Advertisement

அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது:

காலம் எல்லா காயங்களையும் ஆற்றும். ஆனால் வடு இருக்கத் தானே செய்யும்!!! 

பயம் பயம் மனது முழுவதுமே ஒரு பயம் வர்ஷினிக்கு ஈஸ்வரின் வேகத்தை பார்த்து, அப்பா கட்டாயப்படுத்துகின்றாரே என்று திருமணதிற்காக ஈஸ்வரிடம் பேச, அவள் முழுதாக அதற்கு மனதில் தயாராகும் முன்பே அவன் திருமணத்தையே முடித்து விட்டான்.

நம்பக்கூட முடியவில்லை.

அவளிடம் யாரும் கேட்கும் அவசியத்தை ராஜாராமோ ஈஸ்வரோ கொடுக்கவில்லை. இங்கே வீட்டில் ராஜாராம் நான் தான் முடிவெடுத்தேன் என்று விட, அங்கே வீட்டினில் ஈஸ்வரின் முடிவாகிப் போனது.

பெண் பார்க்க வந்து அன்று யார் முகத்திலும் அவ்வளவு செழிப்பு இல்லை. ரஞ்சனியின் மனம் முழுவதிலும் ஐஸ்வர்யா மட்டுமே. முக மலர்ச்சியோடு இருந்தது ஈஸ்வரின் வீட்டினில் ஈஸ்வர் மட்டுமே.

வர்ஷினியின் வீட்டினில் ராஜாராம், கமலம்மா, முரளி, ஷாலினி மலர்ச்சியைக் காட்ட, வர்ஷினி சோர்ந்து தான் தெரிந்தாள். “அதை போடு, இதை கட்டு” என்று ஷாலினி ஒரு வழியாக்கி ஈஸ்வர் வீட்டினர் முன் நிறுத்த, பத்துவோ பார்த்தது பார்த்தபடி இருந்தான்.

இன்னுமே நம்ப முடியவில்லை ஈஸ்வருக்கு எப்படி வர்ஷினியைப் பிடித்தது என்று. இது சரிவருமா என்ற எண்ணம் மட்டுமே! ஆனாலும் நினைத்ததை நடத்தி விட்டானே ஈஸ்வர் என்றும் தோன்றியது. இப்படித்தான் நடக்கும் என்று தெரிந்திருந்தால் ஈஸ்வரோடு தேவையில்லாமல் பிரச்சனைகளை இழுத்து விட்டிருக்க வேண்டாம் என்றும் தோன்றியது. ஒரு மாதிரி குழப்பத்தில் இருந்தான்.   

வர்ஷினியை அழைத்து வந்த போது அப்படி என்ன இந்த பெண்ணிடம் இவனுக்கு பிடித்தது என்று வீட்டினரின் பார்வை ஈஸ்வர் மீது மட்டுமே. அழகி தான் இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால் அதீத அழகி எல்லாம் கிடையாது.

இன்னுமே குழந்தைத்தனமான முகம், குண்டு கன்னங்கள், சற்று பூசின உடல் வாகு. வந்து நின்றபோது அவளின் முகத்தினில் அவ்வளவு பதட்டம் கூட.

ப்ரணவியும் சரணும் அருகில் சென்ற போது, எப்போதும் ப்ரணவியை தூக்கிக் கொள்ளும் அவள், அன்று தூக்க முயலக் கூட இல்லை.

வர்ஷினியின் முகத்தில் பதட்டத்தினை பார்த்து “பயம் வேண்டாம், நான் இருக்கின்றேன்” என்று ஈஸ்வர் சொல்ல முயல, அவள் அவன் புறம் பார்த்தால் தானே.

யாரையுமே பார்க்கவில்லை.

ஈஸ்வர் பாட்டியிடம் சொல்லி தான் அழைத்து வந்திருந்தான். “எனக்கு அவளை பிடிச்சிருக்கு பாட்டி, சொல்லப் போனா அவளுக்கு இன்னும் என்னை பிடிக்கக் கூட இல்லை. எல்லாம் நல்ல படியா நடத்திக் கொடுக்க வேண்டியது உங்க பொறுப்பு. எதுலயும் எந்தக் குறையும் இருக்கக் கூடாது”

“அவ பிறப்பு நம்ம பழக்க வழக்கம் எல்லாம்” என்று பாட்டி இழுக்க,

“சொல்லிக் குடுங்க பாட்டி கத்துக்குவா, இதுவரைக்கும் ஹாஸ்டல்ல தான் இருந்திருக்கா, இப்போ ஒரு வருஷமா தான் வீட்ல, அதனால எதுவுமே தெரியாது. சொல்லிக் குடுங்க கத்துக்குவா, அதுக்கு நான் பொறுப்பு!” என்றான்.

