Advertisement

அத்தியாயம் நாற்பத்தி ஆறு :

நெஞ்சமே பாட்டெழுது- அதில் நாயகன் பேரெழுது!

வீடு வந்தவுடன் அம்மாவிடம் “உடம்பு சரியில்லை மா, அதான் விஷ்வா வர சொல்லி வந்துட்டேன்” என்று ரஞ்சனி சொல்லி, “தூங்கறேன்!” என்றும் சொல்லி ரூமில் அடைந்து கொண்டாள்.

சௌந்தரி பாட்டி அவளின் பின்னோடு சென்று, “ஏதாவது விசேஷமா ரஞ்சனி!” என்று ஆர்வமாகக் கேட்க, பாட்டியின் பேச்சைக் கேட்டவளின் மனம் இன்னும் கசந்தது.

“அப்படி எல்லாம் எதுவுமில்லை பாட்டி, படிப்பு முடியும் வரை வேண்டாம் முடிவு பண்ணியிருக்கோம்!” என்றாள். வேறு என்ன சொல்வாள்? அவளா வேண்டாம் என்கின்றாள்!

அழுத சோர்வில் படுத்துக் கொண்டாள், உறங்கியும் விட்டாள்.

அவளை வீட்டில் விட்டவுடன் கமலம்மாவிற்கு அழைத்த ஈஸ்வர், “இங்கே என்னோட தான் இருக்காம்மா, இங்கே வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன். அப்புறம் பேசறேன்!” என்று வேறு எதுவும் பேசாமல் வைத்து விட்டான்.

சிறிது நேரத்தில் சமன்ப்பட்டு இருந்த பத்து, ரஞ்சனியை அழைக்க, அது அங்கேயே வீட்டில் அடித்தது, ஆம் சென்ற அவசரத்தில் ஃபோனை வைத்து சென்று இருந்தாள்.

உடனே அவளின் காலேஜ் சென்றான், அங்கே அவனை தெரிந்த அட்டெண்டர் “மேடம், இப்போ தான் போனாங்க. அவங்களை யாரோ பார்க்க வந்தாங்க!” என்றான்.

“யார்?” என்ற யோசனையில் குழம்பினான்.

அடித்து வேறு விட்டான், இப்போது யாரிடம் போய் கேட்பான், அவனது மனதுமே சோர்வாக உணர்ந்தது. ஆஃபிஸ் போகாமல் திரும்ப வீட்டிற்கு வந்தான்.

அவனைப் பார்த்த கமலம்மா, “ஈஸ்வர் இப்போ தான் ஃபோன் பண்ணினான். ரஞ்சனி அவனோட இருக்காலாம். அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டான் போல”.

“ஓஹ், என்ன சொன்னார்?” என,

“வேற ஒன்னும் சொல்லலை!” என்று கமலாம்மா சென்று விட்டார். பத்துவிடம் இருந்து இப்படி ஒரு செய்கையை அவர் எதிர்பார்க்கவில்லை. அந்தக் கோபம் இருந்தது. கூடவே பத்துவும் என்ன என்று வாய் திறக்கவேயில்லை.

அவராக மனைவியை தேடித் போயிருகின்றான் என்று அனுமானித்து இதை மட்டும் சொல்லிச் சென்றார். இன்னும் ராஜாரமிற்கு விஷயம் தெரியாது. கமலம்மாவிற்கு, முரளிக்கு, ஷாலினிக்கு மட்டும் தான் தெரியும். அவர்கள் வேறு யாரிடமும் சொல்லவில்லை. வர்ஷினிக்கு தெரியாது.  

ஈஸ்வருக்கு தெரியுமா? சண்டையிடுவானோ? என்று பத்துவிற்கு தோன்ற, இனி அவனை வேறு எதிர் கொள்ள வேண்டுமோ என்றும் தோன்றியது. எதிர்கொள்ளவும் மனம் தயாரானது.

