Advertisement

அத்தியாயம் எட்டு :

செய்கின்ற செயல்கள் சில சமயம் மட்டுமே விளக்கத்திற்கு அப்பாற்பட்டது!!!!

வீடு சென்றவன், சரண் அவனைப் பார்த்ததும் “சித்தப்பா” என்று வர, அவனைக் கண்டு கொள்ளாமல் யாரோடும் பேசாமல் ரூமிற்குள் புகுந்தான். அதுவே சொன்னது வீட்டினருக்கு அவன் குடித்திருக்கிறான் என்பது. மொடாக் குடியன் அல்ல, எப்போதாவது அரிதாக குடிப்பான் பார்ட்டி ஏதாவது போனால். எதுவும் சொன்னாலும் கேட்டுக் கொள்ள மாட்டான். அதனால் யாரும் சொல்லி அவர்கள் டென்ஷனாவது இல்லை.

எந்த விஷயத்தையும் ரசித்து செய்பவன் ஈஸ்வர், சரியான விஷயங்கள் என்றாலும் தப்பான விஷயங்கள் என்றாலும்.

அவன் பின்னோடு வந்த அம்மா “சாப்பிடலையா”

“பசியில்லைம்மா”

“குடிச்சிருக்கியா”

“ம்” என்பது போல தலையாட்டினான்.

“ஏன் விஷ்வா இப்படி பண்ற?”

“மா! காலையில பேசுங்க!” என்றான் அவர் பதிலை எதிர்பார்க்காமல், பாத்ரூமினுள் புகுந்து கொண்டான்.

வேறு வழியில்லாமல் அவர் கதவை மூடி சென்றார்.

காலையில் அவன் விழித்து கீழே வந்த போது வீடு பரபரப்பாக இருந்தது,

அவனின் பாட்டி சௌந்தரி அம்மாள், “விஷ்வா, நம்ம ரூபாவோட அப்பாவை காணோமாம்” என்றார்.

“சரி அதுக்கு?” என்று பேப்பரை பிடித்துக் கொண்டு அவன் அமர,

“என்னடா இப்படி சொல்ற?”

“வேற எப்படிச் சொல்வாங்க. அந்த ஆளுக்கெல்லாம் இவ்வளவு மரியாதை குடுக்கறதே பெருசு”

ரூபாவின் காதுகளில் அந்த வார்த்தை விழ அப்படியே நின்று விட்டாள். ஜகன் எங்கே என்பது போலப் பார்க்க, அவனும் ஈஸ்வரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

என்ன நடக்கிறது தன்னைச் சுற்றி, “என்ன ஈஸ்வர் இப்படிப் பேசற” என்று அருகில் வந்தாள்.

“உன் வீட்டுக்காரனைக் கேளு, நேத்துக் காலையில உங்க வீட்டுக்கு போனோம் சொன்னானா”

“சொன்னார்…”

“போய் உட்கார்ந்து இருக்கோம், உங்கப்பா ஒரு மணிநேரம் கழிச்சு வர்றார் அவ்வளவு அலட்சியமா பேசறார்” என்றான் கோபமாக.

“என்ன” என்பது போல ரூபா ஜகனை பார்க்க, அவன் ரூபாவின் பார்வையைக் கூட சந்திக்கவில்லை.

“உன்கிட்ட அதை சொன்னானா இல்லையா”,

“சொல்லவில்லை” என்பது போல ரூபா தலையாட்டா,

“ஏன் சொல்லலை, அப்போ இவனும் ஏதாவது சேர்ந்து பண்றானா?” என்றான் கோபமாக.

ரூபா அதற்கு பதில் சொல்லாமல் “அப்போ அவர் காணாம போனதுக்கும் உனக்கும் சமந்தம் இருக்கா”

“கண்டிப்பா இருக்கு” என்றான்.

