Advertisement

அத்தியாயம் முப்பத்தி ஒன்பது :

உதிர்ந்த வார்த்தைகளை கோர்க்க முடியாது!

“என்னடா உனக்கு பிரச்சனை? உன்னை யார் ஈஸ்வர் கிட்ட இப்படி பேசச் சொன்னது!” என்றான் முரளி பத்துவைப் பார்த்து அவ்வளவு கோபமாக.

“அவர் பேசினார், நான் பேசினேன்!” என்றான் பத்து,

“இப்போ பேசினது இல்லை! எப்போவும் நீ அவனுக்கு திமிர் தான் சொல்ற, அலட்சியமா நடந்துக்குவான், யாரையும் மதிக்க மாட்டான் சொல்ற, அவன் அப்படி இருக்குறதுல உனக்கு என்ன பிரச்சனை, அது அவனோட பிறவிக் குணம், உனக்கு பிடிக்காதுன்னு எல்லாம் மாத்த முடியாது புரிஞ்சதா, அவன் அப்படித்தான்!”

“அவன் அப்படியிருந்ததுனால தான் என் ஃபிரண்ட் ஆனான், நான் அவனுக்கு ஃபிரண்ட் ஆனேன், எட்டு வருஷ ஃபிரண்ட்ஷிப்டா, அவனோட அந்த குணம் எனக்குப் பிடிக்கும், எல்லோர் கிட்டயும் பணிவா இருக்கணும்னு என்ன?”

“இப்படி இன்னொரு தரம் மரியாதையில்லாம என் முன்னாடி நீ முதல்ல அவனைப் பேசாத. என் முன்னாடி மட்டுமில்ல எப்பவும் பேசாத! நீ சொன்ன புரிஞ்சிக்குவ, அவன் மாட்டான். ஒரு தடவை மனசுல வேண்டாம் முடிவு பண்ணிட்டான் அப்புறம் கஷ்டம். என்னோட ஃபிரன்ட் மட்டுமில்லை, உனக்கு மச்சான் கூட! உறவை சிதைச்சிக்காதே! ”

“பணம் இருக்கு நம்மகிட்ட, வேற என்ன இருக்கு, இப்போ அவன் கேட்ட கேள்விக்கு உன்னால பதில் சொல்ல முடியுமா” என முரளி பேச, முரளி இப்படிக் கோபப்பட்டு எல்லாம் பார்த்ததேயில்லை பத்து.

பத்து அப்படியே நிற்க, “வாங்க வீட்டுக்குப் போவோம்!” என்று ரஞ்சனி பத்துவை அழைத்து அம்மா வீடு கிளம்பினாள்.  எப்படியாவது ஈஸ்வரின் கோபம் குறைந்து விட வேண்டும். முரளி சொன்னது மிகவும் உண்மை! பத்துவிற்கு புரியவைக்கலாம், ஈஸ்வருக்கும் புரியவைக்கலாம், புரியாதனவல்ல, புரிந்தாலும் சரி செய்ய மாட்டான்! நான் அப்படிதான் என்பான்.

“இல்லை! ரஞ்சனி வேண்டாம்! இப்போ பேசாதே! அவனை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண விடு, ரொம்பக் கோபமா இருப்பான், யாராவது அந்தக் கேள்வி கேட்டா அவனுக்கு அவ்வளவு கோபம் வந்திருக்காது. சொல்லப் போனா நான் பெஸ்ட்ன்னு உனக்கு ப்ரூவ் பண்ண வேண்டிய அவசியமில்லை, போடான்னு தான் அவனோட பதில் இருக்கும். அது பத்துன்றதால தான் அவ்வளவு கோபம்!”

“இப்போ போக வேண்டாம் எல்லாம் அவங்க அவங்க வேலையைப் பாருங்க!” என்று முரளி சொல்ல, தன் அண்ணன் இப்படி அதட்டிப் பேசியே பத்து அப்போதுதான் பார்த்தான்.

ஆனாலும் முரளியிடம் “பொண்ணு கேட்டார் என் கருத்து சொன்னேன்! என்ன தப்பு? அவர் கேட்டா ஓகே சொல்லிடணுமா, சும்மா மிரட்டுறார்! அப்பா ரஞ்சனியை பெண் கேட்டப்போ அவர் எவ்வளவு பேசினார்” என்று பத்து சொல்ல,

ரஞ்சனியின் முகம் சுருங்கி விட்டது. “நான் நீ என்று போட்டி போடும் ஈஸ்வருக்கு என்ன ஒரு காம்ப்ளிமென்ட் இது” என்பது போல. “என் அண்ணனுக்கு குறையா? நான் வேண்டாம் என்று நினைப்பது ஐஸ்வர்யாவிற்காக. ஆனால் ஈஸ்வருக்கு என்ன குறை இப்படி அலசி ஆராய்வது போல!” என்று தோன்ற பத்துவை பார்த்து நின்றாள்.

