Advertisement

அத்தியாயம் ஏழு :

சிறிது தூரம் வந்ததும் தேறிக் கொண்டவள்.. “நீங்க எங்க போனீங்க? ஆளையே காணோம்! வேலண்ணா கிட்ட கேட்டா அவருக்கும் தெரியலை” என..  

“அதையேன் கேட்கறீங்க அம்மணி.. எங்கப்பா என்னை கடத்திட்டார்” என்றான் பெருமூச்சோடு.  

நம்பாமல் திரும்ப முறைத்தவளிடம்..

“அய்ய, நிஜம் தானுங்க.. நான் வீட்டை விட்டு வந்ததும் எங்கம்மா என்ர ஐயனை ஒரு வழியாக்கிட்டாங்க போல.. அடி தூள் கிளப்பிட்டாங்க போல.. வேற வழியில்லாம என்னை தேடி என்னை வீட்டுக்கு கடத்திட்டு போயிட்டார்”

“அன்னைக்கு உங்களை வீட்டுல விட்டு போனனல்லோ.. அன்னைகே அவர் ஆளுங்க கிட்ட மாட்டிக்கிட்டேன்.. தூக்கிட்டார். அப்புறம் வீட்ல கூட்டிட்டு போய் எங்கம்மா கிட்ட காட்டி, இவன் ஜாலியா ஊர் சுத்தறான் நீ என்னமோ என்னை அந்த அடி விலாசுன அதையெல்லாம் இவனை அடி, அப்புறம் தான் உங்களை வெளிய விடுவேன்னு சொல்ல..”

“அடிச்சாங்களா?” என விழி விரித்து கவலையாக வேதா கேட்க,

“அய்ய, எங்கம்மா என்னைஅடிப்பாங்களா.. திரும்ப கைல கிடைச்சதை எங்கப்பாவை பார்த்து வீச.. அவங்களுக்குள்ள சமாதானம் செய்ய ஒரு மாசமாகிடுச்சு” என்றான்.

“விளையாடுறீங்களா” என சந்தேகமாக வேதா கேட்கவும்..

“இல்லீங்கம்மணி.. நிஜமா” என சொன்னவன் முகத்தினில் உண்மை தான் இருந்தது.

“அன்னைக்கு போகும் போது முகம் சுனங்கிட்டு இருந்தீங்களா, எனக்கு உங்க ஞாபகமாவே போச்சு! ஒரு தரம் பார்த்துட்டு போயிடலாம்னு வந்தேன்” என,

“ஓஹ், போய்விடுவானா?” எனத் தோன்ற, மீண்டும் அமைதியாகி விட்டாள்..

“இப்போ சொல்லுங்க, எதுக்கு அழுதீங்க?”  

“அழுகை வந்துச்சு, அழுதேன்” என சொல்லி புன்னகைக்க..

அழுது சோர்ந்த அந்த விழிகள், புன்னகைக்கும் அந்த உதடுகள் ஏதோ காண்டீபனை செய்ய, அவசரமாக பார்வையை திருப்பிக் கொண்டான்..

ஒரு மாதமாக வேதாவின் ஞாபகங்கள் தான்.. அதனால் தான் ஒரு முறை பார்த்து விடுவோம் என்று வர.. இப்படி அழுதபடி அவளை எதிர்பார்க்கவில்லை.

“எப்படி விட்டு போவான். எப்படி அவனால் முடியும்”

“எனக்கு உங்க கம்பனியில ஒரு வேலை குடுக்கறீங்களா?”  என்றான் தானாக..

ஆச்சர்யமாக அவனை பார்த்தவள் “பார்த்துட்டு போக வந்தேன்னு சொன்னீங்க, திரும்ப வேலை கேட்கறீங்க” என,

“அதை ஏன் அம்மணி கேட்கறீங்க.. ரெண்டு நாளா திரும்ப எங்கப்பா ஆரம்பிச்சிட்டார், எதுவும் செய்யாம இருக்கேன்னு. என்ன செய்யறதுன்னு தெரியலை எனக்கு.. மார்க் ரொம்பவும் சுமார்ங்க, அதைய தூக்கிப் போய் நான் எங்க வேலை கேட்க முடியும்.. எனக்கே கேவலமா இருக்கு.. எங்கம்மா என்னை நகர விடறது இல்லை”

“அதே ஊருக்குள்ள எங்கயும் வேலைக்கு போக முடியாது.. எங்கம்மா என்னை பிச்சிப் போடுவாங்க.. பைத்தியம் பிடிக்குது எனக்கு!” என,

“ஏன் அங்க போக முடியாது?” என,

“போக முடியாதுன்னா முடியாது, விடுங்க அம்மணி!” என்றான் சலிப்பாக,

“திரும்பவும் நீங்க இங்கே வந்தா உங்க அம்மா விடுவாங்களா” என,

“சந்தேகம் தான் ஆனா பேசிப் பார்க்கணும்.. ஒரு வேலை உங்களுக்கு வேலை கொடுக்கறதுல இஷ்டமில்லையோ?”

