Advertisement

அத்தியாயம் இருபத்தி நாலு :
“அச்சோ” என்று பதறி இரண்டு மூன்று பெண்களும் வர, ஒரு சேர் கொண்டு வந்து அவளை அமர்த்தினர், ஒருவர் குடிக்க தண்ணீர் கொடுக்க,           
குடித்து நிமிர்ந்தாள்.
கும்பல் சேர்ந்திருக்க, மயக்கம் வருவது போல இருக்க அப்போதும் “எதுக்கு என் காலை தட்டின?” என்றாள் ஜெயராஜை பார்த்து.
“என்ன நீ விழுந்துட்டு என்னை சொல்றியா நீ?” என்று அவன் எகிற,
அவளுக்கு அழுகை வர இருக்க, வலியும் தெறிக்க, “நீதான், நீதான், எனக்கு தெரியும்” என்று சொல்லும் போதே கண்கள் கலங்கியது.
“நான் செய்யலை, அப்படியே செஞ்சிருந்தாலும் தெரியாம நடந்திருக்கும்” என்று அவன் அசால்டாய் பேசினான்.
அதற்குள் அவனின் நண்பனும், சீஃப்  எக்ஸ்க்சிகுயுடிவ் மேனேஜரும் வந்து விட்டனர். அவர்கள் “என்ன?” என்று கேள்வி கேட்க,
“இதுக்கு என் மேல ஒரு கண்ணு, சும்மா என்னை வம்புக்கு இழுக்குது” என்று சொல்ல,
அதற்கு மேல் ஜெயந்திக்கு பொறுக்க முடியவில்லை, அவளின் கை பேசி எடுத்து மருதுவிற்கு அழைக்க, அவன் எடுக்கவில்லை.
அந்த நிமிடம் மனது அவனை தான் தேடியது, அப்பாவை அண்ணனை தம்பியை , ஏன் போலிசை கூட தேடவில்லை.  
உடனே விஷாலிற்கு அழைத்தாள் , “உங்க முதலாளி இல்லையா?” அவளின் குரலே ஒரு மாதிரி இருந்தது.
“என்ன மேம் என்னாச்சு?” என்று கேட்டுக் கொண்டே மருதுவின் கேபின் சென்றான்.
மருது அவன் முன் அமர்ந்திருந்த ஒரு டீலரிடம் பேசிக் கொண்டிருந்தான். ஜெயந்தியின் ஃபோன் அடிக்க, எடுப்பதா வேண்டாமா என்று அவன் மனம் பட்டிமன்றம் நடத்திய போதே அது நின்றிருந்தது.
ஒரே நிமிடத்தில் விஷால் வந்திருந்தான் “அண்ணி ஃபோன்” என்று
“என்னவாம் கேளு?” என்று மருது சொல்ல,  
“குரலே சரியில்லை, நீங்க பேசுங்க” என்று கொடுத்து விட்டான்.
அதனை வாங்கி காதில் வைத்து “ஹலோ” என,
“எனக்கு இங்க ஒரு பிரச்சனை நீங்க வர்றீங்களா?” என்றாள். அவளின் குரலில் பெரிதாய் அப்போது வித்தியாசம் இல்லை. அவள் முயன்று சரி செய்திருந்தாள்.
“என்ன பிரச்சனை விமலனை அனுப்பறேன்” என்றான் முருக்கை விடாமல்.  
“எனக்கு நீங்க தான் வரணும், அதுக்காக எல்லாம் உங்க வீட்டுக்கு வரமாட்டேன், நீங்க வாங்க” என்று யாருக்கும் கேட்காமல் மெல்லிய குரலில் தட்டு தடுமாறி அழுகையை அடக்கி சொல்ல,
ஜெயந்தியின் அந்த குரல் மனதை ஏதோ செய்தது, அதையும் விட அப்போது தான் குரலின் வித்தியாசம் புரிய ஏதோ சரியில்லை என்று தெரிந்தது. “எங்கே வரணும்?” என்று உடனே எழுந்து விட்டான்.  
அவள் இடம் சொல்லவும், குரல் என்ன முயன்றும் தேம்பி விட்டது.
“ஷ், அழக் கூடாது, எதுன்னாலும் பார்த்துக்கலாம், வந்துட்டே இருக்கேன், தைரியமா இருக்கணும்” என்று அவளுக்கு சொல்லிக் கொண்டே, 
“டேய், நீ இவரை கவனி” என்று டீலரை விஷாலிடம் விட்டு, வெளியில் வந்தவன் விமலனை அவசரமாய் கூப்பிட்டு வரச் சொல்லி, இவன் பைக் எடுக்க விமலன் வந்து விட்டான்.
