Advertisement

அத்தியாயம் ஐந்து :

மாலை வரை நன்றாக உறங்கி எழுந்த பின் தான் சாப்பிடப் போக தன் பர்ஸ் பார்க்க.. வேதா பணம் கொடுக்கவில்லை என்பதே ஞாபகம் வந்தது.. அதோடு வேதாவின் ஞாபகமும் வந்து அமர்ந்து கொள்ள..

அப்போது தான் வேலவன் வர.. “யார் அவங்க? வீட்ல யார் யார்?” என்பது போல கேள்விகளைத் தொடுக்க.. மொத்த விவரத்தையும் பிட்டு பிட்டு வைத்தான் வேலவன்..

அவன் சொல்ல சொல்ல நிறைய கார்களில் வேதா கார்ஸ் என்ற ஸ்டிக்கரை இங்கே சென்னை வந்த நாளாக பார்த்தது ஞாபகத்திற்கு வந்தது… இரண்டு பெண்கள் மட்டுமே.. நான்கைந்து வருடத்திற்கு முன் அப்பாவிற்கு பக்கவாதம் வந்து விட.. அப்போது தான் வேதா படிப்பை முடிக்க இருக்க.. படித்து முடித்ததும் அப்பாவின் தொழிலில் அமர்ந்தாள்.

இன்னொரு பெண் ஸ்ருதி இப்போதுதான் படிப்பை முடித்து இருக்கின்றாள். அப்பா லோகநாதன் அம்மா கனகவள்ளி என எல்லாம் சொல்ல..

“உங்களுக்கு எப்படி எல்லாம் தெரியும்” என்ற கேள்வியும் கூடவே..  

“அவங்கப்பா இருந்தவரை அவர் தான் கார் ஓட்டுவார்.. அவருக்கு உடம்பு சரியில்லாதப்ப கொஞ்சம் மாசம் நான் அங்கே டிரைவரா இருந்தேன்.. பின்ன பொண்ணுங்க கத்துகிச்சு, எனக்கு வேலை இல்லை, ஆனாலும் எங்கயாவது போகணும்னா என்னை தான் கூப்பிடுவாங்க.. இதுக்கு அவங்க கம்பனிலயே நிறைய பேர் இருக்காங்க” என்று சொன்ன போது வேலவனுக்கு தொலைபேசி அழைப்பு.. எப்போதும் ஸ்பீக்கரில் போட்டு தான் வேலவன் பேசுவான்,

“வேலண்ணா.. நான் அவருக்கு பணம் கொடுக்கவேயில்லையே”  

“எவருக்கு பணம் குடுக்கலைம்மா” என்று புரியாமல் கேட்க..

“அதான் எங்களுக்கு கார் ஓட்ட அனுப்பினீங்களே” என,

“ஓஹ் பன் தம்பீங்களா?”  

“அவர் பேர் என்ன?”  

“கே டி பன் னுங்க?” என,

“கிழிஞ்சது நீங்களும் உங்க புத்திசாலித்தனமும்” என்றாள் கடுப்பாக.

காண்டீபனுக்கு சிரிப்பு வந்து விட வாய் விட்டு சிரித்தான்..

“வேலண்ணா யார் சிரிக்கறது?”

“நம்ம பன்னு தம்பி தானுங்க”  

“குடுங்க அவர் கிட்ட” என்றவள்..  “இப்படி வேலை பார்த்தா எப்படி? பணம் கூட வாங்காம?” என,

முகத்தில் ஒரு புன்னகை நிலைக்க அவளின் பேச்சை கேட்டான்..

“வாங்க! இப்போ வந்து வாங்கிக்கங்க! வேலண்ணாவை கூட்டிட்டு வாங்க!” என சொல்லி வைக்க..

குளித்து தயாராகி வந்து வேலவனின் டீ வீ எஸ் பிஃப்டியை எடுக்க.. அவனின் பின் அமர்ந்த வேலவன் மறைந்து போனார்.. ஆம்! ஒல்லியான வேலவன், காண்டீபனின் பின் அமர்ந்ததே தெரியாமல் இருக்க, அதற்கு தான் அன்று ஸ்ருதியும் அவர்களை பார்த்து சிரித்ததே.

