Advertisement

அத்தியாயம் பதினொன்று :

மருதமலைக்கு திருமலை சாமியே வேதாவையும் ஸ்ருதியையும் அழைத்துச் சென்றார்.. கிருத்திகா போக முடியாத சூழலில் இருக்க, காண்டீபன் தான் கோவிலுக்கு செல்ல மாட்டானே.

“நான் டிரைவ் பண்ணட்டுமா” என்று அப்பாவிடம் கேட்க, “வேண்டாம் நீ வந்து வெளில நிற்ப.. அது கடவுளுக்கு மரியாதை கிடையாது, நீ வரவே வேண்டாம்” என்று சொல்லிப் போக அவனால் போக முடியவில்லை. 

வரும் வழியில் வேதாவின் குடும்பத்தை பற்றியும் அக்குவேறு ஆணிவேறாக அறிந்து கொண்டார்.. தங்களை போல உழைப்பால் உயர்ந்தவர்கள், பரம்பரை செல்வம் இல்லை என புரிந்தது.

“எத்தனை வருஷமா ம்மா நீ எடுத்து நடத்துற” என,

“நாலு வருஷமா சர்” என,

“அப்போ கல்யாண வயசும் இருக்குமே. ஏன் இன்னும் பார்க்கலை, நீ எதுவும் கல்யாணம் வேண்டாம் சொல்றியோ” என்று நேரடியாக கேட்க,

சற்று சங்கடப் பட்டு போனவள் “அப்படி எல்லாம் எதுவும் இல்லை சர்” என,

ஸ்ருதி அதற்கு பதில் சொன்னாள், “அதுங்க அங்கிள், அப்பாக்கு உடம்பு சரியில்லாததால் அதுல ஒரு ரெண்டு வருஷம் போயிடுச்சு.. இப்போ ஒரு வருஷமா பார்க்கிறோம். எதுவும் சரியா அமையலை”

“இப்போ கூட ஒரு வரன் வந்திருக்கு, இது முடிஞ்சிடும்ன்ற மாதிரி தான் அம்மா சொல்லிட்டு இருந்தாங்க.. இன்னும் வேதா கிட்ட கூட சொல்லலை, பொண்ணு காட்டுற மாதிரி வந்தா சொல்லிக்கலாம்ன்னு அம்மா சொன்னாங்க” என்று ஸ்ருதி பிட்டு வைக்க,

“இது எப்போது தனக்கு தெரியாமல்” என்ற பார்வை தான் பார்த்தாள் வேதா.

“ஒவ்வொரு தரமும் சொல்லி அது சரி வர்றது இல்லையா, அதனால அம்மா தான் அப்புறம் சொல்லலாம்னு சொன்னாங்க” என்று அக்காவிடமும் மெல்லிய குரலில் விளக்கம் கொடுக்க..

வேதா ஒன்றும் சொல்லவில்லை..

பிறகு பிசினெஸ் குறித்து என்ன செய்யப் போகிறார்கள் என்று சாமி ஆரம்பிக்க..

அவர்களின் ப்ளான் சொல்ல.. மிகவும் பக்காவாக இருந்தது. கேட்க கேட்க வேதாவின் திட்ட மிடல் ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

“ம்ம், வெரி குட்” என,

“நாம என்ன தான் ப்ளான் பண்ணினாலும் அதை செயல் படுத்தும் போது அப்படியே வராது சர், நிறைய டிரா பேக்ஸ் வரும்.. அப்படி வரக் கூடிய குறைகள்” என்று சொல்ல..

மனதிற்குள் வேதா எங்கோ சென்று விட்டாள், “புள்ளைங்க எவ்வளவு புத்திசாலியா இருக்கு, எனக்குன்னு ஒன்னு வாய்ச்சிருக்கே” என தான் தோன்றியது.