ஆனால் ரஞ்சனியின் பேச்சு இன்னும் தவறாகவே பட்டது. திரும்ப ஆஃபிஸ் கிளம்பி சென்று விட்டான்.

இப்படி ஆளுக்கு ஒரு புறம் இருக்க, வர்ஷினியையோ அவளின் பிறந்த நாளையோ கவனிப்பார் யாருமில்லை.

ராஜாரமிற்கும் மகளின் திருமணம் மனதில் நின்றது. வர்ஷினியின் பிறந்த நாள் மறப்பாரா என்ன? ஞாபகம் இருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை. பத்துவினது செய்கையில் கமலம்மா அதை சுத்தமாக மறந்திருந்தார்.

ரஞ்சனியிடம் வாக்குவாதம் செய்த பிறகு சிறிது நேரம் வீட்டினில் இருந்த வர்ஷினி தாஸோடு கல்லூரி கிளம்பிவிட்டாள்.

அங்கே சென்றதும் தோழர்கள் அவளின் பிறந்த நாளை முன்னிட்ட ஆரவாரமான வரவேற்பில் அவளின் வீட்டு நினைவுகள் பின் செல்ல,

மனதை குதூகலமாக வைத்துக் கொண்டாள். ஆம்! அது தானாக வருமா தெரியவில்லை. எப்போதும் சிறு வயதில் இருந்தே வரும் பழக்கமாக நண்பர்களுடன் எதையும் காட்டிக் கொள்ளாமல் பேச ஆரம்பிக்க, பின்பு வகுப்புகள் என்று நேரம் ஓட, மதியம் கேண்டீனில் யார் என்ன சாபிட்டாலும் தன்னுடைய ட்ரீட் என்று விட,

யார் எவர் என்றே தெரியாத மக்கள் கூட ஹேப்பி பர்த்டே என்று வாழ்த்திச் சென்றனர். அது மனதிற்கு உற்சாகம் கொடுத்தது.

மாலையில் “தாசண்ணா, இது உங்க பாப்பாக்கு, உங்க வைஃப்க்கு, உங்க அம்மாக்கு, உங்களுக்கு” என தனித் தனியாக பணம் கொடுத்தவள், “என்னோட பர்த்டேக்கு எதாவது வாங்கிக் கொடுங்க, நான் தான் வாங்கிக் கொடுத்திருக்கணும். ஆனா எதுவும் நான் பிளான் பண்ணலை, தப்பா எடுத்துக்காதீங்க” என்று சொல்ல,

“அச்சோ, பாப்பா! என்ன இது? நீங்க குடுக்கறதே எனக்கு ரொம்ப சந்தோஷம்!” என்றான்.

கல்லூரி வளாகத்தில் தான் கொடுத்துக் கொண்டு இருந்தாள். பின் “போகலாமா” என்று காரைத் திறக்க,

“ஹாய், பர்த்டே பேபி!” என குரல் கேட்க,

அது ஈஸ்வரின் குரல் என்று நன்கு தெரிந்த போதும், அதுவரை மறந்திருந்த காலை நினைவுகள் வர, முகமும் சுருங்கி விட, திரும்பவா வேண்டாமா என்ற யோசனையோடு நின்றாள்.

“நீ தள்ளி நில்!” என்று தாஸை பார்த்து ஈஸ்வர் சொல்ல,

தாஸிற்கு போகவா, வேண்டாமா என்ற யோசனை,

“போ!” என்று திரும்பவும் சைகை காட்டினான். எப்படியும் கண் பார்வையில் தானே இருக்கப் போகிறார்கள் என்று தாஸும் சற்று தள்ளி நின்றான்.

“காலையிலயே வந்தேன், ஆனா நீ லேட் போல, அதுக்குள்ள ஒரு ஃபோன் கால் போக வேண்டி வந்துடுச்சு!” என்று சொல்லிக் கொண்டே அவளின் முன் வந்தவன் “ஹேப்பி பர்த்டே” என்றான் ஒரு சிறு புன்னகையுடன்.

