Advertisement

அத்தியாயம் நாற்பத்தி ஒன்று :

அலையே.. சிற்றலையே.. கரை வந்து வந்து போகும் அலையே!

கந்தசஷ்டி கவசம் மனதிற்கு ஒரு அமைதியை கொடுத்திருக்க, நன்கு உறங்கி எழுந்தாள். மனம் சற்று அமைதியடைந்து தெளிவாக இருந்தது.

காலையில் ஏழு மணிக்கே தயாராகி தாஸின் வரவிற்காக காத்திருந்தாள். அவன் வந்ததும், “அப்பாவை பார்த்துட்டு காலேஜ் போகலாம் தாஸண்ணா” என்றவள், ஷாலினியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பவும்,

“இன்னும் டிஃபன் ரெடி ஆகலை வர்ஷி, ஒரு டென் மினிட்ஸ்” என்றவளிடம்,

“அண்ணி நான் சாப்பிட்டுக்கறேன், அப்புறம் லேட் ஆகிடும். நீங்க ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதீங்க, நான் அப்பாவை பார்க்கப் போறேன்!” என்று கிளம்பிவிட்டாள்.

அங்கே சென்றால் அன்று ராஜாராம் நன்கு தெளிவாக இருந்தார், வர்ஷினி வந்ததும் “நீ இரு, நான் குளிச்சிட்டு வர்றேன். இங்க அப்பாவோட யாருமில்லை” என்று அங்கேயே கமலா குளிக்க சென்றவர்,

“எப்பவும் இந்த நேரத்துக்கு முரளி வந்துடுவான், இன்னும் காணோம்!” என்று வர்ஷினியை கேட்டார்.

“தெரியலைம்மா ஷாலினி அண்ணி மட்டும் தான் இருந்தாங்க. தாத்தா இருந்தாங்க. வேற யாரையும் நான் பார்க்கலை, முரளிண்ணா, பத்துண்ணா, ரஞ்சனி அண்ணி யாரையும் காணோம்!” என,

“என்னவோ தெரியலையே?” என்ற யோசனையோடு அவர் குளிக்க சென்றார்.

கமலா சென்றதும் ராஜாராம் பேச ஆரம்பித்தார். “பாப்பா, அப்பா உங்களுக்கு கல்யாணம் பேசட்டுமா?” என்ற உடனே,

“அப்பா ப்ளீஸ், எதுன்னாலும் அப்புறம் பேசலாம். இப்போ வேண்டாம்” என்றாள்.

வர்ஷினியின் குரலில் என்ன இருந்தது என்று அவருக்கு புரியவில்லை, “என்னங்க பாப்பா?” என,

“ஒன்னுமில்லைப்பா, என்னவோ டிஸ்டர்ப்டா இருக்கு! நீங்க முதல்ல சரியாகி வீட்டுக்கு வாங்க பேசலாம்” என்று பேச்சை முடித்தாள்.

என்னவோ மகளின் முகம் தெளிவில்லாதது போல தோன்ற, அதற்கு மேல் ராஜாராமும் பேசவில்லை.

கமலா குளித்து வந்தவுடன், “பாப்பா ரொம்ப களைப்பா தெரியறா.. போய் கேண்டீன்ல ஏதாவது வாங்கிக் கொடு!” என்று சொல்ல,

“யாராவது வரட்டும் போறோம்!” என்ற கமலம்மாவிடம்,

“தாஸ் இருப்பான் தானே! அவனை விட்டு போங்க!” என்றார்.

“வேண்டாம்!” என்ற வர்ஷினியை,

“எனக்கும் பசிக்குது வா!” என்று சொல்லி கமலம்மா அழைத்துப் போக..

உள்ளே வந்த தாஸிடம், “என்னடா நடக்குது? பாப்பா ஏன் ஒரு மாதிரி இருக்குது!” என்றார்.

தாஸ் கொஞ்சமும் யோசிக்கவில்லை, நேற்று ரஞ்சனி எங்கே என்று தேடியது சொல்லியவன், அஸ்வின் ஜெயிலில் இருந்து வந்து விட்டது.. எல்லாம் பிட்டு பிட்டு வைத்தான். “நீங்க வீட்டுக்கு வந்ததும் நானே சொல்லியிருப்பேன்!” என்றான்.

“நேத்தே ஈஸ்வர் சார், அந்த அஸ்வினை, ஒரு வழி பண்ணியிருப்பார். நானும் உதைச்சிட்டேன், ஆனா நம்ம பாப்பா விடலீங்க, அவன் தப்பு பண்ணியிருக்க மாட்டான்னு ஸ்திரமா சொல்லுதுங்க!” என்றான்.

