Advertisement

அத்தியாயம் ஆறு :

ஆயிற்று! ஒரு மாதத்திற்கு மேல் ஆயிற்று! அவன் போய்!

“யார் அவன் என்றே தெரியவில்லை.. பெரிய இவன் போல என் மேல் அவனுக்கு தான் அக்கறை என்று சொன்னானே, எங்கே போனான்?” ஒரு பக்கம் மனது இப்படி நினைக்க.. இன்னொரு பக்கம், “உனக்கு அறிவு இருக்கிறதா, உன்னை விட சிறியவன்.. அவனை போய் உன் மனது நினைக்கிறதா? வேறு யாரும் இல்லையா” என இடித்துரைக்க,

“தினசரி எத்தனை பேரை பார்க்கின்றேன், யாரையும் என் மனம் நினைக்கவில்லையே! நான் அவர்களை நினைக்காதே என்றா சொல்கின்றேன்! அது நினைக்காத போது நான் என்ன செய்வேன்?”

“எது எப்படியோ? இவனை நீ நினைக்காதே!” என்று மனம் கட்டளையிட்டு விட.. மனம் முழுவதுமாக சோர்ந்து போனது.. “ஆனால் அவன் பார்ப்பதற்கு என்னை விட பெரியவன் போல தானே தோன்றுகிறான்.. எவ்வளவு சிறியவனாய் இருப்பான் தெரியவில்லையே?”

தெரிந்து கொள்ள ஆர்வம் கிளர்ந்து எழ.. ஆனால் எங்கே என்று தேடுவாள். பெயர் கூடத் தெரியாதே.. ஊர் மட்டும் கோயம்பத்தூர் என்று தெரியும், அவ்வளவே! 

கேபின் உள் அமர்ந்திருந்த வேதாவின் முகத்தை தான் ஆராய்ந்து கொண்டிருந்தான் ராஜேஷ்..

அடுத்த நாள் அவன் கண்ணில் படட்டும், அவனை என்னை செய்கிறேன் பார் என்று ராஜேஷ் சூளுரைத்து அவனை எதிர்பார்த்து நிற்க.. அதற்கு எந்த அவசியமும் இல்லாமல் காண்டீபன் கண்ணில் படவேயில்லை.

அன்றிலிருந்து வேதாவின் முகமும் இறுக்கமாக மாறி விட்டது. உதட்டளவு புன்னகை மட்டுமே என புரிந்தது.. “என்ன வாகியிருக்கும்? யார் அவன்? ஏதாவது கசமுசா நடந்திருக்குமோ” என என்னும் அளவிற்கு போய் விட்டான்.. “சே, சே, வேதா அதற்கெல்லாம் அனுமதித்து இருக்க மாட்டாள்” என்ற நம்பிக்கையும் இருந்தது.

“பிறகு ஏன் இவள் இப்படி இருக்கின்றாள், எதையோ தொலைத்த மாதிரி, பறிகொடுத்த மாதிரி” என மண்டையும் குடைந்தது.

“வேதா பசிக்குது! சாப்பிடப் போகலாமா!” என ஸ்ருதி வர.. வீட்டிற்கு கிளம்பினர். ஆம், இப்போது ஸ்ருதியும் அலுவலகம் வர.. அதனால் ராஜேஷிற்கு தனியாக பேசும் நேரங்கள் குறைந்து போயின..

ராஜேஷ் வேதாவிடம் உரிமை எடுத்துக் கொள்வது ஸ்ருதிக்கு கொஞ்சமும் பிடிக்காது.. “என்ன கேட்கணும் வேதாகிட்டே? சொல்லுங்க, நானும் இதோட ஓனர் தான்!” என நிற்பாள்.

வேதாவிடம் அம்மா வேறு ஊரிலிருந்து வந்ததில் இருந்து திருமணத்தை பற்றி தீவிரமாகப் பேச.. “நான் எப்போம்மா வேண்டாம்னு சொன்னேன்.. நான் சரின்னு சொல்ற மாதிரி நீங்க ஒரு வரனை கூட கொண்டு வரலை!” என்றாள் வேதா

ஆம்! அதுதான் உண்மையும் கூட. அழகு, படிப்பு, வசதி என்று அனைத்தும் இருந்தும் வரன் தகயவைல்லை.. எது வந்தாலும் கை கூடி வரும் நேரத்தில் தட்டிப் போய்விடும்..

