Advertisement

அத்தியாயம் ஒன்பது :

“ஏன் க்ருத்தி, உன்ர மவன் என்னோட இப்போல்லாம் சண்டை போடறது இல்லை, வீட்டை விட்டு போனவுடனே பட்டு திருந்திட்டானோ?”

“திரும்ப ஆரம்பிக்காதீங்க சாமி.. அதுக்கு ஒரேடியா என்னை கொன்னுடுங்க”  

“என்ன இப்படி பேசிட்ட” என்று மனம் சுனங்கியவர்.. “நான் நிஜமா அக்கறையில தான் கேட்கறேன்” என..

கணவரின் முகத்தில் உண்மையை பார்த்தவர்.. “தெரியலீங்க, தம்பு முதல்ல மாதிரி முகத்தை தூக்கி வைக்கறது இல்லை, சிரிச்ச முகமா தான் இருக்கான்” என அவரும் சொல்ல..

“அவன் தான் சிரிச்ச முகமா இருக்கானே, பின்ன அப்போவும் நீ ஏன் என்னை சண்டைக்கு இழுக்குற.. நானா அவனை வீட்டை விட்டு போகச் சொன்னேன்.. அவனா போனா நான் என்ன செய்ய முடியும்?”

“நீங்க ஏன் போக விட்டீங்க.. நான் போனா விட்டுடுவீங்களா?”  என கிருத்திகா கேட்க..  

இதற்கு என்ன பதில் சொல்ல முடியும், “வர வர வீட்டுக்கு வரவே பிடிக்கலை, ஏதோ வேண்டாதவன் போல இந்த வீட்ல நான் ஆகிட்டேன்” என சொல்லிச் செல்ல..

அப்போதுதான் உடற் பயிற்சி முடித்து வீட்டிற்குள் நுழைந்தவன்.. அவரின் இறுகிய முகத்தை பார்த்து “என்னங்கம்மா பண்ணுனீங்க இன்னைக்கு உங்க சாமியை” என கடிய,

“நீ தான் சாமி, சாமி, சொல்ற தம்பு, ஆனா அவர் ஆசாமின்னு காட்டிட்டாரே” என,

“என்னங்கம்மா நீங்க ஒரு பிரச்சனை வந்தது, அது முடிஞ்சு போச்சு! விட்டுடணுமுங்க, அதையே பிடிச்சிட்டு தொங்குவீங்களா.. நீங்க தானே சொல்றீங்க, ராப் பகலா உழைக்கிறார்னு. திரும்ப நீங்க ஏன் சங்கடத்தை கொடுக்கறீங்க” என..

பேசியது தன் மகனா? அவனா? எனப் பார்த்திருந்தார் திருமலை சாமி.. எப்போதாவது அவருக்கு பரிந்து பேசுகிறவன் தான், ஆனால் அவர் முன் பேசினதில்லை.. இன்று பேசவும் ஆச்சர்யமாகப் பார்த்தார்..

“நீங்க ஏனுங்கப்பா இந்த முழி முழிக்கறீங்க”

“தம்பு, அவர் பாசமா பார்க்கிறார் டா”

“முன்ன பின்ன என்னை பார்த்திருந்தா தெரியும், இது தான் அவர் லவ் லுக்கா” என,

“அய்ய இது ஒன்னும் அவர் லவ் லுக் இல்லை” என்றார் சிரிப்போடு.  

“ஓஹ், அப்போ அது இன்னும் பயங்கரமா இருக்குமோ?” என்றவனை தோளில் ஒரு அடி வைக்க..

“என்னவோ போங்க, உங்க ஊட்டுக்காரர் பெருமை உங்களுக்கு தானே தெரியும்!” என்று சலித்து பேசுபவன் போல அவரை கிண்டல் செய்ய..

“போடா தம்பு நீ!” என்று கணவரை பார்த்து புன்னகை செய்ய,

“என்ன தம்பு ரகசியம் பேசறீங்க” என்று திருமலை சாமி ஆர்வமாய் கேட்க..

“அதை உங்க ஊட்டுக்காரம்மா கிட்ட கேளுங்க.. எனக்கு குளிக்கணும், பசிக்குது” என்றபடி அவன் அவனின் ரூம் போய்விட..

“என்ன கிருத்தி அது?” என.. “நீங்க முழிச்சீங்கன்னு சொன்னான், அது பாசமா பார்க்கிறார்ன்னு சொன்னேன், பாசமாவே இப்படி பார்த்தா உங்களை காதலா எப்படி பார்ப்பார்ன்னு கேட்கறான். பதில் சொல்லுங்க!” என்று அவர் சிரிப்போடு சொல்ல..

