Advertisement

                         கணபதியே அருள்வாய்

                                மென்டல் மனதில்

அத்தியாயம் ஒன்று :

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்                                                 கோவிந்தம் பஜ மூடமதே..                                                                                               சம்ப்ராக்ஷே சந்நிஹிதேய் காலே                                                                                              நஹி நஹி ரக்ஷஷி துஷ்யந்தரனே                                                                                           பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்..

என எம் எஸ் சுப்புலட்சுமியின் குரலில் பாடல் கணீரென்று வீடு முழுவதும் ஒலிக்க.. வீட்டில் சாம்ப்ராணி மணம் நிறைந்து இருக்க.. அதனோடு பூஜைமணியின் ஓசையும் வீடு முழுவதும் பரவ..

இதன் சுவடுகள் ஏதுமின்றி படுக்கையில் போர்வைக்கு அடியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் காண்டீபன்.

“தம்பு! அப்பா பூஜைக்கு உட்கார்ந்து இருக்கார்டா, இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பிட வந்துடுவார்.. எழுந்துரு கண்ணு!” என்று பத்து நிமிடமாக அம்மா கெஞ்சி கொஞ்சி கொண்டிருந்தார். அவரின் கெஞ்சலுக்காக விழித்தவன்…

“அம்மா! உன்ர ஊட்டுக்காரர் எட்டு மணிக்கு ஆஃபிஸ் கிளம்பிடுவாரு. நீ அவரை போய் கவனி! அதுவரை நான் வெளில கூட வரமாட்டேன்! இன்னைக்கு பார்த்து எதையாவது பேப்பர்ல படிப்பார், அப்புறம் நீ ஏன் இப்படி எதுவும் பண்ணலைன்னு காலையில என்ற உயிரை எடுப்பார் மனுஷன்! போம்மா நீ!” என சலித்தான்.  

“தம்பு! அப்படி சொல்லக் கூடாது. மனுஷன் எட்டு மணிக்கு போனா ராத்திரி வரை அப்படி உழைக்கிறார். நம்ம எவ்வளவு சொகுசா இருக்கோம். அவருக்கு பிடிச்ச மாதிரி ஒரு ரெண்டு வார்த்தை பேசறார், நீ அதை செய்ய எல்லாம் வேண்டாம், ஆனா காது குடுத்துக் கேளு கண்ணு! அவரு திருப்திக்காக” என

“என்ன நாட்டுக்கா உழைக்கிறார் அவர்? பொண்டாட்டி புள்ளைக்கு உழைக்கிறார்! நீங்க எதுக்கு இவ்வளவு பில்ட் அப் குடுக்கறீங்க! என்னமோ போங்க!” என்று எழவும்..  

“சீக்கிரம் வந்துடு தம்பு!” என மீண்டும் கெஞ்சி சென்றார். மகனென்றால் அவ்வளவு ப்ரியம், அதனால் மிகுந்த செல்லமும் கூட.. இத்தனை வயதாகியும் ஏதோ பத்து வயது சிறுவனிடம் பேசுவது போல தான் பேசுவார்.    

“போங்க, வர்றேன்! உங்ககூட அவர் இருக்கறதே கொஞ்ச நேரம். அப்போவும் என்ர பின்னாடியே நீங்க சுத்துவீங்களா! போங்க, போய் உங்க சாமியை பாருங்க!” என அதட்ட,

வேகமாக கணவரிடம் ஓடினார்.. ஆம் ஓடினர் தான்!

“மா! மெதுவா போங்க!” என்று கத்தியபடி பாத்ரூமின் உள் புகும் காண்டீபனுக்கு இருபத்து நான்கு வயது முடியப் போகின்றது.. படிப்பு மெகானிகல் இஞ்சினீயர், தொழிலுக்கு இன்னும் வரவில்லை.. பட்ட படிப்பு முடித்து, பின்பு பட்ட மேற்படிப்பும் முடித்து இருக்கின்றான்.

