Advertisement

அத்தியாயம் பன்னிரண்டு:

வேதாவை ஊருக்கு அனுப்பியவன், “அப்பா கொஞ்சம் நாள் நான் அவங்க கார் கம்பனில இருந்து ட்ரைனிங் எடுக்கலாம்னு இருக்கணுங்க, இங்க ஆரம்பிக்கற முன்னாடி, நீங்க அதை பத்தி என்ன சொல்றீங்க?” என,

அதில் அவருக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லையே.. “உங்கம்மா விட்டா போ” என்று முடித்து விட,

“அம்மா” என்று அவரிடம் வந்து நிற்க.. “நிஜமா ட்ரைனிங் எடுக்கப் போறியா தம்பு, இல்லை வேற என்ன செய்யப் போற?”

“அந்த அம்மணி கிட்ட ஐ லவ் யு சொல்லியிருக்கேன், பதிலுக்கு சொல்ல வைக்க வேண்டாமா?” என,

“டேய் தம்பு, நீ இப்படி எல்லாம் பண்ணுவேன்னு நான் நினைச்சதே இல்லை” என கலக்கமாக பேச,

“அதனால் என்னங்கம்மா, இப்போ நினைங்க” என்று கூலாக சொல்ல..

“தம்பு, அந்தப் பொண்ணுக்கு உன்னை பிடிக்கலைன்னா கட்டாயப்படுத்தறது தப்புடா!”

“அப்படி இருந்தா நான் சொல்வேனா, அவளுக்கு பிடிச்சிருக்குங்கம்மா, உங்களுக்கு என்னை தெரியாதா?”

“அப்பா ஒத்துக்கலைன்னா?”

“அதை அப்போ பார்த்துக்கலாம் மா.. வாரம் வாரம் வந்துடுவேன், ஒரு ரெண்டு மூணு மாசம் மட்டும் விடுங்க, ப்ளீஸ் மா!” என கெஞ்சி கெஞ்சி புதனன்று அவன் சென்னை வந்த போது…

இன்னுமே உடைந்து போயிருந்தாள் வேதா..

நேரே ஹோட்டலில் ரூம் போட்டு குளித்து அவன் ஆபிஸ் வந்த போது, ஸ்ருதியும் வேதாவும் மட்டுமே அவர்களின் அறையில் அந்த ரமேஷ் கண்ணில் படவில்லை,

உள்ளே சென்றால் வேதாவின் முகமே சரியில்லை, ஸ்ருதி தான் “வாங்க” என சொல்ல, வேதா அவனை ஒரு பார்வை பார்த்ததுடன் சரி ஒன்றுமே பேசவில்லை..

“என்னாச்சு” என்று ஸ்ருதியிடம் கேட்க.. என்ன சொல்வது என்று தெரியாமல் ஸ்ருதி விழித்து, “நான் வெளில ஒரு ரௌண்ட்ஸ் போயிட்டு வர்றேன் வேதா” என்று சென்றாள்.

“என்னாச்சுங்கம்மணி” என,

“ப்ச்” என்று சலிக்க,

“சும்மா உச்சு உச்சுன்னு உச்சு கொட்டக் கூடாது, சொல்லுங்க!” என்று அதட்ட..

வேதா பதிலே பேசவில்லை.. எழுந்து வெளியில் வந்து ஸ்ருதியை தேடியவன், “என்னாச்சு ஸ்ருதி” என,

“ஒரு வரன் வந்தது, அமையற மாதிரி இருந்தது.. நேத்து அவங்க பொண்ணு வேற யாரையோ உங்க கிட்ட வேலை பார்க்குறவரை லவ் பண்ணுதாம்.. உண்மையான்னு கேட்டாங்க.. அதுல அவ ரொம்ப அப்செட்” என்றவள்,

“நான் பல தடவை சொல்லியிருக்கேன், அந்த ராஜேஷை தள்ளி நிறுத்துன்னு இவ கேட்கவேயில்லை. இப்போ எப்படி புரளி கிளப்பி விட்டுருக்கான். இது அவன் வேலை தான்” என ஸ்ருதியும் சொல்ல,

“அவங்க கிட்ட உண்மைன்னு சொல்லி, நாங்க தான் பொண்ணுகிட்ட கேட்காம ஜாதகம் கொடுத்துட்டோம்னு ஒரு சாரி சொல்லி பிரச்னையை சுமுகமா முடிச்சிடுங்க!” என,

“என்ன?” என்று அதிர்ந்தாள் ஸ்ருதி..

