Advertisement

அத்தியாயம் மூன்று :

அவர்கள் மதுரை சென்ற பிறகு காண்டீபனுக்கு தெரிந்தது.. இறந்தது வேதாவின் அம்மாவின் அப்பா என.. வீடு இவர்களைப் போல பெரிது எல்லாம் இல்லை.. வசதியானவர்கள் தான், ஆனால் இவர்களைப் போல இல்லை என்று பார்த்தவுடனே புரிந்தது.

இப்போது வேதாவின் தந்தையை இறக்கி விடும் அவசியம் காண்டீபனுக்கு இல்லை.. வேறு இரு இளைஞர்கள் வந்து இறக்கி அழைத்துப் போயினர்.

“நேரமாகும் நீங்க போய் சாப்பிட்டுட்டு வந்துடுங்க” என்ற வேதா, “உங்க போன் நம்பர் கொடுங்க, எதுன்னாலும் கூப்பிட” என,

“ஃபோன் இல்லைங்களே”  

“என்ன ஃபோன் இல்லையா?” என ஆச்சர்யமாகக் கேட்டு.. “சரி, இங்கேயே இடம் பார்த்து நிறுத்துங்க, எதுன்னா நானே வந்து கூப்பிடறேன்” என,

“சரி” என்ற அவனின் தலையசைப்பில் உள்ளே சென்றாள். அந்த முகத்தில் இருந்த ஏதோ ஒன்று அவனைக் கவர்ந்தது.. அதே சமயம் ஏதோ ஒன்று குறைவதாகவும் தெரிந்தது..

அதனால் அந்த முகத்தை திரும்பத் திரும்ப பார்க்க வேண்டும் என்ற உந்ததுதல் மனம் முழுவதும்.

“என்ன செய்கிறாய் காண்டீபா நீ?” என மனதிற்கு கடிவாளமிட்டவன்.. பிறகு பெற்றோர்களின் நினைப்பிற்கு தாவ..

“எப்படி என்னைத் தேடி இத்தனை நாட்கள் வராமல் இருக்கிறார்கள்.. அம்மா விட மாட்டார் என்பது நிச்சயம்.. அப்பாவை இந்த நேரம் ஒரு வழி செய்திருப்பார் என்றும் தெரியும்..” அந்த நேரம் அப்பா அவரின் கைகளில் படும் பாடை நினைத்தால் சிரிப்பு தான் வந்தது.

பின்னே அம்மா செய்யும் கலாட்டாக்கள் அவனுக்குத் தெரியாததா என்ன.. கத்தி ஆடி தீர்த்து விடுவார்.. யாரிடம் எப்படியோ அம்மாவிடம் அப்பா எப்போதும் பணிந்து தான் போவார். அப்பாவின் பலமே அம்மா தான்.

இப்படி விட்டு விட்டு வந்தது அவனுக்கும் வருத்தமாக தான் இருந்தது. “எப்பொழுதும் போல பேசிவிட்டு போகட்டும் என்று விடாமல், இதென்னடா உனக்கு ரோஷம், இப்போது காணாமல் என்ன பாடு படுகிறார்களோ” எனத் தோன்றியது.

வந்து கூப்பிட்டால் அடுத்த நிமிடம் போய் விடும் முடிவில் தான் இருந்தான், ஆனால் கூப்பிடாமல் போக மனதில்லை..

“என்னை கண்டுபிடித்து வரட்டும்” என்ற இறுமாப்பு.. கூடவே இந்த வாழ்க்கை முறை பிடித்திருக்க, வரும் வரை அனுபவித்துக் கொள்வோம் என இருந்தான்.

யோசித்து, யோசித்து அப்படியே உறங்கிவிட.. சிறிது நேரத்தில் விழிப்பு வந்த போது.. இவனின் காரிற்கும் எதிரில் நின்ற காரிற்கும் இடையில் ஸ்ருதி யாரோ ஒருவனோடு நின்று பேசிக் கொண்டிருந்தாள். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாது.

