Advertisement

அத்தியாயம் எட்டு :

விரிந்த புன்னகையோடு காண்டீபன் அவளை எதிர் கொள்ள.. அந்த புன்னகை வேதாவை வசீகரித்தது, அதனோடு அவளின் முகத்தினிலும் பரவியது. டிரைவராய் பார்த்ததற்கு இன்றைய அவனின் தோற்றம் இன்னும் செழிப்பாய் கம்பீரமாய்.

அருகில் வந்ததும் “ஹப்பா, அந்த அழுமூஞ்சி அம்மணி நல்லாவே இல்லை.. இப்போதான் கொஞ்சம் பார்க்கற மாதிரி இருக்கீங்க” என,

“நான் பார்க்கற மாதிரி இருக்கேனா? தோடா..” என வேதா உதட்டை சுழிக்க.. “ஷ், பா” என்று காண்டீபனின் மொத்தமும் தடம் புரண்டது.. நொடிகளே தன்னை மீட்டுக் கொண்டான்.. “உன்னை நம்பி நட்பு பாராட்டி வந்திருக்கும் பெண், என்ன செய்கிறாய் நீ?” என்று மீண்டும் மனதிற்கு கடிவாளமிட..

“சரி அம்மணி, உங்களுக்காக காலையில நான் பொய் சொல்றேனுங்க” என நிறுத்தியவன், “நீங்க அழகா தான் இருக்கீங்க” என்றான் அவனையும் மீறிய ரசனையான பார்வையோடு.. அந்த பார்வை அந்த வார்த்தை எதோ செய்தாலும்..

“தெரிஞ்ச விஷயத்தை சொல்ல தான் பார்க்கணும் சொன்னீங்களா”

“ஓஹ், உங்களுக்கு தெரியுமா? யாராவது சொல்லியிருக்காங்களா?” என,

அவனை முறைத்தவள் “அதெல்லாம் என்கிட்டே சொல்ற தைரியம் யாருக்கும் கிடையாது.. நாங்களும் எங்களை கண்ணாடில பார்ப்போம்” என,

“அது காட்டிச்சுள்ள, அப்புறம் எதுக்கு இந்த முடியை வெட்டி, இப்படி பெப்பரபேன்னு விட்டுருக்கீங்க” என,

அதில் பெரிதாக முறுவல் மலர, “அதெல்லாம் ஸ்டைல்ங்க காஃபி டீ பன் சார்” என பாவனையாக மொழிய.. 

“அய்யோ, ஆமாம் மறந்தே போயிட்டனுங்க.. ரொம்ப பசிக்குது சாப்பிடலாம்.. என்னோட அகராதிலயே சீக்கிரம் எழுந்திருக்கேன்.. எங்கப்பா இத்தனை வருஷம் கத்தி சொன்னாலும், செஞ்சதில்லை, இன்னைக்கு செஞ்சிருக்கேன், வாங்க” என்று அழைத்துப் போக..

அவன் சாப்பிடும் உணவு வகைகளை பார்த்தவள் அசந்து போனாள்.. “இவ்வளவு சாப்பிட்டா ஜீரணம் ஆகுமா? அப்புறம் ஃபிரெஷா வேலை செய்ய முடியுமா? சோம்பலா இருக்காது!” என்று கேட்டே விட்டாள். கேட்டு விட்டு தப்பாக எடுத்துக் கொண்டானோ என்று முகம் பார்க்க.. அப்படி எல்லாம் எதுவும் தெரியவில்லை.. 

“சாப்பிட்டு பேசறேன்.. நீங்களும் சாப்பிடுங்க, இதென்ன கொறிக்கறீங்க, பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடற எனக்கு மரியாதை இல்லையே!” என்று வசனம் பேச..

“இது வேறா?” என்று முறைத்தபடி.. “உங்களுக்காக” என சொல்லி அங்கிருந்த ப்ரூட் ஜூஸை எடுக்க.. வாய் விட்டு சிரித்தவன் பின் அவளின் பார்வையில் சிரிப்பை அடக்கி உண்டு முடித்தான்..