“ஆமுங்க, நான் இன்னைக்கு இருந்து வேலைல சேரப் போறேன் தானே!” என சொல்ல, முதலில் புரியாமல் விழித்தவள், பின்பு புரிந்ததும், இன்னும் கலவரமானாள், “வேதா ஒத்துக்குவான்னு எனக்கு தோணலை” என,

“ஏன்?”

“தூக்கிப் போடுங்கம்மா, வேற பாருங்க, இதுக்கு மனசை குழப்பாதீங்கன்னு அம்மாக்கு தைரியம் சொன்னாளே” என,

“என்னது வேற பார்க்க சொன்னாங்களா” என்று ஆச்சர்ய பாவனை காட்டியவன், “சரி, வேற பாருங்க, அந்த வேற.. என்னை பாருங்க!” என்று ஈசியாக சொல்ல,

ஸ்ருதிக்கு சிரிப்பு, கூடவே ஒரு நம்பிக்கையும் வந்தது, ஆனாலும் “உங்க வீட்ல ஒத்துக்குவாங்களா?” என,

“எங்கப்பா பொண்ணு கேட்பார் போதுமா! அதுக்கு மட்டும் உங்கம்மா கிட்ட முன்னமே பேசி வெச்சிடுங்க!” என சொல்லி வந்தவன்,

வேதாவிடம் “வேற மாப்பிள்ளை பார்க்க சொன்னிங்களாமே, என்னை பார்க்க சொல்றது!” என,

“பாருங்க, நான் ரொம்ப டென்ஷன்ல இருக்கேன். திரும்ப உளறலை ஆரம்பிக்க கூடாது!” என ஸ்ட்ரிக்டாக சொல்ல,  

“எனக்கு உங்களை பிடிச்சிருக்கு அம்மணி, என்னை கல்யாணம் பண்ணிக்கங்க” என்றான் நேரடியாக.

“ப்ச், இது சரி வராது” என்றாள்.

“ஏன்?” என்றவனிடம், “என்னன்னு சொல்ல, ஏற்கனவே என்னை பத்தி இல்லாதது எல்லாம் பேசறாங்க.. இப்போ நீங்க என்னை விட வயசு கம்மி, உங்களை கல்யாணம் பண்ணினா இன்னும் பேசுவாங்க, அதெல்லாம் முடியாது!” என,

“உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லையா?”

“இது சரிவராது”  

“உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லையா?”

“நான் அதை பத்தி யோசிக்கக் கூட விரும்பலை”  

“முதல்ல அதை யோசிங்க”

“முடியாது”  

“யாருக்கு தெரியும் நீங்க பெரியவங்க, நான் சின்னவன்னு, என் பக்கத்துல நீங்க நின்னா அவ்வளவு பொடிசா தெரியறீங்க, யாரும் அப்படி நினைக்க மாட்டாங்க!” என,

அப்படி கூட தெரியாமல் போகுமோ என்ற நப்பாசை முகத்தினில் தெரிய.. “யாருக்கும் தெரிய வராதா?” என,

“தெரிய வராது” என்றான் திடமாக,

“வீட்டு ஆளுங்களுக்கு”

“தெரிய வராது, உங்களுக்கு ஜாதகம் இல்லை சொல்லிடுங்க”  

“உங்கப்பா கண்டு பிடிச்சிட்டா?”

