Advertisement

அத்தியாயம் ஐந்து :

கேண்டில் லைட் டின்னர்! புது மலராய் மலர்ந்து மேக்னா அமர்ந்திருக்க, குருபிரசாத் அலுவலகத்தில் இருந்து அப்படியே வந்திருந்தான்.

“ஏன் பிரசாத் இவ்வளவு டல்லா இருக்க! ஃபிரெஷ் ஆகக் கூட இல்லை, அப்பாக்கு இன்னும் சரியாகலையா?” என்று கவலையாய் மேக்னா கேட்க, “சரியாகிட்டே இருக்கார்!” என்றவன், “முதல்ல சாப்பிடுவோம் பசிக்குது!” என்றான். விஷயம் பகிர்ந்த பிறகு உணவு உட்கொள்ள முடியும் என்று தோன்றவில்லை.

“நீயே சொல்லு!” என்று மேக்னா மெனுவை அவனிடம் நகர்த்த, “நீயே சொல்லு! திஸ் டின்னர் இஸ் ஃபார் யு!” என்றான்.

அவள் வேகமாகச் சொல்லி, அது வர டைம் ஆகும் என்பதால், மேக்னா இந்த ஆறுமாதமாக நடந்ததை கதை பேச, மனதிலும் எதுவும் பதியாமல், மூலையிலும் எதுவும் ஏறாமல், உதடுகளை புன்னகைப்பது போல இழுத்துப் பிடித்துக் கேட்டிருந்தான்.

உணவு உண்டவுடன், குருபிரசாத் “லிசன் டாலி! கூலா லிசன் பண்ணு!” என்றவன், என்னவாக இருக்கும் என்று அவள் யோசிக்கும் முன்னே “எனக்கு கல்யாணமாகிடுச்சு!” என்றான்.

அவளின் முகத்தில் முதலில் கலவையான உணர்ச்சிகள், பின் மலர்ந்த சிரிப்பை தத்தெடுத்து “ஹேய்! பொய் சொல்லாத!” என்றாள்.

“இல்லை! நிஜம்!” என்றான் சீரியசாக, கூடவே அவனின் செல்லில் புகைப் படத்தில் இருந்து எடுத்து வைத்திருந்த தாலி கட்டும் போட்டோ.   

மேக்னா அதைப் பார்த்து அதிர்ந்து விழித்தவள், அப்படியே பார்த்திருந்தாள், ஊரிலிருந்து வந்ததில் இருந்து நடந்ததை சொன்னான்.

“அதுதான் உங்கப்பா ஹாஸ்பிடல்ல தானே இருந்தார். என்ன ஆகிடும்! பண்ணிக்க மாட்டேன்னு இருந்திருக்க வேண்டியதுதானே! நீ ஏன் கல்யாணம் பண்ணின?” என்று கோபப்பட்டாள். அமைதியாக அமர்ந்து இருந்தான்.

ஒரு கேவல் வெடிக்க முகத்தை மூடிக் கொண்டு அழுதாள். “எவ்வளவு உன்னை ட்ரஸ்ட் பண்ணினேன். இப்படி பண்ணிட்ட!” என்றாள்.

“நான் அந்தப் பொண்ணுக்கிட்ட கல்யாணத்தை நிறுத்தச் சொன்னேன்! ஆனா அவ நிறுத்தலை!” என்றான்.

“உன்னை யாராவது மிஸ் பண்ணுவாங்களா?” என்றாள் அந்த நிலையிலும்.

அவளின் கைபிடித்தவன் “நீ என்னை நம்பணும், கண்டிப்பா நாம சேருவோம், அவ கிட்ட தெளிவா சொல்லிட்டேன். நான் உன்னைத் தான் லவ் பண்றேன்னு, இப்ப என்ன பண்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கு! ஏதாவது பண்ணுவோம்! ஒரு ஒன் மந்த் போகட்டும் டைவர்ஸ்க்கு, என்ன வழின்னு பார்க்கலாம்”

“அந்தப் பொண்ணு குடுப்பாளா?”.. “குடுக்காம எங்கப் போவா? குடுக்க வைப்பேன்!” என்றான் தீவிரமாக. இவ்வளவு தீவிரமாக குருபிரசாத் பேசி மேக்னா பார்த்ததேயில்லை.

அதன் பிறகு பேச்சின்றி வெளியே வந்தனர், ஒரு ஆட்டோ பிடித்து அவளை அவளின் ஹாஸ்டலில் விட்டு, பின் இவன் எலக்ட்ரானிக் ட்ரைன் பிடித்து அவனின் அபார்ட்மென்ட் வந்த போது, அங்கே தமிழரசி, அர்த்தனாரி, பூமா மற்றும் அவனின் அப்பா நாதன் இருந்தனர்.

“ஐயோ! இவர்கள் எங்கே இங்கே!” என்று தோன்றிய போதும், “வாங்க!” என்று மாமனார் மாமியாரை நோக்கிச் சொன்னவன் “வர்ரேன்னு சொல்லவேயில்லை அப்பா!” என்று அவசரமாக கதவை திறந்தான்.

“உன் ஃபோன் பாரு, எத்தனை தடவை கூப்பிட்டேன்னு!” என்றார். எடுத்துப் பார்த்தால் அத்தனை மிஸ்டு கால்கள், “சாரி கவனிக்கலை!”  

காலையில் அவனுக்கு அழைத்த அப்பா “ஊருக்கு வந்து விட்டாயா?” என்று கேட்க, “ம்ம்” என்று ஒற்றை வார்த்தை சொல்லி வைத்திருந்தான். இப்படி வந்து நிற்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை,

கதவை திறந்து உள்ளே செல்ல முயன்றவனை “இருங்க, ஒரு நிமிஷம்!” என்று தடுத்து நிறுத்திய பூமா, உள்ளே சென்று ஆராத்தி தட்டை ரெடி செய்து வந்தார். அவர் ஆராத்தி எடுக்க, எதிரில் இருந்த அபார்ட்மெண்டில் இருந்த பெரியவர் வெளியே வந்து நின்று பார்த்தார்.

“என்ன தம்பி கல்யாணமாகிடுச்சா?” என்றார் ஆச்சர்யமாக, “ஆம்!” என்பது போலத் தலையசைத்தவன், “யு எஸ் ல இருந்து வந்த உடனே, அதனால் யாரையும் கூப்பிட முடியலை!” என்று மரியாதை நிமித்தம் குருபிரசாத் விளக்கம் சொல்ல,

“அதுக்கென்ன மாப்பிள்ளை, பெருசா ஒரு விருந்து வெச்சிட்டாப் போச்சு!” என்று அர்த்தனாரி சொல்ல, என்ன சொல்ல முடியும் ஒரு புன்னகையை சிந்தி வைத்தான். பின் உள்ளேப் போக, அவர்கள் வீட்டைப் பார்த்தனர், அது ஒரு ட்ரிப்பில் பெட்ரூம் அபார்ட்மென்ட், பெரிதாக இருந்தது.

அர்த்தனாரிக்கு பரம திருப்தி! ஊரில் இப்போது ஒன்றிரண்டு வருடத்திற்கு முன் தான் வீடு கட்டினார்கள் என்று தெரியும், அதனால் இங்கேயும் ஒரு அபார்ட்மென்ட் என்ற போது மிகவும் சிறியதாக இருக்கும் என்று நினைத்தார். வெளித் தோற்றதிலேயே பெரிய ஆட்கள் வாழும் அபார்ட்மென்ட் என்று புரிந்தது. இப்போது உள் பார்க்கவும் இன்னும் பிடித்தது.

அபார்ட்மென்ட் பளபளவென்று இருக்க, “என்ன தான் நம்மக் கிட்ட பணம் இருந்தாலும், இந்த சொகுசை நாம அனுபவிக்கலையே!” என்று தோன்றியது. ஆம்! தனியனான குருப்ரசாதிற்கு என்ன வேலை? பார்த்துப் பார்த்து வீட்டை அலங்கரித்து இருந்தான். எல்லாம் சுத்தமாக இருந்தது. நவீன பொருட்களாகவும் இருந்தது.

பெண்ணிற்கு அவர் சீர் வரிசையாக அடுக்கி இருந்தாலும், இப்படி எல்லாம் புது வரவாக இருக்கிறதா என்று யோசனையில் இருந்தார். பூமாவிற்கு மிகவும் கவலையாகப் போய்விட்டது. “இப்படி இந்த மாப்பிள்ளை தம்பி எல்லாம் சுத்தமா வெச்சிருக்கிறாரே. என் பொண்ணு எல்லாம் எடுத்ததை எடுத்த இடத்தில வெச்சிடுவாளே, அவ இருக்குற இடத்துல சாமான் இறைஞ்சி தானே கிடைக்கும்!”

“என்ன கண்ணு நிக்கற? போ! போ! அப்பாவும் அம்மாவும் உன் வீட்டுக்கு வந்திருக்கோம் தானே! போ! போ! தண்ணி கொண்டு வா!” என,

தமிழரசி முகத்தைச் சுருக்கி சமையலறை நோக்கிப் போக,

“அது ஒண்ணுமில்லை மாப்பிள்ளை! ரொம்பச் செல்லம் குடுத்துட்டோம்! அதுதான் எங்களை விட்டு பிரிய அவளுக்கு ரொம்ப கஷ்டம்!” என்று அர்த்தனாரி சொல்ல,

         “நாளைக்கு வேற மாசம் பொறக்குது! அப்போ கொண்டு வந்து விட முடியாது! மதியம் தான் தோணிச்சு! அதான் உடனே கிளம்பிட்டோம்!” என்றார் நாதன்.

சமையலறை உள்ளே சென்றவள், தண்ணீர் எங்கே என்றுப் பார்க்க, அங்கே கொஞ்சமாகத் தண்ணீர் ஒரு பாத்திரத்தின் அடியினில் இருந்தது.

அவன் பலமாதங்களாக ஊரில் இல்லை, இங்கே இப்போது ஒரு வாரம் யு எஸ் போகும் முன் வந்தவன் வீட்டை மட்டும் சுத்தம் செய்திருந்தான். இவன் பாட்டில் தண்ணீர் மட்டும் வாங்கியிருந்தான். காலை வந்ததும் அவசரமாக அலுவலகம் சென்று விட்டான். வீட்டில் தண்ணீர் இல்லை,

“தண்ணி இல்லை!” என்று சமையலரை வாசல் வந்து அரசி சொல்ல, அப்போதுதான் ஞாபகம் வந்தவனாக, “ஆமாம் இருக்காது! ஆர் ஓ ரொம்ப நாளா நான் போடலை, இருங்க தண்ணி பாட்டில் வாங்கிட்டு வந்துடறேன்!” என்று கிளம்ப,

“இருடா! நான் போய் வாங்கிட்டு வர்றேன்!” என்று கிளம்பினார். வாசலில் போய் செருப்பை போட்டவர் மகனை பார்க்க, அதை உணர்ந்து அருகில் வந்தவனிடம், “நாங்க ஆறு மணிக்கு தான் கிளம்பினோம், இப்போ மணி எட்டு, அவங்களை சாப்பிடாம அனுப்ப முடியாது!” என்றார்.

“அப்போ நீங்க எங்க கிளம்பறீங்க! அவங்கக்கிட்ட என்னை தனியா விட்டு, இருங்க நான் சொல்லிக்கறேன்!” என்றவன் செக்யுரிட்டிக்கு அழைத்து தண்ணீர் பாட்டிலை வாங்கி வர சொல்லி வந்தமர்ந்தான்.

அர்த்தனாரி தான் வாய் ஓயாமல் பேசிக் கொண்டு இருந்தார், நேரம் எட்டரையைத் தொட, “அப்போ நாங்க கிளம்பறோம்! விட்டுட்டுப் போகத் தான் வந்தோம். ஒரு ரெண்டு மூணு நாள் போகட்டும். அப்புறம் அரசி பொருள், மத்தது எல்லாம் கொண்டு வர்றோம்!” என்று எழ,

“நானும் உங்களோட வர்றேன் மச்சான்! அங்க பொண்ணுங்க தனியா இருக்கும்!” என்று நாதனும் கிளம்ப,

இப்படி ஒரு சூழலை திடீரென்று எதிர்பார்க்கவில்லை. “என்ன? இவளுடன் தனியாக ஒரே வீட்டிலா?” அரசியின் முகத்தைப் பார்க்க, யாருக்கு வந்த விருந்தோ என்று பார்த்து நின்றிருந்தாள். அவளின் மனதின் சோர்வை முகம் காட்டியது.

“நானெல்லாம் இவரோட இருக்க மாட்டேன்னு இந்தப் பொண்ணு கிளம்ப வேண்டியது தானே! ஏன் நிக்குது?” என்றபடி அவன் பார்க்க,

அரசி அவனின் முகத்தைப் பார்க்கவேயில்லை, அப்பா அம்மாவின் முகத்தை பார்த்து நின்றிருந்தாள். பரிதாபமாக மகள் பார்த்து நிற்க, “நான் பார்த்துக்கறேன்” என்று மாப்பிள்ளை சொல்வாரா என்று அரசியின் பெற்றவர்கள் பார்த்து நிற்க,

“நம்ம போகலாம் மச்சான்! என் மகன் பார்த்துக்குவான்!” என்று நாதன் தான் சொன்னார்.

“அரசி இன்னும் சாப்பிடலை!” என்று அன்னையாய் பூமா தயங்கித் தயங்கி நிற்க,

“நீங்களும் தானே சாப்பிட்டு இருக்க மாட்டீங்க வாங்க!” என்றவன், “கதவை லாக் பண்ணிக்கோ, வந்துடறேன்!” என்று சொல்லி, அவர்களை அவர்களின் காரிலேயே ஹோட்டல் அழைத்துச் செல்ல, அங்கே ஒரே கூட்டம் உட்கார இடமே இல்லை.

“நீங்க அரசிக்கும் உங்களுக்கும் வாங்கிட்டு கிளம்புங்க தம்பி, நாங்க பொறுமையா சாப்பிட்டுக் கிளம்பறோம். அங்க அவ தனியா இருப்பா! நேரம் ஒன்பது ஆகிடுச்சு!” என்று அர்த்தனாரி சொல்ல,

“சரி” என்று பார்சல் வாங்கி அவன் வீடு வந்த போது ஒன்பதரை ஆகியிருந்தது. கதவை திறந்தவளின் முகமே அழுதிருக்கின்றாள் என்று காட்டியது.

“டிஃபன்” என்று அவன் பார்சலை நீட்ட,  அவன் முகம் பாராமல் கை நீட்டி வாங்கிக் கொண்டாள். கொடுத்தவன் அவனின் ரூம் சென்றான், இரவு நேர குளியலுக்கு பழக்கப் பட்டவன் என்பதால் குளிக்கச் சென்றுவிட்டான்.

குளித்து ஷார்ட்சும் டி ஷார்சுமாக அவன் வந்த போதும் அமர்ந்து இருந்தாள். வெகு நாட்கள் ஆகிவிட்டதால், காலையில் சுத்தம் செய்திருந்தாலும், அவன் கிட்சன் சென்று என்ன இருக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தான். இங்கே இருந்தால் சொந்த சமையல் தான் அவனாக தான் சமைத்துக் கொள்வான். எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்து என்ன வாங்க வேண்டும் என்று லிஸ்ட் எடுத்தான்.

அதுவே வெகு நேரமாகி விட, திரும்ப ஹால் வந்த போதும் அப்படியே அமர்ந்திருந்தால் உணவைத் தொடவில்லை. “இனி இவள் தொல்லை வேறா? என்ன சொல்ல வேண்டும்? சாப்பிடு என்று சொல்ல வேண்டுமா? தூங்கு என்று சொல்ல வேண்டுமா? அதெல்லாம் என்னால் முடியாது!” என்று அவன் பாட்டிற்கு ரூம் செல்லப் போக,

எதையோ தூக்கி கீழே பொத்தென்று அவள் போட, திரும்பிப் பார்த்தவன் “என்ன? என்ன உடைக்கிற? என்ன கலாட்டா இது?” என்று அருகில் வர, ஒற்றை விரலை காட்டி, “எனக்குப் போகணும், சாயந்தரம் ஊர்ல இருந்து வரும் போது போனது!” என்று சொல்ல.

“ஷ்!” என்று தலைத் தட்டிக் கொண்டவன் “வா” என்று இன்னொரு பெட்ரூமைக் காட்டி, “இதை யூஸ் பண்ணிக்கோ!” என்றான்.

மெளனமாக அவள் உள்ளேப் போக, “ரொம்ப திமிர் தான் போல, இவளா பேச மாட்டாளாமா?” என்று அவள் கீழே எரிந்து இருந்ததை எடுத்து அதனிடத்தில் வைத்தான்.

வீடு அவனுக்கு அவன் இளைப்பாறும் இடம், அதனால் தான் பெரும் பணம் முன்பணமாகக் கட்டி இந்த லசுரி அபார்ட்மென்ட் வாங்கியிருந்தான். அவனின் சம்பளத்தில் பெரும் பகுதி அதன் லோனிற்கே இந்த ஒரு வருடமாகப் போய் விடுகிறது.

தன்னுடைய செலவே கை சுருக்கித் தான் செய்வான். திருமணம் என்று அப்பா ஒரு பைசா வாங்கவில்லை, எல்லாம் பெண் வீட்டு செலவாகிப் போக, அதற்கு அவனிடம் வரவில்லை.

தங்கைகளின் திருமணம் தலைக்கு மேல் இருக்கின்றது என்று தெரியும். இவனுக்கும் பெரிய தங்கைக்கும் ஜோதிக்கும் ஏழு வருட வித்தியாசம். இப்போதுதான் அவள் கல்லூரியின் இறுதி ஆண்டில் இருந்தாள். படிப்பு பெரிதாக வராததால் டிகிரி தான் சேர்த்திருந்தான்.

சிறிய தங்கை புனிதா ஜோதியையும் விட இரு வயது சிறியவள், அவளுக்கு படிப்பு நன்றாக வந்ததால் இந்த வருடம் தான் அவளையும் எஞ்சினியரிங் சேர்த்து இருந்தான்.

என்ன செய்கிறாள் அரசி என்று மனம் பார்க்கத் தூண்டிய போதும், இப்போது போய் பார்த்தால் தன் மீது எப்படி அவளுக்கு வெறுப்பு வரும். எப்படி அவள் தன்னை விட்டுப் போவாள் என்பது போலத் தோன்ற, என்னவோ செய்து கொள்ளட்டும் என்று ரூமை அடைத்து உறங்க முற்பட்டான்.

  விஷயத்தை மேக்னாவிடம் சொல்லியிருந்ததால் மனது சற்று சமன்பட்டு இருக்க உறக்கம் வந்தது, உறங்காமல் ஒரு ஜீவன் ரூமிற்கு வெளியில் கொட்ட கொட்ட அமர்ந்திருப்பது குருபிரசாத்திற்கு தெரியாமலே போனது.

 

Advertisement