உண்டு முடித்து “அதுங்கம்மணி, வீட்டை விட்டு வந்த நாளா சரியா சாப்பிடலை! அதுக்கு இன்னைக்கு உங்களோட இருக்கவும் சாப்பிட்டுட்டேன்” என..

அந்த பேச்சு அந்த பாவனை ஏதோ செய்தது.. “ஏன் சாப்பிடலை?” என,

“இங்க வந்த போது என்கிட்ட காசில்லை.. சாம்பாரிச்சாலும் நான் சாப்பிடற சாப்பாடுக்கு அது கட்டுப்படி ஆகாது.. ஆனா இங்க வந்ததுல நான் முக்கியமா கத்துகிட்டது அதுதான்! என்னோட பசி அடக்கக் கத்துகிட்டேன்!” என்றவனின் குரல் மிகவும் சீரியசாக மாறியிருந்தது.

“பாருங்க, ஆர்டினரி ஹோட்டல்ல சாப்பிட்டாக் கூட ஒரு வேலைக்கு எனக்கு முந்நூறு ரூபா வேணும்.. உடம்பை அப்படி டெவலப் பண்ணிட்டேன்.. அப்போல்லாம் எனக்கு சாப்பிடறது, அது செரிக்க எக்சர்சைஸ் செய்யறது, இது தான் வேலை.. அதனால நான் சாப்பிடற அளவு அதிகமாகிடுச்சு”

“இங்கிருந்து வீட்டுக்கு போன அப்புறமும் சாப்பிட முடியலை.. எங்கம்மா வீட்ல அவ்வளவு கலாட்டா பண்ணியிருந்தாங்க.. எங்கேயும் வெளில போகலை, யாரோடவும பேசலை.. எங்கப்பா கண்ல படும் போதெல்லாம் அவங்க கண்ல படர அத்தனையும் தூக்கி வீசியிருக்காங்க.. மனுஷன் நொந்து போய் தான் என்னை தேடிக் கண்டுபிடிச்சு கடத்திட்டு போய் ஹவுஸ் அரஸ்ட்ல வெச்சிட்டார்”

“எங்க பஸ் ட்ரைவர்ங்க அத்தனை பேர் கிட்டயும் சொல்லி வெச்சிருக்கார், எவனோ ஒருத்தன் என்னை பார்க்கவும், அவர் கிட்ட சொல்லவும், அப்படியே தூக்கிட்டு வாடான்னுட்டார்”

“அம்மாக்கு நான் டிரைவரா போனதும் அவ்வளவு கோபம், ஆனா அப்பாக்கு இல்லை. ஏன்னா அவர் அப்படி தானே வாழ்க்கையை ஆரம்பிச்சார்.. அம்மாவையும் அவர் தான் அடக்கினார்.. உன் புருஷனும் ட்ரைவரா தான் இருந்தான்னு சொல்லி”    

“அம்மாவை சரி பண்ணி, அவங்களை நார்மல் ஆக்க இருபது நாள் ஆகிடுச்சு.. நடுவுல உங்ககிட்ட சொல்லாம போனது வேற ஒரு பக்கம் மனசுல உருத்திக்கிட்டே இருந்தது. அம்மா சரியானது அப்புறம் இதே நினைப்பு தான்..”

“எப்படியோ பெர்மிஷன் வாங்கி வந்துட்டேன்.. உங்களை பார்த்துட்டேன்.. ஆனா எப்படி அழுமூஞ்சியா.. இன்னைக்கு தான் சிரிக்கறீங்க!

அதுதான் நிம்மதியா உள்ள தள்ளிட்டேன்!” என்றான் சிறு முறுவலோடு.

அவன் சீரியஸ் குரல் இலகுவான பிறகு தான் வேதாவிற்கு மனம் ஆசுவாசப்ட்டது..

