Advertisement

அத்தியாயம் நான்கு :

ஆம்! அவரின் கவலைக்கு தக்கவாறு அத்தனை பஸ்கள் வைத்திருக்க.. டிரைவர்கள் மட்டும் ஒரு ஐநூறு பேர் இருக்க.. அவரின் மகன் யாருக்கோ டிரைவராக தானே சென்று கொண்டிருந்தான்.

அவனின் அம்மாவிற்கு தெரியும் போது இருக்கிறது அவருக்கு…

வேதா அருகினில் உறங்க.. காண்டீபன் காரின் வேகத்தை கூட்டியிருந்தான்.. மற்ற விஷயங்களில் எப்படியோ வண்டி ஓட்டும் போது வேகம் அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.. கார் அவனின் கைகளில் பறந்தது..

வீட்டை விட்டு வந்த நாளாய் இருந்த அலைபுருதல் அப்போது இல்லை.. காலை முதலே மனதிற்கு இதமாய் இருந்தது.. இப்போது மிகவும் அதிகம்..

மனதிற்கு இதமாய் இருந்தாலும், அந்த முகம் கவர்ந்தாலும்.. உறங்குகிறாள் என்று கூட அந்த முகம் காண விழையவில்லை.. காண்டீபனை பொறுத்தவரை அது மிகவும் தவறு. கிருத்திகாவின் வளர்ப்பு அப்படி.. அவனை நம்பி அருகில் துயில் கொள்ளும் போது அதை அவன் மனம் செய்யாது.

பாட்டைக் கூட போடவில்லை.. போட்டால் அவளின் உறக்கம் கலைந்துவிடுமோ என அஞ்சி..

சில முறை யோசித்து இருக்கின்றான், “திருமணதிற்கு பெண் பார்க்கும் போது எப்படிப் பார்த்தவுடனே எதுவும் தெரியாமல் இந்தப் பெண் பிடித்திருக்கின்றது எனத் தோன்றும்” என,

“இப்போது பிடித்து தானே இருக்கின்றது, என்ன தெரியும் இவளைப் பற்றி” நினைக்கும் போது முகத்தில் ஒரு முறுவல் தானாக மலர்ந்தது.

ஆனாலும் “என்ன செய்து கொண்டிருக்கிறாய் காண்டீபா” என மனம் கேள்வி எழுப்ப, “ஆமாமில்லை, இது தப்பு, இவள் உன்னை விட பெரியவள்” என வேதாவின் புறம் செல்லும் தன் எண்ணத்திற்கு கடிவாளமிட்டான்.

சென்னைக்குள் நுழைய இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையில் நேரம் அதிகாலை நான்கை காட்ட.. தூக்கம் வரும் போலத் தோன்ற, ஒரு டீக்கடையின் ஓரமாக நிறுத்தினான்.

காரை நிறுத்தி இறங்கவும்.. வேதாவும் விழித்துக் கொண்டாள்.. ஆனால் அவள் விழித்ததை காண்டீபன் கவனிக்கவில்லை.. அவன் பாட்டிற்கு சென்று ஒரு டீ ஆர்டர் செய்ய.. திரும்ப காரை பார்த்தால் வேதாவும் இறங்குவது தெரிந்தது…

அருகில் வந்தவன் “சாரி, கதவை வேகமாக மூடி எழுப்பிட்டேனா?” என்று ஒரு முறுவலுடன் கேட்க.. ஏனோ வேதாவிற்கு நிச்சயம்.. இவன் டிரைவர் அல்ல என.. அவனின் பாடி லேங்குவேஜ் அப்படி தான் சொன்னது..

“நீங்க எவ்வளவு நாளா டிரைவ் பண்றீங்க?”  

“ஓட்டக் கத்துக்கிட்டதுல இருந்துங்க”  

“தோடா..” என வேதா இடுப்பில் கை வைத்து முறைத்தாள்..

“ஏனுங்கம்மணி நிஜமாலுமுங்க”  

“உங்களுக்கு எந்த ஊர்”  

“என்ர பேச்சை பார்த்தும் கண்டுபிடிக்கலீங்களா?” என பதில் கேள்வி கேட்டான்.  

