரூம் சென்ற வர்ஷினிக்கு கூடவே சில நினைவுகள், “இப்படி ஒரு நாள் தன்னுடன் துணையாக வந்தவன் தானே, உள்ளே வந்த போது அப்படி நடந்து கொண்டான்” என்று மனதினில் ஓட,

“எவ்வளவு பெரிய தவறு? ஆனால் இந்த திருமணம் அதை தவறு என இனி எண்ண வைக்க விடாமல் செய்து விட்டது” என்ற யோசனைகள் ஓட, கூடவே ஒரு வேலை நம்மிடம் சொல்லவில்லை என்றாலும் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதால் தான் இந்தத் திருமணமா?” என்று மீண்டும் குழம்ப ஆரம்பித்தாள்.

“பின்னே இவன் என்னை விரும்புவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? கொஞ்சம் நல்லவன் போல, அதனால் தவறாக நடந்து விட்டதை சரியாக்கி கொண்டான்” என தான் நினைக்க ஆரம்பித்தாள்.

காதல் என்று எண்ணவே முடியவில்லை!!!  

“சரி, ஏதோ ஒன்று அலசி ஆராயாதே, வேண்டாம் என்று நினைத்த போதும், வேண்டும் என்று முடிந்து விட்ட ஒன்று, மனதை குழப்பிக் கொள்ளாதே! ஒரு வேளை நிஜமாகவே காதல் தானோ? அப்படி நினைத்துப்பாறேன்” என மனதை சமாதானம் செய்தாள்.

இன்றல்ல இந்த எண்ணம்! திருமணம் முடிவு செய்த நாளில் இருந்து அப்படி தான். எதையாவது சொல்லி மனதை சமாதானம் செய்து கொண்டிருந்தாள். “அப்படியே நினை! நீ முதல் நாள் பார்த்து வியந்தவனை நினை! நடுவில் நடந்த அனைத்தையும் ஞாபகம் வைக்காதே!” என சொல்லிக் கொண்டு ஒரு புன்னகையோடு கதவை திறந்து வெளியில் வந்த போது மீண்டும் தலையை பிடித்து அமர்ந்திருந்தான் ஈஸ்வர்.

“இப்போ என்ன ஆச்சு?” என்ற படி வர்ஷினி அருகில் வரவும்..

சட்டென்று என்ன சொல்வது என்று தெரியாமல் ஈஸ்வர் விழிக்கவும், “தலை பிடிச்சிட்டு இருக்கீங்க? தலை வலிக்குதா?” என,

“ரொம்ப இல்லை, லேசா!” என்றான். உண்மையில் லேசாக வலித்தது.

“நான் என்ன பண்ணட்டும்?” என்று அக்கறையாகக் கேட்க,

அந்த கண்களின் பாவனையில் தன்னை தொலைத்தவன், “இங்க ஒரு கிஸ் பண்ணினா போய்டும்!” என்று நெற்றியைக் காட்டி குறும்பாக பேச,    

“அதெப்படி போகும் சொல்றீங்க! ஒரு வேலை அதிகமாகிடுச்சுன்னா” என்று பதிலுக்கு அவளும் குறும்பாக பேச,

“டெஸ்ட் பண்ணி பார்த்துடுவோமே!” என ஈஸ்வர் சொன்ன பாவனையில் பெரிதாக மலர்ந்து சிரித்தாள். இப்படி வர்ஷினி சிரித்து ஈஸ்வர் பார்த்ததேயில்லை. குழந்தைகளிடம் கூட இப்படி சிரித்து பார்த்ததில்லை.   

சிரிப்போடே “கீழ போகலாம்! டைம் ஆச்சு!” என்று அவள் நகர,

“அது முடியாது… டெஸ்ட் பண்ணாம விடமாட்டேன்!” என்று ஈஸ்வர் அவளின் முன் வர,

“பண்ணுங்களேன்!” என்று வார்த்தையாக சொல்லாமல் கண்களில் அழைப்பு விட்டாள்.

அதை புரிந்தாலும் “நீதான் டெஸ்ட் பண்ணனும்!” என்றான் வாய் வார்த்தையாக. ஆம்! பயமாக இருந்தது. அருகில் நெருங்கினால் அவளை காயப்படுத்தி விடுவோமோ என. நொடியும் நகராது நினைவினில் நின்றவள், அந்த நினைவினில் அவன் செய்யாதது எதுவும் கிடையாது எனும் போது தானாக செல்ல பயமாகத் தான் இருந்தது.     

முகத்தை சுருக்கி முடியாது என்ற பாவனையில் நகர்ந்தாள். “நீ நெத்தில டெஸ்ட் பண்ணலைன்னா, நான் வேற இடத்துல பண்ணுவேன்!” என வழி மறித்து ஈஸ்வர் நிற்க..  

வர்ஷினியும் சலைக்காது “முடியாது” என்பது போல நிற்க..