ஒன்று அவளின் ஜாதகம்.. மிகவும் சிக்கலானாது.. அப்படி ஒன்றிரண்டு வரும் போது என்ன ஏதென்றே காரணம் சொல்லாமல் வேண்டாம் என்று விடுவர்.. அப்பா இருந்தாலும் பெயருக்கு தானே.. பக்கவாதம் வந்து மூளை பாதிக்கப் பட்டதால் சொல்வதை செய்வார், மற்றபடி யோசிக்கும் திறன் எல்லாம் குறைந்தே விட்டது.

அத்தனை திருமண ப்ரோக்கர்களின் கையிலும் வேதாவின் ஜாதகம் இருக்கும்.. பிறந்த வீட்டிலும் இந்த விஷயத்தில் கனகவள்ளிக்கு எந்த உதவியும் கிடையாது.. ஆம்! வேதா கடைசி வருட படிப்பில் இருந்த போது.. கனகவள்ளியின் பெரிய அண்ணன் வீட்டினர் வேதாவை பெண் கேட்க.. லோகநாதனுக்கு திருப்தி இல்லாததால் வேண்டாம் என்று விட்டார்.

அதன் பிறகு தான் அவருக்கு உடல் நிலை கெட்டு விட.. அப்போது மீண்டும் பெண் கேட்க.. அப்பா வேண்டாம் என்ற வரனை வேதாவிற்கு திருமணம் செய்ய விருப்பமில்லாததால் “வேண்டாம்” என்று சொல்லி விட.. எல்லோரும் செய்து கொள் என வற்புறுத்த “முடியவே முடியாது” என்று நிற்க..

அதன் பிறகு பிறந்த வீட்டினர் முகம் திருப்பிக் கொள்ள, இவர்கள் தனியாளாகினர்.. அதிலும் பெரிய அண்ணனின் மகனிற்கு திருமணமாகி இப்போது குழந்தை கூட இருக்கின்றது.. இப்போது ஸ்ருதி விரும்புவது அவரின் சின்ன அண்ணன் மகன் தனஞ்ஜெயனை.. இன்னும் அது யாருக்கும் தெரியாது. வேதா வேண்டாம் என்று சொன்ன வருத்தம் அந்த வீட்டினர் அனைவருக்கும் உண்டு..

அதனால் தான் இப்போதும் தாத்தா இறந்த பிறகு அம்மாவும் ஸ்ருதியும் ஒட்டிக் கொள்ள வேதாவால் முடியவில்லை. அதன் பொருட்டே தனஞ்ஜெயன் அன்று ஸ்ருதியிடம் பேசியது கூட “நான் கல்யாணம் செய்துக்குவேன், நீ தனியா நிற்ப!” என,     

லோகநாதனின் வீட்டினர் வந்த போதெல்லாம் ஏதாவது பணப் பிரச்னையை கொண்டு வந்து பணம் கேட்க.. அவர்களுடைய உறவை தானாகவே கனகவள்ளி குறைத்துக் கொண்டார்..

இப்படி பலதும் வந்ததால் வேதாவிற்கு திருமணதிற்கு பார்க்க ஆரம்பித்தே இரு வருடங்கள் தான் ஆகிறது.. இப்போது இருபத்தி ஆறு பிறந்து விட்டது. சிரியவளும் திருமணதிற்கு நிற்க.. ஒற்றை பெண்ணாய்.. மகள்களின் திருமணம் அப்படி கவலையை கொடுத்தது கனகவள்ளிக்கு.

மொத்தத்தில் வீடும் அதன் ஆட்களும் களையிழந்து காணப்பட்டனர்.

வீடு வந்து பிறகு உண்டு திரும்பினர்… அலுவலகத்தில் அமர்ந்திருந்த போது.. “வேதா” என தயங்கி தயங்கி ஸ்ருதி அழைக்க..

“என்ன?” என்று தலைநிமிர்ந்தவளிடம்.. “இந்த மேட்ரிமோனில ஒரு வரன் இருக்கு.. நமக்கு பொருத்தமா இருக்கு” என ஹிந்து பேப்பரை நகர்த்த..

“பேப்பர்ல எனக்கு இப்போ யாரு வரன் பார்க்கறாங்க, அம்மா இதெல்லாம் செய்ய மாட்டாங்களே!”  

“ஆம்! அம்மா செய்தது இல்லை, இது தனஞ்ஜெயனின் வேலை.. ஸ்ருதி முடியாது என மறுத்த போதும்.. “ப்ளீஸ் சொல்லு, நல்ல வரனா தெரியுது” என்று கெஞ்சி கெஞ்சி கேட்டிருக்க..