முரளி பத்துவிற்கு பதில் சொல்லும்முன், ஷாலினி முரளியிடம் திரும்பியவள், “தம்பி பேசினது தப்பு! அதுவும் நம்ம வீட்ல அவங்க இருக்கும் போது பேசினது ரொம்ப தப்பு! ஆனா தம்பி சொன்னது ஈஸ்வர் அண்ணாக்கு எப்படி தெரியும்? உங்க நண்பர்ன்னு ஒரு ஆர்வக் கோளாறுல நீங்க தான் சொல்லி வெச்சீங்களா? உங்களை என்ன செய்ய?” என்று முரளியிடம் திருப்பினாள்.

“அது எனக்கு ஞாபகமில்லை” என்று முரளி தடுமாற,

பத்துவிடம் திரும்பியவள், “மரியாதை அவருக்கு ரொம்பவுமே முக்கியம். எல்லோர் கிட்டயும் பேசற மாதிரி பேச முடியாது. முதல்லே நம்மகிட்ட பண உதவி கேட்டப்போ, மாமா ரஞ்சனியை பெண் கேட்டு பணம் திரும்ப தர வேண்டாம் சொல்லி ரொம்பப் பிரச்சனை ஆச்சு!”

“அப்போவும் என்ன சொன்னார் பெண் கேட்டது தப்பில்லை! அதோட எதுக்கு பணத்தை லிங்க் பண்ணறீங்க. இஷ்டமிருந்தா குடுப்போம், இல்லைன்னா இல்லைன்னு நேரா சொன்னார். அதனால தான் நாம பண உதவி பண்ணினப்போ ஈஸ்வர் ஃபைனான்ஸ் அப்படியே ரஞ்சனிக்கு பாதி எழுதிக் கொடுத்தார், பணம் உறவுக்குள்ள வந்துடக் கூடாதுன்னு”

“யாருக்கும் பணத்தைக் குடுக்காம ஏமாத்தி இருக்கலாம், இல்லை ரஞ்சனிக்கும் குடுக்காம இருக்கலாம். ஆனா அப்படி செய்யலை. அந்த குணம் உங்களுக்கு ஏன் ஞாபகம் வரலை. கொஞ்சமும் யோசிக்காம யாரோ செஞ்சதுக்கு தான் பொறுப்பு எடுத்துகிட்ட இதெல்லாம் செய்ய வெச்சது அவரோட திமிர், அவரோட கர்வம், சொல்லுங்க யாரு இப்படி தூக்கிக் கொடுப்பா, அப்போ அந்த திமிர் என்ன தப்பு?” என்று ஷாலினி கேட்க,

அசந்து விட்டான் பத்து, ஷாலினி அவனை தப்பு சொன்ன போது “என்ன இது புரியாமல் பேசுகின்றார்கள், என்ன தப்பு நான் பேசியதில்!” என்று தோன்றியது, இப்போது அண்ணியின் அணுகுமுறையில் பேச்சற்று நின்றான்.

ஷாலினி அதிகம் பேசாவிட்டாலும் எப்படி எடை போடுகிறாள்  என்று புரிய, மூவருமே அவளை வியந்து தான் பார்த்தனர். ரஞ்சனி அவளின் கையை பிடித்து “தேங்க்ஸ்!” என,

“உன்னோட அண்ணா எனக்கும் அண்ணா தான்! நம்மகிட்ட இருக்குற குறையை நாம பார்க்கணும். பொண்ணு நான், என்னை இந்த வீட்ல கல்யாணம் செஞ்சு குடுக்கும் முன்ன எங்கப்பா அவ்வளவு யோசிச்சார். சாமான்யத்துல ஒத்துக்கலை” ராஜாராம் குறித்து தான் ஷாலினி சொல்கிறாள் என்று புரிந்தது.

“வெளில சொல்லக் கூடாது, மூணு மாசம் எங்கப்பா இவரை டிடக்டிவ் வெச்சு ஃபாலோ பண்ணினார். அப்புறம் தான் ஒத்துகிட்டார். அப்புறம் என்னை கல்யாணம் பண்ணிக்கோ சொன்னார். இப்படி இருக்கும் போது நம்ம பொண்ணை ஈஸ்வர் அண்ணா கேட்கும் போது யோசிக்காம குடுத்துடணும்! அதுதான் புத்திசாலித்தனம்!”

“எனக்கு தெரிஞ்சவரை அண்ணா இன்னும் வீட்ல பேசியிருக்கவே மாட்டார். அவர் தான் கேட்கிறார், நீ சொல்லியிருக்கியா?” என்று ரஞ்சனியிடம் கேட்க,

“இல்லை” என்று தலையாட்டினாள்.

“இதை ஈசியா அங்க பேசிடக் கூடாது முடியாது, சொத்தைக் கூட தூக்கி குடுப்பாங்க! ஆனா இதுக்கு அவங்க வீட்ல ஒத்துக்கவே மாட்டாங்க இது என்னோட அனுமானம். அதனால இன்னும் இதுக்கு தடையா நின்னு உளறாதீங்க!” என்றாள் பத்துவை பார்த்து.

ஈஸ்வர் கோபமாகப் பத்துவிடம் பேசிச் சென்றாலும், அவர்கள் வீட்டு வாசலைக் கடக்கும் போதே அதை விட்டு விட்டான். அவனின் எண்ணம் எல்லாம் வர்ஷினி தான். “தேவையில்லாமல் அவளைக் கோபப்படுத்தி விட்டோம். நீ எதுக்குடா இவ்வவளவு பேசற?” என்று அவனை அவனே திட்டிக் கொண்டு வீட்டை அடைந்தான்.

