Advertisement

அத்தியாயம் – 7

தன் மனதில் இருப்பது என்ன?? அகிலன் மனதில் இருப்பது போன்ற அதே உணர்வுகள் தன்னகத்திலும் இருக்கிறதா என்றெல்லாம் புவனாவால் சிந்திக்க முடியவில்லை. அகிலன் அவளை சிந்திக்க விடவில்லை. அகிலனை பிடித்திருக்கிறது அது மட்டும் உண்மை.

அவன் தோள் சாய்ந்திருந்த தருணத்தில் புவனா அத்தனை ஆறுதலையும், நிம்மதியும் உணர்ந்தாலே ஒழிய இவனை தான் தான் வேண்டாம் என்று மறுத்தோம் என்ற எண்ணமெல்லாம் அவள் இருந்து எங்கோ காணாமல் போயிருந்தது.

புவனா மனதில் இருப்பதெல்லாம் தன்னை நன்றாய் புரிந்தவன், தனக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்கிறான். அத்தனைக்கும் மேலாய் பூர்வியை தன் குழந்தையென நினைக்கிறான். இதற்குமேல் என்ன வேண்டும் அவளுக்கு??

ஒருபெண் இல்லையென்றால் இன்னொருத்தி என்ற என்ற எண்ணத்தில் அகிலன் வீட்டினர் இவளை கேட்டு வந்ததாலேயே புவனாவிற்கு அத்தனை கோவம். அகிலனை பற்றி சினிமாக்காரன் என்ற விதத்தில் மட்டுமே தெரிந்த அவளுக்கு, அவளை கண்ணோடு கண் பார்க்கும், அவள் மனம் மகிழ பேசும் அகிலன் புதிதாய் தெரிந்தான்.

நினைத்ததை எப்படியேனும் செய்து முடிக்கும் பிடிவாதக்காரன் என்றே செல்லமாய் நினைக்க தோன்றியது. இதோ இன்று கூட பூர்விக்காக பேசி அந்த காட்சியையே மாற்றிவிட்டான். கயிற்றில் ஏறி தப்பிப்பதாய் முடிவெடுக்கப்பட்ட காட்சி இன்று வேறாய் மாறியிருந்தது.

புவனாவிற்கே ஷூட்டிங் வந்த பிறகு தான் தெரியும். இன்றும் பூர்வி அழுது ஆர்ப்பாட்டம் செய்வாளோ என்று கலங்கியே வந்தவளுக்கு, இந்த செய்தி நிம்மதி கொடுத்தது என்றால், அந்த செய்தியை செயலாக்கியவனின் மீது இன்னும் இன்னும் நேசம் கூடியது.

ஆனால் பூர்வியோ நேற்று நானா அழுது ஆர்பாட்டம் செய்தேன் என்பது போல் அத்தனை மகிழ்வாய் சுற்றிக்கொண்டு இருந்தாள். குழந்தைகள் எப்பொழுதும் அப்படித்தானே..

ஏன் அழுகிறார்கள் என்றாலும் காரணம் இல்லை ஏன் சிரிக்கிறார்கள் என்றாலும் காரணம் இல்லை. அவர்கள் உலகமே வேறு..

ஆனால் பெரியவர்களால் அப்படி இருந்திட முடியுமா என்ன??

காட்சி மாற்றியமைக்க பட்டிருக்கிறது என்றதும் மகிழ்ந்தவள், மாற்றியமைக்கப்பட்ட காட்சியை கேட்டு திடுக்கிட்டாள். சினிமா துறையில் இது போன்ற காட்சிகள் சகஜம் என்றாலும், ஏனோ அகிலனை எண்ணி கலங்கியது அவள் மனம்.

காதல் கலக்கத்தையும், கண்ணீரையும் சேர்த்தே கொண்டு வருமாமே…

கண்ணாடி ஜென்னலை உடைத்துக்கொண்டு வெளியேறும் படியான காட்சி அமைப்பு. அகிலன் தான் இதை செய்யவேண்டும். இப்பொழுது இருக்கும் சினிமா உலகில் இது வெகு சாதாரண விஷயம் என்றாலும், அகிலன் இதில் நடிப்பதா என்று தோன்றியது.

