Advertisement

அத்தியாயம் அறுபத்தி ஆறு :

மிகுந்த கோபத்தில் ஆத்திரத்தில் இயலாமையில் ஈஸ்வர் சண்டையிட்டாலும், வார்த்தைகள் எல்லைகளைக் கடந்தாலும்.. வர்ஷினி கத்த கத்த, அவளின் கண்களில் நீர் நிறைய, அதைப் பார்த்து தான் சற்று தணிந்தான்.

ஆனாலும் வர்ஷினியை முறைத்தபடி நின்றிருந்தான்.

திடீரென்று அவன் அமைதியாகிவிட என்ன பேசுவது என்று தெரியாமல் வர்ஷினியும் நிறுத்தி விட்டாள்.

இருவருமே மிகவும் அதிகமாக பேசிவிட்டதை உணர்ந்து அமைதி காத்தனர்.

எப்படி தன் பின்னால் சுற்றி திருமணதிற்கு கட்டாயப்படுத்தி என்னை சம்மதிக்க வைத்து, இப்போது பார்த்திருக்கவே வேண்டாம் என்று ஈஸ்வர் சொன்னது, இன்னும் இன்னும் வர்ஷினியைக் காயப்படுத்தியது. ஒரு உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்தால் அவள். 

“என்னை நீங்க பார்த்திருக்கவே வேண்டாம் தானே, நீங்களே இப்போ அப்படி தானே ஃபீல் பண்றீங்க. அதுக்கு தான் முன்னமே அவ்வளவு தரம் சொன்னேன்” என்றாள் அமைதியாக கண்களில் நீரோடு.. குரல் அமைதியாக இருந்தாலும் மனதில் புயல் தான் அடித்துக் கொண்டிருந்தது.

சண்டையிட்ட வர்ஷினியை எதிர்கொண்டவனால் இந்த வர்ஷினியை எதிர்கொள்ள முடியவில்லை.. அவளின் முகத்தையே பார்த்திருந்தவன் அதில் என்ன இருகிறது என்று படிக்க முயன்று கொண்டிருந்தான்.. அவன் பார்க்க பார்க்க, “நீங்க சொல்ற எல்லாம் நான் கேட்பேன்னு எதிர்பார்க்காதீங்க. எனக்கு அந்த பழக்கம் கிடையாது” என்றவள்,

“இதுக்காக தான் என்னையே நினைச்சு, எனக்காக எல்லாம் செய்யற. என்னை ரொம்ப லவ் பண்ற, என்னை சுத்தி சுத்தி வர்ற லைஃப் பார்ட்னர் வேண்டும்னு சொன்னேன், அவங்க தானே என்னோட மிஸ்டேக்ஸ் அக்சப்ட் பண்ணிவாங்க, அதுதான் நான் அந்த மாதிரி எனக்கொருத்தர் வேணும்னு நினைச்சதுக்கு முக்கிய காரணம். ஆனா அதை அப்போ சொல்லியிருக்க முடியாது”

“ஒரு சிக்ஸ் மந்த்ஸ் உங்களால என்கூட இருக்க முடியலை, உன்னை நான் பார்திருக்கவே வேண்டாம் சொல்றீங்க. நான் கட்டாயத்துல தானே எஸ் சொன்னேன். ஆனா நீங்க அப்படி இல்லையே. அதுக்கு தானே சொன்னேன், நமக்கு சரிவராதுன்னு”

“நான் முன்னமே ரஞ்சனி அண்ணிக்காக உங்க கிட்ட ஒரு முறை பேசின போது நீ ஃபாமிலி செட் அப்ல வளரலை. உனக்கு இதெல்லாம் தெரியாது, உன் வேலையைப் பார்த்துட்டு போ சொன்னீங்க. அதுவும் சாதாரணமா இல்லை, கோபமா கூட சொல்லலை, ரொம்ப அலட்சியமா சொன்னீங்க”

“எஸ், நான் குடும்ப அமைப்புல வளரலை. அதனால் நீங்க என்கிட்டே அதை புரிய வைக்க நினைக்கறது வேஸ்ட்.. எனக்கு புரிஞ்சிக்கணும்னு இல்லவே இல்லை” கண்களில் நீரோடு சொன்னவள் பாத்ரூமின் உள் புகுந்து கொண்டாள்.

புகுந்தவளுக்கு அழுகை நிறுத்தவே முடியவில்லை, அங்கேயே அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.

ஈஸ்வருக்கு அவள் பேசிய வார்த்தைகளின் வீரியம் அவனுள் இறங்கவே சிறிது நேரம் பிடித்தது…

அப்படியே அமர்ந்து விட்டான். நூற்றுக்கு நூறு உண்மை தானே! மணந்து கொள்ள வருடத்திற்கும் மேல் போராடி, ஆறு மாதத்திற்குள் உன்னை நான் பார்க்காமலேயே இருந்து இருக்கலாம் என்று சொல்வது.. அவனின் பேச்சை அவனாலேயே சகிக்க முடியவில்லை..

“ஆம்! சொன்னதை எல்லாம் செய்தாலே, கேட்டாளே! திருமணதிற்கு பின் எதற்கும் மறுத்துப் பேசவேயில்லை! என்னுடைய சுயநலம், என் சுய ஆராய்ச்சி, என்னுடைய பிரச்சனைகள், எல்லாம் கொண்டு அவளிடம் இருந்து விலகி நானாக அவளை விலக வைத்து விட்டேன்” இனி என்ன செய்வது என்று சிறிதும் தெரியவில்லை..

மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது.. அதையும் விட “எப்படி அவளின் பின்னால் சுற்றினாய், சம்மதம் சொல்லி விட மாட்டாளா என தவித்தாய், அவளைப் பார்த்தவுடனே தறிகெட்டு ஓடின சிந்தனைகள்.. எல்லாம் எப்படி மறந்தாய்.. அதையும் விட அவளிடம் நீ ரஞ்சனியின் வரவேற்பு அன்று எப்படி நடந்தாய்” அவனுள் இருந்த ஒரு நியாயமான மனது மாறி மாறி கேள்வியால் துளைக்க..

ஈஸ்வர் சோஃபாவில் உலக நினைப்புகள் மறந்து அவனை நினைத்து அவனே கோபம் கொண்டு அமர்ந்திருக்க..

அங்கே ஒரு பெண் குளியலறையின் ஈரத்தில் அமர்ந்து கால்களுக்குள் முகத்தை பதித்து அவளை அவளே பார்க்க விருப்பமற்று ஓயாது அழுது கொண்டிருந்தாள்..

வெகு நேரம் கழித்து சுய நினைவு வரப் பெற்ற ஈஸ்வர் எங்கே வர்ஷினி என்று தேட.. இன்னும் குளியலறைக் கதவு திறக்காமல் இருக்க, “வர்ஷி என்ன பண்றே?” என்று வேகமாகக் கதவை தட்டினான்.

மனதில் ஏதேதோ எண்ணங்கள், இப்படி தானே அன்றும் கதவை தட்டினான். ஆம்! அவன் தவறிழைத்த அன்று மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய அன்றும் இப்படி தான் குளியலறையின் உள் வர்ஷினி புகுந்து கொண்டது ஞாபகம் வந்தது..

“வர்ஷி” என பலமாகத் தட்ட.. திறக்கும் வழியாய்க் காணோம்.. மனம் பயந்து போனது … ஆனாலும் எதுவும் முட்டாள் தனமாய் எல்லாம் செய்ய மாட்டாள் என்ற நம்பிக்கையும் கூட.. கதவை கால்களால் பலம் கொண்ட மட்டும் எட்டி உதைக்க ஆரம்பித்தான். 

மரக் கதவு தான், ஆனால் தாழ்ப்பாள் அவ்வளவு வலிமை இல்லை, கட்டிய பிறகு வாங்கின அபார்ட்மென்ட் தானே.. அவள் கீழ் தாழ்ப்பாள் மட்டும் போட்டிருக்க, தட்டிய தட்டலில் தாழ் உடைந்து கதவு திறக்க..

உள்ளே போய் தடுமாறி நின்றான்.

அந்தக் குளியலறையின் ஒரு மூலையில் அவள் அழுதபடி அமர்ந்திருந்த விதம்.. நெஞ்சை உறையத் தான் வைத்தது..

“எழுந்து வா வர்ஷி” என்று அவன் அருகில் செல்ல..

“இல்லையில்லை, வரமாட்டேன், நீங்க போங்க போங்க.. எனக்கு எதுவுமே தெரியலை போல.. நான் தான் தப்பு போல, என்னால யாரோடையும் இருக்க முடியாது போல.. நீங்க சொன்ன மாதிரி கணவன் மனைவின்னா இப்படி தான் இருக்குமோ, வீடுன்னா சண்டை சச்சரவு இருக்குமோ.. எனக்கு தெரியலை”

“கல்யாணமாகி ஒரு பதினைஞ்சு நாள் தான் உடளவுல கூட சேர்ந்து இருந்தோம். அப்புறம் அதுவும் எதுவும் இல்லை. இப்படி கணவன்னா அவங்க இஷ்டமான போது தான் வருவாங்களோ.. தேவையானதை எல்லாம் செய்ய வைப்பாங்களோ” பேச பேச உறைந்தான். அவள் சொல்லும் அர்த்தம்?

“அதெல்லாம் நான் யோசிக்கறேன், நான் தான் தப்போ.. இப்போ வந்து நீ என்னை பக்கத்துல விட மாட்டேங்கறன்னு சொல்றீங்க. ஆனா இவ்வளவு நாளா நீங்க வரவேயில்லை. அப்போ நீங்க எப்போ வந்தாலும் நான் எஸ் சொல்லணுமா.. இப்படித் தான் இருக்குமா?”

“நீங்களே வீட்டை விட்டு கூட்டிட்டு வந்துட்டீங்க. இப்போ அந்த வீட்டோடையும் ஃபிரண்ட் ஆகிடீங்க, இந்த வீட்டோடையும் ஆகிடீங்க. எல்லார் கூடவும் சண்டை போட்டீங்க. இப்போ நல்லா பேசறீங்க. என்கிட்டயும் அப்படி தான் யோசிச்சு யோசிச்சு பேசினீங்க. இப்போ நல்லா பேசறீங்க”

“நான் யாரோடையும் சண்டை போடலை, ஆனா நான்.. என்னால… அப்படி முடியாது.. சொன்னா நான் தப்பு சொல்றீங்க! நிஜமாவே நான் தான் தப்பா எனக்குத் தெரியலை! தெரியலை!” என்று வார்த்தைகள் வேகமாக வந்து விழ கூடவே தேம்பி தேம்பி அழ..

ஈஸ்வருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.. “இல்லை, நீ தப்பு இல்லை, நான் தான்” என்றவன், “வர்ஷ் முதல்ல எழுந்துரு” என்று அருகில் போக, “வராத, வராத, எனக்கு நீ வேண்டாம். எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை. எனக்கு யாரையும் பார்க்கப் பிடிக்கலை. எனக்கு வாழவே பிடிக்கலை.. எவ்வளவு தனியா இருந்த போதும் செத்துப் போகணும்னு நினைச்சது இல்லை. இப்போ அப்படி தான் தோணுது” என வர்ஷினி சொல்ல துடித்து தான் போய்விட்டான்.

“எல்லாம் உன்னால்” என அவள் சொல்வது என்ன? அவனுக்கே புரிந்தது எல்லாம் தன் தவறு என     

“வர்ஷி, நீ எப்படி சொல்றயோ அப்படி செய்யலாம். நான் எதுக்கும் உன்னை கம்பல் பண்ண மாட்டேன். நாம அங்க வீட்டுக்குப் போக வேண்டாம், இங்கேயே இருப்போம். நீ எழுந்து வெளில வா முதல்ல” என கெஞ்சினான்.

ஆனாலும் வர்ஷினி அசையவேயில்லை, பேசிக் கொண்டே போனாள், “எனக்கு தான் என்ன பண்றதுன்னே தெரியலையே. அப்புறம் நான் என்ன சொல்வேன். எனக்கு நிஜமாவே தெரியலை, இப்படி தான் மேரேஜ் லைஃப் இருக்குமா.. என் ஹாஸ்டல்ல கூட சந்தோஷமா இருந்தேன், என்னைக்கு உங்களை முரளிண்ணா கல்யாணத்துல பார்த்தேனோ அன்னைக்கு இருந்து என்னோட சந்தோஷம் போச்சு.. நிம்மதி போச்சு.. என்னோட மனசு அமைதியாவே இல்லை.. உங்களோட நடத்தையால எனக்குள்ள ஒரு  தாழ்வு மனப்பான்மை வந்துடுச்சு. அது வளர்ந்துட்டேப் போகுது. என்னால அதுல இருந்து வெளில வரவே முடியலை!”  

“ஏதேதோ நினைக்கத் தோணுது! லவ் லைஃப் இப்படித் தான் இருக்குமா.. எனக்குத் தெரியலை. நான் ரொம்ப யோசிச்சேன், எனக்குத் தோணுது…..” என்று அவள் சொன்ன வார்த்தை..

அதோடு நிறுத்தாமல் அவள் பேசிக் கொண்டே போக.. அவளின் உணர்வுகளின் வெளிப்பாடு “அம்மா!” அவனால் தாங்கவே முடியவில்லை.   

“வர்ஷ்” என்றவனால் மேலே பேச முடியவில்லை, தலை சுற்ற ஆரம்பித்தது. விழாமல் இருக்க சுவரை பிடித்துக் கொண்டான்..     

“எங்க கத்துக்கிட்ட இந்த வார்த்தை எல்லாம் நீ” என நெஞ்சு பதைக்க கேட்டவனிடம்..

“நீதானே எல்லாம் எனக்குக் கத்துக் கொடுத்த.. நீதானே அப்படி தோன வெச்சே, உன்னால தானே!” என தேம்பியபடி அவள் சொல்ல..

இல்லை, இல்லை, அவனால் முடியவில்லை. ஒரு கோபம், ஒரு ஆவேசம், ஒரு ஆக்ரோஷம்.. தன்னையே எரித்துக் கொள்ள வேண்டும் போல ஒரு உணர்வு.. அங்கிருந்த சுவரில் அவனின் தலையை அவனே பலமாய் மோதிக் கொண்டான்.. 

அதைப் பார்த்து அதிர்ந்து பயந்தவள்.. அதிர்ச்சியில் மயங்க ஆரம்பித்தாள்.   

பலமாய்.. மிகவும் பலமாய்.. வலியில் அவனே சரிந்து அமர்ந்தான். அந்த இடத்தைத் தொட்டு பார்க்க, ரத்தம் எதுவும் வரவில்லை, ஏன் வரவில்லை? என்று மீண்டும் இடித்துக் கொள்ளப் போனவன்.. வர்ஷினியை பார்க்க..

மயங்கி இருந்தாள்.. விரைந்து அருகில் செல்ல..

அவனுக்குமே மிகவும் வலி.. சென்று அவளிடம் அமர்ந்தவனால் அவளைத் தூக்க முடியவில்லை.. முற்றிலுமாய் பலம் இழந்திருந்தான்.. மனதிலும் சரி, உடலிலும் சரி.. கண்களில் நீர் நிறைந்தது. 

“வர்ஷி” என தட்டித் தட்டி எழுப்ப, எழுவதாய்க் காணோம்.. அப்படியே அமர்ந்துவிட்டான்.

புலன்கள் அனைத்தும் செயலிழந்து விட்டன.. அவள் சொன்ன வார்த்தை நிஜமாய் அவனின் புலன்கள் அனைத்தையும் மழுங்கச் செய்திருந்தது.

“உன்னுடைய உணர்வுகளுக்கு வடிகால் கொடுத்த பெண்ணிற்கு, இல்லையில்லை பெண் இல்லை, உன் மனைவிக்கு நீ கொடுத்த உணர்வு இதுதானா? இந்த திருமணத்தில் நீ அவளுக்கு கொடுத்தது இதுதானா.. நீ செய்ததை யாரவது ஒருவரிடம் அவள் சொல்லியிருந்தால் கூட இந்த திருமணம் நடந்திருக்காது! அதையும் விட எல்லோரும் உன்னை எப்படிப் பார்த்திருப்பர், அதையும் விட அவளின் அப்பா உன்னை விட்டிருப்பாரா?”

“எவ்வளவு கர்வம் உன்னிடம்? என்னவோ அவளுக்கு சிறந்த வாழ்க்கை கொடுத்த மாதிரி. கமலம்மா நிலை வராது என்று எவ்வளவு இறுமாப்பாய் எப்படி எல்லோரிடமும் சொன்னாய்? ஆனால் நீ கொடுத்தது என்ன.. அவள் உன்னை காதலிக்கிறாள் இல்லை வேறு, ஆனால் உன்னுடைய காதல், ஈர்ப்பு எதுவும் நீ அவளிடம் சரியாக பிரதிபலிக்கவில்லை.. அதையும் விட அவளும் உன்னைக் காதலிக்கவேண்டும் என்று நினைக்கவில்லை?” ஆண்கள் அழ மாட்டார்கள் என்று யார் சொன்னது.. கண்களில் இருந்து நீர் இறங்க அவளைப் பார்த்து இருந்தான். 

“சாதாரண ஒரு பெண் இந்த வார்த்தையை சொன்னால் கூட முகம் சுளிப்பவன் நீ.. இன்று உன் மனைவி, உன்னிடம் அதை சொல்கிறாள்.. இப்படி நீ உயிரோடு இருக்க வேண்டியதே இல்லை” என்று மனம் அவனை அடிக்க..

“இல்லை, என்னால் முடியாது, என்னால் இறக்க முடியாது, நான் இருக்க வேண்டும்! நான் வாழ வேண்டும்! இவளுக்காக, இவளுக்காக..? இவளைத் தனியே விட்டு என்னால் போக முடியாது” என மனம் போராட ஆரம்பிக்க.. கூட அவள் பேசியது மனதினில் ஓட..    

அவள் சொன்ன வார்த்தை.. “எனக்குத் தோணுது நீங்க என்னை செக்ஸ் வொர்கர் மாதிரி ட்ரீட் பண்ணறிங்களோ.. என்னை ஹக் பண்ணு சொன்னீங்க.. கிஸ் பண்ணு சொன்னீங்க.. நீ சொன்ன எல்லாம் தானே செஞ்சேன்.. ஆனாலும் திரும்ப நீங்க.. எனக்கு சொல்லத் தெரியலை. எனக்கு நீங்க வேணும்னு நிறைய முறை ஃபீல் பண்ணினேன், ஆனா நீங்க என் பக்கத்துல வரவேயில்லை”

“நல்ல பொண்ணுங்க எல்லாம் இப்படி நினைக்க மாட்டாங்களா? அப்போ நான் கெட்டப் பொண்ணா? எனக்கேத் தெரியலை! நான் தப்பா? ரொம்ப அசிங்கமா ஃபீல் பண்றேன்”  என அவள் பேசிய வார்த்தைகள் உச்சந்தலையில் மீண்டும் மீண்டும் சுத்தியலாய் அடிக்க..     

ஆம்! ஒரு பெண்ணிடம் அவனின் தடுமாற்றம் எப்படி அவனை அவளுக்கு உணர்த்தியிருக்கிறது.. அந்த வார்த்தைகளின் வீரியம், அவன் செய்த தவறு.. அவனுமே மயங்கினான்!

குளியறையில் இருவரும் அருகருகில்.. கை கொட்டி சிரித்தது வாழ்க்கை ஈஸ்வர் எனும் மனிதனை நோக்கி..    

 

Advertisement