“கோயம்பத்தூரா”  என்றவளிடம்.. “ம்ம்ம்” என்பது போல  தலையசைத்தான்.. அதற்குள் டீ வர.. “உங்களுக்கு” என வேதாவிடம் கொடுக்க முற்பட.. “நான் டீ குடிக்க மாட்டேன்.. காஃபி தான்” என,

“தம்பி, ஒரு காஃபி” என்றவன்.. “நான் காஃபியே குடிக்க மாட்டேன், ஏன், டீ கூடக் குடிக்க மாட்டேன்.. இந்த ஒரு மாசமா பழகிடுச்சு” என,

“நீங்க டிரைவரா?” என்றாள் திரும்ப,

“இப்போ அதைத்தான் பண்றேன்” என்றவனை திரும்ப முறைத்தவள்.. “உங்களை நம்பி நான் கூட வர்றேன், அதுவும் முன்னாடி உட்கார்ந்து வர்றேன், ஆனா நீங்க உங்க பேர் கூட சொல்ல மாட்டேங்கறீங்க.. எதுவும் சொல்ல மாட்டேங்கறீங்க!” என்று கூர்மையாகக் கேட்க..

“ஏனுங்கம்மணி.. என்ன தெரியணுமுங்க என்னை பத்தி.. கேளுங்க?” என்றவன் ஸ்டார்ட் தி முயுசிக் என்ற பாவனையில் அலெர்டாக அமர.. வேதாவிற்கு சிரிப்பு தான் வந்தது.    

“உங்க பேர்” என ஆரம்பித்தவளிடம்.. “ம்கூம், அதை மட்டும் நீங்க தான் கண்டுபிடிக்கணுமுங்க” என்றவன்.. “எங்கப்பா அம்மாவோட சண்டை, வீட்டை விட்டு வந்துட்டேன்.. அதனால இப்போ டிரைவர் வேலை” என்றான்.

அப்போது யாரோ வடநாட்டவர்கள் காரை நிறுத்தி பெங்களூர் செல்ல வழி கேட்க.. தெளிவான ஆங்கிலத்தில் காண்டீபன் சொல்லவும்.. கூடவே அந்த ஆங்கில உச்சரிப்பும் மிக நன்றாக இருக்கவும்.. நிச்சயம் ஒரு தேர்ந்த பள்ளியில் படித்திருப்பான் என காட்டிக் கொடுத்தது.

அவனது அந்த ஆறடி உயர முரட்டுத் தோற்றத்தை மனம் ரசித்தது. வெகு காலங்களுக்கு பிறகு ஒரு ஆண்மகனை சைட் அடிக்கின்றாள். அது அவளுக்கும் தெரிந்தது. இப்படி சகஜ மனப்பான்மையோடு யாரோடும் பேசி வருடங்கள் ஆகிவிட்டது.

அவளே வியப்பாக உணர்ந்தாள். “இவனுடன் எனக்கு பேச்சு சரளமாக வருகிறது.. முன் சீட்டில் உட்கார்ந்து இவனை நம்பி தூங்கிக் கொண்டு வருகின்றேன், எப்படி இது? யாரும் தவறாக நினைப்பார்களா என்ற எண்ணமே இல்லையே”       

அப்போது காஃபி வர.. அந்த கப்பை  அவளால் பிடிக்கக்கூட முடியவில்லை.. அவ்வளவு சூடு..

அவள் தடுமாற “குடுங்க” என வாங்கினான்.. “சுடுது, நான் இவ்வளவு சூடா குடிக்க மாட்டேன்” என,

“தம்பி இன்னொரு கப்” எனக் கேட்டு.. அதை ஆற்றி அவளிடம் கொடுக்க.. அதெல்லாம் மிகவும் இயல்பாய் இருந்தது.. கவர வேண்டும் என்றோ, கவனத்தை திருப்ப வேண்டும் என்பது போலோ கிஞ்சித்தும் இல்லை. அதை வாங்கிக் கொண்டவள் குடித்துக் கொண்டே “என்ன படிச்சிருக்கீங்க?” என,  

“எம் ஈ மெக்கானிகல் எஞ்ஜீனியரிங்”  என்றவனை, “ஆங்” என விழிவிரித்துப் பார்த்தாள்.

“எங்கப்பா கிட்ட சொல்லிட்டேன், அவர் குடுத்த பேர், படிப்பு, எதையும் யூஸ் பண்ண மாட்டேன்னு” என,

“அய்ய, என்னங்க இது.. அப்புறம் இவ்வளவு படிச்சிட்டு டிரைவர் வேலை பார்ப்பீங்களா?”  என முகத்தை சுருக்கியவளிடம்..