“நீங்க சொல்லாம அவருக்கு தெரியாது, நீங்க உங்க பிறந்த நாள் மட்டும் சொல்லுங்க, வருஷம் சொல்லாதீங்க”

“இல்லை, சரி வராது, உங்களுக்கும் எனக்கும் தெரியும் தானே!” என மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நிற்க,

“தோ பாருங்கம்மணி, நீங்க என்னை தான் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க! அதுல மாற்றம் கிடையாது.. வயசை நான் சொல்லப் போறது கிடையாது.. நீங்க யார் கிட்டயும் சொல்லாம பார்த்துக்கங்க, அவ்வளவு தான்!” என்று முடித்தவன்.. “முதல்ல அந்த ரமேஷ் பிரச்னையை முடிப்போம்!”

“அப்புறம் எங்கப்பா பொண்ணு கேட்பார், உங்க வீட்ல சரின்னு சொல்லுங்க, புரிஞ்சதா!” என்று அதட்டலாக சொன்னவன்..

“எனக்கு இங்க என்ன வேலை?” என,

“உங்களை யாரு இங்க வேலைக்கு வைக்கப் போறா, அதெல்லாம் வேண்டாம், சொன்ன கேளுங்க!”

“ஏன், நான் சரியா செய்ய மாட்டேன்னா?”  

முறைத்தவள் “என்னால தினமும் உன்னை பார்த்துட்டு எல்லாம் இருக்க முடியாது புரியுதா.. அப்புறம் என் மனசு உன்னையே தான் நினைக்கும்.. அது தப்பு. நீ என்னை விட சின்னவன், என்னை தப்பு செய்ய வெக்காதே, வெளில தெரிஞ்சா இது அசிங்கம், புரியுதா!” எனச் சீற..

“ஏய், லூசு அம்மணி, இவ்வளவு நேரமா நான் என்ன சொல்லிட்டு இருந்தேன், யாருக்கும் தெரிய வராது!” என,

“யாருக்கு தெரிஞ்சா என்ன? தெரியலைன்னா என்ன? எனக்கு தெரியும் தானே!” என,

“போடி மென்டல்” என்றான் கோபமாக.  

“நானா மென்டல்! நீதான் மென்டல்! போடா!” என்றாள் அவளும் கோபமாக.  

“உனக்கு பிடிக்கலைன்னு சொல்லு, போயிடறேன், ஆனா வயசு கம்மின்னு எல்லாம் சொன்ன போக மாட்டேன், நான் இங்க தான் உன்னோட தான் இருப்பேன், முடிஞ்சா உன்னால ஆனதை பார்த்துக்கோ, போடி!” என்று பொறிந்தான்.  

வேதாவின் முகம் சரியாகவேயில்லை. ஆனால் அதை பற்றி எல்லாம் காண்டீபன் கவலைப் படவில்லை..

வெளியே வந்து “எங்க போனான் அந்த பரதேசி” என்று ஸ்ருதியிடம் கேட்க ..

“தெரியலை, வேதாக்கு தான் தெரியும்!” என,

முதல் முறை மனதிற்கு வேறு எதுவோ சரியில்லாமல் பட, திரும்ப வேதாவிடம் சென்றான்.

“ஏதாவது பண்ணிட்டியா வேதா அவனை?” என,

நிமிர்ந்து பார்த்தவள் “இன்னும் ஒன்னும் பண்ணலை” என்றாள்..

“இன்னும் ஒன்னும் பண்ணலைன்னா?”

“சும்மா மிரட்டி வெச்சிருக்கேன், பயந்து இன்னைக்கு லீவ் போட்டிருப்பான். வருவான், நாளைக்கு வருவான், சுலபமா பின் வாங்க மாட்டான்!” என,

“என்ன அம்மணி மிரட்டுனீங்க? நான் தான் பார்த்துக்கறேன்னு சொன்னேனே! நீங்களும் என்னை நம்பலையா!” என,

“சும்மா எப்போ பார்த்தாலும் ப்ளாக் மெயில் பண்ணக் கூடாது.. நேத்து அம்மா இப்படி சொல்லிடாங்கன்னு சொல்லவும் என்னால கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியலை.. கூப்பிட்டு மிரட்டிடேன்”

“என்ன மிரட்டுனீங்க?”