“ஆனாலும் நம்ம கௌரவம் என்ன, அவங்கப்பாவோட பொண்ணு மட்டும் தானே டா தெரியும். சொத்து ஏதாவது கொடுப்பாங்களா இல்லை கல்யாணம் முடிச்சி அனுப்பிடுவாங்களா”

“ஹய்யோ பாட்டி!” என்றவன், “சொத்தெல்லாம் ஏற்கனவே அவ பேருக்கு அவங்கப்பா எழுதிட்டார். அவங்க கம்பனியோட முதலாளியே இவளும் கமலம்மாவும் தான். இவளுக்கு நிறைய சொத்து, பத்துவை விட முரளியை விட ஏன் நம்மளை விட” என,

“அப்படியா சொல்ற!” என்று யோசிக்க ஆரம்பித்தார். அவரின் யோசனைகளின் முடிவில் எல்லாம் அடிபட்டு போக, அதிகம் யோசிக்கவும் ஈஸ்வர் விடவில்லை. பாதி மனதோடு கிளம்பி வந்தார்.

இப்போது வர்ஷினி ஒரு கலக்கத்தோடு யாரையும் பார்க்காமல் கூட நிற்கவும், பேச்சுக்கள் ஆங்காங்கே ஓடும் போது கூட அமைதியாக நிற்கவும்,

“பொண்ணுக்கு சம்மதமா?” என்று பாட்டி கேட்க, திரும்பி அப்பாவை பார்த்தாள் வர்ஷினி.

“சம்மதம் சொல்லும்மா!” என்று அவர் சொல்லிய விதமே அவளை சொல் என்ற வற்புறுத்தலோடு இருக்க,

“நம்மளும் தான் பார்த்து பார்த்து வளர்த்தோம், எல்லாம் அவங்க அவங்க இஷ்டத்துக்கு பண்ணிக்கிட்டாங்க, இப்போ ஈஸ்வர் கூட அவனா வந்து நிக்கறான்”

“ஆனா இந்தப் பொண்ணு அப்பா முகத்தை பார்க்குது. அப்போ நம்ம பசங்களுக்கு இவ எவ்வளவோ மேல்” என நினைத்தார்.

“சம்மதம்” என வர்ஷினி சொல்லி விட,

“வா! இங்க வா!” என்று பாட்டி பக்கத்தில் உட்கார சொல்ல,

ஈஸ்வர் அதற்குள் வர்ஷினியை பார்த்து ஏதோ சைகை செய்ய அவள் பார்த்தாள் தானே.

“என்னடா விஷ்வா, அவ உன்னை பார்க்கவேயில்லை. இவ்வளவு நேரமா பார்த்து என்ன சொல்ல வர்ற?” என்று பாட்டி போட்டுடைக்க..

அசடு வழிந்தவன், “நமஸ்காரம் செஞ்சு, உங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்க சொன்னேன் பாட்டி!” என,

எல்லோர் முகத்திலும் புன்னகை, பாட்டியிடம் அசடு வழிந்தவன் ரஞ்சனியை பார்த்து முறைத்தான், “அவர்களுக்கு தெரியாது நீ இதெல்லாம் சொல்ல வேண்டாமா” என்பது போல,

ஈஸ்வரின் பார்வையை உணர்ந்து “வா வர்ஷி” என அழைத்து நமஸ்கரிக்க சொன்னவள், பின்னர் பொதுவாக சபையில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க சொல்ல, ரஞ்சனி சொன்னபடி செய்தாள்.

ராஜாராமின் முகத்திலும், அவரின் அப்பாவின் முகத்திலும் அவ்வளவு திருப்தி. முரளிக்குமே மகிழ்ச்சி தான், ஆனால் ஈஸ்வரை பற்றி அறிந்தவன் என்பதால் சிறு கலக்கம்.

ஆனாலும் ஈஸ்வரின் மலர்ந்த முகம் அதை மறக்கடித்தது. அன்று இரவு வர்ஷினியை அழைத்து ஈஸ்வர் சொன்ன விஷயம் இதுதான், “நான் எங்கே இருந்தாலும், என் முகத்தை பார்த்துட்டே இருக்கலைன்னாலும், அப்போ, அப்போ பார்க்கணும். அப்போ தான் ஏதாவது உன்கிட்ட சொல்ல முடியும்”

“பார், உன்னை நமஸ்கரிக்க சொன்னேன். நீ என்னை பார்க்கவேயில்லை. அப்புறம் ரஞ்சனி கிட்ட சொல்லி செய்ய வெச்சேன். நமக்குள்ள யாரும் எப்பவும் வர்றதை நான் விரும்பலை. என்னை பார்க்கணும் சரியா” என்றான். அதட்டி இருந்தால் “போடா” என்றிருப்பான். அவனோ குழந்தைக்கு சொல்வது போல சொல்கின்றான். மறுத்து பேச முடியவில்லை.   