“தேங்க்யு!” என்றவள், “ஓகே, நான் கிளம்பறேன்!” என்று காரில் ஏறப் போக,

“ஓரே நிமிஷம், என்னோட கிஃப்ட் வாங்கிக்கோ! அதுக்கு அப்புறம் போயிடு!” என,

“இல்லை, எனக்கு எந்த கிஃப்டும் வேண்டாம்!” என்றாள் குரலில் சற்று கடுமையை புகுத்தி,

“ஏன், இப்போ என்ன கோபம்?” என்றான் மென்மையாகவே.

“நீங்க இப்படி என் பின்னால வராதீங்க. ப்ளீஸ் லீவ் மீ அலோன். எனக்கு உங்களால எல்லார் கூடவும் சண்டை வருது!” என அவள் சொல்ல சொல்ல, அவளின் முகம் வருத்தத்தையும் காண்பிக்க,

அந்த வருத்தம் காண சகிக்காமல், என்ன ஏது என்ற காரணமும் கேட்காமல், “அவ்வளவு தானே வரமாட்டேன். நீ இதுக்கு அப்செட் ஆகாதே, திஸ் இஸ் யுவர் டே, நான் போறேன்” என்றவன்,

“சம்டைம் நீ சந்தோஷமா இருக்கும் போது கொடுக்கறேன், இப்போ இது மட்டும் கொடுக்கட்டுமா?” என அவனின் பின் புறம் இருந்த கையை எடுத்து அவளின் முன் ஒரு ஒற்றை ரோஜாவை நீட்டினான்.

அவனின் முகத்தை பார்த்தாள், அவள் பார்க்கவும் ஈஸ்வரும் முகத்தைப் பார்க்க, அவனையும் மீறி அந்தக் கண்களின் புறம் பார்வை செல்ல, “நேத்து நாம பார்த்த அந்தக் கடலை விட, உன் கண்ணு இன்னும் ஆழமா இருக்கு!”

அந்தக் குரல், அந்த வார்த்தைகளை உச்சரித்த விதம், அதுதான் ஆழமாக தோன்றியது வர்ஷினிக்கு.

எதுவும் சொல்லாமல் அந்த ரோஜாவை வாங்கி, உடனே காரில் ஏறிக் கொள்ள, தாஸை பார்த்து ஈஸ்வர் கையை அசைக்க, வேகமாக வந்த தாஸ் காரில் அமர்ந்து அதைக் கிளப்பினான்.

கையை கட்டி அந்த கார் செல்வதேயே ஈஸ்வர் பார்த்து நிற்க, சிறிது தூரம் சென்றதும் வர்ஷினியும் காரில் இருந்து பின் கண்ணாடி வழியாக திரும்பிப் பார்த்தாள், ஈஸ்வர் கை கட்டி நின்றிருந்தது தெரிந்தது.

மனது கலவரமாக உணர்ந்தது. “வேண்டாம், போ! என்றதும் உடனே சரி என்று விட்டான், என்னை மீறி உன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற இறுமாப்பா!” என்று யோசித்து பார்க்க, அதற்குள் கார் திரும்ப ஈஸ்வர் கண்ணில் இருந்து மறைந்தான்.

அவன் கைகளை கட்டியபடி நின்றிருந்த தோற்றம், வெகு நேரம் கண் முன் நின்றது. 

 வீடு சென்ற உடனே அப்பாவைப் பார்க்க சென்றாள், “காலையில உங்களை பார்க்க முடியலைப்பா, அம்மாவையும்!” என்று சொல்ல,

“பாப்பா என்ன செலப்ரேட் பண்ணுனீங்க, இது புது டிரஸ் தானே!” என்று ராஜாராம் கேட்கவும் தான் கமலமாவிற்கு அவளின் பிறந்த நாள் ஞாபகம் வந்தது.  

