Advertisement

அத்தியாயம் – 6

“ம்ம்ஹும்…. வேணா… பீஸ் ம்மா… வேணா…. ம்ம்ஹும்…எனக்கு பயம்மா இடுக்கும்மா…” என்று பூர்வி தன் தலையை மறுப்பாய் ஆட்டிக்கொண்டு, கையை காலை உதறியபடி கத்த யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை. 

யார் வந்து என்ன சொன்னாலும் அழுகை கூடியதே ஒழிய நின்றபாடில்லை. புவனாவோ அகிலனோ இருவரை தவிரா யாரும் பூர்வியிடம் நெருங்கவே முடியவில்லை.

புவனா கலக்கமாய் அகிலன் முகம் காண, அவனோ என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தான். பூர்வி அழுவது அவனுக்குமே சங்கடமாய் இருந்தது.

பூர்வியின் இத்தனை அழுகைக்கும் காரணம் அன்று எடுக்கப்படும் காட்சி தான்.கிட்டத்தட்ட பூர்வியை வைத்து முக்கால்வாசி முடித்தாகிவிட்டது, கடைசி கட்டம் என்று கூட சொல்லலாம். பூர்வியும் அவனும் தப்பிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. ஒரு கயிற்றின் வழியாக ஏறி, இவர்களை அடைத்து வைத்திருக்கும் அறையில் இருந்து தப்பி வெளியே செல்ல வேண்டும். பூர்வியை முதுகில் சுமந்து கொண்டு அகிலன் ஏற வேண்டும்.

அனைத்து பாதுகாப்பு வசதியோடு தான் இந்த காட்சி எடுக்கப்படுகிறது. இரண்டு நாட்களாய் அகிலன் இதற்கு சிறப்பு பயிற்சி வேறு எடுத்தான். அப்பொழுதெல்லாம் பூர்வி “ஹி ஹி..” என்று சிரித்தபடி அகிலன் முதுகில் தொற்றிக்கொள்ள, இப்பொழுதோ அழுது ஆர்பாட்டம் செய்கிறாள்.

பயிற்சி எடுக்கும் போது புவனா தான் டென்சன் ஆனாள், ஆனால் அகிலனின் கவனமும், அவன் பூர்வியை கையாளும் விதமும் கண்டு அவளே ரிலாக்ஸ்டாக இருக்க, அன்றெல்லாம் சிரித்த குட்டி இன்று அழுகிறது.

ஒன்றுமில்லை பயிற்சி எடுக்கும் போது அகிலன் உடன் ஒருசிலர் மட்டுமே இருக்க, இன்றோ சுற்றி கூட்டமாய் ஷூட்டிங் ஆட்கள் இருக்க, என்னவோ பூர்விக்கு பயம் வந்துவிட்டது.

ஒரே அடம்… அழுகை…

இதற்கு முந்தய நாள் இரவெல்லாம் பூர்வியை தன்னருகில் படுக்க வைத்து அகிலன் மெல்ல கதை சொல்வதை போல, “நான் இப்படி ஏறுவேன் பேபி நீ அப்போ இப்படி பிடிக்கணும் பேபி.. அப்புறம் மெல்ல நம்ம மேல ஏறுவோம்…” என்று கதை சொல்வது போல் சொல்ல, அவளும் அழகாய் தான் ‘ம்ம்’ கொட்டினாள்.

“அப்புடம் என்னா…??” என்று வேறு கேட்டாள்.

அவனும் சலிக்காமல் விளக்க,

“போதும், ரெண்டு பேருமே தூங்குங்க… பூர்வி வா தூங்கலாம்…” என்று புவனா அழைக்க,  கிட்டத்தட்ட நான்கு நாட்கள் கழித்து பேசும்  ஆச்சரிமாய் அகிலன் பார்த்தால், பூர்வியோ கதை போச்சே என்று அகிலன் முகம் பார்த்தாள்.

சுவாரசியாமான கதையை பாதியில் விடும் எண்ணமில்லை.

“பேபிக்கு பயம் இருக்க கூடாதுல்ல அதான்…” என்று அகிலன் இழுக்க,

“நீங்க இருக்கீங்க தானே. அதெல்லாம் சரியா நடக்கும்..” என்றவள் குழந்தையை எழுப்பிக்கொண்டு சென்றுவிட்டாள்.