“ஆஃபிஸ் விட்டு கிளம்பிடு, இனி வேலைக்கு வேண்டாம்  சொன்னேன். முடியாது சொன்னான் .. பணம் திருடிட்டேன்னு கம்ப்ளையின்ட் கொடுப்பேன், பிரஸ்ல அவனோட போட்டோ போட்டு பணம் கையாடல்ன்னு சொல்ல வைப்பேன்னு சொன்னேன்”

“உன்னால நிரூபிக்க முடியாது, நான் உண்மையானவன் சொன்னான்”

“எப்போ நீ என்னை கல்யாணம் பண்ணி இந்த சொத்தை அடையலாம்னு நினைக்கறியோ, அப்போ எப்படி நீ உண்மையானவன். இதுவும் ஒரு வகையான கையாடல் தானே. என் பேரை இப்படி சிதைச்சு வெச்சிருக்க, இது பணம் திருடுறதை விட அதிகம்ன்னு சொன்னேன்!”

“நீ என்ன வேணா சொல்லிக்கோ நம்ம கல்யாணம் நடக்கணும் சொன்னான். எவ்வளவு தைரியம் அவனுக்கு, அதுக்கு மேல என்னால பொறுமையா பேச முடியலை”

“உனக்கு ரெண்டு தங்கச்சி இருக்குள்ள, ஒருத்திக்கு கல்யாணம் ஆகிடுச்சு, இன்னொருத்திக்கு பார்த்துட்டு இருக்கீங்கள்ள.. உன் கல்யாணமான தங்கச்சி புருஷன் கிட்ட யாரையாவது விட்டு அவளை பத்தி தப்பா சொல்ல வைப்பேன் சொன்னேன்..”

 “இன்னொரு தங்கச்சியை யார் பொண்ணு பார்க்க வந்தாலும் அவங்க கிட்டயும் என்னை பத்தி நீ சொன்னதை விட ரொம்ப மோசமா சொல்வேன்னு சொன்னேன், நான் இப்படி பேசுவேன்னு அவன் எதிர்பார்க்கலை, டென்ஷன் ஆகிட்டான்! அதுதான் இன்னைக்கு வரலை போல!” என்றாள்.

“என்ன அம்மணி இப்படி பண்ணிட்டீங்க, இவன் பண்ணினதுக்கு அந்தப் பொண்ணுங்க என்ன பண்ணுவாங்க” என,

“ஏன் நான் அந்த பொண்ணுகளுக்கு தொந்தரவு கொடுப்பேனா?”

“சே, சே, அப்படி எல்லாம் பண்ணவே மாட்டீங்க, அது சும்மா அவனை மிரட்ட சொன்னது எனக்கு தெரியும்.. ஆனாலும் என்னோட வேதா அடுத்த வீட்டு பொண்ணுங்களை இப்படி பேசக் கூடாது. கூடவே அவன் இன்னும் மோசமா ஏதாவது பண்ணிட்டான்னா? ஏன் இப்படி பண்ணுனீங்க.. முதல்ல ஒரு சேதாரமும் இல்லாம நாம வெளில வரணும். அப்புறம் அவனை என்னவாவது பண்ணலாம்” என,

“இப்போ நான் என்ன பண்ணட்டும்”             

“ஒன்னும் பண்ண வேண்டாம், ஆனா இனிமே எதுவும் என்னை கேட்காம பண்ணாதீங்க” என,

“ம்ம்ம்” என்று மண்டையை மண்டையை ஆட்டினாள் வேதா, ஆனாலும் “இன்னும் என்ன பண்ணுவான்?” என்று கேட்ட குரலில அவளையும் மீறி பயம்…

“அம்மணி, பாயற இடத்துல பாயணும், அதே சமயம் பதுங்கற இடத்துல பதுங்கி தான் ஆகணும்”

“விடுங்க, நீங்க பாஞ்சிட்டீங்க, நான் பதுங்கிக்கறேன்.. நான் பார்த்துக்கறேன்” என்ற படி எழுந்தவன்,

“நாம கல்யாணம் பண்றோமோ இல்லையோ நீங்க உங்களை இவ்வளவு கஷ்டப் படுத்திக்காதீங்க. நான் இருக்கேன், என்னை நம்புங்க. இதுக்கு மேல என்ன பேசறதுன்னு எனக்குத் தெரியலை” என சொல்லி கதவை திறக்க, அங்கே ஸ்ருதி கலவரமான முகத்தோடு நின்றாள்.