“இவ்வளவு கலாட்டா பண்ணியிருக்காங்க உங்க அம்மா! அப்புறம் என்கிட்டே வேலை கேட்கறீங்க!”

“ஏதாவது செய்யணும் தானுங்களே, வெட்டியா வாழ்க்கை ஓட்ட முடியாது இல்லீங்களா.. எங்கப்பாவுக்கு நானா ஏதாவது சாதிக்கணும்னு ஆசை!”

“நானென்ன சாதிக்க மாட்டேன்னா சொல்றேன், ஆனா அதெல்லாம் தானா வரணும்ங்க, ஏதாவது குறிக்கோள் இருக்கணும், அப்படி நமக்கு எதுவும் கிடையாதுங்க” என்றவனின் குரல் திரும்பவும் சீரியசாக மாறியிருந்தது.

“என்னை எதுவும் யோசிக்கவே விட்டதில்லை எங்கப்பா.. ஸ்கூல் பார்த்தீங்கன்னாலே கிட்ட தட்ட ஆறேழு ஸ்கூல் மாத்தியிருப்பாருங்க.. நான் நல்லா படிக்கணும்னு.. அதென்னவோ நான் ரொம்ப சுமாரா போயிட்டனுங்க” என்றவன் குரலில் அவ்வளவு வருத்தம்..

அவன் வருத்தப்படுவது தாளவே முடியவில்லை.. ஏதாவது செய்ய வேண்டும் என்று அப்போதே முடிவெடுத்துக் கொண்டாள்.

“கிரிக்கெட்ல சேர்த்துவிட்டாரு நான் சுமாரா வந்தேன். ஆனா அவருக்கு சச்சின் டெண்டுல்கர் மாதிரி வேணும், என்னை அதுல இருந்து நிறுத்திட்டாரு.. பின்ன மியுசிக் கிளாஸ்ல சேர்த்து விட்டாரு.. சுமாரா தான் வந்தேன் ஆனா அவருக்கு இளையராஜா மாதிரி வரணும், அதையும் நிறுத்திட்டாரு.. இப்படி நிறைய, பார்த்தது, கேட்கறது எல்லாம் சேர்த்து விடுவாரு”

“தினமும் பேப்பர் படிக்கும் போது அதுல எதாவது படிச்சாருன்னா.. அதை சொல்லி, அது மாதிரி நீ ஏன் இல்லை, அந்த மாதிரி நீ ஏன் செய்யக் கூடாதுன்னு பேசுவாரு. எப்படியோ மென்டல் ஆகாம தப்பிச்சிட்டேன்”

“அதனால் அவர் என்ன பேசினாலும் எதிர்த்து மறுத்து திருப்பி பேச ஆரம்பிச்சேன். பின்ன அதுவே பழக்கமாகிடுச்சு.. இப்போ அவரோடையும் என்னால உட்கார்ந்து என்ன பண்ணட்டும்னு பேச முடியலை.. வேலைக்கு போகக் கூடாது, எனக்கு அது கௌரவக் குறைச்சல்ன்னு எங்கம்மா ஒத்தைக் காலுல நிக்கறாங்க.. எனக்கும் எங்கப்பாவுக்கும் நடுவுல அவங்களும் நொந்து போயிட்டாங்க”

“எனக்கு தெரியலை, எங்கம்மாவையும் அதையும் இதையும் சொல்லி டார்ச்சர் பண்ணுறாரோ என்னமோ?”

“அவர் பெஸ்ட் பெஸ்ட்ன்னு கேட்க, ஒரு சாதாரண மனுஷன் செய்யறதை கூட செய்ய முடியாம நான் வொர்ஸ்ட் ஆகிட்டேன்” என்றவனின் குரலில் ஒரு தோல்வியின் வலி தான்..

“எதுக்கு இவ்வளவு ஃபீல் பண்ணுறீங்க, இப்போ தானே படிப்பை முடிச்சீங்க, இனிமே தானே பண்ணனும்” என,

“என்ன பண்ணுவேன் அதுதானே தெரியலை?”  