பூர்விக்காக மாற்றியமைத்திருக்கிறான் என்றாலும், அவனுக்கு ஏதாவது என்றால் என்ன செய்ய?? கலக்கமாய் அவன் முகம் பார்க்க, அவனோ சிரித்தான்.வாய்மொழி சொன்னால் தான் மனதில் இருப்பது புரியுமா என்ன?? புவனா மனதில் இருப்பது அகிலனுக்கு நன்றாகவே புரிந்தது. அவளது பார்வையும், அதில் தெரிந்த கலக்கமும் அவள் மனதை உணர்த்த,

“ரிலாக்ஸ் புவன்… நார்மல் சீன் தான்.. லாஸ்ட் சீரியல்ல போலீஸ் வேஷம்.. பெரிய கண்ணாடி கதவையே உடைச்சு வர சீன் எல்லாம் நடிச்சேன்…” என்றான் அவளை தேற்றும் பொருட்டு.

“அதெல்லாம் என் முன்னாடி சூட் பண்ணலையே…” என்றாள் இறங்கிய குரலில்.

அவனுக்கு புரிந்தது, நன்றாகவே புரிந்தது. தன் மீது கொண்ட காதலினால் இப்படி கலங்குகிறாள் என்று. ஆனாலும் ஏற்றுக்கொண்ட வேலையை செய்யத்தானே வேண்டும். அதுவும் பூர்விக்காக ஒருமுறை மாற்றியாகிவிட்டது. இன்னொரு முறை புவனாவிற்காக மாற்ற முடியுமா என்ன?? முடியாதே.

“எல்லா சேப்டியும் இருக்கு.. ஜஸ்ட் ஒன் டேக்ல முடிஞ்சிடும்… உனக்காக முடிக்கிறேன்.. போதுமா…”

“ம்ம்.. நிஜமாவே கண்ணாடி தான் வைப்பாங்களா…..”

“ஹ்ம்ம் கூழாங்கல் வைக்க சொல்வோமா??? !!!” என்றான் கிண்டலாய்.

“ம்ம்ச்..” என்று அவள் சலிக்க,

“வேணும்னா பாறாங்கல் வைக்க சொல்வோமோ, நான் தலையில முட்டியே அதை உடைச்சு வெளிய வர மாதிரி சீன் பண்ணுவோமா..” என்று கேட்டு நன்றாய் வாங்கிக்கட்டிக்கொண்டான்.

ஷாட் ரெடி என்றதும் அவனும் பூர்வியும் அங்கே சென்றுவிட, புவனா ஒருபக்கமாய் சென்று அமர்ந்தாள். அவள் பார்வையெல்லாம் அகிலனையும் பூர்வியையும் தான் வட்டமிட்டது.அகிலன் எதுவோ சொல்ல, அவளும் அது புரிந்தது போல் பெரிய மனுசி தோரணையில் தலையை வேறு ஆட்டினாள். இப்பொழுதெல்லாம்பூர்வியின் செயல்களின் நிறைய அகிலனின் சாயல். ஒருவேளை அகிலனை பற்றியே சிந்திப்பதால் அப்படி தோன்றுகிறதா, இல்லை பூர்வியும் அவனிடம் மயங்கிவிட்டாளா என்று தான் நினைத்தாள்.  

அப்படி நினைக்கும் அதே நேரம் பூர்வி அவளிடம் வந்து சேர்ந்த நிகழ்வும் நினைவு வந்தது.

எத்தனை அழகான அளவான குடும்பம் புவனாவினது. அப்பா அம்மா அண்ணன் லோகநாதன், அண்ணி இனியா பிறகு புவனா. வாழ்வு அவர்களுக்கு இனிமையாய் தான் இருந்தது. அந்த இனிமைக்கு மகுடம் சூட்டும் வகையில் புவனாவின் இனியா கருவுற, வீடே ஆனந்த அதிர்வலை தான்.

நாட்கள் செல்ல செல்ல, வீட்டின் முழு கவனமும் எதிர்பார்ப்பும் புதிதாய் வர போகும் குழந்தையை எதிர்நோக்கியே இருக்க, விதியும் அசராமல் இடியை இறக்கியது இவர்கள் தலையில்.

மருத்துவமனைக்கு சென்று வந்த லோகநாதனும், இனியாவும் விபத்தில் சிக்க, அவ்விடத்திலேயே அவர்கள் உயிரும் பிரிய, அதே விபத்தில் மரணித்த மற்றொரு குடும்பத்தின் குழந்தை தான் பூர்வி.புவனா குடும்பத்திற்கு தகவல் வரவும், அடித்து பிடித்து அவ்விடம் செல்ல அங்கோ மரண மேகம் தான்.

அந்த கோர விபத்தில் பிழைத்தது பூர்வி மட்டுமே. ஒன்பது மாத கை குழந்தையாக, நடந்தது என்ன என்று புரியாமல் வீரிட்டு அழுது கொண்டு இருந்தது.

புவனா குடும்பத்தின் மன நிலையை சொல்லவும் வேண்டுமா??

கோமதியோ அழுது புலம்பிக்கொண்டு இருக்க. தனசேகர் அதிர்ந்து போய்  அமர்ந்திருந்தார். யார் கேட்பதற்கும் என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் உறைந்திருந்தார்.

புவனா தான் அனைத்தையும் கையாளும் சூழலுக்கு தள்ள, அந்த நேரம் பார்த்து இது உங்கள் வீட்டு குழந்தையா என்ற கேள்வியோடு ஒரு போலிஸ் அவளிடம் வர,  இல்லையென்ற தலையசைப்போடு, ஒருநொடி தன் நிலையை மறந்து, அந்த குழந்தையை பார்த்தாள்.

பாவம் எத்தனை நேரம் அழுததோ, முகமெல்லாம் சிவந்து பார்க்கவே எப்படியோ இருந்தது. இவளை பார்த்ததும் அக்குழந்தைக்கு எப்படி இருந்ததோ, வேகமாய் கையை நீட்டிக்கொண்டு இவளிடம் தாவ,சிறிதும் யோசிக்காது வேகமாய் வாங்கிக்கொண்டாள்.

“ஓகே மேடம் பார்மாலிடீஸ் முடிய வரைக்கும் கொஞ்சம் பார்த்துக்கோங்க…” என்று சொல்லிவிட்டு அவர் நகர, அதன் பின் புவனாவின் அழுகையை யாராலும் நிறுத்த முடியவில்லை. எதற்கென்றே தெரியாமல் அக்குழந்தையை கட்டிக்கொண்டு அழ, அதுவோ இவளது அழுகையை கண்டு மிரண்டு விழித்தது.

அடுத்ததடுத்து நடக்க வேண்டியவை நடக்க, அக்குழந்தையை தேடி வேறு யாரும் வந்த மாதிரியும் இல்லை.அன்று மாலையே காவல்துறை அதிகாரிகள் மீண்டும் குழந்தை பற்றிய விசாரணை செய்ய, அவர்களுக்கும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

தாங்களே வைத்திருக்கிறோம் என்று புவனா சொல்ல, இரண்டொரு நாள் பாருங்கள் யாரும் வருகிறார்களா என்று பார்ப்போம் என்றுவிட்டு எழுதி வாங்கி செல்ல, மேலும் ஒருவாரம் ஆனபின்னும் யாரும் வரவில்லை.

அதற்குள் அக்குழந்தைக்கு பூர்வி என்று பெயரும் சூடியிருந்தாள் புவனா.

நடந்தது மிக பெரிய இழப்பு தான், ஆனால் அந்த இழப்பை பூர்வியின் வருகை எதோ ஒரு விதத்தில் சரி  செய்தது. அன்றிலிருந்து பூர்வியும் அவர்களுக்குள்  ஒருத்தியாக, முறைப்படி அவளை தத்தும் எடுத்துக்கொண்டனர்.

இதெல்லாம் இன்று நினைத்தாலும் புவனாவிற்கு நெஞ்சம் அடைத்தது. இப்படியான தன் நினைவுகளில் மூழ்கியிருந்தவளை, சலீரென்று கண்ணாடி உடையும் சத்தம் உலுக்க, தன்னையே உலுக்கிக்கொண்டு என்னவென்று பார்த்தாள் புவனா.

அகிலன் தான்..கண்ணாடியை உடைதிருந்தான்..

அவன் உடைத்த கண்ணாடி அகிலனின் கைகளில் முத்தமிட்டு அவன் கரங்களை சிவக்க வைத்திருந்தது. குருதி கொட்ட, பூர்வியை அருகிலிருந்தவரிடம் வேகமாய் தந்துகொண்டு இருந்தான்.   

“ஐயோ…!!!” என்ற அலறலோடு வேகமாய் அவனை நோக்கி சென்றாள்.

ஓடினாள் என்றே சொல்லவேண்டும்.

“என்.. என்னாச்சு…” என்று பதற்றமாய், கண்ணீரோடு தன்னருகே வந்தவளை, வராதே என்று சொல்லி நிறுத்தினான்.

“புவன் கிட்ட வராத… ஷர்ட் புல்லா க்ளாஸ் பீஸ்… முதல்ல  பேபிய பாரு…” என்று அவளுக்கு மண்டையில் ஏறவேண்டும் என்பதற்காகவே அவன் அழுத்தமாய் சொல்ல, இவளோ மலங்க மலங்க தான் விழித்தாள்.

கண் முன்னே அவன் கையில் ரத்தம் வழிகிறது. அவன் என்ன சொல்கிறான் என்பது எல்லாம் இவளுக்கு புரியவேயில்லை. ஆனாலும் பேபி என்ற சொல் உரைக்க, கண்கள் வேகமாய் அலைபாய பூர்வியோ சற்று தள்ளி துணை இயக்குனர் மடியில் அமர்ந்திருந்தாள் அழுகையோடு.

இவளை கண்டதும், “ம்மா….” என்றபடி அவர் மடியில் இருந்து இறங்க,

“பூர்விம்மா…” என்ற பதற்றத்தோடு அவளை தூக்கிக்கொண்டாள்.

குழந்தைக்கு ஒன்றுமில்லை, சிறு கீறல் கூட இல்லை, ஆனாலும் அதிர்ச்சியில் அழுகிறது என்று புரிய, பூர்வியை இறுக அணைத்தபடி புவனாவின் விழிகள் அகிலனையே கண்டது.

வலியை தன்னுள்ளே அடக்கி அகிலன் நின்றிருக்க, அவனுக்கு முதலுதவி செய்துகொண்டு இருந்தார்கள். அவனது பார்வையோ இவர்களையே கண்டிருக்க, புவனாவும் அவனை கண்டதும், இங்கே வா என்று சொல்வது போல் தலையசைத்தான்.  

பூர்வியின் அழுகை மட்டுபட்டிருக்க, புவனாவிற்கு தான் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஆனால் அகிலனோ இதெல்லாம் சகஜம் என்பது நிற்க, புவனாவோ பிறர் முன்னே அகிலனை எப்படி அணுகுவது என்று தெரியாமல் இதழ்களை அழுந்த கடித்து, தன் அழுகையை அடக்கி நின்றிருந்தாள்.

“ஹாஸ்பிட்டல் போகலாம் அகில்…” என்று இயக்குனர் சொல்ல,

“ம்ம் போகலாம்…” என்று அகிலனும் கிளம்ப,

“நான்… நானும் வரேன்…” என்று புவனாவும் கிளம்ப,

“வேணாம் புவனா.. பேபி இப்போவே பயந்து போயிருக்கா.. அங்க வந்தா இன்னும் அழுவா…” என்று அகிலன் சொன்ன சமாதானம் எல்லாம் அவளுக்கு ஏறவே இல்லை.

அகிலனை ஒரு பார்வை பார்த்தவள், “நாங்க வருவோம்…” என்று மட்டும் கூறிவிட்டு வேகமாய்  காருக்கும் சென்றுவிட்டாள்.அகிலனுக்கு வலியை தாண்டி ஒரு புன்னகை பூத்தது. அதை கவனித இயக்குனருக்கோ,

“ஹ்ம்ம்.. சீக்கிரம் எங்களுக்கு ஒரு பார்டி இருக்கு போல அகில்…” என்று மகிழ்வாய் சொல்ல,

“ரொம்ப சீக்கிரம்..” என்றான் அகிலனும் அதே புன்னகையோடு.

மருத்துவமனைக்கு சென்று வந்ததில் இருந்தே புவனா அகிலனை ஒன்றும் செய்ய விடவில்லை. உட்காருவது கூட அவள் சொல்லும் படி தான் உட்கார வேண்டும் என்று கட்டளையிட்டாள்.இப்படி படு, அப்படி திரும்பு, மெல்ல நட என்று அவள் ஒவ்வொன்றாய் சொல்ல, அகிலனுக்கே ஆச்சரியமாய் போனது. இவளுக்கு தன்மேல் இத்தனை காதலா என்று.??

ஆனாலும் அதையெல்லாம் வெளிக்காட்டாமல், “ஷ்… புவன்.. எனக்கு கைல தான் அடி… நடக்குறது கூட மெல்லன்னு சொன்னா எப்படி..” என்றபடி பார்க்க, பூர்வியோ சமத்தாய் அமர்ந்து வேடிக்கை பார்த்தது.

அவளுக்கு பயம் எங்கே அகிலனுக்கு ஊசி போட்டது போல் அவளுக்கு போட்டுவிடுவார்களோ என்று. அதனாலேயே அமைதியாய் இருக்க, அடம் செய்யாமல உண்டும் முடித்திருந்தாள்.

ஆனால் பூர்வியை விட சிறு குழந்தையாய் மாறி அடம் செய்வது இப்பொழுது அகிலன் தான்.

அவனுக்கு அது பிடித்திருந்தது.

