Advertisement

அத்தியாயம் நாற்பத்தி எட்டு :

 

ஒப்புக் கொள்ளுதல் வேறு! ஒப்புக் கொடுத்தல் வேறு!

அறையை விட்டு வந்த நிமிடம் ஈஸ்வருக்கு அழைத்து இருந்தாள், நடுவில் அப்பா ஒரு வேளை பேச விடாமல் தடுத்து விட்டால் என்ற எண்ணத்தில்.

ஈஸ்வர் எடுத்தவுடனேயே “எனக்கு உங்களை பார்க்கணுமே” என,

அதிகாரமாக அந்தக் குரல் ஒலித்தது என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒரு ஆளுமையோடு தான் அந்தக் குரல் ஒலித்தது.

“எதுக்கு? எதுக்கு பார்க்கணும்?” என்றான் அவசரமாக, நீ வேண்டாம் என்று சொல்லக் கூப்பிடுகின்றாளோ என பயந்து.   

“ஏன்? காரணம் சொன்னா தான் என்னைப் பார்க்க வருவீங்களா? ஓகே, ஃபைன்! வேண்டாம்!” என வைக்கப் போக,

“வர்ஷி, இரு, இரு, எங்க வரணும்?”

“தாசண்ணா இல்லை, எங்க வீட்டுக்கு வந்து என்னை அழைச்சிக்கிட்டீங்கன்னா பரவாயில்லை” என,

“ஓகே” என்றவன், அடுத்த அரை மணிநேரத்தில் அவளின் வீட்டு வாசலில் இருந்தான்.  “உள்ள வரட்டுமா வாசல்ல நிற்கறேன்” என,

“இல்லை, நான் வர்றேன்” என்று அவள் அடுத்த நிமிடம் கேட்டின் முன் புறம் வந்து விட்டாள்.

வர்ஷினி ஏறி அமர்ந்ததும் திரும்ப ஒரு அரை மணிநேர பயணம், இருவருமே பேசிக் கொள்ளவில்லை. அவளோடான பயணத்தை விரும்பி சற்று தொலைவாக பயணித்தான். பேசவில்லை என்றாலும் கவனமாக முகத்தை ஆராய்ந்தான்.

ஒரு தீவிர யோசனை, அதனோடு சோர்வாகவும் தெரிந்தாள்.  பசியாகவும் உணர்ந்தாள். அது மதிய நேரமும் கூட அவளை உணர்ந்தவனாக ஒரு உணவகத்தின் உள் சென்று தான் நிறுத்தினான்.

“எப்படி? எனக்கு பசிக்கும் என்று இவனுக்குத் தெரியுமா இல்லை தானாக நிறுத்தினானா!” என்ற யோசனை ஓட.. அவனின் முகத்தை பார்த்தாள்.

“ஊப்ஸ்” ஈஸ்வர் மாறிவிட்டதை அப்போதுதான் கவனித்தாள். அவனின் தலைமுடி வெட்டப்பட்டு, கிருதா மறைந்து, பிரெஞ்சு தாடி மறைந்து, இன்னும் அதிகமாக ஒரு வசீகர தோற்றம் வந்திருந்தது.

வர்ஷினியின் பார்வை உணர்ந்து, “மாத்திட்டேன், எப்படி இருக்கு? அது நல்லா இருந்ததா, இது நல்ல இருக்குதா?” என்றான்.

“உங்க முகமே நல்லா இல்லை சொன்னா என்ன பண்ணுவீங்க?” என பதில் கேள்வி கேட்க.  

“என்ன பண்ணுவேன்?” என அவளை தீர்க்கமாக பார்த்தபடி, “பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கட்டுமா?” என்றான் சீரியசாக.

என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் மலைத்து நின்றவள், திரும்ப வாயை கப்பென்று மூடிக் கொண்டாள். இந்த தீவிரம் பயத்தைக் கொடுத்தது.

“இல்லை, நான் ஜோக் பண்ணலை, என்னைப் பார்க்கும் போது உனக்கு என்னோட நடத்தை ஞாபகம் வரக் கூடாதுன்னு தான் என்னோட கெட் அப் மாத்தினேன். இன்னும் உன்னை அது ரொம்ப டிஸ்டர்ப் செஞ்சா முகத்தை மாத்திக்கட்டுமா?” என்றான் இன்னும் தீவிரமாக.   