“இல்லை, அப்படி இல்லை, பணம் சேர்த்து கொடுத்ததுக்கே என்னை வேலைக்காரன் சொல்றீங்களா கேட்டீங்க.. அன்னைக்கு தான் நிறையப் பிரச்சனை ஆச்சு” என ஞாபகப்படுத்தினாள்.

“ப்ச், அப்போ நான் என்ன பண்ணட்டும்?” என்று அவளிடமே கேட்க..

“உங்க பேர் முதல்ல சொல்லுங்க!” என்றாள்.

“ம்கூம், அதைய மட்டும் நீங்க தான் கண்டுபிடிக்கணும்” என,

“அப்போ உங்களை கே டி பன் கூப்பிட மாட்டேன், காஃபி டீ பன் தான் கூப்பிடுவேன்” என,

“ஒரு தடவை என்ர அப்பா முன்னாடி இப்படி கூப்பிடுங்க” என சொல்லும் போதே அவனின் முகத்தில் அப்படி சிரிப்பு.

“ஏன்? உங்க பேரை உங்கப்பா அப்படி ரசிச்சு வெச்சாரா என்ன? அப்படி என்ன அதிசயமான பேர் உங்களது?” என புருவம் உயர்த்தினாள்.

பார்த்திருந்தவன் மனது நிச்சயம் அந்த நொடியில் உணர்ந்தது.. இந்த பெண்ணிடம் நீ மயங்குகின்றாய் என.. அவன் பதில் பேசாது இருக்க..

காண்டீபனுடன் பேசியதில் மனது மிகவும் லேசாகியிருக்க.. “நாளைக்கு காலையில போறீங்களா?” என்றாள்.

“இல்லை நாளைக்கு நைட் தான் கிளம்புவேன்!”

“எங்க தங்கியிருக்கீங்க”  

“இனிமே தான் வேலண்ணா ரூம் போகணும். அவர் கிட்டயும் சொல்லாம கொள்ளாம கிளம்பிட்டேன்”  

“அவர் இருக்க மாட்டாரே” என்றாள்.

“ஏனுங்க”

“என் ஃபிரண்ட் ஒருத்தி நாகர்கோவில்.. இங்கே நம்ம ஷோ ரூம்ல தான் வண்டி எடுத்தா, புது வண்டி, அதான் அவ வீட்டுக்காரர் இருந்தாலும், தூரம்னு அவரை கூட போட்டு அனுப்பினேன்” என,

“ஓஹ், அப்போ எங்க அம்மா புக் பண்ணின ரூம்க்கு தான் போகணுமா?” என சலித்தான்..

“எங்கே பண்ணியிருக்காங்க?” என்றவளிடம், தன்னுடைய மொபைல் எடுத்து.. அதில் இருந்த மெசேஜ் காட்டி “இதுல, இது எங்கே இருக்கு?” என..

அதில் ஐந்து நட்சத்திர விடுதி இருக்க.. “இங்க இருந்து கொஞ்சம் தூரம்” என்றாள்.

“உங்களை வீட்ல விட்டுட்டு டேக்சி பிடிச்சிக்கறேன்”  

“ம்ம்” என்று தலையாட்டி அமைதியாகிவிட்டாள்.. மிகுந்த வசதி போல, தங்களையும் விட, என இப்போது தோன்றியது

“உங்கப்பாக்கு என்ன பிசினெஸ்?”  

“என் பேர் கண்டுபிடிச்சா உங்களுக்கு உடனே தெரிஞ்சிடும்” என்று அவன் சொல்ல,

அதற்குள் வீடும் வந்திருக்க.. இறங்கிக் கொண்டவள்.. “நீங்க கார்ல போயிடுங்க, இன்னும் எங்க டாக்சி பிடிக்க ரொம்ப நேரமாகிடுச்சு” என்றாள்.

அவனும் வேண்டாம் என பிகு செய்யவில்லை.. “சரி” என்று காரை திருப்பியவன்.. தன்னை பார்த்து நின்றவளை “வேதா” என அழைக்க.. அவனுடைய வேதா என்ற அழைப்பிலேயே கரைந்து நின்றவளிடம்.. “இப்படி அழாதீங்க, மனசுக்கு கஷ்டமா இருக்கு!” என்றான் ஆழ்ந்த குரலில்..

