Advertisement

அத்தியாயம் பத்து :

அன்று மட்டுமல்ல இதுவரை இல்லாமல் விடாது மகனை கவனிக்கத் தொடங்கினார்..  என்ன தான் மகனை கெடுபிடி செய்தாலும், மகனல்லவா? அவர் அவனை கலங்க விடலாம், வேறு யாரும் செய்ய விடுவாரா என்ன ?

மறுநாளே சரியாகிவிட்டான்.. 

“இடம் பார்க்கணுமே பா.. நீங்க தான் நிறைய வாங்கிப் போட்டு இருக்கீங்களே மெயின்ல ஏதாவது பெரிய இடம் இருக்கா?”

“ஏன் தம்பு? நம்ம இடம் எங்க எங்க இருக்குன்னு உனக்கு தெரியாதா?”

“தெரியாதுங்கப்பா.. எப்போ காட்டினீங்க”

“ஏன்டா, உன்ர பேர்லயும், உங்கம்மா பேர்லயும் தானே இருக்கு”  

காண்டீபன் பதில் பேசவில்லை.. மேலும் மேலும் அவரை குற்றம் சுமத்த விரும்பாமல் அமைதியாக இருந்தான்..

ஒரு நாலைந்து இடங்களை சொல்ல.. கிரகித்தவன்.. “எது வேணும்னு சொன்னாலும் தருவீங்களா?”  

“உன்னோடது தான் தம்பு அது! எதுன்னாலும் எடுத்துக்கோ”

“சரி, கேட்டு சொல்றேன்!”  

“யாரை கேட்கப் போற”

“என்னோட அட்வைசர் பா.. அவங்க கிட்ட கேட்கணும்”

“அது யாரு உன்னோட அட்வைசர்” என்றவரிடம்.. “உங்ககிட்ட காட்டாமையா போகப் போறேன், காட்டுறேன்” என்று பேச்சை முடித்து விட..

“தம்பு, எதுன்னாலும் செய், ஆனா செய்யும் முன்ன அப்பா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோ” என்றார் பொறுமையாக.

“அதுதான் என் அட்வைசர் ஆரம்பிக்கும் போதே உங்க கிட்ட சொல்லிட்டு தானே பண்ண சொன்னாங்க.. எதுன்னாலும் உங்க கிட்ட தான் கேட்க சொன்னாங்க, நீங்க குடுக்கலைன்னா தான் வேற ஆப்ஷன் பார்க்கலாம் சொன்னாங்க” என,

“அது யாரடா என் மகனை என்னிடம் பேச வைக்கும் அட்வைசர்” என்று பொறாமை வர..

“சீக்கிரம் அவரை என் கண்ணுல காட்டு”  

“இடம் பார்க்க வரும் போது காட்டுறேன்” என சொல்லி விட..

அதை கொண்டு “நீங்க நேர்ல தான் அம்மணி பார்த்து சொல்லணும்” என்று சொல்லி விட.. இந்த ஞாயிறு வருவதாக அவள் சொல்லவும்..

“ஞாயிறு” என்ற ஒன்றிற்காக எவ்வளவு ஆர்வமாக காத்திருந்தான் என அவனுக்கு தான் தெரியும்.. காரில் தான் வந்தாள், வேலவன் ஓட்ட.. கூட ஸ்ருதியும்..

வீட்டிற்கு வர தான் காண்டீபன் சொல்லியிருந்தான்.. மிகுந்த தயக்கம் முதலில், ஆனால் ஏன் தயங்க வேண்டும் என்ற யோசனையும் கூட.. இருந்தாலும் தனியாக போக ஒரு மாதிரி இருக்க.. “எங்கே போற, நானும் வரட்டுமா?” என்று ஸ்ருதியும் கேட்க.. உடனே “சரி” என்று அவளையும் அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.   

“யாரு, உனக்கு ஃபிரண்ட், எனக்கு தெரியாம, நாம எதுக்கு போறோம்?” என்று ஸ்ருதி கேட்கவும்..