‘நீங்க இருக்கீங்க தானே…’ இந்த வார்த்தைகளே அகிலனுக்கு புது தெம்பை கொடுத்தது. இத்தனைக்கு பின்னும் புவனா தன்னை நம்புகிறாள் என்று நினைக்கும் பொழுதே மகிழ்வாய் இருந்தது.

இந்த ஷூட்டிங் எல்லாம் நல்ல விதத்தில் முடியட்டும் புவனாவிடம் பேசவேண்டும் என்று எண்ணிக்கொண்டான். அன்று தன் மனதில் இருப்பதை வெளிபடுத்திய பின் புவனா அவனிடம் சண்டையிடவில்லை, கோவமாய் எதுவும் பேசவில்லை, அமைதியாய் மட்டுமே இருக்கிறாள்.

சாதாரண பேச்சு கூட இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.

பூர்வி விடு தூது தான் இருவருக்கும்.

அது அகிலனுக்குமே பிடித்து இருந்தது. இதழில் ஒரு மெல்லிய புன்னகையோடு பூர்வி மழலையில் வந்து புவனா சொல்வதை எல்லாம் சொல்ல, இவனும் புவனாவை பார்த்தவாரே பதில் கூறுவான்.

புவனாவின் முகத்திலும் புன்னகை விரிந்திருக்கும்.

ஆம் புவனாவிற்கும் அகிலனை பிடித்தே இருந்தது. எதற்கு மறுக்கவேண்டும் அவனை என்று அவள் மனம் கேட்ட கேள்விக்கு அவளிடம் நிச்சயமாய் பதில் இல்லை.

உன்னை உனக்காகவே நேசிக்கிறான்.

பார்த்து பார்த்து உன்னையும் பூர்வியையும் கவனிக்கிறான், இத்தனைக்கும் மேலாய் உன் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறான். இதற்கு மேல் என்ன வேண்டும் என்று தோன்ற, அகிலனை மறுக்க நினைத்த எந்த காரணமும் இப்பொழுது புவனாவிடம் இல்லை.

ஆனாலும் அவன் பதில் கேட்கவில்லையே என்ற எண்ணம் நிறையவே இருக்க, அவன் கேட்கும் பொழுது பார்ப்போம் அதுவரை எதுவும் சொல்ல கூடாது என்று முடிவெடுக்க, அதன் பிரதிபலிப்பே அகிலனிடம் அவள் சொல்லும் நம்பிக்கையான வார்த்தைகள். 

அப்படி சொல்லிவிட்டு வந்த புவனாவிற்கே மனதிற்கு இதமாய் தான் இருந்தது. அவ்வார்த்தைகள் அவளையும் மீறி வந்தவை. என்னவோ அனைத்தையும் அகிலனே பார்த்துகொள்வான் என்ற எண்ணம் அவள் மனதில் ஆழ பதிந்திருக்க, அப்படி கூறினாள்.

அவன் அம்மா பெண் கேட்ட விசயத்தில் தன்னை புரிந்து நடந்தான், இதோ இதே அறையில் தான் தன்னிடம் அவன் மனதை சொன்னான், ஆனால் அதற்கு பிறகும் கூட எதுவுமே கட்டாயம் இல்லை என்று தானே சொன்னான். இது ஒன்று போதாதா அவனை பற்றி புரிய?? என்று நினைத்தவளுக்கு அகிலன் வந்து உன் முடிவென்ன என்று கேட்டிட மாட்டானா என்று இருந்தது.

இருவரும் இப்படி தங்கள் சிந்தையில் மூழ்கியிருக்க, மறுநாளைய ஷூட்டிங் நல்லவிதமாகவே முடியும் என்று இருவரும் நினைத்திருக்க, பூர்வி சரியாய் கவிழ்த்துவிட்டாள்.

இயக்குனர் வந்து, “சார், மத்த ஷாட்ஸ் எடுக்கிறோம், நாளைக்கு கூட நம்ம இதை ட்ரை பண்ணுவோம்…” என்று சொல்ல,

அகிலனுக்கும் அதுவே சரியென பட, புவனாவிற்கு தான் மனதிற்கு ஒரு மாதிரி இருந்தது.