“எப்பவும் அழுதது இல்லை, இன்னைக்கு தான் இப்படி ஆகிடுச்சு. இனிமே ஆகாம பார்த்துக்கறேன்” என்று ஒரு முறுவலோடு சொல்ல..

“தட்ஸ் எ குட் கேர்ள்” என்று அவன் சொல்லிப் போக.. அவனுடைய வார்த்தைகளில் அசையாது நின்றிருந்தாள்.. “நான் என்ன கேர்ள்ளா, வுமன் ஆகிட்டேனே” என்ற கசந்த முறுவல் தானாக உதடுகளில் நின்றது.      

அவளிற்கு முன் ஸ்ருதி வீடு வந்திருந்தாள். அரவம் கேட்டு வெளியே வந்த ஸ்ருதி “யார் வேதா கார் எடுத்துப் போறா?” என,

“என் ஃபிரண்ட்” என்றாள்.

“யார் அது, எனக்கு தெரியாம” என்றவளிடம், “எனக்கு தெரியாம உனக்கு லவர் இருக்கலாம், ஆனா எனக்கு ஃபிரண்ட் கூட இருக்கக் கூடாதா” எனக் கேட்க..

“வேதா” என வாயடைத்துப் போனாள் ஸ்ருதி..

“ஐ நோ லவ் எல்லாம் தானா வரும்னு, ஆனா அவனுக்கு என்னை பேசற ரைட்ஸ் யாரு கொடுத்தா.. நீ லவ் பண்ணிட்டியேன்னு பேசாம வந்தேன், இல்லை நடந்திருக்குறதே வேற” என,

ஸ்ருதியால் பதில் பேச முடியவில்லை..

“அம்மா கிட்ட சொல்லிட்டியா?”

“இல்லை” என்பது போல ஸ்ருதி தலையசைக்க..

“நான் சொல்லட்டுமா?”

“வேண்டாம்! அவர் வீட்ல பேசின பிறகு சொல்லச் சொன்னார், இப்போ அம்மா கிட்ட சொன்னா, அம்மா அடுத்த நிமிஷம் அவங்க அண்ணனுக்கு போன் பண்ணிடுவாங்க” என்றாள் தயங்கி தயங்கி.

“சரி” என்று தலையசைத்து வேதா போய்விட.. ஸ்ருதிக்கு மனதே இல்லை.. இன்று வேதாவிற்கு நடந்தது எந்த வகையிலும் சரி கிடையாதே.. உண்மையில் வேதா கேட்டதில் தவறில்லை.

“என்ன தான் தாய் மாமன் மகனாய் இருந்தாலும், என்னை காதலித்தாலும், வேதாவை பேசி இருக்கக் கூடாது” எனத் தோன்ற.. மீண்டும் வேதாவை நாடி சென்றாள் “சாரி” கேட்க.. “விடு ஸ்ருதி, விடு” என வேதா தான் சமாதானம் செய்யும் படி ஆகிற்று..

காலையில் வேதா கண்விழித்ததே “ஹல்லோ அம்மணி, கண் விழிச்சாச்சா” என்ற காண்டீபனின் மெசேஜில் தான்.

விழித்தவள் “இல்லை, இனிமே தான்” என மெசேஜ் அனுப்ப,

“அப்போ இது யாருங்க எனக்கு மெசேஜ் பண்றது”

“ம்ம்ம், இவ்வளவு கஷ்டமான கேள்வி எல்லாம் கேட்டா எனக்கு பதில் தெரியாது” என்று பதில் மெசேஜ் போட இருவருக்கும் புன்னகை.. உடனே கைபேசியில் அழைத்து விட்டான்..

“உங்களை பார்க்க தான் வந்தேன். எங்கம்மா முன்னாடி நான் நாளைக்கு காலையில இருக்கணும், இல்லை எங்கப்பா தொலைஞ்சார், பாவம் ரொம்ப கஷ்டப் பட்டுட்டார்.. இன்னும் ஒரு தடவை பார்த்தா மதியமே கிளம்பிடுவேன்!” என போனில் அழைத்துப் பேச..

“ஆஃபிஸ் போகணுமே” என்றவளிடம்.. “அதான் ஸ்ருதி போறால்ல, விட்டுட்டு வாங்க அம்மணி.. நான் மறுபடியும் காணாமப் போயிடுவனொன்னு எங்கம்மா பத்து தடவை காலையில இருந்து ஃபோன் அடிச்சிட்டாங்க.. கொஞ்சம் அவங்களுக்கு உடம்பும் சரியில்லை, ஏன் அவங்களை டென்ஷன் பண்ணிக்கிட்டு, நான் மதியமே கிளம்பிடறேன்” என திரும்பவும் சொல்ல..