“அப்போ உனக்கு வேற இடத்துல வேண்டும் போல” என்று ஈஸ்வர் சொல்ல..  

அப்போதும் அசையாமல் நிற்க.. அதையும் விட கண்களில் தெரிந்த பாவனை… அந்த சவால் விடும் பாவனை.. வெறுமனே பார்த்தாலே தன்னை மறப்பவன், இப்படி ஒரு பார்வை எப்படி தாங்குவான். எதிர்கொள்ளவே முடியவில்லை.

“பார்த்த நாள்ல இருந்து கொல்றடி என்னை!” என்று ஈஸ்வரை பிதற்ற வைத்தது. மிக அருகிலும் வரவைத்தது. ஆனாலும் மேலே உரச வில்லை.   

ஈஸ்வரின் கண்களின் யாசிப்பு, வர்ஷினியை தானாக சற்று எம்பி நெற்றியில் இதழோற்ற வைத்தது. கண்களை மூடிக் கொண்டான். ஈஸ்வரின் உள் ஓடிய ஒரு உணர்வு, அனுபவிக்க முடியாமல், கண்களை திறந்து வர்ஷினியை பார்த்தான்.  

“இன்னும் வேண்டும்! வேண்டும்!” என்ற ஒரு புயல் அடிக்க, “எஸ்! நீ சொன்ன மாதிரி போகலை. இன்னும் வலி ரொம்ப அதிகமாகிடுச்சு. டெஸ்ட் பண்ணியிருக்க வேண்டாம். நீ சரியா தான் சொல்லியிருக்க!” என்று சொன்னவனை விழி விரித்து பார்த்தாள். பின்னே ஈஸ்வர் சொன்ன பாவனையும் அவன் கண்களில் தெரிந்த ஒரு தீவிரமும் என்னவோ ஏதோ வென்று நினைக்க வைத்தது.

அவளின் விழிகளை பார்த்தவன், “இந்தக் கண்ணுக்குள்ள அப்படியே தொலைஞ்சு போகணும்னு இருக்கு, பார்த்த நாள்ல இருந்து! இட்ஸ் கில்லிங் மீ! எப்படி போக?”  என்று சொல்லி,

“ப்ளீஸ் டூ சம்திங்!” என வாய் மொழியாக கெஞ்சியவனை கலவரமாக பார்த்தாள்.

ஈஸ்வரின் பார்வையின் தீவிரம் புரிந்து, “எனக்கு என்ன பண்ணனும் தெரியலை?” என,

அவளின் முழு உடலும் உரச நெருங்கி நின்றவன், “நான் சொல்லி தர்றேன்!” என்ற வார்த்தை மொழிய,

என்ன வரப் போகிறதோ என்று நெஞ்சம் படபடக்க நின்றவளை.. கலைத்து களைப்படைய செய்யும் ஆத்திரம் கிளற, முகரத் துடித்த முகத்தினை அவளின் மேல் பதிக்க விடாமல் இருக்க மிகவும் சிரமப் பட்டுப் போனான்.

ஈஸ்வர் தன்னை ஒட்டி நின்றதே, வர்ஷினியின் உள் ஏதேதோ மாற்றங்களை செய்தது.        

“என்னை டைட்டா ஹக் பண்ணு!” என்றான்.  

அதை இவன் செய்தால் என்ன என்பது போல தான் வர்ஷினி பார்த்தாள். அவளின் பார்வை புரிந்தாலும் அதற்கு பதில் சொல்லாமல், “அப்படியே வலிக்கிற மாதிரி என்னை கிஸ் பண்ணு” எனவும் சொல்ல..

“என்ன சொல்கிறான் இவன்?” என்று இன்னும் கண்களில் கலவரம் ஏற பார்ததவளிடம்,

“முடியாதா? உன்னால முடியாதா?” என கேட்டவன், “அப்போ என்னை கொன்னுடு!” என..       

“அம்மா” என வாய் விட்டு சொன்னவள், அவனை அதிர்ந்து பார்த்தாள்.

“பைத்தியம் மாதிரி தோணுதா? ஆனா உண்மை, ரொம்ப கஷ்டப்படறேன். ஏன்னு தெரியலை? ட்ரீட்மென்ட் கூட போனேன். எதுவும் என்னை நிறுத்த முடியலை. இந்த ஒரு வருஷமா எந்த வேலையும் செய்யாம, எதோ வேலை செய்யறோம்னு பேர் செஞ்சு, சுத்திட்டு இருக்கேன் வெட்டியா. அதுல வர்ற வருமானம் எல்லாம் எனக்கு ஒன்னுமே இல்லை”

“என்னோட கனவு.. குறிக்கோள் வேற.. ஈஸ்வர்ன்ற பேர் எல்லா இடத்திலும் இருக்கணும்… நான் ஈஸ்வர்ன்ற என்னோட திமிர்..  எல்லாம் எங்க போச்சுன்னே தெரியலை. வாழ்க்கையில எந்த பிரயோஜனமும் இல்லாம இருக்கேன், யாரையும் பார்க்க பிடிக்கலை.. பேச பிடிக்கலை..” 

“எல்லாம் உன்னால! நான் மாறிட்டேன்! அது எனக்கு தெரியுது! ஆனா என்ன மாறிட்டேன் தெரியலை! எனக்கு இதுல இருந்து ஒரு விடுதலை உன்னால மட்டும் தான் குடுக்க முடியும்!”   

“உன்னோட இந்த கல்யாணம் நடக்கறதுக்காக எல்லோர் கிட்டையும் போராடி.. உன்கிட்ட போராடி.. ப்ச்!” என்று சலித்தான், ஆனால் இம்மியும் அவளை விட்டு நகரவில்லை.

கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டான், எதிலிருந்து தப்பிப்பது, தன்னிடம் இருந்தா? இல்லை எதிரில் நிற்பவளிடம் இருந்தா? என நினைத்து.. “எனக்கு விடுதலை கொடுப்பாயா?” என்று கண் திறந்து மீண்டும் யாசித்தான்.   

அதற்குள் கதவு தட்டும் ஒலி கேட்க, ஈஸ்வரின் முகம் காட்டிய பாவனையில், “விடுதலை நான் கொடுத்தாலும், இவன் ஆக மாட்டான்!” என தான் தோன்றியது.    

“அவன் காதலிக்கின்றானா இல்லையா? எதற்கு இந்த திருமணம்?” என்ற எல்லா யோசனையும் பின்னுக்கு போக, முரளியின் திருமணம் முடிந்த மறுநாள் ஈஸ்வர் வந்து நின்ற போது, அதற்கு முதல் நாள் அவள் ஈஸ்வரிடம் சண்டையிட்டு இருந்த போதும்,

“என்ன பிரச்சனை? என்கிட்ட சொல்லுங்க! நான் ஹெல்ப் பண்றேன்!” என்று சொன்ன மனநிலை தான் அப்போது வர்ஷினிக்கு..   

அவனை இறுக அணைத்தாள், அதற்குள் “விஷ்வா” என்ற ரூபாவின் குரல் கேட்கவும், “இதுக்கு மேல என்னால ஹக் பண்ண முடியலை!” என சொல்லி, வேகமாக ஒரு இதழ் முத்தம் பதிக்க,

வர்ஷினியிடம் சொல்லிவிட்டாலும், செய்வாள் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லாமல் இருந்தவன், அவளின் செய்கைகளை வியப்போடு கிரகிக்க முற்பட்டவன், அவள் இதழ் பதித்ததும், அவளை விடாது தன்னுடன் அழுத்திப் பிடித்துக் கொண்டான்.  

சில நொடிகள் என்றாலும் வர்ஷினிக்கு பட்டாம் பூச்சிகள் பறந்தன, அடி வயிற்றில், கண்களில், மனதில், உடலின் ஒவ்வொரு பாகத்திலும்..     

ஒரு புது வித உணர்வு, விடு பட முயன்று முடியாமல், ஒரு நொடி இளகி, அவனையும் இளக வைத்து, அந்த சமயம் அருகில் இருந்த படுக்கையில் அவனை தள்ளினாள்.

அவளை இழுத்து மேலே போட்டுக் கொள்ளும் தீவிரத்தில் பார்தவனிடம், “நாம என்ன தனி தீவிலா இருக்கோம், வெளில அக்கா கூப்பிடறாங்க!” என்று சொல்லி,

“நீங்க அப்புறம் வாங்க!” என்று சொல்லி விரைந்து விட்டாள். அந்த நிமிடம் திருமணமானாலும், சிறிய பெண்ணான அவள் இன்னும் பதின் வயதின் இறுதியில் தான் இருந்தாள். ஆனாலும் பெரியவளாகிப் போனாள்.

அவள் சொன்ன தனி தீவு என்ற சொல் மட்டுமே காதில் விழுந்தது, பாக்கி எதுவுமே விழவில்லை, மயக்கம், ஒரு மீள விரும்பா மயக்கம்.

ஒரு பத்து நிமிடம் கழித்து ஈஸ்வர் கீழே இறங்கி வந்த போது, இவனா என்னிடம் பிதற்றியது என்பது போல இருந்தது அவனின் முகம். அந்த கம்பீரம் சிறிதும் குறையவில்லை. இவனா என்னை கொன்று விடு என்றான் என யோசித்தபடி பார்த்திருந்தாள்.

இதற்கு பெயர் என்ன என்று ஆராய முற்பட்ட போதும்.. சற்று கர்வமாக உணர ஆரம்பித்தாள்.                    

பித்தனோ! ஸ்திரி லோலனோ! பித்தானதும் உன்னிடமே! ஸ்திரியும் நீயே!!!   

 

Advertisement