Advertisement

அத்தியாயம் முப்பத்தி எட்டு :

நினைவில் நின்றவள்! அது நீதானே! நீதானே! நீதானே!

“கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் ஃபீல் பண்ணினேன், அதான் போனேன்” என்று ரஞ்சனி பேசும்போது சத்தமே வரவில்லை.

“அறிவிருக்கா உனக்கு! தனியா இருக்கணும்! நான் இங்க இருக்கேன்! ஈவ்னிங் வந்துடுவேன்னு பத்துக்கு மெசேஜ்ஜாவது போட்டிருக்கணும். அவன் உன்னை காணோம்னு எவ்வளவு பயந்துட்டான் தெரியுமா? யாராலையும் சமாதானம் செய்ய முடியலை” என்று ஈஸ்வர் சொன்ன போது ரஞ்சனியின் விழிகள் பத்துவிடம் மன்னிப்பை யாசித்தது.

“நீ எங்கேன்னு தெரியாம அஸ்வின் உன்னை ஏதாவது பண்ணியிருப்பானோன்னு அவனைப் போய் பார்த்தோம்!”

“என்னது அஸ்வின்னா? அவன் வந்துட்டனா? அவனை ஏன் பார்த்தீங்க?” என்றாள் சிறிது குரலுயர்த்தி,

“பண்றது எல்லாம் பண்ணிட்டு எங்களைக் கேள்வி கேட்கறியா, அஸ்வின் மட்டும் தான் உனக்கு ப்ராப்ளம் கொடுப்பான், அதுதான் அவனைத் தேடிப் போனோம். இப்பவும் நீ எங்கே இருப்பேன்னு அவன் தான் சொன்னான். எங்களுக்குத் தெரியவேயில்லை” என்று சொல்லும் போது ஈஸ்வரின் கண்கள் நேரடியாக ரஞ்சனியைக் குற்றம் சாட்ட,

“அவன் தான் ஃபுல் டைம் என் பின்னாடி சுத்தினான். அதனால அவனுக்குத் தெரிஞ்சிருக்கும்!” என்று கம்மிய குரலில் சொல்ல,

“ஃபுல் டைம் உன் பின்னாடி சுத்தினான்னு இப்போ சொல்லு! முன்ன சொல்லியிருக்கியா!”

“அவன் என்னை தொந்தரவு எல்லாம் குடுத்ததில்லை! பிடிச்சிருக்குன்னு காட்டுவான். எனக்கு எரிச்சலா இருக்கும். உன்கிட்ட சொன்னா நீ அவனை தொலைச்சி கட்டிடுவ, அதுதான் சொல்லலை!” என்றவளின் பிடி பத்துவின் புஜத்தை பயத்தில் இன்னும் இறுக்கிப் பிடிக்க,

ஆதரவாக அவளின் கையை பத்து தட்டிக் கொடுக்கத் தான் இறுக்கத்தை தளர்த்தினாள்.

“தொந்தரவு குடுக்கலைன்னா பத்துவை அவசரமா ஏன் கல்யாணம் பண்ணின?” என்றான் தீர்க்கமாக.

“அது கொஞ்சம் மிரட்டிப் பேசினான். உனக்குத் தெரிஞ்சா? அவனை ஏதாவது பண்ணிட்டா? அதுக்கான சேன்ஸ் கொடுக்கவே கூடாதுன்னு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்! இது பத்துக்கு தெரியும்! உங்களுக்குத் தெரியும் தானே! சொன்னேன் தானே!” என்று பத்துவை சாட்சிக்கு இழுத்தாள்.

“சொன்னா!” என்று ஒப்புக் கொடுத்தவன், “தாஸ்கிட்ட சொன்னோம்! தாஸ் கூட போய் மிரட்டிட்டு வந்தான்!” என்று பத்து சொல்ல,

“ப்ச்!” என்று பத்துவை பார்த்து சலித்தவன், “அஸ்வின் எல்லாம் நீங்க டீல் பண்ற ஆளேக் கிடையாது, இதெல்லாம் என்கிட்டே யாருமே சொல்லலை. அதனால தான் வர்ஷினியோட ஃபோட்டோ ப்ராப்ளம் வந்தது. அவன் அதை மிஸ்யுஸ் பண்ணலை. ஓகே! தப்பிச்சிட்டோம்!”