“உங்க ரெண்டு பேரையும்..” என அவர் ஆரம்பிக்க.. “ம்ம், எங்க ரெண்டு பேரையும்” என்று கிருத்திகா நிற்க..

“ஒரு மார்க்கமா தான்டி ஆகிட்டீங்க” என சொல்லி சென்றவரின் முகத்திலும் புன்னகை.. அன்று நாள் முழுவதுமே!

இரவு உணவு உண்ண அமர்ந்தவரிடம்.. “நான் இங்க ஒரு கார் ஷோ ரூம் ஓபன் பண்ணலாம்னு இருக்கேன்!” என காண்டீபன் ஆரம்பிக்க,

“என்ன தம்பு திடீர்ன்னு?” என்று அவர் கேள்வியாய் பார்த்தார்.

“நீங்க என்னை உங்க கூட வெச்சிக்கிற மாதிரி தெரியலை, அப்போ நான் ஏதாவது செஞ்சு தானே ஆகணும்!” என,

“நான் எப்போ உன்னை வரவேண்டாம் சொன்னேன்!” என்று அவர் சொல்ல,

“நீங்க எப்போ என்னைக் கூப்பிட்டீங்க?” என்று இவன் சொல்ல.. கவலையாய் மீண்டும் கிருத்திகா அமர்ந்து விட்டார்.

“அம்மா வீடுன்னு இருந்தா சண்டையெல்லாம் இருக்குமுங்க, அதுக்குன்னு எப்பவும் நீங்க முகத்தை தூக்கி வைக்கக் கூடாது” என்று அம்மாவை அதட்டியவன்…

அப்பாவிடம் திரும்பி “நான் ஓபன் பண்ணனும்னு நினைக்கிறேன் நீங்க ஒத்துகிட்டா ஓகே, நீங்க ஒத்துக்கலைன்னாலும் செய்வேன்!” என்றான்.  

“ஓஹ், ரொம்ப பெரிய மனுஷன் ஆகிட்டீங்களோ”..

“நான் பண்ணண்டாவது படிக்கும் போதே உங்களை விட உயரமாகிட்டேன்” என்றான் அசால்டாக..

“உனக்கு என்ன தம்பு அதை பத்தி தெரியும்”

“என்ன தெரியணும்?” என்றான்.

“இப்படி இடக்கு மடக்கா பேசக் கூடாது” என,

“நான் ஒன்னும் இடக்கு மடக்கா பேசலை, என்ன தெரியணும்னு நீங்க சொன்னீங்கன்னா அது தெரியுமா இல்லையா சொல்வேன்” என்றான்.

“பணம் யாரு கொடுக்கறா?”

“நீங்க கொடுக்கலை” என அவன் சொல்ல,

“என்ன இது திமிர் பேச்சு” என்ற பார்வையை அவர் பார்க்க..

“சீரியஸா சொல்றேன், நீங்க குடுக்கலை, அம்மா குடுக்கறாங்க. இல்லை நீங்க விட மாட்டீங்கன்னா நான் வெளில ஏற்பாடு பண்ணிக்கறேன்” என்றான்.

“உனக்கு யாரை தெரியும்” என ஆச்சர்யமாகத் திருமலை சாமி கேட்க,

“யாரையோ தெரியும்.. அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு” என்றான் சற்று கோபமாக..

“எங்க ஆரம்பிக்க போற? என்ன கார்? எவ்வளவு இவெஸ்ட்மென்ட்” என்று அவர் அடுக்க..

“எல்லாம் இனிமே தான் முடிவு செய்யணும், உங்க கிட்ட சொல்லாம வேலையை ஆரம்பிக்கக் கூடாதுன்னு தான் முதல்ல உங்க கிட்ட சொல்றேன், இன்னும் எதுவும் ப்ளான் பண்ணலை!” என்று சொல்லி எழுந்து போக..

 செல்லும் அவனையே பார்த்திருந்தார்.. அவன் சென்ற பிறகு “நீ பணம் கொடுக்கப் போறியா?” என மனைவியை கேட்க..

