Advertisement

அத்தியாயம் – 5

அகிலனுக்கு உறக்கமே வரவில்லை. வரவில்லை என்பதை விட முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பூர்வியையும் புவனாவையும் தன் பொறுப்பென அழைத்து வந்துவிட்டான். வந்தும் வாரம் ஆகிவிட்டது. இன்னும் மிஞ்சி போனால் ஒருவாரம் வேண்டுமானால் ஷூட்டிங் என்ற பெயரில் அவர்களை இங்கே தங்க வைக்க முடியும்.  

பூர்வி நடிக்கவேண்டியவை கூட முக்கால்வாசி முடிந்துவிட்டது.

அகிலன் தான் எதை எதை எப்படி செய்யவேண்டும் என்று பூர்விக்கு சொல்லுவான். நான் இப்படி செய்தால் பதிலும் நீ இதை செய்யவேண்டும் என்று விளையாட்டு போலவே அவளுக்கு நடிப்பை சொல்லி கொடுத்தான். முக்கால் வாசி பூர்வியும் சரியாய் செய்ய, சில நேரங்களில் மட்டும் ஏதாவது தவறாய் போகும்.

ஆனால் அதெல்லாம் பெரியதில்லை என்பது போல் அனைவரும் தங்கள் வேலையை செவ்வனே பார்க்க, ஒரு அறைக்குள்ளே ஷூட்டிங் என்பதால் பூர்வியும் அகிலனோடு பொருந்திவிட்டாள்.

புவனாவிற்கு இதெல்லாம் வேடிக்கை என்பதை விட இப்பொழுது பூர்வியை கண்டு அதிசயமாய் இருந்தது. எத்தனை அழகாய் மனிதர்களை கவர்கிறாள். இப்பொழுது அங்கிருக்கும் அனைவருக்குமே பூர்வி செல்ல குழந்தையாகி போனாள்.

ஆளுக்க தக்க, அங்கிள், ஆன்ட்டி, அண்ணா என்று தன் மழலையில் முத்து பற்கள் காட்டி சிரித்து பேசும் குழந்தையை யாருக்கு தான் பிடிக்காது. வந்த புதிதில் புவனா அதிகம் பூர்வியை கேர் செய்துகொண்டு இருந்தாள். அதை அகிலன் தான் மாற்றினான்.

“பேபிய கொஞ்சம் ப்ரீயா இருக்க விடேன்…” என்று சலித்தவன், மேற்கொண்டு பூர்வியின் பொறுப்பை தனதாக்கி கொண்டான். ஆனால் அவனுக்கு இப்பொழுது புவனாவை எண்ணி தான் வருத்தம்.    

அவனுக்கு மேற்கொண்டு புவனாவை எப்படி அணுகிட வேண்டும் என்று தெரியவில்லை. எத்தனை காதல் காட்சிகளில் நடித்திருக்கிறான், ஆனால் இன்று நிஜத்தில் விழி பிதுங்கல் தான். மனதில் அத்தனை பாரம், சொதப்பினால் இரண்டு குடும்பத்திற்கும் பதில் சொல்ல வேண்டும்.

இவனது மனநிலை நடிப்பை பாதிக்காது வேறு பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமாய் இவன் நடிப்பில் சொதப்பினால் அனைத்தும் சொதப்பும்.   

புவனா ஆளை அசத்தும் அழகியில்லை தான், ஆனாலும் அவளை காணும் போதெல்லாம் அகிலனின் மனம் அசைந்தது. ஆழ் மனதில் எதுவோ பிறழ்வது போலிருந்தது..

தன்னை நினைத்தே அவனுக்கு சிரிப்பாகவும் இருந்தது இப்பொழுது.

தலையை கோதிக்கொண்டான். கண்ணாடி கதவுகளுக்குள் நின்று தூரே தெரியும் நிலவை பார்த்தவனின் மனதில் சிறிதும் வெளிப்புறத்தை ரசிக்கும் எண்ணமில்லை.

விஐபி சூட் தான் ஏற்பாடு செய்திருந்தான். இரண்டு அறைகள், ஒரு வரவேற்பறை,   சமையல் வசதியோடு இருந்தது. இதோ ஒரு அறையில் தான் புவனா  பூர்வியோடு உறங்குகிறாள்,

ஹப்பா புவனாவை இங்கே தங்கவைப்பதற்குள் அவனுக்கு எத்தனை பாடாய் போனது. தனி அறை தான் வேண்டும் என்று அத்தனை பிடிவாதம். இரண்டு நாள் முகத்தை தூக்கி வைத்து வேறு இருந்தாள்.