“உனக்கு தெரியாம எனக்கு ஃபிரண்ட் இருக்க முடியுமா? உனக்கு தெரியும்.. அவங்க அங்க கோயம்பத்தூர்ல ஷோ ரூம் ஓபன் பண்றாங்க, நாம ஹெல்ப் பண்றோம்!” என,

“ஹெல்ப்னா” என அப்போதும் ஸ்ருதி இழுக்க.. “பணம் இல்லை ஸ்ருதி.. ஜஸ்ட் டிப்ஸ், என்ன பண்ணனும், எப்படி பண்ணனும் அந்த மாதிரி, என்னை இவ்வளவு கேள்வி கேட்காதே” என முடித்துக் கொள்ள..

“யாரது பார்த்தால்.. தெரிந்து விடப் போகின்றது!” என்று ஸ்ருதி அமைதியாகிவிட..

“வந்துட்டோம், எங்கே?” என்று கேட்டு வீட்டின் முன் நிற்கும் போதே வீட்டின் பிரமாண்டம் அச்சுறுத்தியது.. ஆம்! உள்ளே இருந்த வீடே தெரியவில்லை, பெரிய மதில் சுவர்..

உள்ளே நுழையவும்.. வீடும் பிரமாண்டமாய்.. “வாவ், செமையா இருக்கு, வீடு யாரோடது” என ஸ்ருதி கேட்க..

“காண்டீபன்” என வேதா சொல்லவும்,

“யார் காண்டீபன்?” என,

“பார்த்தா தெரியப் போகுது”  

“யாரு அந்த அப்பா டக்கர்” என்று ஸ்ருதி சொல்லும் போதே.. வீட்டின் வாயிலில் நின்றிருந்த காண்டீபன் தெரிய..

“இவர் நமக்கு டிரைவரா வந்தவர் தானே!” என்று சுருதி சொல்ல.. அதற்குள் வேலவன் அதிர்ச்சியில் காரை நிறுத்தி இருந்தான்..

“சரி, அங்கேயே இறங்கிக் கொள்வோம்” என வேதா கதவை திறக்க.. அதற்குள் “இறங்காதீர்கள்” என்ற சைகையோடு காண்டீபன் வர.. கதவை உடனே மூடிக் கொண்டாள் வேதா, என்ன வென்று புரியாத போதும்..

“இங்கே வா” என்று சைகை செய்ய, காரை அங்கே கொண்டு போய் வேலவன் நிறுத்தினான்..

“என்ன வேலண்ணா.. உங்க உடம்புல சதையே இல்லை, அப்புறம் எங்க டாமி ஏமாந்துடும்” எனச் சொல்ல,

வேலவன் புரியாமல் இறங்க.. தூரமாக ஒரு நாய்யை காட்டினான்.. “அங்க எல்லாம் யாரும் இறங்கினா, தெரியாதவங்கன்னா கடிச்சு குதறிடும்” என்று காட்ட..

காண்டீபனை பார்த்த அதிர்ச்சி எங்கோ போயிருந்தது, “அம்மா” என்று காண்டீபனின் பின் மறைந்தான்.

வேதா இறங்க.. “வெல்கம் பாஸ் அம்மணி” என்று வேதாவை ஆர்பாட்டமாக வரவேற்றவன்.. ஸ்ருதியிடமும் “வாங்க” என்றான் புன்னகை முகமாக..

ஸ்ருதி இன்னம் காண்டீபனை பார்த்த பிரமிப்பில் இருந்து மீள வில்லை.. அதுவும் அவன் வேதாவிடம் காட்டும் பாவனை.. என்ன இது என்ற யோசனையில் இருந்தாள்.

அவசரமாக  தன் கையை நீட்டிய காண்டீபன்.. அதில் ஒரு ரப்பர் பேன்ட் காட்டி “எங்கம்மா கிட்ட இருந்து சுட்டேனுங்க.. எனக்கு ஞாபகமேயில்லை, உங்க கிட்ட சொல்ல.. எங்கப்பாக்கு தலை விரிச்சு இருந்தா பிடிக்காது, சாரி, முன்னமே சொல்லலை, போட்டுக்கங்க!” எனக் கொடுத்தான்.

வேதா “என்ன இது?” என்பது போல பார்க்க.. “ப்ளீஸ்! போட்டுக்கங்க ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷன் இல்லீங்களா, என்னோட அட்வைசர் யாருன்னு எங்கப்பா கேட்டு கேட்டு என்னை ஒரு வழியாக்கிட்டார்.. உங்களை பார்க்கும் போது ஒரு சிறு குறையும் தோணக் கூடாது” என,

அப்போது இதற்கு தானா என்ற ஏமாற்றம் சட்டென்று வேதாவை சூழ.. வாங்கி போட்டுக் கொண்டாள்.. வேறென்ன எதிர் பார்க்கிறாய் நீ என்று மனம் இடித்துரைத்தது.