“ஆனா செஞ்சிருந்தா! அவனைக் கொல்லுவோம், குத்துவோம், வெட்டுவோம்ன்னு நாம டைலாக் பேசலாம். ஆனா ஒரு விஷயம் நடந்த பிறகு அதுக்கு பதில் கொடுத்து என்ன பிரயோஜனம்? அது நடக்காம பார்த்துக்கணும் இல்லையா?” என்று பத்துவையும் குற்றம் சாட்டினான்.

“ஏன் சொல்றேன்னா, நான் அனுபவிச்சு இருக்கேன். எங்க சாம்ராஜ்யமே சிதைஞ்சு போச்சு, உங்ககிட்ட கையேந்தி நின்னோம். ஆனா அது உறவா மாறிப் போச்சுன்றது வேற விஷயம், ஆனா அதுல அவனை ரொம்பவும் எதுவும் பண்ண முடியலை. ஏன்னா ஜகன்! ஜகன் தான் அதுல முதல் முதற் காரணம். அது தெரியாம அஸ்வின் திரும்ப திரும்ப நிறைய ட்ரபிள் குடுத்தான். வர்ஷினியை இழுத்ததுனால உங்கப்பா ஜெயில் அனுப்பினார்!” என்று ஈஸ்வர் பேசிக் கொண்டேப் போக,

பத்துவின் முகம் சற்று கோபத்தைக் காட்டவும், அதைப் புரிந்தவனாக முரளி “டேய்! ஈஸ்வர்! விடுடா! நிக்க வெச்சு கேள்வி கேட்காத விடு!” என்றான் சமாதானமாக.

எல்லாம் பார்த்திருந்த வர்ஷினியின் மனதில் பதிந்தது இதுதான்! அவன் என் புகைப்படங்களைத் தவறாகக் கூட பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. பெரிய பகையாக இருந்த போதும் தன்னை இன்னும் கீழாக அஸ்வின் காட்டவில்லை என்ற எண்ணம் இன்னும் அவளுக்கு அஸ்வினை நல்லவனாகத் தான் காட்டியது.

அமைதியாக பார்த்திருந்தாள். இப்போது ரஞ்சனியை விட்டு வர்ஷினியிடம் திரும்பிய ஈஸ்வர் “உனக்கு அவனை எப்படித் தெரியும். அவன் நல்லவன்னு அப்படி செர்டிபிகேட் கொடுக்கற. அடிக்கப் போனா நடுவுல வந்து தடுக்கற” என,

இது என்ன புதிதாய் என்று மொத்த வீடும் வர்ஷினியின் புறம் திரும்பியது. வர்ஷினி “சொல்வதா? வேண்டாமா?” என்று யோசிக்க,

கேட்டா பதில் சொல்லணும் என்ற ஈஸ்வரின் அழுத்தமான குரல் அவளை அஸ்வினை சந்தித்த சம்பவத்தைச் சொல்ல வைத்தது.

“அவனோட இருந்து தள்ளி நிக்கறது தான் சேஃப்” என,

“உன்னை விட யாரும் என்னை ஒன்னும் செய்ய முடியாது!” என்று வர்ஷினியின் கண்கள் அப்பட்டமாய் குற்றம் சாட்ட,

இதுவரை பாராமல் இருந்த நீல நிறக் கண்களைப் பார்த்தவன், அதனைப் பார்த்துக் கொண்டே அதில் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா காலையில் பார்த்தது போல என்று அளந்து கொண்டே அவளுக்கு பார்வையால் பதிலும் கொடுத்தான்.