“அதுதான் எனக்கு விதிச்சிருக்குன்னா செஞ்சிட்டு போறேன்.. ரெண்டு மாசம் முன்ன தான் விடுதலை ஆனேன் இந்த படிப்புல இருந்து.. இப்போ தான் ஃப்ரீயா இருக்கேன்” என..

“பீ ஈ முடிச்சு உடனே சேர்ந்துட்டீங்களா?” என,

“அட ஆமுங்க.. இந்த இருபத்தி நாலு வயசா படிப்பை தவிர வேற ஒண்ணுமில்லை” என..

உடனே “என்ன? என்னை விட சிறியவனா? அவனையா நான் சைட் அடித்தேன்” என அதிர்ந்தாள்  வேதா.. சட்டென்று அமைதியாகி விட்டாள்..

“என்னாச்சுங்கம்மணி” என்று அமைதியாகிவிட்டவளைப் பார்த்து காண்டீபன் கேட்க..  

“ஒன்றுமில்லை” என்பது போல தலையை மட்டும் ஆட்டினாள்.. “இருந்திருந்து சில வருடங்களுக்கு பிறகு இப்போது தான் என்னை ஒருவன் கவர்கின்றான்.. இவன் என்னை விட சிறியவனா.. வேதா என்ன செய்கிறாய்?” எனத் தோன்ற அமைதியாகிவிட்டாள்.

கல்லூரியில் இருக்கும் போது ஆண்களை ரசித்ததுதான், “இவன் ஹேண்ட்சம், இவன் ஓகே” என்பது போல.. பின்பு அப்படியெல்லாம் யாரையும் மனம் நினைத்தது இல்லை. நினைக்கக் கூடாது என்று இல்லை, ஆனால் தோன்றவேயில்லை.. சிந்தனை முழுவதும் தொழிலில் மட்டுமே.  

அதிலும் காண்டீபனின் நிறம் தோற்றம் எல்லாம் முரட்டுத்தனத்தை தான் கொண்டிருந்தது.. இவனை விட எத்தனையோ வசீகரமான, அழகான, படித்த, வசதியான, பதவியில் இருப்பது போல ஆண்மக்களை பார்த்து விட்டாள்..

ஆனால் அவர்கள் புறம் திரும்பாத தன் மனம் இவன் புறம் திரும்புகின்றதா.. அதுவும் டிரைவராகத் தான் அறிமுகம் கூட ஆகியிருக்கின்றான்.. அதுவும் ஒரு நாள் அறிமுகம் மட்டுமே.. எப்படி இது சாத்தியம்..  வேதாவின் மனமே அவளை வியந்து பார்த்தது..             

“போகலாமா?” என எழ..

“ம்ம்” என்றபடி எழுந்தவள்.. முன் நடக்க.. “நன்றாகத் தானே பேசிக் கொண்டு இருந்தாள், என்னவாயிற்று” என்று காண்டீபனுக்கு தோன்றிய போதும், அவனும் அமைதியாகிவிட்டான். மீண்டும் பேச்சில் இழுக்கவில்லை.

நினைப்பதை எல்லாம் யாரும் சொல்லிவிடுவதுமில்லை, கவர்ந்தாலும் காட்டிக் கொள்வதுமில்லை. அதுதானே நிதர்சனம்! 

ஆம்! இருபத்தி ஐந்து வயது ஆரம்பித்து விட்ட பொருப்புகளற்ற காண்டீபன் சிறியவனாகிப் போக.. சிறு வயதிலேயே நிறைய பொறுப்புகளை சுமக்கின்ற இருபத்தி ஐந்து வயது முடியாத வேதா பெரியவளாகிப் போனாள்.. ஆம் இருவருக்கும் பதினோரு மாதங்கள் தான் வித்தியாசம் வரும்..  

ஆனாலும் இருவர் மனதிலும் வயது வித்தியாசம் எனப் பதிந்து போனது. 

திரும்ப கார் ஓட ஆரம்பிக்க.. “அச்சோ, என்ன இவ்வளவு ஸ்பீட்? மெதுவா போங்க!” என வேதா சொல்லிய பிறகு சற்று வேகத்தை குறைத்தான்.