“வாங்க, வாங்க” என்று அதன் பிறகே வீட்டின் உள் அழைத்து சென்றான்.

அங்கே பூஜையின் மணியோசை கேட்க.. திருமலை சாமி ஆராத்தி காட்டிக் கொண்டிருக்க.. வேதாவும் ஸ்ருதியும் அது முடியும் வரை அமரவில்லை.. நின்றே இருந்தனர்..

வீட்டின் உள் ஆட்கள் வந்த போதே திருமலை சாமி கவனித்து விட்டார்.. அதுவும் உட்காருங்க என தன் மகன் சொல்ல.. “இல்லை” என்பது போல் சைகை செய்து கூடவே ஆராத்தி நடக்கிறது என்று காட்டிய வேதாவை கவனித்தார். திரும்பவும் காண்டீபன் எதோ பேச வர..  பேசாதே என்பது போல தலையாட்டியதையும் கவனித்தார்.

பின்பு அவர் ஆராத்தியை எடுத்துக் கொண்டு பூஜை அறையில் இருந்து வெளியே வந்து, ஹாலில் இருந்த படங்களுக்கு காட்டி திரும்ப செல்லும் வரை நின்றிருந்தனர்.. கிருத்திகா பூஜை அறையில் உள் தள்ளி நின்றதால் வெளியே வந்திருக்கும் ஆட்களே அவருக்கு தெரியவில்லை.

பூஜை முடித்து பின்னே அவர்கள் வெளியே வர.. அமர்ந்திருந்தவர்கள் திரும்ப எழுந்தனர்.

இரு பெண்களையும் யார் இவர்கள் என்று கண்களிலேயே பெற்றோர் இருவருமே அலசி ஆராய்ந்தனர்.. நண்பர்கள் என்று பொதுவாக யாரையும் அவ்வளவு சுலபத்தில் எல்லாம் வீட்டிற்கு அழித்து வந்ததில்லை காண்டீபன்.

“வாங்க” என்று முகம் மலர கிருத்திகா வரவேற்க.. “வாங்க” என்று வார்த்தையாக சொல்லாமல் திருமலை சாமி தலையை அசைக்க..

“வணக்கம்” என்று இரு கைகுவித்து வேதா சொன்ன விதம் இருவருக்குமே பிடித்து போனது.. ஸ்ருதிக்கு அது வரவில்லை சிரிக்க மட்டுமே செய்தாள்.

“யாரு தம்பு இவங்க” என்று கிருத்திகா கேட்க..

“இவங்க தான் என்னோட அட்வைசர்” என்று பெருமையாய் தந்தையை பார்த்து அறிமுகம் செய்து வைத்தான்..

“என்ன?” என்று அதிசயித்தவர்.. “யாரோ டொனேஷன் கேட்கறாங்க போல, உனக்கு தெரிஞ்சவங்க, வீட்டுக்கு கூட்டி வந்திருக்கேன்னு இல்லை நினைச்சேன்” என்றார்..

ஸ்ருதி வேதாவை திரும்பி ஒரு பார்வை பார்க்க.. அவளிடம் அதற்கெல்லாம் ஒரு பிரதிபலிப்பும் இல்லை அமைதியாக தான் பார்த்திருந்தாள்.

“பா, என்னங்கப்பா இப்படி சொல்லிட்டீங்க?” என,

“பின்ன என்ன தம்பு நினைப்பேன்.. அழகா ரெண்டு பொண்ணுங்களை கூட்டிட்டு வந்திருக்க.. என் பையன் இந்த வேலையை தவிர வேற எந்த வேலையும் செய்வான்னு தோனலையே” என்று அவர் சொல்ல..

ஆம்! இரு அழகு பெண்களையும் தான் கிருத்திகா பார்த்திருந்தார்… இதுவரை காண்டீபன் வாய் திறந்து அவரிடம் ஒரு வார்த்தை இதை பற்றி பேசினதில்லை.

காண்டீபன் வேண்டும் என்றே தான் அம்மாவிடம் பேசவில்லை.. அவராக பார்த்து மனதில் தோன்றியதை சொல்ல வேண்டும்.. தானாக எந்த உருவகமும் வேதாவிற்கு கொடுத்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.     