“வேதா” என்ற அழைப்பு காணாமல் போயிருப்பதை உணர்ந்தவள்.. “ம்ம், சரி, எங்கே பார்க்கலாம்” என,

“நீங்க சொல்லுங்க” என்று அவன் சொல்ல,

“ஹச்சோ, காஃபி டீ பன் சார், நான் முன்ன பின்ன யாரையும் இப்படி மீட் பண்ணினது இல்லை, எங்கேன்னு நான் சொல்வேன்” என,

“அப்போ நான் மட்டும் மீட் பண்ணியிருக்கேனா” என அவன் முறுக்கினான்.

“சரி, கோவிலுக்கு வரட்டுமா?”  

“அட அம்மணி, என்ன இப்படி சொல்லிட்டீங்க.. நான் கோவிலுக்கு போக மாட்டேன், சாமியும் கும்பிட மாட்டேன்” என

“என்ன?” என்று அதிர்ந்தாள்.. பின்னே காலையில் விழிப்பதில் இருந்து இரவு உறங்கும் வரை அவள் தஞ்சமடைவது அவரிடம் தானே.

“வொய் திஸ் ஷாக்” என்றான் குரலை வைத்து..  

என்ன சொல்லுவாள், நான் கும்பிடுவேன், நீ கும்பிடுவது இல்லை என்றா.. “ப்ச், ஒன்னுமில்லை” என சலிக்க..

“வொய் அம்மணி வொய், வெட்டியா சுத்திட்டு இருக்குற நான் சலிக்கறது இல்லை.. இத்தனை வேலை செய்யற நீங்க ஏன் சலிக்கறீங்க”  

“ப்ச், தெரியலை” என்றவளிடம்..

“போன்ல பேசியே நேரம் போயிடும் போல் அம்மணி” என்றான்.

“நீங்க தங்கி இருக்குற இடத்துக்கு வர்றேன், ஒரு லாங் டிரைவ் போவோமா ஈ சீ ஆர் ரோட்ல” என,

“நான் வர்றேனுங்க அம்மணி” என்றவனிடம், “இல்லையில்லை, நான் வர்றேன்” என்று வைத்தவள்.. விரைந்து குளித்து ரெடியாகி கீழே இறங்க.. அப்போதுதான் எழுந்த வந்த ஸ்ருதி “வேதா, அதுக்குள்ள ஆஃபிஸ் கிளம்பிட்டியா, ஏழு மணி தான் ஆகுது” என,  

“ஏன்? நான் ஆஃபிஸ் மட்டும் தான் போவேனா, என் ஃபிரண்ட் கூட வெளில போறேன், மதியம் மேல தான் வருவேன்! நீ ஆபிஸ் பார்த்துக்கோ!” என்றதை கனகவல்லியும் கேட்டு தான் இருந்தார்.

“யார் வேதா அது?” என அவரும் கேட்க,

“எதுக்கு இத்தனை கேள்வி எல்லோரும் கேட்கறீங்க” என்று கோபப்பட்டாள்.

“எப்போ? எந்த கேள்வி கேட்டோம்?” என்று குழம்பிப் போனார் கனகவல்லி.. ஸ்ருதியும் அதே யோசனையோடே வேதாவை பார்க்க..

இன்னும் நின்றால் ஏதாவது கேட்டு விடுவார்களோ என்று வேகமாக கிளம்பிவிட்டாள். பின்னே சொல்லக் கூடாது என்றெல்லாம் இல்லை.. அவனின் பேரே தெரியாதே.. பேர் கூட சொல்லாமல் நமக்கு டிரைவராய் வந்தவன் என்று சொல்ல விருப்பமில்லை. “அவனை நேர்ல பார்த்து வெச்சிக்கறேன்..” என்று கடுப்பில் கிளம்பினாள்.   

“என்ன ஸ்ருதி பண்றா இவ?”

“தெரியலைம்மா! எனக்கு தெரியாம அவ ஃபிரண்ட் யாரும் கிடையாது.. இது அவங்கள்ள ஒருத்தரா, இல்லை புதுசா யாராவதா தெரியலை!” என,

டீன் ஏஜ் வயதில் கூட வேதாவிடம் கேள்வி கேட்டது இல்லை. அவளும் கேள்வி கேட்குமாறு நடந்து கொண்டது இல்லை. இப்போது என்ன கேட்க என்று தெரியாதவறாக நிற்க..