ஒரு வழியாக அரைமணிநேரம் அந்த வண்டியை உருட்டி வேதாவின் ஷோ ரூம் அடைய, மூன்று செக்யுரிடிகளை கடந்து ஆஃபிஸ் உள் நுழைந்தான். ராஜேஷின் நிர்வாகம் பெர்ஃபெக்ட்.

கூட வேலவன் இருந்ததால், வேதாவை சுலபமாக பார்க்க முடிந்தது. “வாங்க, வாங்க, மிஸ்டர் பன்!” என்றாள் கிண்டலாக சிறு சிரிப்போடு.. நேற்று சுரிதாரில் பார்த்திருந்தான்.. இன்று ஒரு காட்டன் புடவையில் இருக்க.. கண்கள் ரசனையாக பார்க்க முற்பட்டு, “உன்னை விட பெரியவங்கடா அவங்க” என்று உடனே கடிவாளமிட்டது.

அந்த கண்ணாடி கதவுக்குள் நடப்பதை வெளியில் இருந்து ராஜேஷ் பார்த்திருந்தான். வேதாவின் முகம் இவ்வளவு மலர்ச்சியாக இவ்வளவு சிரிப்போடு கல்லூரி நாட்களில் பார்த்தது தான்..

“நீங்க தான் இந்த பேரை வெச்சதா வேலண்ணா?” என வேலவனை பார்த்து நக்கலாக கேட்டு.. “உங்களுக்கு தெரியுமோ?” என,  

“அது மட்டுமா தெரியும்..” என ஆரம்பித்து.. “கோயம்பத்தூர் ஊருங்க.. ஒரு பொண்ணோட காதலாகிப் போச்சு, அவங்க அப்பா அம்மா துரத்துறாங்கன்னு ஊரை விட்டு வந்துடுச்சு.. நான் சேர்த்து வைக்கறேன்னு சொல்லியிருக்கேன்” என்று அன்று புனைந்த கதைகளை இன்று அவிழ்த்து விட..

அவரின் பின் நின்று “இல்லை” என்று சிரிப்போடு கையசைக்க..

வேதாவிற்கு சிரிப்பு பொங்கியது.. “மிஸ்டர் பன் காதலிச்சு ஓடிவந்தீங்களா” என கிண்டல் செய்து, “ஆமாம் பொண்ணு எங்கே” என..

“அதைதானுங்க அம்மணி நாங்களும் தேடிகிட்டு இருக்கோம்”  

“என்ன? பொண்ணு ஓடிடுச்சா? இத்தனை நாள் தேடாம என்ன பண்ணின தம்பி” என்று வேலவன் சீரியசாகக் கேட்க…….. அப்படி ஒரு சிரிப்பு வேதாவிற்கு.. கலகலவென்று சிரிக்க..

அவள் சிரிப்பதை புன்னகையோடு காண்டீபன் பார்த்திருக்க.. இங்கே ராஜேஷிற்கு காதில் புகை வராத குறை.

அப்போது தான் ராஜேஷ் கவனித்தான்.. வேதா நின்றிருப்பதை.. காண்டீபன் உள் நுழையவும் தான் எழுந்து நின்றிருக்கின்றாள் என்று புரிய.. காண்டீபனை ஆராய்ந்தான்.. என்னவோ கரடு முரடான தோற்றம் தான் கண்ணில் பட்டது.. கூடவே அவனின் கரிய நிறம்.. “இவனை போய் வேதாவிற்கு பிடிக்குமா? சே, சே பிடிக்காது!” என்று தான் தோன்றியது.

கரடு முரடான தோற்றம் என்றாலும் செல்வ செழிப்பு கொடுக்கும் சோபையே தனி என்று ராஜேஷிற்கு புரியவில்லை.. அதனையும் விட.. காண்டீபனின் குணம், அவனின் நெறி முறைகள், அது கொடுக்கும் கம்பீரமும் தனி தான். 

“எவ்வளவு பணம் கொடுக்கட்டும்” என வேதா கேட்க..  

“உங்க விருப்பம்” என்பது போல ஸ்டைலாக தோளை குலுக்க, அது ஏனோ வேதாவை கவர்ந்தது.. “உன்னை விட சிறியவன், நீ திரும்ப சைட் அடிக்கிறாயா?” என தலையில் தானாக தட்டிக் கொள்ள..