“ஈஸ்வர், சும்மா விட்டுட்டானா?” என்றார் கேள்வியாக,  ஏனென்றால் அஸ்வின் ஈஸ்வருக்கு தானே எதிரி.

“பாப்பா, ஈஸ்வர் சாரை நீங்க எதுவும் பண்ணக் கூடாதுன்னு ஆர்டர் போடுதுங்க, கேட்டுக்கிட்டு அப்படியே நின்னார். எதுவும் செய்யலை!” என்றான்.

“என்ன பண்ணலாங்க அய்யா அந்த அஸ்வினை, திரும்பவும் மிரட்டி, கொஞ்சம் தட்டி  வைக்கலாங்களா” என,

“அதெல்லாம் வேண்டாம். ஏற்கனவே அவனை ஒரு வருஷம் ஜெயில் போட்டுட்டோம், ஆனா நீ அவன் மேல ஒரு கண்ணு வை, ஆளுங்க யாரையாவது அவன் பின்ன விடு, என்ன பண்றான்னு கொஞ்ச நாள் கண்காணிப்புல இருக்கட்டும்”

“என்ன நடக்குதுன்னு அப்போ அப்போ எனக்கு சொல்ற, அது உபயோகமில்லைன்னு உனக்கு தோணினாலும் சொல்ற புரியுதா?” என,

“ம்” என்று தலையாட்டினான். பின்பு அவர் யோசனையில் ஆழ்ந்து விட, கமலாமாவும் வர்ஷினியும் உண்டு வந்தனர்.

காலேஜ் லீவ் போடுவோமா என்று நினைத்த வர்ஷினி, பின்பு வீட்டில் இருந்தால் அதையும் இதையும் நினைப்போம் என்று காலேஜ் கிளம்பினாள்.

அங்கே தாஸ் காரை நிறுத்த, வர்ஷினி இறங்கவும், “ஹாய், எவ்வளவு நேரம் உனக்கு வெயிட் பண்றது. லேட்டா?” என்று நின்றது சாட்சாத் ஈஸ்வரே தான்.

“இவன் எங்கே இங்கே?” என்று வர்ஷினி விழிவிரிக்க,

“நீ சும்மா பார்த்தாலே நான் ஒரு வழியாகிடுவேன். இன்னும் இப்படி பார்த்தா?” என்று புன்னகையுடன் கேட்க,

இவன் என்ன பேசுகின்றான் என்று அப்படியே நின்றாள்.

தாஸ் இவனைப் பார்த்ததும் இறங்கினான், “வணக்கம் சார்!” என்று தாஸ் சொன்ன போதும், “இவன் எங்கே இங்கே?” என்று அவனும் பார்த்திருந்தான்.

“என்னோட வாயேன் உனக்காக ரெண்டு வி ஐ பி அந்த கார்ல வெயிட் பண்றாங்க!” என்று சற்று தள்ளியிருந்த அவனின் காரை காட்டினான்.

“யார்?” என்று யோசனையாக வர்ஷினி பார்க்க, “வா!” என்றான் உற்சாகமாக,

அந்த உற்சாகத்தில் ஒரு ஆர்வம் தோன்ற உடன் நடந்தாள்.

“இப்போ தான் அய்யா கிட்ட திட்டு வாங்கினேன்” என்று நினைத்தவனாக தாஸ் ராஜாராமின் தொலைபேசிக்கு அழைத்தான்,

“ஈஸ்வர் சார், இங்க நம்ம பாப்பாவை பார்க்க வந்திருக்காங்க ஐயா!” என்றான்.

“என்ன பேசிக்கறாங்க?” என்றார் யோசனையாக.

“தெரியலை, அவர் கார் கிட்ட கூட்டிட்டுப் போறார்!” என்று சொல்லி அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தான் .

பார்த்தவன் “அய்யா, ஈஸ்வர் சார் வீட்ல ரெண்டு சின்ன குழந்தைங்க இருக்காங்க தானே… அவங்க வந்திருக்காங்க!”

“கூட யார் இருக்கா?”

“வேற யாரும் இருக்குற மாதிரி தெரியலை!”

“சரி விடு, பாப்பா பார்த்துக்கட்டும் உனக்கு மனசுக்கு ஏதாவது தப்பா பட்டா கூப்பிடு!”

“சரிங்க!” என்று வைத்து அவர்களைப் பார்த்தான்.

“பிரணவிக் குட்டி!” என்று வர்ஷினி முகம் மலர்ந்து சிரித்து, தூக்கி அணைத்து உச்சி முகர்ந்தாள். குழந்தையும் முதலில் தயங்கி, பின் அவளை உணர்ந்து கழுத்தைக் கட்டிக் கொண்டு, திரும்பி ஈஸ்வரை பார்த்தது.

“சரண், எப்படி இருக்க?” என்று அவனையும் இடையோடு அணைத்துக் கொண்டாள்.

“ஸ்கூல் இல்லையா?” என,

“இருக்கு, ஆனா சித்தப்பா லீவ் போட சொன்னாங்க!” என்றான்.

அப்போதும் வர்ஷினி மேல் இருந்த பிரணவி அன்னியமாய்  ஈஸ்வரை பார்த்திருக்க,

“ஏன் சரண் இப்படி பார்க்கிறா?”

“அதுவா… சித்தப்பா கொள்ளை கூட்டத் தலைவன் மாதிரி இருக்கார். அதுதான்..” என்று சரண் ரகசியம் பேசிய விதத்தில் வர்ஷினிக்கு சிரிப்பு வர, வாய் விட்டு கலகல வென்று சிரித்தாள்.

அதை ஒரு முறுவலோடு பார்த்திருந்தான் ஈஸ்வர், அவன் அப்படி தான் இருக்கின்றானா என்று வர்ஷினி  அவனின் தோற்றத்தை ஆராய்ந்து பார்த்தாள்.

நீள முடி, அதை பின்புறம் சிறிய பேன்ட் போட்டிருக்க கூடவே அவனின் பிரெஞ்சு பியர்ட், எல்லாம் நன்றாக பார்த்தாள்.

அப்படியா இருக்கிறேன் என்று ஈஸ்வரின் பார்வை வர்ஷினியை ஸ்பஷ்டமாய் கேள்வி கேட்க, உன் கேள்வி எனக்கு புரிகின்றது என்ற பாவனையை ஈஸ்வருக்கு காட்டி, அதற்கு பதில் சொல்லாமல் சரணிடம் திரும்பியவள்,

சிரிப்போடே “யார் சொன்னாங்க?” எனக் கேட்க,

“ப்ரணி, சித்தப்பா பக்கத்திலேயே போகலையா, அதனால அம்மா தான் சொன்னாங்க!”

மீண்டும் முகம் கொள்ளா சிரிப்போடே “இப்போ எப்படி வந்தா?” என்று கேட்ட வர்ஷினியிடம்,

“நான் தான் கூட்டிட்டு வந்தேன். சித்தப்பா பக்கம் கூட போகலை!” என்றான் பெரிய மனிதனாக,

“எதுக்கு லீவ் போட்டுட்டு கூட்டிட்டு வந்திருக்கீங்க” என்றாள் ஈஸ்வரைப் பார்த்து,

“உன்னோட பர்த்டே செலப்ரேட் பண்ண!” என்றான்.

“என் பர்த்டே வா, அது நாளைக்கு தானே!”

“எஸ்! ஆனா அட்வான்ஸ்டா செலப்ரேட் பண்றோம். போன பர்த்டேக்கு ரொம்ப ஒரு கசப்பான நினைவைக் கொடுத்தேன், அடுத்த பர்த்டேக்கு நினைக்கத் தோணும். அது ஞாபகம் வரும் போது, உனக்கு வேற நினைக்க நல்ல நினைவுகள் வேணும் இல்லையா? அதுக்கு தான் பர்த்டேக்கு முதல் நாளே செலப்ரேஷன்!” என்றான்.

இதற்கு அவளுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை, ஆனாலும் என்ன தைரியம் என்று தோன்றியது. “செய்வதையும் செய்து விட்டு இப்போது அதை மறக்க வைக்கின்றானா? முடிகின்றதா பார்ப்போம்!” என்று தோன்றியது.

கூடவே “ஹேய் வர்ஷி, அவன் புத்திசாலி, உனக்கு நினைக்க வேறு நல்ல நினைவுகள் என்று சொல்கின்றான், அவன் நல்லவன் என்று சொல்லவில்லை, மன்னிப்பு கேட்கவில்லை, அதை மறந்து விடு என்றும் சொல்லவில்லை”

அவனின் இந்த அணுகுமுறையில் புன்னகை வந்தது. முயன்று அடக்கினாள். மனமும் லேசானது.

முடிந்தவரை வர்ஷினியின் பார்வை தவிர்த்து பேசிக் கொண்டிருந்தான். அதனால் அவளை உணரவில்லை. “எப்படி செலப்ரேட் பண்ணன்னு ரொம்ப யோசிச்சேன், உங்கப்பா வேற ஹாஸ்பிடல்ல, சோ பார்ட்டி எதுவும் பண்ண முடியாது. கூடவே உனக்கு அது பிடிக்குமான்னும் தெரியாது”.

“நான் பார்த்த நாள்ல இருந்து, நீ இவங்க இருக்கும் போது இவங்களோட தான் இருக்கே. அவங்களோட ரொம்ப கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ற, இயல்பா இருக்க. அதுதான் கூட்டி வந்தேன்” என்று விளக்கம் கொடுத்தவன்,

“ஜஸ்ட் ஒரு ஹால்ப் டே ப்ரோக்ராம் தான். யார் கிட்ட பெர்மிஷன் வாங்கணும்!” என்று மொபலை எடுத்தான்.

எடுத்தவனை ஒரு பார்வை பார்த்து நின்றாள்.

பதில் இல்லாது போக நிமிர்ந்து வர்ஷினியை பார்த்தான். அவளின் அந்தப் பார்வையில், அந்த நீல நிறக் கண்களில் தொலைய இருந்த மனதை அடக்கி, “என்ன?” என்பது போல பருவம் உயர்த்திக் கேட்டான்.

“முதல்ல என் கிட்ட பெர்மிஷன் வாங்கணும்” என்று பாவனையாக சொல்ல,

முறுவளித்தவன், “ட்ரீட் குடுக்கப் போறது நீ. உன்கிட்ட எதுக்கு பெர்மிஷன் வாங்கணும், ஜஸ்ட் நாங்க இருப்போம் அவ்வளவு தான்!” என்றான்.

“நான் குடுக்கணும், அதை நீங்க எனக்கு சொல்வீங்களா? இது என்ன அராஜகம்!” என்றவளிடம்.

“நான் குடுத்தா நீ அக்சப்ட் பண்ணுவியோன்னு ஒரு சந்தேகம், அதுதான்! என்றவன்,

“என்ன குடுப்ப தானே! அப்படிதான் இவங்க ரெண்டு பேர் கிட்ட சொல்லி கூட்டிட்டு வந்திருக்கேன்!” என்றான்.

“என்னடா என்ன சொன்னேன்?” என்று சரணிடம் கேட்க,

“வர்ஷி அக்கா அவங்க பர்த்டேக்கு ட்ரீட் குடுக்கறாங்க!” என்றான் சரண் தெளிவாக.

குழந்தைகளை பார்த்ததும் தானாக ஒரு உற்சாகம் வர, வர்ஷினியின் கையினில் இருந்து கொண்டு, என்ன பேசுகிறார்கள் என்று புரியாமல் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்திருந்த ப்ரணவியிடம் “ஓஹ் எஸ்!” என்று அணைத்துக் கொண்டாள்.

“என்ன பண்ணலாம்? தாஸ் அனுப்பிடலாமா, இன்னைக்கு தாஸ் வேலையை நான் பார்க்கட்டுமா!” என்றான் ஈஸ்வரும் உற்சாகமாக, அதே சமயம் சொல்லிய பாவனையில் ஒரு அலட்சியம் கூட.

ஈஸ்வர் கேட்ட விதம் நிச்சயம் வர்ஷினியின் மனம் ரசித்தது!

ஈஸ்வரின் உற்சாகம் பார்த்து, சரணிடம் “என்ன சரண்? யார் கூட போகலாம். அவர் கூடவா, உங்க சித்தப்பா கூடவா!” என்று தாஸை காட்டிக் கேட்டாள். அவளுக்கு தெரியாதா என்ன சரண் என்ன சொல்வான் என்று.

அவளின் குறும்புச் சிரிப்பை ஈஸ்வர் பார்த்திருக்க “சித்தப்பா கூட தான் போகணும்!” என்று சரண் சொல்லவும்,

எதோ பெரிய மனது வந்தவள் போல “அனுப்பிடுங்க அவரை, நீங்களே வாங்க” என்றாள். “ஆனா நீங்க சொன்னா போவாறா?” என்றும் கூடவே கேட்டு,

என்ன செய்யப் போகின்றான் என்று பார்க்க,

அவளின் விழிகளைப் பார்த்தவன், மாறி மாறி வந்து போகும் பாவனைகளில் தன்னை தொலைத்து அதையே பார்த்து நின்றிருந்தான்.

அவன் முன் கை ஆட்டியவளின் முகத்தில் இருந்த பாவனையில் ஈஸ்வருக்கு சிரிப்பு வந்தது. தன்னை மீட்டும் கொண்டான்.

வர்ஷினியின் முகம் காட்டிய பவனை இதுதான், “திரும்பவுமா? நீ திருந்தவே மாட்டாயா?” என்று.

அதற்க்கு திரும்ப பதில் கொடுக்க உடலும் மனமும் துடித்தது, ஆஅனால் அவளின் கண்களை பார்க்க வேண்டுமே. மீண்டும் விஷப் பரீட்சைக்கு அவன் தயாரில்லை.

இதயத்திலே தீப்பிடிக்க…!

 

Advertisement