Advertisement

அத்தியாயம் இருபத்தி ஒன்பது:

சில வருடங்களுக்குப் பிறகு…

கோவையில் ஒரு திருமண மண்டபத்தில்.. அய்யர், “பொண்ணை வரச் சொல்லுங்கோ”, என்று சொல்ல… பத்மினி மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு மணமேடைக்கு அழைத்து வரப்பட்டாள்.

அதைக் கீழே அமர்ந்து… ஜெயஸ்ரீ ரசித்துக் கொண்டிருக்க, அவளின் மடியில் ஒரு வயது மகன் சத்ருகன் சமர்த்தாக அமர்ந்திருந்தான்… அருகில் இருந்த சேர்களில், சிபியின் மொத்த குடும்பமும் அமர்ந்திருந்தது, அவனைத் தவிர…

சிபி தான் அவளின் மகளின் பின் சுற்றிக் கொண்டு இருந்தானே.. ஆம், அவனின் நான்கு வயது மகள்…. வானதி, மிகவும் சுட்டி என்பதை விட அவ்வளவு வாய்… ஓயாமல் அப்பாவிடம் கேள்வி கேட்டே இருப்பாள்… அவனைத் தவிர யாராலும் அவளை சமாளிக்க முடியாது என்பது தான் உண்மை. ஆம் படுத்தி எடுப்பாள்.

இப்போதும் அப்பாவிடம், “இங்க எதுக்கு இது கட்டியிருக்காங்க, நம்ம வீட்ல ஏன் இல்லை?”, என்று அங்கிருந்த வாழைமரத்தைக் காட்டிக் கேட்டுக் கொண்டிருக்க… அவசரமாக அதன் பலன்களை கூகுளில் தேடிக் கொண்டிருந்தான் சிபி.

அப்போதும் வாய் தானாக, “கல்யாண வீட்டுல கட்டுவாங்க செல்லம்”, என்று மகளிடம் சொல்ல..

அடுத்த கேள்வி பறந்து வந்தது, “கல்யாண வீடுன்னா என்ன?”,

“ங்கே”, என்று விழித்தான் சிபி.  

தப்பான விளக்கங்களையோ, இல்லை ஏனோ தானோவென்று ஏதாவது ஒன்றை கொடுத்தால் ஜெயஸ்ரீ சண்டையிடுவாள். சரியான காரணம் சொல்லுங்க என்று.

மணிமேகலை இவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்று பார்த்துக் கொண்டிருந்தாள். ஆம், அவளும் ஓயாமல் சித்தப்பாவோடு தான் சுற்றுவாள். 

அதற்குள் வர்மன் வந்து, “அண்ணி கூப்பிடறாங்க”, என்று சொல்ல…

“அம்மாவும் பொண்ணும் என்னை ஒரு வழியாக்கறாங்க”, என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே உள்ளே சென்றான்.

“தாலி கட்டப் போறாங்க! எங்க போனீங்க?”, என்று கண்களால் ஜெயஸ்ரீ கேட்க… “கேள்வி கேட்டு என்னை ஒரு வழி பண்றா”, என்றான் பாவமாக சிபி மகளைக் காட்டி.

“இவனைத் தூக்குங்க”, என்று சைகை காட்டவும், மடியில் இருந்த மகனைத் தூக்கி அருகில் அமர… ஒரு விரல் உதட்டின் மேல் வைத்து மகளை அடக்கியவள்… “உட்கார்”, என்று ஒரு சேரைக் காட்டவும், “முடியாது போ”, என்று மழலையில் மிளிற்றி அம்மாவின் மடியில் தான் அமர்ந்தாள்.

“உன்னை மாதிரியே ரொம்ப பிடிவாதம்”, என்று சிபி முணுமுணுக்க….