ஏதோ ஸ்ருதி கெஞ்சிக் கொண்டிருக்க.. அந்த இளைஞன் முடியாது என்பது போல மறுத்துக் கொண்டிருக்க.. காரின் கதவை லேசாக திறந்தான்.

அவர்கள் பேசுவது நன்கு கேட்டது.. “நான் வீட்ல சொல்லப் போறேன் ஸ்ருதி” .. “இப்போ வேண்டாம் தனா அத்தான், ப்ளீஸ், புரிஞ்சுக்கோங்க!” எனக் கெஞ்ச,

அவளின் கெஞ்சலில் சிறிது இளகியவன், “சரி! நீ சொல்லு, எப்போ சொல்லலாம்!” என,

“வேதா கல்யாணம் முடிஞ்சா பிறகு”  

“என்ன?” என்று இன்னும் கோபம் வரப் பெற்றவன்.. “உங்கக்கா எல்லாம் கல்யாணம் பண்ணிக்குவான்னு எனக்கு நம்பிக்கையே இல்லை.. சரியான திமிர் பிடிச்சவ.. அவளுக்கு கல்யாணம் நடக்கற வரை நான் ஏன் வையிட் பண்ணனும்.. இப்போவே இருபத்தி ஆறு இருக்கும்.. உனக்கு இருபத்தி மூணு, அவ கல்யாணம் முடிஞ்சா தான் உனக்கு பண்ணுவாங்கன்னு அவளுக்கு தெரியாதா.. அப்போவும் கல்யாணம் பண்ணாம தானே நிக்குறா” எனப் பொறிந்தான்.

“வேதாவை பத்தி பேச வேண்டாம்” என்று கோபமாய் விரல் நீட்டி எச்சரித்த ஸ்ருதி.. “அப்புறம் போடான்னுட்டு போயிடுவேன்” என,

“இப்போ மட்டும் என்ன வாடான்னா சொல்ற” என்று அடுத்த நிமிடம் தணிந்திருந்தான் தனஞ்ஜெயன்..

பார்க்க சுவாரசியமாக இருந்தது.. கூடவே அவளுக்கு இருபத்தி ஆறு வயதா? மனம் ஏமாற்றமாக உணர்ந்தது..

“ப்ளீஸ் ஸ்ருதி, எனக்கும் வயசாகுது, வேதாவை விட ஒரு வயசு பெரியவன், அம்மாவும் அப்பாவும் கல்யாணம் பண்ண பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. நான் அதையும் இதையும் சொல்லி தட்டிட்டு இருக்கேன். சரி! கல்யாணம் பண்ண வேணாம், நாம காதலிக்கிறோம்னு சொல்லலாமா?”  

“ம்கூம்” என, அதற்கும் வேண்டாம் என்பது போல ஸ்ருதி தலையசைக்க..

“பார்த்துட்டே இரு! எவளையாவது கல்யாணம் பண்ணி நிக்கப் போறேன், அப்புறம் நீ வாழ்க்கை முழுசும் தனியா தான் நிக்கப் போற உங்கக்கா மாதிரி” என்று அடிக் குரலில் சீறி விட்டு சென்றான்.

அந்தப் பெண் ஸ்ருதி சில நிமிடங்கள் அங்கேயே அழுது முடித்து பின் கண்களை துடைத்துக் கொண்டு செல்ல..

“அவன் கல்யாணம் பண்ணுவானாம் இந்தப் பொண்ணு தனியா நிக்குமாம்.. என்ன ஒரு எண்ணம் இவனுங்களுக்கு? வீணாப் போனவன்.. ஆனா அக்காவை ஏன் இழுத்தான்” என்ற குழப்பம் கூடவே காண்டீபனுக்கு தோன்றியது.

ஒரு டீ சாப்பிட்டால் தேவலாம் போல தோன்ற, காரை விட்டு இறங்கினான்.. வீட்டை விட்டு சற்று தள்ளி வேதா ஃபோன் பேசிக் கொண்டு இருந்தது தெரிந்தது..

