Advertisement

அத்தியாயம் நாற்பத்தி ஏழு :

மௌனம் எல்லா நேரமும் சிறந்தது அல்ல!!!

காரில் போகும் போது ஒரு ஆழ்ந்த மௌனம், வெகு சில நிமிடங்கள் கழித்து “நீ பேசினது தப்பு! அட் தி சேம் டைம், நான் அடிச்சதும் தப்பு” என்று சொல்ல,

ரஞ்சனிக்கு என்ன சொல்வதும் என்றும் தெரியவில்லை, சொல்வதில் விருப்பமும் இல்லை.  

“இனிமே இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கோ!” என,

“ம்ம்!” என்பது போல ஒரு தலையசைப்பு. ஆனாலும் பத்துவைப் பார்த்ததும் மட்டுப் பட்டு இருந்த அழுகை பொங்கியது.

“என்னை நம்பவில்லையே, நான் வர்ஷினியை பேசுவேனா என்று இவன் நினைக்கவில்லையே” என்பது அப்படி ஒரு வருத்தத்தைக் கொடுத்தது. அதுவரையிலும் வருத்தம் மட்டுமே இருந்தது. இப்போது பத்து பேசுவது கோபத்தைக் கொடுக்க ஆரம்பித்தது.

“இப்படி நடக்காம பார்த்துக்கோ” என்றவனைப் பார்த்து “எப்படி நடக்காம” என்று கத்த வேண்டும் போல ஆத்திரம். ஆனால் அது வரவில்லை. அவளின் இயல்பும் அது இல்லை.

திரும்பி ரஞ்சனியைப் பார்க்க அழுகையை அடக்கியபடி அவள் அமர்ந்திருப்பது தெரிந்தது. ஆனாலும் எப்படி சமாதானம் செய்வது என்று பத்துவிற்கு தெரியவில்லை.

“ட்ரீட் போகலாமா? அண்ணி வர சொன்னாங்க!”  

இப்போதைய மன நிலைக்கு ரஞ்சனிக்கு எங்கும் போக விருப்பமில்லை. ஆனாலும் காலையில் வர்ஷினியை முன்னிட்டு தான் பிரச்சனை என்பதால் இப்போது தவிர்த்தல் இன்னும் அதிகமாக தெரியும் என்று மனது சொல்ல, “போகலாம், ஆனா வீட்டுக்கு போயிட்டு போகலாம். நான் பார்க்க நல்லாவே இல்லை, கொஞ்சம் ஃபிரெஷ் ஆகிட்டு போகலாம்!” என

“நீ பார்க்க நல்லா இல்லைன்னு யார் சொன்னா? ரொம்ப நல்லா இருக்க, வீட்டுக்கு போகணும்னா போகலாம், அதுக்காக இந்தக் காரணம் சொல்லாத” என்று சூழலை லகுவாக்கா பத்து சொல்ல, ரஞ்சனி அதற்கு எதுவும் பதில் பேசவேயில்லை.

மனம் சலித்தது. “எங்கே போகலாம்” என்று திரும்ப கேட்டவனிடம், “ஹோட்டல் போகலாம்!” என்றாள். அங்கே செல்ல, அவர்கள் இன்னும் வந்திருக்கவில்லை, இங்கே வந்துவிட்டோம் என தெரிவித்து அமைதியாக அமர்ந்திருந்தனர்.

பத்துவின் புறம் திரும்பக் கூட இல்லை ரஞ்சனி. எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள். திரும்ப அழுகை வரும் போல இருந்தது. பத்து அவளையே பார்த்தபடி அமர்ந்திருப்பது தெரிந்தாலும் திரும்பக் கூட இல்லை.

விடாமல் பத்துவும் பார்த்திருக்க, அரைமணிநேரம் அப்படியே கடந்தது. பத்து பேச ஆரம்பித்த போதே, “ப்ளீஸ், நான் எதுவும் பேசற மூட்ல இல்லை. என்னால எந்த எக்ஸ்ப்லநேஷனும் குடுக்க முடியாது. இப்ப எதுவுமே பேச வேண்டாம்” என்றாள் வேண்டும் குரலில்.