அவன் அடிக்கடி அம்மாவிடம் கூறும் வார்த்தைகள் “உன்ர ஊட்டுக்காரரை வெச்சிக்கிட்டு நான் படர அவஸ்தை இருக்கே” என்பது தான். இப்படி சிரிப்பாக அவன் சொல்லிக் கொண்டாலும் அவன் படும் அவஸ்தைகள் பெரிது. ஆம்! மனிதர் பேசியே கொன்று விடுவார்.    

அவனின் அப்பா திருமலை சாமி எந்த நேரம் எதை செய்வார், எதை பேசுவார், என யாராலும் கணிக்க முடியாது.. எப்படி இருந்தாலும் மனிதர் தொழிலில் கெட்டி.. கோவை மாநகரத்தின் மையப் பகுதியில் இருந்தது அவரின் ட்ராவல்ஸ்.

அதாகப்பட்டது பஸ் கம்பெனி… ஒன்று இரண்டல்ல, சில நூறு சொகுசு பேருந்துகள் தமிழகத்தின் எல்லா முக்கிய நகரங்களுக்கும், அதனோடு மற்ற அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கும், புண்ணிய ஸ்தலங்களுக்கும் என மிகப் பெரியது.

மெதுவாக கீழே இறங்கி வந்தான். காலை, மாலை என தவறாமல் பூஜை செய்யும் வழக்கம் உடையவர் திருமலை சாமி.. காலையில் வீட்டில், மாலையில் அலுவலகத்தில். எத்துனை பேர் பூஜையில் கலந்து கொண்டாலும் கலந்து கொள்ளாதவன் அவரின் மகன். 

அதுவே அவர்களின் கருத்துக்களை மட்டுமல்ல, தந்தையையும் மகனையும் பிரிக்கும் பெரிய விஷயமும் கூட..   

ஆம்! திருமலை சாமிக்கு கடவுள் பக்தியும் வழிபாடும் மிகவும் அதிகம். ஆனால் காண்டீபன்  கோவிலுக்கு மட்டுமல்ல… வீட்டிலும் கடவுளை வணங்க மாட்டான்.. தந்தைக்கு அப்படியே நேர் எதிர்.. கடவுள் நம்பிக்கை சிறிதும் கிடையாது.

திருமலை சாமி அடிக்கடி அவனிடம் சொல்வார்.. “ஏதாவது கஷ்டம் வந்தா தானே நீ கடவுளை நினைப்ப, நான் தான் உனக்கு எந்த கஷ்டமும் வர விடறது இல்லையே. அதனால தான் உனக்கு கடவுளோட மகத்துவம் தெரியலை” என.. எதுவும் காண்டீபனை அசைக்காது.  

அப்போது தான் பூஜை முடித்து வெளியே வந்தவர்.. மகனைப் பார்த்ததும் “என்ன தம்பு சீக்கிரம் எழுந்துட்ட?” என சற்று நக்கலாகக் கேட்டார்.  

பதில் பேசாமல் காண்டீபன் படியிறங்க..

“அதானே சீக்கிரம் எழுந்தா என்ன? எழலைன்னா என்ன? என்ன வேலை நிக்கப் போகுது!” என மீண்டும் நக்கலை பேச்சில் இழையோட விட..  

“பூஜை முடிச்சிட்டீங்கள்ள, சாப்பிட்டு கிளம்புங்க முதல்ல!” என்றான் தந்தையிடம் அலட்சியமாக.  

“நான் என்ன பண்ணனும்னு நீ சொல்லாதடா”

“என்னை பத்தி பேசினா நானும் உங்களை பத்தி அப்படி தான் பேசுவேன்!” என்று காண்டீபன் சீற..

“காண்டீபன்னு எதுக்கு பேர் வெச்சேன், அர்ஜுனனோட வில்லு மாதிரி இருப்பேன்னு பார்த்தா, சொல்லுல மட்டும் தான் வில்லு மாதிரி கிளம்பற நீ!”

“வேற எதுல கிளம்பணும்னு நினைக்கறீங்க” என அவன் அவர் முன் கை கட்டி நிற்க..

அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், கூடவே மகனின் தோரணையை பார்த்து வாயை மூடிக் கொண்டவர்.. உணவருந்த அமர.. எதிரில் போய் அமர்ந்து கொண்டான்.

“இப்போ எதுக்குடா இங்க உட்காருற?”

“ம்ம்ம்! என்னை காலையில வம்பிழுத்தீங்க தானே, எத்தனை இட்லி எக்ஸ்ட்ரா உள்ள தள்ளுறீங்கன்னு பார்க்க!” என,

“உனக்கு ரொம்ப லொள்ளாகிப் போச்சுடா!”

“சும்மாவா திருமலை சாமி பையனாச்சே!” என சட்டமாய் அமர்ந்து கொண்டான்.

அப்போது தான் சமையல் அறையில் இருந்து வெளியே பாத்திரத்துடன் வந்த கிருத்திகா “என்ன தம்பு, அப்பா எதிர்ல உட்கார்ந்து இருக்க, எந்திரி!” என

“ஏனுங்கம்மா, உட்கார்ந்தா என்னங்க?”… என்று அப்படியே இருக்க,

“முதல்ல எந்திரி தம்பு நீ” என்று அதட்டல் போட,

“நிம்மதியா தூங்கிட்டு இருந்தேன், வந்து என்னை எழுப்பிவிட்டு, இப்போ என்ன நீங்க அங்க உட்காராத, இங்க உட்காராத சொல்றீங்க” என்று அவரிடமும் வழக்காட,

“நீ எங்க வேணா உட்காரு, என்ர தலையில கூட உட்காரு, ஆனா என்ர ஊட்டுக்காரர் சாப்பிடும் போது எதிர்ல உட்கார்ந்து கண்ணு போடாத, எழுந்தர்ரா தம்பு!” என அதட்ட..

“ஆமா! நீங்க சமைக்கிறதை வாயிலயே வெக்க முடியாது, அதையும் உங்க வீட்டுக்காரர் நொட்ட நொள்ள சொல்லாம சாப்பிடறார். அதை நானு கண்ணு வேற வெக்கறனா?” என்று முனகியபடி எழுந்து போக..

“வாய் மட்டும் உன்ர பையனுக்கு எட்டூருக்கு இருக்கு”

“அவனைய பேச வெக்கறதே நீங்க தான்.. அவன் திரும்ப வர்றதுக்குள சாப்பிடுங்க!” என்று அடிக்குரலில் பேச,

அதன் பிறகு திருமலை சாமி சாப்பிட மட்டுமே வாயை திறந்து காரியத்தில் கண்ணாயிருக்க.. அதற்குள் வேலையாள் கொண்டு வந்த பாலை அருந்தியவன்.. “மா! நான் ஜிம் போறேன்!” என்று கிளம்பினான்.

எட்டு மணிக்கு ஜிம் சென்று, பத்தரை மணிக்கு அவன் திரும்பி வந்த போது வீடு அமைதியாக இருந்தது.

கிருத்திகா வெளியே கிளம்பிக் கொண்டு இருந்தவர் “என்ன தம்பு, இன்னைக்கு லேட் பண்ணிட்ட”

“ஃபிரண்ட் ஒருத்தனை பார்த்தேன், பேசிட்டே இருந்ததுல லேட் ஆகிடுச்சுங்கம்மா”

“இன்னைக்கு எங்க காஸ்மோபாளிடன் க்ளப்ல ஒரு மீட்டிங்.. நீ வந்தா உன்னை கூட்டிகிட்டு கிளம்பலாம்னு இருந்தேன். இன்னைக்கு பார்த்து நீ லேட் பண்ணிட்ட, சரி, நான் கிளம்பறேன்! என்றபடி அவர் கிளம்பிவிட,

அகோரப் பசியை உணர்ந்தவன் உணவு உண்ண அமர்ந்தான்.. உண்டு முடித்தவனுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.. தமிழகம் மட்டுமல்லாது அடுத்த மாநிலத்திலும் கிளைகளை வைத்திருக்கும் அவர்களுக்கு, அதில் அத்தனை ஆட்கள் வேலை பார்க்க, அவனுக்கு வேலை இல்லை.