ஸ்ரீ ஒரு பார்வை பார்க்க, அது சொல்லாமல் சொன்னது, “உங்களை விடவா”, என்பதுப் போல…

தாலி கட்டி முடித்ததும் தாரை வார்க்க… பத்மினியின் அண்ணனும் அண்ணியும் தான் நின்றனர்…. ஆம்! கண்ணனும், ராதாவும்…

மறக்க…. மன்னிக்க…. கற்றுக் கொண்டான் சிபி…. அதன் எதிரொலி பத்மினியை அவனின் அண்ணனுடன் பேச வைத்திருந்தாள் ஜெயஸ்ரீ… பின்ணனி ஒன்றுமில்லை! தன் கணவனால் யாரும் மன வருத்தத்தில் இருக்கக் கூடாது என்ற எண்ணமே…  

கண்ணனும் இப்போது ராகினியுடனும், ஜெயஷங்கருடனும் பேச… ஓரளவு சுமுகமான சூழ்நிலை… ராதா அவளின் அம்மாவிடமும் இப்போது பேசினாள். யாரும் பழையதை பிடித்துத் தொங்கவில்லை… சிபியின் வீட்டில் எல்லோரும் ராதவுடன் பேசினர்! ஏன் ஜெயஸ்ரீக் கூட… ஆனால் சிபி பேச மாட்டான்.

“ஏன்?”, என்ற ஜெயஸ்ரீயின் கேள்விக்கு, “எனக்கு இஷ்டமில்லை! விட்டுடு!”, என்பதாக சொல்ல.. அதன் பிறகு ஜெயஸ்ரீ அதைப் பற்றி பேசியதேயில்லை.

திருமணத்திற்கு பாதி செலவை வஜ்ரவேல் செய்ய, மீதிம் சிபி செய்தான். மாப்பிள்ளை தேர்வு கூட சிபி தான்! அவனுடன் பேங்கில் வேலை பார்ப்பவன்… ஆம்! சிபியின் வேலை பெர்மனன்ட் ஆகிவிட்டது! வேலை கோவையில்… காலையில் வயல் வேலை, பின்பு பேங்க் வேலை, மாலை முழுவதும் குடும்பத்துடன் என்று ஒரு திவ்யமான வாழ்க்கை தான் சிபிக்கு.

லீவ் நாட்களில் மரம் நடுதல் என்று அதுவும் ஒரு பக்கம் சென்றது. இந்த ஒரு வருடமாக பத்மினியை திருமணம் செய்யும் மாப்பிள்ளை அவன் கீழ் தான் வேலை செய்தான்.

அவனின் குணம் பார்த்து பத்மினிக்கு பொருத்தமாய் இருப்பான் என்று தோன்ற… இப்போது திருமணம் நடந்தேறிவிட்டது.  

மதிய விருந்து முடிந்ததும், தனத்தையும் ராஜவேலையும் அழைத்த வஜ்ரவேல், “இனிமே நீங்க பார்த்துக்கோங்க! நாங்க கிளம்பறோம்!”, என்று சொல்ல…

விரைந்து வந்த பத்மினி… “ரொம்ப நன்றிப்பா!”, என்றாள்.. ஆம் அவர்கள் மூவரையும் அவர் தான் படிக்க வைக்கிறார். பத்மினி முடித்து விட்டாள், இன்னும் ராகினியும் ஜெய்சங்கரும் படித்துக் கொண்டு இருந்தனர். 

இப்போது அவளுக்குத் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். எந்த எதிர்பார்ப்பும் பிரதிபலனும் இல்லாத உதவிகள். மிக சிலருக்கே இந்த மனப்பான்மை அமையும்.

சிரித்தவர்… “நல்லா இரும்மா!”, என்று ஆசீர்வதித்துக் கிளம்பினார். அவருக்கு என்ன வேண்டும் அவரின் மகளின் சௌக்கியம் மட்டுமே வேண்டும். இப்போது அதற்கு எந்த குறையுமில்லை. ஜெயஸ்ரீ மிகவும் பிடிவாதமான் பெண்…

ஆனால் அவளை நன்கு சமாளித்து சென்றான் சிபி என்பதை விட, அவளுக்கு மனதளவில் எந்த குறையுமின்றி பார்த்துக் கொண்டான். சிறு சிறு விஷயத்திற்கு கூட முகத்தை தூக்கி வைக்கும் மகள் சிபியோடான இந்த சில வருட வாழ்க்கையில் முகத்தை தூக்கி வைத்ததே இல்லை என்று வஜ்ரவேல் அறிந்ததே.