அப்போது தான் வேலவனை தேடிய காண்டீபன் அவன் வீட்டின் வெளியே இருப்பதை பார்த்து, “வேலண்ணா வாங்க” என,

அவன் தயங்கி தயங்கி வர.. அருகே சென்று தோளில் கை போட்டு அழைத்து வந்தவன்.. “அப்பா இவர் தான் என்னை சென்னையில பார்த்துகிட்டாரு, இவரோட தான் தங்கினேன்” என்று அறிமுகப் படுத்த..

“ரொம்ப நன்றி தம்பி” என்ற வார்த்தைகள் கிருத்திகாவிடம் இருந்து வர,

இன்னும் பிரமிப்பில் இருந்து வெளியே வரவில்லை வேலவன்.. அப்போதும் ஒரு பயங்கரமான சந்தேகம் வர.. “பொண்ணோட அப்பா அம்மா துரத்தலையா, உங்க அப்பா அம்மா தான் துரத்தினாங்களா நீங்க காதலிச்சீங்கன்னு” என்று ரகசியம் பேச..

கேட்ட காண்டீபன் வாய் விட்டு அப்படி ஒரு பொங்கிய சிரிப்பை சிரிக்க..

வேலவன் பயந்தே போனான்.. மகனின் இந்த சிரிப்பை பார்த்த கிருத்திகா “என்ன தம்பு இப்படி சந்தோசம்” என..

“இவர் மா என்னை பார்த்த நாள்ல இருந்து ஒரு கதை சொல்றார் பாருங்க.. நான் காதலிச்சதால பொண்ணோட அப்பா அம்மா துரத்தினதால ஊரை விட்டு ஓடிட்டேணாம்.. இப்போ கேட்கறார் பொண்ணோட அப்பா அம்மா துரத்தலை, உங்க அப்பா அம்மா துரத்தினாங்ளான்னு?” என,

காண்டீபன் போட்டுடைக்கவும் வேலவன் பரிதாபமாக நிற்க.. “ரொம்ப நல்ல மனுஷன்மா” என்றான் தோளோடு அணைத்து, “நான் யார் என்ன எதுவும் தெரியாது, ஆனாலும் கிட்ட தட்ட பத்து நாள் எனக்கு சாப்பாடு போட்டார் மா.. நான் எவ்வளவு சாப்பிடுவேன்னு உங்களுக்கு தெரியாதா?”

“சம்பாதிக்கற அத்தனையும் செலவு பண்ணினார் என் சாப்பாட்டுக்கு, ஆனா எனக்கு அந்த அறிவு கூட இல்லை அப்புறம் நான் சம்பாரிக்கவும் தான் இவ்வளவு செலவு ஆகுதேன்னு சாப்பிடரதை குறைச்சேன்.. சின்ன முக சுளிப்பு கூட இல்லை”

“அது மட்டுமில்லை அவர் துணி துவைக்கும் போது என்னோடதும் துவைப்பார்.. அப்புறம் அந்த துணியும் இவர் தான் எடுத்துக் கொடுத்தார்” என காண்டீபன் அடுக்கினான்.

“இங்க இப்ப வர்றவரை நான் யார்ன்னு இவருக்கு தெரியாது, என் பேர் கூட தெரியாது”

“இவங்களுக்கும் அப்படி தான்” என வேதாவை காட்டியவன்.. “என்னோட எனக்காக பழகினாங்க.. ஒரு இருபது நாள் முன்ன நான் சென்னை போன போது தான் என் பேர், என்னோட ஊர், என்னோட அப்பா அம்மா எல்லாம் சொன்னேன்” என்றான்

அவ்வளவு நேரமாக அத்தனை பேரும் நின்றே இருக்க.. “உட்காருங்க” என்று சொல்லி திருமலை சாமி அமர..

எல்லோரும் அமர்ந்த போதும்.. வேலவன் அமரவில்லை.. “ம்கூம், இல்லைங்க தம்பி நான் வெளில நிக்கறேன்” என்று செல்லப் போக, காண்டீபன் வற்புறுத்த.. வேலவன் பரிதாபமாக வேதாவை பார்க்க.. 

“விடுங்க பன் சர்.. அவர் உட்கார மாட்டார்.. நம்ம சகஜமா பழகினாலும் அவர் எல்லைக்குள்ள தான் நிற்பார்.. அதனால தான் நான் வெளில போகும் போது அவரை கூப்பிடறது” என,

காண்டீபன் விட்டதும் வேகமாக வெளியே போனான். வேதா பேசியது தனக்கான செய்தியோ என்று தான் திருமலை சாமிக்கு தோன்றியது.. காண்டீபன் சகஜமாக பழகினாலும் நான் என் எல்லைக்குள் நிற்பேன் என்பதா..

“சர்” என தான் அழைக்கின்றாள்.. அதை கவனித்தவர்.. “பேரே தெரியாது யாருன்னும் தெரியாது, அப்புறம் சர் எப்படி கூப்பிடறாங்க” என்று திருமலை சாமி கேள்வி எழுப்ப.. “அது என்ன பன்?” என,

அவரின் கேள்வி தன்னை ஆராய என்று வேதாவிற்கு நன்கு புரிந்தது. ஆனாலும் காண்டீபன் அவளுக்கு பதில் சொல்லும் அவசியத்தை கொடுக்கவில்லை. 

அவனின் மனம் உற்சாகமாக இருக்க காண்டீபனுக்கு இன்னும் சிரிப்பு.. “பா என்ன அவங்க இன்டர்வியுக்கா வந்திருக்காங்க, அவங்க என்னோட கெஸ்ட்” என சிரிப்போடு சொல்ல,

திருமலை சாமி திரும்ப எதுவும் கேட்கவில்லை.. குடிக்க கூட எதுவும் கொடுக்கவில்லை என்பது ஞாபகம் வர.. கிருத்திகா வேலையாட்களிடம் டீ சொல்ல.. “மா, இந்தம்மணி டீ குடிக்க மாட்டாங்க.. காஃபி தான்” என்றான். 

“இவ்வளவு தெரியுமா இவருக்கு வேதாவை பற்றி” என ஸ்ருதிக்கும் ஆராய்ச்சி தான்.   

“ஏன் தம்பு திடீர்ன்னு கிளம்பி வந்தாங்களா? முன்னமே சொல்லியிருந்தா ஸ்பெஷலா ஏதாவது சமைக்க சொல்லிருக்கலாம் தானே!” என்று கிருத்திகா மகனோடு பேசியபடி உள்ளே சொல்ல,     

“இல்லைம்மா திடீர்ன்னு எல்லாம் இல்லை.. நாலு நாள் முன்னமே சொல்லிட்டேன் வர சொல்லி.. ஆனா உங்க கிட்ட சொல்லலை” என்றான்.

ஹால் கடந்து வந்திருந்தனர்.. “ஏன் தம்பு?” என..

“எனக்கு நீங்க வேதாவை தானே பார்க்கணும், பார்த்து என்ன ஃபீல் பண்றீங்கன்னு தெரியணும், அதுக்கு தான்!” என்றான்.

“புரியலை தம்பு!” என்றவரிடம்,

“எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்குமா.. வேதா கிட்ட இன்னும் சொல்லலை, உங்க கிட்ட சொல்லாம பிடிச்சிருக்குன்னு சொல்ல மனசில்லை. அதுதான் இடம் பார்க்குற சாக்குல வரவச்சேன்” என்று அசால்டாக சொல்ல..  

“என்ன பேசுகிறான் இவன்” என்று “ஆங்” என பார்த்தார்.

ஆம்! காண்டீபன் முடிவு செய்து விட்டான், வயதாவது வித்தியாசமாவது, வேதா தான் எனக்கு வேண்டும் என்று முடிவு செய்து விட்டான்.. அதுவும் அவளை வர சொல்லிய பிறகு அவன் மனம் அவளைக் காண எழுந்த ஆவல்.. நொடிகள் எல்லாம் யுகங்கள் போல தோன்றியது.

“எஸ்! ஐ லவ் ஹெர்!” என பலமுறை அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டான். இப்போது அம்மாவிடமும் சொல்லி விட்டான். இனி வேதாவிடம் சொல்ல வேண்டும் அவ்வளவே..