அலுவலகம் போனால் அவனை ஏன் என்று கேட்பவர் யாருமில்லை. ஆனால் அங்கே சென்றாலும் அவனுக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாவற்றிற்கும் ஆட்கள் இருக்க, எல்லாம் அப்பாவின் மேற் பார்வையில் இருக்க, அவன் என்ன செய்வான்.   

வேறு என்ன செய்யலாம் என்ற யோசனை மனம் முழுவதுமே இருந்தது. “வா வந்து பார்த்துக்கொள் அல்ல என்னுடன் இரு” என்பது மாதிரி அவனின் அப்பா எதுவுமே சொல்லவில்லை. அவர் சொல்ல மாட்டார் என்று அவனுக்கும் தெரியும். ஏதாவது அவனே செய்ய வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்.

அவர் இந்த முப்பது வருடங்களில்.. ஒரு ஒற்றை டாக்சியில் ஆரம்பித்து இப்போது இந்த உயரத்தை எட்டி இருந்தார். படிப்பும் கிடையாது எழுத படிக்க தெரியும் அவ்வளவே! அதுவும் தமிழ் மட்டுமே! ஆனால் அது எல்லோராலும் முடியாதே..

அதை புரிந்து கொள்ளும் தன்மை இல்லை. அவனும் அது போல சாதிக்க வேண்டும் என நினைப்பார். எப்போதும் ஏதாவது ஒரு இடத்தினில் அவரின் பேச்சில் வெளிப்பட்டு விடும். ஆனால் என்ன செய்வது அவனுக்கு ஒன்றும் தெரியாதே.. வேலைக்கு செல்லலாமா என்றால் அம்மா விடுவது இல்லை..

“என் பையன் வேலைக்கு போனா எனக்கு கேவலம்.. உங்கப்பா சொன்னா சொல்லிட்டு போறார், நீ தனியா தொழில் செய், நான் உனக்கு பணம் தர்றேன்” என்று அவர் ஒரு பக்கம் நச்சரித்து கொண்டிருந்தார்.

ஆனால் என்ன தொழில் செய்ய.. நமது இந்திய நாட்டின் கல்வியின் மிகப் பெரிய பின்னடைவே இதுதானே.. மருத்துவ துறையில் மட்டுமே படிப்பதை செயல்படுத்துகின்றனர். மற்ற தொழில் சார்ந்த படிப்புகளில் இதன் தாக்கம் குறைவு, பழக்கமும், அனுபவமும் மட்டுமே மேன்மை படுத்தும்.. மற்ற படிப்புகளில் இன்னும் குறைவு.

அதிலும் அவன் படிப்பில் மிகவும் சுமார்.. தன் மகன் பள்ளியில் முதல் மாணவனாய் வரவேண்டும் என பெற்றோர் நினைக்க.. இவனோ பாஸ் செய்து விடுவான் அவ்வளவே..

பெரும் பணம் கொடுத்து கல்லூரியில் மெக்கானிகல் இஞ்ஜினியரிங் சேர்க்க, அதிலும் எப்படியோ பாஸ் செய்து விட்டான்.. போதும் என்று நினைத்த போது.. ஒரு டிகிரி மட்டும் போதாது இன்னும் படி என்று அவனை மீண்டும் புதைகுழியில் கிருத்திகா தள்ளி விட.. இரண்டு வருடம் எப்படியோ பாஸ் செய்தாகிவிட்டது..

இப்போது என்ன செய்வது.. வேலைக்கு போகலாமா என்று அவன் யோசிக்கலாம், ஆனால் வேலை யார் கொடுப்பார்.. எங்கே போய் வேலை கேட்பது.. கார் கம்பனியிலா, ஆட்டோ மொபைல் ஷோரூமிலா எங்கே போவது .. நண்பர்களிடம் கேட்க முடியாது.. எப்படி கேட்பான்.. எவ்வவளவு பெரிய நிறுவனம் அவர்களுடையது அவனின் அப்பாவை பற்றி என்ன நினைப்பார்கள் அவரை கீழே இறக்க முடியாது. 