“இருபத்தி ஆறு வயசாச்சா ஆனா கல்யாணம் இல்லையா, ஆனா இருபத்தி ஆறு வயசு ஒன்னும் ரொம்ப பெருசு இல்லையே” என யோசித்தபடி தான் வேதாவைப் பார்த்தான் காண்டீபன். இருபத்தி ஆறு இருக்கும் என்ற தனஞ்ஜெயனின் வார்த்தையில் இருபத்தி ஆறு என்று காண்டீபன் முடிவு செய்து கொண்டான்.

ஆனால் இருபத்தி ஆறு வயது போல தோன்றவில்லை, சற்று உயரமான, ஒல்லியான உடல் வாகு, களையான முகம்… நல்ல நிறம் கூட.. பார்க்க கல்லூரிப் பெண்ணின் தோற்றம் தான்.. பார்க்கவே மிருதுவாக தெரிந்தாள். ஏனோ தன்னோடு ஒப்புமை செய்தது மனம்…

“ஆம்! நான் கருப்பாக இருக்கின்றேன், அவள் ஒயிட்டாக இருக்கின்றாள், ப்ளாக் அண்ட் ஒயிட்” எனத் தோன்றியது.. கலர் மட்டுமல்ல தோற்றமும் கூட.. வேதாவின் தோற்றமே மென்மையாக இருக்க.. காண்டீபன் கரடு முரடாகத் தானே இருந்தான்.

தன்னையே காரின் சைடு கண்ணாடியில் பார்த்துக் கொண்டான்.. ம்கூம், சற்றும் தோற்றம் பொருந்தவில்லை போல தான் அவனின் எண்ணம்.

மெலிதான புன்னகை அவனுக்குள்ளே, “எங்க வந்து என்ன யோசிக்கற.. நீ டிரைவர்டா இப்போ மகனே” என சொல்லிக் கொண்டான்.

இவன் தன்னை பார்த்து நிற்பதை உணர்ந்த வேதா.. அருகில் வந்து “ஏதாவது வேணுங்களா?” எனக் கேட்க..

யோசனைகளில் அவன் இருக்க.. திடீரென்று வேதா அருகில் வந்து பேசியதும் “என்ன?” என விழித்தான்.

“ஹல்லோ! உங்க கிட்ட தானே பேசறேன்!” என,

“என்ன கேட்டீங்க அம்மணி?” என காண்டீபன் கேட்க..

“என்னையா? என்ன அழைப்பு இது?” என்பது போல வேதா அதிசயித்து பார்த்தாலும்.. “ஏதாவது வேணுமான்னு கேட்டேன்! என்னையே பார்த்துட்டு நின்னிங்களே, பணம் ஏதாவது வேணுமா?” என..

“வேண்டாம்!” என்பது போல தலையசைத்தவன்.. “டீ சாப்பிடப் போக இருந்தனுங்க, சொல்லிட்டுப் போகலாம்னு பார்த்தனுங்க” என..

அதற்குள் அவளின் அம்மாவும் ஸ்ருதியும் அருகில் வந்தவர்கள்.. “ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம் வேதா” என கேட்க..

“அப்பாக்கு இங்க வசதி பத்தாதும்மா, அவர் இருக்கவும் இஷ்டப்பட மாட்டார்”

“இல்லை! அப்பா இருக்குறாராம்!” என அம்மா சொல்ல..  

“என்ன?” என்ற அதிர்ச்சி முகத்தில், கூடவே “சரி இருந்துக்கங்க, நான் கிளம்பறேன்!” என,

“வேதா பழசை மறந்துடுடா, இவங்க என்ன பண்ணுவாங்க!” என அம்மா கெஞ்ச..

“எனக்கு எதுவும் ஞாபகம் இல்லைம்மா, எனக்கு வேலை இருக்கு, நான் கிளம்பறேன், எனக்கு யார் மேலயும் வருத்தம் இல்லை” என திடமான குரலில் பேச..