“சரி” என்று சொல்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.

அன்று ஆரம்பித்தது தான் திருமணம் வரை தொடர்ந்தது. ஆம்! அவனின் முகம் பார்த்து நடக்கக் கற்றுக் கொடுத்தான் என்பது உண்மை. திருமணம் மிகவும் விமரிசையாக நடந்தது. இரண்டு நாட்கள் எந்த சடங்கும் சம்ப்ரதாயமும் விடாமல்.

ஊரையே அழைத்து தான் திருமணமும் நடந்தது, யாரையும் விடாமல். வந்தவர்களை கவனிக்க யாருக்குமே நேரம் போதவில்லை எனும் போது யாருக்கு முகம் சுணக்க நேரம் இருக்கும். எதற்குமே இல்லை.

ஒவ்வொரு நிமிடமும் தான் ஒரு புது வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கப் போவதை பரிபூரணமாக உணர்ந்தால் வர்ஷினி. அதுவரை இருந்த மன சஞ்சலம் எல்லாம் திருமணம் நடந்த விதத்தில் மறைந்தே போனது வர்ஷினிக்கு.

கிட்ட தட்ட ஒரு வருட அவகாசம் எடுத்துக் கொண்டாலும், பார்த்த போதேல்லாம் தன்னுடைய தீவிரத்தை ஈஸ்வர் உணர வைத்திருந்தாலும், அவசரப்பட்டு சரி என்று சொல்லி விட்டோமோ என்ற எண்ணம் மனதில் ஒரு பக்கம் இருந்து கொண்டே இருந்தது.

என்னவென்று சொல்ல முடியாத ஒரு பயம் கூட..

ஆனால் திருமணம் நடந்த விதத்தில் எல்லாம் அடிபட்டு போனது!!!

நிச்சயம் முடிந்த அன்று, “ஒரு ஐந்து நிமிடம்” என பேச வந்தவன், “எதுக்கு உன்னோட முகத்துல இவ்வளவு பயம் இவ்வளவு கலக்கம்” என நிறுத்தினான் .

“தெரியலை” என்று சொல்ல,

“ஓகே! உனக்கு தெரியலைன்னாலும் பரவாயில்லை, அடுத்தவங்களுக்கு தெரியக் கூடாது!” என,

“என்ன சொல்ல வருகின்றான்” என்று புரியாமல் பார்த்தவளிடம்,

“முகத்தை சந்தோஷமா வெச்சிக்கோ. இப்படி ஒரு கலக்கம் இருந்தா உன்னை ஆராய்ச்சி செய்வாங்க, எல்லோரையும் முகத்தை பார்த்து பேசணும், சிரிக்கணும், உன்னோட முகத்துல இருக்குற உன்னோட கான்ஃபிடன்ஸ் லெவல், உன்னை பத்தி யாரையும் யோசிக்க விடக் கூடாது! புரியுதா?”

“ம்ம்!” என்பது போல தலையாட்டினாள்.  

சொல்லி முடித்து திரும்பி நடக்கத் துவங்கியவன், திரும்ப அருகில் வரவும். “ஒரு ஹக், ஒரு கிஸ், இந்த மாதிரி ஏதாவது..” என்று சின்ன முறுவலோடு இழுக்க..

“ஆங்!” என்று வர்ஷினி விழி விரித்துப் பார்க்க, “அட்லீஸ்ட் இந்த கண் மேல!” என சொல்லி நெருங்க, இன்னும் விழி விரித்தாள்.

மிக அருகில் அவனின் முகத்தை பார்க்கவும், ஒரு பயப் பந்து நெஞ்சில் உருண்டது, அதையும் விட சொல்ல முடியாத ஒரு உணர்வும். கொஞ்சம் புரிந்தாலும் ஈஸ்வர் விடுவதாயில்லை.

“கண் மூடிக்கோ!” என கிசுகிசுப்பாக அவன் குரல் ஒலிக்கவும், தப்பாமல் சொன்னதை செய்ய, அவளை வேறு எங்குமே தொடாமல் அந்த கண்களின் மீது மட்டும் தனித் தனியாக, மென்மையாய் இதலோற்றி எடுக்க, மனம் தடதடத்து.