“என்னாச்சுங்கம்மணி?” என்றான் மீண்டும்..

“ஒன்றுமில்லை” என்பது போல் தலையாட்டியவள்.. மூன்றாயிரம் ரூபாயை எண்ணிக் கொடுக்க..

உழைப்புக்கு பணம் என்பது வேறு, இந்த அதிகப் படி பணம் காண்டீபனின் முகத்தை சுருக்க வைத்தது.. “எதுக்குங்க அம்மணி இவ்வளவு.. நீ வேலைக்காரன்னு காட்டுறீங்களா?” என்று கேட்டும் விட..   

அந்த வார்த்தைகள் சுருக்கென்று வேதாவை தைக்க.. கையில் இருந்த பணத்தை வெடுக்கென்று பிடிங்கியவள்.. “உனக்கு பணமே இல்லை போ!” என்று அவளும் முகத்தை சுருக்கி இருந்தாள். பேச்சும் ஒருமைக்கு அவளை அறியாமல் மாறியிருந்தது.

அப்போது பார்த்து உள்ளே வந்த ராஜேஷ்.. “கொஞ்சம் டௌப்ட்ஸ் கேட்கணும்.. லேட் ஆகுமா?” என,

அப்போது தான் ராஜேஷின் ஞாபகம் வரப் பெற்ற காண்டீபன், அவனை ஒரு பார்வை பார்த்தவாறே.. “நீங்க பாருங்க அம்மணி! நானு வெளில இருக்கேனுங்க” என சொல்லி பதிலை எதிர்பார்க்காமல் வந்துவிட..

கூட வந்த வேலவன் “தம்பி நான் ஒரு சவாரிக்கு போகணுமே!” என்றான்.

“சரி, நீங்க போங்க! நான் போயிக்கறேன்!” என அமர்ந்து கொண்டான். உடனே பணத்தை வாங்கி சென்று விடலாம், ஆனால் போக மனதில்லை. வேதா முகத்தை சுருக்கி இருக்க எப்படிப் போவான்.

“அது என்ன அவன் உன்னை அம்மணி கூப்பிடறான்” என ராஜேஷ் கேட்க..  

“அது நீ அவரை தான் கேட்கணும்!” என்று ஒற்றை வரியில் வேதா முடித்துவிட.. வேறு பேச இயலாதவனாக ஏதோ ஒன்றை பேசிவிட்டு வெளியேறினான்.

அப்போதும் காண்டீபனை கூப்பிடும் எண்ணம் இல்லாதவளாக அதையும் இதையும் தொட்டுக் கொண்டிருந்தாள்.. நேரமும் எட்டாகிவிட.. ராஜேஷ் வந்து “இன்னும் நீ வீட்டுக்கு கிளம்பலையா?” என,

கிளம்பினாள்.. அவளை பார்த்ததும் அமர்ந்திருந்த காண்டீபன எழ.. அவனை முறைத்தவாறே நடக்க.. காண்டீபன் பின் சென்றான்.

இந்த ராஜேஷ் பேசாமல் இருந்திருந்தாலாவது, “நான் கிளம்பறேன்” என்று சொல்லி காண்டீபன் சென்றிருப்பான்.. “நீ எதுக்கு பின்ன போற” என்று கேட்கவும்..

“அம்மணி என்னை கார் ஓட்டச் சொன்னாங்க” என்று சொல்லிவிட..

“இதேதடா..” என்று வேதா பார்த்த போதும் மறுத்துச் சொல்லவில்லை… தன்னுடைய சம்மதத்தை சாவியை காண்டீபன் புறம் நீட்டி தெரிவிக்க..

“இத்தனை பேர் நம்மகிட்ட டிரைவர்ஸ் இருக்காங்க. யார் இது புதுசா? கேட்டா தெரிஞ்சவங்க சொல்ற! நம்ம கிட்ட இருக்குறவங்களே போதும், இல்லை நான் வர்றேன்” என்று ராஜேஷ் சொல்லிவிட… இதற்கு அவன் வேதாவிடம் தான் சொன்னான் அதிலும் காண்டீபன் சற்று தள்ளி தான் இருந்தான்..