அதன் தாக்கம் தான் இது..

“என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு இந்தப் பேப்பர்ல இருக்குற இவன் கிட்ட நான் போய் கேட்கணுமா? இல்லை வீட்ல இருந்து யாராவது போய் கேட்கணுமா?” என்ற வேதாவின் குரலில் அவ்வளவு வருத்தம் கலக்கமும் கூட.

“இல்லை, அப்படி இல்லை” என்று ஸ்ருதி பதற..

“என்னை இந்த மேட்ரிமோனி பார்க்க சொன்னா இதுக்கு மீனிங் அதுதானே. ஏற்கனவே அத்தனை ப்ரோக்கர் கிட்டயும் அம்மா ஜாதகம் கொடுத்து இருக்காங்க.. இப்போ இதுலயும் போட்டு தயவு செய்து என் மானத்தை வாங்கிடாதீங்க” என்றாள் குரல் கமற.

ஸ்ருதி வாயடைத்துப் போனாள்.. “எனக்கு கொஞ்சம் வெளில வேலை இருக்கு.. நான் ஆட்டோ எடுத்துப் போயிக்கறேன், இங்க இருக்குற வேலை நீ பார்த்துக்கோ” எனச் சொல்லி ஸ்ருதி எதுவும் சொல்லுமுன் சென்று விட.

ஸ்ருதிக்கு தான் அழுகை பொங்கிற்று… ஃபோனை எடுத்து தனஞ்ஜெயனை திட்டி தீர்த்துவிட.. விஷயங்கள் இன்னும் சிக்கலாகி விட்டன.

“என்ன ஆச்சு? வேதா எங்க திடீர்ன்னு சொல்லாம கொள்ளாம போயிட்டா” என ராஜேஷ் வந்து நிற்க.. “எல்லாம் உங்ககிட்ட சொல்லணும்னு என்ன?” என்று அவனிடமும் ஸ்ருதி முறைக்க..

இப்போது ராஜேஷ் அவளிடம் நேரடியாக முறைத்தான்.. “ஏதாவது கேட்டா பதில் சொல்லணும்.. நான் எங்கேன்னு வேதாவை கேட்கறது என்னோட பெர்சனல் வொர்க்கு இல்லை, கம்பனி வொர்க்ஸ் தான், புரிஞ்சதா?” எனப் பேச..

ஸ்ருதி ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும் போது தான் ராஜேஷ் கேட்க.. அப்போதுதான் இந்த உரையாடல் நடக்க.. அது தனஞ்ஜெயனின் காதிலும் தெளிவாக விழ..

சென்னையில் வேலை பார்க்கும் அவன், அடுத்த அரை மணி நேரத்தில் அங்கே இருந்தான்..

“ஹேய், என்ன நீ? இங்க நீ வேலை தான் பார்க்குற! இப்படி தான் முதலாளி கிட்ட பேசுவியா, ஒரு மரியாதை வேண்டாம்!” என்று தனஞ்ஜெயன் நேரடியாக எகிற..

“நீ யாரு?” என்ற ராஜேஷ், அடுத்த நிமிடம் வேதாவிற்கு அழைத்து “என்ன வேதா நடக்குது இங்க? வாட் தி ஹெல் இஸ் கோயிங் ஆன், யார் யாரோ என்னை வந்து மிரட்டுறாங்க!” என,

“மிரட்டுறாங்க” என்ற வார்த்தையை கேட்டதும் காண்டீபனின் ஞாபகம் தான். அவன் தான் வந்து விட்டானோ என நினைத்து என்ன ஏதென்று கேட்காமல், “இப்போ வர்றேன் நான்” என்று சொல்லி கிளம்பினாள். பக்கத்தில் இருந்த கோவிலில் தான் அமர்ந்து இருந்தாள்..

அதனால் ஒரு ஐந்து நிமிடத்தில் வந்து விட.. அங்கே தனஞ்ஜெயனை எதிர்பார்க்கவில்லை.. ஸ்ருதி இப்படியாகும் என நினைக்கவில்லை.. ஆனால் இனி பின் வாங்க முடியாது அல்லவா..

“நீங்க எங்கே இங்கே?” என்றாள் குழப்பமான முகத்துடன் தனஞ்ஜெயனை பார்த்து.. “யார் மிரட்டினா?” என்றாள் ராஜேஷை பார்த்து,

“இவர் தான்” என ராஜேஷ் தனஞ்ஜெயனை காண்பித்து.. “உங்க சொந்தக்காரன்னு விடறேன்.. ஆனா மாசம் ஒருத்தன் வந்து என்னை மிரட்டுவானா?” என ராஜேஷ் எகிற..