“என்ன நடக்குது?” என்று அவள் அப்படியே அமர்ந்து விட,

“கேளு, இவன் கிட்டக் கேட்டு என்னன்னு சொல்லு, அப்புறம் உங்கப்பாவை என்ன செய்யறதுன்னு யோசிக்கறேன்”

“விஷ்வா, நீ என்ன செய்யற” என்று குடும்பம் மொத்தமும் பதற… யாருக்கும் பதில் சொல்லவில்லை, பெரியம்மாவிடம் மட்டும், “இவன் என்னவோ பண்றான் பெரியம்மா. எனக்கு கண்டுபிடிக்க முடியலை. என்னன்னு பாருங்க” என்று சொல்ல.

“என்ன விஷயம்?” என்று நமசிவாயதிடம் கேட்க, அப்போது தான் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பணப் பிரச்சனை தெரிந்தது.

“பிரச்சனையை தீர்க்கலை, ரெண்டு மாசத்துக்கு அப்புறம் நம்ம ஒண்ணுமில்லாம போயிடுவோம், மோசடி குடும்பம்ன்னு பேர் எடுப்போம். அதையும் விட அப்பா நான் ஜகன் மூணு பேரும் ஜெயிலுக்கு போவோம்”

“இதையெல்லாம் விட நம்மை நம்பி பணம் போட்டவன் குடும்பம் மொத்தமும் என்ன ஆகும். அந்தப் பாவத்தை எங்க கொண்டு போய் தொலைப்போம் பாட்டி” என்றான்.

எப்போதும் பாவ புண்ணியத்தை பற்றி சௌந்தரி பாட்டி அதிகம் பேசுவார். அதனால் அவரிடம் சொல்ல, அவன் சொல்லி முடிக்கக்கூட இல்லை, “சரி படுத்திக் கொடு கடவுளே” என்று கடவுளை தொந்தரவு செய்ய பூஜை அறையைத் தஞ்சம் அடைந்தார்.

ரஞ்சனி அப்பாவின் அருகில் அமர்ந்தவள் “அப்பா! கவலைப்படாதீங்க. உங்க அம்மா கடவுளை தொந்தரவு பண்ண போயிட்டாங்க, அவங்க தொந்தரவு தாங்காம கடவுள் சரி பண்ணிடுவார்” என்று சூழலை இலகுவாக்க முயன்றவள்,

“நீ பெரிய இவன் மாதிரி எல்லோரையும் பயமுறுத்தாத சமாளிக்கலாம்” என்று ஈஸ்வரை அதட்டியவள் பெரியம்மாவிடம் சைகை செய்தால், “ஜகனை கூட்டிக் கொண்டு போய்க் கேளுங்கள்” என்பது போல.

ரூபாவை சமாதானம் செய்தால் “அண்ணி, பண விஷயம். ஏதோ கோபத்துல பண்ணிட்டான் அண்ணா, உங்க அப்பாக்கு எதுவும் ஆகாது, போய் என்ன விஷயம்னு ஜகன் அண்ணாக்கிட்ட தெரிஞ்சிக்கங்க” என்று ரூபாவையும் அனுப்பினாள்.

பிரணவியை தூக்கிக் கொண்டவள், சரணிடம் “சித்தப்பாக் கிட்ட இரு, அத்தை வந்து குளிக்க வைப்பேன்” என்று அவனையும் பார்த்தாள்.

எல்லாவற்றையும் மௌனமாக பார்த்திருந்தான் ஈஸ்வர். “அவனை தூக்கி மடில வை விஷ்வா. நேத்து நைட்டே நீ அவன் கூப்பிடக் கூப்பிட போன, குழந்தை முகமே சுருங்கிடுச்சு. தூக்கு அவனை!” என்று அண்ணனை அதட்ட, சரணை தூக்கி மடியில் வைத்தான் ஈஸ்வர்.

அம்மாவிடமும் அப்பாவிடமும் “நான் பேசறேன்” என்பது போல சைகை செய்தவள்,

“நீ பண்றது தப்பு விஷ்வா! பணத்துக்காக அவங்கப்பாவை ஒளிச்சு வைப்பியா? என்ன பண்ற நீ? அண்ணியோட அப்பா மட்டுமில்லை அவர். ஐஷ்ஷோட அப்பாக்கூட அவர்தான்” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்பது போல்.