கேட்ட அடுத்த நிமிடம் சிறிது நாட்களாக மறைந்து போயிருந்த கோபம் காண்டீபனுள் தலை தூக்க.. “ஏய், உனக்கு இன்னா பிரச்சனை” என்று வேகமாக ராஜேஷின் அருகில் வந்தான்.. குரலும் சற்று உயர்ந்து இருந்தது. கோவையின் மரியாதை போய் லோக்கல் ஆளாக மாறியிருந்தான் காண்டீபன்.

எல்லோரும் வீட்டிற்கு கிளம்பியிருந்தாலும், ஆங்காங்கே இருந்த நான்கைந்து பேரும் இவர்களிடம் கவனத்தை திருப்பினர்.

வேதா காண்டீபனின் கோபத்தையும், பாஷையையும் பார்த்து நின்றுவிட, “எனக்கு என்ன பிரச்சனை?” என்றான் ராஜேஷ்.. காண்டீபனின் அணுகு முறையில் பயம் வந்தாலும் காட்டிக் கொள்ளாது.

“நான் அவங்களுக்கு கார் ஓட்டினா உனக்கு என்ன பிரச்சனை? நீ யார் வேண்டாம்னு சொல்ல?” என..

வேதவிற்கு இந்த சண்டை சற்றும் பிடித்தமில்லை.. அதுவும் எல்லோரும் பார்க்க வேறு செய்ய.. “ஷ், என்ன பேசறீங்க? என் மேல இருக்குற ஒரு அக்கறைல சொல்றான். இந்த இடத்தோட இன்சார்ஜ் அதான் சொல்றான்.. இனிமே சொல்லாம நான் பார்த்துக்கறேன்” என்று காண்டீபனை சமாதானம் செய்தாள்.

அங்கே வேலை பார்ப்பவரை அந்த இடத்திலேயே கீழே இறக்கக் கூடாது என்று புரிந்தவளாக..

“இந்த இடத்துக்கு தான் அவர் இன்சார்ஜ், உங்களுக்கு இல்லை அம்மணி புரிஞ்சிக்கங்க.. என்ன பெரிய அக்கறை? எனக்கு உங்க மேல இருக்குறதை விடவா?” என சொல்லிவிட்டவன், சொல்லிய பின் தான் தன் பேச்சு மிகவும் அதிகப் படி என புரிய..  

இப்படி ஒரு பேச்சினை வேதா எதிர்பார்க்கவில்லை.. முகம் அதிர்ச்சியைக் காட்டிய போதும் உடனே அதை மறைத்தவள்.. உதட்டின் மேல் ஒற்றை விரலை வைத்து மேலே பேசாதே என்பது போல காட்டியவள்.. “நீங்க போய் கார்ல இருங்க” என்றாள் காண்டீபனை பார்த்து.  

மறு பேச்சு பேசாமல் அவன் சென்று விட.. “எனக்கு தெரிஞ்சவங்கன்னு காலையிலயே சொன்னேன் ராஜேஷ், திரும்ப நீ இப்படி பேசியிருக்க வேண்டாம்.. அண்ட் அவர் சொன்னதுல ஒன்னு நிஜம். நீங்க இந்த கம்பெனிக்கு இன்சார்ஜ் எனக்கு இல்லை.. நோ யுவர் லிமிட்ஸ், டோன்ட் மேக் திங்க்ஸ் மோர் காம்ப்ளிகேடட்” என,

“யார் வேதா அவன்? பார்க்க காட்டான் மாதிரி இருக்கான். நம்ம இடத்துக்கு வந்து நம்மையே அதட்டுறான். என்ன தெரிஞ்சவங்க? முதல்ல அதை கட் பண்ணு!” என்றான் அப்போதும் விடாமல்.

வேதாவிற்கே மிகவும் எரிச்சலாகிப் போனது, “நான் யார் கூட பழகணும், பழகக் கூடாதுன்னு நீ டிசைட் பண்ணாத புரியுதா?” என அடிக்குரலில் சீறி அவளும் செல்ல..

கூர்மையான பார்வையோடு அவர்கள் செல்வதையே பார்த்திருந்தான். “யார் சார் அது? மேடத்தை உங்க கிட்டயே கத்த வெச்சிட்டு போறது” என விசுவாசி ஒருவன் கேட்க..