வர்ஷினியையும் விட ஈஸ்வருக்கு!

“விலகி சென்று விடடா!” என்று மனம் அபாயம் மணி ஒலிக்க விட, உடனே விலகி விட்டான். அவன் விலகியதே தெரியவில்லை, நன்றாக விலகி சிறிது தூரம் சென்றவன், ரோஜா வண்ண பட்டுப் புடவையில் இருந்த அவளை ஆசை தீர ரசித்து “வர்ஷ்! கண் திற!” என,

திறந்து பார்த்தவளிடம்.. “வருகிறேன்” என்பது போல தலையசைத்து, “உன்னோட கலர்க்கும் புடவைக்கும் வித்தியாசமே தெரியலை” என்று சொல்லிச் செல்ல,

“பாராட்டினானா, இல்லை, நன்றாக இல்லை என்று சொன்னானா” என்று புரியவில்லை. ரூமில் இருந்த கண்ணாடியில் பார்க்க, கன்னங்கள் இன்னும் ரோஸ் நிறத்தைக் காட்டின.

அவன் சென்றதும் உள்ளே வந்த ஷாலினி, “ஹப்பா! கல்யாணப் பொண்ணு முகம் இன்னைக்கு தான் பளிச்னு இருக்கு!” என்று சொல்ல,

அதையும் கண்ணாடியில் ஆராய்ந்தாள். பின்னே பெண் பார்க்க வந்த நாளில் இருந்து அவளின் முகத்தில் ஒரு கலகலப்பு இல்லை, அதையும் விட எல்லோரிடமும் பேசும் பேச்சு மிகவும் குறைந்து விட்டது.

அதற்கெல்லாம் இன்று தான் செழிப்பாய் தெரிந்தாள். வர்ஷினியின் ரூமில் இருந்த வந்த ஈஸ்வரை தான் ரஞ்சனி பார்த்துக் கொண்டிருந்தாள். மனதில் ஒரு சிறு உறுத்தலும் இல்லாமல் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கின்றான் என..

ஆம்! ஐஸ்வர்யாவை நினைத்துக் கலக்கம். அதையும் விட பத்துவோடான அவளின் வாழ்க்கை , அன்று அவன் அடித்த பிறகு ரஞ்சனி பேசவேயில்லை. என்னவோ பேசப் பிடிக்கவில்லை. அவசரப்பட்டு விட்டோமோ என்ற எண்ணம் தான்.

உடனே வர்ஷினியின் திருமணமும் வந்து விட்டதால் அப்படி ஒன்றும் பத்துவும் அவளின் பின் சுத்தி சமாதானம் செய்யவில்லை. என்னவோ வாழ்க்கையில் என்ன இனி இருக்கின்றது போல ஒரு வெறுப்பு.

திருமண நிகழ்வுகள் ஆரம்பம் ஆகவும், வர்ஷினிக்கு வேறு எந்த சிந்தனைகளும் இல்லை, முற்றிலும் அதில் ஒன்ற வைத்தான். இரண்டு நாட்களில் மிசஸ் சங்கீத வர்ஷினி விஷ்வேஷ்வரன் ஆகிப் போனாள்.

சடங்குகள் அவனோட சேர்ந்து செய்த போது, அவனோடு வரவேற்பில் நின்ற போது, ஈஸ்வர் வந்தவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த போது, அவர்களின் பார்வையை நேராக எதிர் கொண்டு, சிறு புன்னகையுடன் அவள் வணக்கம் சொன்ன போது, அவர்களின் பார்வையில் எப்போதும் தெரிவதை விட தெரியும் ஒரு மரியாதை, உணர்வளவிளும் அவளை திருமதி விஷ்வேஸ்வரனாக உணர வைத்தது என்றால் மிகை கிடையாது.

முகத்திலும் ஓர் ஆழ்ந்த அமைதி ஆர்ப்பாட்டமில்லாத ஒரு அழகு என்று தானாக ஒட்டிக் கொண்டது.

முதல் நாள் ஈஸ்வரை பார்த்த போது எல்லோரும் இவனுக்கு எப்படி இப்படி மரியாதை கொடுக்கின்றார்கள் என்று அவள் வியந்து பார்த்ததை இன்று அவளுக்கும் சேர்த்து கொடுக்க வைத்தான்.

“என்ன இருக்கின்றது இந்தப் பெண்ணிடம் என்று இவ்வளவு பிடிவாதம் பிடிக்கின்றான்” என்று நமஷிவாயமும் மலரும் தங்கள் மகனை பற்றி நினைத்தனர்.