“யோசிக்கலாம் விடுங்க, என்கிட்டே சொல்லீட்டீங்க தானே! நான் பார்த்துக்கறேன்!” என புன்னகைத்தாள்.

“ஆனா நீங்க சொன்னாலும் நான் சரியா செய்வனா தெரியாதுங்களே!”  

“ஹ, ஹ, வாட் இஸ் திஸ்! காஃபி டீ பன் சார்.. சரியா செய்வனான்னு எந்த வேலையும் ஆரம்பிக்க கூடாது! செய்வேன்னு தான் ஆரம்பிக்கணும். நாம எப்படி நினைக்கிறோமோ அப்படி தான் நம்ம வாழ்க்கை இருக்கும்.. ஜெயிக்கணும், ஜெயிப்போம், அது மட்டும் தான் நம்ம எண்ணமா இருக்கணும்!”

“பாருங்க! எங்க அப்பா உடம்பு சரியில்லாம போன போது ரெண்டு பொண்ணுங்க தானே அதை வித்துடலாம் பேங்க்ல போட்டுடலாம்..ரெண்டு பேரையும் கல்யாணம் செஞ்சுக் குடுத்துட்டா கடமை முடிஞ்சதுன்னு தான் எல்லோரும் எங்கம்மாக்கு சொன்னாங்க!”

“எங்கம்மாவும் அப்படி தான் நினைச்சாங்க.. ஆனா பையன் இருந்தா அப்படி சொல்வாங்களா என்ன? எங்கப்பா ரொம்ப சாதரணமான நிலைமையில் இருந்து இவ்வளவு வளர்ந்தார். இதை நான் விட்டுட்டா, அப்புறம் எல்லோரும் சொல்ற மாதிரி பொண்ணுங்க வேண்டாம், பசங்க தான் வேணும்னு சொல்றது சரின்னு ஆகிடாதா?” என,

“நியாயமான யோசனைகள்!” என்ற மெச்சுதல் காண்டீபனின் முகத்தில். 

“அதுக்கும் அது ஒன்னும் நஷ்டத்துல போகலை.. லாபத்துல போறது, அதை என்னால நடத்த முடியலைன்னா எப்படி.. போனேன்! தலையும் புரியலை, வாலும் புரியலை! அங்கிருந்த மேனேஜர் வேற ரொம்ப தப்பா எதோ பணம் சுருட்டுற மாதிரி தெரிஞ்சது, ஆனா கண்டுபிடிக்க முடியலை!”

“ராஜேஷ், என் கிளாஸ் மேட், ரொம்ப திறமைசாலி.. அவனுக்கு நல்ல பே ஆஃபர் செஞ்சு வர வெச்சேன். வந்த ரெண்டு மாசத்துல எல்லாம் கண்டு பிடிச்சு சரி பண்ணிட்டான்.. இப்போ இன்னும் நம்ம கம்பனி வேற லெவல் போயிடுச்சு.. நல்லா கொண்டு வந்துட்டான்” என,

“எவ்வளவு புத்திசாலி வேலையாள் இருந்தாலும் முதலாளி சரியில்லைனா ஒன்னும் செய்ய முடியாது.. உங்க திறமையும் இருக்கும் அம்மணி” என,

“இருக்கலாம்! ஆனா அடுத்தவங்களுக்கு கிரெடிட் குடுக்கறதால நமக்கு என்ன நஷ்டம்! நமக்கு நாம வளரணும், அதை நாமே வளர்த்தோம்னு சொல்லி சொல்லி காட்டணும்னு என்ன?” என,

இந்த பெண்ணிடம் இருக்கும் பக்குவம் என் அப்பாவிடம் கூட இல்லை எனத் தோன்றியது.. கூடவே அதன் பாதங்கங்களை சொல்லவும் செய்தான், “அந்த கிரெடிட் குடுக்கறவங்க அதுக்கு தக்கவங்களா இருக்கணும்.. சில பேர் அந்த தகுதிகுள்ள வர மாட்டாங்க. எனக்கு அந்த ராஜேஷ் பார்த்தா அப்படி தான் தோணுது. கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்கம்மணி”  

நேசத்தை மறைக்குமளவு ஒரு நட்பு அங்கே இழையோடியது..

“எஸ், கவனமா இருக்கேன்” என்ற வாக்குறுதியை வேதா கொடுக்கவும் தான் விட்டான்.

“நான் உங்க கூட சண்டை போடற மூட்ல வந்தேன்” என முகம் சுருக்க,

“ஏன்? எதுக்கு?” என்றவனிடம், “எங்கம்மா கிட்ட என் ஃபிரண்ட் கூட வெளிய போறேன்னு சொல்லிட்டு வந்தேன், ஆனா யார்ன்னு கேட்டா என்னால பதில் சொல்ல முடியலை, ஏன்னா எனக்கு உங்க பேர் தெரியலை.. இதுக்கு அவங்களுக்கு உங்களை தெரியும். நான் டிரைவரோட போறேன்னா சொல்ல முடியும்.. எனக்கு அதுல இஷ்டமில்லை” என,

“ஏன் காஃபி டீ பன் னு சொல்லவேண்டியது தானே” என மென்னகையுடன் சொல்ல..  

“என்ன நக்கலா?”

“ஹ, ஹ” என சிரித்தவன், “நான் பேர் சொல்லும் போது தான் அவர் மாத்தி புரிஞ்சிக்கிட்டார். நீங்க என் பேரை வேகமா சொல்லுங்க”

“கேடிபன்” என வேகமா திரும்ப சொல்லி பார்த்து, “கேடி ன்னு வருது, அப்புறம் டிஃபன்னு வருது” என்று பரிதாபமாக சொல்ல,

“ஐயோ ங்கம்மணி, நீங்க கண்டேபிடிக்க வேண்டாம்! நானே சொல்லிடறேன்!” என்றவன்.. “காண்டீபன்” என..

“வாவ், ஐ டிடின்ட் எக்ஸ்பெக்ட் சச் எ நேம், நான் கெஸ் பண்ணின லிஸ்ட்ல இது இல்லவேயில்லை.. காண்டீபன்” என அதை சொல்லிப் பார்க்க..

எப்போதையும் விட தன்னுடைய பேர் இன்னும் கம்பீரமாக ஒலித்ததாக தோன்றியது.

“அப்போ என்ன பிஸ்னெஸ்?” என,

“கண்டுபிடிங்கம்மணி” என,

“இன்னும் இதுவேறையா, என் மூளை வேலையே செய்யலை,  நீங்க சொல்லிடலாமே”

“எங்கப்பா அந்த பேரை அவ்வளவு டிவலப் பண்ணியிருக்கார், அதுக்காகவாவது கண்டுபிடிங்க” என,

கூகுள் செர்சில் காண்டீபன் என அடிக்கும் போதே, காண்டீபன் ட்ராவல்ஸ்ல என வர..

“காண்டீபன் ட்ராவல்ஸா” என விழி விரிக்க..

“ஏனுங்கம்மணி இவ்வளவு ஷாக்”  

“என்னவோ ஷாக் ஷாக்கா குடுக்கறீங்க” என தேறிக் கொண்டவள்.. அதுவரை சைலண்டில் இருந்த போனை பார்க்க.. ராஜேஷிடம் இருந்து கால்கள்..

எடுத்து “என்ன ராஜேஷ்?” என,

“காலையில செக் ஒன்னு சைன் பண்ணனும், எங்கே போன வேதா? எத்தனை கால்ஸ் பண்றது?” என எரிச்சலாக தான் ராஜேஷின் குரல் ஒலித்தது.

ஆம்! முக்கியமான செக் தான்.. “சாரி! ராஜேஷ், ஞாபகமில்லை! ஒரு ஒரு மணி நேரத்துல வர்றேன்” என வைத்தவள்..