“என்கிட்டே இன்னும் இதுபத்தி அவன் பேசலை, அவன் கேட்கலைன்னாலும் நான் கொடுப்பேன்.. ஏதாவது நான் சம்பாதிச்சது அது இதுன்னு ஆரம்பிச்சீங்க.. அடுத்த நிமிசம் நான் வீட்டை விட்டு கிளம்பிடுவேன்” என்று சீரியசாக சொல்ல,

 “என்ன சொன்னேன் நான் இப்போ? சும்மா, சும்மா, என்னை மிரட்டக் கூடாது. போறவங்கல்லாம் எப்போ வேணா போங்க.. ஆனா திரும்ப வரும் போது நான் இருக்க மாட்டேன்.. இப்படி எல்லாம் என்னால யாரையும் பிடிச்சு இழுக்க முடியாது” என சொல்லி அவர் போக,

திரும்ப வந்தவன் இதை கேட்டும் விட.. அப்பாவின் கையை பிடித்து நிறுத்தி.. “என்ன அம்மா நீங்க?” என அவரை கடிந்தவன்.. “நீங்க என்ன சும்மா அம்மாவை மிரட்டுறீங்க.. இப்படி எல்லாம் பேசுவீங்களா, ரெண்டு பேருக்கும் என்னவோ ஆகிடுச்சு?” என அவரைப் பார்த்து சொல்லவும்..

“போடா” என்று சலிப்பாக சொல்லி அவர் போக… “என்னங்க அம்மா நீங்க, போங்க, உங்க சாமியை போய் சமாதானம் செய்ங்க. அதுதான் நான் இல்லாத போது அடிச்சு தூள் கிளப்பிடீங்க. இன்னும் ஏன் அந்த மனுஷரை வாட்டி எடுக்கறீங்க, போங்க!” என்று கிளப்ப..

“நான் இன்னும் சாப்பிடலை தம்பு”

“அய்ய, போங்கம்மா, நம்ம அப்புறம் கொட்டிக்கலாம், இல்லை நான் அங்க கொண்டு வர்றேன்” என அனுப்பினான்.

அவரை அனுப்பிய நிமிடம் வேதாவிற்கு அழைத்தான்.. எடுத்தவுடனே “ஹல்லோ பாஸ் அம்மணி, என்ர அப்பா கிட்ட சொல்லிட்டேன், இனி என்ன பண்ணனும்” என ஆரம்பிக்க..

“இனி இடம் பார்க்கணும், ஃபிரான்சிஸ்க்கு பேசணும், ஷோ ரூம் பில்ட் பண்ணனும், நிறைய இருக்கு.. இப்போல்லாம் பிரமாண்டமாய் தான் தாரக மந்திரம். எது செஞ்சாலும் பெருசா செய்யணும். மத்தவங்க கிட்ட இல்லாதது ஏதாவது செய்யணும்!” என,

“ஏனம்மணி, அவங்க கார் வாங்கப் போறாங்க, அது கார் கம்பனி பார்த்து, இதுல நம்ம பெருசா செய்ய என்ன இருக்கு?” என,

“வேற கார் வாங்கற ஐடியால இருக்குறவனை கூட நம்ம எடுக்கப் போற கார் பக்கம் மாத்தி விடணும்ங்க, அதுதான் நம்ம திறமை!” என்று சொல்லி ஆரம்பித்து அவன் என்ன என்ன செய்ய வேண்டும் என்று வரிசையாக அடுக்க..

அம்மா இவள் நிறைய புத்திசாலி என தோன்றியது..  

“இருங்க, இருங்க, இவ்வளவு சொன்னா என் மண்டையில நிக்காது” என,

“அடுத்த முறை பார்க்கும் போது ஓங்கி ஒரு குட்டு வைக்கிறேன் அப்போ எல்லாம் நிக்கும்” என சொல்லி கலகலவென்று  சிரித்தாள்.

அது ஏதோ செய்ய, “எப்போ வரட்டும் வேதா, அந்த குட்டை வாங்க! இப்போவே வரட்டுமா?” என்று ஆழ்ந்த குரலில் கேட்க..

அவனின் குரலின் பேதமும், அழைப்பின் பேதமும் புரிந்தாலும்.. அதை தொடர விடாது, “ஹல்லோ காஃபி டீ பன் சார்.. சொல்லிக் கொடுக்கும் போது நடுவுல டிஸ்டர்ப் பண்ணக் கூடாது” என்று ஸ்ட்ரிக்டாக சொல்ல,

“அப்போ சொல்லுங்க, எப்போ டிஸ்டர்ப் பண்ணட்டும்” என,

“உங்களுக்கு என்னவோ ஆகிடுச்சு, நீங்க முதல்ல தெளிவாகிட்டு எனக்கு பேசுங்க!” என்று போனை வைத்து விட ..

“வட போச்சே” என்று போனை வைத்தான்.. இனி அழைத்தாலும் எடுக்க மாட்டாள் என்று தெரியும்.. இரண்டு மூன்று முறை இப்படி ஆகிவிட்டது..

அவன் பேசும் விதத்திலேயே அவனை கணித்து விடுவாள்.. அதில் சிறு மீறல் இருந்தாலும் அப்புறம் பேசலாம் என்று வைத்து விடுவாள்.

“ஏன் இப்படி பேசுகிறாய்?” என்றும் கேட்டதில்லை, “இப்படி பேசாதே!” என்றும் சொன்னதில்லை.. அதைப் பற்றி பேச விரும்பாதவளாக தவிர்த்து விடுவாள்.

“இப்படி எல்லாம் பேசக் கூடாது, அவள் உனக்கு குரு.. தோழி..” என்று வகை படுத்தினாலும் தானாக மீறி விடுவான்.. ஆனாலும் நேரடியாக சொல்லும் தைரியமும் இல்லை..

ஏனென்றால் என்ன சொல்வது என்று தெரியவில்லையே.. காதலிக்கிறேன் என்றா இல்லை கல்யாணம் செய்யலாமா என்றா.. 

வயது என்ற ஒன்று பெரிதாக முன்னாள் தெரிய, அதையும் விட தோற்றம், புத்திசாலித்தனம், இதிலும் தான் அவளுக்கு குறைவாகவே அவனுக்கு தோன்ற.. என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாற ஆரம்பித்தான்.

வேதா என்னவோ செய்தால் அவனுள்.. சொல்லத் தெரியவில்லை, சொல்லவும் முடியவில்லை. 

அப்படியே அமர்ந்து விட்டான். வெளியே வந்த அவனின் அப்பா “என்ன தம்பு இங்க உட்கார்ந்துட்ட, நீ டிஃபன் எடுத்துட்டு வர்றேன்னு சொன்னன்னு உங்கம்மா உட்கார்ந்து இருக்கா”

“அட, மறந்துட்டேன் பா!” என்று சொன்னாலும் குரலில் ஒரு சுரத்தில்லை.. நன்றாக தானே பேசிக் கொண்டு இருந்தான் என்னவாகிற்று என்ற யோசனைகள் ஓட காண்டீபனை பார்த்தார்.

வேறு நாட்களில் என்றால் “என்ன பார்க்குறீங்க?” என்று சீறிக் கொண்டு கிளம்புபவன்.. இன்று கண்டு கொள்ளக் கூட இல்லை.. அம்மாவிற்கு உணவு எடுத்துப் போக

“உனக்கு எங்க தம்பு?” என்று கிருத்திகா கேட்க..

“பசிக்கலைம்மா!” என்று அவன் சொல்ல…

பின் வந்த திருமலை சாமியை அவர் தான் எதுவும் சொல்லி விட்டாரோ என முறைத்தார்..

“நான் ஒன்னும் பண்ணலை” என்று அவர் அவசரமாக சொல்ல,

“மா, அப்பா எதுவும் பேசலை சும்மா சும்மா அவரை பார்க்காதீங்க. எனக்கு தான் பசிக்கலை” என காண்டீபன் சொல்ல,

“பசிக்கவில்லை” என்ற வார்த்தையை இதுவரை மகனிடமிருந்து கேட்டிராத பெற்றோர் விழித்தனர்.. அப்போதுதான் வயிறு நிறைய உண்டிருந்தாலும் மீண்டும் உள்ளே தள்ளும் ஆசாமி அவன்.. அவன் பசிக்கவில்லை என்று சொல்வதா?

“என்ன தம்பு ஏதாவது பிரச்சனையா?” என்றார் திருமலை சாமி தணிவாக,

“இல்லைங்கலேப்பா” என்றான்.

“அப்புறம் இந்த கார் கம்பனி சரி வருமான்னு யோசிக்கறியா?”

“அதெல்லாம் வரும் பா!” என்றான் உறுதியாக,

“அப்புறம் பணமா?”

“உங்க பையன்னு சொன்னாலே, எவன் கேட்டாலும் ஃபைனான்ஸ் பண்ணுவான். ஆனா நான் கேட்க மாட்டேன்றது வேற விஷயம், பணம் பிரச்சனையில்லை” என,

அப்போது வேறு என்ன என்று ஷெர்லக்ஸ் ஹோமாக மாறி அவர் மூளையை ஓட விட்டார் திருமலை சாமி…   

 

 

Advertisement