“உன்னை மட்டும் எப்படி தனியா அனுப்பறது”

“என்னம்மா பயம்! தோ இவர் இருக்கார் தானே” என காண்டீபனை காட்டி, “பத்திரமா என்னை வீட்ல விட்டுடுவார்” என,

தான் இப்போது “ஆம்” என்று சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்து, “நான் விட்டுடறணுங்க அம்மணியை” என சொல்ல..

“எப்படி தனியாக அனுப்புவது” என்ற குழப்பம் அப்போதும் அவரின் முகத்தினில்.. “மா! நான் போயிக்குவேன் வாங்க!” என்று உள் அழைத்துச் சென்றவள்.. “நீங்க டீ சாப்பிட்டிட்டு வந்துடுங்க!” என சொல்லிச் செல்ல..

மனது எப்போதையும் விட சிறிது உற்சாகமாக உணர்ந்தது..

அவர்கள் கிளம்பும் போது பத்து மணி ஆகிவிட.. காரின் அருகில் ஒரு கும்பலே இருந்தது.. அதில் காண்டீபனுக்கு தெரிந்தது வேதாவின் அம்மா, ஸ்ருதி மற்றும் அந்த தனஞ்ஜெயன்..

“நான் கூட வரட்டுமா வேதா. தனியா போற!” என்றான் அந்த தனஞ்ஜெயன் தயங்கித் தயங்கி.. அது ஸ்ருதி சொல்லி சொல்லியிருப்பான் என்று காண்டீபனுக்கு புரிந்தது..

“தனியா எங்கப் போறாங்க! இவ்வளவு பெரிய உருவம் நான் இருக்குறது இந்த மடையனுக்கு தெரியலையா?” எனத் தோன்ற.. அவனுக்கு தோன்றியதை வேதா தன் வாய் மொழியாக சொன்னாள்.. “இங்க ஒருத்தர் உட்கார்ந்து இருக்காறே கண்ணுக்குத் தெரியலையா?” என,

காண்டீபனின் தோற்றம் கரடு முரடாய் இருந்தாலும் மரியாதையான தோற்றம். அவன் பேச்சுகளும் மரியாதையாய் இருக்க, அதுவும் அந்த அம்மணி என்ற அழைப்பு இன்னும் மரியாதையாய் காட்ட.. பின்பு யாரும் எதுவும் பேசவில்லை.. அவர்கள் கிளம்ப..

“டிரைவர் தூங்கிடாதீங்க” என ஸ்ருதி சொல்ல… எப்பொழுதும் போல எதுவும் பதில் பேசவில்லை காண்டீபன்.. “கார் ஓட்டறான், ஆனா எவ்வளவு திமிர், பதிலே சொல்றது இல்லை” என்று ஸ்ருதி முணுமுணுக்க.. அது தெளிவாக காண்டீபன் காதிலும் விழுந்தது.

“ஸ்ருதி!” என்ற ஒரு அதட்டல் ஒருங்கே வேதாவிடமும் தனஞ்ஜெயனிடமும் கிளம்பியது. “நான் பேச மாட்டேன்” என்பது போல வாயின் மேல் கை வைக்க..  

“இவ இப்படி தாங்க, சாரி!” என்று காண்டீபனிடம் சொல்லிய வேதா “நாம கிளம்பலாம்” என, கிளம்பி ஒரு நிமிடம் கூட இருக்காது.. தொலைபேசி அழைப்பு..

“கிளம்பிட்டோம் ராஜேஷ்” என்றவள்.. “நானும் டிரைவரும் மட்டும் தான்.. ஃபோன் செய்யாதீங்க, நான் தூங்குவேன், ஃபோன்லையும் சார்ஜ் கம்மியா இருக்கு!” என..

அப்போது தான் ஃபோன் சார்ஜ்ல இருந்தது என்று யாரோ அவள் கார் ஏறும்போது கொண்டு வந்து கொடுத்திருந்தனர்.