ஒவ்வொன்றுக்கும் அடம்.. பூர்வி கூட சொல்வதை சரியாய் செய்கிறாள். ஆனால் புவனா இருக்கிறாளே…!!!!

நினைக்கையில் அவனுக்கு சிரிப்பு வேறு வந்தது.

இதற்கே இப்படியென்றால் இனி திருமணம் நடந்து அதன் பின் ஒவ்வொன்றுக்கும் புவனாவை சம்மதிக்க வைப்பதற்குள்.. நினைக்கும் போதே அவனுக்கு பேரு மூச்சு தான்.

‘ஊப்…’ என்று ஊதியவனின் காற்று கண்ணாடி தடுப்பில், வெள்ளை படலமாய் பதிய, அந்த படலத்தின் ஊடே லேசாய் புவனாவின் முகம்  தெரிந்தது.

கைகளை மெல்ல தேய்த்துக்கொண்டவன் பின்னே திரும்பவில்லை. திரும்பினால் மனம் தடுமாறும். பேசாமல் அமைதியாய் நின்றிருந்தான்.

“தூங்கலையா…???” என்றபடி இவனை நோக்கி தான் வந்தாள்.

“இல்ல…” என்றவன் இப்பொழுதும் திரும்பவில்லை.

அனைத்தையும் தன் தலை மேல் போட்டிருக்கிறான். கணம் தாள முடியவில்லை. பேசாமல் தன் மனதில் இருப்பதை சொல்லி விடலாமா என்று கூட இருந்தது.சரியோ தவறோ சொல்லிவிட்டால் மனமாவது சற்று நிம்மதி அடையும் என்று தோன்றியது, ஆனால் அவளை கண்ட நொடி எல்லாம் காற்றில் மறைந்தது.

‘தூங்கலையா ???’ சாதாரண கேள்வி தான் ஆனால் அதற்கு கூட பக்கம் பக்கமாய் வசனங்களை பேசிடும் அந்த முன்னணி நடிகனால் பதில் சொல்ல முடியவில்லை.

அவன் திரும்பாமலே நிற்பதை கண்டு, “எதுவும் பிராப்ளமா???” என்றாள் மீண்டும்.

“இல்ல.. இல்ல…” என்றவன் லேசாய் திரும்ப,

“அப்புறம் என்ன இந்நேரத்துல இப்படி நிக்கிறீங்க..?? நான் பயந்தே போயிட்டேன்.. யாரோ நிக்கிறாங்கன்னு…” என்று சகஜமாய் பேசியபடியே பால் சூடு செய்தாள்.

அவளது பார்வை அவனை விட்டு நீங்கவும் தான் அவனுக்கு மூச்சே சுலபமாய் விட முடிந்தது.

“பூர்விக்கு நைட் ஒன் டைம் பால் சூடு பண்ணி குடுப்பேன்…” என்றவள்,

“உங்களுக்கும் சூடு பண்ணவா??” என்று கேட்க,

அவளது முகத்தில் பார்வையை விதைத்திருந்தவனுக்கு, வார்த்தைகள் அறுவடையாகவில்லை.

“என்னாச்சு இவருக்கு…” என்று யோசித்தபடி பால் சூடு செய்து எடுத்து செல்ல, அவள் செல்கிறாள் என்று தோன்ற,

“புவன்…” என்று  அழைத்திருந்தான். அவனையும் மீறி..அவனுக்கு மட்டுமேயான அழைப்பில்.

அதிர்ந்து திரும்பியவளை கண்டதும் சுதாரித்துக்கொண்டு, மீண்டும் “புவனா..”  என, அவளோ இவனை தான் பார்த்திருந்தாள்.

என்ன சொல்வது, நாக்கு வேறு வார்த்தைகளை வெளிவிடாமல் சிறை செய்துகொண்டது, கண்களோ அவளை தாண்டி வேறு எதையும் காண மாட்டேன் என்று அடம் செய்ய, கைகள் தலையை கோத,

“நத்திங்.. யு கோ….” என்று சொல்ல,

அவளுக்கோ இவனது செய்கைகள் அனைத்தும் அப்பட்டமாய் வித்தியாசமாய் பட,

“ஆர் யு சூர்…??” என்று வினவினாள்.

“ஓ !!! காட்.. போன்னு சொன்னா போயேண்டி…” என்று எண்ணியவன்.

“எஸ்…” என்றுமட்டும் சொன்னான்.