ஆனால் பூர்விக்கு என்ன புரிந்ததோ, “ம்ம்ஹும்… நோ நோ… நாளிக்கும் நோ…” என்று நாளைக்கும் சேர்த்து இன்றே அழ ஆரம்பித்துவிட்டாள்.

“ஷ்… பூர்வி குட்டி வேண்டாம் டா… நாளைக்கும் இப்படி செய்ய மாட்டோம்..” என்று அகிலனே சமாதானம் செய்ய, அவளோ நம்பாத பார்வை பார்த்தாள்.

பூர்வியின் அழுது சிவந்த முகமே புவனாவிற்கு வேதனை கொடுத்தது. இன்னும் இங்கேயே இருந்தால் அவள் மேலும் அழுவாள் என்று,

“நாங்க ரூமுக்கு போறோம்..” என்று அகிலனை பார்த்து சொல்லிவிட்டு, “சாரி..” என்று மட்டும் இயக்குனரை  பார்த்து சொல்ல,

“ஐயோ, இதுல என்ன மேடம் இருக்கு. குட்டீஸ் வச்சு எடுக்கும் போது இதெல்லாம் நாங்க சந்திச்சு தான் ஆகணும்.. சாரி எல்லாம் வேண்டாம்..” என்று அவர் சொல்ல, தலையை மட்டும் ஆட்டிவிட்டு கிளம்பிவிட்டாள்.

அகிலன் உடன் வருகிறேன் என்றதற்கும் வேண்டாம் என்றுவிட்டு கிளம்பிவிட்டாள். மனதில் குற்ற உணர்வாய் இருந்தது.அழுது அழுது ஓய்ந்திருந்த பூர்வி அறைக்கு செல்லும் முன்னரே உறங்கிவிட்டாள்.

குழந்தையின் உறக்கம் கெடாதவாறு அவளை படுக்க வைத்தவள், தானும் அவளருகே படுத்துக்கொண்டு,

“சாரி டா குட்டி… எல்லாம் என்னால தான்.. நான் சரின்னு சொல்லியே இருக்க கூடாது பூர்வி.. அம்மா உன்னை ரொம்ப கஷ்ட படுத்துறேனா…” என்று உறங்கும் குழந்தையிடம் பேச, அது பதில் பேசுமா என்ன??

ஆனாலும் புவனா விடாது பேசினால்,

“நீ பிறந்ததுல இருந்து இவ்வளோ அழுததே இல்ல பூர்வி… உன்னை அழ விட்டதும் இல்லை. ஆனா இன்னிக்கு நீ பயந்து அளவும், அம்மாக்கு எப்படியோ ஆகிடுச்சு டா.. என் குட்டி அழ நானே காரனமாகிட்டேன்னு நினைக்கும் போது… சாரி பூர்வி….” என்று கண்ணீர் வழிய, பூர்வியின் நெற்றியில் இதழ் பதிக்க,

“என்ன பண்ற புவனா???” என்ற அகிலனின் குரல் அவளை திடுக்கிட வைத்தது.

‘இவன் எப்படி இத்தனை சீக்கிரம்…’ என்று நினைத்தபடி பார்க்க, அவனோ அவளை பார்த்தபடியே அருகில் வந்தவன், பூர்வியின் கன்னங்களை மெல்ல வருடி,

“சாரி பேபி…” என்றான் ஆழ்ந்த குரலில்.

இங்கு வந்து இத்தனை நாளில் முதல் முறையாய் இந்த அறைக்குள் வருகிறான். ஏதாவது சொல்ல வேண்டும் கேட்கவேண்டும் என்றால் அறையின் வாசல் வரை தன் வருவான்.

இது தான் முதல் முறை..

அதுவும் பூர்வியால்..

அவனது குரலே அவனும் வருந்துகிறான் என்று தோன்ற, தான் சமாதானம் ஆகுவதா இல்லை அகிலனை சரி செய்வதா?? இல்லை பூர்வியை சமாளிப்பதா என்ற செய்வது அறியாமல் குழம்பினாள் புவனா.