வேதா உடனே ஒத்துக் கொள்ள மாட்டாள் என்று தெரியும். ஆனாலும் ஒதுக்க வைத்து விடுவேன் என்று நம்பிக்கை இருந்தது. அவளுக்கும் தன்னை பிடித்திருக்கிறது என்று மனம் அடித்து சொன்னது.   அவர்களுக்குள் இருப்பது நட்பு அல்ல, வேறு ஒன்று என்பது அவனுக்கு நிச்சயம்.    

அங்கே வேதாவிடம் “இடம் பார்க்க வந்தீங்களா மா!” என,

“நான் வேதா, இது என் தங்கை ஸ்ருதி, நான் மட்டும் தான் வர்றதா இருந்தது, தனியா அம்மா விடலை, அதுதான் இவளும் வந்தா.. அப்பாக்கு உடம்பு சரியில்லை, நாங்க ரெண்டு பொண்ணுங்க மட்டும் தான், சோ, நாங்க தான் ஒருத்தர்க்கு ஒருத்தர் துணை” என்றவள்,

“இடம் பார்க்க வரலை சர், உங்களை தான் பார்க்க வந்தேன்!” என்றாள்.

“என்னைய்யா” என,

“ஆம்” என்பது போல தலையாட்டியவள்.. “எனக்கு உங்க பையன் இந்த பிசினெஸ் ஸ்டார்ட் பண்றது பத்தி என்ன சொன்னார்ன்னு தெரியாது, அவர் மேல நம்பிக்கை இல்லாம சொல்லலை.. இருந்தாலும் நான் யார்ன்னு உங்களுக்கு தெரியாது, அதனால் யார் என் பையனக்கு என்னோட அனுமதி இல்லாம இந்த அட்வைஸ் எல்லாம் குடுக்கறதுன்னு நீங்க நினைக்கலாம்”

“சோ, நான் தான், இது தான் பண்ணப் போறோம்ன்னு காமிச்சு கொடுக்க வந்தேன்.. நீங்க ரொம்ப அனுபவம் வாய்ந்தவங்க நீங்களும் கூட நிக்கணும்” என்று சொல்ல.. 

அவள் பேச்சில் குழம்பி “நீயும் இதுல பார்டனராமா” என,

“இல்லையில்லை, அவர் மட்டும் தான் பண்ணப் போறார்.. எங்களோடது சென்னைல கார் ஷோ ரூம் இருக்கு, வேதா கார்ஸ்ன்னு, அதை நான் தான் பார்த்துக்கறேன். அதை பார்த்து இவர் ஐடியா கேட்டார், நான் சொல்றேன்! அவ்வளவு தான்!” என்று விளக்கம் கொடுக்கவும்..

எதையும் மறைக்காத அவளின் குணம், நேராக கண்களை பார்த்து தயக்கமின்றி பேசும் பாங்கு, திருமலை சாமிக்கு அவளின் மேல் மரியாதை வந்தது.

எத்தனை மனிதர்களை பார்க்கிறார்.. உண்மை நேர்மை இருக்கும் மனிதர்களிடத்தில் தான் இதனை பார்க்க முடியும். அதையும் விட பேச்சில் இருந்த தெளிவு.. அதுவும் கவர்ந்தது.

அதற்குள் ஸ்ருதி எட்டி எட்டி டீ வருகிறதா என்று பார்க்கவே ஆரம்பித்துவிட்டால், பயண அலுப்பு, களைப்பு இருந்தது.

“போம்மா, உள்ளே போய் அம்மாவும் பையனும் என்ன பண்றாங்கன்னு பார், ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சாங்க, செய்யற வேலையை மறந்துடுவாங்க” என ஸ்ருதியிடம் சொல்ல,

“ஹி, ஹி” என அசடு வழிந்தவள்.. “சாரி அங்கிள், நான் டீ குடிச்சிட்டு போகலாம்னு தான் சொன்னேன்.. இந்த வேதா தான் நான் மருதமலை கோவிலுக்கு போகணும், விரதம் சொல்லிட்டா. அப்புறம் அவளை விட்டு நான் எப்படிக் குடிக்க” என,

“ஷ்” என நினைவு வந்த வேதா, “ஹேய், போ ஸ்ருதி, எனக்கு காஃபி கலக்கிடப் போறாங்க, போ, வேண்டாம் சொல்லு” என,

ஸ்ருதி உள்ளே விரைய.. வேதாவை பிடித்து விட்டது காண்டீபனின் அப்பாவிற்கு.         

Advertisement