“சொந்தக்காரன் போல, மேடத்துக்கு ஆளுங்களை அடையாளம் தெரியலை.. பார்க்கவே அவன் எப்படியோ இருக்கான்.. அவனோட போக வேண்டாம்னு சொன்னா மேடத்துக்கு எங்க புரியுது” என ராஜேஷ் சமாளித்தான்.       

“ஆமாம் சார் நல்லதுக்கே காலமில்லை.. எவ்வளவு அவங்களுக்காக பாடு படறீங்க.. உங்களை போய் பேசிட்டாங்களே” என ராஜேஷை விட அவன் வருத்தப் பட்டு போனான்.

அதுதான் ராஜேஷ் ஏற்படுத்தியிருந்த மாயை..

காரில் ஏறி அமர்ந்ததுமே சிறிது தூரம் சென்று காரை நிறுத்தி, “சாரி! ரொம்ப அதிகமா பேசிட்டேணுங்க” என்றான் குன்றிய முகத்துடன்.

“என்ன அதிகமா பேசினீங்க?” என வேதா கேட்க..

என்ன பதில் சொல்வான், “அவனை விட எனக்கு உங்க மேல அக்கறை இருக்குன்னு சொன்னேன் என்றா” மௌனமாகி விட..

“நான் அது வேலை செய்யற இடம். அங்க எதுக்கு இப்படி.. இப்போ நான் வந்ததுக்கு அப்புறம் என்ன பேசறாங்களோ, ராஜேஷ்க்கு அங்க எல்லோர் கிட்டயும் ரொம்ப நல்ல பேர்” என்று சூழ்நிலையை சரியாகக் கணித்தாள்.

“அப்போ என்ன என்னை உங்களோட பேசுவாங்கன்னு கவலைப் படறீங்களா?” என,

“ப்ச்” என சலித்தவள்.. “இப்படி அவனோட பேசுவாங்க, இவனோட பேசுவாங்கன்னு பொண்ணுங்க நினைச்சா யாரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாது.. எவன் பேசினாலும் எனக்கு அதை பத்தி கவலையும் கிடையாது” என்றாள்.

“எவன் பேசுவான் உங்களைப் பத்தி, அடுத்த வார்த்தை பேச முடியாதபடி பண்ணிடறேன்” என..

“ப்ச்” என மீண்டும் சலித்தவள், “அவன் என்கிட்டே மெதுவா சொல்லிட்டு இருந்தான்.. நீங்க சத்தமா பேசி எல்லோர் கவனத்தையும் திருப்பிட்டீங்க. எதுக்கு இப்படி ஒரு சீன் க்ரியேட் பண்ணனும்.. எனக்கு இது சுத்தமா பிடிக்காது.. இப்படி நீங்க இனிமே என்னை வெச்சு கத்தி பேசக் கூடாது, புரியுதா!” என அதட்டினாள்.

ஒரு தலையசைப்பை கொடுத்தான்..

இருவருக்குள்ளுமே ஒரு ஆழ்ந்த மௌனம்.. காண்டீபன் தன்னையும் மீறி வந்து விட்ட வார்த்தைகளின் யோசனைகளில் இருக்க..

காண்டீபனின் வார்த்தையின் சாராம்சம் என்ன சொல்ல வருகின்றது என்ற யோசனையில் இருந்தாள் வேதா.. 

வீடு வந்துவிட காரை நிறுத்தி கிளம்பியவனிடம், பணம் என்று கேட்கவே மனதில்லை வேதாவிற்கு.. யாரோ ஒருவன் நேற்று காலை தான் பார்த்திருக்கின்றாள், தன்னை விட வயது குறைந்தவன் வேறு.. மனம் அவனை நாடுவது முழுவதும் தவறாக தெரிந்த போதும்..

“வேலைக்காரன்” என்ற வட்டத்திற்குள் நினைக்க மனதில்லை, அதுதான் அவன் கேட்ட போது கோபம் வந்து கையினில் இருந்த பணத்தை பிடுங்கினாள். இப்போது இது கடனாக இருந்து விடட்டும் என்று தோன்ற, அவள் வீட்டை நோக்கி நடக்க.. காண்டீபன் மனதின் அழுத்தம் தாளாது வாயிலை நோக்கி நடந்தான். 

அங்கே கிருத்திகாவின் தொல்லை தாங்காது மகனை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் திருமலை சாமி.

    

 

 

Advertisement