“என்ன சர்?” என்றவனிடம்,  
பைக்கை உதைத்துக் கொண்டே “ஏறுடா?” என்றான்.
என்னவோ ஏதோவென்று பயந்து அவனும் பதட்டமாய் ஏற,
அந்த ட்ராபிக்கில் பைக் சென்ற வேகத்திற்கு விமலன் பயந்து பைக்கை கெட்டியாய் பிடித்துக் கொண்டான்.
என்னவோ ஏதோ வென்று மருதுவின் மனம் அவ்வளவு பயந்து இருந்தது. ஆனாலும் கார் கம்பனியை சொன்னதால் சுற்றிலும் ஆட்கள் இருப்பர், பெரிதாய் எதுவும் இருக்காது என்று தான் வந்தான்.     
அங்கிருந்து பக்கம் தான், பத்தே நிமிடம் அங்கே வந்து விட்டனர். சர்விஸ் சென்டர் என்பதால் பைக்கை அங்கே உள்ளேயே விட்டான்.
ஒரு இடத்தில கும்பலாய் இருக்க, பைக்கை அப்படியே விட்டு வேகமாய் ஓடிப் பார்க்க, ஜெயந்தி ஒரு இடத்தில் அமர்ந்திருக்க சுற்றிலும் ஆட்கள்.
அவள் யாரையும் பக்கம் விடவில்லை, முதலுதவி செய்து கொள்ளவில்லை, அந்த இடத்தை விட்டும் அசையவில்லை.
அவளின் நண்பனும் “வா ஹாஸ்பிடல் போகலாம்” என்று வற்புறுத்திக்  கொண்டிருக்க, அவள் “எங்க வீட்ல இருந்து வருவாங்க இப்போ” என்று சொல்லி அமர்ந்திருந்தாள்.
மருது அவளை அப்படி பார்த்ததும் அருகில் ஓடிச் செல்ல, கூட விமலனும் ஓடினான். அந்த இடமே பரபரப்பானது.
ஜெயந்தியால் எழ முடியவில்லை, மருது அருகில் வந்ததும், அது வெளியிடம், சுற்றிலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் உட்கார்ந்த வாக்கிலேயே அவனை கட்டிக் கொண்டு தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.
“என்ன? என்ன நடந்தது? என்ன இது ரத்தம்?” என்று மருது பதற,
விமலன் “என்ன ஆச்சு ஜெயந்தி” என்று அவனும் பதற,
ஜெயராஜ் அங்கிருந்த நழுவ ஆரம்பித்தான். மருதுவை எதிர்பார்க்கவில்லை. வீட்டில் இருந்து வருவார்கள் என்று சொல்லி அமர்ந்திருக்க அவளின் குடும்பத்தில் யாராவது வந்தால் அவர்களின் முன் இவளை பேசலாம் என்று அமர்ந்திருக்க, சத்தியமாய் மருதுவை எதிர்பார்க்கவில்லை.
ஜெயராஜிற்கு கை கால்கள் வெலவெலத்து விட, அதிர்ந்து நின்று விட்டவன், சுயம் பெற்று விரைந்து நகர்ந்தான்.       
ஜெயந்தியின் நண்பன் ஜெயராஜின் மேல் ஒரு கண் வைத்திருந்தவன், “எங்கடா ஓடற?” என்று அவனை பிடிக்க, விமலனை பார்த்தவன் “அண்ணா இவனை பிடிங்க” என்று துணைக்கு அழைத்தான்.
விமலனும் பாய்ந்து பிடித்துக் கொள்ள, மருது அவனை யாரென்று பார்த்தான்.
“டேய், நீ விஷாலோட மாச்சான்ல”
“என்ன பண்ணான் உன்னை?” என்று ஜெயந்தியிடம் கேட்க,
“என்னை தப்பா பேசினான், கீழ தள்ளி விட்டுடான், அவன் யார்னே எனக்கு தெரியாது” என்று ஓ வென்று சிறு குழந்தையாய் அழுதாள்.
அவளுக்கு தான் யாரென்று தெரியாது, மருதுவிற்கு தெரியும், இது தன்னைக் கொண்டு ஜெயந்தியிடம் வம்பு செய்து விட்டான் என்பது புரிந்தது.  
தைரியமான் பெண் தான், ஆனால் அந்த நிமிடம் சூழ்நிலையின் கணம் தாங்கவில்லை. ஒரு வேளை மருதுவுடன் இருந்திருந்தால் அவனை அழைக்காமல் அவளே கூட சமாளிக்கும் தைரியத்துடன் இருந்திருப்பாள். மனதளவிலேயே சோர்வு தானே, இப்போது மனது மருதுவை மட்டுமே தேடியது.    
ஜெயந்தியின் அழுகையை பார்த்து பயந்து விட்டவன் “ஒன்னுமில்லை, ஒன்னுமில்லை, முதல்ல ஹாஸ்பிடல் போகலாம் வா” என்றான் மருது. அப்படி ஒரு கோபமும் ஆத்திரமும் பொங்கிய போதும், முதலில் ஜெயந்தியை பார்ப்பது முக்கியமாய் பட அவளை ஹாஸ்பிடல் அழைத்து போக நினைத்தான். ஜெயராஜ் எல்லாம் அவனிற்கு ஒரு ஆளே இல்லை.  
அதற்குள் மருது அவனின் கர்சீப் கொண்டு ரத்தத்தை துடைக்க, சென்ற முறை அடிபட்டு ஒரே மாதம் தான் ஆகிறது. ரத்தத்தை துடைக்கும் போதே மருதுவிற்கு அது ஞாபகம் வர, அவளை எழுப்ப முற்பட்டான்.
ஜெயந்தியும் எழ முயன்றவள், “எனக்கு வலிக்குது நிக்க முடியலை” என்று வலியில் கதற,
அவனை அவனே நிந்தித்துக் கொண்டான். இதோ போன மாதம் என்னால் வலியில் துடித்தாள், இன்று யாரோ ஒருவனால், அந்த சூழலின் கணம் அவனாலும் தாள முடியவில்லை.   
“விமலா நீ வா இங்க” என்று மருது அவனை பார்த்து கத்த, அவனின் உதவிக்கு வேகமாய் இரண்டு மூன்று பேர் வந்தனர்.
விமலனை அருகில் வைத்துக் கொண்டவன், “பிடிடா இவளை” என்று அவனை பிடிக்க வைத்து, இரண்டே நிமிடம் என்றாலும் ஜெயராஜை துவம்சம் செய்து விட்டான்.
அந்த எக்ஸ்க்சிகியுடிவ் மேனேஜர் தான் “அவனை விட சொல்லு ஏதாவது ஆகிடுச்சுன்னா நம்ம பேர் கெடும்” என்று ஜெயந்தியின் நண்பனிடம் சொல்ல,
“அப்போ ஜெயந்திக்கு அடிபட்டா மட்டும் நம்ம பேர் கெடாதா, பொண்ணுங்க இந்த இடத்துக்கு எப்படி வேலைக்கு வருவாங்க வேணும்னா நீங்க போய் சொல்லுங்க” என்று ஜெயந்தியின் நண்பன் கோபமாய் பேசினான்.      
மருதுவின் அருகில் போகும் தைரியம் யாருக்கும் இல்லை. உண்மையில் இது ஜெயந்தியின் பிரச்சனை அல்ல. மருதுவின் மனைவி என்பதால் ஜெயந்திக்கு வந்த பிரச்சனை. அதை புரிந்தவன் மருது மட்டுமே!  
அதற்குள் ஜெயந்தி மயங்க, “மாமா வாங்க” என்று விமலன் பதட்டமாய் அழைக்க,
“என்னை தெரிஞ்சவன் எவன்டா இங்க இருக்கீங்க?” என்று பார்த்திருந்தவர்களை பார்த்து ஒரு சத்தம் கொடுத்தான்.
“நான்கைந்து பேர் சொல்லுங்கண்ணா” என்று வந்து நின்றவர்கள், “எங்களுக்கு அண்ணின்னு சத்தியமா தெரியாதுண்ணா” என்றனர்.
“அண்ணியோ? யாரோ? எந்த பொண்ணுக்கு பிரச்சனைன்னாலும் போக மாட்டீங்களா? அப்புறம் எதுக்குடா மீசை வெச்சு ஆம்பளைங்கன்னு சுத்தணும்”
“எந்த பொண்ணுன்னாலும் போங்கடா, அப்போ தான் நம்ம வீட்டு பொண்ணுங்களுக்கு பிரச்சனைன்னாலும் எவனாவது வருவானுங்க” என்று சொல்லி,
“இவன் நான் திரும்ப வர்ற வரைக்கும் இந்த இடத்தை விட்டு அசையக் கூடாது” என்று சொல்லி ஜெயந்தியை தூக்கிக் கொண்டான்.
அதற்குள் ஜெயந்தியின் நண்பன் கார் எடுத்து வந்திருக்க, அதில் ஹாஸ்பிடல் விரைந்தனர்…
மீண்டும் அதே ஹாஸ்பிடல் அதே டாக்டர், “என்ன மருது இது, திரும்ப அவங்க நெத்தியில் அடிபட்டிருக்கு என்ன ஆச்சு?” என்றார் டாக்டர் சற்று குறைபட்ட குரலில்.  
“கீழ விழுந்துட்டா சர்” என்றான் சற்றும் பதட்டம் குறையாதவனாக.
“என்ன மருது நீங்க? பார்த்து கவனமா இருக்க சொல்ல வேண்டாமா? வேற எங்கேயும் அடி பட்டு இருக்கா?” 
“கால்ல கூட போல சர், நிக்க முடியலை சொன்னா?” 
அவனை ஒரு பார்வை பார்த்து அவளுக்கு சிகிச்சை ஆரம்பித்தார். ஒரு குற்றம் சாட்டும் பார்வை தான்.
“உண்மையா நான் எதுவுமே பண்ணலை” என்று அவன் சொல்ல,
“அப்போ அடிக்கடி விழறாங்கன்னா ஏதாவது மயக்கம் வருதா, தசை சோர்வு ஏதாவது இருக்கா டெஸ்ட் பண்ணி பார்த்துடலாம்” என்றார்.
அவன் அதெல்லாம் இல்லை என்பது போல சொல்லவில்லை, பின்னே “அப்படி இல்லை, முதலில் நான் அடித்தேன். இப்போது வேறு ஒருவன் தள்ளி விட்டு விட்டான். மற்றபடி ஆரோக்யமான பெண்” என்றா சொல்ல முடியும். அமைதி காத்தான்.    
விமலன் எல்லாம் பார்த்து நின்றான். ஜெயந்தியின் நிலை பார்த்து மனது அப்படி துடித்தது.  
அதிர்ச்சி மயக்கம் தான், ஆனாலும் நெற்றியில் இரண்டு தையல் போட வேண்டி இருக்க, டாக்டர் பிளாஸ்டிக் சர்ஜன்னை அழைத்து போட சொன்னார் அதிகம் தழும்பாகாமல் இருக்க.
ஜெயந்தி சிறிது நேரத்தில் கண்விழித்து விட்டாள், அழக்கூடாது என்று நினைத்தாலும் கண்களில் நீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது.
காயம் சுத்தம் செய்து தையல் போடப் பட்டு விட, “வேற எங்கம்மா வலிக்குது?” என்று டாக்டர் கேட்க,
அவள் தான் வலியே தாங்க மாட்டாளே, “தெரியலை டாக்டர், எல்லா இடமும் வலிக்குது. எனக்கு சொல்லத் தெரியலை” என்று விட்டாள்.
பின்னே சரியாய் ஒரு மாதம், அன்று இருந்த நிலை தானே, வயிற்று வலியும் சேர்ந்திருக்க , தன் நிலையை யாரிடம் சொல்ல முடியும்.    
அவளை சரி பார்த்து அவருக்கு தோன்றிய இடத்தில் எல்லாம் எக்ஸரே எழுதிக் கொடுத்தவர்,
“அட்மிட் பண்ணிடுங்க, எல்லாம் பார்த்துட்டு நாளைக்கு போகலாம்” என்று விட்டார் அவர்.
மருதுவும் உடனே அட்மிட் செய்து விட்டான்.
ஜெயந்தி படுத்திருக்க விமலன் அவளின் அருகில் அமர்ந்திருந்தான். மருது அருகில் இருந்தால் அவன் தள்ளி நின்றிருப்பான். மருது தனியாய் அமர்ந்திருந்தான். முகமும் ஏதோ தீவிர யோசனையில் இருந்தது.  
டாக்டர் கேட்ட கேள்வி மருதுவை அசைத்து பார்த்து இருந்தது, அதாவது சிகிச்சை ஆரம்பிக்கும் முன் “நீங்க ஏதாவது ஃபேமிலி வே ல இருக்கீங்களா” என்று கேட்க அவனுக்கு புரியவில்லை. 
“புரியலை” என்றே அவன் சொல்லி விட
“உங்க மனைவி இப்போ கர்ப்பமா இருக்காங்களா? இல்லை இப்போ உடனே நீங்க குழந்தை பெத்துக்கற ஐடியால இருக்கீங்களா” என்றார்.
“இப்போ கர்ப்பமா இல்லை, ஆனா குழந்தை பெத்துக்கற ஐடியான்னா புரியலை, அது தானா வர்றது தானே” என்று விட,
டாக்டர் சிரித்து அவனின் தோளை தட்டி கொடுத்தவர், “எதுக்கும் நான் பாதுகாப்பான மருந்து மாத்திரையே கொடுக்கறேன், வலி இது அதிகம் குறைக்காது. கொஞ்சம் இருக்கும், பொருத்து தான் ஆகணும்” என்று சொல்லி விட்டார்.
இது அவனிடம் தனியாய் தான் சொன்னார். ஜெயந்திக்கு தெரியாது.   
மனதில் அதுவே ஓடிக் கொண்டிருந்தது “குழந்தை” என்ற வார்த்தை.     
விமலன் “இன்னும் ரொம்ப வலிக்குதா? கண்ல தண்ணி வந்துட்டே இருக்கு, டாக்டர் கிட்ட சொல்லட்டுமா?” என்றான்.
“அண்ணா அவன் யாருன்னே எனக்கு தெரியாது? ஏன் என்னை அப்படி பேசினான்னும் தெரியாது, என்னை இப்படி எல்லாம் யாரும் பேசினதே இல்லை”  
“அவன் பேசறான், ஒருத்தன் என்னை கழட்டி விட்டுட்டானாம். அதனால நான் அடுத்தவனை பிடிக்கறனாம்”
“அன்னைக்கு இவர் என்னை அடிச்சப்போ கூட ஒருத்தன் சொல்றான். இவர் என்னை அடிச்சிருக்கார்னா, அடிக்கிற மாதிரி நான் என்னவோ பண்ணிட்டேன்னு”
“எனக்கு தெரிஞ்சு நான் யாரையும் சைட் கூட அடிச்சதில்லை, இந்த மாதிரி தான் ஒருத்தன் என் கணவனா வரணும்னு கூட நினைச்சதில்லை, கல்யாணம் பண்ணின நாள்ல இருந்து, நான் இவரை தவிர வேற யாரையும் நினைச்சது இல்லை” 
“யாரோ ஒருத்தன் என்னை பார்த்து சொல்றான் இவர் கழட்டி விட்டுட்டார்ன்னு”  
“அப்போ என்னை இவர் வீட்டை விட்டு துரத்தினது எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு. எல்லோர் முன்னமும் என்னை அசிங்கப் படுத்திட்டார். நான் என்ன தப்பான பொண்ணா அண்ணா? ஏன் என்னை எல்லோரும் அடிக்கறாங்க, வலிக்குது, செத்துடலாம் போல இருக்கு. எனக்கு உயிரோட இருக்கவே பிடிக்கலை. ஏன் நம்மை மட்டும் கடவுள் இப்படி வெச்சிட்டார்?” என்று கேட்டு அவள் சத்தமாய் அழ,
என்ன பதில் சொல்வது என்று கூட தெரியாமல் விமலன் அவளை அணைத்து பிடிக்க, அவனை கட்டிக் கொண்டு அப்படி ஒரு அழுகை.
விமலன் தலை நிமிரவே இல்லை தலை குனிந்து இருக்க, அவனின் கண்களின் கண்ணீர் சொட்டு சொட்டாய் ஜெயந்தியின் தலையில் விழுந்தது.   
மருது எனும் உருவம் அவளின் வார்த்தைகளில் அசையாமல் நின்றது. மருதாச்சலமூர்த்தி என்ற மனிதன் மீண்டும் மீண்டும் ஒன்றுமில்லாமல் போய் நின்றான்.  
எங்கேயோ தவறி விட்டது புரிய, அமைதியாய் அமர்ந்து கொண்டான்.
எந்த சமாதானமும் சொல்லவில்லை, முதலில் தங்களின் பிரச்னையை ஒருவன் பேசுகிறான் என்றால் விஷயம் எப்படி வெளியே போனது என்ற யோசனை. விஷாலின் மச்சான், உடனே விஷாலிற்கு அழைத்து “வாடா” என்றான்.
அவனும் பத்தே நிமிடத்தில் வந்து விட,
அவன் உள்ளே வந்து ஜெயந்தியை பார்த்தவாரே கவலையோடு “என்னண்ணா?” என்று கேட்டது தான் தெரியும், மருது விட்ட அறையில், தூர போய் விழுந்தான்.
     
     
  
                 
   

Advertisement