“முதல்ல கேபின்குள்ள போகலாம் வாங்க!” என்று அழைத்து சென்றாள், “என்ன ஆச்சு ஸ்ருதி?” என..

ஸ்ருதி நடந்ததை சொல்ல.. “ராஜேஷ் நான் உன் ஃபிரண்டா இருக்கலாம், அதுக்காக நீ என்கிட்டே சில அட்வான்ட்டேஜ் எடுத்துக்கலாம்.. ஆனா அந்த டோன்ல நீ ஸ்ருதி கிட்ட பேச முடியாது.. ஷி இஸ் யுவர் பாஸ்!” என்றவள்..

அதே சமயம் ஸ்ருதியிடமும் திரும்பி.. “வொர்கர்ஸ் எப்படி ஹேண்டில் பண்றதுன்னு உனக்கும் தெரியணும்.. மரியாதை குடுத்தா தான் நமக்கு அது திரும்பக் கிடைக்கும்.. இப்படி அலட்சியமா நடத்தக் கூடாது” என,

“எவ்வளவு உழைத்திருக்கிறேன் இவர்களுக்கு, நான் வொர்கரா, நேற்று வந்த இந்தப் பெண் எனக்கு பாஸ்ஸா” இதுவரை இருந்த உரிமையோடு ஒரு வன்மமும் தலை தூக்கியது..

“பிரச்சனை இனிமே வளர்க்காதீங்க” என்று சுமுகமாகவே பேசி வேதா ராஜேஷை அனுப்ப.. அப்போதும் முறைத்து தான் சென்றான்.

அவன் சென்ற பிறகே தனஞ்ஜெயனிடம் திரும்பிய வேதா.. “இதுல உங்களுக்கு என்ன?” என்றாள் நேரடியாக..

“எனக்கு என்னன்னா?”

“சண்டை அவங்களுக்குள்ள, நீங்க எங்கே வந்தீங்க?”

“ஸ்ருதிகிட்ட யார் அந்த டோன்ல பேசினாலும், நான் அப்படி தான் வருவேன்” என,

ஸ்ருதியை பார்க்க.. அவள் “நாங்க லவ் பண்றோம் வேதா” என்று சொல்லிவிட..

“ஓஹ்” என்ற வார்த்தையோடு நிறுத்திக் கொண்டாள் வேதா. என்ன சொல்வது என்று தெரியவில்லை.. ஆனாலும் மனதில் ஓடியது இவர்கள் குடும்பத்திற்கு நான் வேண்டாதவள் அல்லவா என,

அதை புரிந்தவள் போல.. “ரொம்ப வருஷமா வேதா.. அப்பாக்கு உடம்பு சரியில்லாம போகற முன்னமே” என ஸ்ருதி மெல்லிய குரலில் சொல்ல,  

“அப்போ உன்னோட ஸ்கூல் டைம்ல இருந்து” என வேதா கேட்க..

ஸ்ருதி தலை கவிழ.. “ஸ்கூல் போகும் பெண்ணிடம் நீ சொன்னாயா?” என தனஞ்ஜெயனை பார்த்தாள்..

“எங்க அக்காக்கு எல்லாம் பன்னிரெண்டாவது முடிச்சவுடனே கல்யாணம் பண்ணிடாங்க” என்றான், அவன் சொல்ல வந்தது அது ஒன்றும் சிறிய வயதில்லை என்று சொல்லுவதற்காக…

ஆனால் ஏற்கனவே வருத்தத்தில் இருந்த வேதா… “அப்போ எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை சொல்றீங்களா?” என,

ஸ்ருதி திட்டியது.. இப்போது ராஜேஷோடு சண்டையிட்டது என தனஜ்ஜெயனும் கோபத்தில் இருக்க.. “புரிஞ்சா சரி” என்று சொல்லி விட..

வேதாவால் தாளவே முடியவில்லை.. கண்களில் நீர் நிறைய.. பதில் பேசமால் திரும்ப நடக்க ஆரம்பிக்க.. “தனா அத்தான், என்ன பேசறீங்க?” என கோபமாக ஸ்ருதி பேச.. தனஞ்ஜெயனும் தவறை உணர்ந்து “சாரி” என வேகமாக சொன்னான்.

“இது வேலை செய்யற இடம்.. இங்க எதுவும் பேச வேண்டாம், எதுன்னாலும் வீட்ல வந்து பேசுங்க” என்று குரல் கமற சொல்லி வேதா நடக்க..

“ஆங்” என விழித்து நின்றான் தனஞ்ஜெயன், பின்னே அவனின் அப்பாவிடம் எல்லாம் அவ்வளவு ஈசியாக பேசிவிட முடியாது. ஏற்கனவே வேதாவினால் கோபத்திலும் வருத்தத்திலும் இருந்தவர்கள்.

அவரிடம் பேசுமுன் ஸ்ருதியின் வீட்டிற்கு செல்வதா.. “எங்களை விட்டு சம்மந்தம் பேசற அளவுக்கு பெரிய ஆளா நீ.. எப்படி நடக்குது உன் கல்யாணம் பார்த்துடறேன்” என்று அவனின் அப்பா கிளம்பிவிட மாட்டாரா..

இன்னும் வேதா திருமணதிற்கு மறுத்த சுவடுகள் எல்லோர் மனதிலும் இருந்தது. தொய்ந்து அப்படியே தனஞ்ஜெயன் அமர்ந்து விட..

கண்களில் இருக்கும் கண்ணீர் யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என அவசரமாக வெயிலில் போகும் போது போடும் கறுப்புக் கண்ணடியை மாட்டிக் கொள்ள, அது கண்களை வெளியே தெரியாமல் மறைத்தது. ஆனாலும் பார்வையை கண்களின் நீர் மறைத்தது.

படியிறங்க.. எதிரில் வந்த யார் மேலோ வேகமாக மோதிக் கொள்ள.. கீழே விழ இருந்தவளை நிறுத்தியது வலிமையான கரங்கள்.. “என்னங்க அம்மணி பண்றீங்க?” என்ற காண்டீபனின் குரலும் கூட கேட்க..

அடுத்தத் நிமிடம் அவன் மேல் தான் கோபம் கிளம்பியது “போடா” என்று அவனை திட்டி நடக்க..

“அய்ய, எங்க போகச் சொல்றீங்கோ” என்று அவளின் பின்னோடு நடக்க..

வேகமாக நடந்து காரில் அமர்ந்தாள்.. அவனும் பின்னேயே சென்று மறு பக்கம் அமர..  வேதா கண்களின் கண்ணாடியை கழற்ற.. அப்போது தான் கண்களின் கண்ணீரை பார்த்தான்..

“என்னாச்சுங்கம்மணி?” எனப் பதறினான்.

முகத்தை மூடிக் கொண்டு குலுங்கி குலுங்கி அழ..

“யார் என்ன பண்ணினா?” என்று அவசரமாக காண்டீபன் இறங்கப் போக..

கண்களை துடைத்து அவசரமாக காரை வேதா ஸ்டார்ட் செய்யவும், “இறங்குங்க” என அதட்டியவன், “எதிர்ல இவ்வளவு பெருசா வந்த நானே கண்ணுக்கு தெரியலை, காரை கொண்டு போய் யார் மேல மோதப் போறீங்க. நான் ஓட்டுறேன்!” என,

இறங்கியவுடன் “என்ன? என்ன பிரச்சனை?” என,

“ப்ளீஸ்! இது நான் தொழில் செய்யற இடம்! இங்க நம்ம பெர்சனல் கொண்டு வரக் கூடாது!” எனக் கெஞ்சலான குரலில் கேட்க,

“என்ன திரும்ப அந்தப் பயலுங்களா.. தூக்கிப் போட்டு மென்னிய முறிக்கறேன்” எனக் கிளம்ப..

“ப்ச், அதில்லை ஸ்ருதி யோட சண்டை” என சமாளித்தாள்.

பிறகே வண்டிய கிளப்பினான்.. அப்போதும் “அந்த அம்மணி எப்படி வருவாங்க?” என, 

“ஊர்ல இருந்து வந்திருக்காங்க, அவங்க கூட வருவா”

“யாரு வந்திருக்காங்க?” என்றான் அப்போதும் விடாமல்,

“நீங்க முதல்ல இறங்குங்க, நானே போயிக்கறேன்” என அதட்ட.

அதன் பிறகு தான் பேசாமல் கார் எடுத்தான்.. கார் வெளியே போகும் போதும் ரிவர்வியு மிர்ரர் வழியாக.. அந்தப் படிகளில் ஸ்ருதியும் தனஞ்ஜெயனும் இறங்குவது தெரிய.. “ஓஹ், இந்தப் பயலா?” என்ற எண்ணம் ஓட அவனை வெறித்தான்.

     

Advertisement