முரளியும் ஷாலினியும் சென்று விட, ரஞ்சனி பத்துவைப் பார்த்து திரும்பி நின்றாள். அவனின் முகம் ஒரு இயலாமையைக் காட்டியது. அவன் ஈஸ்வரிடம் பேசியது கோபம் தான். ஆனால் இப்போது அதைக் காட்டும் நேரமல்ல என்று புரிந்து அவன் சரியாகட்டும் பேசிக்கொள்ளலாம் என்று பார்த்து நின்றாள்.

“எதுக்கு இப்படி நிக்கிற?”

“இல்லை, விஷ்வா சொன்ன மாதிரி என்னை அடிப்பீங்களோன்னு பார்த்து நிக்கறேன்” என்று ஒரு மென்னகையுடன் சொன்னவளிடம்,

“நிஜமா எனக்கு அப்படித் தோணலை, நீ இருக்குற இடம் எனக்கு தெரியலை, வேற யாருக்கோ தெரியுதுன்னு ரொம்ப ஒரு மாதிரி ஆகிடுச்சு!”

“அதுதான் சொல்றேனே. அவன் என் பின்னாடி சுத்தினான், அதனால தெரிஞ்சிருக்கும்!” என்றாள் ஈசியாக.

“இவ்வளவு டென்ஷன் கொடுத்துட்டு இப்போ கூலா பேசறியா?”

“பின்ன, எங்கண்ணன் எவ்வளவு என்னை பிச்சு பிச்சு வெக்கறான், அது அவ ப்ராப்ளம் இல்லை, அடுத்தவங்க ப்ராபளம்னு, உங்களுக்கு எதுவுமே தெரியலை!”

“ஆமாம்! எதுவுமே தெரியலை!” என்றான் பத்து சலிப்பாக.

“ம்கூம்! நீங்க தேற மாட்டீங்க எங்கண்ணன் இப்போ தானே சொன்னான், எப்பவும் நல்லவனா இருக்காத கொஞ்சம் கெட்டவனா இருன்னு!”

“அதுதான் எனக்கு புரியலை!”

“இவ்வளவு நல்லவரா நீங்க? அவன் சொன்னது கணவன் மனைவின்னா கேள்வி கேட்கணும், அடிச்சிக்கணும் பிடிசிக்கணும்னு. இப்போ நான் சொல்றது, சும்மா பார்த்துட்டே இருக்கக் கூடாது. கணவன்னா அவனுக்கான உரிமையை எடுத்துக்கணும்னு” என்று கிண்டலாக சொல்லிப் போக,

அவளின் கைபிடித்து நகர விடாமல் நிறுத்தினான். “அது தப்பில்லையா? கணவன்னாலும் மனைவிக்கு பிடிக்கலைன்னா நாம உரிமை எடுக்கக் கூடாது இல்லையா?” என்றான் தீவிரமாக. சில மாதங்களாக ரஞ்சனியை நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் பத்துவின் மனதில் நடக்கும் போராட்டம் தான்.

“இதுக்கு தான் எங்க அண்ணா சொன்னான், கொஞ்சம் கெட்டவனா இருன்னு! அப்புறம் நான் ஒன்னு சொல்லவா!” என்று நிறுத்தினாள்.

“என்ன?” என்று பார்த்த பத்துவிடம்,

“விஷ்வாக்கும் எனக்கும் பெரிய பிரச்சனை வந்ததுக்கு காரணமே அவன் கிட்ட சொல்லாம உங்க கிட்ட வந்துட்டேன்னு தான். யோசிச்சு பாருங்க அப்போ பிடிச்சிருந்ததா பிடிக்கலையான்னு எல்லாம் தெரியலை. ஆனா உங்களை நம்பினேன் தானே, உங்க கிட்ட வந்தா என் ப்ராப்ளம்ஸ் சால்வ் ஆகிடும்னு. காதல் எல்லாம் ஈசியா வரும்ங்க. ஆனா நம்பிக்கை உடனே எல்லாம் வராது”

“இதுக்கு மேல உங்க கிட்ட என்ன அஃபக்ஷன் நான் காட்ட முடியும். அதுவுமில்லாம உங்களை பிடிக்கலைன்னு நான் எப்போ சொன்னேன். கல்யாணம்னா கணவன் மனைவிக்குள்ள என்ன நடக்கும்னு தெரியாத சின்னக் குழந்தையா நான். இல்லை, நீங்க பக்கத்துல வந்து நான் விலகியிருக்கேனா, இல்லையே! நானா எப்படி வருவேன்?”

“நீங்க என்ன பண்ணறீங்க, நான் பார்க்காதப்போ எல்லாம் என்னை பார்த்துகிட்டே இருக்கீங்க, நீங்க என்னை பார்க்கணும்ங்கறதுக்காகவே நான் உங்களை பார்க்கிறது இல்லை” என்று சொல்லி,

அவளும் “பசிக்குது சாப்பிடலாம்!” என்று டைனிங் ஹால் போக, பத்து ரஞ்சனியைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

மனது இப்போது தான் சமன் பட்டது. ரஞ்சனியை பற்றி மற்றவர்களுக்கு தெரிகிறது, தனக்கு தெரியவில்லை என்பதில் மனதே விட்டுப் போயிருந்தது. இப்போது இந்த ஈஸ்வரிடம் வேறு தேவையில்லாமல் வார்த்தை விட்டு விட்டேன். என் நேரமே சரியில்லை போல என்று நொந்து கொண்டான்.