இந்த பதில் ஏதோ ஒரு வகையில் அவளை மிகவும் அசைக்க, “வேண்டாம்” என்பது போல தலையசைத்தாள்.

அதற்குள் இடம் வந்திருக்க நிறுத்தியிருந்தான். “வா! முதல்ல சாப்பிடுவோம், பசிக்குது போல உனக்கு!” என்று காரை விட்டு இறங்க,

“இதெல்லாம் என்னிடம் கண்டுபிடிக்கும் அளவிற்கு இவனிற்கு என்னைத் தெரியுமா?” என்ற எண்ணம் ஓடியது. வர்ஷினி அப்படியே அமர்ந்திருக்கவும், அவளின் புறம் உள்ள கதவை திறந்து “வா” என,

பிறகு தான் இறங்கினாள். ஈஸ்வர் நடக்க ஆரம்பிக்க, அவனோடு நடக்க ஆரம்பித்தவளுக்கு, அவனின் நடைக்கு ஈடு கொடுப்பது சற்று சிரமமாக இருந்தது. படிகளில் ஏறியவன் ரெஸ்ட்டரன்ட் கதவை திறக்கும் போது திரும்பிப் பார்க்க, அவள் படிகளின் கீழ் இருப்பது தெரிய,

வர்ஷினிக்காக நின்றான். “எதுக்கு இப்படி ஓடி வர்றிங்க?” என்பது போல ஒரு பார்வை பார்க்க,

“நான் ஓடி வரலை! நீ மெதுவா வர்ற! உடல் உழைப்பே இல்லை போல, என்ன பண்ணுவ? காலேஜ் போவ, சாப்பிடுவ, தூங்குவ, அவ்வளவு தானா!” என்றான் சீரியசாக.

நிச்சயம் அதில் கிண்டல் இல்லை அக்கறை மட்டுமே!

“கல்யாணம் முடிஞ்ச உடனே முதல்ல உன்னை ஓட தான் விடணும் போல” என்று சொல்லிக் கொண்டே கதவை திறக்க,

“நான் இன்னும் ஓகே சொல்லலை!” என்றாள் வாய் திறந்து.

“எப்போ சொல்லுவ? ஐ அம் வெயிடிங்!” என்று ஈஸ்வர் புன்னகைக்க.

வர்ஷினியின் முகத்தில் சிறிதும் புன்னகை இல்லை.. அவளின் சீரியஸ்நெஸ் புரிந்து அமைதியானவன், ஒரு டேபிள் பார்த்து அமர்ந்து, அவளைப் பார்க்க, வர்ஷினியின் முகம் தீவிர யோசனையில். அதையும் விட அந்த நீல நிறக் கண்களில் எப்போதும் பார்த்திராத ஒரு தீவிர பாவம்.

அவளைக் கேட்காமலேயே உணவு வகைகளை சொன்னான். வந்ததும் அவள் புறம் நகர்த்தினான். எந்த பாவனையும் வர்ஷினி செய்யாமல் உடனே உண்ண ஆரம்பிக்க, இருவரும் உண்டு முடித்தனர்.

“இப்போ சொல்லு” என         

“அப்பா கல்யாணத்துக்கு ரொம்ப வற்புறுத்தறாங்க!” என நிறுத்தினாள்.

ஈஸ்வர் இடையில் பேச முயலவில்லை. சொல்லட்டும் என அமைதியாக அமர்ந்திருந்தான்.  

“என்னோட இந்தக் கண் தான் உங்களுக்கு என்கிட்ட ரொம்ப பிடிக்கும். இந்தக் கண் எங்கம்மா கொடுத்தது. ஐ மீன் அவங்க கிட்ட இருந்து வந்தது. எங்கம்மா ஃபோட்டோ பார்க்கறீங்களா?” என சொல்லி, அவளின் அம்மாவின் ஃபோட்டோவைக் காட்ட, பார்த்தவன் அதிர்ந்து வாயடைத்து போனான்.

அவனின் முக பாவனைகளை தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தாள் வர்ஷினி.  

பின்பு முதலில் கேட்ட கேள்வி “யாருக்கெல்லாம் தெரியும்?”