“நான் போகணும்” என,

காண்டீபனின் முகத்தினில் ஏமாற்றம் அப்பட்டமாய் தெரிய.. “அப்போ நாம டிரைவ் போகலையா?” என்றான்.

ஆம்! வேதாவிற்கு போகும் எண்ணம் வந்த போது இருந்தது இப்போது சுத்தமாக இல்லை.. “நீ சின்ன பெண்ணா ஊர் சுற்ற.. உன் மனம் மயங்குவதை நட்பு என்னும் போர்வைக்குள் மறைத்தாலும் அதற்கும் எல்லைகள் உண்டு.. இவனின் உயரம் உங்களை விட பல மடங்கு அதிகம்” என்றவளின் மனம் முகம் எல்லாம் சோர்ந்து போனது..

“வேலை இருக்கு பன் சார்.. அதோட நீங்களும் வேற ஒரு பொறுப்பு கொடுத்திருக்கீங்க நான் அதுக்கும் வொர்க் அவுட் பண்ணனும்” என,

“என்ன பொறுப்பு?” என்றான்.

“இப்படி இருந்தா நீங்க எப்படி பிஸ்னெஸ் பண்ணுவீங்க? இப்போ தானே நீங்க என்ன பண்ணலாம்னு சொல்றேன்னு சொன்னேன்!”

“எஸ்! மறந்துட்டேன்!” என்றான், கூடவே “உன்னை பார்த்தா எல்லாம் மறந்து போகுது” என்று சொல்லவும் ஆசை கிளற.. “அடங்குடா காண்டீபா” என மீண்டும் கடிவாளமிட்டு..

“அச்சோ அம்மணி! அட்வைஸ் மட்டும் பண்ணிடாதீங்க” என..

“ப்ச், இல்லை உங்க போன் நம்பர் கேட்டேன்”

“காலையில என்கிட்டே பேசினீங்களே” என எடுத்துக் கொடுக்க.. “ஆமாமில்லை” என அசடு வழிந்தவளிடம்..

“அச்சோ இருங்கமணி, மறந்தே போயிட்டேன்..  ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்” என விரைந்து சென்றவன்..

வேகமாக வந்து “இது உங்களுக்கு வாங்கினேன்” என்று ஒரு பார்சல் நீட்ட..

பிரித்து பார்த்தால் ஒரு லேட்டஸ்ட் மாடல் மொபைல்.. சிம்மை கழற்றி மாட்டி.. அந்த பழைய மொபைல் அவன் எடுத்துக் கொண்டான். அந்த ராஜேஷ் வாங்கிக் கொடுத்தது அவளுக்கு வேண்டாம் என்ற எண்ணம் தான் வேறென்ன? 

“அதுல நம்பர்ஸ் இருக்கு” என்றவளிடம்.. “எல்லாம் எடுத்து பத்திரமா உங்க மெயிலுக்கு அனுப்பறேன், நீங்க உங்க ஆபிஸ் ரீச் ஆகறதுகுள்ள” என சொல்லி, மெயில் ஐ டி வாங்கிக் கொண்டான்.  

அவள் ஆஃபிஸ் ரீச் ஆனதும் மெயிலில் இருக்க.. முகம் தானாக புன்னகை பூசியது..

உடனே ஒரு மெசேஜ் தட்டி விட்டாள், “யு ஆர் பெர்ஃபக்ட் பிட் ஃபார் எ பிசினெஸ் மேன்.. சொன்ன வேலையை சொன்ன மாதிரி செய்யணும், சொன்ன வார்த்தை காப்பாத்தணும்.. அதுல நமக்கு லாபம் வருதா, நஷ்டம் வருதா, அது பின்னே.. இது தான் நீங்க ஏற வேண்டிய முதல் படி!” என,

படித்த அவனின் முகமும் புன்னகை பூசியது.. மனதில் புது உற்சாகம், புது நம்பிக்கை கூட..  

 

Advertisement