Advertisement

அத்தியாயம் ஆறு :

பார்வை மாற்றங்கள் எப்போதும்                                                        பரிமாற்றங்கள் ஆவதில்லை!!!

வர்ஷினி ஆர்வத்தோடு காரில் ஏறி அமர்ந்தாள்,

அவளையே ஈஸ்வர் பார்த்திருக்க, அவனின் எண்ணம், பார்வை ஓடும் திசை புரியாமல், “Cheers வாழ்க்கையில தீர்க்க முடியாத பிரச்சனைன்னு எதுவும் கிடையாது”

தான் இவளைப் பார்க்கும் பார்வை என்ன? இவள் எனக்கு சொல்லும் தேறுதல் என்ன? சற்று குற்ற உணர்சியாகியது.

அதை மாற்ற “உனக்கு நிஜமா ஓட்டத் தெரியுமா” என்றான் திரும்பவும் ஈஸ்வர்.

“தெரியும், நான் பொய் சொல்ல மாட்டேன்” என்றாள் முகத்தை சுருக்கி “நீ ஏன் நம்பவில்லை” என்ற பாவனையில்.

அவள் சொன்ன விதம் ஒரு பிடிவாதத்தைக் காட்டியது,

“அவ்வளவு நல்ல பழக்கமா?” என்றான்

“ப்ச், அப்படி எல்லாம் இல்லை. பொய் சொன்னா ஞாபகம் வைக்கறது கஷ்டம், அப்புறம் தெரியாம தடுமாறணும், திரும்ப பொய் சொல்லணும், ஒன்னு மேல ஒன்னு வளர்ந்துட்டே போகும். இப்படிப் பல கஷ்டம், அதுக்கு உண்மையை பேசுணம்னா ஓரே கஷ்டம் தான்”

“அப்போ அதனால தான் பொய் சொல்ல மாட்டியா அது தப்புன்னு இல்லையா” என்றான் ஈஸ்வர் அழ்ந்த குரலில்.

“தப்பு சரின்றது அந்த அந்த சூழ்நிலையைப் பொருத்தது, நம்ம தப்பு நினைக்கறது சிலருக்கு சரியா படும், ஒரு பொய் சொல்றதுனால சில நன்மை விளையும்னா சொல்லலாம் இப்படி நிறைய இருக்கு, அதுவே அடுத்தவங்களை ஏமாத்த சொல்றோம்னா அது ரொம்ப தப்பு”.

மிகவும் அறிவு சார்ந்த பேச்சு அவளின் வயதோடு ஒட்டாத பேச்சு.

“நல்லா பேசற, ஆனா முரளி என்கிட்டே நீ அதிகம் பேச மாட்டேன்னு சொன்னான்” என்று சொல்லி விட்டப் பிறகு, ப்ச் சொல்லியிருக்க வேண்டாமோ என்று தோன்றியது. தாங்கள் அவளைப் பற்றி பேசியிருக்கிறோம் என்று தெரிய வேண்டிய அவசியம் என்ன.

அவளின் முகத்தை அவசரமாக பார்க்க, அதில் இருந்து ஒன்றும் தெரியவில்லை… “ஓஹ் நிறையப் பேசறனா? என்ன பேசறேன்?” என்று கேட்டவள், அவள் பேசிய விதத்தை ஆராய்ந்து மனதினில் ஓட்டினாள் ஏதாவது நிறைய பேசிட்டோமா என்பதுப் போல, அதில் அப்படியே திரும்ப அமைதியானவள் இப்போது போவதா? வேண்டாமா? சரியாகச் செய்கிறோமா? என்று அவனை திரும்பப் பார்த்தாள், அந்த நீல நிறக் கண்களில் ஒரு கலக்கம்

“தப்பா எதுவும் சொன்னதில்லை, கம்மியா பேசுவான்னு சொல்லியிருக்கான் அவ்வளவு தான்”

“அண்ணா எதுக்கு தப்பாப் பேசுவார். என்ன தப்பு என்கிட்டே இருக்கு” என்றாள் கூடவே,

“ஊப்ஸ், வாய் வார்த்தையாகக் கூட அர்த்தமில்லாத வார்த்தைகளை இவளிடம் பேச முடியாது” என்று நொடியில் ஈஸ்வருக்கு புரிந்தது.

எந்த பூச்சு மின்றி “அப்புறம் நீ கம்மியா பேசுவேன்னு முரளி சொன்னான்னு சொன்னதுக்கு எதுக்கு அப்செட் ஆன”

“அப்செட் ஆகலை, இப்ப என்ன அதிகமா பேசினேன்னு யோசிச்சேன்! ஜஸ்ட் ஒரு ஸெல்ப் அனாலிசிஸ்”

அதற்குள் வேலு இவள் காரில் அமர்ந்திருப்பதைப் பார்த்து “அம்மா எங்க போறீங்க” என்று ஓடி வந்தான்.

“அய்யோ வேலுண்ணா, என்னை அம்மா கூப்பிடாதீங்க”

“எங்கம்மா போறீங்க” என்றான் பாவமாக.

“இவர் கால்ல இடிச்சிக்கிட்டார். நான் வீட்ல விடப் போறேன்”

அவரின் முகத்தில் பதட்டம் ஏறியது. “உங்களை பத்திரமா பார்த்துக்க சொல்லியிருக்காங்கம்மா. ஏதாவது தப்பாச்சுன்னா என்னைக் கட்டி வெச்சு அடிப்பாரு அய்யா” என்றார் பரிதாபமாக.

“என்ன தப்பாகும்” என்றாள்.

மெலிலிய சிரிப்பு ஈஸ்வர் முகத்தினில்,

“நீங்க எப்படித் திரும்ப வருவீங்க”

“ஆட்டோ இல்லைன்னா டேக்ஸி”

“என்ன ஆட்டோ இல்லைன்னா தேக்ஸியா. எனக்கு மயக்கமே வருது. தனியா வருவீங்களா, அது தான் தப்பாகும்” என்று அவர் சொல்லும் போதே.

தட தட வென்று ஒரு புல்லட் சத்தம், “அச்சோ தாசண்ணா” என்று கன்னத்தில் கை வைத்தாள் வர்ஷினி. ஹப்பாடா என்று வேலு முகத்தில் ஒரு விடுதலை உணர்வு.

அந்த புல்லட்டின் சத்தம் தாஸ்சினுடையது, தாஸ் வர்ஷினியின் அப்பா ராஜாராமின் வலது இடது என்று எல்லா கரமும்.

சில முறை பார்த்திருக்கிறான் ஈஸ்வர், முரளியின் தோழன் என்பதால் மரியாதையாக தாஸ் வணக்கம் வைப்பான். நாற்பது வயதை தொட இருப்பவன். ஈஸ்வருக்கு எப்போதும் சற்று திமிர் என்பதால் சகஜமாக பேசமாட்டான். ஒரு அடியாளிடம் தான் சகஜமாக பேசுவதா என்ற இறுமாப்பு.

தாஸ் வந்தவன் புல்லட்டை நிறுத்தி வந்தான்,

“தாஸு அம்மா பாரு, இவரைக் கொண்டு போய் விடுவேன்னு அடைமா நிக்கறாங்க”

“போகட்டும்! என்ன இப்போ?”

“அய்யா திட்டுவாரு! நீ கொண்டு போய் விடு!”

“தாஸண்ணா என்னை வெளில விடாம வீடுக்குள்ள அடைச்சி வைக்கிறாங்க. நான் இப்ப கொண்டு போய் விட்டா என்ன தப்பு! இவர் நமக்கு தெரிஞ்சவங்க தானே! அதுவுமில்லாம நான் தனியா உலகத்தை சந்திக்க வேண்டாமா! எப்பவும் யாராவது நான் என்ன செய்யறேன்னு பார்த்துகிட்டு இருப்பீங்களா. நான் என்ன சின்ன குழந்தையா”

வரும் போதே ஈஸ்வரை பார்த்துவிட்டான் தாஸ். இவனுடன் காரில் வர்ஷினி என்ன செய்கிறாள் என்று யோசித்த போதும் பயமொன்றுமில்லை. அவனுக்கு ஈஸ்வரை நன்கு தெரியும். முரளி எப்படியோ அப்படிதான் ஈஸ்வர் என்பது போல. ஈஸ்வருக்கு எல்லோரிடமும் மிகவும் நல்ல பெயர் தான்.

எந்த புற்றில் எந்த பாம்பு என்று தாஸ் அறியான். அனால் அறிந்து விட்டால்?????

“நீங்க ஏன் கொண்டு போய் விடறீங்க”

“இவர் முரளின்னாவைப் பார்க்க வந்தார், கால்ல இடிச்சிக்கிட்டார்  நான் கொண்டுப் போய் விடறேன்னு சொன்னேன். இவர் வேண்டாம்ன்னு சாவி தரவே இல்லை. நான் நல்லா கார் ஓட்டுவேன்னு இப்ப தான் வாங்கினேன். அதுக்குள்ள வேலண்ணா பயப்படறார்”

“எதுக்கு வேலு பயம். சார் நமக்கு தெரிஞ்சவர். நம்ம முரளி சார் போல தான். பாப்பா போகட்டும். தாஸ் இருக்குறவரைக்கும் பாப்பாக்கு எந்த பயமும் கிடையாது” என்று சொன்னான்.

“அதில்லை திரும்ப எப்படி வருவாங்க, தனியா வரணுமேன்னு” என்று வேலு இழுக்க…

“எவனாவது தப்பா பார்த்தாக் கூட கண்ணை நோண்டி காக்கைக்கு போட்டுடுவேன்”

அந்தக் குரல்… அதில் தெரிந்த உறுதி… ஈஸ்வரை என்ன என்பது போலப் பார்க்க வைத்தது,

“ஹ, ஹ, தாஸண்ணா” என்று கல கல வென சிரித்த வர்ஷினி, “அப்படியே விஜயகாந்த் மாதிரி பேசறீங்க”

தாஸை ஆராய்ந்தான் ஈஸ்வர், ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில், கருமை நிறத்தோடு, எதிராளியை அடித்து என்ன, பார்வையிலேயே வீழ்த்தி விடுபவன் போல இருந்தான்.

வர்ஷினியின் கிண்டலை பற்றிக் கவலைப்படாமல் “அடி பலமா சார்” என்றான் ஈஸ்வரைப் பார்த்து.

“இல்லை, ஆனா சொன்னாக் கேட்க மாட்டேங்கறா. நான் ஓட்டுறேன்னு சொல்றா” என்றவன், “நீ இறங்கிக்கோ தாஸ் ஓட்டட்டும்” என்று சொல்ல,

வர்ஷினியின் முகம் சுருங்கியது. வேகமாக இறங்கப் போக,

“இருக்கட்டும் சார்! அம்மா ஆசைப் படறாங்க இருக்கட்டும். உங்களுக்கு ஆட்சேபனையில்லைன்னா நான் பின்னாடி உட்காரவா” என்றான்.

Varshini is sealed and completely protected என்று தோன்றியது ஈஸ்வருக்கு. அவளின் அருகில் இருந்து விலகினால் போதும் என்று தோன்றியது. அவளின் ஈர்ப்பு அதிகமா இருந்தது, கழுத்தை இறுக்கிப் பிடிக்கும் பிரச்சனைக் கூட கவனத்தில் வராத அளவிற்கு.

“ம் சரி” என்று தலையாட்ட, “தேங்க்ஸ் தாஸண்ணா” என்று வர்ஷினி தாஸைப் பார்த்து மலர்ந்து சிரித்த புன்னகை, “wow beauty” என்று தோன்ற,

“என்ன செய்துக் கொண்டிருக்கிறேன் நான்”. எதிரில் இருந்த காரின் கண்ணாடியில் அவனின் மண்டையை அவனே உடைத்துக் கொள்ள வேண்டும் போல ஒரு ஆவேசம் தோன்றியது,

“போகலாம்” என்றான்.

காரை ஸ்டார்ட் செய்து வெளியே வரும் சமயம், “எங்கேப் போகணும்” என்றாள்.

“உனக்குச் சென்னைத் தெரியுமா”

“தாஸண்ணா என்ன ஒரு இன்சல்ட் வர்ஷினிக்குப் பார்த்தீங்களா” என்று தாஸைப் பேச்சில் இழுத்தாள்.

“நீங்க சொல்லுங்க சார்” என்று தாஸ் சொல்ல,

“மவுண்ட் ரோடு, அங்க தான் எங்க ஆபிஸ் இருக்கு”

“ஓகே, அப்போ அங்கே போய் கேட்டுக்கறேன்” என்றவள், சென்னையின் போக்குவரத்தில் இயல்பாகக் காரை செலுத்தினாள். பார்வையை அவளிடம் இருந்து கட்டாயமாக விலக்கி, கண்களை மூடிக் கொண்டான்.

“இவளை மற”, என்று மனதிற்குக் கட்டளையிட்டு, ஒரு நிலைப் படுத்தி இருக்கும் பிரச்சனையை முன் நிறுத்தினான்.

ஒரு வேலை பணம் வரவில்லை என்றால் என்ன செய்வது அடுத்த கட்டம் என்று யோசிக்க ஆரம்பித்தான். இதை யோசிக்க பயமாக இருந்த போதும் யோசித்து தானே ஆக வேண்டும். இதை நீ எதிர் கொள்ள வேண்டும் என்று மனதை நிலைப்படுத்த ஆரம்பித்தான்.

இதில் யாரும் எதுவும் செய்ய முடியாது. நான் மட்டுமே செய்ய வேண்டும். என்ன செய்வது என்ற யோசனை. என்ன? என்ன? சொத்துக்கள் இருக்கிறது தங்களிடம், அதை ஏதாவது செய்ய முடியுமா, இதெல்லாம் யோசிக்கும் போதே மவுண்ட் ரோடு வந்திருந்தது.

எங்கே ஆபிஸ் என்பதை கேட்க அவள் ஈஸ்வரைப் பார்க்க அவன் கண்மூடி தான் அமர்ந்திருந்தான்.

தாஸும் அதைப் பார்த்திருந்தவன் வர்ஷினியிடம் அவனே வழி காட்டினான். அவர்கள் அலுவலகம் நுழைந்த போது மணி ஒன்பதரை தான் ஆகியிருந்தது. அலுவலகம் பத்து மணிக்கு தான் முழுவதுமாக இயங்க துவங்கும்,

இந்த நேரத்தில் எம் டீ யின் கார் நுழைவதை பார்த்தவர்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தவர்கள் வேகமாக அலுவலகம் உள் நுழைந்தனர்.

படியேறும் வாயிலில் காரை நிறுத்தியவள், தாஸிற்கு கண்ஜாடை காட்டினாள், பிறகு அவளும் இறங்கினாள். அது கூட ஈஸ்வர்க்கு தெரியவில்லை. தாஸ் இறங்கி, அவன் புறக் கார் கதவை திறந்து, “சார்” என்று அழைக்கவும் தான் கண்திறந்தவன், தாஸ் கார் கதவை பிடித்து நிற்கவும், வர்ஷினி எங்கே என்பது போலப் பார்க்க,

“பாப்பா இங்க நிக்கறாங்க” என்று தாஸ் சொல்ல இறங்கினான்,

“நீங்க எப்படிப் போவீங்க” என்று கேட்டபடி இறங்கினான்.

“அதானே நாம எப்படிப் போவோம் தாஸண்ணா” என்று வர்ஷினி கேட்கும் போதே ஈஸ்வரின் கவனம் சிதறியது. தங்களின் ஆபிஸ் வாயிலைப் பார்த்து, அங்கே ஐஸ்வர்யா நின்றுக் கொண்டிருந்தாள்.

முகமெல்லாம் வாடி, இவனையே ஏக்கமா பார்த்து நின்றிருந்தாள், பார்த்ததும் ஒரே நிமிஷம் என்று தாஸிடம் சொல்லி விரைந்தான், “ஐஷ் இங்க என்ன பண்ற”

“என்ன பிரச்சனை? என்ன ஆச்சு?” என்று முகம் முழுக்க தவிப்போடு அவள் கேட்க,

“ப்ச்” என்றவன், “வா, அவங்க வெயிட் பண்றாங்க” என்று தாஸையும் வர்ஷினியையும் காட்டினான்.

“யார் அவங்க?”

“அது என் ஃபிரண்ட் முரளி தங்கை, அவன் அவங்க கிட்ட வேலை செய்யறவன்”.

“ப்ளீஸ், என்னால யாரையும் இப்பப் பார்த்து பேச முடியாது” என்றாள். பின்னொரு நாளில் பார்த்திருக்கலாமோ வர்ஷினியை என்று எண்ணி எண்ணித் தான் வருந்தப் போவதை அறியாமல்.

அவனின் கேபின் சாவியை எடுத்துக் கொடுத்தவன் “போ, என் ரூம்ல வெயிட் பண்ணு” என்று அவளை அனுப்பி வந்தான்.

“என் ரூம் கீ கொடுக்கப் போனேன்” என்று மட்டும் சொன்னான், யார் என்ன என்று சொல்லவில்லை, ஐஸ்வர்யா அவனுடன் வர்ஷினியைப் பார்க்க வந்திருந்தாள், ஃபிரண்ட் என்றோ இல்லை உறவினள் என்றோ அறிமுகம் செய்திருப்பான். இப்போது என்ன சொல்லி செய்வான்.

வர்ஷினியோ தாஸோ ஐஸ்வர்யாவைக் கவனிக்கவில்லை, ஈஸ்வர் விலகியதும் “நான் எப்படிக் கார் ஓட்டினேன்” என்று தாஸிடம் வர்ஷினி பேசிக் கொண்டிருந்ததால் இருவருமே ஐஸ்வர்யாவைக் கவனிக்கவில்லை.

“தாஸ், நீங்க கார் எடுத்துகிட்டு போங்க, அப்புறம் கொண்டு வந்து விடுங்க” என்றவன், “தேங்க்யு” என்றான் பொதுவாக வர்ஷினியைப் பார்த்து,

“இட்ஸ் மை ப்ளஷர்” என்றவள் தாஸிடம் திரும்பி, “நான் தான் கார் ஓட்டுவேன்” என்று சொல்லி டிரைவர் சீட்டில் அமர்ந்தாள்.

“அம்மா, உங்களோட” என்று பெருமையாக சலித்து, பின்புறம் ஏறி  அமர்ந்தான்.

“என்ன தாஸ்? சின்ன பொண்ணு, வயசான மாதிரி அம்மா கூப்பிடறீங்க” என்று ஈஸ்வர் சொல்ல,

“சம்பளம் கொடுக்கற முதலாளி அம்மா சார், எங்க அய்யாவுக்கே இவங்க தான் முதலாளி” என்று தாஸ் பெருமை பேச, இந்த வார்த்தைகளினால் வர்ஷினியின் வாழ்க்கையை சிக்கலில் மாட்டி விடப் போகிறோம் என்று தாஸ் அறியவில்லை.

“அய்யான்னா முரளியையும் பத்மநாபனையும் சொல்றீங்களா”

“எங்க பெரியய்யாவை சொன்னேன் சார்” என்றான்.

“என்னது பெரியய்யாவா” என்ற ஆச்சர்யம் மனதினில் ஓடியது, அவன் ராஜாராமை சொல்கிறான் என்று புரிந்தது.

அதற்குள் “நான் எப்படி ஓட்டினேன்னு நீங்க சொல்லவேயில்லை”

“சாரி, கவனிக்கலை”

“இட்ஸ் ஓகே! தீர்க்க முடியாத பிரச்சனைன்னு எதுவும் இல்லை!” என்று சொல்லி, ஈஸ்வரிடம் தலையசைத்தவள் லாவகமாகக் காரைத் திருப்பி வெளியே செல்ல, அப்போதுதான் ஊன்றி கவனித்தான், வர்ஷினி நன்றாகக் கார் ஓட்டுவதை.

பலமுறை ரஞ்சனி கேட்டிருக்கிறாள் “டேய் அண்ணா, நான் ஓட்டுறேன் நீ உட்காரு” என்பது போல, எப்போதும் அனுமதித்தது இல்லை, இதற்கு அப்படி ஒன்றும் வலி இல்லை, இடித்த நேரம் வலித்தது அவ்வளவே. இல்லை வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்திருக்கலாம் முடியவில்லை.

அவனுடைய காரை யாருக்கும் கொடுத்தது இல்லை.

தன்னுடைய கேபின் நோக்கி சென்றான், இவனைப் பார்த்தும் “என்ன பிரச்சனை” என்றாள் ஐஸ்வர்யா மீண்டும்,

“உன் அண்ணன் நிறையப் பணம் ஜகன் கிட்ட வாங்கியிருக்கான், இப்ப அவனைக் காணோம், எங்க இருக்கான்னு தெரியலை. உங்கப்பா கேட்டா அலட்சியமா பதில் சொல்றார். என்ன நடக்குதுன்னே தெரியலை”

“நம்மளால சமாளிக்க முடியாத பணமா”

“ஆம்” என்பது போலத் தலையசைத்தான், கூடவே “அஷ்வின் எங்க இருக்கான்னு ட்ரேஸ் பண்ண முடியுமா? பணத்தை என்ன பண்ணினான்னு தெரியணும். ரொம்ப பெரிய அமௌன்ட். கண்டிப்பா செலவு பண்ண முடியாது. என்ன பண்ணினான்னு தெரிஞ்சே ஆகணும்”.

“என்னால முடிஞ்ச அளவு முயற்சி செய்யறேன். என் மேல கோபமா இருக்கீங்களா”

“தெரியலை எல்லார் மேலயும் கோபமா வருது” என்றான் மறையாது.

“டென்ஷன் ஆகாம யோசிங்க! கண்டிப்பா உங்களால சமாளிக்க முடியும் என்றவளைப் பார்த்து,

“சரி! நீ கிளம்பு! அப்பா வர்ற நேரம் ஆகிடுச்சு. உன்னைப் பார்த்தார் என்ன ஏதுன்னு விசாரிப்பார், இப்ப இருக்குற பிரச்சனையில காதலிக்கறேன் அது இதுன்னு எதுவும் சொல்ல முடியாது”

“நீங்க ஏன் இப்படி இருக்கீங்க ஷேவ் பண்ணலை, டிரஸ் சரியா பண்ணலை. இது ஆஃபிஸ் லுக் இல்லை. பார்த்தாலே எல்லோரும் ஆர் யு ஓகேன்னு கேட்கற மாதிரி இருக்கீங்க, அதுவே காட்டிக் கொடுத்திடும்”,

“சரி, பார்த்துக்கறேன், நீ கிளம்பு! எப்படி வந்த?”,

“என் ஆக்டிவால. என் மேல எதுவும் கோபம் இல்லையே” என்றாள் திரும்ப,

“இல்லை, கிளம்பு நான் பார்த்துக்குவேன். தீர்க்க முடியாத பிரச்சனைன்னு ஏதும் இல்லை” என்றான் வர்ஷினியின் வார்த்தைகளை. குரல் மிகவும் தீவிரமாக ஒலிக்க கிளம்பினாள்.

அவளுக்கு தெரியவில்லை, யாரையாவது தீர்த்தாவது பிரச்னையை முடிக்கும் தீவிரம் அது என்று.

தீர்த்தாவது தீர்க்கப்படுவது தீர்ப்பாவது என்றது திண்ணிய நெஞ்சம்.

Advertisement