நம் வாழ்விற்கு பழக்கமே இல்லாத ஒரு சூழல் ஏற்படும் பொழுது அதை சமாளிக்க, தடுமாறித்தான் போகவேண்டி இருக்கிறது. ஆனாலும் அதனை தாண்டி வந்து தானே ஆகவேண்டும்.

ஒன்றும் செய்ய தோன்றாமல் அகிலன் முகத்தை காண, அவனுக்கும் இது எதிர் பாராத ஒன்றென்பதால், அமைதியாய் நின்றிருந்தான்.

“ஏன் இப்பொழுதே வந்துவிட்டான்…???” என்று தோன்ற, தன் கேள்வியை பார்வையில் காட்டினாள் புவனா.

“நீயும் பேபியும் கிளம்பி வரவும் ஒருமாதிரி இருந்தது… அதான்…” என்று இழுக்கும் போதே,

“ஷூட்டிங் சென்செல் பண்ணிட்டீங்களா???” என்றாள் ஒருமாதிரி குரலில். தங்களால் தான் இதெல்லாம் என்ற எண்ணம் வேறு.

“இல்ல இல்ல.. வேற ஷாட்ஸ் போயிட்டு இருக்கு.. பேபி ரொம்ப அழுதாளா..???” என்றான் கவலை தேய்ந்த குரலில்.

“இல்ல கார்ல வரும் போதே தூங்கிட்டா…”

“ம்ம் நீ சாப்டியா புவன்…??”

சில நாட்களுக்கு பிறகான பேச்சு வார்த்தை.. சோகத்திலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்தது. புவனாவின் தலை இல்லயென்று தானாய் உருட்ட,

“சரி ஆர்டர் பண்ணு… பிரெஷப் ஆகிட்டு வரேன்…” என்றவன் பூர்வியின் நெற்றியில் அவளை போலவே மெல்ல இதழோற்றி சென்றான்.

புவனாவின் பார்வையோ அவனையே தொடர்ந்தது.

என்ன மனிதன் இவன்?? என்று நினைத்தாள். இத்தனை கனிவாய் ஒருவனால் இருக்க முடியுமா?? சொல்வதை அப்படியே புரிந்து நடக்கிறான். ஆச்சரிமாய் இருந்தது.

அவளுக்கு தெரியவில்லை, அகிலன் மனதளவில் ஒரு இயல்பான குடும்ப சூழலுக்கு எத்தனை ஏங்கியிருக்கிறான், சாதாரண பேச்சு வார்த்தைகளுக்கு எத்தனை ஆசை பட்டிருக்கிறான் என்று.

பல நேரங்களில் நம் மனதின் தேடல்களின் வெளிபாடே நம் செயல்கள் ஆகிவிடுகின்றன.

ஆர்டர் செய்யப்பட உணவு வந்துவிட, அகிலனும் வந்திருந்தான். பூர்வி உறங்க, அவளை தொல்லை செய்யாமல் இருவரும் உண்ண தொடங்கினர். அகிலன் வரும் பொழுது புவனா அழுது கொண்டு இருந்தாள், அதுவே அவனுக்கு கஷ்டமாய் இருந்தது. எதற்காக அழுகிறாள், எதை நினைத்து அழுகிறாள் கேட்க தோன்ற, வார்த்தைகள் வரவில்லை.

அமைதியாய் உண்ணும் அவளையே காண, சாப்பாடை எடுத்த ஸ்பூன் வாய்க்கு செல்லாமல் அப்படியே நிற்க, எதோ வித்தியாசமாய் உணர்ந்தவள் என்னவென்று பார்த்தாள்,

அவளது பார்வையே அவனுக்கு ஒரு தைரியம் கொடுக்க, “எதுக்கு அழுத புவன்…??” என்று கேட்டான்.

பார்த்துவிட்டானோ என்று எண்ணியவளுக்கு இனியும் மறைக்க எண்ணமில்லை.

“அது… எனக்கு… கொஞ்சம் கில்டியா இருந்தது அதான்…”

“கில்டியா..???!!!!”

“ம்ம்…”

“ஏன்..?? நீ என்ன தப்பு பண்ண ??”