“இவன் டார்ச்சர் செய்கிறானோ வேதாவை” எனத் தோன்றியது..

வேதா வைத்தவுடன்.. “இந்த நேரம் உங்க ஆஃபிஸ் வொர்க் இருக்க வாய்ப்பில்லை, பேசாம சுவிச் ஆஃப் பண்ணிடுங்க” என,

“வேற ஏதாவது கால் வந்தா?” என்ற வேதாவின் கேள்வியில்.. அவளுக்கு அதில் எதுவும் ப்ராப்ளம் இல்லை எனப் புரிந்து.. “நம்பர் ப்ளாக் பண்ணிடுங்க, காலையில் ரிலீஸ் பண்ணிடுங்க!” என..

“எஸ், யு ஆர் ரைட்” என்றவள்.. “எப்படி” என்று ஃபோனை நோண்ட.. பிடிபடவில்லை..

“குடுங்க அம்மணி!” என்று கை நீட்டியவனிடம் மொபலை வைக்க..

“இது ரொம்ப அவுட் டேட்டட் அண்ட் ஃபேய்லியர் மாடல் கூட.. இப்போ வர்ற மொபைல்ஸ் எல்லாம் ஜஸ்ட் நம்பர் கிளிக் பண்ணினாலே, ப்ளாக் கேட்கும்” என்றவன், அதில் தேடி ப்ளாக் செய்து விட..

“ஓஹ்” என்றவளின் முகம் யோசனைக்கு மாறியது.. ஆம்! ஸ்ருதி கூட அதைத்தான் சொன்னால்.. ஆனால் ராஜேஷ் தான் இந்த மாடல் இப்போ வர்றது இல்லை பட் பெஸ்ட் என சொல்லிக் கொடுத்திருந்தான்.. இரண்டு மாதங்களுக்கு முன் தான் முப்பத்தி ஐந்தாயிரம் கொடுத்து வாங்கியிருந்தாள்.. பணம் இங்கே பிரச்சனையில்லை..

சொன்னான் என்று ஒரு வார்த்தை கூட யோசிக்காமல், நெட்டில் கூட தேடி வெரிஃபை செய்து கொள்ளாமல் வாங்கினாளே.. ஒரு வேலை அவனுக்கு தெரியாமல் இருக்கக் கூடும் என தான் மனம் நினைத்தது. அவன் ஏமாற்றியிருக்கக் கூடும் என்று தோன்றவில்லை.

“உங்க பேர் என்ன?” என்றவளிடம்  “கே டி பன்” என்றான் காண்டீபன்..

“என்ன?” என்று விழிக்க.. “ஆமுங்க” என்றான்..

“பொய் தானே சொல்றீங்க” என மெலிதாக வேதா புன்னகைக்க..

“நான் என் பேர் சொன்னனுங்க, இந்த வேலண்ணா அப்படி கூப்பிட்டாரா? சரி அப்படியே இருக்கட்டும்னு விட்டுடேன்.. முடிஞ்சா நீங்க கண்டுபிடிங்களேன் அம்மணி” என..

“எப்படி கண்டுபிடிக்க?”

“நான் பேர் சொன்ன போது தான் அவர் மாத்தி சொன்னார், அதோட தானுங்க ஒட்டி வரும்!” என,

அப்போது பார்த்து காண்டீபன் ட்ராவல்ஸ் என்ற அவர்களின் பஸ் வேறு போக.. அந்த பஸ் போவதை பார்த்தால் தான் ஆனாலும் அந்த பேரை படிக்கவில்லை..

“இன்னும் நீங்க கொஞ்சம் ஷார்ப்பா இருக்கணும் அம்மணி!” என்று வேறு சொல்லி விட்டு, “அச்சோ, தப்பாக எடுத்துக் கொள்வாளோ?” என்று வேறு பார்க்க..

“ஏன் அப்படி சொல்றீங்க?” என்றாள்.. அவளின் கேள்வியில் கோபமெல்லாம் இல்லை, என்ன தன்னிடம் குறைகின்றது என்று தெரிந்து கொள்ளும் ஆவல் மட்டுமே இருந்தது.