முடித்த இந்த இரண்டு மாதமாக இதே யோசனை தான்.. இரண்டு மாதம் யோசித்தவனுக்கு ஒரு நாளில் தீர்வு கிட்டி விடுமா என்ன.. மாலை வரை யோசித்து இருந்தான்..

அம்மா வரும் போதே மூன்றாகிவிட.. “தம்பு சாப்பிட்டியாடா?” என்றவர், அவன் பதில் சொல்லுமுன்னே “எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு, நான் தூங்கறேன்” என அவரின் ரூம் போய் படுத்து விட.. இவனாக சென்று அவரின் கைப்பை அவரின் ஃபோன் எல்லாம் எடுத்து வைத்து வந்தான்.

பின்பு அவர் விழிக்கும் போது மணி ஏழு.. “தம்பு, இன்னைக்கு எங்க க்ளப்ல..” என ஆரம்பித்து பேசிக் கொண்டேயிருக்க.. அந்த நான் ஸ்டாப் ஒரு மணி நேர பேச்சை, ஃபோனில் கேம் ஆடிக் கொண்டே உம் கொட்டி கேட்டு வைத்தான்.

ஒன்பது மணிக்கு அவனின் அப்பா வர.. பின்பு அவரிடம் கிருத்திகா பேச ஆரம்பிக்க, இவனிற்கு சற்று விடுதலை கிடைக்க.. டீ வீ முன் அமர்ந்தவனிடம்.. “என்ன தம்பு பண்ணின இன்னைக்கு?” என்று அப்பா அமர..

“நேத்து என்ன பண்ணினேனோ, அதுதான் பண்ணினேன்!” என்று இடக்காய் ஒரு பதில் வர..

“உன்கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானா?” என்றார் கடுப்பாய்.

“அதான் நீங்க பேசறீங்கல்ல”  

“திமிர்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று அவர் கோபமாய் எழுந்து போய் விட..

“ஏன் தம்பு, நீ அவரை டென்ஷன் பண்ற” என்று கிருத்திகா கோபப்பட..

“வேற என்ன பண்ணுவாங்க? தினமும் என்ன பண்ணின, என்ன பண்ணினன்னா, ஒரு நாள்ல என்ன பண்ணுவேன் .. நான் வெட்டியா உட்கார்ந்துட்டு இருக்கேன்னு என் வாயால உங்க வீட்டுக்காரருக்கு சொல்லணுமோ?” என,

“ஏண்டா தம்பு இப்படி பேசற?”  

“அப்படி தான் பேசுவேன், நாள் முழுசும் வீட்ல உட்கார்ந்து சுவரை வெறிச்சிட்டு இருக்குற எனக்கு தான் தெரியும்” என்று ரிமோட்டை சுவரில் வீசி.. அது பாகம் பாகமாய் கழன்றது.

“தம்பு, என்ன பண்ற?” என்று பதற பதற.. திருமலை சாமி வந்தவர் “என்ன பண்ற?” என்றார் கடுமையாக..

“என்ன பண்ணினேன்? உடைச்சேன்!”

“அதுதான் எதுக்கு பண்ணின.. சம்பாரிச்சா அதோட அருமை பெருமை தெரியும்.. நான் சம்பாதிக்கற காசுல உட்கார்ந்து சாப்பிடுற இல்லை, அந்த திமிர் தான்” என,

“ஊர் உலகத்துல யாரும் பிள்ளைகளுக்கு சோறு போடறது இல்லை, என்னமோ நீங்க மட்டும் தான் போடற மாதிரி பேசறீங்க” என,

“நானெல்லாம் ஒரு வேலை சாப்பாட்டுக்கு அவ்வளவு கஷ்டப்படிருகேன், உனக்கு அது ஈசியா கிடைக்குது தானே, அதான் நீ பேசற” என்றார் அவரும் விடாமல்..