“இல்லைப்பா, இது புதுசு இல்லை!” என்றாள்.

“ஏன்மா?” என்றார் கமலம்மா பதறி,

“தினமும் புதுசு நிறைய போடறேன், ஆனா இன்னைக்கு வீட்ல யாரும் என்னை விஷ் பண்ணலை, அதனால் போட மனசு வரலை!” என்று சொல்லும் போதே குரலில் கலக்கம் எட்டிப் பார்த்தது.

ராஜாராம் எந்த சமாதானமும் சொல்லவில்லை, “அப்பா, இல்லைன்னா உனக்கு இதுதாண்டா நிலைமை. அதுக்கு தான் சொல்றேன், நீ கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கு உன்னை தனியா விட்டுட்டுப் போக முடியாது!” என்றார் கமலம்மாவை குற்றம் சாட்டும் பார்வை பார்த்து.

“அது இல்லைங்க, வீட்ல ஒரு பிரச்சனை, யாருக்கும் அதனால காலையில ஞாபகமில்லை!” என்று அவசரமாக கமலம்மா விளக்கம் சொல்ல..

“என்ன? என்ன அப்படி உங்களுக்கு பிரச்சனை?” என்று ராஜாராம் கோபப்பட,

கணவரின் கோபத்தில் “பத்து, ரஞ்சனியை அடிச்சிட்டான்!” என்று கமலம்மா உளறி விட,

“என்ன?” என்று ராஜாராமும் வர்ஷினியும் அதிர்ந்தனர்.

“அவ கோபிச்சிகிட்டு போனா, அப்புறம் கொஞ்சம் நேரம் கழிச்சு ஈஸ்வர் என்னோட இருக்கா, நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி வெச்சிட்டான். அதுதான் எல்லோருக்கும் பதட்டமா போச்சு, அப்புறம் முரளியும் ஷாலினியும் இன்னைக்கு ஸ்கேன் பண்ணனும்னு போய் இப்போ தான் வந்தாங்க!” என்றார்.

“ஏன்? ஏன் அடிச்சிட்டான்?” என்றார்.

“தெரியலை, என்னன்னு கேட்டா வாயே திறக்க மாட்டேங்கறான்!” என கமலம்மா சொல்ல,

“அதுப்பா, காலையில அண்ணிக்கும் எனக்கும் வாக்குவாதம், அதுக்கு நானே அண்ணியை திட்டிட்டேன். அப்புறம் எதுக்கு அண்ணா அடிச்சாங்க தெரியலை?”

“என்ன? என்ன வாக்குவாதம்?”

“நேத்து, நீங்க மாப்பிள்ளை ஃபோட்டோ குடுத்தீங்க இல்லையா, அண்ணாங்க கிட்ட காமிச்சேன்!”

“அதுக்கு அண்ணி, நேத்து என் அண்ணாவோட வெளில போன, இப்போ இவங்க போட்டோ காட்டுறன்ற மாதிரி பேசினாங்க, எனக்கு கோபம் வந்துடுச்சு!” எனச் சொல்ல,

“ரஞ்சனி சொன்னதுல தப்பில்லையேம்மா, ஈஸ்வர் வேண்டாம்னா எல்லா வகையிலையும் வேண்டாம்னு காட்டணும்!” என்றார் அப்பாவும்.

“இருக்கலாம்பா, ஆனா அவங்க சொன்ன விதம் எனக்கு கோபம் வந்துச்சு அதுதான். ஆனா அண்ணா எதுக்கு அடிச்சாங்க தெரியலை!” என்றாள்.

“ஈஸ்வர் திரும்ப எதுவும் பேசினானா?” என்றார் கமலம்மாவிடம்.

“இல்லை!” என்பது போலத் தலையாட்ட,

“இப்போ கூட என்னை காலேஜ்ல பார்த்தாங்க, எனக்கு பர்த்டே விஷ் பண்ணினாங்க. அப்புறம் எதோ கிஃப்ட் குடுக்க வந்தாங்க. நான் வேண்டாம் சொல்லி வந்துட்டேன்!” என்றாள் வர்ஷினி எதையும் மறையாமல்.

“எல்லோரும் ஒரு பிரச்சனைன்னா உன்னை மறந்துட்டாங்க, ஆனா அவன் மறக்கலை தானே. அடிச்சது பத்துவா இருந்தாலும் ரஞ்சனி அடி வாங்கியிருக்கான்றது ஈஸ்வர்க்கு சாதாரண விஷயம் கிடையாது. கணவன் மனைவி விஷயம்னு தள்ளி இருப்பான். ஆனாலும் உன் பிறந்த நாள் மறக்கலை. ஞாபகம் இருக்கு தானே.  நீ ஏன் பாப்பா ஈஸ்வரோட உன் கல்யாணத்தை நினைக்கக் கூடாது!” என்றார்.

வர்ஷினி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும், “அப்பாவும் ரஞ்சனி சொன்னதே தான் சொல்றேன், வேண்டாம்னா அது கிளீன் கட்டா இருக்கணும்!”

“நான் குடுத்த ஃபோட்டோல ஏதாவது பிடிச்சதா?”

“இல்லைப்பா!” என்றாள்.

“யோசிம்மா, உனக்கு வேற யாரையாவது பிடிக்குதா?”

“இல்லைப்பா!” என்றவள், “கண்டிப்பா இப்போவே கல்யாணம் பண்ணிக்கணுமா!”

“பண்ணிக்கிட்டா, நான் போற காலத்துக்கு கொஞ்சமா நிம்மதியா போவேன்!” என்றார்.

வர்ஷினி எதுவும் பதில் பேசாமல் எழுந்து சென்று விட்டாள்.

“பத்துவை வரச் சொல்லு!” என்றார் கமலம்மாவிடம்,

சிறிது நேரம் கழித்து அவன் வர, “ரஞ்சனியை அடிச்சியா!” என்றார்.

“ஆம்!” என்று தலையாட்டினான்.

“என்னவா இருந்தாலும் அடிக்கறது தப்பு, அதுக்கு அப்புறம் பார்த்தியா, சாரி கேட்டியா?” 

“இல்லை!” என்று தலையசைத்தான்.

“முதல்ல அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வா, இல்லை நீயும் வராத! என்றார் கடுமையாக. “அடிசிக்கங்க, பிடிசிக்கங்க, ஆனா அது நம்ம வீட்டுக்குள்ள மட்டும் தான் இருக்கணும்!” என்றார் இன்னும் கடுமையாக.

“சரி” என்று தலையசைத்துக் கொண்டிருக்கும் போதே, பத்து வந்ததை அறிந்து அங்கே வந்த வர்ஷினி, “அண்ணா, என்னால உங்களுக்குள்ள சண்டையா? நான் வேணா அண்ணி கிட்ட சாரி கேட்கவா?” என நிற்க,

“இல்லையில்லை, வேண்டாம்!” என்று அவசரமாக மறுத்த பத்து, “நான் போய் கூட்டிட்டு வர்றேன்!” என்று கிளம்பினான்.

அவளை பார்த்த ராஜாராம் “நீ என்ன பாப்பா? இன்னும் புது ட்ரெஸ் போடலையா, போ, போ என் முன்னாடி இப்படி வராத!” என்று அவளையும் அதட்ட,

எதற்கு புது உடை என்று யோசித்த பத்து விற்கு அவளின் பிறந்த நாள் நினைவிற்கு வர,

“ஹச்சோ, மறந்தே போயிட்டேன்! ஹேப்பி பர்த்டே!” என்றான்.

“தேங்க்ஸ் அண்ணா!” என்றாள் சிறு புன்னகையுடன்..