அதன் பிறகு பேச்சுக்கள் இல்லை.. ஐந்தரை மணிக்கு வீடு வந்து விட.. அவர்கள் காரை வீட்டின் உள் விட்டு நிறுத்தி இறங்கவும்.. வேறொரு கார் வீட்டின் வாயிலில் நிற்கவும் சரியாக இருந்தது.

அதிலிருந்து இறங்கியவன் ராஜேஷ்.. அவனை பார்த்ததும் “என்ன ராஜேஷ் இந்த நேரத்துல?” என..

“நீ தனியா வர்ற, உன் ஃபோன் வேற ரீச் ஆகவேயில்லை என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்” என சொன்னவன்.. “யார் இவன்?” என அலட்சியமாய் கண்டீபனை ஒரு பார்வை பார்த்துக் கேட்க..

டிரைவர் என சொல்லவில்லை, “எனக்கு தெரிஞ்சவங்க?” என,

“டிரைவரோட வர்றேன்னு சொன்ன?”

“இவர் டிரைவ் பண்ணினார், எனக்கு தெரிஞ்சவர், அவ்வளவு தான்” என,

“எனக்கு தெரியாம உனக்கு தெரிஞ்சவங்க யார் இருக்கா வேதா”  

“ப்ச்” என சலித்தவள்.. “இப்ப உனக்கு என்ன வேணும்.. சும்மா எதுக்கு நோண்டி நோண்டி கேட்டுட்டு இருக்க. எனக்கு தெரிஞ்சவங்க எல்லாம் உனக்கு தெரியணும்னு அவசியம் என்ன?” என்று எகிற..

இது புது வேதா காண்டீபனின் கண்களுக்கு..

“உன்னோட சேஃப்டிக்கு தான் சொன்னேன்” என்று அந்த ராஜேஷ் வார்த்தைகளில் பணிவை காட்ட..

“நான் என்ன சின்னப் பொண்ணா.. என்னோட சேஃப்டி எனக்கு தெரியும்” என் வேதா பேச..

இதற்கு மேல் இருந்தால் புதியவன் முன் இன்னும் அசிங்கப் பட நேரும் என புரிந்த ராஜேஷ்.. “சரி, நான் கிளம்பறேன், உன்னோட சேஃப்டி பார்க்கத் தான் வந்தேன்” என்றான். வேதா அவனை மிகவும் மரியாதையாகத் தான் நடத்துவாள் என்றாவது மூட் சரியில்லாத போது தான் இப்படி வார்த்தைகள் விழும்… சரியாகட்டும் என விட்டு.. “ஆஃபிஸ் எப்போ வருவ”  

“நான் பத்து மணிக்கு ஆஃபிஸ் வந்துடுவேன்”  என்றவளிடம் தலையாட்டி கிளம்பிப் போனான்..

அவன் சென்றதும் “இவர் தான் உங்களுக்கு போன் பண்ணினதுங்களா?” என..

“ஆம்” என்பது போல தலையசைத்தவள்.. “உங்க கம்பனில பார்ட்னரா?”  

“சே, சே, எங்ககிட்ட வேலை பார்க்கிறான்” என,

“அப்போ எப்படி பேர் சொல்லிக் கூப்பிடறாங்க?”

“அது என்னோட கிளாஸ் மேட் அவன்.. அப்பாக்கு உடம்பு சரியில்லாம போன போது.. நான் சார்ஜ் எடுத்துக்கிட்டேன் நாலு வருஷம் முன்ன.. அப்போ தான் படிப்பை முடிச்சிருந்தேன்.. ஆஃபிஸ்ல நிறைய குளறுபடி.. ரொம்ப வருஷமா இருந்த மேனேஜர் ஒருத்தன் நிறைய கையாடல் பண்ணிட்டான்.. அது அப்பாக்கும் தெரியலை.. நான் வந்த பிறகு எதோ தப்புன்னு தெரிஞ்சது என்ன ஏதுன்னு எனக்கும் தெரியலை!”   

“என்னோட தான் இவனும் முடிச்சான்.. எனக்கு அதிகம் தெரியலை.. இவன் நல்ல திறமைசாலி சரின்னு வேலைல சேரச் சொன்னேன்.. வந்த ரெண்டு மாசத்துலயே அந்த மேனேஜர் பண்ணின சுருட்டலை அக்கு வேறு ஆணிவேரா ஆதாரத்தோட பிடிச்சான்… அப்போ இருந்து என்னோட இருந்து எங்க கார் ஷோரூம் பார்த்துக்கறான்”

“வொர்க் வைஸ் ரொம்ப பெர்பெக்ட். ஒரு சின்ன குறையும் சொல்ல முடியாது, அவன் வந்த பிறகு எங்க டர்னோவர் அதிகமாகியிருக்கு… ஆனா சரியான அதிகப் பிரசங்கி.. அப்பப்போ இப்படி தான் என்கிட்டே வாங்கி கட்டிக்குவான்”

“நீங்க அவரை பேர் சொல்லி கூப்பிட விட்டிருக்கக் கூடாதுங்க.. மேடம் சொல்லி தான் பழக்கியிருக்கணும்ங்க”  

“அது என்னோட கிளாஸ் மேட், எப்படி அப்படி சொல்றதுன்னு விட்டுடேன்” என..

“சரிங்க அம்மணி, நான் கிளம்பறேன்!” என்றவன் “உங்க ஃபோன்ல அந்த ப்ளாக் எடுத்து விட்டுடட்டுமா?” என,

“ம்ம், எடுங்க, இல்லை அவன் ஏதாவது முக்கியமான விஷயத்துக்கு கால் பண்ணி நான் எடுக்கலைன்னா வீட்டுக்கு வந்து நிப்பான்” என,

“குடுங்க” என எடுத்து விட்டுக் கொடுத்தான்..

வேதாவிற்கே ஆச்சர்யம் “எப்படி தங்களுக்காக உழைக்கும் ஒரு மனிதனை இப்படி அடுத்தவர் முன் தன்னால் விட்டுக் கொடுக்க முடிகின்றது! தப்பல்லவா!” என மனம் எடுத்துரைக்க ..

அப்போது வீட்டில் வேலை செய்யும் அக்காவும் வந்துவிட.. தலையசைப்போடு காண்டீபன் விடை பெற்று கிளம்பிவிட்டான்.

ரோடில் சிறிது தூரம் நடந்த பிறகு தான் கவனித்தான்.. அங்கே அந்த ராஜேஷின் கார் நின்றிருந்தது.. காண்டீபன் கவனியாதது போல சென்று.. ஒரு ஆட்டோ பிடித்தான்..

சிறிது தூரம் ஆட்டோ நகர்ந்த பிறகு பார்த்தால்.. அவன் காரை வேறு புறம் கிளப்பிக் கொண்டு போவது தெரிந்தது.

“நான் இருக்கிறேனா இல்லை போய் விட்டேனா என்று தெரிந்து கொள்ள அவன் நின்றான் போல” என்று புரிந்தது. மனதிற்கு சரியாகப் படவில்லை. வேலையாட்களை நீ வேலை செய்பவன் என்று அவ்வப்போது இல்லாவிட்டாலும் எப்போதாவது காட்டிக் கொடுத்து விட வேண்டும்.. இவள் நிறைய இடம் கொடுத்து விட்டால் போல என்று தோன்றியது. 

ஆனாலும் தூக்கம் கண்களை சுழற்ற.. எதுவாகினும் உறங்கி எழுந்து யோசித்துக் கொள்ளலாம் என அவன் தங்கியிருந்த ரூம் வந்து விட்டான்.

பணம் கொடுக்கவில்லை என்பது வேதாவிற்கும் ஞாபகமில்லை. பணம் வாங்கவில்லை என்பது காண்டீபனுக்கும் ஞாபகமில்லை.

ஆஃபிஸ் வந்து வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்த போது ராஜேஷ் வர… “எதுக்கு ராஜேஷ் அவ்வளவு போன், இதெல்லாம் நீ தானே டிசைட் பண்ணுவ. நானே என் தாத்தா இறந்ததுக்கு போறேன், அத்தனை போன் பண்ற? என்ன என்னன்னு எல்லாம் கேட்கறாங்க?” என சலிக்க..

“எனக்கு அதுதானே வேண்டும்” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்.. “நான் தான் பண்றேன்னாலும் உன்னை கேட்காம நான் செய்ய முடியாது இல்லையா?” என பேசி அவளை சமாளித்து வெளியே வந்தான்.