 சத்ருகன் உறங்க ஆரம்பிக்க… சிபியும் ஜெயஸ்ரீயும் கூட கிளம்பினர். காலையில் முகூர்த்தம் முடிந்ததும், நடராஜன் குடும்பத்தினருடன் கிளம்பி விட்டார்.

அவர்களின் செல்வ நிலைக்கு இப்போது ஒரு குறையுமில்லை. எல்லாவற்றையும் சிபி சீர் செய்திருந்தான். வயலில் எல்லாம் அவன் பார்த்துக் கொண்டாலும், அப்பாவிடம் சொல்லி அவரவர்களுக்கு என பகுதி கட்ட சொல்லி… அருள் மொழியையும் வர்மனையும் கூட இப்போது அதை பார்த்துக் கொள்ளுமாறு செய்திருந்தான்.

வஜ்ரவேல் காரை எடுத்தவர், மகனும் மருமகளும் வருவதற்காக காத்திருந்தார். சிபியிடம் பைக் தான்… அதனால் திருமணத்திற்கு அவர் தான் அவர்களை அழைத்து வந்திருந்தார்.

சிபியும் ஸ்ரீயும் மகனுடன் மட்டும் வந்தனர்.

“எங்க வானதி?”, என்று வஜ்ரவேல் கேட்க…

“அவ அண்ணியோட போயிட்டா மாமா! எனக்கு பதில் சொல்லி முடியலை.. என்னைவிட சலிக்காம அண்ணி அவளுக்கு பதில் சொல்றாங்க! அதான் அனுப்பிவிட்டுடேன்!”, என்றான் சிபி. ஆம்! வனிதாவுடன் அனுப்பியிருந்தான்.

எல்லாம் சேர்ந்து பிடித்து இருந்தாலும், அங்கே பவானியில் இருந்து வந்த பிறகு சிபி வீட்டினருடன் சேர்ந்து இருக்கவில்லை.

தனியாக வீடு பார்த்து தான் இருந்தான். அப்பாவிடமும் அம்மாவிடமும், “இப்படியே இருக்கட்டும்பா!”, என்று சொல்லிவிட… சிபி இவ்வளவு சரியாகி வந்ததே பெரிய விஷயம் என்று அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.

இந்த சில வருட வாழ்க்கையில்… இருவருக்கும் நல்ல புரிதல்! ஜெயஸ்ரீ சிரமப்பட்டு பேசும் அவசியமே வரவில்லை… அவள் பேச ஆரம்பிக்கும் போதே என்ன என்று தெரிந்து கொள்வான் சிபி.

மிக சில தருணங்கள் மட்டுமே புரியாது. அவர்களின் வயலின் ஆரம்பத்தில் இருந்தது அவர்களின் வீடு… சமீபமாகத் தான் ஓட்டு வீடாக இருந்ததைத் தார்ஸ் வீடாக மாற்றியிருந்தான் சிபி… பெரிய வீடெல்லாமில்லை, ஒரு சமையலறை, ஒரு ரூம், ஒரு ஹால்… வீடு சிறியது தான்! ஆனால் அவர்களின் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக சென்றது.

வீடு வந்து விட்டு, அப்படியே சென்றார் வஜ்ரவேல். “உள்ள வாங்கப்பா!”, என்று ஜெயஸ்ரீ கேட்டதற்கு கூட… “கொஞ்ச நேரம் தூங்கணும்மா…”, என்று அவர் சென்று விட..

காரில் வரும் போதே சத்ருகனும் உறங்கியிருக்க… உள்ளே வந்தவுடனே சிபி அவனை படுக்கையில் சௌகர்யமாக படுக்க வைத்து நிமிர…. அவனின் தொலைபேசி அடித்தது… வனிதா தான் அழைத்திருந்தாள்.

பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீயிற்கு சிரிப்பு, கண்டிப்பாக வீட்டுக்கு வருவதற்கு வானதி பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். எப்போதும் அப்படி தான்! செல்வாள்…. ஆனால் ஒரு சில மணிநேரங்கள், உடனே அம்மாவிடம் போக வேண்டும் என்று ரகளை செய்து விடுவாள். 

“சிபி! உன் பொண்ணுக்கு வீட்டுக்கு வரணுமாம்! கொண்டு வந்து விடட்டுமா!”, என்று கேட்க…

“அண்ணி!”, என்று அலறினான்… அவனின் அலறலைப் பார்த்து இன்னும் சிரிப்பு ஜெயஸ்ரீயிற்கு,

“அண்ணி! ரெண்டு நாளா கல்யாண அலைச்சல்… எனக்கு முடியலை! நான் கொஞ்ச நேரம் தூங்கணும்! ப்ளீஸ் சமாளிங்க….!”,

“நான் சொன்னா அந்தக் கத்து கத்துறா… நீயே சொல்லு!”, என்று சொல்லி போனை கொடுக்க…

“செல்லம்! அப்பா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்டா.. அதுவரைக்கும் நீ மேகி அக்காவோட தோட்டத்துல இருக்குற பூ பறிப்பியாம்!”, என்று மகளுக்குப் பிடித்த வேலையை சொல்ல….

“சரிப்பா!”, என்றாள் சமர்த்தாக வானதி..

வனிதாவிடம் சொல்ல… “எனக்கு இது தோணாமப் போச்சு!”, என்று போனை வைக்க… 

பொங்கி பொங்கி சிரித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீ… “என்ன சிரிப்பு?”, என்று கடுப்பாக சிபி கேட்க…

“என்ன புத்திசாலித்தனம்? பொண்ணையும் சமாளிக்கறீங்க! கூடவே உங்க பக்கமும் அவளை இழுக்கறீங்க, உங்க தோட்ட வேலைக்கு!”, என்றாள் நிறுத்தி, நிறுத்தி,     

“என்ன இழுக்கறேன்?”, என்று சொல்லிக் கொண்டே ஜெயஸ்ரீயை அருகில் இழுக்க…

“நான் உங்க பொண்ணைத் தான் சொன்னேன்… என்னைச் சொல்லலை”,

“போறதானா, போ!”, என்று சிபி சொல்ல..

“ஏன்… போக… மாட்டேனா…”, என்று ஸ்ரீயின் வாய் தான் சொன்னது… உடல் அவனை இன்னும் நெருங்கி தான் நின்றது.

“இதுதான் போகிற லட்சணமா..”,

“ஆமாம்!”, என்பது போல ஜெயஸ்ரீயின் தலை அசைந்தது…

அவளின் இடையோடு அணைத்துப் பிடித்தவன், “எங்க போகற?”, என்ற சிபியின் கேள்விக்கு….

“உங்க கிட்ட!”, என்று அவனைத் தொட்டுக் காட்டினாள்…

“அதான் இங்க தானே இருக்க…”, என்று சிபி இன்னும் நெருங்கி நிற்க…

“அப்படியா!”, என்பது போல ஒரு அறியாத பாவனையை முகம் காட்டியது. 

அவளின் பாவனையைப் பார்த்தவன்… சிரித்து விட்டான்..

“உட்காரு!”, என்று சொல்லி அவளின் ஷூவைக் கழற்றவும், அவனின் செய்கையை விடாமல் பார்த்திருந்தாள். பார்த்து, பார்த்து செய்கிறார்… எப்படி இவரால் முடிகிறது என்று…. அதுவும் பிரசவத்தின் போது அவ்வளவு நன்றாகப் பார்த்துக் கொண்டான்.

அம்மா இல்லாத…. அம்மா வீடு…. தனியாக வளர்ந்தும் பழக்கப்பட்டு விட்டாள்… குழந்தையை… சிபி அம்மா, அண்ணி என்று எல்லோரும் பார்த்துக் கொண்டாலும், அவளின் தேவைகளுக்கு சிபி தான் வேண்டும்.

அவளுக்குத் தானாக செய்வதும் சிரமம், சில வேலைகள். ஆனால் உதவிக்கு யாரும் வருவதை எப்போதும் விரும்பமாட்டாள்… அதை அடுத்தவர் உணராமல்… யாருக்கும் அவள் இப்படித்தான் என்று தெரிய வராமலேயே சிபி சமாளித்து விட்டான்.

அதெல்லாம் ஞாபகம் வர… “ரொம்ப சிரமப்படுத்தறேனா உங்களை…. நானே செஞ்சிக்குவேன்! நீங்க விட மாட்டேங்கறீங்க!”, என்று திக்கித் திணறி சொல்லி… அந்த ஸ்ட்ராபை அவளே கழற்றப் போக… 

“அடி வாங்கப் போற நீ….”, என்று அவளின் கைகளை விலக்கினான்.

“இல்லை! சில சமயம் தோணுது! இப்படி உங்களை டார்ச்சர் பண்ணினா… எல்லா வேலையும் உங்களை செய்ய வெச்சா! உங்களுக்கு என்னைப் பிடிக்காம போயிடுமோன்னு, சலிப்பு தட்டிடுமோன்னு.. எல்லாரும் அவங்க கணவரை அவ்வளவு நல்லா கவனிச்சிக்கிறாங்க! ஆனா நான் அந்த மாதிரி பார்த்துப் பார்த்து எதுவும் செய்யறதில்லை”.

“என்ன இது உளறல்! என்ன செய்யறாங்க எல்லோரும்? நீ என்ன செய்யறதில்லை!”.

“அது எனக்கு சொல்லத் தெரியலை… நான் எல்லோர் மாதிரியும் ஓடி ஆடி எந்த வேலையும் செய்யறது இல்லை… சரளமா பேசறது இல்லை”, என்றாள் திக்கித் திக்கி…

“நான் செய்ய நினைக்கறது, எனக்கு சிரமம் குடுக்கக் கூடாதுன்னு நீங்களே செய்யறீங்க… என்னால குழந்தைகளை தூக்கிட்டு கூட நடக்க முடியலை”.

“ஏய் மக்கு! என்ன பேச்சு இது! நான் என்ன யாருக்காவது உதவி செய்யறனா என்ன? நீ இப்படிப் பாராட்ட இல்லை ஃபீல் பண்ணிப் பேச… நான் என் பொண்டாட்டி புள்ளைங்களுக்கு செய்யறேன்.. அப்போ என்ன அர்த்தம்? எனக்காக செய்யறேன்..! புரிஞ்சதா…!”,

“எனக்கு உன்கிட்ட எந்தக் குறையுமில்லை… எனக்கு இந்த எல்லா வேலையும் பிடிச்சிருக்கு… தயவு செஞ்சு இந்த மாதிரி பேசி என்னவோ நான் பெருசா செய்யற மாதிரி ஒரு பில்ட் அப் இல்லை ஃபீல் கொடுக்காத… வேற ஏதாவது கொடு!”, என்று அவளைக் காதலாக பார்த்துக் கொண்டே அவளின் உதடுகளை வருட…

“வேற என்ன கொடுக்க…!”, என்றாள் மயங்கிய குரலில்.

“நீயே முடிவு பண்ணு…!”,  

“மச்சானோட சேர்ந்து…. ஸ்ரீயும் லேட் பிக் அப் ஆகிட்டா… அவளுக்குப்  புரியலை…”, என்றாள் நிறுத்தி…

“என்ன பண்ணணும்…..”,…  “புரியவைக்கணும்”, என்று டோரா புஜ்ஜி ஸ்டைலில் சிபி சொல்லவும் முகம் சிவந்தாள். மகளுக்கு அந்த மாதிரி கதை சொல்லிச் சொல்லி சிபிக்குப் பழக்கம்.

இதெல்லாம் செய்யச் சொல்வதும் ஜெயஸ்ரீ தான்! எங்கே தன் மகளுக்கும் தன்னைப் போல பேச்சு திக்குமோ என்ற பயம். எந்த பயத்திற்கும் அவசியமேயில்லாமல் அவளின் மகள் பேச்சாலேயே கலக்கிக் கொண்டிருந்தாள்.

மறுபடியும், “என்ன பண்ணணும்! புரிய வைக்கணும்!”, என்று சிபி சொல்ல…

மெதுவாக தலையில் தட்டிக் கொண்டாள் ஜெயஸ்ரீ…

“என்ன இப்போ?”, என்று சிபி அதட்ட..

“நீங்க… இதை… சொல்லி முடிக்கறதுக்குள்ள அவன் எழுந்துடுவான்”, என்று சத்ருகனைக் காட்டினாள்…

“உன்னை….”, என்று மறுபடியும் ஸ்ரீயை வளைத்துப் பிடித்தான் சிபி…..

“கொஞ்ச நேரம் தூங்கறேன்னு வானதியை அங்க விட்டு வெச்சிருக்கோம்!”, என்று ஸ்ரீ, நிறுத்தி நிறுத்தி சொல்ல..

பிடித்திருந்த மனைவியை விட்டவன்… “இவன் எழறதுகுள்ள கூட்டிட்டு வந்துடறேன்! இல்லைன்னா உனக்கு சிரமம்… இப்போ இவனும் ரொம்ப ஓடறான்”, என்று இப்போது தான் இரண்டடி எடுத்து வைத்திருக்கும் மகனைக் காட்டிச் சொல்ல…

சிரித்துக் கொண்டே, “போய் கூட்டிட்டு வந்துடுங்க!”, என்று ஸ்ரீயும் சொல்லக் கிளம்பினான். 

இதுதானே அன்றாட வாழ்க்கையின் நிதர்சனங்கள்! எப்போதும் கணவனும் மனைவியும் என்ன கொஞ்சிக்கொண்டா இருக்கிறார்கள்.. இல்லையே.. கடமைகள் தானே முன்னிறுத்தப் படுகின்றன…

அதுவும் பிள்ளைகள் என்று வரும்போது எதுவாகினும் பின் சென்று விடும். அவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. 

அதையும் மீறி என் கணவன், என் மனைவி, என்ற சொந்தம் கொடுக்கும்  பந்தம் மிக மிக அதிகம். புரிதல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த சொந்தம் கொடுக்கும் பிணைப்பு தான் பலருடைய வாழ்க்கையைத் தங்கு தடையின்றி பயணிக்கச் செய்கிறது.  

மெதுவாக வெளிக் கதவை தாழிட ஜெயஸ்ரீ வர… “நான் வர்றதுக்கு கொஞ்சம் நேரம் ஆகும்! எப்போ வருவேன்னு பார்த்துட்டே இருக்காத! தூங்கு!”, என்று ஒரு அதட்டல் போட்டு சிபி கிளம்பினான்…

“என்ன மாறினாலும், இவரின் அதட்டல் மாறாது!”, என்ற புன்னகையோடு, உள்ளே வந்து மகனை அணைத்தவாறு படுத்துக் கொண்டாள்.   மனம் முழுவதும் சிபி சக்ரவர்த்தி மட்டுமே!     

அவர்களின் இல்லறம் சிறந்து, நல்லறம் பெருக.. இயற்கை துணை நிற்கும்.

                   ( நிறைவடைந்தது )       

 

Advertisement