ஒரு டீனேஜ் வயதின் தாக்கத்தோடு தான் வேதாவும் சென்றாள்.

யாரையோ ஒருவனை அவன் தங்கியிருக்கும் இடத்தில் பார்க்கச் செல்கிறாள்.. இவ்வளவு காலையில்.. ஏன் எதற்கு என்ற யோசனையெல்லாம் இல்லை .. காண்டீபன் மீது அவ்வளவு நம்பிக்கை இருந்தது..

ஆட்டோவை விட்டு ஹோட்டலின் வாயிலிலேயே இறங்கிக் கொண்டாள். அவ்வளவு பெரிய ஹோட்டலுக்குள் ஆட்டோவில் போய் இறங்க முடியாது.. அதையும் விட சென்னையிலேயே பெரிய கார் ஷோ ரூமை நிர்வகிக்கின்றாள்.. தெரிந்தவர் யாராவது இருப்பர்.. அவர்கள் முன் ஆட்டோவில் போய் இறங்க முடியாதே..

எஸ்! செய்யும் ஒவ்வொரு செயலின் சாதக பாதகங்களை யோசிப்பவள், சற்று யோசிக்காமல் காண்டீபனை பார்க்க வந்திருந்தாள்.

இவள் வந்தால் தடுமாறக் கூடாதே என லாபியிலேயே இருந்தான் காண்டீபன்.. வாயில் நன்கு தெரிய, தூரமாக நடந்து வரும் வேதாவைப் பார்த்தான்..

ஆகாய வண்ண சல்வாரில் இருந்தாள்.. முன்பு சற்று நீளமாக இருந்ததாக தான் எண்ணம்.. ஆனால் இப்போது தோளின் உயரமே இருந்தது அவளின் கூந்தல்.. காற்றில் அலைபாயும் அதை விரல் கொண்டு அடக்கியதே கவிதையாய் தான் தோன்றியது..

நடையில் உடையில் அனைத்திலும் ஒரு கம்பீரம்.. அதனோடு நடையில் இருந்த அந்த மிதமான வேகம் இன்னும் கவர்ந்தது. “என்னை பற்றி எதுவும் தெரியாத போதே என்னுடன் இந்த அழகு பெண் நட்பு பாராட்டினாளா” மனம் பூரித்தது. குனிந்து தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டான்..

“ரொம்ப, ரொம்ப, சுமார் டா நீ” என மனம் சொல்ல.. வயது வித்தியாசம் அந்த நிமிடம் அவனின் ஞாபகத்திற்கு வரவேயில்லை.

அவனின் அப்பாவின் அம்மாவின் வார்த்தைகள் மட்டுமல்ல, அவன் பிறந்து, வளர்ந்து, வாழும் பணம் கூட கொடுக்காத ஒரு தைரியத்தை, ஒரு தன்னம்பிக்கையை, வேதா அவனுள் விதைத்தால் என்றால் மிகையில்லை.

ஒரு பதினோரு மாத வித்தியாசம் அதைக் கூட ஒதுக்கி தள்ளி விடலாம். ஆனால் அதை அவர்கள் அறியவில்லை, இருவரும் இரண்டு மூன்று வருட வித்தியாசத்தை மனதில் பதிந்திருந்தார்கள் என்பது வேறு..  

ஆனாலும் இருவருக்கும் எந்த வகையிலும் பொருத்தம் இல்லை.. உடலின் நிறம், , அதுவே பெரிய வித்தியாசம்.. இவள் சிவப்பாக மெல்லிய உடலமைப்புடன் இருக்க.. அவன் கருப்பாக கட்டுமஸ்தான உடலோடு இருந்தான்..

ருசிகளும் மாறியது, இவனுக்கு டீ என்றால் அவளுக்கு காஃபி.. இவன் சூடாக உள்ளே இறக்கினால், அவள் ஆறிப்போய்.. ரசனைகளும் இன்னும் பகிரப் படவில்லை என்றாலும் நேர் எதிர்.. ஏன்? கடவுளை இவன் வணங்குவதில்லை, அவள் வணங்காமல் இருந்தது இல்லை..

அவள் வெற்றியின் உச்சத்தில் இருக்க.. இவன் என்ன செய்வது என்று கூட இன்னும் தீர்மானிக்கவில்லை.. இப்படி பலதும் இருக்க..  இன்னும் சொல்லப் படாத போதும், சொல்வார்களா என்று தெரியாத போதும்.. அவர்களின் மனதில் நேசம் துளிர்விட்டது என்று சொல்ல முடியாதபடி, நேசம் ஆழமாய் வேரூன்றி இருந்தது..                  

மென்டல் மனதோ?

 

Advertisement