“என்ன ஸ்ருதி?” என, “ஊர்ல இருந்து மாமாவும் அத்தையும் என்னை பொண்ணு கேட்டு வந்திருக்காங்களாம்” என,

“யார் சொன்னா?”

“தனா அத்தான் சொன்னாங்க,  நம்ம வீட்டுக்கு அத்தையும் மாமாவும் போயிருக்காங்க போல” என,

அப்போது சரியாக அம்மா அழைத்து “ஊர்ல இருந்து அத்தையும் மாமாவும் வந்திருக்காங்க வேதா, வர்றிங்களா” என,

உடனே வீட்டுக்கு கிளம்பிப் போனார்கள்..

அங்கே பெண் கேட்டு வந்திருக்கிறார்கள், அதுவும் சொல்லாமல் கொள்ளாமல் என்றதும், கனகவள்ளிக்கு பதட்டமாக இருந்தது.. அவருக்கு வேதாவை கேட்டு வந்திருப்பார்கள் என்ற எண்ணம் தான், ஸ்ருதி ஞாபகத்திற்கு வரவேயில்லை..

பேச பேச தான் ஸ்ருதியை கேட்க.. “அண்ணா வேதா இருக்கும் போது இவளுக்கு எப்படி பண்ண முடியும்?” என,

“அதுக்கென்னம்மா பண்றது… ரெண்டு பொண்ணுங்களையும் வீட்ல வெச்சிருப்பியா?” என அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே வேதாவும் ஸ்ருதியும் வந்துவிட..

கனகவல்லி மறுத்துக் கொண்டிருந்தார்.. “இல்லைன்னா வேதா இருக்கும் போது கண்டிப்பா சின்னவளுக்கு பண்ண மாட்டேன். அவளுக்கு செஞ்சு தான் இவளுக்கு!” எனத் தெளிவாக உரைத்து விட்டவர்..

“நானே ஒத்துக்கிட்டாலும் ஸ்ருதி ஒத்துக்க மாட்டாண்ணா, நீங்க வேணா கேட்டுக்கங்க” என,

வேதா தான் இடையில் புகுந்தாள், “அம்மா, ஸ்ருதி அதெல்லாம் ஒத்துக்குவா நீங்க சரின்னு சொல்லுங்க .. என்னால அவ கல்யாணம் கண்டிப்பா தடைபடக் கூடாது!” என,

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மாமா, அக்காக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கும். அதுக்கு அப்புறம் நான் பண்ணிக்கறேன்!” என,

“சும்மா பேசாத ஸ்ருதி, இப்போ மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சு ரெண்டு வருஷமாகிடுச்சு!” என தாய் மாமன் சொல்ல,  

“இல்லை, இப்போ அப்படி நடக்காது மாமா.. மாப்பிள்ளை ரெடியா தான் இருக்கார். அக்கா இன்னும் சம்மதம் சொல்லலை. இன்னைக்கு தான் நான் அம்மாகிட்ட பேசலாம்னு வந்தேன், அதுக்கு முன்னமே சொல்ற மாதிரி ஆகிடுச்சு!” என,

“யாரு மாப்பிள்ளை? அது யாரு வீட்ல பேசாம பொண்ணு கிட்ட பேசறது?” என்று தாய் மாமனாய் அவர் சீறி எழ..