“ரஞ்சனி புரிஞ்சிக்கோ அந்த வீட்ல பொண்ணு எடுத்ததுக்காக நாம பிரச்சனையில மாட்டலாம்! ஆனா நம்மை நம்பி பணம் போட்டவங்க, நீங்க எல்லோரும் ஈஸ்வர் ஃபைனான்ஸ்ஸோடா ஒரு அங்கம் தான். ஆனா ஈஸ்வர் ஃபைனான்ஸ் என்னோட அடையாளம். ஈஸ்வர் என் பேரு, அதுக்கு எந்த பங்கமும் நான் வர விடமாட்டேன்”.

“இதுக்கு நடுவுல யாரும் வரவேண்டாம்! அப்பா அம்மா சொந்தம் பந்தம்ன்னு யாரையும் இழுக்காதீங்க! என்ன பண்ணனும்னு நான் பார்த்துக்கறேன்!” என்று கத்தினான்.

“விஷ்வா! கோபப்படாத பொறுமையா ஹேண்டில் பண்ணு! கடத்தல் எல்லாம் தேர்ட் ரேட் ஆசாமிங்க செய்யற வேலை”.

“ஒன்னு நல்லா புரிஞ்சிக்கோ ரஞ்சனி! நல்லவனா இருக்குறவன் எல்லாம் ஃபைனான்ஸ் தொழிலுக்கு லாயக்கில்லை, அவன் ஃப்ராடா இருக்கணும்! தேர்ட் ரேட்டா இருக்கணும்! அப்போதான் அடுத்தவன் நம்ம கிட்ட அவன் வேலையைக் காட்ட மாட்டான்”

“நான் இனிமே அப்படித்தான் இருக்கப் போறேன், சும்மா எனக்கு அட்வைஸ் பண்ணாத ரஞ்சனி. அட்வைஸ் பண்ற அளவுக்கு கெப்பாசிட்டி இருக்குன்னு நினச்சா, அந்த தொலஞ்சு போன பணத்தைக் கொண்டு வந்து கொடு பார்ப்போம்”

ரஞ்சனி என்ன பேச்சு என்பது போலப் பார்த்தாள்.

“முடியாதில்ல! நான் செய்யறதை மட்டும் வேடிக்கை பாரு!” என்று சொல்லி இடத்தை விட்டுச் சென்றான்.

“என்ன அகங்காரம் இவனுள்” என்று தான் ரஞ்சனிக்கு தோன்றியது.

காலையில் ஆடிட்டருடன் மீட்டிங் சென்றவன், என்ன செய்யலாம் என்று அவருடன் பேசினான். பின்பு போர்ட் மீட்டிங் செல்ல, அங்கே அப்பா மட்டுமே வந்திருந்தார்,

“ஜகன் எங்கப்பா?”

“வரலை” என்றார். பெரியம்மாவும் ரூபாவும் அவனைக் கேள்வியால் துளைத்து எடுக்கிறார்களோ. ஜகன் இதில் இருக்கிறானா, பணத்தை என்ன செய்திருப்பான் கவலையாக இருந்தது.

பின்பு அந்த மீட்டிங்கை முடித்து மதியம் எல்லா பிரான்ச் மேனேஜர்களையும் சந்தித்தான். “மூணு மாசத்துக்கு யாருக்கும் எந்த லோனும் கொடுக்க வேண்டாம். லோன் திரும்ப கட்டாம இருக்குறவங்களுக்கு கொஞ்சம் பிரஷர் கொடுங்க” என்பது போல பல ரூல்ஸ் போட்டான்.

இத்தனை வேலைகள் செய்தாலும் இந்த முரளி ஏன் இன்னம் அழைக்கவேயில்லை என்று மனதின் ஒரு ஓரம் அரித்துக் கொண்டே இருந்தது.