“இந்தப் பேச்சை கேட்டுட்டு அதை சாப்பிடறதுக்கு சாப்பிடாம இருக்கலாம்” என,

“எப்படி பேசறான் பாரு உன்ற மவன்.. அப்பா அம்மான்னு நம்மளோட அருமை பெருமையும் தெரியலை, பணத்தோட அருமை பெருமையும் தெரியலை.. இவன்கிட்ட எல்லாம் பேசி மாளாது எப்படியோ போறான்” என்று அவர் இடத்தை விட்டு நகரப் போக..

“ஓஹ், அப்பா அம்மான்னு எனக்கு அருமை பெருமை தெரியலை.. உங்களுக்கு மகன்னு ரொம்ப தெரியுதோ.. பையன்னு நான் ஒருத்தன் இல்லைன்னா உங்களுக்கு எத்தனை சொத்து சுகம் இருந்தாலும் அது குறை தானே. உங்களுக்கு நான் தானே அந்த அடையாளத்தை கொடுத்தேன்” என…

“என்ன திமிர்டா உனக்கு? என்னோட சம்பாத்தியத்துல வளர்ந்த உனக்கு அவ்வளவு திமிர் இருந்தா, அதை சம்பாதிக்கற எனக்கு எவ்வளவு இருக்கும்? எனக்கு உன்னோட அடையாளம் வேண்டாம்ன்டா இனிமே!” என,

“ஓஹ்! அப்போ எனக்கும் வேண்டாம்!” என்றான் தீர்மானமாக.

எப்போதும் போல வழக்காடிக் கொள்கிறார்கள் என்று வேடிக்கை பார்த்திருந்த கிருத்திகா, இப்படி மிகவும் சீரியசாக போய்விடும் என்று எண்ணவில்லை.

“ரெண்டு பேரும் என்ன பேசறீங்க?” என்று அவர் நடுவில் வரும் போதே..

“சும்மா சொல்லாத, இங்க தான் இருக்கப் போற, இங்க தான் சாப்பிடப் போற, இங்க தான் தூங்கப் போற, அப்புறம் எதுக்குடா உனக்கு இவ்வளவு ரோஷம்”  

ஒரு ஷார்ட்ஸ் டீ ஷர்டில் இருந்தவன்.. “பாருங்க, என்னோட ஜோப்ல ஒன்னுமில்லை” என்று இரண்டு ஜோபையும் வெளியே விட்டுக் காட்டியவன்.. “இந்தாங்க என்னோட போன்” என்று அதையும் டீபாய் மேல் வைத்து.. “எதையும் நான் எடுத்துட்டு போகலை.. எனக்கா என்னைக்காவது வரணும்னு தோணினா இந்த வீட்டுக்கு வர்றேன், அதுவரைக்கும் உங்க பேரும் சொல்ல மாட்டேன், நீங்க வெச்ச என் பேரையும் சொல்ல மாட்டேன்! படிப்பு பணம்ன்னு எதையும் உபயோகிக்க மாட்டேன்!” என்றவன் வெளியே நடக்க…

கிருத்திகாவிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.. “டேய் தம்பு, என்ன பேசற?” என்று மகனின் பின் ஓட..

அவரின் கையை பிடித்து நிறுத்திக் கொண்டவர்.. “போறான் விடு! அப்போ தான் வாழ்க்கைன்னா என்னன்னு தெரியும்.. கஷ்டப்படட்டும்.. எல்லாம் ஈசியா கிடைச்சிட்டா அதோட மதிப்பு தெரியாது!” என,

திருமலை சாமிக்கு தெரியவில்லை, அவருக்கும் அதே வார்த்தைகள் தான் என, இனி திரும்ப அவரின் மகன் அவருக்கு ஈசியாக கிடைக்க மாட்டான் என்று..

எப்பொழுதும் நடக்கும் வாக்குவாதங்கள் என்று கிருத்திகா அலட்சியமாய் நினைத்திருக்க “போய்விட்டானா?” நம்ப முடியாமல் கால்கள் தோய அப்படியே சரிய..

சாமி அவரை பிடிக்க முற்பட்டாலும் முடியவில்லை.. அப்படியே சரிந்தார்.   

 

Advertisement