என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல்.. “அந்த ஃபோன் பழசு வாங்கிட்டீங்கள்ள தெரியாமா, அதைச் சொன்னேன்!” என சமாளித்தான்.

“என் ஃபிரண்ட் வாங்கிக் கொடுத்தான்.. இப்போ பேசினேன் இல்லையா ராஜேஷ் அவன்.. அவனுக்கு தெரியலை போல” என..

“தெரியாம வாங்கியிருந்தா பரவாயில்லைங்க அம்மணி, ஆனா தெரிஞ்சு கொடுத்திருந்தா? ஒரு தொழில் நிர்வாகம் பண்றீங்கன்னு தோணுது. அப்போ எல்லாம் சந்தேகக் கண்ணோட தான் பார்க்கணும்”

“நம்ம ஏமாந்துட்டு அடுத்தவங்க ஏமாத்திட்டாங்கன்னு சொல்றது முட்டாள் தனம் அம்மணி.. தப்பா எடுத்துக்காதீங்க, சொல்லணும் தோணிச்சு சொன்னேன்!” என,

வேதா அதற்கு பதிலே பேசவில்லை.. அந்த மதி முகம் யோசனையில் ஆழ்ந்தது.. “நான் பத்திரமா உங்களை கொண்டு போய் விட்டுடுவேன் நீங்க தூங்குங்க” என்றான்..

அவளின் யோசனைகளில் அந்தக் குரல் ஆறுதலை கொடுக்க.. கண்களை மூடிக் கொண்டாள்.. படுக்கையில் எளிதில் வராத உறக்கம் அங்கே அப்போது உடனே வந்தது.

இங்கே வேதா உறங்க.. அங்கே திருமலை சாமி தன் உறக்கத்தை தொலைத்திருந்தார்.. ஆம்! அப்போது தான் அவர் உறங்க ஆரம்பித்து இருக்க..

கிருத்திகா வந்து கத்த ஆரம்பித்தார்.. “என்ர பையனை ஊட்ட உட்டு துரத்திபோட்டு உங்களுக்கு தூக்கம் கேக்குதோ.. போ, போ, என்ர பையன் இல்லாத வீட்ல உனக்கும் இடம் கிடையாது.. போ, எவ வீட்டுக்காவது போ, உனக்கு பிடிச்ச மாதிரி பையனை எவளாவது பெத்துக் கொடுப்பா, போ, அவனை போய் பையன்னு சொல்லிக்கோ”

“தங்கம்மாட்டம் இருக்குற பையனை வெச்சிக்க தெரியலை.. உங்களுக்கெல்லாம் குடிச்சிட்டு ஊர் சுத்திட்டு பிரச்சனையை இழுத்து விட்டுக்குற பையன் தான் பிடிக்கும்” என்று ஆரம்பித்தவர், விடியும் வரை பேச்சை நிறுத்தப் போவது இல்லை என உணர்ந்து..

அந்த நேரத்திலும் சட்டையை மாட்டிக் கொண்டு கம்பெனிக்கு கிளம்பிவிட்டார். நன்றாக இருந்த வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொண்டது அவருக்கேப் புரிந்தது.

ஆனால் மகனை எங்கென்று போய் தேடுவார்… “எங்கடா போய் தொலைஞ்ச, என் கண்ல மாட்டுன.. நீ தொலைஞ்சடா.. உங்கம்மாவை என்கிட்டே இருந்து பிரிச்சிட்டல்ல, உனக்கு இது தெரியாமையா இருக்கும், திரும்ப வந்தா என்ன? உன்ர அப்பாகிட்ட, அம்மாகிட்டயாட உனக்கு சண்டை. போக்கத்த பய, எங்க சுத்திகிட்டு கிடக்கோ?” என மனம் அவ்வளவு கோபம் கொண்டது, கூடவே மகனை நினைத்து கவலையும்..        

 

Advertisement