வீட்டிற்கு வந்த பிறகு கிருத்திகா வேதாவிடம் பேச நின்று விட, நடுவில் அவர்கள் உணவருந்த.. பின் இடத்தை பார்க்க போவது என்று முடிவாக,

இந்த நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது, காண்டீபன் அப்பாவிடம் அவனின் ப்ராஜக்ட் பற்றி விளக்கம் சொல்ல, “எல்லாம் வேதா சொல்லிருச்சு” என்றவர்.. கூடவே எப்பொழுதும் போல “எவ்வளவு புத்திசாலியா, இந்த வயசுல எவ்வளவு பொறுப்பா இருக்கு, எவ்வளவு தைரியமா பேசுது, நீ ஏன் இப்படி இல்லை” என்று கேட்டு விட..

அந்த நிமிடம் இருந்த உற்சாகம் எல்லாம் வடிய.. அப்படியே அமர்ந்து விட்டான்.. மீண்டும் எல்லாம் வெறுத்துப் போனது.

எதுவும் பேசாமல் எழுந்து போய் விட்டான்..

உணவருந்தி முடித்து “இடம் பார்க்க போகலாமா” என்று வேதா கேட்க.. “ம்ம்” என்று எழுந்தவனின் முகம் மிகவும் இறுக்கமாக இருந்தது. வேதா மேலே பேசுமுன்னே “நாம மட்டும் போகலாமுங்க அம்மணி, பிடிச்சிருந்தா திரும்ப இவங்களை கூட்டிப் போகலாம்” என சொல்லிவிட்டான்.

அவனின் முகமும் சரியில்லை பார்த்தாலே வேதவிற்கு புரிய.. என்ன செய்வது என்று தெரியாமல் வேதா தடுமாற.. “போய்ட்டு வாங்க வேதா” என்று கிருத்திகா அனுமதி கொடுத்தவர், “நான் வெளில போறேன் ஸ்ருதி என்னோட வெளில வரட்டும்” என,

என்ன நடக்கிறது என்று புரியாத போதும் “சரி” என்று வேதா தலையசைத்துக் கிளம்பினாள்.

படியிறங்கும் போது “உங்கப்பா நாம கூப்பிடுவோம்னு இருப்பார்” என,

“அவர் வேண்டாம் வேதா” என்றான் இறுகிய குரலில்..

“அம்மணி” என்ற அழைப்பு மறைந்து வேதா அமர்ந்து இருந்தது, ஆனால் அதை கவனிக்கும் நிலையில் கூட வேதா இல்லை.. “ஏன்” என,

“பேசாம வாங்க” என்றான் கடுமையாக, அதன் பிறகு வேதா பேசவேயில்லை..

சிறிது தூரம் சென்றவுடனே ஆள் அரவமற்ற இடத்தினில் நிறுத்தியவன், “நாம இதை ட்ராப் பண்ணிடலாமுங்க அம்மணி” என்றான்.

“ஏன்” என்று அதிர்ச்சியாக வேதா கேட்க,

“எல்லா விவரமும் நீங்க என் அப்பா கிட்ட சொல்லிட்டீங்களா?” என,

“ஆம்” என்று தலையசைத்தவள், உடனேயே “அச்சோ” என அதிர்ந்து, “எல்லாம் நான் தான் செய்யறேன்னு நினைச்சிட்டாரா?” என,

“ஆம்” என்பது போல தலையசைத்தவனின் முகத்தினில் அவ்வளவு வருத்தம்..

“என்ன? என்ன செய்ய வேண்டும்?” என்று வேதா தான் சொன்னாள், மறுப்பதற்கில்லை, ஆனால் எப்படி செய்ய வேண்டும் என்று பக்காவாக ப்ளான் செய்தது காண்டீபன்.. இடம் கூட அவன் முடிவு செய்து விட்டான், வேதாவை அம்மாவிடம் காட்ட வேண்டும் என்பதற்காக மட்டுமே அதை சாக்கிட்டு வர செய்தான்.

“மறுபடியும் ஆரம்பிச்ச இடத்துக்கே வந்துட்ட மாதிரி இருக்குங்க அம்மணி” என்று சோர்வாக பேச,

“எனக்கு இப்படி ஆகும்னு கொஞ்சம் கூட யோசனையே போகலை, சாரி!” என்ற வேதாவின் குரல் வெகுவாக கலங்கி விட்டது..

“விடுங்க அம்மணி, அவரை பத்தி எனக்கு தெரியும், உங்களுக்கு தெரியாது இல்லையா.. நீங்க இதை எதுவும் காட்டிக்காதீங்க. உங்களுக்கும் அவருக்கும் இதனால எதுவும் பிரச்சனை வேண்டாம். என்ர மனசே சரியில்லை!”

“நாம இதை தள்ளிப் போடலாம் இல்லை, வேற பார்க்கலாம்!” என்று விட..

“திரும்பவும் உங்க அப்பா பார்வையில உங்களை கீழ இறக்கிட்டேனா?” என சொல்லியவளின் கண்களில் கண்ணீர் கர கர வென்று இறங்க..  

“அய்ய நீங்க எதுக்கு அழறீங்க.. அவர் பார்வையில எப்பவும் நான் முட்டாள் தான் விடுங்க” என்று விட்டான்.

ஆனாலும் வேதாவிற்கு அழுகை பொங்கியது.. “என்னால தானே!” என்று சொல்லி தேம்ப..

“நீங்க இல்லைன்னாலும் அவர் சொல்லுவார், நீங்க அழாதீங்க வேதா” என.. அப்போதும் அழ..

அருகில் நெருங்கி தன் மேல் சாய்த்து அணைத்துக் கொண்டான், வேதா அதை உணரும் நிலையிலேயே இல்லை.. அவன் மேல் சாய்ந்து கொண்டு அப்படி ஒரு அழுகை..

“என்னாச்சு வேதா?” என்று அவளின் முகம் நிமிர்த்தியவன், “இது மட்டும் தான் பிரச்சனையா? இல்லை இன்னும் வேற எல்லாம் இருக்கா?” என்றான் கூர்மையாக..

“தெரியலை” என்று திரும்பவும் அவன் மேல சாய்ந்து அழ..

“என்னவோ இருக்கிறது” என்று புரிந்து அழட்டும் என்று விட்டு விட்டான்.

சற்று அழுகை மட்டுப்பட்ட பிறகே அவன் மேல் சாய்ந்திருப்பதை உணர்ந்து அதிர்ந்து விலகியவள் “சாரி” என,

“எதுக்கு சாரி? நீ சாயலை, நான் தான் சாச்சிக்கிடேன்” என,

“ஐயோ, என்ன செய்து விட்டேன் நான்” வேதாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட, அவன் முகமே பார்க்கவில்லை.. “நாம போகலாம்” என்று வேறு புறம் பார்க்க..  

“அய்ய, தோள்ல சாச்சிக்கிடேன், என்ன கட்டி பிடிச்சு முத்தமா கொடுத்தேன் எதுக்குங்கம்மணி இந்த பில்ட் அப்” என,

திரும்பி அவனை முறைத்தவள், “ஓஹ், அது வேற செய்வீங்களோ ஏற்கனவே நான் நொந்து போயிருக்கேன், இன்னும் என்னை நோகடிக்காதீங்க” என,

“என்ன நொந்து போயிருக்க” என்று கூர்மையாகக் கேட்க..

“நீயும் தான் தப்பா பேசற, உங்கிட்ட மட்டும் எப்படி சொல்ல?” என்று நிற்க,

அடுத்த நிமிடம் காரின் கதவுகள் எல்லாம் ஏற்றி இருக்கின்றதா என செக் செய்து.. சென்ட்ரல் லாக் போட்டு சாவியை எடுத்து தன் பேன்ட் பேக்கட்டினுள் போட்டுக் கொண்டான்.

“என்ன பண்ற நீ?” என வேதா அதிர்ந்து விழிக்க,

“தப்பா பேசினேன்னு சொன்ன தானே, தப்பா நடக்கப் போறேன்!” என்று அவன் சொல்ல,

“ஏய், லூசு மாதிரி உளறாதே” என்று அடுத்த நொடி அழுககையை எல்லாம் புறம் தள்ளி முறைத்து பார்த்தாள்..

“என்ன கொஞ்சம் நேரம் ஒரு எமோஷன்ல அழுதா, நீ கதவை லாக் பண்ணி பேசுவியா.. காரை விட்டு ஒழுங்கா இறங்க மாட்டே நீ!” என வேதா காண்டீபனை மிரட்ட,

“ஏன்? நீங்க என்னை ஏதாவது பண்ண போறீங்களா?” என்று கண்ணடிக்க,

காண்டீபன் கேட்ட பாவனையில் சிரிப்பு வர பார்த்தது, வேதாவிற்கு முகமும் இளகிவிட்டது.    

“பார்றா அம்மணி தைரியத்தை” என்றவன், “என்ன பிரச்சனை ஒழுங்கா சொல்லுங்க, இல்லை இறங்க விட மாட்டேன், என்ன ஆனாலும் சரி!” என,

வேதா வாய் திறக்கும் எண்ணமே இல்லாதவளாக நன்றாக சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள், உன்னால் முடிந்ததை செய் என்பது போல, பயம் என்பது முகத்தினில் சிறிதும் இல்லை.

“அய்யய்யோ இவ எங்கப்பாவை விட பத்து மடங்கு இருப்பா போல இருக்கே” என்று அசந்தவன்..

“சொல்ல மாட்டியா நீ.. நான் எவ்வளவு பேசறேன் எங்கப்பா கிட்ட அசிங்கப் படறதை கூட கூச்சமே இல்லாம சொல்றேன், ஆனா நீ எதுவும் என்கிட்டே ஷேர் பண்றதே இல்லை.. அப்போ நீ என்னை தள்ளி தான் நிறுத்தற” என.

அப்போதும் அசைவதாக இல்லை.. “அம்மா, இப்படி ஒரு அம்மணியை நான் பார்த்ததே இல்லை” என்றவன்.. அடுத்த நிமிடம் தன் வீர தீர சாகசத்தை எல்லாம் கைவிட்டு, “ப்ளீஸ் வேதா சொல்லிடு, என்னால ஒரு நிமிஷம் கூட என்ன விஷயம்னு தெரியாம நிம்மதியா இருக்க முடியாது” என கெஞ்ச,

“சொன்னா நீங்க அவனை எதாவது பண்ணிடுவீங்க”  

“யார்? அவன் அந்த பரதேசிப்பய ராஜேஷா”  

“ஆம்” என்பது போல தலையசைக்க.. “அவனை” என்று காண்டீபனின் முகத்தினில் தோன்றிய ஆக்ரோஷத்தை பார்த்தவள்,

“ப்ச்” என்று சலித்து, “தப்பா எல்லாம் நடந்துக்கலை” என விளக்கம் கொடுக்க..

“அப்புறம் என்ன?” என சற்று தணிந்தான்.  

“என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்கறான்”

“என்ன?” என்று அதிர்ந்து பார்க்க,

“ஆம்” என்பது போல தலையசைத்தவள்.. “ஒரு வாரம் முன்ன கேட்டான், நான் முடியாது, எனக்கு அந்த ஐடியா எல்லாம் இல்லவே இல்லைன்னு சொல்லிட்டேன்”

“ஆனா விடாம இந்த ஒரு வாரமா டார்ச்சர் பண்ணறான்.. ஏன் எனக்கு குறை, ஏன் வேணாம் சொல்ற, நான் அழகா இல்லையா, அறிவா இல்லையா, உனக்காக நான் எவ்வளவு உழைக்கிறேன். பணம் இல்லைன்னு என்னை வேண்டாம் சொல்றியா.. அப்போ நீ பணக்காரின்னு ப்ரூவ் பண்றியா, மனுஷங்களுக்கு மரியாதை கொடுக்கறது எல்லாம் சும்மாவான்னு.. உளறுறான்”

“அதை கூட சகிச்சிக்கலாம், ஆனா ஐ லவ் யு ன்னு உளறுறான், அதுதான் என்னால தாங்கவே முடியலை”

“நானும் நம்ம கிட்ட இத்தனை நாளா வேலை பார்க்குறான் உண்மையான உழைப்பாளின்னு பொறுமையா இது சரிவராது, எனக்கு அந்த மாதிரி எல்லாம் தோணவே இல்லைன்னு சொன்னா”

“என்னை கல்யாணம் மட்டும் பண்ணிக்கோ, நான் உன்னை எந்த வகையிலும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. உனக்கு எப்போ அந்த எண்ணம் வருதோ கணவன் மனைவியா வாழலாம்னு சொல்றான்”

“என்ன?” என்று காண்டீபனின் முகம் திரும்ப ஆக்ரோஷத்தை காட்ட,  

“எனக்கு அதை கேட்டதும் அருவருப்பா இருக்கு, வாமிட் வருது.. நீ இல்லாம உன்னை பார்க்காம என்னால வாழவே முடியாதுன்னு வசனம் பேசறான்” என தலையை பிடித்துக் கொண்டவள்,

“இதெல்லாம் கூட பரவாயில்லை.. நேத்து எங்க ஆபிஸ்ல கூட்டுற அம்மா யாரும் இல்லாதப்ப சொல்லுது.. ராஜேஷ் தம்பியை தான் கல்யாணம் பண்ணிக்க போறீங்களாமா ரொம்ப சந்தோஷம்னு”

“யாரு சொன்னான்னு நான் கேட்டா?”

“எல்லோரும் அப்படி தான் பேசிக்கறாங்கன்னு சொல்லுது, எனக்கு தாங்கவே முடியலை, அவன் முகத்துல ஆசிட் அடிக்கணும் போல ஆத்திரமா வருது”   

காண்டீபன் ஸ்தம்பித்து இருந்தான்.. இப்படி எல்லோரிடமும் சொல்லி வைத்திருக்கிறானா என,

“பாருங்க, காலையில ஐ லவ் யு ன்னு மெசேஜ் போடறான். ஸ்ருதி பார்த்துடுவாளோன்னு எனக்கு பயமா போச்சு. என்னை பத்தி என்ன நினைப்பா, பல முறை அவ சொல்லும் போதெல்லாம் அவனுக்காக நான் பரிஞ்சு பேசியிருக்கேன்”

“இப்போ நான் சொன்னது சரி பார்த்தியான்னு தானே நினைப்பா..  வெளில எல்லோரும் என்னை பத்தி என்ன நினைப்பாங்க.. யார் யார் கிட்ட நான் போய் சொல்ல முடியும்” என்று கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

ஆம்! அவனை அடித்து துவைத்து போடா என்று சொல்வது பெரிய காரியமல்ல.. “முதல்ல லவ் சொன்னா இப்ப வேண்டாம் சொல்றா” என்று சொல்ல நிறைய வாய்ப்பிருக்கிறது என்று புரிந்தவன் என்ன செய்வது என்று தெரியாமல் அவனும் தலையை பிடித்து அமர்ந்து கொண்டான்.

ஆம்! வேதாவிற்கு சேதமில்லாமல் இந்த வலையை அறுத்து வீச வேண்டும். எப்படி என யோசிக்க அவனின் பிரச்சனைகள் எல்லாம் பின்னுக்கு போய்விட்டது.

அவளின் கைகளை பிரித்து விட்டவன், அவள் முகம் நிமிர்த்தவும், “பாருங்கம்மணி நான் இருக்குற வரை நீங்க எதுக்கும் இப்படி அழக் கூடாது புரிஞ்சதா, நான் பார்த்துக்கறேன் இந்த விஷயத்தை, நீங்க நிம்மதியா இருங்க” என..

“நீங்களும் லூசு மாதிரி உளறுறீங்க. எப்போ உங்க கிட்ட சொல்வேன்னு வந்தா, அவனை விட வில்லன் மாதிரி செய்யறீங்க” என,

“இனிமே உளற மாட்டேன், வில்லன் மாதிரி செய்ய மாட்டேன், ஓகே!” என்று வாக்குறுதி கொடுத்தவன், “ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லுங்க.. உங்களுக்கு நான் பேசும் போது அருவருப்பா இல்லையே வாமிட் வரலையே, ஆசிட் அடிக்க தோணலையே” என, 

அதெல்லாம் வரவில்லை தோன்றவில்லை என்று சொல்லாமல் “நீங்களும் அவனும் ஒன்னா” என சொல்லியவள், “அச்சோ” என்பது போல நாக்கை கடிக்க,

அதற்கு மேல் அதை பற்றி எதுவும் பேசாமல், “நான் பார்த்துக்கறேன்” என்றான் முகம் மலர.    

“என்ன பார்ப்பீங்க?” என.

“ஏன்? நீங்களும் என்ர அப்பா மாதிரி என்னை எதுக்கும் லாயக்கில்லாதவன் சொல்றீகளா?” என்று கேட்க,

“ப்ச்” என சலித்தவள், “என்னவோ பண்ணிக்கங்க” என,

“அவனை பார்த்து பயமா இருக்கா?” என்றான்.

“சே, சே, அவனை பார்த்து எல்லாம் எப்பவும் பயம் இல்லை. என்னை எல்லாம் அவனால ஒன்னும் பண்ணவும் முடியாது.. எனக்கு பயமெல்லாம் இப்படி யார் யார் கிட்ட சொல்லியிருக்கானோ. எப்படியும் நான் அவனை கல்யாணம் பண்ணிக்க போறது இல்லை. அப்போ வேற யாரையாவது பண்ணும் போது எல்லோரும் என்னை தப்பா நினைப்பாங்களோன்னு தான்” 

“வேற யாரையும் பண்ணிக்க மாட்டீங்க அம்மணி, என்னை தான் பண்ணிக்குவீங்க” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன்..

“நீங்க இன்னைக்கு ஊருக்கு கிளம்புங்க. நான் ஒரு ரெண்டு நாள்ல வர்றேன்” என்று சொல்ல..

“சரி” என்று தலையாட்டி முகத்தை சீர் படுத்திய போதும், அழுதது நன்கு தெரிந்தது.. தலைவலி மருந்தை தடவி, மூக்கிற்கு விக்ஸ் தடவி.. எப்படியோ தலைவலி, சளி, என்பது மாதிரி வீட்டில் உருவகப் படுத்த..

“போகும் போது பொண்ணு முகம் பளிச்ன்னு இருந்தது, இதென்னடா வந்தவுடனே இப்படி ஆகிடுச்சு, என்ன பண்ணின?” என்று திருமலை சாமி மகனை கேட்க..

“நீங்க அவங்க கிட்டயே கேளுங்க?” என,  

“ஏன்டா, பூ மாதிரி இருக்கு பொண்ணு, உன்னை நம்பி வந்தா அதை ஒழுங்கா கூட்டிட்டு போயிட்டு வரக் கூட தெரியலை” என பேச..

திரும்பி பதில் பேசாமல் காண்டீபன் அவரை பார்த்த பார்வையில் கப்பென்று வாயை மூடினார், பார்வையில் இருந்த ரௌத்திரம் அவரை மேலே பேச விடவில்லை.

கிருத்திகா.. வேதாவிற்கு, ஸ்ருதிக்கு, அவர்களின் அம்மாவிற்கு, கோரா காட்டன் புடவைகளை பரிசளிக்க, மறுத்து எதுவும் பேசாமல் உடனே வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டனர்.

“தம்பு, எந்த இடம் முடிவு செஞ்சிருக்கீங்க..”

“இன்னும் செய்யவே இல்லைங்கப்பா” என்று முடித்து விட்டான். “ஏன்?” என்றவரிடம் .. “உங்க பையன் எப்போ புத்திசாலி ஆகறானோ, அப்போ பண்ணிக்கலாம்னு விட்டுடேன்” என கூலாக சொல்ல,

“அதானே நீ எந்த வேலையை உருப்படியா செய்யப் போற.. பாவம் அந்தப் பொண்ணு உனக்கு போய் யோசனை சொல்லி இத்தனை வேலை செஞ்சிச்சே” என,

காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை, என்னவோ கத்திக் கொள் என்று அவன் பாட்டிற்கு அமர்ந்து டீ வீ பார்க்க.. சலித்து,  சாமி எழுந்து சென்று விட்டார்.  

“என்ன தம்பு? என்ன ஆச்சு? வேதா முகமே சரியில்லை!” என கிருத்திகா கேட்க..

“அதும்மா ஐ லவ் யு சொன்னனா, அம்மணி பயந்துட்டாங்க” என

கன்னத்தில் கை வைத்து கிருத்திகா அமர்ந்து விட்டார்.

   

 

Advertisement