பிடித்தமில்லாத போதும் ஏதோ ஒரு நம்பிக்கை, தவறான ஒன்றையோ, தகுதியில்லாத ஒன்றையோ, ஈஸ்வரின் மனம் விரும்பாது என, அதன் பொருட்டே சம்மதம் தெரிவித்தனர். ஆனாலும் யார் என்ன பேசுவார்களோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்க, அந்த மாதிரி சலசலப்புகள் ஏதும் இல்லை.

பணம் என்ற ஒன்று எல்லாவற்றையும் மறைத்து விட்டாலும், அதையும் மீறி எல்லாம் சிறப்பாகவே நடந்தது. எந்த சிறு சுணக்கமும் யாரிடமும் இல்லை.

திருமணம் முடிந்தவுடன் கிடைத்த தனிமையில் ஈஸ்வரின் கைகளை பிடித்துக் கொண்டு கண்கள் கலங்கினார் ராஜாராம். “எனக்கு ரொம்ப சந்தோஷம் ஈஸ்வர். என் மகளோட திருமணம் உன்னோட இவ்வவளவு சிறப்பா நடந்ததுக்கு!” என,

“எனக்கு தான் ரொம்ப சந்தோசம் ப்பா! நீங்க இவளை எனக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்ததுக்கு. அதனால தான் என்னால சிறப்பா நடத்திக்க முடிஞ்சது.. இல்லை, வீணா யாரோட சம்மதமும் இல்லாம எல்லோரையும் எதிர்த்து, இவளோட சம்மதமும் இல்லாம, இவளை தூக்கி கல்யாணம் செஞ்சிருந்தா நல்லாவே இருந்திருக்காது!” என சொல்லி வர்ஷினியை பார்த்து “எப்படி” என்பது போல புருவம் உயர்த்த..

முதல் முறையாக உரிமையோடு அவனை முறைத்தாள், “தூக்கியிருப்பீங்களோ என்னை?” என, மனதிலும் “என்ன ஆணவம் இவனுக்கு?” என்று தான் ஓடியது. அது ஒரு ஆச்சர்ய பாவனையோடு தான் ஓடியது. அந்த நிமிடம் எந்த வேண்டாத உணர்வும் இல்லை.    

“ஹப்பா! சண்டை போடவாவது என்னோட அட்லாஸ்ட் பேசிட்டியா?” என சீரியசாக சொல்லி, கண்களால் சிரித்தான்.

தானாக ஒரு புன்னகை வர்ஷினியின் முகத்தில் மலர்ந்தது. கூடவே கண்களும் “எப்படியோ என்னுடன் திருமணத்தை நடத்திக் கொண்டு விட்டாய்” என்ற பாவனையைக் காட்ட…  

அது ஈஸ்வரை இன்னும் கொள்ளை கொண்டது. இப்படி ஒரு மலர்ந்த புன்னகை அவனை நோக்கி வர்ஷினியிடம் இருந்தது வந்ததே இல்லை.

“இப்படி நீ என்னை பார்த்து சிரிக்கணும்னு தான் உன்னை தூக்கவேயில்லை” என அவளிடம் ரகசியம் பேசி, ராஜாராமிடம் “தேங்க்ஸ் பா” என்றவன்,

திரும்ப தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் பார்த்து புன்னகைத்தான்.

அந்த நிமிடத்தில் இரு பெற்றவர்களின் மனமுமே நிறைந்து தான் இருந்தது. யார் மனதிலும் எந்த சுணக்கமும் இல்லை.

ஆனாலும் ஈஸ்வரை கொண்டு வர்ஷினியின் மனதில் ஒரு பயம் இருக்கத் தான் செய்தது. இந்த தீவிரம் எப்போதும் இருக்குமா? அப்படியே இருந்தாலும் இது அதீத தீவிரம் தானே எனத் தோன்றியது.  ஒரு வேளை குறைந்து விட்டால்!

குறைந்து விட்டால் என யோசிக்க வேண்டிய அவசியமென்ன, அதிகமாகிவிட்டால் என யோசி என்று மனம் தெளிவாய் வர்ஷினிக்கு எடுத்துரைத்தது. வாழ்க்கையை நீ அப்படி தான் எதிர்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது.  

ஆனால் அவளுக்கு இன்னும் தெரியவில்லையே முன்பே ஒருத்தியிடம் காதல் சொன்னான் என,

இதுவும் கடந்து போகும் என நினைத்து எல்லாவற்றையும் கடந்து போக முடியாது!!! 

Advertisement