Advertisement

அத்தியாயம் ஒன்பது :

நடப்பவை நன்மைக்கா தீமைக்கா என்று நாம் யோசித்துக் கொண்டு இருந்தாலும் நடப்பவை நடந்து தான் தீரும்!!!      

பிரணவியை ரூபாவிடம் வர்ஷினி நீட்ட, அதை பார்த்து இருந்தார்கள் ஐஸ்வர்யாவும் ரஞ்சனியையும்.

“இந்தப் பொண்ணு இங்க எங்க” என்று ஐஸ்வர்யா ரஞ்சனியிடம் கேட்க,

“முரளி தங்கை”,

“எஸ் தெரியும்! நேத்து விஷ்வா ஆஃபிஸ்ல பார்த்தேன்”

“அங்க எதுக்கு வந்தா? நீ எதுக்கு அங்க போன?”

“இவ விஷ்வா டிராப் பண்ண வந்தா, நான் விஷ்வா பார்க்க வெயிட் பண்ணிட்டு இருந்தேன்”,

“என்ன? இவ வண்டி ஓட்டினாளா”

“எஸ், அதுவும் விஷ்வா காரை!”

“என்ன?” என்றாள் மனதிற்குள் இப்போது ரஞ்சனி! “என்ன? அவன் காரைக் கொடுத்தானா, அன்றைக்கு இந்தப் பெண்ணை தெரியுமா என்று கேட்டதற்கு, தெரிந்து வைத்துக்கொள்ளும் அளவிற்கு இவள் பெரிய ஆள் அல்ல என்று சொன்னான்! என்ன நடக்கிறது”.

“நீ பேசினியா” என்றாள் ஐஸ்வர்யாவைப் பார்த்து,

“இல்லை, விஷ்வா கூப்பிட்டாங்க, ரொம்ப டென்ஷன்ல இருந்தேன். அதனால பேசலை”

இதனிடையில் “ரொம்ப அழுதாளா” என்றாள் ரூபா வர்ஷினியிடம்.

“இல்லைக்கா கொஞ்ச நேரம்! அப்புறம் சரியாகிட்டா, கேண்டீன்ல சூப் குடிக்க வெச்சேன், ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே”

“இல்லை, தேங்க்ஸ்”

“இவங்கப்பா எப்படி இருக்காங்க”

“ஹி இஸ் ஓகே” என்று ரூபா சொல்ல,

அதற்குள் பத்மநாபன் “நம்ம போகலாம்” என்றான் தணிந்த குரலில்.

“ஓகே கா! டேக் கேர்!” என்றவள் ரஞ்சனியையும் பார்த்து தலையசைத்து  நகர்ந்து விட,

“உனக்கு அந்தப் பொண்ணைத் தெரியுமா” என்றாள் ஐஸ்வர்யா.

“ஓஹ், எஸ்! முரளிண்ணா கல்யாணத்துல பார்த்தோம், ஸோ ஸ்வீட் பார்க்கத்தான் கொஞ்சம் பெரிய பொண்ணா தெரியறா, இப்ப தான் ப்ளஸ் டூ முடிச்சிருக்கா”

கமலம்மாவும் பத்மநாபனும் ஹாஸ்பிடலில் இருக்க, முரளி ஷாலினி வர்ஷினி மூவரும் வீடு கிளம்பினர். “நான் நைட் வர்றேன்” என்று சொல்லி முரளி சென்றான்.

ஐ சீ யு விட்டு வெளியே வந்தவர்கள், வெயிடிங் ஹாலில் இருந்த ஈஸ்வரை பார்த்தார்கள், “ஒரு நிமிஷம்” என்ற முரளி அவனிடம் விரைந்தவன்,

அருகில் சென்று அவனின் தோளைத் தொட, அப்போது தான் சற்று உணர்வு பெற்று திரும்பினான் ஈஸ்வர்,

“coolலா இரு! டென்ஷன் ஆகாத, எதுன்னாலும் பார்த்துக்கலாம், எதையாவது செஞ்சு சிக்கல்ல மாட்டிக்காத, இப்போதைக்கு உங்க அண்ணனை பாரு, இன்னும் ரெண்டு மாசம் இருக்குடா, பார்த்துக்கலாம்!” என்றான் நண்பனை தேற்றும் விதமாக.