பிரான்ச் மேனேஜர்களுடன் மீட்டிங் முடிந்ததும், பிரகாசத்தை என்ன செய்வது என்று யோசித்தவன், சுரேஷை அழைக்கத் தொலைபேசியை எடுத்தான்.

அவன் எடுக்கவும் அது அடிக்கவும் சரியாக இருந்தது. ரஞ்சனி அழைத்து இருந்தாள், எடுக்கவும் அவளின் குரல் பதட்டமாக ஒலித்தது, “விஷ்வா! ஜகன் அண்ணா தூக்க மாத்திரை சாப்பிட்டுட்டான், அப்போல்லோ கொண்டு போறோம்! வா!” என்று சொல்லி வைத்துவிட,

கேட்டதும் அதிர்ந்து விட்டான், கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை, விரைந்து ஓட வேண்டும் என்று நினைத்தாலும் கால்கள் அசைய மறுத்தது.

“என்ன? என்னவாகிற்று? ஏன் இப்படி செய்தான்? பணத்தை இவன் தான் ஏதாவது செய்து விட்டானோ. எதுவாகினும் சரி படுத்திக் கொள்ளலாம். கடவுளே அவனுக்கு எதுவும் ஆகக் கூடாது” என்று பிரார்த்திக்க ஆரம்பித்தது.

ஒருவழியாக ட்ராபிக்கில் கலந்து இவன் ஹாஸ்பிடல் அடைய கிட்ட தட்ட ஒரு மணிநேரம் ஆகியிருந்தது.

ஹாஸ்பிடல் முன் இருந்த படியில் பிரணவியை வைத்துக் கொண்டு வர்ஷினி நின்றிருந்தாள். இவள் எங்கே இங்கே என்பது போலப் பார்க்க, இவனைப் பார்த்ததும் “ஐ சீ யு ல இருக்காங்க” என்று தகவல் சொல்ல பதில் ஏதும் பேசாமல் விரைந்தான்.

அங்கே ஐ சீ யு முன் ஈஸ்வர் குடும்பம் மொத்தமும் நின்றிருக்க, கூடவே முரளியின் குடும்பமும், இவர்கள் எங்கே இங்கே என்று தோன்றிய போதும் ரஞ்சனியை தேடினான்.

இவனைப் பார்த்ததும் விரைந்து வந்தவள், “வீட்லயே ஜகனை வாமிட் பண்ண வெச்சிட்டேன் ப்ராப்லம் இருக்காது! பார்த்துட்டு இருக்காங்க!” என்றாள்.

பெரியம்மாவும் ரூபாவும் எங்கே என்பது போலப் பார்க்க, ரூபா சரணை மடியில் வைத்து எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள். அவளிடம்  முதலில் விரைந்தவன் “ஒன்னும் ஆகாது ரூப்ஸ்” என்று சொன்னான்.

ஈஸ்வரைத் திரும்பியும் பாராது அவள் அமர்ந்து இருந்தாள். பெரியம்மாவும் பக்கத்தில் இருக்க, “என்ன ஆச்சு பெரியம்மா” என்று அவன் கேட்க அவரும் ஒரு பதிலும் சொல்லவில்லை.

எழுந்து முரளியிடம் சென்றான், “நீங்க எங்கடா இங்க”

“அப்பாக்கு காலையில நெஞ்சு வலி! இங்க தான் அட்மிட் பண்ணியிருக்கோம், மேசிவ் ஹார்ட் அட்டாக், இன்னும் ஒன்னும் சொல்லலை ஐ சீ யு ல இருக்கார்” என்றான்.

முரளியின் கையை ஈஸ்வர் பிடிக்க, அந்தக் கையை இன்னொரு கையால் அழுத்திப் பிடித்தவன் “யாருக்கும் எதுவும் ஆகாது” என்றான்.

அப்போதுதான் ஐஸ்வர்யாவும் அவளின் அம்மாவும் பதட்டமாக வந்தனர், ரஞ்சனி அவர்களிடம் விரைந்தவள், “அண்ணாக்கு ஒன்னும் ஆகாது! வாமிட் பண்ண வெச்சிட்டேன்!” என்றாள் தேறுதலாக.

அவர்களைப் பார்த்ததும் தான் பிரகாசத்தின் ஞாபகம் வர, சுரேஷிற்கு அழைத்தவன், “அவருக்கு ஏதாவது சாப்பிட வாங்கி குடுத்து அனுப்பிடு!” என்று சொல்லி வைத்து விட்டான்.

பிறகு ஒரு சேரில் யாரிடமும் எதுவும் பேசாமல் அமர்ந்து கொண்டான். ரஞ்சனியிடம் பேசி முடித்து வந்த ஐஸ்வர்யா, “எங்க அப்பா எங்கே” என்றாள் ஈஸ்வரை பார்த்து.

“வருவார்”

“நான் தான் அஸ்வின் எங்க இருக்கான்னு பார்த்து சொல்றேன்னு தானே சொன்னேன்! அதுக்குள்ள ஏன் இப்படிப் பண்ணுனீங்க, மாமா ஏன் இப்படி பண்ணினார்? என்ன பண்ணுனீங்க?” என்று பொரிய..

எல்லோரும் அவர்களின் மீது பார்வையை திருப்பினர்.

“அவன் என் அண்ணன் ஞாபகம் இருக்கா? அவனை நான் எதுவும் பண்ண மாட்டேன்! அவனுக்கு எதுவும் ஆகவும் விட மாட்டேன்! உனக்கு இந்த ஐஞ்சு வருஷமா தான் அக்காவோட வீட்டுக்காரர். நான் பொறந்ததுல இருந்து அவனுக்கும் என்னைத் தெரியும்! எனக்கும் அவனைத் தெரியும்!  போ! போய் உட்கார்!” என்றான் கோபமாக.

அந்த பேச்சில் தெரிந்த உஷ்ணம் திரும்ப யாரையும் எந்த கேள்வியும் ஈஸ்வரைப் பார்த்துக் கேட்கவிடவில்லை.

ஒரு அரை மணிநேரம் கழித்து வந்த டாக்டர், “குட் வொர்க் டாக்டர்” என்று ரஞ்சனியைப் பார்த்து சொன்னவர், அவரை உடனே வாமிட் பண்ண வெச்சிட்டதால ஹி இஸ் அவுட் ஆஃப் டேஞ்சர். இன்னைக்கு ஒரு நாள் ஐ சீ யு ல அப்செர்வேஷன்ல இருக்கட்டும், நாளைக்கு மார்னிங் ரூம்க்கு ஷிஃப்ட் பண்ணிட்டு ஈவ்னிங் டிஸ்சார்ஜ் பண்ணலாம்” என்றார்.

“ஒன்னும் அவசரமில்லை டாக்டர்! நல்லா ஆகட்டும்! அப்புறம் நாங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறோம்” என்றார் நமசிவாயம்.

இவர்கள் பேசி முடித்ததும் முரளி தந்தையைப் பற்றிக் கேட்க, கூட பத்மனாபனும் இருந்தான்.  “க்ரிடிகள் சொல்ல முடியாது, நல்லா இருக்கார்ன்னும் சொல்ல முடியாது! ஒரு நாள் ஆகணும்” என்றார்.

“பட் டோன்ட் வொர்ரி! ஹி இஸ் ஸ்டேபிள்!” என்றார் கூடவே.  பின்பு அவர் சென்று விட, முரளி அமர்ந்திருந்த அம்மாவிடமும் அவன் மனைவி ஷாலினியிடமும் சொல்லப் போக, பத்மநாபன் வர்ஷினி எங்கே என்று பார்க்கச் சென்றான்.

பிரணவி அங்கே ஓரே அழுகை, எந்த சமாதானமும் எடுபடவில்லை. சரணும் அப்பாவுக்கு என்ன என்று புரியாத போதும் அப்பாவை அங்கே கொண்டு செல்வதை பார்த்ததும் அழுகை. இரண்டு பேரையும் சமாளிக்க முடியாமல் வீட்டினர் திணறினர். ரூபா இருந்த பதட்டத்தில் சரணுக்கு அடி வேறு வைக்க,

வர்ஷினியாக “நான் பிரணவியை வெளியில வெச்சிட்டு இருக்கேன் அக்கா. நீங்க இவனை பாருங்க, அடிக்காதீங்க! சரியாகிடும்” என்று ரூபாவிடம் சொல்லி பிரணவிக்கு கை நீட்ட,

சரியாகிடும் என்ற அந்த வார்த்தை ரூபாவிற்கு சற்று மன தைரியம் கொடுக்க, ரூபாவும் தயங்காமல் அவளிடம் கொடுத்து விட்டாள். அப்போது இருந்து குழந்தையை வெளியில் வைத்து அதற்கு வேடிக்கைக் காட்டிக் கொண்டு இருந்தாள் வர்ஷினி.

அங்கே வெளியில் தான் தாஸும் நின்று கொண்டிருந்தான். அதனால் யாரும் இதுவரை அவர்களைத் தேடவில்லை.

அப்பாவிடமும் அம்மாவிடமும் சென்ற ஈஸ்வர், “நீங்க வீட்டுக்குப் போங்க! பாட்டி என்னவோ ஏதோன்னு பச்சை தண்ணிக் கூட பல்லுல படாம சாமி முன்னாடி உட்கார்ந்து இருப்பாங்க, போங்கப்பா! இங்க நான் பார்த்துக்கறேன்”

“என்ன? என்ன நீ பார்த்துக்கற? உன்னால தான் எல்லாம்!” என்று நமசிவாயம் அவனிடம் கோபத்தைக் காட்டினார். ஒரு மாதிரி பயந்து போயிருந்தார், ஜகன் இப்படி செய்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் ரூபாவின் நிலை, இந்த இரண்டு குழந்தைகள். அண்ணன் இறந்ததும் அண்ணன் மகனை சொத்துக்காக இவர்கள் ஏதோ செய்து விட்டார்கள் என்று ஊர் உலகம் பேசினால் என்ன செய்வது. இதில் ரூபாவின் அப்பாவை இவன் கடத்தி வைத்திருக்கிறான்.

“நான்? நான் என்ன பண்ணினேன்?”

“அவங்கப்பாவை எதுக்கு இப்படி பண்ணின? ஜகன் இப்ப இப்படி பண்ணிகிட்டான்! என்ன செய்யற நீ?”

“நான் என்னப்பா செஞ்சேன்! எதுவும் பிரச்சனையாகிடக் கூடாதுன்னு தான் நினைக்கிறேன்!”

“முடிஞ்சா பணம் கொடுக்கறோம்! இல்லை என்ன இருக்கோ கொடுத்துட்டு திவால் அறிவிச்சிட்டு போகலாம்! ஜகனுக்கு ஏதாவது ஆச்சு….” என்று அவர் சொல்ல,

“அப்பா! ப்ளீஸ், இது ஹாஸ்பிடல், வீட்டுக்குப் போய் எதுனாலும் பேசிக்கலாம்” என்றாள் ரஞ்சனி.

அப்போது பார்த்து ஜகனின் அக்கா சித்ரா வந்தவள், “என்ன? என்ன  பண்ணுனீங்க அவனை? எதுக்கு இப்படி ஒரு முடிவெடுத்தான்” என்று கோபமாக கேட்க,

“கேட்கறாங்க தானே! பதில் சொல்லு!” என்று அம்மாவும் பேச,

அப்போது பார்த்து ஓய்ந்து களைத்த தோற்றத்துடன் பிரகாசம் வர, அவரைப் பார்த்தவர்கள் “இவருக்கு என்ன பதில் சொல்லப் போற?” என்றனர்.

“நான் என்ன செய்தேன்” என்று கேள்வி பலமாக அவனைத் தாக்கியது, “இவ்வளவு பணத்தை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. நான் கேட்டால் அது தப்பா? திவால் அறிவிப்பாரா? என்ன அநியாயம்?” மனம் கொதித்தது.

“நம்ம கிட்ட பணத்தைப் போட்டவன் எப்படி நாசமாப் போனா எனக்கென்ன, நானும் என் குடும்பமும் நல்லா இருக்கணும்ன்னு நினைக்கறீங்க” என்றான் அப்பாவை பார்த்து.

அவனின் கேள்வியில் அங்கிருந்தவர்கள் ஸ்தம்பித்து நிற்க “நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்று சொன்னவன், முன்னே ரிசப்ஷன் சென்று அங்கே இருந்த வெயிட்டிங் சேரில் அமர்ந்து கொண்டான்.

இந்த நிகழ்வுகளை அங்கிருந்த எல்லோரும் பார்த்திருந்தனர்.  ரஞ்சனி, ரூபா, பெரியம்மா, ஐஸ்வர்யா, அவளின் அம்மா, முரளி, ஷாலினி, கமலம்மா என்று அனைவரும்.

அவன் பின்னே செல்ல பரபரத்த கால்களை, எல்லோரும் இருக்கிறார்கள் என்பதைக் கொண்டு கட்டுப்படுத்தி நின்றாள் ஐஸ்வர்யா.

“நான் என்ன செய்தேன்? செய்கிறேன்?” என்ற கேள்வி மீண்டும் மீண்டும் ஈஸ்வரின் உள் ஓடியது. “இந்தக் கேள்வியே என்னால் தாள முடியவில்லையே! நாளை பணம் போட்டவர்கள் கேட்கும் போது….” ரிசெப்ஷனில் அவன் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தான்.

அப்போதுதான் பத்மநாபன் வர்ஷினியிடம், “பயமில்லை, ஆனா நல்லா இருக்கார்ன்னு சொல்ல முடியாதுன்னு டாக்டர் சொன்னார். ஒன்னும் ஆகாது அப்பாக்கு” என்று தேறுதல் சொல்லி, உள்ளே அழைத்துக் கொண்டு வந்தான்.

வர்ஷினியின் மேலேயே பிரணவி உறங்கியிருந்தாள். இருவரும் ஈஸ்வர் அமர்ந்து இருந்ததை பார்த்தனர்.

எல்லாம் முடிந்த ஒரு தோற்றம்!

ஈஸ்வர் இவர்களை கவனிக்கவில்லை. ஏன் யாரையும் கவனிக்கும் மனநிலையில் அவன் இல்லை. “என்ன அச்சு அண்ணா, ப்ரணவியோட அப்பாவுக்கு” என்று ஈஸ்வர் அமர்ந்திருந்த தோற்றத்தைப் பார்த்ததும் வர்ஷினி கேட்க,

“அவருக்கு ஒன்னுமில்லை! நல்லா இருக்கார்!”

“அப்புறம் ஏன் இப்படி இருக்காங்க” என்று ஈஸ்வரைக் காட்டி வர்ஷினி கவலையாகக் கேட்க,

“தெரியலை, நாம என்ன பண்ண முடியும்! வா! அப்பாவைப் பார்ப்போம்” என்று சொன்ன விதமே, நாம் அவனுடன் பேச வேண்டிய அவசியமில்லை என்று சொல்லாமல் சொன்னது.

“அப்பாவைப் பார்ப்போம்” என்று பத்மநாபன் சொன்னது வர்ஷினியைக் கட்டிப் போட்டது.

ஆனாலும் ஈஸ்வரையேத் திரும்ப திரும்ப பார்த்தவாறு நடந்தாள் வர்ஷினி.

நீ! நான்! நாம்! என்ன நடக்கிறது நமக்குள்! விளக்கம் கொடுக்க முடியாது! இது விளக்கத்திற்கும் அப்பாற்பட்டது!!!

Advertisement