பத்துவிற்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அமைதியாக அவனும் அமர்ந்திருந்தான்.

வர்ஷினி, முரளி , ஷாலினி மூவரும் வர, அவர்களை பார்த்தவுடன் “ஹேப்பி பர்த்டே வர்ஷி” என ரஞ்சனி சொல்லவும்,

“தேங்க் யு அண்ணி!” என்றவள், ரஞ்சனியின் அலுங்கிய நலுங்கிய தோற்றத்தையும் முகத்தையும் பார்த்து, “சாரி அண்ணி, என்னால உங்களுக்குள்ள சண்டையா?” என,

“சண்டைக்கான காரணம் நீதான், ஆனா சண்டை உன்னால கிடையாது” என்று புன்னகைத்தவள், “எப்பவும் நான் உன்னை பத்தி தப்பா பேச மாட்டேன். அந்த நம்பிக்கை வை” என்றாள்.

திரும்பவுமா என்று நினைத்த பத்து, ரஞ்சனியிடம் “திரும்ப எதுக்கு இந்தப் பேச்சு விடு!” என,

“நான் உங்க கிட்ட பேசலை” என்றாள் சற்று குரலுயர்த்தி ஒரு கடினத் தன்மையுடன்..

“அச்சோ! திரும்பவும் சண்டையா!” என பதறிய முரளி, “ரஞ்சனி என்ன இது?” என,

“அண்ணா ப்ளீஸ்! என்னை பேச விடுங்க!” என்று வர்ஷினியின் புறம் திரும்பியவள் ,

“நான் காலையில பேசின எதுவும் தப்பு கிடையாது வர்ஷி புரிஞ்சிக்கோ, நான் பேசின வார்த்தைக்கு தான் நான் பொறுப்பு ஆனா நீங்க புரிஞ்சிக்கிட்ட அர்த்தத்துக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்!” என்றாள் திடமாக.

“கண்டிப்பா இப்பவும் நீ ஈஸ்வரோட போனது தப்பு தான், உனக்கு அவனை பத்தி தெரியலை, என்னால சொல்லவும் முடியலை, அவனோட போயிட்டு திரும்ப வேண்டாம்னு மறுத்தா அவன் ஒத்துக்குவானா என்ன, அந்த பயம் தான் எனக்கு!”

“ஏன்? என்ன பண்ணிடுவாங்க உங்க அண்ணன்?” என்று பத்து கேட்க,

அவன் புறம் திரும்பியவள், “உங்களுக்கும் சொல்றேன், சும்மா அவனை உசுப்பேத்தி விடாதீங்க. என்ன பண்ணுவான் எப்போ பண்ணுவான் யாருக்கும் தெரியாது. அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும், நடந்த பிறகு திரும்ப வருத்தப் படறதுல என்ன பிரயோஜனம்?” என்றவள்.

“ஓகே, நாம இதை பத்தி பேச வேண்டாம்” என்றாள் வர்ஷினியை பார்த்து, “அண்ட் சாரி, உன் பர்த்டே அன்னைக்கு காலையில உன்னை டென்ஷன் பண்ணிட்டேன், ரியல்லி சாரி!” என,

“அச்சோ அண்ணி! என்ன நீங்க..” வர்ஷினி சமாதானம் பேச, ஒரு சகஜமான உரையாடல் ஆரம்பிக்க, “எனக்குப் பசிக்குது” என்று ஷாலினி சொல்ல, ஆர்டர் செய்ய ஆரம்பித்தார்கள்.

அப்போதும் முரளி பத்துவிடம், “ரஞ்சனி சொல்றது நிஜம், சும்மா அவன் கிட்ட சண்டை போடறதோ அலட்சியப் படுத்தறதோ வேண்டாம்!” என்றான்.

பத்துவிற்கு அவர்கள் சொல்வது புரியவில்லை. பட்டால் தானே புரியும்!!!

அண்ணன் அண்ணிகளுடன் ஹோட்டல் சென்று வந்தது மனதிற்கு ஒரு மகிழ்வை வர்ஷினிக்கு கொடுக்க, ஒரு நிம்மதியான உறக்கம், அவளைத் தழுவியது. காலையிலும் அந்த உற்சாகம் தொடர மகிழ்வோடே கல்லூரியும் சென்றாள்.

இறங்கும் போதே இரண்டு நாட்களாக ஈஸ்வர் தொடர்ந்து வந்ததால் தானாக மனதிற்குள் ஒரு தேடல், சுற்றிலும் பார்வையை ஓட்டினால் அவளையுமறியாமல். ஆனால் அவன் இருப்பது போலத் தெரியவில்லை.

பார்வையை அவள் ஒட்டிய போது, அங்கே கிளிப்பச்சை கலரும் கருப்பும் கலந்த ஒரு கார் நிற்க, அவளின் பார்வையை வெகுவாய் அது ஈர்க்க.. அருகில் போய் பார்க்க ஆவல் தூண்டியது.

அந்தோ பரிதாபம், அவளுக்கு முன்னே பல மாணவர்கள் அதன் அருகில் செல்ல, அதனோடு சென்று அவளுக்கும் பார்க்க மனமில்லை.

அதனால் அதை ஃபோட்டோ எடுத்து கூகிள் செர்ச்சில் இமேஜ் கொடுத்து செர்ச் செய்யப் போக, அவளின் மிக அருகினில் ஒரு குரல், “எதுக்கு இவ்வளவு கஷ்டம், அது என்ன கார்ன்னு என் கிட்ட கேட்டா சொல்றேன்!” என்று கேட்க, விதிர்த்து திரும்பியவளின் முன் ஒரு மயக்கும் புன்னகையுடன் ஈஸ்வர் நின்றிருந்தான்.

“எப்போது இவன் வந்தான்?” என்றபடி வர்ஷினி பார்க்க, பார்வை புரிந்தாலும், அதைப் பார்க்கும் தைரியம் அற்றவனாக அதைத் தவிர்த்தவன், Lamborghini huracan அந்தக் கார் பேர் என்றான்.

லம்பார்கினி!!! ஸ்போர்ட்ஸ் கார், அவனை விடுத்து திரும்ப காரின் புறம் பார்வையை ஓட்டினாள்.

“அதுதான், நான் உனக்கு வாங்கின பர்த்டே கிப்ட்!” என,

“என்ன? எனக்கா?” என்பது போல விழிவிரித்து நோக்கினாள். எல்லாம் பார்வை மூலமே, எதுவும் பேச முயலவில்லை.

“நீதான் வேண்டாம் சொல்லிட்ட, ஓகே அப்புறம் கூட வாங்கிக்கோ, இப்போ ஒரு ரைட் போகலாமா? நீ ஓட்டுறயா!” என,

இரண்டு கைகளையும் கொண்டு தானாக வாய் மூடினால் “அச்சோ” என்பது போல,

அந்த நீல நிற விழிகளின் பாவனையை உள் வாங்கிக் கொண்டு, “எதுக்கு இப்படி ஒரு ரியாக்ஷன்?” என்று சின்ன சிரிப்போடு அவன் கேட்க,

“அம்மாடி! இவனோடு ஒரு நாள் போனதற்கு மூன்று நாட்களாக திட்டு வாங்கிக் கொண்டிருக்கின்றேன்! திரும்பவுமா?” என்று எண்ணிய போதும் கார் அவளை மிகவும் ஈர்த்தது.

“வேண்டாம்!” என்று கைகளால் ஒரு சைகை செய்து, “வருகிறேன்” என்பது போல தலையாட்டி கிளம்ப,

“மௌன விரதமா?” என்றான்,

“இல்லையே” என்பது போல அதற்கும் தலையை மட்டுமே ஆட்ட,

“அப்புறம் ஏன் என்கிட்டே பேச மாட்டேங்கற?” என்றவனுக்கு, என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பேசக் கூடாது என்றெல்லாம் இல்லை, ஆனால் அப்போது பேச வரவில்லை.

அவனையே பார்த்து நிற்க, “ஒரு ரைட் போகலாமே!” என்று சொல்லி அவளை ஆழ்ந்து பார்க்க, தானாக தலை “சரி” என்பது போல ஆடியது.

ஈஸ்வரின் முகம் பளிச்சென்று மலர, சட்டென்று சுதாரித்தவள், “இல்லை” என்பது போல தலையசைத்து, விடு விடு வென்று நிற்காமல் அவனை திரும்பப் பார்க்காமல் நடந்து விட, ஈஸ்வருக்குள் ஏமாற்றம் தோன்றினாலும், முகத்தில் ஒரு புன்னகை தோன்றியது.

“இப்படி ஒரு பொண்ணு பின்னாடி நீ சுத்தணும்னு வேண்டுதல் போல” என நினைத்தவன், “எஸ், வேண்டுதல் தான்!” என நினைத்து,

அவனருகில் இருந்த மரத்தின் கீழ் இருந்த திண்டின் மேல் அமர்ந்து கொண்டான். எழ வேயில்லை..

கிளாசில் அமர்ந்தவள், சென்றிருப்பான் என நினைத்து, அந்தக் காரின் மாடலை கூகிளுள் போட்டுப் பார்க்க, லம்பார்கினி  ஹுரகன் என்ற அந்த மாடலின் ஆரம்ப விலை மூன்று கோடி என்று இருக்க,

“அம்மாடி!” என நினைத்தவளின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. மூணு கோடி ரூபாய்க்கு கிஃப்ட் வெச்சிகிட்டு நிக்கறான்.. ஹ ஹ என்று வாய் விட்டு சிரிக்கத் தோன்றியது. தன்னுடைய மொபைலில் அவசரமாக ஒரு செல்ஃபி எடுத்து தன்னை பார்த்தாள்.

“அவ்வளவு அழகா நீ என்பது போல!!!”

“முதல் நாள் என்னைப் பார்த்த பார்வையில், எவ்வளவு அலட்சியம்! இப்போது எப்படி மாறிவிட்டான், ஏன் எப்படி?” என்ற யோசனைகள் ஓட ஆரம்பித்தன.

யோசித்து, யோசித்து, தலை வலிப்பது போல இருக்க, பேசாமல் வீடு சென்று விடுவோமா எனத் தோன்ற, நேரமும் பதினொன்று தான் ஆக, பிரேக் டைமில் கிளாஸ் இன்சார்ஜ் பார்த்து, லீவ் எழுதிக் கொடுத்து, வெளியே வந்த போது தான் ஞாபகம் வந்தது, தாஸ் அவளை காலையில் கல்லூரி வாசலில் இறக்கி விட்டு அப்படியே போய் விட்டான் என.

அவனின் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப் பட்டு இருந்தார். சரி, எதற்கு அவனுக்கு அழைக்க, தானே ஒரு ஆட்டோ பிடித்து வீடு சென்று விடலாம், பின்பு தாஸிற்கு சொல்லிக் கொள்ளலாம் என நினைத்தாள்.

கண்கள் அவளையறியாமல் அந்தக் கார் இருந்த புறம் திரும்ப, அது அங்கேயே தான் இருந்தது. என்ன இங்கே நிற்கின்றது என்று தோன்ற, வேகமாகப் பார்வையை சுழல விட்டாள்.

காலையில் அவர்கள் எங்கே பேசினார்களோ, அந்த மரத்தின் அடியில் இருந்த திண்டில் அமர்ந்து இவளையே பார்த்திருந்தான் ஈஸ்வர்.

ஆனால் எழுந்தெல்லாம் வரவில்லை. தீவிரமாக அவளை பார்த்து அமர்ந்திருந்தான். தானாக கால்கள் அவனின் புறம் சென்றது. “ஏன்? ஏன் இப்படி பண்றீங்க?” எனக் கேட்கவும் செய்தாள்.  

“எப்படி பண்றேன்?” என்றான்.

“இப்படி எதுக்கு உட்கார்ந்து இருக்கீங்க?”

“எதுக்குன்னு உனக்குத் தெரியாதா, பேசாம சிங்கப்பூர்ல உட்கார்ந்திருதேன், அப்பா பார்க்கணும் சொன்னாங்க வான்னு சொல்லித்தான் உங்கண்ணன் என்னை வர சொன்னான்”

“திரும்ப என்னை இங்க உட்கார வெச்சிருக்கீங்க, இன்னும் என்னை எந்த எக்ஸ்ட்ரீம்க்கு கொண்டு போகப் போறீங்க தெரியலை” என்றவனின் குரலில் அதீத தீவிரம்.

“ஏன் எந்த எக்ஸ்ட்ரீம்க்கும் போறீங்க? யு ஆர் ஹேன்ட்சம், இன்டெலிஜென்ட், ரிச், அண்ட் ஐ திங்க் ஸ்டில் யு ஆர் எ பேச்சிளர். ஏன் என் பின்னாடி சுத்தறீங்க? உங்க பின்ன பொண்ணுங்க க்யு நிற்பாங்க!”

“ஏய் என்ன பார்த்தா என்ன லூசு மாதிரி தெரியுதா?” என்று கேட்டு ஈஸ்வர் நெருங்கிய வேகத்திற்கு பயந்து பின் வாங்கினாள்.

அவளின் கண்களில் மிரட்சியை பார்த்தவன் சற்று தணிந்து, “எனக்கு நீ தான் வேணும், நீ மட்டும் தான் வேணும்! அண்ட் கல்யாணம் பண்ண தானே கேட்கறேன், அதுல என்ன தப்பு?” என,

“ப்ச்!” என ஒரு இயலாமையில் சலித்தாள்.

“உங்கப்பா உன் கல்யாணத்தை பார்க்காம போக முடியாது. உனக்கு யாரையும் பிடிக்கலை. அப்போ என்னை கல்யாணம் செய்துகிட்டா என்ன? எஸ், நான் உன்கிட்ட தப்பா நடந்திருக்கேன். நான் ஒத்துக்கறேன். ஆனா அது என்னையும் மீறி நடந்த ஒன்னு, எப்பவும் எனக்கு உன் ஞாபகம் தான், எல்லா பொண்ணுங்க கிட்டயும் அப்படி இல்லை” என விளக்கம் கொடுத்தான்.  

“ஒருத்தர் கிட்ட அப்படி நடந்தாலும், தப்பு! தப்பு தான்!” என,

“ப்ச்” என அவளைப் போல சலித்தவன், “இதுக்கு மேல எல்லாம் எக்ஸ்ப்லையின் பண்ண முடியாது, நீ கிளம்பு முதல்ல!” என்றான் கோபமாக.

வர்ஷினி தோளை அலட்சியமாக குலுக்கி கிளம்ப, அவளின் கண்கள் காட்டிய பாவனையில் அவளை கடித்து தின்றுவிடும் ஒரு ஆவல் புயலாய் அவனுள் அடிக்க, அவளுக்கு முன் கிளம்பி விட்டான்.

ஈஸ்வர் நடந்து சென்ற வேகம், காரில் அமர்ந்த விதம், அதை கிளப்பி சென்ற ஸ்டைல், எல்லாம் “செம” என்று பார்பவர்களை சொல்ல வைக்கும். 

 வர்ஷினிக்கு “என்னடா இது? இவன் ரொம்ப பண்றான்!” எனத் தான் தோன்றியது. “இவனுக்கு பிடிச்சா நான் இவனை கல்யாணம் பண்ணிக்கணுமா?” என மனதினில் மட்டும் நினைக்கவில்லை, அவளின் அப்பாவிடமும் கேட்டாள்.

ஆம்! இவள் மதியம் வந்தவுடனே, தந்தையை பார்க்கச் செல்ல, அவர் திருமணப் பேச்சு எடுக்க, “எனக்கு யாரையும் பிடிக்கவில்லை” என,

“அப்போ ஈஸ்வர் கல்யாணம் பண்ணிக்கோ!” என்றார் ஸ்திரமாக. அதற்கு தான் அந்தக் கேள்வியை கேட்டாள்.

“பண்ணிக்கோ பாப்பா! அவனுக்கு உன்னை இவ்வளவு பிடிக்கும் போது நல்லா பார்த்துக்குவான். எத்தனையோ பிரச்சனைகளை கடந்து வந்துட்டோம். இப்போதைக்கு வேற பிரச்சனை கிடையாது. ஆனாலும் உன்னை ஈஸ்வர் மாதிரி ஒருத்தன் கையில ஒப்படைச்சா, நான் நிம்மதியா போவேன்!” என்றார்.

தந்தையின் குரலில் அவ்வளவு வேண்டுதல். வர்ஷினி அமைதியாக இருக்கவும். “புரிஞ்சிக்கோ பாப்பா, உன்னை அவனுக்கு பிடிச்சிருக்கு, அதுல எல்லாம் அடிபட்டு போகும். முக்கியமா உன்னோட பின்னனி. நானும் முட்டாள் தனமா இவ்வளவு நாள் அதை பத்தி யோசிக்காம இருந்துட்டேன். அதையும் விட நம்ம கிட்ட பணம் இருக்கின்ற திமிர் கூட”

“நம்மோட பணம் கண்டிப்பா ஒரு நல்ல வரனை கொண்டு வருது தான். ஆனா அவங்க உன்னோட அம்மா யார்ன்னு கேட்கறாங்க. என்னால அதுக்கு பதில் சொல்ல முடியலை! அதனால தான் இந்த ஒரு வருஷமா நான் உனக்கு மாப்பிள்ளை பார்த்தும் அமையலை. யாருக்காவது எப்படி பாப்பா உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடியும். யோசி.. ”  என அவர் சொல்ல..    

“சரிப்பா நான் பேசிட்டு சொல்றேன்!”

“யார் கிட்ட?”

“ஈஸ்வர் கிட்ட”  

“அவன் கிட்ட நீ என்ன பேசப் போற?”

“எதுவோ? எல்லாம் சொல்ல முடியாது!” என்று அவரிடம் கோபமாக சொல்லி சென்றாள். என்னவோ எல்லோரும் மாற்றி மாற்றி வற்புறுத்துவது போல ஒரு தோற்றம்.

அப்பாவின் கூற்றில் இருந்த உண்மையும் சுட்டது!!!

“பாப்பா, பாப்பா!” என்று அவர் அழைக்க அழைக்க சென்று விட்டாள்.

“என்ன பேசப் போறாளோ?” என்று தோன்றிய போதும், பேசப் போவது ஈஸ்வரிடம் என்பதால் அவருக்கு மிகவும் பயமாக இருந்தது.  

முன்பிருந்தே ராஜாராமிடம் அவன் பேசும் போதே அவனின் பேச்சுக்கள் வர்ஷினியின் நலனைக் கொண்டு இருப்பதால் அவளின் ரகசியங்கள் காக்கப்படும் என்பதில் அவருக்கு எந்த சந்தேகமுமில்லை. ஆனாலும் இது தேவையில்லாத பேச்சுக்கள் தானே எனத் தோன்றியது. 

அவளின் ரகசியங்கள் காக்கப் படும், ஆனால் விருப்பம் குறைந்து திருமணதிற்கு மறுத்து விட்டால்? அதையும் விட அவளையும் அவளின் அம்மா போல நினைத்து விட்டாள்?  

காதல் எல்லாவற்றையும் மறக்க வைக்கும் என்பதை விட எதையும் கருத்தில் கொள்ளாது, எதையும்!!!

 

Advertisement