“ஏய் ஸ்ருதி, என்ன பேசற?” என்று வேதா அதட்ட,

“நீ சும்மாயிரு வேதா” என்று பதிலுக்கு ஸ்ருதி இன்னம் அதட்டி, “அவர் அப்பாவை விட்டு பொண்ணு கேட்கறேன் தான் சொல்றார். இந்த அக்கா தான் வேண்டாம் சொல்றா?” என போட்டுக் கொடுக்க..  

“யாரு அது? முதல்ல நீ விவரத்தை சொல்லு” என்று கனகவள்ளி அதட்ட,

“நீங்க கூட பார்த்திருக்கீங்க நமக்கு கார் ஓட்டினாரே, தாத்தா இறந்துதுக்கு போனப்போ” என,

“என்ன டிரைவரா?” என அம்மாவும் மாமனும் முகம் சுளிக்க..

“டிரைவர் எல்லாம் இல்லை” என்று அவசரமாக மறுத்தது ஸ்ருதி அல்ல வேதா. ஆம்! யாராவது காண்டீபனை குறைத்து பேசினால் எப்படி பொறுப்பாள்.

“ஆமாம்! டிரைவர் தான்!” என்ற ஸ்ருதி, “ஆனா அக்காக்கு மட்டும், இப்போ கூட எங்களுக்கு கார் ஓட்டிட்டு வந்தார், வெளில நிக்கறார், கூப்பிடறேன்!” என ஸ்ருதி வெளியில் ஓட..

“ஏய் லூசு, நில்லுடி” என்று வேதா கத்த கத்த ஓடிப்போனாள்.

“ஹய்யோ, இந்த பெண் யாரை இழுத்து வரப் போகிறதோ?” என்று வீட்டினர் பயந்து பார்த்திருக்க..

உள்ளே காண்டீபனை அழைத்து வந்தவள்.. “இது எங்க மாமா, அத்தை” என்று அவர்களை அறிமுகப்படுத்த..

அவர்களை பார்த்து மரியாதையாக கை குவித்தவன்.. “நான் காண்டீபன், காண்டீபன் ட்ராவல்ஸ் ஓனர் பையன்” என,

“வாங்க, வாங்க தம்பி” என்று உடனே எழுந்து வரவேற்றார் மாமன், “உங்க பஸ்ல தான் நாங்க வந்தோம் தம்ப” எனப் பேச ஆரம்பிக்க..

“பே” என்று தான் விழித்து நின்றாள் வேதா..

“கூடப் பொறந்தவங்க எத்தனை பேர்?” என,

“நான் ஒரே பையனுங்க” என காண்டீபன் சொன்னதும், முடிவே செய்து விட்டார், “இந்த மாப்பிள்ளையை விடக் கூடாது” என,

பின்னே எவ்வளவு பெரிய இடம். அங்கே வேதா திருமணம் செய்து போய்விட்டால், பின்னே இந்த ஷோ ரூம் அப்படியே தன் மகனிற்கு வந்து விடுமே, அவர்களுக்கு இதெல்லாம் ஒரு சொத்தா, மனம் வேகமாக கணக்குப் போட்டது.         

“நம்ம பாப்பாக்கு கல்யாணத்துல அவ்வளவா இஷ்டமில்லை, அதனால் அதையும் இதையும் சொல்லும், நாங்க சம்மதம் சொல்றோம் தம்பி, குண்டு கட்டா தூக்கி மனையில உட்கார வெச்சிர்றோம்” என பாசமாய் பேச,

“அது யாரு பாப்பா?” என வேதா ஸ்ருதியை கேட்க,

“லூசு உன்னை தான் சொல்றாங்க!” என,

“எப்போதிருந்து என் மாமன் வீட்டினர் இப்படி பாசமாய் என்னை பார்க்க ஆரம்பித்தனர், ஆங்!” என திரும்ப விழித்து நின்றாள்.. 

அவள் காண்டீபன் ட்ராவல்ஸ் வீட்டின் மருமகளாய் அடையப் போகும் உயரம், மாமன் வீட்டினரின் கோபத்தை கீழிறக்கி விட்டது என்பது தான் உண்மை.

பல உறவுகள் இப்படி தான் இருக்கின்றன.

 

Advertisement