அப்பா ஹாஸ்பிடலில் இருக்கும் போதும், தனக்கும் தைரியம் சொல்லும் நண்பனை பார்த்தவன், “தேங்க்ஸ் டா, நீ அப்பாவைப் பாரு, நானா எதுவும் பண்ணலை. எல்லாம் அப்புறம் பார்க்கலாம்” என்றான் பதிலுக்கு.

பின்பு முரளி பெண்கள் இருவரையும் பார்க்க, இருவரும் முரளியின் பின் சென்றனர்.

அப்போது தான் வர்ஷினியைப் பார்த்தான் ஈஸ்வர், அவளும் அவனைப் பார்த்தாள். புன்னகைப்பதா வேண்டாமா என்ற தயக்கம் வர்ஷினிக்கு, ஈஸ்வர் அவளைப் பார்க்கும் போதே தன்னை பார்க்கும் அந்த நீல நிறக் கண்களைத் தான் பார்த்தான்.

அதையே விடாது பார்க்க, எதற்குத் தன்னை இப்படிப் பார்க்கிறான் என்று புரியாத போதும், ஏதோ ஒரு தயக்கம் ஈஸ்வரைப் பார்க்க விடாமல் செய்ய தலையை திருப்பிக் கொண்டாள்.

திரும்பி அவள் செல்லவும் அவளின் உடையை தான் பார்த்தான் இன்று ஒரு த்ரீ ஃபோர்த் பேன்ட், ஒரு ஷார்ட் ஷர்ட், அவர்கள் அவனின் பார்வையில் இருந்து மறையும் வரை விடாமல் வர்ஷினி செல்வதையே பார்த்திருந்தான்.

இவன் அவர்கள் மறைந்ததும் தான் சுற்றம் பார்க்க ரஞ்சனியும் ஐஸ்வர்யாவும் அவனை நோக்கி வந்தனர். ஐஸ்வர்யாவின் கையை பிடித்தபடி சரண்.

அவர்கள் அருகில் வரவும் சரண் மேல் தான் ஈஸ்வரின் பார்வை நிலைத்தது, ஐந்து வயது, யு கே ஜி படிக்கின்றான், ஸ்கூல் யுனிபார்ம் கூட மாற்றவில்லை. சரண் வரவும் தான் ஜகனைப் பார்த்தனர், அப்படியே இங்கே வந்திருந்தனர்.

அழுது அழுது குழந்தையின் முகம் களைத்து இருந்தது, அவனைப் பார்த்தும் ஈஸ்வர் கையை நீட்ட, அவனிடம் ஓடி வந்தது குழந்தை, “சித்தப்பா பசிக்குது” என்று சொல்ல, அவனை வாரி எடுத்தவன், ஐஸ்வர்யாவிடமோ ரஞ்சனியிடமோ பேசாமல் எங்கே கேண்டீன் என்பது போல தேடித் போக,

“விஷ்வா” என்ற ரஞ்சனியின் அழைப்பிற்குத் திரும்பியவன்,

“தயவு செஞ்சு என் பின்னாடி வராத. என்னைக் கொஞ்சம் தனியா விடு” என்றவன்,

ஐஸ்வர்யாவைப் பார்த்து “உங்கப்பா வந்துட்டார் தானே! போ! போய் அவரைப் பாரு! என் பின்னாடி வந்த தொலைச்சிடுவேன்!” என்று அவளைப் பார்த்து கர்ஜித்தான்.

மளமள வென்று கண்களில் நீர் நிறைந்த போதும், அவனை பார்த்து முறைத்து நின்றாள்.

“அப்போ நான் எதுவும் உங்களை கேட்கக் கூடாது இல்லையா, இப்படி எங்கப்பாவைப் பண்ணப் போறீங்கன்னு ஏன் சொல்லை?”

“எதுக்குச் சொல்லணும், சொன்னா நீ என்ன கிழிப்ப”

“ஏதாவது கேட்கணும்னா திமிரா பேசினான் பாரு உங்கப்பா! அவனைக் கேள், அவனைக் கேட்டியா நீ”

“நீங்க போன உடனே அவரும் போய்ட்டார்! அதுக்கு அப்புறம் வீட்டுக்கு வரவேயில்லை! வந்திருந்தா தானேக் கேட்பேன், கண்டிப்பா கேட்டிருப்பேன்”

“விஷ்வா, மரியாதையில்லாம பேசாத” என்றாள் ரஞ்சனி கெஞ்சல் குரலில்,

“பிரச்சனை பெருசு தான், இல்லைன்னு சொல்லலை, அதுக்காக நம்ம தப்பு வழில போறதா, அவர் ஒரு பேஷன்ட்! அதுக்கு தான் சொல்றேன், அவருக்கும் ஏதாவது ஆகியிருக்கும்! அந்தப் பழியும் உங்களை தான் வந்திருக்கும்! அவருக்கு ஏதாவது ஆகியிருந்தா” என்று ஐஸ்வர்யா தன் கேள்விக்கு விளக்கம் சொல்ல முற்பட,

“செத்து தொலையறான், இல்லை நானே கொல்றேன்!” என்றபடி ஈஸ்வர் நகர்ந்து விட,

இவனை என்ன செய்வது என்று இரு பெண்களும் பார்த்து நின்றனர். ரஞ்சனி, கோபத்தால் நிறைய பிரச்சனகளை இழுத்துக் கொள்வானோ என்று நினைக்க,

ஐஸ்வர்யாவிற்கு யோசனைகளே செல்லவில்லை, மனதிற்கு எதுவும் சரியாகப் படவில்லை, இனி என்ன நடக்குமோ என்ற பயம். தான் சொல்வதும் செய்வதும் அவனிற்குத்தான் என்று அவனுக்கு புரியாதா? நான் எல்லாம் சொல்லி தான் புரிய வைக்க வேண்டுமா? அப்படி சொன்னாலும் புரியவில்லையே. என் செய்வேன்.

ஈஸ்வர் எங்கே என்றபடி அப்போது பிரணவியைத் தூக்கிக்கொண்டு ரூபா வரவும், “ரொம்பக் கோபமா இருக்கான் அண்ணி, சரணைக் கூட்டிட்டு கேண்டீன் போனான்” என்று ரஞ்சனி சொல்ல,

அவளும் கேண்டீன் நோக்கி செல்ல, பின்னோடு ரஞ்சனியும் ஐஸ்வர்யாவும் செல்ல முற்பட,

“ப்ளீஸ்! நான் ஈஸ்வர் கிட்ட தனியாப் பேசணும்” என்று அவர்களை நிறுத்தி சென்றாள்.

கேண்டீனில் சூடான இட்லியை வாங்கி சாம்பாரில் முக்கி ஒரு ஸ்பூன் போட்டுக் கொடுக்க, சரண் அதை ஸ்பூனினால் உண்டு கொண்டு இருந்தான்.

இவர்கள் அருகே செல்லும் வரை ஈஸ்வர் அவர்களைப் பார்க்க வில்லை. அருகில் வந்ததும் தான் பார்த்தான்.

அவர்களின் எதிரில் அமர்ந்தவள், “சாரி ஈஸ்வர்” என்றாள்.

“எதுக்கு” என்று அவன் கேட்க,

“இவர் பண்ணினதுக்கு எல்லோரும் உன்னை ப்ளேம் பண்றாங்க”

“ப்ச், அது ஒன்னும் பிரச்சனையில்லை. ஏன் பண்ணினான் அப்படி? பணத்தை இவன் ஏதாவது பண்ணிட்டானா”

“அது நான் சொல்ல மாட்டேன், என்னால அதை சொல்ல முடியாது! அவரே சரியாகி சொல்லட்டும். பட் சொல்லும் போது மறுபடியும் அவரை திட்டாத, ஆனா பணம் திரும்ப வராது! இனி என்ன பண்ணனும்னு வேற தான் நீ யோசிக்கணும்”.

“என்ன?”, என்றபடி அப்படியே பார்த்திருந்தான், மனதின் ஒரு மூலையில் பணம் கிடைத்து விட வேண்டும், கிடைத்து விடும் என்று நினைத்துக் கொண்டிருந்த நம்பிக்கை பொய்யானது. முகம் முழுக்க நிராசையை பிரதிபலித்தது.

“எல்லாம் இவரோட முட்டாள்தனம் மட்டும்” என்று ரூபா சொல்லும் போது கண்களில் நீர் தளும்பியது.

“அப்போ உங்கப்பா… அஸ்வின்….”

“ப்ச், என்னால எதுவும் சொல்ல முடியலை! எனக்கே அசிங்கமா இருக்கு, ஆறு வருஷம் கல்யாணமாகி, ரெண்டு குழந்தைங்க, இவர் இப்படி பண்ணிட்டார், என்ன சொல்ல, நீ என்ன முடிவெடுத்தாலும் சரி, நாங்க போகறதுன்னாலும் போயிடறோம்”

“என்ன உளர்ற? எங்க போவீங்க?”

பசி இருக்கும் வரை வேகமாக உண்டு கொண்டு இருந்த குழந்தை இப்போது இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனித்து, “எங்க போறோம் மா” என்று கேட்டது.

“எங்கேயும் போகலை” என்றான் ஈஸ்வர் சரணைப் பார்த்து.

“உன் உளறலை நிறுத்து குழந்தைங்களை கவனி, ஜகனைப் பாரு, அவன் சரியாகட்டும். நான் அவன்கிட்ட கேட்கறேன். அவன் சொன்னாலும் சரி சொல்லலைன்னாலும் சரி! இந்த ப்ரச்சனையைப் பார்த்துக்கலாம் விடு”

“எப்படிப் பார்ப்பாயடா நீ” என்று மனதிற்குள் ஒரு குரல் ஓங்கி ஒலித்த போதும் ரூபாவிற்காகச் சொன்னான்.

“ஆனா கண்டிப்பா பணம் குடுக்காம ஏமாத்த முடியாது, இருக்குற அத்தனையும் வித்தாவது, நான் பணம் கொடுப்பேன். அந்த முடிவுல எந்த மாற்றமும் இல்லை”

“செய் ஈஸ்வர், என் குழந்தைங்க பணம் அதிகமில்லாத சாதாரண மனிதர்களா வாழறதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனா ஏமாத்துனவங்க குழந்தையா வளர வேண்டாம்” என்று சொன்னவளுக்கு என்ன முயன்றும் அழுகை கட்டுப்படுத்த முடியாமல் வந்துவிட்டது.

அவளின் உடல் அழுகையில் குலுங்க, அந்த அசைவில் பிரணவி விழிக்க, அவசரமாக எழுந்து குழந்தையை கையினில் வாங்கிய ஈஸ்வர், தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தான்.

இப்படி ஒரு சூழல் எல்லாம் ரூபா நினைத்தும் பார்த்ததில்லை. என் கணவன் தற்கொலைக்கு முயன்றிருக்கிறான். ஒரு நிமிடம் கூட மனைவி குழந்தைகள் நினைவிற்கு வரவில்லையா. அப்போது நான் என் கணவனுடன் என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றேன். என்னவானாலும் நான் அவனுடன் நிற்பேன் என்று அவனுக்கு தோன்றவில்லையா. என்ன செய்யலாம் என்று என்னிடம் கேட்க தோன்றவில்லையா.

“ரூபா அழாத”

“ஒரு நிமிஷம் கூட என்னைக் குழந்தைங்களை அவர் நினைக்கவேயில்லை, காப்பாத்திட்டோம். ஆனா ஒருவேளை அவருக்கு ஏதாவது ஆகியிருந்தா” என்று தேம்பி தேம்பி அழ,

“ரூப்ஸ் இது கேண்டீன்! ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்செல்ப்! எல்லோரும் பார்க்கறாங்க! சரியாகிடும்! நான் சரி பண்றேன்! நம்பு!” என்றான்.

“உன்னை நம்பாம, ஆனா உனக்கு பயந்து தான் இப்படி பண்ணிகிட்டார். அதுதான் நிஜம். நீ அவரை விட்டிடுவியோன்னு”

“என்ன சொல்கிறாய்” என்று ஈஸ்வர் ரூபாவை அதிர்ச்சியாகப் பார்த்தான்.

“ஒரு உண்மை சொல்லணும் ஈஸ்வர். நீ ரொம்ப டாமினேடிங். ஆனா அது உன்னோட இயல்பு. அதுக்காக இவர் இப்படி செஞ்சிருக்க வேண்டாம்! என்கிட்டே சொல்லியிருந்தா நான் பார்த்துக்கிட்டிருப்பேன், அவர் பண்ணின விஷயம் சொன்னதும் நானும் திட்டினேன், அத்தையும் ரொம்ப திட்டினாங்க, அவர் அப்பா வளர்த்த கம்பனி அவரால நாசமாகப் போகுதுன்னு, கூடவே உன்னோட பயம்! நீ முன்ன பின்ன யோசிக்காம எங்க அப்பாவைக் கடத்தினது, நாளைக்கு எங்களை வீட்டை விட்டு துரத்திடுவியோன்னு… இப்படி நிறைய, மதியம் என்னோட இதெல்லாம் பேசினார், நானும் கோபத்துல நீங்க பண்ணின வேலைக்கு நாங்க நடுத்தெருவுல தான் நிற்போம் சொன்னேன். எல்லாம் சேர்ந்து, பாட்டியோட தூக்க மாத்திரை எடுத்து சாப்பிட்டிட்டார். இப்படி பண்ணுவார்ன்னு நான் கொஞ்சமும் யோசிக்கலை”

“நீங்க பெரிய ஆளுங்களா இருக்கலாம்! எங்க வீட்ல இந்தக் கல்யாணத்துக்கு சொல்லியிருக்கலாம்! ஆனா எங்க அண்ணா, ஹி இஸ் குட், அப்படின்னு நீ சொன்ன வார்த்தை தானே என்னை இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்ல வெச்சிச்சு”

உண்மை தான்! ஈஸ்வருக்குத் தெரியும். பி பி ஏ முடித்து எம் பி ஏ விற்கு ரூபா அப்ளை செய்த போது அவர்களின் திருமணம் நடந்தது. நான் படிக்க வேண்டும் இப்போது திருமணம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்த ரூபாவிடம் அவர்களின் வீட்டினர் வற்புறுத்திய போதும்,

“என்னோட அண்ணா, உன்னை ரொம்ப லவ் பண்றான்” என்று ஈஸ்வர் வந்து ஜகனை அறிமுகப்படுத்த, பின்பு ஈஸ்வரும் கன்வின்ஸ் செய்ய அதன் பிறகே சம்மதித்தாள்.

திருமணதிற்குப் பிறகு இதுநாள் வரை அவளுக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை. ஜகனுடனான அவளின் வாழ்க்கை நன்றாக இருந்தது. பெரிய இடத்து மருமகள், மற்றவர்களின் பார்வையில் இன்னம் மரியாதை கூடியது. ஆனால் இப்போது,

செய்தது தப்பு! அதையும் செய்து விட்டு இப்போது தற்கொலை முயற்சி! என்ன ஒரு கோழைத்தனம் என்று கணவனை இப்போது தான் முதல் முறை பிடிக்காமல் போனது.

அவளின் முன் காபி வைத்த ஈஸ்வர் “குடி, நீ ரொம்ப தைரியமா இருக்கணும். நம்ம எல்லோருமே அப்படிதான் இருக்கணும், சமாளிக்கலாம் குடி” என்று அவளை குடிக்க வைத்து அவர்களை ஐ ஸீ யு அழைத்து வந்தவன்,

அம்மாவிடமும் அப்பாவிடமும் எதுவும் பேசாமல், “பெரியம்மா குழந்தைங்க அழறாங்க, ரூபா இங்க இருக்கட்டும், ரஞ்சனி நைட் வரட்டும், நீங்க வாங்க” என்று அழைத்துக் கொண்டு ரஞ்சனியிடம் பார்த்துக் கொள் என்று கண்ஜாடை காட்டி சென்றே விட்டான்.

அங்கே தான் ஐஸ்வர்யா, அவளின் அம்மா, அப்பா என்று அனைவரும் அமர்ந்து இருந்தனர். ஐஸ்வர்யாவை பார்க்கக் கூட இல்லை.

பணம் படைத்தவன் அல்லவா? அந்த திமிரா! இல்லை மனிதர்களை மதிக்க தெரியாதவனா! என்ன சொல்ல? செல்லும் அவனை வெறித்து  பார்த்து இருந்தாள் ஐஸ்வர்யா.

“நானா இவனைப் பிடித்திருக்கிறது என்று சொன்னேன், இவன் தானே சொன்னான். அவன் பேசும் போது பேச வேண்டும், அவன் பேசாத போது நான் எதுவும் கேட்கக் கூடாது. எல்லாம் இவன் இஷ்டம். போனால் போகிறான்” என்று நினைத்த போதும் அழுகை பொங்கியது.

அதை அடக்க முயன்றும் முடியாமல் அந்த இடத்தை விட்டு அகன்று, யாருக்கும் தெரியாமல் கண்ணீரை துடைத்து நின்றிருந்தாள்.

இவளை எங்கே காணோம் என்று தேடி வந்த ரஞ்சனி தான் இவளின் அழுகையை பார்த்து, “வா ஐஷ்! ஈஸ்வர் கோபம் தெரிஞ்சது தானே, உன்கிட்ட மட்டுமில்லை எல்லார் கிட்டயும் தான்”.

“என்ன சண்டை போட்டாலும் திட்டினாலும் உன்னை பார்த்துக்கோன்னு கண்ல காட்டிட்டு தானே போனாங்க. ஆனா என்னை பார்க்கக்கூட இல்லை”,

“அது நான் டாக்டர்ன்னு” என்று சொன்ன ரஞ்சனி, “அச்சோ” என்று சொன்ன பின் நாக்கை கடித்தாள்.

“அப்போ நான் யாரு?” என்பது போல ஐஷ் பார்க்க,

அசடு வழிந்தவள் “வா” என்று ஐ ஸீ யு முன் அழைத்து சென்றாள்.

அங்கு சென்ற ஐஸ்வர்யா “அம்மா! அவரைக் கூட்டிட்டு கிளம்பு” என்று அப்பாவைக் காட்டினாள். “நான் இங்க ரூபா வோட இருக்கேன்”

ரூபாவும் அதையே தான் கூறினால் “அம்மா! அப்பாவைக் கூட்டிட்டு கிளம்பு” என்று.

பிரகாசம் மனதளவில் நொந்து போயிருந்தார், சிறு பையன் மிரட்டினால் பயந்து விடுவான் என்று நினைக்க இப்படிக் கடத்துவான் என்று நினைக்கவில்லை. அதிலும் ஜகன் இப்படி செய்வான் என்று நினைக்கவில்லை.

ஜகனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் ரூபாவின் கதி, அந்த பயம் சற்று தூக்கலாக இருக்க, அடங்கி ஒடுங்கி அமர்ந்து இருந்தார்.

“ஒரு மனிதன் நேற்று போனவன் இன்று வந்திருக்கிறேன். அதுவும் கடத்தப்பட்டிருக்கிறேன் யாரும் ஒரு வார்த்தை என்ன என்று கேட்கவில்லை, அப்படியுமா நாதியற்றுப் போய்விட்டேன்!”

“இரு மகள்களும் கேட்கவில்லை! மனைவியும் கேட்கவில்லை! எப்படியோ இவன் சாகவில்லை” என்று நினைத்தவர் எழுந்து மனைவியை பார்க்க, ஒரு வார்த்தையும் பேசாமல் அவரும் எழ, இருவரும் அந்த மருத்துவமனையை விட்டு அகன்றனர்.

ரூபா, ரஞ்சனி, ஐஷ் அங்கே ஒரு புறம் அமர்திருக்க,

பத்மநாபனும் கமலம்மாவும் மற்றொரு புறம் அமர்ந்திருந்தனர். எல்லோரும் அமைதியாக பேசிக்கொள்ளாமல்.

இதில் டாக்டர் அழைக்கிறார், ராஜாராம் பேஷன்ட் உடன் இருப்பவர்களை என்று சிஸ்டர் சொல்ல,

பத்மநாபன் எழுந்து செல்ல முற்பட, “நானும் வர்றேன்” என்று கமலம்மாவும் எழ,

“அம்மா நீங்க இருங்க! நான் போயிட்டு வர்றேன்” என்று பத்மநாபன் சொல்ல,

என்னவோ ஏதோவென்று கவலை அவரின் முகத்தில்,

“அம்மா! ஒண்ணுமிருக்காது எப்படி இருக்கார்ன்னு சொல்லக் கூப்பிடுவாங்க” என்று சொல்லியும் “அவர் நானும் வர்றேன்” என,

இவர்களைப் பார்த்திருந்த ரஞ்சனி, அவளாக அருகில் வந்தவள் “ஒண்ணுமிருக்காதும்மா, நீங்க போங்க!” என்று பத்மநாபனை நோக்கி சொன்னவள்,

“நீங்க வாங்க! நான் உங்களை உள்ள கூட்டிட்டு போறேன்” என்று ராஜாராமை பார்க்கும் ஆசைக் காட்ட,

அப்படியே இருந்து கொண்டார், பின்னே காலையில் இருந்து இரு முறை தான் பார்க்க விட்டிருந்தனர்.

ஆட்களை அணுகும் அவளின் புத்திசாலித்தனம் புரிய, “தேங்க்ஸ்” என்பது போல கண்களால் நன்றி சொன்னவன், டாக்டரைப் பார்த்து வர வெகு நேரம் ஆகிற்று.

நடப்பவை நடந்து முடிந்த பிறகு அதை சரி செய்வது என்பது எல்லா நேரத்திலும் சாத்தியமல்ல!!! 

 

Advertisement