“ம்ம்..” என்றவள் அவனையே பார்த்தபடி அறைக்குள் சென்றுவிட்டாள்.

‘இப்பொழுது என்ன செய்ய, நானும் சென்று தூங்க வேண்டுமா?? முடியுமா ??? இல்லை இல்லை.. தினம் தினம் இப்படியான அவஸ்தையை என்னால் தாங்க முடியாது… பேசாமல் அனைத்தையும் புவனாவிடமே சொல்லிவிடலாமா???’ என்று தன்னுணர்வில் மூழ்கி நின்றவனை

“அட இன்னுமா இங்க இருக்கீங்க…” என்ற புவனாவின் குரலே உசுப்பியது.

“ஐயோ…!!!! இவளா…” என்றபடி “என்ன புவனா???” என்றான்.

“என்னாச்சு உங்களுக்கு?? எதுவும் பிரச்சனையா?? இல்ல உடம்பு எதுவும் சரியில்லையா?? நான் ரூமுக்கு போகும் போது எப்படி இருந்தீங்களோ, கொஞ்சம் கூட அசையாம அப்படியே நிக்கிறீங்க…” என்று வினவ,

அவனையும் அறியாமல்,

“எனக்கு பயமா இருக்கு…” என்று சொல்லிவிட்டிருந்தான்.

ஆம் பயம் தான். புவனாவை இழந்துவிடுவோமோ என்ற பயம்…

அனைத்து பொறுப்பையும் தான் ஏற்றிருக்க, தோற்றுவிடுவோமோ என்ற பயம்.

அந்த பயமே அவனுக்கு ஒரு உந்துதலை தந்தது..

விழிகள் விரித்து அவன் பேசுவதையே பார்த்திருந்தவளை தன் கரங்களுக்குள் கொண்டு வர துடித்தாலும், அவளது கரங்களை மெல்ல தன் கைகளுக்குள் பொதித்தான்.

“என்.. என்ன பண்றீங்க..???” என்றவளின் கண்களோ இன்னும் விரிந்தது.

முந்தைய புவனா என்றால் இந்நேரம் அவன் கன்னம் பழுத்திருக்கும். ஆனால் இன்றோ அவன் மீது நல்லெண்ணமும், நம்பிக்கையும் கொண்டவள் ஆகிற்றே. அகிலனது செயல் அதிர்ச்சியை கொடுத்தாலும், ஆத்திரம் தரவில்லை.

“ப்ளீஸ் புவன்… நான் சொல்றதை கொஞ்சம் கேளு.. மறுத்தோ, பதிலோ சொல்லாத…” என்றவனின் பார்வை என்ன செய்ததோ,

எதுவோ கூற வாய் திறக்க, அகிலனது விரல், அவளது இதழை அழுத்தியது.

ஆனாலும், புவனாவின்  இதழ், “அகிலன்….” என்ற சொல்லை உதிர்க்காமல் இல்லை.

“ப்ளீஸ் புவன்…. இன்னிக்காவது என்னை தூங்கவிடேன்..” என்றவன் அவள் முன்னே பித்தனாகி தான் நின்றான்.

ஆம் இனி மறைப்பதற்கு எதுவுமே இல்லையென்ற நிலை.

“என் மனசுல நீ தான் புவன் இருக்க.. எஸ் ஐம் இன் லவ் வித் யு… உனக்காக தான் இத்தனையும்… இவ்வளவும்…” என்று அவன் சொல்லும் பொழுதே, புவனாவின் விழிகள் வேறு பாவனை காட்ட,

“நோ.. நீ நினைக்கிறது தப்பு.. உன்னை எனக்கு எவ்வளோ பிடிக்குமோ, அதை விட, அதிகமாவே பேபிய பிடிக்கும்.. பேபிக்கும் சரி எனக்கும் சரி நீ தான் புவன் லைப்…” என்றவன் அவனது வாழ்வையும் அவளிடமே ஒப்படைத்தான்.

என்ன பதில் சொல்ல என்று கூட தெரியவில்லை அவளுக்கு.

திகைத்து போய் நின்றிருந்தாள்.

“உன்னை பார்ஸ்ட் டைம் பார்த்தப்போ இருந்தே மனசுல லேசா ஒரு தடுமாற்றம். நீ கேட்கலாம் பெரிய இவனாட்டம் கல்யாணத்தை நிருத்தினேன்னு, எஸ். அதுவும் உனக்காக தான். இப்பவும் சொல்றேன் இந்த கல்யாணத்துக்கு நீ சரி சொல்ல வேண்டாம். யு ஆர் நாட் எ சாய்ஸ்.. பட் எனக்கு நீ மட்டும் தான் ஒன் அண்ட் ஒன்லி சாய்ஸ்…” என்றவன் நிறைய பேசினான் அவளை மௌனியாக்கிவிட்டு.

இறுதியாக, “என் லைப்ல நான் உன்னை மட்டும் பொருத்தி பார்க்கலை புவன்.. பேபியும் சேர்த்து தான்…” என்று அவளது கரங்களில் அழுத்தம் கொடுத்து கூற,

அந்த அழுதத்தில் தெளிந்தவள் வேகமாய் எதுவோ கூற வர,

“நோ புவன் ப்ளீஸ்.. என் மனசுல இத்தனை நாளா போட்டு அழுத்திட்டு இருந்ததை எல்லாம் உன்கிட்ட சொல்லிட்டேன். நீ பதிலுக்கு எதுவும் சொல்லிடாத. சொல்லவும் வேண்டாம்.. ஜஸ்ட் இதெல்லாம் என்னோடது மட்டும். இப்போ உன்கிட்ட சொல்லிருக்கேன் அவ்வளோ தான்… ” என்றவன், அவள் கண்களின் பாசையை தாங்க முடியாமல்

“நல்லா தூங்கு… எனக்கு இன்னிக்கு தான் நல்ல தூக்கம் வரும்..” என்று அவளது தோளை லேசாய் தட்டிவிட்டு சென்றுவிட்டான்.

ஹப்பாடி என்று இருந்தது அகிலனுக்கு. சொல்லியாகிவிட்டது. இனி புவனா யோசிப்பாள். நிச்சயம் யோசிப்பாள். இன்றாவது நிம்மதியாய் தூங்கலாம் என்று உறங்கியவன், ஆழ்ந்த உறக்கத்திற்கும் சென்றுவிட்டான்.

ஆனால் புவனாவோ அப்படியே திகைத்து அமர்ந்திருந்தாள்.

அவனுக்கு எதுவும் சரியில்லையோ என்ற எண்ணம் தோன்றவே தான் அறைக்குள் சென்றவள் பூர்விக்கு பாலை கொடுத்துவிட்டு, அவளை உறங்கவும் செய்துவிட்டு வந்தாள்.

வந்து பார்த்தவளுக்கு தன் எண்ணம் ஊர்ஜிதமானது.

என்னானது என்று கேட்க வந்தவளிடம் இப்படி தன் மனதில் இருப்பதை சொல்வான் என்று எதிர்பார்கவில்லை.

எதிர்பார்கவில்லை என்பதை விட இதை பற்றி நினைக்கவில்லை.

அகிலனோடு ஷூட்டிங் என்றதுமே அவளுக்கு சங்கடமாய் தான் இருந்தது. அதிலும் பூர்வியை வைத்துக்கொண்டு தான் எப்படி தனியாய் என்று நினைக்கும் பொழுதே, நாவு வரண்டது.

தனசேகரை அழைத்தால், விடுப்பு போட முடியாத நிலை என்று கூறினார், கோமதியை பார்த்தால், அவரோ அப்பா மட்டும் எப்படி சமாளிப்பார் என்றார். இது உண்மையும் கூட.

அகிலன் தான் ஆயிரம் தைரியம் சொன்னான். அகிலனை தவிர யாரையும் தெரியாது, அகிலன் என்றாலும் எத்தனை நாள் அவளுக்கு பழக்கமாம். அதுவும் எப்படி ஆரம்பித்த பழக்கம் என்று நினைக்கையிலேயே அதுவும் குழப்பமாய் இருந்தது.

இதெல்லாம் சரியா சரியா என்று மனம் கேட்டுகொண்டே இருக்க, ஊட்டிக்கும் வந்தாகிவிட்டது.

அகிலனை பற்றி தெரியாத பொழுது முன்பு மறுத்தது வேறு. அதுவும் கூட  அகிலனை பொறுத்து மறுக்கவில்லை, அவளது காரணங்களே வேறு. இப்பொழுதும் அதெல்லாம் இருக்கிறது தான்.

ஆனால் அகிலன், அனைத்து காரணங்களை ஒரு தள்ளு தள்ளிவிட்டு தன் குணத்தால் அல்லவா முன்னே நிற்கிறான்.

அதிலும் பூர்வியிடம் அவன் காட்டும் நேசம்…

ஆம் இப்பொழுதெல்லாம் பூர்வி அதிக நேரம் அவனோடு தான் இருக்கிறாள். காலை ஆரம்பித்து இரவு வரை அவனோடு தான். உறக்கம் வந்தால் மட்டுமே “ம்மா…” என்று புவனாவை தேடுகிறாள் பூர்வி.

இல்லையென்றால் அவள் உறங்கும் நேரம் பார்த்து அவனே பூர்வியை இவளிடம் கொடுத்துவிடுகிறான்.

மத்த நேரமெல்லாம் அகிலனோடு தான்.

அவனும் பூர்விக்கு சளைக்காமல் எதையாவது பேச செய்ய விளையாட என்று இருப்பான்.. நடிப்பு ஒரு பக்கம் போக, பூர்வி அகிலனது பிடிப்பு இன்னும் அதிகமானது. இவர்கள் அனைவர்க்கும் ப்ரொடக்சன் சாப்பாடு தான், பூர்விக்கு மட்டும் அறையிலேயே செய்து ஏதாவது எடுத்து வருவாள். சில நேரம் அவனே கூட ஊட்டுவான். ஆனால் அவன் பூர்வி மீது மட்டும் கவனம் செலுத்தவில்லை புவனாவின் மீதும் செலுத்தினான்.

 

அகிலன் புவனா மீது தனி அக்கறை கட்ட, அது சுற்றி இருந்தவர்கள் அனைவரின் கண்களுக்கும் பட்டது.

அவர்கள் குழுவில் இருக்கும் பெண்ணொருத்தி, “யு ஆர் சோ லக்கி மேம்..” என்றுகூட சொல்லிவிட்டு போனாள்.

அதெல்லாம் இப்பொழுது நினைவில் வந்து தொலைத்தது அவளுக்கு.

இப்போதும் கூட புவனாவிற்கு அகிலன் மீது கோவமெல்லாம் வரவேயில்லை, மாறாய் அவன் சொன்னதற்கு என்ன பதில் சொல்வது என்ற யோசனை தான்.

“என்ன சொல்வது???”

இது மட்டும் தான் அவள் மனதில் ஓடிக்கொண்டு இருக்க, நேரம் போவது தெரியவில்லை. அவள் எப்பொழுது அறைக்கு வந்தாள், எப்படி பூர்வியின் அருகில் படுத்தாள் இதெல்லாம் புவனாவிற்கு தெரியவில்லை.

மிக சுலபமாய் அவன் மனதில் இருப்பதை சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

ஆனால் அதையெல்லாம் அத்தனை சுலபமாய் எடுக்கும் விஷயங்களா?? வாழ்வை பற்றியது..

அவள்…. அவன்… பூர்வி….

கண்களை மூடியவளுக்கும் அகிலனின் முகமே.

அழகானவன் தான், மென்மையானவன் தான், நல்லவன் தான், ஆனாலும் இதெல்லாம் சரியாய் வருமா?? என்று யோசிக்கும் போதே,

நிறுத்து நிறுத்து என்று மூளை கூப்பாடு போட்டது.

“அவன் உன்னை யோசிக்க சொன்னானா?? இல்லையே.. அவன் மனதில் இருப்பதை சொன்னான் அவ்வளவு தான். பதில் கூட சொல்லும்படி கேட்கவில்லையே.. அப்புறம் ஏன் நீ போட்டு மண்டையை குழப்புகிறாய்..” என்று மூளை கேட்ட கேள்விக்கு மனதிடம் பதில் இல்லை.

சரி தானே..

அகிலன் பதில் சொல்லும்படி கேட்டானா?? இல்லைதானே..

“இருந்தாலும் என்னிடம் தானே சொன்னான். நான் இப்படியே அமைதியாய் இருந்தால் எப்படி???” என்று அவள் மனம் கேள்வி எழுப்ப,

“எப்படியும் இல்லை அப்படியும் இல்லை. அவன் உன் பதிலையோ முடிவையோ கேட்கவில்லை. அந்த அளவில் இதை நிறுத்து..” என்று அறிவு சொல்ல,

இதுவும் சரிதானோ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

அவன் தான் திருமணம் உனக்கு சம்மதமில்லை என்றால் வேண்டாம் என்றுதானே சொன்னான். இனி இதற்கு பதில் சொல்லி மட்டும் என்ன ஆக போகிறது என்று தோன்ற,

இனி அகிலனாய் இதை பற்றி பேசாமல் தானும் இதை பற்றி எதுவும் பேசிட கூடாது என்று முடிவெடுத்து உறங்க ஆரம்பித்தாள் புவனா…

 

 

 

 

 

 

 

Advertisement