“இல்லை பூர்வி பிறந்ததுல இருந்தே இப்படி எல்லாம் அழுதது இல்லை. அழ விட்டது இல்லை.. இன்னிக்கு அவ ரொம்ப அழுகவும் எனக்கு ஒருமாதிரி ஆகிடுச்சு…” என்று சொல்லும் பொழுதே அவளுக்கு கண்ணில் நீர் முட்ட,

“ஹேய்…!!! அவ குழந்தை. குழந்தைங்க அப்படிதான் இருப்பாங்க..” என்று சமாதானம் செய்யும் முன்னமே,

“இல்ல.. அதில்ல, இப்படி குழந்தைய கஷ்டபடுத்துறாளேன்னு என்னை தானே தப்பா நினைப்பாங்க… அதான்..” என்று அவள் தயங்கி சொல்ல,

“ஹ்ம்ம் பூர்விக்கு அம்மா நீ தான…” என்றான் அழுத்தம் திருத்தமாய்.

அவன் கேட்ட தொனியே, அவளை நிமிர வைத்தது..

“நான் மட்டும் தான் அம்மா.. அதிலென்ன சந்தேகம்…???” குரலில் சற்றே காட்டம் தெரிய புவனா சொல்ல,

“அப்போ உனக்கு இந்த கில்டி பீலே வந்திருக்க கூடாது. ஷி இஸ் யுவர் டாட்டர்..   பேபிக்கு என்ன முடிவு எடுக்கனும்னு உனக்கு மட்டும் தான் ரைட்ஸ் இருக்கு…”

“ம்ம்ம்…”

அவன் என்ன சொன்னாலும் அவள் மனம் சமணடயவில்லை. அவளது தெளியாத முகம் கண்டு, எழுந்து வந்து அவளருகே அமர்ந்தான். புவனாவின் ஒரு கையை மட்டும் பற்றி,

“ஷ்… என்ன புவன் இது…??? கிட்ஸ் அப்படிதான் இருப்பாங்க.. நாளைக்கு பாரேன் இப்படி ஒரு இன்சிடென்ட் நடந்த போலவே பேபி ரியாக்ட் பண்ணுவா அப்போ நீ என்ன செய்வ??” என்று கேட்க,

அவளுக்கோ பதில் சொல்ல தெரியவில்லை.

எதையும் சாதாரணம் என்று எடுத்தால் அது சாதாரணம். இல்லையென்றால் அது வேறு. அப்படிதான் அகிலனும் கூறினான். குழந்தைகளை அதன் போக்கில் விட வேண்டும். அதைவிட்டு நம் மெச்யுரிட்டியெல்லாம் குழந்தைகளிடம் ஏற்ற கூடாது.

ஆனால் புவனாவிற்கோ கண்ணை கரித்து கொண்டு வந்தது.

“எனக்கு தெரியலை அகில்.. ஆனா நான் பூர்விக்கு ஒன்னொன்னு பார்த்து பார்த்து பண்றேன். அவளுக்கு எதுவுமே குறை வந்திட கூடாதுன்னு எல்லாம் பண்றேன். சில நேரம் அவ அதையும் மீறி ஏங்கும் போது, அழும் போது கஷ்டமா போயிடுது…” என்று கண் கலங்க,

“போது புவன்… நீயும் பேபி மாதிரி அழாத.. கிட்ஸ் உலகமே வேற.. முடிஞ்சா நீ அதுக்குள்ள போ.. இல்லை அவளை அப்படியே விடு..” என்று ஆறுதலாய் பேசியவன், தன் தோள் மேல் சாய்த்துக்கொண்டான்.

அவளுக்கும் அது ஆறுதலாய் இருக்க, சாய்ந்துகொண்டாள்.

உன் மனதில் என்ன என்று அவனும் கேட்கவில்லை, என் மனதிலும் இது தான் என்று அவளும் சொல்லவில்லை, ஆனாலும் இருவரும் பேசிக்கொள்ளாத நிறைய காதலை இந்த தோள் சாய்தல் பேசிக்கொண்டது வார்த்தைகள் யாருக்கும் கேட்காதபடி.        

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement