Advertisement

அத்தியாயம் இருபத்தெட்டு:

என்னவோ தடைகள்.. சேர்ந்து வாழவில்லை… இப்போது சேரும் சமயம் தானும் அவனை மிகவும் வருத்தி விட்டது புரிந்தது.

மெதுவாக வெளியே வர.. அந்த அரவம் கேட்டுத் திரும்பியவன்…  அவளைப் பார்த்ததும் வேகமாக எழுந்து அருகில் வந்தான்… “எங்க வர்ற நீ? வா படு, காத்து விசு விசுன்னு அடிக்குது”, என்றான்.

“நான் இங்க தான் இருப்பேன்”, என்று சைகை செய்ய…  

“சொன்னா கேட்கணும்! வா உள்ள”, என்றான்.

“மாட்டேன்…”, என்பதுப் போல தலையாட்டினாள்..

“என்ன பண்ணனும்?”,

“இங்க உட்காரணும், அங்க காத்தே வரலை”, என்று சைகை காட்டினாள்.

“ஆம், அந்த ஃபேன் மெதுவாக தான் சுத்தும்.. சரி வா!”, என்று அவளை அமரவைத்துக் காலை நீட்டி விட்டான்…. புண்வரை துணி வருகிறதா என்று பார்க்க அது வரவில்லை..

பிறகு அவனும் பக்கத்தில் அமர…. “சாரி, இனிமே, இந்த மாதிரி செய்ய மாட்டேன்… சரியாயிடும், வருத்தப்படாதீங்க!”, என்றாள், அவன் தோள் சாய்ந்து.

எதுவும் பேசாமல் சிபி அவளை ஆதரவாக அணைத்துக் கொள்ள.. மீண்டும், “சாரி”, என்றாள்.

“ப்ச் விடு!… மாத்தி, மாத்தி, சாரி சொல்லியே நம்ம காலம் ஓடிடும் போல! என்ன சொல்ல…”, என்று வருத்தத்தோடு, சிபி சொல்ல… அந்தக் குரல் அவனின் வேதனையை எடுத்துச் சொல்ல..

அந்த வேதனையைக் குறைக்க, இல்லை, இல்லாமல் செய்ய முடிவெடுத்தவள்… 

இன்னும் அவன் மேல் நன்றாக சாய்ந்து கொண்டு, அவளும் அவனைச் சுற்றி கையைப் போட்டுக் கொண்டு…. “ஆமாம்”, என்று சொன்னாள்..

சட்டென்று அவளைப் பார்த்து திரும்பியவன், “என்ன ஆமாமா, இன்னும் என்ன செய்யறதா உத்தேசம்”, என்று சிபி கோபமாகக் கேட்க…

“உத்தேசமா? தெரியலை?”, என்றாள் நிறுத்தி நிறுத்தி… குரல் சோகத்தைக் காட்ட… முகம் கிண்டலைக் காட்டியது…

“என்ன கிண்டல் பண்ற?”,

“ம்ம்ம்ம்! கல்யாணம் ஆனதுல இருந்து சைட் அடிக்கறேன் நான்… ஆனா என் மச்சான் என்னை இன்னும் சைட் அடிக்கலை… அது கூட பரவாயில்லை, நான் டிரஸ் மாத்தினா கண்ணை மூடிக்கறார்… அவ்வளவு சகிக்காம இருக்கேன் போல… நான் ஹாஃல்ப் டிரஸ்ல இருந்தா போர்த்தி விடறார்…. நான் இப்படி அரையும் குறையுமா உட்கார்ந்து இருக்கறேன், சோக கீதம் வாசிக்கறார்… ரொம்பா நல்லவர்”, என்று முகத்தைப் பாவம் போல வைத்துச் சொல்ல…

அவளை முறைத்த சிபி… “என்ன சைட் அடிக்கலையா? எப்படி அடிக்க… இவ்வளவு புண்ணு பண்ணி வெச்சிக்கிட்டு… முகத்துல வலியைக் காட்டும் போது சைட் அடிப்பாங்களா… கண்ல தண்ணி விடற புண் எரிச்சல்ல… இதுல நீ டிரஸ் மாத்துற வேதனையைப் பார்ப்பாங்களா…. ஹாஃல்ப் டிரஸ்ல இருக்கும் போது, அந்தப் புண் தான் கண்ணுக்குத் தெரியுது அப்புறம் எதைப் போய் ரசிக்க..”,

“ரொம்ப நல்லவன் எல்லாம் இல்லை நானு, இன்னும் சேன்சே கிடைக்கலை”, என்றான் கடுப்பாக….

“சேன்ஸ் எல்லாம் கொடுப்பாங்களா? க்ரியேட் பண்ணிக்கணும்…!”,

“என்னத்த க்ரியேட் பண்ணுவாங்க? புண்ணு ஆறுர வரை ஒன்னும் க்ரியேட் பண்ண முடியாது”, என்றான்.

“ஆங்!”, என்று விழித்தவள், “என்ன? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்…?”,

“ம், விளங்கும்! சம்மந்தம் எல்லாம் விளக்க முடியாது! நீ சின்னப் பொண்ணு..”,

“ம், எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு…. நான் சின்னப் பொண்ணா…”, என்று முகத்தை சுருக்க…

 “கல்யாணம் ஆகி என்ன பண்ண, கிழிஞ்சது… நீ சின்னப் பொண்ணு தான்! இல்லைன்னா இங்கப் போய் சூடு நீயே வெச்சிக்குவியா?”, என்றான் கடுப்பின் உச்சமாக…

“அப்போ!!!!!!!! மச்சான் மேல தப்பில்லை! நான் தான் தப்பு…!”, என்றாள் பாவனையாக…

“புரிஞ்சா சரி….”, என்றான் சிபி…

“இன்னும் புரியவைக்கவேயில்லை… இதுல புரிஞ்சா சரியா?”, என்றாள் நக்கலாக…

“நீ எவ்வளவு பேசினாலும் மச்சான் அசர மாட்டேன்..”,

“ஓஹ்! அவ்வளவு ஸ்ட்ரிக் ஆபிசரா நீங்க..”,

“ம், ரொம்ப… வா! காத்து இன்னும் வேகமாக அடிக்குது…!”, என்று அவளை அணைத்திருந்த அணைப்பை விலக்கி எழுந்தான்…

“தூக்கு!”, என்பது போல ஜெயஸ்ரீ கையை நீட்ட… அவளை அப்படியே வாரி எடுத்தான்.

பின்பு உள்ளே போய் கட்டிலின் அருகில் இறக்கி விட… “போடாங்க!”, என்ற பாவனையை முகத்தில் ஸ்ரீ காட்ட… சிரித்து விட்டவன்..

“தனியா படுத்தா தூக்கம் வரலை! இங்க படுக்கறியா”, என்று கீழே இருந்த பாயைக் காட்டினான்.

“எனக்காக ஒன்னும் பொய் சொல்ல வேண்டாம்! நல்லா தூங்குங்க!”, என்று வார்த்தையைக் கத்தரித்து கத்தரித்து ஜெயஸ்ரீ பேச…

“ஓஹ்! பொய்ன்னு தெரிஞ்சு போச்சா”, என்று இன்னும் சிரிக்க…

“அய்யே! சிரிப்பை பாரு.. கல்யாணம் ஆன நாள்ல இருந்து பார்த்துட்டு தான் இருக்கேன், சரியான சாமியார்”, என்றாள்.

“அய்யே!”, என்று அவளைப் போல திருப்பிச் சொன்னவன்,   “நான் சாமியார் எல்லாம் இல்லை… ஆசாமி தான்!”, என்று அவளை இடையோடு அணைத்துப் பிடிக்க முற்பட்டு, அவளுக்கு வலிக்கும் என்று அவசரமாக விட்டவன்…

“பாரு! என்ன செஞ்சு வெச்சிருக்கன்னு என்னோட வேதனை உனக்கு புரியாது! இதுல என்னைக் கிண்டல் பண்ற?”, என்றான் வருத்தமாக..

புன்னகைத்தாள்.. “சிரி”, என்று செல்லமாக அவளின் தலையில் முட்டினாலும்… அவன் முகம் வேதனையைக் காட்டியது. கைப்பிடித்து, “இங்கேயேப் படு”, என்று கீழே அவளைப் படுக்க வைத்து, அவனும் இடைவெளி விட்டு அருகில் படுத்துக் கொண்டான்.

“அப்பாகிட்டயும் அம்மாகிட்டயும் பேசினேன்! நீ இங்க வந்துட்டேன்னு சொல்லிட்டேன்”, என்றான்.

“ம்! என்ன சொன்னாங்க?”,

“அவ்வளவு சந்தோஷம், அப்பாவுக்கும் அம்மாவுக்கும்… ஆனா இந்த சந்தோஷம் அவங்களுக்கு பத்தாது.. நிறைய கடன் வீட்ல, எல்லாத்தையும் சரி பண்ணனும்! உடனே முடியாது! ஆனா சில வருஷத்துல சரி செய்யணும்..”,

“எப்படி, முடியுமா?”,

“ஏன் முடியாது? ரெண்டு வருஷமா விளைச்சல் இல்லை.. அதில்லாம தேக்கு மரம் ஒரு ரெண்டு ஏக்கர்ல  இருக்கு… சில மரங்களை அதுல வெட்டி எடுத்து சீர் பண்ணனும்… அப்படி செய்யும் போது எப்படியும் அதுல சில லட்சம் லாபம் வரும், ஆனா முழுமையான லாபம் இருபதஞ்சி முப்பது வருஷம் கழிச்சு…. கோடில வரும்… அதுவரை நடுவுல இருக்குற மரத்தை அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை வெட்டி எடுத்து சீர் செய்யணும் அப்போ எல்லாம் லாபம் வரும்”.  

“இப்போ அப்படி செய்யும் போது முக்கால் வாசி கடன் அடைஞ்சிடும்! அப்புறம் விவசாயம் செய்ய ஆரம்பிச்சா எல்லாம் அடைச்சிடலாம்! நம்பிக்கை இருக்கு… நிலத்துல காலே வைக்கலை அப்பா… இந்த அருள்மொழியும் வர்மனும் என்னத்தை பண்றாங்க… கைக்கும் வாய்க்கும் பத்தாம…”,

“இதுவரை நான் பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலை! ஆனா இனிமே அப்படி இருக்க முடியாது. அவங்க வாழ்க்கையை எல்லாம் சீர் செஞ்சு கொடுக்கணும்.. அப்போதான் எனக்கு முழுசா நிம்மதி!”,    

“எல்லாம் சரியாகிடும்!”, என்று ஸ்ரீயும் நம்பிக்கை கொடுத்தாள்.      

அதன் பிறகு இருவரிடமும் பேச்சில்லை…. சிறிது நேரம் கழித்து, “சாரி இனிமே இப்படிப் பண்ண மாட்டேன்”, என்று ஜெயஸ்ரீ மீண்டும் மெதுவாகச் சொல்ல…

அவளை ஒட்டிப் படுத்துக் கொண்டவன், “தூங்கு எல்லாம் சரியாயிடும்… சரியாகலைன்னாலும், சரி பண்ணிடறேன்…”, என்று புன்னகையோடு அவள் முகம் பார்த்து சொல்ல…

அந்தப் புன்னகை ஜெயஸ்ரீயையும் தொற்ற…. அவனை இன்னும் ஒட்டிப் படுத்தாள்.    

“என்னை உசுப்பேத்தி ரணக்களமாக்காம விடறதில்லைன்னு ஒரு முடிவோட இருக்கியா”, என்றான்.

“ஆமாம்!”, என்பதுப் போலத் தலையாட்ட.. எழுந்து உட்கார்ந்தவன்… “உன் டிரஸ் எடுக்கும் போதே பார்த்தேன்! மறந்துட்டேன்!”, என்று எழுந்து போய்… அவளின் ஹேண்ட் பேகை எடுத்து வந்தான்…

அதில் அவன் கொடுத்த கொலுசு டப்பா….

“என் டிரஸ் எடுக்கும் போது இதை எதுக்கு பார்த்தீங்க…”,

அசடு வழிந்தவன், “கோபத்துல இதை தூக்கி போட்டுட்டியான்னு பார்த்தேன்”,

“நான் ஒரு வேலை பீரோல வெச்சிருந்தா…?”,

“உன்னோட வெச்சிருப்பன்னு ஒரு நம்பிக்கை”, என்று புன்னகைக்க… அவனின் மலர்ந்த முகம் ஸ்ரீயை வசீகரிக்க… அவனைப் பார்த்திருந்தாள்.

“போட்டுவிடட்டுமா?”, என்று அவன் கேட்க விரும்புவது தெரிந்து, போட்டு விடுங்க”, என்று அவளே சொல்ல…

அவளுக்கு வலிக்காமல் காலைத் தூக்கி மடியில் வைத்து இரண்டு கால்களிலும் அணிவித்தான்.

“இது போட்டதுக்கு அப்புறம் என் கால் கொஞ்சம் அழகா இருக்கில்ல”, என்றாள் கருகிப் போன அவளின் கால்களை பார்த்துக் கொண்டே…

“கொஞ்சம் இல்லை, ரொம்ப அழகு…… உன் கால்… உன் முகம்… உன் சிரிப்பு..”, என்று சொன்னவன் அதற்கு மேல் சொல்ல வராமல் நிறுத்த… 

“அப்புறம்?”, என்று ஸ்ரீ ஆர்வமாக கேட்பது போலக் கிண்டல் செய்ய…

“அதான் எனக்கு வர்ணிக்க வரலைன்னு தெரியுதில்ல..”, என்று சிபி அசடு வழிந்தான்.

சிரித்தவள், படுத்துக் கொள்ள…. அவனும் படுத்தான்… இந்த முறை ஸ்ரீயை ஒட்டி சிபி படுத்துக் கொள்ள…. அவள் இன்னும் நெருங்கிப் படுத்துக் கொள்ள… “கால் வலிக்கப் போகுது…”, என்று அவன் சொல்லி முடிக்க முடியும் முன்…

விலகிப் படுத்து, “என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது?”, என்ற பாவனையோடு அவனைப் பார்த்து முறைக்க…

“என்னைப் பேசி முடிக்க விடு!”, என்றவன்… திரும்பவும் அவளுடன் நெருங்கிப் படுத்து, “காலைத் தூக்கி என் மேல போட்டுக்கோ! வலிக்காது!”, என்று சொல்ல…

“நீயா பேசியது!”, என்பதுப் போல ஜெயஸ்ரீப் பார்க்க…

“அய்யே நானா தான் சொல்றேன், நீ முறைச்சதால இல்லை”, என்று சிபி பாவம் போல சொல்ல… மெல்லிய புன்னகை ஸ்ரீயின் முகத்தில். நெருங்கிப் படுத்தவளால் காலைத் தூக்கி மேல போட முடியவில்லை… கூச்சம் தடுத்தது….

“வெறும் வாய்ப் பேச்சு தான்!”, என்று சிபி சொல்லிய போதும் ஜெயஸ்ரீ போடவில்லை…

வெட்கத்தில் முகத்தை திருப்ப.. புன்னகைத்த சிபி… “போட்டுக்கோ, இல்லைன்னா தூக்கத்துல நான் போட்டுடுவேன் வேணும்னே”, என்று அவளின் காதில் கிசுகிசுப்பாக சொல்ல…

கண்களில் மின்னிய வெட்கத்தோடு, அவன் மீது வாகாக கால்களை போட்டவள்… மிகுந்த நிம்மதியோடு உறங்க முற்பட…

ஆதரவாக அவளின் மீது கைகளை போட்டுக் கொண்டு சிபியும் உறங்க முற்பட…

“ஐயோ! இதுக்கே இவ்வளவு பில்ட் அப்பா… அதெல்லாம் ஸ்பீடா சுத்த முடியாது, உங்களுக்கு இவ்வளவு காத்து போதும்”, என்று மேலே இருந்து அவர்களைப் பார்த்து சுற்றிக்கொண்டிருந்த காற்றாடி கூட அவர்களைப் பார்த்து சுழற்றலைக் குறைக்க…

“நீ காத்து கொடுத்தா என்ன? கொடுக்கலைன்னா என்ன? அவங்க மனசுல நிறைஞ்சு இருக்குற சந்தோஷம் அவங்க தூக்கத்தைக் கலைக்காது…”, என்று இயற்கைச் சொன்னது.

ஆம்! என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும், மனதின் பாரம் ஒரு நிம்மதியான உறக்கத்தைக் கொடுக்காது… ஆனால் மனதின் நிம்மதி வெற்றுத் தரையிலும் அப்படி ஒரு ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுக்கும்.

அப்படித்தான் கணவனும் மனைவியுமாகி விட்ட போதிலும்… இதுவரை இல்லாத ஒரு அமைதியை இருவரின் மனமும் தாங்கி நிற்க… உடலின் தேவைகள் கூட பின் செல்ல.. ஒரு நிம்மதியான உறக்கம் அமைதியான முகத்தோடு இருவரிடமும்.

அதுவே சொன்னது அவர்களின் வாழ்க்கை செழிப்பாக எந்த தடைகளும் இன்றி உணராத காதலை உணர்த்திவிடும் நோக்கோடு செல்லுமென்று.           

 

 

Advertisement