திரும்பி அவன் முகத்தைப் பார்த்த ரஞ்சனிக்கு சிரிப்பு வந்தது, “அட வாங்க, பசிக்குது. நான் மதியமும் சாப்பிடலை!” என்று அவன் கை பிடித்து இழுத்துச் செல்ல,

அங்கே வர்ஷினிக்கு ஒரு குறுஞ்செய்தி “என் மேல இருக்கிற கோபத்துல சாப்பிட்டியா இல்லையா? சாப்பிட்டு படு!” என்று ஈஸ்வரிடம் இருந்து.

அந்த மெசேஜை முறைத்துப் பார்த்திருந்தாள் வர்ஷினி.

அவளுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு முரளிக்கு அழைத்தவன் “டேய் வீட்ல எல்லோரும் சாப்பிடீங்களா?” என்றான்.

“தாத்தா முதல்லயே சாப்பிட்டார், நாங்க சாப்பிடோம், பத்துவும் ரஞ்சனியும் இப்போ தான் டைனிங் ஹால் போனாங்க, சத்தம் கேட்குது!”

“அப்புறம்!” என்று ஈஸ்வர் கேட்க,

“அப்புறமா?” என்று யோசித்தவன், “வர்ஷினி, வர்ஷினியைக் கேட்கறியா?” என்று கேட்க, பதில் சொல்லாமல் ஈஸ்வர் வைத்து விட, முரளிக்கு வர்ஷினி சாப்பிட்டது போலத் தெரியவில்லை.

யாரும் சொல்ல வேண்டியதே இல்லை, வர்ஷினி தானாக எப்போதும் சாப்பிட்டு விடுவாள், ஆனாலும்  எப்போதும் ஷாலினி வர்ஷினியின் மேல் ஒரு கண் வைத்து இருப்பாள். அதிலெல்லாம் ஷாலினியை சின்ன குறையும் சொல்ல முடியாது. இன்று நடந்த பிரச்சனைகளில் கர்ப்பிணியான அவள் அசந்து விட, களைப்பில் படுத்து விட்டாள். முரளி அப்படியெல்லாம் அக்கறை எடுத்ததில்லை.

ரஞ்சனி காலையில் கல்லூரி, மாலையில் கிளினிக், இரவு படிப்பு  என மிகவுமே பிசி. அவளுக்கு சாப்பிடவே பத்து சாப்பிட்டாயா என்று பத்து முறை கேட்பான்.

இப்போது முரளி வர்ஷினியின் ரூமின் கதவை தட்ட, கதவை திறந்தவளிடம் “சாப்பிடலையா வர்ஷி?” என,

“பசிக்குதுதான்! போகலாமா, வேண்டாமா, யோசிச்சிட்டு இருந்தேன் முரளிண்ணா!” என்று வர்ஷினி ஒரு சோர்வோடு சொல்லிய விதத்தில், முரளிக்கு கஷ்டமாகப் போய்விட்டது.

“வா சாப்பிடலாம்!” என அழைத்து இறங்கினான்.

வர்ஷினி கூட வருவதால் ஈஸ்வருக்கு அழைக்க முடியவில்லை, “சாப்பிடப் போறா!” என்று ஒரு மெசேஜை தட்டி விட,

“ஒரு பொண்ணை சாப்பிட வைக்கக் கூட முடியலை, அப்புறம் எதுக்குடா அவன் பெரிய இவன் மாதிரி பேசறான்!” என்று பத்துவை திட்டி ஒரு மெசேஜ் போட,

“ஐயோ!” என்றானது முரளிக்கு.

வர்ஷினியை டைனிங் டேபிளில் பத்துவோடும் ரஞ்சனியோடும் அமர்த்தியவன், அவளை சாப்பிட வைக்க பத்துவிடம் ஜாடைக் காட்டி,  தள்ளி வந்து ஈஸ்வருக்கு அழைத்து “டேய்! டேய்! விடுடா, பத்து உன் தங்கச்சி புருஷன் என் தம்பி. இவ்வளவு கோபம் வேண்டாம், நம்ம ஆளுக்கு ஆள் முறைச்சிக்கிட்டு நின்னா நல்லாவா இருக்கும், விடுடா!” என்று கெஞ்சலில் இறங்கினான்.

ஈஸ்வர் ஒன்றை மனதில் வைத்தால், மாற்றுவது முடியாத காரியம் என்று தெரியும். பத்துவிடம் வேற்றுமை பாராட்டினால், பின்பு எப்போதும் அது சங்கடங்களைக் கொடுக்கும் என்று பேச ஆரம்பித்தான்.

தொடாமலேயே அரியப் படுவது சூரியன் சுடுமென்பது! 

 

அத்தியாயம் நாற்பது :

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா! நின்னை சரணடைந்தேன்!

“ஏன் உன் தம்பின்னா திட்டக் கூடாதா?” என,

“நான் எப்போ அப்படி சொன்னேன். திட்டிக்கோ! ஆனா மனசுல வைக்காத! ஒரு வருஷம் கழிச்சு இதை ஞாபகம் வெச்சிருக்குற, இதை விட்டுடுவோம் ப்ளீஸ்!”

“எப்படி மறக்க முடியும், எப்பவும் வர்ஷினி ஞாபகத்துல இருக்கும் போது இதை எப்படி மறக்க முடியும்” என்று முரளியிடம் சொல்லாமல்,    “பெரிய இவனாட்டாம் பேசறான். உனக்காக விடறேன். தங்கை புருஷன்னு நான் ஞாபகம் வைக்கணும், ஆனா தங்கையோட அண்ணன்னு அவன் நினைக்கலை தானே!”

“ஆனா அவனை சொல்லியும் பிரயோஜனமில்லை! எங்க வீட்ல ஒன்னு என்னை நம்பாம வந்து அவனைக் கல்யாணம் பண்ணினா தானே! அது குடுக்குற திமிர், பத்து பேசறான். கல்யாணம் பண்ணியும் இன்னும் முகத்தை முகத்தை பார்த்துட்டு நிக்கறாங்க, இவன் என்னைக் கேள்வி கேட்கறான். எனக்கு கல்யாணம் செஞ்சுக் குடுக்கக் கூடாது சொல்றான், அப்படி செஞ்சு பாருங்க! அப்புறம் உன் தம்பியாவது, தங்கச்சி புருஷனாவது என்ன பண்றேன்னு?” என்றான் கடுமையாக.

முரளி “ப்ளீஸ்” என,

“இரு, இரு, என்ன பண்ணுவேன்னு சொல்லிடறேன், எப்படியும் அவனை எதுவும் செய்ய என் மனசாட்சி இடம் குடுக்காது. ஆனா நான் இனிமே பொண்ணு கேட்க மாட்டேன், பார்க்கலாம் நீங்க என்ன பண்ணறீங்கன்னு, தூக்கிடலாம் தான், ஆனா வர்ஷினியை எந்த வகையிலையும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு ப்ராமிஸ் செஞ்சிருக்கேன்”

“ஆனா எத்தனை வருஷமானாலும், என்னை தவிர யாரோடையும் அவ கல்யாணம் நடக்க விடமாட்டேன். யாராயிருந்தாலும் ஆனதை பார்த்துக்கோங்கடா!”

விஷயம் மிகவும் பெரிதாக முரளிக்கு பட்டது, ஒரு வருடத்திற்கு முன் இருந்த தீவிரத்தை விட அவன் குரலிலேயே இன்னும் தீவிரம் தெரிந்தது.  “ப்ளீஸ் ஈஸ்வர்! இப்படி எல்லாம் பேசாத. என்னோட ஈஸ்வர் இப்படி எல்லாம் கீழ இறங்கமாட்டான்” என்று முரளி மீண்டும் சொல்ல,

“உனக்கு தெரியாது! உன்கிட்ட சொல்லவும் முடியாது! ஈஸ்வர் ரொம்ப இறங்கிட்டான்! ஆனா நீ சொல்லு, ஈஸ்வர் கல்யாணம் பண்ணக் கேட்டா சந்தோஷமா நினைக்க வேண்டாமா? அவனுக்கு குடுக்க வேண்டாம்னு சொல்ற அளவுக்கு என்ன இருக்கு. சில டிரா பேக்ஸ் இருக்கு, அது கண்டிப்பா அடுத்தவங்களுக்கு தெரியாது! நான் வேண்டாம்னு வர்ஷினி சொன்னா நியாயம்! நீங்கல்லாம் ஏன்டா சொல்றீங்க?” என்றான் காட்டமாக.

“எங்க வீட்ல ஒன்னு பணத்தை தொலைச்சு என்னை எல்லோர் கிட்டயும் கையேந்த வெச்சு, ஒண்ணுமில்லாம பண்ணிடுச்சு, அதனால இப்படி அடுத்தவன் எல்லாம் என்னை பெஸ்ட்டான்னு பேச தான் செய்வான். இப்படி ஒரு அண்ணன், இப்படி ஒரு தங்கை! அப்புறம் எவன் என்னை மதிப்பான்!” என்றான் இன்னும் கோபமாக.

குடித்து எங்கேயும் திரும்ப இருக்கிறானோ என்ற பயமும் முரளிக்கு எழ, “எங்கே இருக்குற நீ முதல்ல அதை சொல்லு?” என,

“எங்கயோ இருக்கேன், விடுடா!” என்று தொலைபேசியை வைத்தான்.

வர்ஷினி சாப்பிட்டுக் கொண்டிருக்க, ரஞ்சனியும் பத்துவும் சாப்பிட்டு முடித்து வர்ஷினிக்காக அமர்ந்து இருக்க, “உங்க வீட்டுக்கு ஃபோன் செஞ்சு ஈஸ்வர் அங்க இருக்கானான்னு கேளு ரஞ்சனி!” என்று முரளி சொல்ல,

“ஏன்? என்ன? என்ன இப்போ? என்றாள் ரஞ்சனி பதட்டமாக,

“கேட்கறியா? இல்லை நான் கேட்கட்டா?” என்ற முரளியின் வார்த்தைகள் அவனின் கோபத்தின் அளவைக் காட்டின,

ரஞ்சனி அம்மாவிற்கு அழைத்து, “விஸ்வா இருக்கானாம்மா” என்று கேட்க,

“இப்போ தான் கொஞ்சம் நேரம் முன்ன வந்தான், சாப்பிடக் கூட இல்லை, சாப்பிட சொன்னா, நிறைய சாப்பிட்டேன் ரஞ்சனி வீட்ல சொல்றான். என்ன சாப்பிட்டான்?” என்று அம்மா மலர் கேட்க,

ரஞ்சனியின் முகம் அப்படியே மாறியது, “இல்லைம்மா, இங்க ஸ்னாக்ஸ் மட்டும் தான் சாப்பிட்டான். நீ சாப்பிட வை!” என,

“அவனுக்கா தோணினா தான் எல்லாம்! நாம சொன்னா சாப்பிடுவானா. அவனை உனக்கு தெரியாதா?” என்று அம்மா சொல்ல.

“சரிம்மா” என்று வைத்தவள், தலையைப் பிடித்து அமர,

அவர்களையெல்லாம் பார்த்து “என்ன ஆச்சு?” என்றாள் வர்ஷினி,

“ஒரு சின்ன வாக்குவாதம்” என பத்து சொல்ல,

“என்ன வாக்குவாதம்?” என்றவளிடம்,

“நான் பெஸ்ட்ன்னு பேசினாங்க அதுக்கு”

“அவங்க பெஸ்ட்ன்னு பேசினா நீங்க ஏன் வாக்குவாதம் செய்யணும். அதுல உங்களுக்கு என்ன?” என்று வர்ஷினி பத்துவிடம் கேட்க,

“இப்போது என்ன சொல்வது?” என்று விழித்தனர், அண்ணனைப் பற்றி பேசுவது கஷ்டமாக இருக்க, ரஞ்சனி அந்த இடத்தை விட்டு எழுந்து செல்ல, முரளி “இப்போ பதில் சொல்லு!” என்று பார்த்து நின்றான்.

“அதுவும் ரஞ்சனி அண்ணியோட அண்ணா, அப்போ நீங்க சண்டை போடக் கூடாது இல்லையா? அதுவும் நீங்களே சொல்லியிருக்கீங்க அவருக்கு திமிர்ன்னு. அப்படியிருக்கும் போது நீங்க பெஸ்ட்டான்னு கேட்டா அது அவரை ரொம்ப ஹர்ட் பண்ணும்” என்ற போது உண்டு முடித்திருந்தாள்.

அவளுக்கு ஈஸ்வர் என்ன செய்தான் என்பது வேறு. மனதிற்கு நியாயம் என்று பட்டதை பேச செய்தாள்.

“உன்னுடைய திருமணப் பேச்சை முன்னிட்டு சண்டை” என்று பத்துவோ முரளியோ சொல்லவில்லை.

“கொஞ்சம் கெட்டவங்க தான். ஆனா நிறைய விஷயத்துல நேர்மையா இருக்காங்க. நம்ம எல்லோரும் டவுன் டு எர்த்தா இருக்கணும் நினைக்க கூடாது.  எதுக்கு இந்த பெஸ்ட் பேச்சு வந்தது?” என்றாள்.

அதை அவளிடம் அண்ணன்கள் இருவருமே சொல்ல முயலவில்லை. “எதுக்கு இப்போ திடீர்ன்னு வந்திருக்காங்க?” என்றாள் மீண்டும். முரளிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. பத்துவும் பேசவில்லை. சில நிமிடங்கள் பார்த்தவள், அதன் பிறகு எதுவும் பேசாமல் எழுந்து போய் விட்டாள்.

ஈஸ்வரும் மிகவும் டிஸ்டர்ப்டாக இருக்க, வர்ஷினியிடம் பேசவேண்டும் என்ற பேராவல். மனதில் ஒரு இடைவிடாத அலைபுருதல். எல்லாவற்றையும் தூக்கி தூர வைத்து, அவளை அழைத்தான்.

வர்ஷினி உறங்க ஆயத்தமான போது தான் ஈஸ்வரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு, “எடுப்பதா? வேண்டாமா?” என்று யோசிக்க, அது நின்று, அடுத்த நிமிடம் மெசேஜ், “எடு வர்ஷினி, உங்கண்ணன் கிட்ட போய் உன் தங்கை கிட்ட போன் குடுன்னு சொல்ல வைக்காத!” என திரும்ப அடித்தான்.

எடுத்தவள் “எங்க அண்ணன் கிட்ட சொன்னா பயமா?” என்று அலட்சியமாய் சொல்ல,

அவளின் குரலைக் கேட்டதும் அவனின் அலைபுருதல் மாயமாய் மறைந்தது. “ஹ ஹ” என்று வாய்விட்டு சிரித்தான். “வர்ஷினிக்கு பயம்னு நான் எப்பவுமே சொல்ல மாட்டேன். இது வீணா முரளியை சங்கடப் படுத்த வேண்டாம்னு” என,

அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்தவளிடம் “சாரி” என்றான் சிரிப்பைக் கைவிட்டு ஒரு ஆழ்ந்த குரலில்.

“எதற்கு?” என்றெல்லாம் வர்ஷினி கேட்கவில்லை.

“அது நான் பேசணும்னு நினைக்கறது இல்லை. திமிர் என்னோட பிறவிக் குணமா போச்சு. ஆனா அதையெல்லாம் விட உன்கூட இருக்கும் போது தப்பு தப்பா நடந்துக்கறேன். தப்புன்னு தெரிஞ்சாலும் பேசறேன். சாரி!” என்றவன்,

“நேத்து இருந்து முறைச்சிக்கிட்டே இருக்கே! என்னோட தப்பை விடு! எப்படி இருக்கு உன்னோட காலேஜ்! ஃப்ரீ டைம் என்ன பண்ற?” என்றான் சகஜமாக.

“பேசுவதா? வேண்டாமா?” என்று வர்ஷினி யோசிக்க,

“எப்படி போகுது?” என்று அவளின் ஸ்டடீஸ் பற்றி தான் பேசினான். உண்மையில் வர்ஷினியிடம் வீட்டினர் யாரும் அப்படி பேசியதில்லை. அதாவது படிப்பை பற்றி!

காலேஜ் போகிறாளா? வருகிறாளா? என்ன செய்கின்றாள்? இப்படி தான் இருக்கும். பத்து “காலேஜ்ல எதுவும் ப்ராபளம் இல்லையே, ஓகே தானே!” இப்படி தான் கேட்பான். ஷாலினி சகஜமாக பேசினாலும் படிப்பை பற்றியெல்லாம் பேச மாட்டாள். அவளுக்கு படிப்பு பெரிய அலர்ஜி! ரஞ்சனி உண்மையில் அவளே மிகவும் பிசி. பேசினால் வர்ஷினியிடம், “அளவா சாப்பிடு! எக்ஸர்சைஸ் செய்!” என்று பொதுவான அட்வைஸ் தான்.

அது அவர்களுக்கு ஒரு விஷயம் அல்ல! ஈஸ்வர் கேட்கவும், தயங்கி தயங்கி “நல்லா போகுது!” என்று வர்ஷினியும் பேச ஆரம்பித்தாள். என்ன என்னவோ பேசி வர்ஷினியை சகஜமாக பேச வைக்க முயன்று கொண்டிருந்தான்.

வர்ஷினி அவன் கேட்பதற்கு பதில் சொல்லிக் கொண்டு இருந்தாலும் அதில் தயக்கம் இருந்தது. அது ஈஸ்வருக்கும் புரிந்தது. விடாமல் பேசிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் அவன் கேட்பதற்கு பதில் சொல்லாமல்,

“இப்போ எதுக்கு திடீர்ன்னு வந்திருக்கீங்க?” என,

“என்ன வர்ஷி இது? இது என்னோட ஊர் தானே!” என்றான்.

ஆனாலும் “நீங்க என்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் சொன்னீங்களே?” என,

“இப்போ கூட பண்ணலையே வர்ஷி, எப்போவுமே பண்ண மாட்டேன்! ட்ரஸ்ட் மீ!” என்ற போதும் வர்ஷினி அமைதியாக இருக்க,

“என்ன மாதிரி டிஸ்டர்ப் பண்றேன்? சொல்லு!” என .

“தெரியலை! எனக்கு சொல்லத் தெரியலை, எப்பவும் என் மனசுல ஒரு சின்ன ஓரத்துல நீங்க வந்துடுவீங்களோன்னு ஓடிக்கிட்டே தான் இருக்கும்!” என்று சொல்லிவிட,

“அப்போ என்னை நினைக்கறியா?” என்றான் மனதில் ஒரு மகிழ்வு குமிழ்விட,

எச்சரிக்கையானவள் “நினைக்கிறேன்னா புரியலை? நீங்க என்ன மீன் பண்றீங்க!” என்றாள்.

அவளின் குரலில் இருந்த தயக்கம் எல்லாம் போய் ஒரு உறுதி வந்திருக்க, “மீனும் பண்ணலை, கருவாடும் பண்ணலை!” என்றான் சிரிப்புடன் அவளின் வார்த்தைகளின் எச்சரிக்கை புரிந்து.

“ஐயோ ஜோக்!” என்றவளிடம், “திட்டுறதுக்காவது என்னை நினைக்கிறியா” என ஒரு ஸ்னேக பாவத்தொடு கேட்டான்.

சட்டென்று அமைதியாகிவிட “என்ன வர்ஷி?” என,

“ஒன்னுமில்லை! எனக்கு தூங்கணும்! ஃபோன் வைக்கட்டுமா?” என்றாள்.

ஈஸ்வர் திட்ட என்றதும் அவனின் செய்கை ஞாபகம் வர, தானாக பேச்சு வந்தாலும் ஏன் பேசணும் என்று நிறுத்த முயன்றாள்.

“எப்போவும் பத்து மணிக்கு தூங்கிடுவியா?”

“ஒன்பது மணிக்கெல்லாம் தூங்க வந்துடுவேன்! ஆனா தூக்கமே வராது! எப்படியும் ட்வெல்வ் ஆகிடும்” என்றவள், என்னவோ தான் அதிகம் ஈஸ்வருடன் பேசுவது போலத் தோன்ற, “வை வர்ஷி!” என்று மூளை கட்டளையிட,

“உடம்பு சரியில்லையா? ஆர் யு ஓகே! உன் கண்ணு என்னவோ நான் உன்னை பார்த்தவுடனே வித்தியாசமா தெரிஞ்சது. ஆனா இப்போ ஓகே! உன்னோட ஹெல்த் பார்க்கற தானே, கொஞ்சம் குண்டாயிட்ட நீ, என்ன பண்ற? ஹெல்தியா சாப்பிடறையா இல்லை கேண்டீன் , ஜங்க் ஃபுட்ஸ் நிறைய சாப்பிடறையா?” என்றான் அக்கறையாக.

என்னவோ ஈஸ்வர் பேசப் பேச அழுகை வரும் போல இருந்தது. “இவன் என்கிட்டே மிஸ் பிகேவ் பண்றான். அப்புறம் அப்படிதான் நடந்துக்குவேன் சொல்றான். ஆனா எதுவுமே நடக்காத மாதிரி நல்லா பேசறான். நானும் பேசிட்டு இருக்கேன், ப்ச், வை போனை!” என்று சொல்லிக் கொண்டு “இல்லை, ஐ அம் ஓகே! வெச்சிடறேன்!” என்று வைத்து விட்டாள்.

ஏன் என்று தெரியாமல் ஒரு அழுகை கூட..

அவன் கேட்பது போல “என்ன சாப்பிடறேன்?” என யோசித்து, “குண்டாயிட்டேனா?” என்று அங்கிருந்த டிரெஸ்ஸிங் டேபிள் முன் நின்றாள்.

பிறகு தனியாக இருப்பது ஒரு மாதிரி இருக்க, கதவை திறந்து வெளியே பார்த்தால் யாரும் கண்ணுக்கு தெரியவில்லை, ரூமின் கதவுகளும் மூடியிருந்தது.  சோர்வாக இருக்க, “நீ இங்க இருந்து இருக்கக் கூடாது. ஹாஸ்டல் தான் உனக்கு ஓகே! உனக்கு வீட்டோட  செட்டாகலை போல!” என்று நினைத்தவள், எப்போதும் போலப் போய் உறங்க முயன்றாள்.

“பன்னிரண்டு மணி வரை தூங்காம என்ன பண்றா? பெருசா பேசறாணுங்க? என்ன பண்றாங்க?” என தான் நினைக்கத் தோன்றியது. ரஞ்சனி அங்கே அம்மா வீட்டில் இருந்தவரை ஈஸ்வர் உறங்கப்  போகும் போது தங்கை என்ன செய்கிறாள் என்று ஈஸ்வர் பார்க்காமல் போகவே மாட்டான்.

அங்கே அம்மா, பெரியம்மா, பாட்டி என்று எப்போதும் யாராவது பிள்ளைகளின் மேல் கண் வைத்து இருப்பர். “கல்யாணம் ஆன உடனே ரெண்டு தடியன்களும் பொண்டாட்டி பின்னாடி போயிடறாணுங்களா” இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கோபம் வந்தது. விரைவில் தன்னுடன் அவளை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக ஆரம்பித்தது.

வர்ஷினியின் போனிற்கு ஒரு பைல் அனுப்பியவன், “நீ எவ்வளவு சாமி கும்பிடுவன்னு எனக்கு தெரியாது, கந்த ஷஷ்டி கவசம் அனுப்பியிருக்கேன்! அதை கீழ தரையில உட்கார்ந்து படி! அப்புறம் தூங்கு! இல்லை படிக்க விருப்பம் இல்லையா? கவசம் கேளு! அப்புறம் தூங்கு!” என வந்திருக்க,

அப்படி எல்லாம் யாரும் சொன்னது இல்லை. ஈஸ்வர் சொன்னதை தட்டாமல் செய்தாள். அதைக் கேட்க ஆரம்பித்து, அந்த வரிகளை பார்த்துக் கொண்டே, அதை மனதிலும் ஓட்ட மனதில் ஒரு அமைதி.

அது முடிந்து ஒரு ஐந்து நிமிடத்தில் மீண்டும் ஒரு மெசேஜ்! நேரம் கணித்து சரியாக அனுப்பியிருந்தான். “இந்த லைன்ஸ் தான் நான் இப்போ அதிகம் ஜெபிக்கிறேன்!” என்று.

அவன் என்ன வரிகள் சொல்கிறான் என்று பார்க்க,

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்                                                                     எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்                                                                         பெற்றவன் நீ குரு பொருப்பதுன்கடன்                                                                            பெற்றவள் குற மகள் பெற்றவளாமே                                                                                           பிள்ளையென்றன்பாய் பிரியமளித்து                                                               மைந்தனென் மீதுன் மனமகிழ்ந்தருளி                                                                   தஞ்சமென்றடியார் தழைத்திட அருள் செய்! 

Advertisement