“நீ போய் மாத்திட்டு வா பாப்பா!” என்று அவளை அனுப்பியவர், “நான் இருக்கும் போதே இந்த லட்சணத்துல பார்த்துக்கறீங்க இன்னும் நான் இல்லைன்னா, இதை நான் உங்க கிட்ட இருந்து எதிர்பார்க்க்கவே இல்லை. நீ மட்டுமில்லை உங்க அண்ணனும் கூட!” என்று கடிந்தார்.

எதுவும் பேச முடியாதவனாக பத்து வெளியில் வந்தவன், முரளியை அழைத்து “வர்ஷினி பர்த்டேடா இன்னைக்கு நான் தான் மறந்தேன்னா நீயுமா மறந்த, அப்பா கோபமா இருக்கார். ஷாலினி அண்ணிக்கு ஞாபகப் படுத்து, அவங்க பார்த்துக்குவாங்க, நான் ரஞ்சனி வீட்டுக்குப் போறேன்!” என்று சொல்லி விரைந்தான்.

அங்கே சென்றால் வீட்டினர் முன் ரஞ்சனி எதுவுமே காட்டிக் கொள்ளவில்லை, “வாங்க!” என்று சொல்லி, அவனை உபசரித்து காபி எடுக்கும் சாக்கில் உள் செல்ல,

எல்லோரும் மாற்றி மாற்றி வந்து உபசரிக்க, அதுவே சொன்னது யாருக்கும் விஷயம் தெரியாது என்று.

இவன் வந்ததை அறிந்து ஈஸ்வர் வந்தவன், “வா பத்து!” என்று அவனும் உபசரிக்க, ஏதாவது கோபமாகப் பேசுவான் என்று பத்து எதிர்பார்க்க,

ஈஸ்வர் ஒன்றுமே பேசவில்லை.. அருகில் அமர்ந்து இருந்தான் அவ்வளவே.. எதுவுமே பேச்சுக் கொடுக்கவில்லை.

வீட்டில் நமஷிவாயமோ ஜகனோ இல்லை. காஃபி குடித்தவன், “வீட்டுக்குப் போகலாமா?” என்று ரஞ்சனியை பார்த்துக் கேட்டான்.

சௌந்தரி பாட்டி “உடம்பு சரியில்லைன்னு சொன்னா, ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு வரட்டுமே!” என,

பத்துவிற்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை, விழித்தான்.

அதற்குள் ஈஸ்வரின் கைபேசியிர்க்கு முரளியிடம் இருந்து அழைப்பு வர, எடுத்தால், பேசியது ஷாலினி,

“அண்ணா ரஞ்சனி இருக்காங்களா?”  

“ரஞ்சனியும் இருக்கா! பத்துவும் இங்க தான் இருக்கான்!” என,

“நீங்க ரஞ்சனி கிட்ட குடுங்க!” என,

ரஞ்சனியிடம் கொடுத்ததும், “இன்னைக்கு வர்ஷினிக்கு பர்த்டே, நைட் நானும் இவரும் வர்ஷினியை டின்னர் கூட்டிட்டுப் போறோம் வெளில, நீயும் பத்துவும் ஜாயின் பண்றீங்களா?” என,

“இரு ஷாலினி, அவர் கிட்ட கொடுக்கறேன்!”  

பத்துவிடம் சொல்லப்பட, அவன் ரஞ்சனியை பார்த்தான். பிரச்சனையின் மூலமே வர்ஷினி தானே,

ரஞ்சனி நீயே சொல் என்று பார்த்து நிற்க,

“நீங்க எங்கேன்னு எனக்கு சொல்லுங்க அண்ணி, ஜாயின் பண்ற மாதிரி இருந்தா நான் கூப்பிடறேன்!” என்று வைத்து விட்டவன், “இன்னைக்கு வரட்டும் பாட்டி, நாளைக்கு நான் கொண்டு வந்து விடறேன்!” என்றான் சௌந்தரி பாட்டியிடம்.

ரஞ்சனி ஈஸ்வரை பார்க்க “போ” என்பது மாதிரி அவன் கண்ணசைக்க, அதை பத்துவும் பார்த்து இருந்தான். திடீரென்று தோன்றிய ஒரு ஈகோ, “என்னை விட அவளின் அண்ணன் அவளுக்கு முக்கியமோ” என்று நினைக்க வைத்தது.  

அவர்கள் கிளம்பினர், ரஞ்சனி வெளியே வந்ததும் “நீ கார் போ, நான் பத்துகிட்ட பேசணும்” என ஈஸ்வர் சொல்லவும்,

“என்ன பேசணும்? ஒன்னும் பேசவேண்டாம்! என்று ரஞ்சனி நிற்க,

“உன் புருஷனை பத்திரமா உன்கிட்ட திரும்ப அனுப்பறேன் போ!” என்று அதட்டினான்.

“ஒண்ணும் வேண்டாம்!” என்றும் அப்போதும் ரஞ்சனி நிற்க,

“நீ போ! அவர் பேசட்டும்!” என்று பத்துவும் சொல்ல, அதன் பிறகே காரில் ஏறினாள்.

“என்ன? அன்னைக்கு ஒரு அறையாவது விட வேண்டாமான்னு நான் கேட்டதுக்கு, இன்னைக்கு அடிச்சியா?”  என்றான் ஈஸ்வர்.

பத்து மெளனமாக நிற்கவும், “அன்னைக்கு சொன்னது, நீ ரஞ்சிக்காக தவிச்ச தவிப்புக்காக, அந்தக் காதலுக்காக.. ஆனா நீ இன்னைக்கு பண்ணினது ரொம்ப தப்பு..”

“என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது! என்ன பிரச்சனைன்னு அவ சொல்லவும் இல்லை, நான் கேட்கவும் இல்லை. கணவன் மனைவின்னா ஆயிரம் இருக்கும். ஆனா அடிக்கறது சரியே கிடையாது, நீ திரும்ப இந்த மாதிரி பண்ணின, அவளை இங்க கூட்டிட்டு வந்துடுவேன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்! ஏன்னா வர மாட்டா! நாங்க அப்படிதான் வளர்த்திருக்கோம்!”  

“ஆனா, நீ திரும்ப பண்ணக் கூடாது!” என்றான் அதிகாரமாக.  

என்னவோ ஈஸ்வரின் பாவனை அப்படி ஒரு கோபத்தைக் கிளப்ப, கூடவே வா என்ற போது போகட்டுமா என்று ரஞ்சனி ஈஸ்வரை கண்ணில் கேட்டது இன்னும் கோபம் கொடுத்தது.

அடித்தது அவன் தப்பு என்று அப்போது பத்துவின் ஞாபகத்தில் இல்லவே இல்லை.   

“என்ன பண்ணுவீங்க? அடிப்பீங்களோ?” என,

“நான் சொல்லலை! அதை நீ தான் சொல்ற!” என்றான் ஈஸ்வர்.

இருவர் பார்வையும் இப்போது நேரடியாக முட்டிக் கொண்டது..

இப்படி நேரடியாக ஈஸ்வருடன் மோதி பல பல அனர்த்தங்களை இழுத்து விடப் போகிறான் என்று பத்துவிற்கு சற்றும் அனுமானம் இல்லை. 

ஆம் எல்லாம் அனர்த்தங்களே.. பத்து ஈஸ்வரோடு மோதும் முட்டாள்தனத்தின் உச்சங்கள் அவை!  எல்லோரையும் வருத்தம் கொள்ள செய்யப் போகின்றான் என பத்துவே நினைத்து பார்த்திருக்க மாட்டான்.  

அர்த்தம் அனர்த்தம், ஒரு எழுத்தே அதிகம்.. ஆனால் அதன் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடுகின்றது!!!  

 

Advertisement