வந்தவுடன் அந்த பிரமாண்ட கார் ஷோ ரூமை அவனின் கண்கள் ஆசையாய் தழுவியது.. “வேதா கார்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடட்” என உதடுகள் உச்சரித்தது. ஆம்! பெரியது! மிக மிக பெரியது! எல்லாம் அவன் வந்த பிறகே, இந்த நான்கு வருடங்களில்.. அங்கிருந்த கஸ்டமர்கள், டீலர்கள், வேலை பார்ப்பவர்கள், எல்லோருக்கும் அவனைத் தான் தெரியும். வேதாவை அதிகம் யாருக்கும் தெரியாது..

அவன் வந்த பிறகு வேலை பார்ப்பவர்களையும் எழுபது சதவிகிதம் மாற்றி விட்டான். மற்ற அந்த நிறுவனத்தின் விசுவாசிகளும் அவனுக்கு விசுவாசிகள் ஆகினர்.. ஆம்! அவனின் உழைப்பு அப்படி.. யாராலும் எந்த குற்றம் குறையும் சொல்ல முடியாதபடி வேலைகள் இருக்கும்.  உண்மையான உழைப்பும் கூட..    

வேதா ஜஸ்ட் சைனிங் அதாரிட்டி மட்டுமே..

“இங்கே கையெழுத்து போடு” என்றால் போடுவாள் வேதா.. அவ்வளவு நம்பிக்கை ராஜேஷிடம் அவளுக்கு.. ஆம்! நிறுவனத்தின் பிரமாண்ட வளர்ச்சியை பார்த்து தானே இருக்கின்றாள்.

இந்த நான்கு வருடங்களில் யாரும் அறியாவண்ணம் அவன் தான் அந்த நிறுவனம் என்ற தோற்றத்தை கொண்டு வந்திருந்தான். எந்த ஏமாற்று வேலைகளும் அல்லாத உண்மையான உழைப்பு.. சிறிது ஏமாற்று வேலை இருந்தாலும் வேதா கண்டு கொண்டிருப்பாள்..

அவனின் எண்ணம் எல்லாம் வேதாவை திருமணம் செய்து கொண்டு இந்த நிறுவனத்தின் முதலாளி ஆவதே.. வேதாவை உரிமை பார்வை பார்ப்பான்.. ஆனால் காதல் பார்வையோ தப்பான பார்வையோ பார்த்தது கிடையாது. அடுத்த நிமிடம் “உனக்கும் எனக்கும் சரி வராது, நீ கிளம்பு!” என அனுப்பி விடுவாளே.

நன்கு வேதாவை பற்றி தெரியும், அதனால் தான் உண்மை, உழைப்பு, நேர்மை, இவற்றை மட்டுமே கடை பிடித்தான்.. இதற்கு தோற்றம் மிகவும் வசீகரமானது.. “ஹேண்ட்சம் கை” என்ற வார்த்தைக்குள் தான் அடங்குவான்.. அவனின் தோற்றமே அவனுக்கு பாதி மரியாதையை பெற்றுக் கொடுக்கும். ஆனாலும் அவளின் பார்வை திரும்பவில்லை. 

இயல்பில் கெட்டவன் எல்லாம் இல்லை.. கடுமையான, உண்மையான, திறமையான உழைப்பாளி.. அவனால் தான் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி.. அது முற்றிலும் உண்மை.

ஆனால் வேதா கொடுத்த உரிமைகள் அவனை அந்த நிறுவனத்தின் முதலாளியாக நினைக்க வைத்தது.. உண்மையில் அது கிடையாது என்று அவனுக்கே தெரியும்..

ஆதலால் அதற்கு என்ன வழி? அவளை திருமணம் செய்வது.. அவளுக்கும் இன்னும் திருமணம் இல்லை.. மனம் எனும் குரங்கு அங்கும் இங்கும் தாவ.. அதன் விளைவுகள் ராஜேஷை இப்படி ஆக்கிவிட்டன.     

பார்வை திரும்பாவிட்டால் என்ன? வேதா அறியாமல் அவனுடைய ஆள் வேதா என்பது போல ஒரு மாயத் தோற்றத்தை கொடுத்து இருந்தான். அதுவும் ஒரு மரியாதையான பார்வையாகவே கொடுத்திருந்தான். யாரும் எதுவும் தவறு சொல்லும்படி இருக்கவேயில்லை.

அது ஒரு மாயவலை!  

Advertisement