அவன் வீட்டில் உடல் நோவு என்று யார் படுத்தாலும், “டாக்டர் பார்த்தாச்சா ??? ஓகே டேக் ரெஸ்ட்.. நாங்க டிஸ்டப் பண்ணல…” என்று சொல்லி செல்லும் ரகம் தான், ஆனால் புவனாவின் இந்த சிறப்பு கவனிப்பு அவனை சிறகடித்து தான் பறக்க செய்தது.

அவள் அவனை கட்டாய படுத்தவேண்டும் என்பதற்காகவே அவள் சொல்வதை வேண்டுமென்றே மறுத்தான்.வாங்கிக்கட்டி கொண்டான்.

“எத்தனை டைம் சொன்னேன் பார்த்து பண்ணுங்கன்னு…” என்று கண்ணீர் வடித்தவளை,

“ஷ்.. என்ன புவன் இது… பேபி கூட இப்போ நார்மலா இருக்கா. நீ ரொம்ப ரியாக்ட் பண்ற… நீயும் பேசாம நடிக்கக் வந்திடேன்…” என்று கிண்டல் செய்தபடி தன்னருகில் அமரவைத்து சமாதானம் செய்ய, அவன் பேபி எனவும் தன்னை தான் அழைக்கிறானோ என்று பூர்வியும் இவனருகே வர, புவனா தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டாள்.

“ம்மா…பூவி இங்க…” என்று பூர்வி அகிலன் மடியை கட்ட,

“வேண்டாம் பூர்வி… ஊசி போட்டு வந்திருக்காங்கள்ள.. கைல இடிச்சா வலிக்கும்…” என்று புவனா சொல்ல, ஊசி என்ற வார்த்தை நன்றாகவே வேலை செய்தது.ஆனாலும் பூர்வியின் பார்வை அகிலன் மீது தான் இருந்தது.

அவன் கையில் இருந்த கட்டை பார்த்து, “இன்னா…” என்று கேட்க,

“சும்மா டா… லேசா அடி…” என்றான் மெல்ல சிரித்து.

இப்படியாக மூவரும் பேசியபடியே அமர்ந்திருக்க, பூர்வி புவனாவின் மடியிலேயே தூங்கியிருந்தாள்.

“பேபி தூங்கிட்டா போல…”

“ம்ம்ம் ஆமா சரி நீங்களும் தூங்குங்க… நேரமாச்சு…” என்று பூர்வியை தூக்கியபடி அவள் எழ, அவனது மற்றொரு கரமோ புவனாவின் கரத்தில் அழுந்த படிந்தது.

“என்.. என்ன…???” அவனுக்கு எதுவுமா என்ற பதற்றத்தில் அவள் கேட்க,

“இன்னும் கொஞ்ச நேரம் இரேன்…” என்றான் ஒருமாதிரி குரலில்.

“இல்ல பூர்வி…” என்று புவனா தயங்க,

“ம்ம் சரி பேபிய தூக்கிட்டு வா..” என்று அவர்கள் அறைக்கு அவன் முன்னே நடக்க, இவளுக்கோ என்ன செய்ய போகிறான் என்ற குழப்பம்.

அவள் தயங்கி நிற்பதை கண்டு, “கைல அடிபட்டிருக்கு இப்போலாம் ஒன்னும் செஞ்சிட முடியாது…” என்று கிண்டலாய் கூற, அவளுக்குமே சிரிப்பு தான்.

“இல்லைனாலும் ஒன்னும் செய்ய முடியாது…” என்று அவனை போன்றே சொல்லியபடி பூர்வியை படுக்க போட்டவளை அகிலனின் கரம் தோளோடு அணைக்க,

“ஹேய்.. என்ன பண்றீங்க..??” என்று கேட்டபடி விலக,

“ஹா!! ஹா.!!! உன் தைரியம் எவ்வளோன்னு டெஸ்ட் பண்ணேன்…” என்றான் அவளை விடாது.. விலகாது..

அவன் பார்வையும் பேச்சும் அவளுக்கு அகிலனின் மனநிலை புரியவைக்க, ஆனாலும் இவன் இன்னும் முறைப்படி எதுவும் கேட்கவில்லை என்று வேறு மனதில் தோன்ற, மனதினுள் லேசாய் ஒரு பிடிவாதமும் தோன்றியது.

“ஹ்ம்ம் என்னை எதுக்கு நீங்க டெஸ்ட் பண்ணனும்…” என்று பிகு காட்ட, அவளது தோள்களை இறுக அணைத்தவனோ, மெல்ல அவள் காதருகில் குனிந்து 

“டெஸ்ட் மட்டுமில்ல டேஸ்டும் நான் மட்டும் தான் செய்ய முடியும்…” என்று சொல்ல,

புவனாவின் மனம் மயங்கத்தான் செய்தது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement