Advertisement

அத்தியாயம் நாற்பத்தி மூன்று :

நதியே நதியே காதல் நதியே                                                                                    நீயும் பெண்தானே அடி                                                                                                    நீயும் பெண்தானே! 

பரந்த விரிந்த கடலின் வெகு முன் இருந்த சாலையில் காரை நிறுத்தியவன், “நேரா போனா கடலுக்குப் போகலாம், போட் இருக்கு, இந்த பக்கம் இன்னம் கொஞ்சம் தூரம் போனா ரிசார்ட் ஒன்னு இருக்கு, அங்கயும் போகலாம், இன்னும் கொஞ்சம் தூரம் போனா மகாபலிபுரம் வரும் போகலாம், அங்கே போகலாம்! இல்லை வேற எங்கயாவது போகலாமா?” என்றான்.

கடலுக்குள் செல்ல தான் வர்ஷினிக்கு ஆசை, இதுவரை சென்றதில்லை. “என்ன பண்ணலாம் சரண்?” என்று சரணிடம் கேட்டாள்.

அவனும் அங்கே போகலாம் என்று கடலைக் காட்டினான்.

“அங்கேயே போகலாம்!” என்று வர்ஷினியும் காட்ட,

“ஓகே!” என்றவனின் முகம் வெகுவாக மகிழ்ச்சியைக் காட்டியது. அவனுக்கும் அங்கே தானே போகவேண்டும்.

காரை சற்று தூரம் மணலில் விட்டு இறங்கினான். அங்கே சில பேர் இருக்க, இவனை பார்த்தும் ஓடி வந்தனர். லுங்கி, பேன்ட், த்ரீ போர்த்ஸ் என இருந்த மீனவ இளைஞர்கள், “தலை எப்படி இருக்கீங்க?” என்ற அவர்களின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.

“நல்லா இருக்கேன்! போகலாமா!” என்று அவர்களை கேட்க,

“போகலாம்!” என்றவர்களுக்கு அவனுடன் நிறைய பேச வேண்டும் போல தோன்றினாலும், ஈஸ்வரின் முகம் இப்போது அதற்கு அனுமதியில்லை என்ற பாவனையைக் காட்டியது.

“இது ஜகன் அண்ணா பசங்க!” என்று சரணையும் பிரணவியையும் காட்டினான். கூடவே வர்ஷினியை “என் ஃபிரண்ட்” என்று அறிமுகப்படுத்தினான்.

“வணக்கம் மேடம்!” என்றார்கள் பணிவாக.. எல்லோரும் பார்க்க தடி தடியாக இருக்க, “இவர்களோடா போகவேண்டும்!” என்று வர்ஷினிக்கு தோன்றியது.

ஒரு விசைப் படகை ஐந்த நிமிடத்தில் அவர்கள் தயார் செய்தனர். பிரணவி இன்னும் வர்ஷினியின் தோளில் உறங்கிக் கொண்டிருக்க, வர்ஷினி அவளை தூக்கிக் கொண்டு நடந்தாள்.

“என்னிடம் கொடு!” என்ற ஈஸ்வருக்கு, “ஒருவேளை முழிச்சிட்டா பயந்துக்குவா!” என்ற வர்ஷினியின் பாவனையில்,

“டேய், முதல்ல உன் லுக் மாத்து” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.

அவள் தூக்கி நடக்க, ஈஸ்வர் சரணோடும், அவர்களின் பெரிய பேக் ஒன்று குழந்தைகளுக்கு தேவையான ஸ்நேக்ஸ், ஜூஸ் என்று தூக்கிக் கொண்டு நடந்தான்.

எதிரில் பார்பவர்களுக்கு அவர்கள் குடும்பமாய் தான் தெரிவர். பார்க்கவே பாந்தமாய் பொருந்தினர்.

விசைப் படகில் முதல் பயணம் வர்ஷினிக்கு. இரு இளைஞர்கள் ஓட்டினாலும் இவர்கள் இருக்கும் புறம் இல்லை வேறு புறம் நின்றனர். “பிரணவியை குடு! அவ கண் முழிச்சா குடுக்கறேன்!” என்று கட்டாயப் படுத்தி ப்ரணவியை வாங்கினான்.

வர்ஷினி அதன் பிறகு சரணோடு சேர்த்து அந்த பயணத்தை அனுபவிக்க துவங்கினாள். வெயில் அதிகம் உரைக்கவில்லை, அந்த உப்புக் காற்று, அந்த நீரின் வாசனை என்று அவளுக்கு ஒரு புது உணர்வைக் கொடுத்தது.

அந்த நீல நிற நீரை கிழித்துக் கொண்டு படகு செல்ல, அதை ஒரு ஆர்வத்தோடு பார்த்திருந்தாள். ஈஸ்வர் எதுவுமே பேசவில்லை பேச முயலவும் இல்லை. அமைதியாக அவளை பார்த்து நின்றிருந்தான்.

ஒரு ஒரு மணிநேரம் அதில் சுற்றி சுற்றி வந்தனர். வெகுவாக அந்த பயணத்தை ரசித்தாள்! அனுபவித்தாள்!

ஈஸ்வருக்கு அவளிடம் பேச வேண்டும், அந்த கடலுக்கும் அவளுக்கும் உள்ள அவனின் ஈர்ப்பை அவளிடம் சொல்ல வேண்டும் என்று ஒரு பேராவல் மனதில் பொங்கியது. ஆனாலும் அமைதி காத்தான். அதை சொல்லும் அளவிற்கு இன்னும் ஒரு ஈர்ப்போ அல்லது உறவோ வர்ஷினிக்கு தன்னிடம் இல்லை என புரிந்து பேசாமல் நின்றான்.

ஆனாலும் ஈஸ்வர் என்ன செய்கின்றான்? தன்னை பார்க்கின்றானா என்று பார்க்கும் ஒரு தைரியம் வர்ஷினியிடம் வந்திருந்தது. அவ்வப்போது தைரியமாய் அவனை அவனின் கண்களைப் பார்த்தாள்.  ஆனால் இவள் தான் கண்ணாடி அணிந்திருந்தாளே!

இடையில் ஏதேதோ ஸ்நாக்ஸ், அவளிற்கும் சரணிற்கும் ஈஸ்வர் கொடுத்ததை உண்டனர். நடுவில் பிரணவியும் விழித்துக் கொள்ள, அவளின் கொஞ்சல் மொழிகளோடு பயணம் இன்னும் அருமையாய் அமைந்தது.

நேரம் ஒன்றை நெருங்க, கரை திரும்பினர்.

இறங்கியதும், “எவ்வளவு பணம் வெச்சிருக்க?” என்றான் ஈஸ்வர்.

“கார்ட் தான் இருக்கு, ஒரு ஃபைவ் ஹண்ட்ரட் ருபீஸ் தான் கைல இருக்கு!” என்றாள்.

“உன்னோட ட்ரீட் இல்லையா? நான் இப்போ இவங்களுக்கு கொடுத்திடறேன். அப்புறம் நீ எனக்கு கொடுத்துடு!” என்றவன் அவர்களுக்கு பணம் கொடுத்தான்.

பின்பு அருகில் இருந்த ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல, அங்கே அவர்களுக்கு ஏற்கனவே டேபிள் புக் செய்யப் பட்டு இருந்தது. அவர்களிட கேட்டு என்ன வேண்டும் என்று சொல்லி சூப், ஸ்டார்ட்டர்ஸ் என்று ஆரம்பித்து அவர்கள் உணவை முடித்த போது அதன் பின் ஒன்றரை மணிநேரம் கடந்து இருந்தது.

வர்ஷினி அவளின் கண்ணாடியை கழற்றாததால் அவனால் இயல்பாய் இருக்க முடிந்தது. யாரிடம் எப்படியோ ப்ரணவிக்கும் சரணிற்கும் பார்த்து பார்த்து செய்து அவர்களை சாப்பிட வைத்த ஈஸ்வரின் பொறுமை வர்ஷினியை கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும்.

“கார்ட் இங்கே ஸ்கிராச் பண்ணிக்கலாம்!” என்று பில்லை அவளே கொடுக்க வைத்தான்.

பின்பு வீடு திரும்பும் போது சரண் உறங்கிவிட, வர்ஷினி ப்ரணவியிடம் கதை பேசி வந்தாள்.

வர்ஷினியை அவளின் வீட்டில் இறக்கி விட்டான். அதுவும் கேட்டின் உள் வந்து இறக்கி விட்டான். ஆனால் ஈஸ்வர் இறங்கவில்லை.

“அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே” என்றவன், “ஐ ஹேவ் எ ஸ்பெசல் கிஃப்ட் பார் யு. அதை உனக்கு கொடுக்கட்டுமா?” என கேட்க,

ஈஸ்வர் கேட்ட பாவனையில் “என்ன?” என்றாள் தயங்கித் தயங்கி.

“அது சஸ்பென்ஸ்! நாளைக்கு மார்னிங் தான் கொடுப்பேன்!” என்றான் ஒரு புன்னகையோடு.

அவன் கொடுத்த பில்ட் அப்பில் பயந்து தயங்கியவள், இப்போது அவனின் புன்னகையில் தெளிந்தாள்.

“வில் வெயிட்” என்று பதிலுக்கு புன்னகைக்க,

ஒரு சிறு தலையசைப்போடு கிளம்பியவன், சற்று தூரம் வந்ததுமே ராஜாராமிற்கு அழைத்தான். அப்போது அங்கே அவர்கள் ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு கிளம்பினர்.

முரளி தான் ஃபோனை எடுக்கவும், “அப்பா இல்லையா?” என்ற ஈஸ்வரின் கேள்விக்கு,

“இருக்கார்!” என,

“அவர் கிட்ட கொடு!” என கொடுத்தவுடன், “அப்பா, வர்ஷினியை வீட்ல விட்டுட்டேன்” என்று சொல்லி வைத்து விட்டான்.

“என்னப்பா?” என்ற முரளியின்  கேள்விக்கு,

“வர்ஷினியை வெளிய கூட்டிட்டுப் போனான், இப்ப வீட்ல விட்டுட்டேன்னு சொன்னான்” என,

அருகில் இருந்த பத்துவிற்கும் ரஞ்சனிக்கும் முகம் சுருங்கி விட்டது. பின்னே காலையில் ரஞ்சனி அங்கே பத்துவை அழைத்துக் கொண்டு சென்ற போது ஈஸ்வர் வீட்டில் இருந்து கிளம்பியிருந்தான். பின்பும் போன் செய்தாள், மெசேஜ் செய்தாள், எதற்கும் பதிலில்லை. சிலமுறை அல்ல பலமுறை…

அதுவும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றிருந்தான் என்று தெரியும், மதியம் வந்து விட்டானா என்று கேட்க அப்போதும் இல்லை.

நேற்று நடந்ததற்கு சமாதானம் செய்வோம், சமாதானம்  ஆகாவிட்டால் மன்னிப்பாவது கேட்போம் என்று காலையில் இருந்து ஈஸ்வரை பிடிக்க முற்பட… முடியவேயில்லை.

ஆனால் வர்ஷினியுடன் சென்றிருக்கின்றான், தங்களுக்கு தெரியவில்லை, தங்களின் அழைப்பையும் ஏற்கவில்லை என்பது பத்துவிற்கும் ரஞ்சனிக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.

“எப்போ போனா? என்கிட்டே நீங்க சொல்லவேயில்லை அப்பா” என்று முரளி கேட்க, அப்போதுதான் அவனுக்கும் தெரியாது என்று பத்துவிற்கு தெரிந்தது.

“காலையில என்கிட்ட கேட்டான். நான் ஓகே சொன்னேன்” என்றார் ராஜாராம். அவர் சொன்ன பாவனையிலே இதற்கு மேலே கேட்காதே என்ற பொருள் இருக்க, முரளியும் பத்துவும் பேசவில்லை.

ரஞ்சனியால் பேச முடியவில்லை, “உன் அண்ணன் செய்வது உனக்கு தெரியாதா?” என்று கேட்டு விட்டால் என்ன சொல்லுவாள்! அமைதியாகிவிட்டாள்.

வீடு வந்தவுடனே “பாப்பா என்ன பண்ணறான்னு பாரு!” என்று ராஜாராம் சொல்ல, அங்கே இருந்த ஷாலினி “இப்போதான் மாமா பார்த்தேன், தூங்கறா!” எனவும்,

பின்பு அவர் ஒய்வு எடுக்க…

ஈஸ்வர் வர்ஷினியை கூட்டிக் கொண்டு வெளியே சென்றிருக்கின்றான், இன்னும் அம்மாவிடம் பெரியம்மாவிடம் சொல்லாமல் இருந்தால் சரியல்ல சொல்லி விடுவோம் என்று நினைத்து, ரஞ்சனி அம்மா வீடு போக முடிவெடுத்து கமலாம்மாவிடம் சொல்லி கிளம்பியவள்…

“என்னை வீட்ல விட்டுடுங்க!” என்றாள் பத்துவிடம்.

அதுவே சொன்னது “நான் மட்டும் தான் போகின்றேன்! நீ வேண்டாம்!” என்று.

பத்து அவளை வீட்டில் விட, இவர்களின் கார் பார்த்து வந்த ரூபா “வாங்க!” என்று பத்துவையும் உள் அழைக்க,

“அவருக்கு வேலை இருக்காம் அண்ணி!” என்று ரஞ்சனி சொல்லி பத்துவை அனுப்பி உள்ளே வந்தாள்.

“ஏன் ரஞ்சி டென்ஷனா இருக்க?” என்ற ரூபாவிடம்,

“காலையில குழந்தைங்களை கூட்டிட்டு விஸ்வா எங்க போயிருந்தானாம் அண்ணி!”

“எதோ பர்த்டே செலப்ரஷன் க்ளோஸ் ஃபிரண்ட்க்குன்னு சொன்னான்”

“யாருன்னு நீங்க குழந்தைங்க கிட்ட கேட்கலையா?”

“சரண் வரும் போதே தூங்கிட்டு வந்தான், பிரணவி வந்ததும் தூங்குறா, விஸ்வா ஒன்னும் சொல்லலை, ரூம்ல இருக்கான். யாருக்கு செலப்ரேஷன்” என ரூபா கேட்க…

“வர்ஷினிக்கு!” என ரஞ்சனி சொல்ல,

“என்ன?” என்று நின்றாள் ரூபா,

ரஞ்சனி வந்த அரவம் உணர்ந்து வந்த அவளின் அம்மா பெரியம்மா இருவரும் இதைக் கேட்டனர்.

“என்ன குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு ஒரு பெண்ணோடு போகின்றானா? அதுவும் வர்ஷினியுடன்? அது ஏன் யாரிடமும் சொல்லாமல் சென்றான்”

என்ன நடக்கின்றது என்று புரியாமல் விழித்தனர்.

சிறு நதிகளே! நதி தொடும் கரைகளே!                                                                    கரை தொடும் நுரைகளே! நுரைகளில் இவள் முகமே!

அத்தியாயம் நாற்பத்தி நான்கு:

நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும்,                                                                        வழி போக துணையாய் அன்பே வாராயோ!

“அம்மா வர்ஷினியை கல்யாணம் பண்ண என்னோட மாமனார் கிட்ட விஸ்வா கேட்டிருப்பான் போல!” என்று பட்டென்று விஷயத்தை ரஞ்சனி சொல்லி விட..

“என்ன?” என்று அதிர்ந்து அமர்ந்து விட்டார் மலர்.

“அந்த பெண்ணையா? திருமணமா?” என்பது ஒரு புறம்.. “என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை” என்பது ஒரு புறம்..

எப்படி இது சாத்தியம்! அதுவும் அவ்வளவு கௌரவம் பார்ப்பவன் எப்படி இப்படி.. அம்மா யார் என்று தெரியாத அல்லது சொல்லாத பெண்ணை எப்படி மணப்பான்.

ஒரு வார்த்தை கூட யாரிடமும் பேசும் நிலையிலோ, கேட்கும் நிலையிலோ மலர் இல்லை.

அதற்குள் பெரியம்மா, சௌந்தரி பாட்டியிடம் சொல்லியிருக்க அவருமே என்ன என்று அதிர்ந்து விட்டார். அப்பா என்று சொல்லிக் கொண்டாலும் அவளின் அம்மா யார் என்று ராஜாராம் சொல்லியதில்லை. இரண்டாவது மனைவியின் பெண் என்றும் வந்ததில்லை.

எப்படி இப்படி ஒரு பெண்ணை தங்கள் வீட்டில் திருமணம் செய்ய முடியும்.

“உங்க கிட்ட ஏதாவது சொல்லியிருக்கானா?” என்று மாமியாரிடமும் அக்காவிடமும் மலர் கேட்டார். ஏனென்றால் அம்மாவை விட பெரியம்மாவும் பாட்டியும் இன்னும் நெருக்கம் ஈஸ்வருக்கு.

“இல்லை!” என்று தலையாட்டினர்,

“ஒரு முறை ரஞ்சனி வீட்டுக்கு போகும் போது எங்களை அவன் தான் கூட்டிட்டு வந்தான். அப்போ ஃபைனான்ஸ் பிரிச்சு ஜகன்கும் ரஞ்சனிக்கும் கொடுத்துடுவேன்னு சொன்னான்,

“வேண்டாம்! உனக்கு அதுல பங்கு இருக்குன்னு நானும் அத்தையும் எவ்வளவோ சொன்னோம்! கேட்கலை!”

“நாங்க அவனுக்கு பிரியமான ஒன்னை எப்படி ஈசியா தூக்கிக் கொடுத்துட்டான்னு தான் இருந்தோம். வேற எப்பவும் எதுவும் அவன் பேசினதில்லை, திரும்ப சிங்கப்பூர் போயிட்டான்” என்றனர்.

“எனக்கு ஒரு வருஷம் முன்னமே தெரியும்மா கேட்டான்னு… ஆனா திரும்ப சிங்கபூர் போயிட்டான். அதனால விட்டுட்டான்னு நினைச்சேன். திரும்ப ஆரம்பிப்பான்னு எனக்கு தெரியாது, ரொம்ப தீவிரமா இருக்கான்!” என்றும் கூடவே சொல்ல..

அப்போது தான் ஜகனும் நமசிவாயமும் வந்தனர். அவர்களுக்கும் விஷயம் தெரிய, எல்லோரும் அதிர்ந்து அமர்ந்து இருந்தனர். விஸ்வாவா இப்படி என்று..

தங்களுக்கு சமம் இல்லை என்று அவன் நினைத்தால், சிரிப்போடு விலகிக் கொள்வான், பேசக் கூட மாட்டான்.

இப்படி ஒரு பெண்ணை வாழ்க்கை துணையாக எப்படி தேர்ந்தெடுத்தான். அதுவும் ஒரு வருடம் முன்பே.. பேசியிருகின்றான்! தங்களுக்கு தெரியவேயில்லை!

இப்படியா பிள்ளைகளை வளர்த்திருகின்றோம்.

வீடே அதிர்ந்து நின்றது.

சரண் எழுந்து வரவும், “யாரோட போனீங்க சரண்?” என்றாள் ரூபா.

“வர்ஷினிக்கா கூட”  என்றான் சரண்.

“அப்படி எப்படி போவாங்க, அந்த பொண்ணு எப்படி போகும். இது தப்பில்லையா?” என்று மலர் கோபப்பட்டவர்.

“எங்க? எங்கடா போனீங்க?” என்று சரணை துருவ,

“சித்தப்பா யார் கேட்டாலும் யார் கூட போனோம்னு சொல்லு, ஆனா எங்க எங்க போனோம் சொல்லக் கூடாதுன்னு காலையிலயே சொன்னாங்க” என்றான் தெளிவாக.

“எமகாதகன்டா இந்த விஸ்வா!” என்று ரூபா பார்த்திருந்தாள். அவர்கள் பேசும் போதே ஈஸ்வர் இறங்கி வந்தான்.

வீடு மொத்தமும் இருக்க நடுவில் சரண் நிற்க, விஷயம் எல்லோருக்கும் தெரிந்தது, புரிந்தது.

எல்லோரையும் பார்த்து வந்தமர்ந்தான்…

“என்ன நடக்குது விஷ்வா?” என்றார் நமசிவாயம்.

பதில் பேசாமல் அமைதியாக இருந்தான்…

“அப்பா கேட்கறார் தானே சொல்லுடா?” என்றார் மலரும்.

“இங்க இருக்குற எல்லோரும் எனக்கு ரொம்ப நெருக்கமானவங்க தான். ஆனா அதுக்காக இத்தனை பேர் முன்னாடி என்னால எதுவும் பேச முடியாது!” என்றான் தீர்மானமாக.

“கல்யாணம் பேசியிருக்க, இன்னைக்கு அந்த பொண்ணோட வெளில போயிருக்க, நீயா இப்படி? எங்ககிட்ட எதுவும் சொல்லவேயில்லை, எப்படி அந்த பொண்ணு உன்னோட வந்தா.. எப்படி இப்படி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ண முடியும்?” என்று மலர் வர்ஷினியை பேச..

“ஏன் அந்த பொண்ணுக்கு என்ன? உங்ககிட்ட எப்படி பேச முடியும் அவளுக்கு சம்மதம் இல்லாத போது, ஒரு வருஷம் முன்ன முரளி மூலமா பேசினேன் அவ ஒத்துக்கலை. சரின்னு ஒரு வருஷம் இடைவெளி விட்டேன். திரும்ப இப்போ கேட்கிறேன். அவ சரின்னு சொன்னா தானே உங்க கிட்ட நான் பேச முடியும்!” என்றான்.

“ஓஹ்! உனக்கு சரின்னு கூட சொல்லலை. ஆனா வெளில உன்கூட வர்றாளா? நம்ம வீட்டுக்கு இதெல்லாம் ஒத்துவருமா!” என்றார் இளக்காரமாக.

அந்தத் த்வனி ஈஸ்வரை கோபப்படுத்தியது. “என் கூட வர்றதுக்கு அவங்கப்பா கிட்ட பெர்மிஷன் கேட்டு, அவர் சரின்னு சொன்னதுக்கு அப்புறம் தான் வந்தா.. அதுவும் சரண், பிரணவிக்காக தான் வந்தா,  உங்க பசங்க ஒன்னும் சூப்பர் பசங்க கிடையாது, நம்ம குடும்பத்துக்கு ஒத்துவருமான்னு நீங்க கேட்கற அளவுக்கு”

“ஒருத்தன் பணத்தை சூதாடி விட்டான், இன்னொருத்தி சொல்லாம கொள்ளாம கல்யாணம் செஞ்சு வந்து நின்னா…”

“இவங்க செஞ்சதாவது வெளில சொல்ல முடியும். நான் செஞ்சது சொல்லக் கூட முடியாதும்மா” என நிறுத்தினான். அதனை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை.

ரஞ்சனியின் முகம் முற்றிலும் வேதனையைக் காட்டியது. இவன் எப்போது இதை விடுவான் என்று. கூடவே முதல் நாள் வர்ஷினியை பார்த்தும் இவன் சொன்னது என்ன? இப்போது நான் அவளுக்கு கீழா? என்று தான் தோன்றியது.

ஒரு நிமிடம் வேதனை, மறு நிமிடம் முகம் இறுகி விட்டவள். “தோ பாரு விஷ்வா, உன்னை பத்தி பேசிக்கோ. என்னை பத்தி ஜகன் பத்தியெல்லாம் நீ பேச வேண்டியது இல்லை.. நான் அவரை கல்யாணம் தான் பண்ணி வந்தேன். இப்படி ஊர் சுத்தலை!” என்றாள் காட்டமாக.

“அப்போ உங்களை பத்தி நான் பேசக் கூடாது, உங்களுக்கும் எனக்கும் சமந்தம் இல்லைன்னு சொல்ற. நீங்க பிரச்சனை பண்ணும் போது காப்பாதிவிட நான் வரணும் ஆனா அதை சொல்லக் கூடாது இல்லையா” என்றான் ரஞ்சனியை பார்த்து.

“நம்ம என்ன பேசிட்டு இருக்கோம். நீங்க ரெண்டு பேரும் சண்டை போடறீங்க!” என்றார் பாட்டி.

“சண்டை போடாம என்ன பண்ண பாட்டி? நான் தான் அவளை கூட்டிட்டு போனேன், அதுவும் குழந்தைங்களை காட்டி! அவங்கப்பா கிட்ட கேட்டுட்டு தான் வர்ஷினி வந்தா! தப்பா பேசக் கூடாது இல்லையா!”

“இவளோட நாத்தனார் அவ, வர்ஷினியை இப்போ ஒரு வருஷமா பார்க்கிறா! அப்போ உடனே இவ தானே அம்மா பேசினதுக்கு பேசணும். இதுல நம்ம செஞ்சதை தானே சொன்னேன்.. இவ தான் பேசறா!”

“அதுவும் இவ கல்யாணம் பண்ணினாலாம், நான் ஊர் சுத்தறனாம்!”

“இவ செஞ்சா சரி? நான் செஞ்சா தப்பா? இவளும் பத்துவும் பேசினாங்க கல்யாணம் நடந்துடுச்சு, அப்படியெல்லாம் வர்ஷினி ஒத்துக்க மாட்டா.. அப்போ ஊர் தானே சுத்த முடியும். அதுவும் எனக்காக வரலை, குழந்தைங்களுக்காக!”

“சின்ன பொண்ணு அவ! முதல்ல நீதான் அம்மா பேசின போது சப்போர்ட் போகணும், நம்ம சண்டை வேற.. நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணனும் தானே! உன் புருஷனோட தங்கை தானே!”

“எதுக்கு பண்ணனும்? எதுக்கு பண்ணனும்? அதுதான் நீ இவ்வளவு சப்போர்ட் பண்ணும் போது, நான் ஏன் பண்ணனும்?”

“நான் வேற? நீ வேற? அவ உங்க வீட்டுப் பொண்ணு இல்லையா?”

ஈஸ்வர் சொல்லுவது நூறு சதவிகிதம் நிஜம் என்றாலும், அதை அந்த சமயம் ஈஸ்வர் முன் ஒத்துக்கொள்ள மனதில்லை, அவனையே முறைத்துப் பார்த்து நின்றவள்,

“நீ அதையும் இதையும் பேசி பிரச்சனையை திசை திருப்பற!” என்றாள் ஆவேசமாக.

“ஆமாம்! அப்படிதான்! அதுக்கு என்ன இப்போ?” என்று ஈஸ்வர் அசால்டாய் சொல்ல,

யாருக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

சில அமைதியான மணித்துளிகள், மலர் தான் திரும்ப, “நீ அந்த பொண்ணை கல்யாணம் பண்ண எங்களுக்கு இஷ்டமில்லை..” என்றார்.

“நான் யார்கிட்டயும் சம்மதம் கேட்கலை!” என்று பதில் சொல்பவன் தான் ஈஸ்வர். அதுதான் அவனின் பிறவிக் குணமே! அதுதான் அவனின் இயல்பு கூட.. ஆனாலும் பதில் பேசாமல் இருந்தான்.

அதற்கு ஒரே காரணம், இதில் எங்கேயும் வர்ஷினி இல்லை. ஆனாலும் இப்போது இவர்கள் அவளை பிடித்து இழுத்துக் கொண்டிருகிறார்கள். இன்னும் பேசினால் இழுப்பார்கள் என்பது தொட்டு பதில் பேசினான் இல்லை.

ஆனாலும் அவன் பதில் பேசாத போதும், அம்மா சொல்வதால் அவன் மாறிவிடுவான் என்று நம்புபவர்கள் யாருமில்லை.

யாருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை, யாருக்கும் விருப்பமில்லை…

ஈஸ்வர் எனக்கு சொத்துக்கள் வேண்டாம். ஜகனிற்கும் ரஞ்சனிக்கும் கொடுத்து விடுகிறேன் என்ற போது கூட நமசிவாயமும், மலரும் கலங்க வில்லை. தங்கள் மகன் ஒன்றுமில்லாமல் போய்விடுவானே என்று நினைக்கவில்லை.. ஆனால் இன்று பயமாக இருந்தது. ஏனென்றால் கௌரவம் அது இது என்று இவர்களை விட ஈஸ்வர் தான் அதிகம் பிடித்து தொங்குவான். அதனால் சொத்துக்களை சம்பாதித்துக் கொள்வான். கௌரவம் குலைய விடமாட்டான் என்ற நம்பிக்கை இருந்தது.

இப்போது எப்படி அம்மா யார் என்று தெரியாத பெண்ணை கொண்டு வருவது என்ற பயம்…

அதையும் விட தாங்கள் அறிந்த ஈஸ்வர் இதை ஒத்துக் கொள்ள மாட்டான், திருமணம் முடிந்த பின் அவனுக்கு ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை இதனைக் கொண்டு பிடிக்காமல் போய் விட்டாள்.

கலங்கி நின்றனர்!!!

கூடவே ஈஸ்வருக்கும் ரஞ்சனிக்கும் முட்டிக் கொள்வது இப்போது எல்லோருக்குமே வெளிச்சம் ஆகிவிட்டது.

எப்படியிருந்த தங்கள் மக்கள் இப்படி ஆகிவிட்டனர். யார் கண் பட்டதோ? சொத்தும் போய்.. உறவும் தடுமாறி, ஈஸ்வர் நிற்பது பெற்றோருக்கு அப்படி ஒரு வேதனையைக் கொடுத்தது.

அங்கே ராஜாராம் மகளிடம் தனிமையில், “பாப்பா! அப்பா உங்களுக்கு கல்யாணம் பண்ணனும் அவ்வளவு தான்! நீங்க ஈஸ்வர் தான் பண்ணனும் இல்லை.. அவருக்கு உங்களை பிடிச்சிருக்கும் போது நல்லா பார்த்துக்குவாங்கன்னு ஒரு எண்ணம்” என்று மரியாதையாக ஈஸ்வரைப் பற்றி பேசியவர்..

“உங்களுக்கு அவரை பிடிக்கலைன்னா வேற காட்டுறேன் பாருங்க! ஒரு ரெண்டு மூணு நாள்ல சொல்லுங்க!” என்று சொல்லி,

இன்னும் மூன்று பேரின் விவரங்கள், படங்கள், என்று ஒரு கவரில் போட்டுக் கொடுத்தார்.

“எனக்கு மூணு நாள்ல பதில் வேண்டும்!” என்றார் ஸ்திரமாக..

“சரி!” என்று தலையாட்டுவதை தவிர வர்ஷினிக்கு வேறு வாய்ப்பே அவர் கொடுக்கவில்லை..

உன் வழியில் என் பயணம் வந்தடைய… நடந்து நடந்து..

 

 

Advertisement