“எனக்கும் அப்பாக்கும்”  

“கண்டிப்பா முரளிக்கு தெரிஞ்சிருக்காது, அவனுக்கு தெரிஞ்சா என்கிட்ட சொல்லியிருப்பான், அப்போ பத்துக்கும் தெரியாது. கமலம்மாக்கு?” என ஈஸ்வர் கேட்க,  

“இல்லை, தெரியாது!” என்றாள்.

பிறகு அவனே “ஆனா கண்டிப்பா உங்க தாத்தாக்கு தெரிஞ்சிருக்கும். உங்கப்பாவோட பெரிய பலமே அவர் தான்! அவர்க்கு தெரியாம இருக்க வாய்ப்பில்லை!” என்றான்.

“தெரியலை, ஆனா என்கிட்டே பேசினது இல்லை”

“ஓகே, இப்போ நீயும் என்கிட்டே பேசலை!” என்றான்.

வர்ஷினி புரியாமல் பார்க்க, “எஸ், இது பத்தி நாம பேசிக்கலை. நீ என்கிட்டே சொல்லலை. அவ்வளவு தான், மறந்துடு! எனக்கு உன்கிட்ட இருக்குற ஒரே ஒரு வேண்டுதல் எப்பவும் யார் கிட்டயும் நீ இதை சொல்லக் கூடாது” என,

அவனை நிராசையோடு பார்த்தாள், கீழாக நினைக்கின்றானோ என, “அம்மா யார்?” என எல்லோரும் கேட்ட போதும், அதை சொல்லாமல் இருந்ததனால் கீழாக பார்த்த போதும்… சொன்னால் இன்னும் கீழாகப் பார்ப்பர் என்பதினால் தான் வாயே திறந்ததில்லை. அதையும் விட அவளுக்கே ஒரு நான்கைந்து வருடமாகத் தான் தெரியும். அதற்கு முன் அவளின் அப்பா சொன்னதேயில்லை.    

“எஸ்! சில உண்மைகள் எப்பவும் யாருக்கும் தெரியாம இருக்குறது தான் நல்லது”

“இப்பவும் உங்களுக்கு என்னை பிடிக்குதா?” என்று வர்ஷினி கேட்ட பாவனையில் சிரித்தே விட்டான்.

“என்ன இவன்?” என்பது போல பார்க்க,

சிறிது நேரத்தில் கட்டுக்குள் வந்து “உன்னை பிடிச்சது என்னை மீறி நடந்த ஒன்னு! அதனால எந்த விஷயத்துக்கும் அதை நிறுத்துற சக்தி கிடையாது” என்றான்.

வர்ஷினியின் பார்வை ஒரு நம்பாத தன்மையைக் காட்ட, “அட்லீஸ்ட் இப்போதைக்கு” என்றான் திரும்பவும்.     

என்ன மாதிரி உணர்ந்தாள் என்று வரையறுக்கு முடியாத் ஒரு நிலை. அமைதியாக இருக்கவும்,  

“வெல், அப்போ நீ கல்யாணத்துக்கு தயார் இல்லையா?” என்றான் சிறு முறுவலுடன்.  

“நான் ஒன்னும் இன்னும் ஓகே சொல்லலை!” என்று சற்று முறுக்க..

“உனக்கு ஓகே இல்லைன்னா, நீ எப்பவும் என்கிட்ட இந்த விஷயம் பேசியிருக்க மாட்ட!”  

அதை உணர்ந்தவளும் அமைதியாக இருக்க,

“ஆமாம், எதுக்கு இப்போ என்கிட்டே சொன்ன?”

“என்னை பத்தின எந்த விஷயமும் என்னோட கணவரா வர்றவருக்கு தெரியாம இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன்” என சொல்ல,

“ஆனா நீ சொல்லியிருக்க வேண்டாம்” என்றான் சீரியசாக.

“ஏன்?” என்பது போல பார்த்தவளிடம்..  

“மனசுக்குள்ள உனக்கு ஒரு உறுத்தல் இருக்க வாய்ப்பிருக்கு.  எப்போவாவது அதை நான் சொல்லிக் காட்டுவேனொன்னு. அது தேவையில்லை இல்லையா?”

அழுகை வந்தது, கண்களில் நீர் நிறைந்தது.  

“ஷ், வர்ஷினி!” என்றவன், “எனக்கு புரியுது, இந்த விஷயம் சொல்றது சுலபம் கிடையாது” என,

முகத்தை ஒற்றை கையினில் புதைத்து அழுகையை கட்டுப் படுத்த முயன்றாள். அணைத்து ஆறுதல் சொல்லத் துடித்த கைகளை கட்டிக் கொண்டான். அப்படி எதுவும் தன்னை மீறி இப்படி ஒரு பொது இடத்தில் செய்து விட்டால் என்ன செய்வது என,

ஆம்! கௌரவம் அவனுக்கு மிகவும் முக்கியமான ஒன்று!   

சிறிது நேரத்தில் தேறிக் கொண்டவள், கைகளை எடுத்து, “நீங்க என்னை முதல் முதலா பார்த்த போது ரொம்ப கேவலமா நீ எல்லாம் ஒரு ஆளான்ற மாதிரி பார்த்தீங்க” என,

“எஸ், உண்மை தான்!” என ஒத்துக் கொண்டவன்,

“நீ இவ்வளவு உண்மையா இருக்கும் போது, நானும் உண்மையை ஒரு தடவை சொல்லிடறேன். நீ என்னை ஏதோ ஒரு வகையில ரொம்ப டிஸ்டர்ப் பண்ணின. அங்க இருந்த வரைக்கும் உன் மேல தான் என்னோட பார்வை. என்னால திருப்பவே முடியலை” 

“அவரோட பொண்ணுன்னு சொன்னாலும், அம்மா யார்ன்னு சொன்னதில்லை, ரெண்டாவது மனைவிக்கு பிறந்த மாதிரியும் சொன்னதில்லை. அதனால நீ எப்படி என்னை டிஸ்டர்ப் பண்ணலாம்ன்ற ஆணவம். அப்போவும் ஒரு முன்ஜாக்கிரதைக்கு என்னை அண்ணான்னு கூப்பிடு சொன்னேன் நீ கூப்பிடலை. கூப்பிட்டிருந்தா டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணியிருப்பனோ என்னவோ?”     

“நான் பொதுவா ரொம்ப ப்ரெஸ்டீஜ் பார்ப்பேன். நான் எனக்கு இவங்க ஈக்குவல் இல்லைன்னு நினைச்சா பேசக்கூட மாட்டேன். சிரிக்கக் கூட மாட்டேன். அதெல்லாம் இன்னும் என்கிட்டே இருக்கு. இப்பவும் இருக்கு. இல்லைன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்”

“தப்பு தான், இருந்தாலும் ஒரு தடவை சொல்லிக்கறேன்..” என நிறுத்தியவன்,

“உங்கம்மா மாதிரி ஆளுங்க எல்லாம் நான் பார்க்கக் கூட விரும்ப மாட்டேன். என்னோட மரியாதை வட்டத்துக்குள்ள அவங்க வரவே மாட்டாங்க. ஆனா உன்கிட்ட எனக்கு அந்த மாதிரி எதுவுமே தோணலை. நீ இப்போ சொல்லும் போது கூட வெளில அது தெரிஞ்சு உன்னை யாரும் தப்பா பேசிடக் கூடாதுன்ற பயம் மட்டும் தான் இருக்கு”

“உன்னோட இந்த உண்மை எனக்கு உன்னை இன்னும் இன்னும் பிடிக்க வைக்குது” என்றான்.

வர்ஷினி ஒரு உணர்சிக் குவியலாய் எல்லாவற்றையும் கிரகித்து கொண்டிருந்தாள்.  உள்ளதை உள்ளபடி பேசுகின்றான் எனப் புரிந்தது. ஆனாலும் மனது முழுவதும் ஒரு பயம். தன்னுடைய வாழ்க்கை இவனோடு சரியாக வருமா என..        

“உனக்கு எப்போ தெரியும் இது?”   

“நான் நைன்த் படிக்கும் போது” என்று சொல்லும் போதே திரும்ப உதடுகள் அழுகையில் பிதுங்கியது. “ஆனா அப்போ கூட எனக்கு அதிகம் தெரியாது. அவங்க இறந்த பிறகு எல்லா நியூஸ்லயும் அவங்க லைஃப் ஹிஸ்டரி வந்த போது தான் தெரியும்”

அந்த வயதில் அவள் அறியக் கூடாத கசப்பான நிதர்சனங்கள். 

“அவங்க நடிகையான பிறகான வாழ்க்கை தான் எல்லோருக்கும் தெரியும்ன்றதால என்னை பத்தி யாருக்கு தெரியலை” என்றாள்.

“இனிமேலும் தெரியவே தெரியாது! யாருக்கும் எப்போவும் தெரியவிடக் கூடாது! தெரிய விடவும் மாட்டேன்!” என்றவன்,

“நீ இனி இந்த உலகத்துல இருக்குற வரை ஈஸ்வரோட மனைவி மட்டும் தான் புரியுதா. என்கிட்டே பேசினது உங்கப்பா கிட்ட கூட சொல்ல வேண்டாம். எனக்கு தெரியும்னு அவருக்கு தெரியணும்னு எந்த அவசியமும் இல்லை புரியுதா?” என்றான் அதிகாரமான குரலில்.  

“சரி” என்று அவள் தலையசைக்க, “வீட்டுக்கு போகலாம்!”  என்று உடனே எழுந்து விட்டான்.

வீட்டிற்கு வந்து தனிமையை தேடி ரூமின் உள் அடைந்து கொண்டவள், தன் அம்மாவைப் பற்றி அசை போட..  இவள் பிறந்த பிறகு இவளின் தந்தையோடு தொடர்பு அற்றுப் போன போது திரைத்துறையில் துணை நடிகையாக ஆனவள்.

மிக அழகோடு இருந்ததால், திரைத்துறை கதாநாயகி வாய்ப்பு கொடுக்காவிட்டாலும் கவர்ச்சி நடிகை வாய்ப்பு கொடுக்க, ஒன்றிரண்டு படங்களில் அப்படி தலைக்காட்டியவள் பின்பு இந்தி சினிமா நோக்கி போக, அங்கே ஒன்றிரண்டு படங்களில் நடனம் மட்டும் ஆட, அங்கிருந்த மாஃபியா கும்பலின் துணை தலைவன் ஒருவன் பார்வையில் பட்டு, பின்பு அவனின் ஆசை நாயகியாக சிறை எடுக்கப்பட்டாள்.

பின்பு முழுவதுமாக அவனின் கஸ்டடியில், அது எல்லோருக்குமே தெரிந்த விஷயமாகிப் போனது.

வர்ஷினியை பெற்றெடுத்த பின் பதினான்கு வருடங்கள் இந்த வாழ்க்கையாகிப் போக, பின்பு ஒரு நாள் அந்த துணைத் தலைவன் போலிஸ் என்கௌன்டரில் போடப்பட, இவளும் அர்ரஸ்ட் ஆகும் சூழல் வர, போலிஸ் அரஸ்ட் செய்யும் முன்னே தற்கொலை செய்து கொண்டாள்.

வர்ஷினியின் பதினான்காவது வயதில், அதாவது அவள் ஒன்பதாவது படிக்கும் பொழுது, இறந்த பிறகு தான் வர்ஷினிக்கு தெரியும்.

அது வர்ஷினியின் அம்மாவின் இறுதி வேண்டுகோள் ஆகிப் போக ராஜாராமல் மறுக்க முடியவில்லை. மகளிடம் அவள் அன்னை கொடுத்ததாக ஒரு கடிதத்தை கொடுத்து சொல்லி விட்டார்.

இந்த யோசனைகளில் வர்ஷினி இருக்க, ஷாலினி அவளின் ரூமிற்கு வந்தவள், “ரெடியாகு வர்ஷி, உன்னை ஈஸ்வர் அண்ணா வீட்ல இருந்து பொண்ணு பார்க்க வர்றாங்களாம்!” என,

“என்ன” என, “ஆ…” என்று வாய் பிளந்து நின்றாள். அதன் பின் எல்லாம் எல்லாம் துரித வேகம். யாருக்கும் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், சம்மதம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஈஸ்வர் எல்லாம் சிறப்பாக நடத்திக் கொண்டான் என்பது தான் உண்மை.

வர்ஷினிக்கு திரும்ப எதையும் சிந்திக்கும் அவகாசம் கொடுக்க வேயில்லை! அவளுக்கு மட்டுமல்ல யாருக்குமே!

திருமணம் முடிந்தது என்பது வேறு! மணவாழ்க்கை ஆரம்பம் என்பது வேறு!   

 

 

Advertisement