வர்ஷினி என்ன சொல்ல வருகின்றான் என பார்த்து நிற்க, அருகில் வந்தவன் யாருக்கும் கேட்காமல் “என்ன பார்க்கிற?” என்று தாழ்ந்த குரலில் வினவ,

“மத்தவங்க கிட்ட எனக்கு பத்திரமா இருக்க தெரியும்? நீ தான் என்னை ஏதாவது பண்ணுவ!” என,

“ஆமாம்! அப்படித்தான்! நான் எப்பவுமே உன்கிட்ட அப்படித்தான்! என்ன இப்போ?” என்றான் தெனாவெட்டாக வர்ஷினியிடம். மனதில் இருந்த கோபம் அப்படி பதில் சொல்ல வைத்தது. “இந்த அஸ்வின் நல்லவனாம். என்கிட்ட சொல்றா! இருந்துட்டு போறான்! நான் கெட்டவன் தான்! என்ன பண்ணுவாளாம்?” என்ற திமிர் அப்படி பதில் சொல்ல வைத்தது.

யாருக்கும் எதுவும் புரியவில்லை. ஆனாலும் வர்ஷினியை எதோ மிரட்டுகிறான் என்று புரிய. “எதுக்குடா இவ்வளவு கோபம்! என்ன பேசற அவ கிட்ட?” என்று முரளி அருகில் வர.

“அவகிட்டயே கேளு, சொல்லுவா!” என்றான் ஈஸ்வர் கைகளைக் கட்டி.

ரஞ்சனி ஈஸ்வரை தான் பார்த்து இருந்தாள், “எப்படி மாறிவிட்டான் என் அண்ணன்?”

வர்ஷினி எதுவும் பேசாமல், ஈஸ்வரை முறைத்துப் பார்த்தவள், பின்பு திரும்பி அவளின் ரூம் நோக்கி மாடியேறத் துவங்க,

“வர்ஷினி நில்லு!” என்ற முரளியிடம், “போகட்டும் விடு!” என்று சைகை காட்டியவன், அவள் சென்றதும், “எதுவும் யாரும் அவ கிட்ட பேசாதீங்க! செய்யாதேன்னு சொல்ற விஷயத்தை வேணும்னே செய்வா! விட்டுடு! நான் பார்த்துக்கறேன்!” என்றவன்,

“அப்பாக்கு இங்க நடந்தது தெரியாதுன்னு நினைக்கிறேன். யாரும் சொல்லாதீங்க. திரும்ப அஸ்வினை ஏதாவது செய்யப் போறார். ஏற்கனவே ஜெயில் போயிட்டு வந்துட்டான். இப்போதைக்கு அவன் ஒன்னும் பண்ணலை! நாமளா சீண்டி விட வேண்டாம்!” என்றான்.

பத்துவிடம் வந்தவன் “என்னவோ ஒரு கோல்ட் வார் உனக்கும் எனக்கும் இடையில, எப்போ எங்க ஆரம்பிச்சதுன்னு தெரியலை, ரஞ்சிக்கும் உனக்கும் கல்யாணம் நடக்கும் முன்னயே அது உனக்குள்ள இருக்குன்னு நினைக்கிறேன். ரஞ்சி சொல்லாம கொள்ளாம உன்னை கல்யாணம் பண்ணினது எனக்கு எப்பவுமே ஒரு வருத்தம் தான். ஆனா அது அவ மேல! உன் மேலே இல்லை! பத்து ரைட் சாய்ஸ்ன்னு தான் எப்பவும் நினைச்சு இருக்கேன்”

“நீ ரஞ்சியோட கணவன்ட்றதுக்கு முன்னாலயே நீ எனக்கு முரளியோட தம்பி. அதனால் சும்மா ஏதாவது நான் பேசினா முறைச்சு பார்க்கறதை விடணும், நமக்குள்ள சண்டை வந்தா மறுபடியும் இவ தான் ஃபீல் பண்ணுவா” என்று ரஞ்சனியைக் காட்டியவன்,

“அவ மூட் அப்செட் தனியா போயிருக்கான்னா அது அவளோட ப்ராப்ளம்மா இருக்காதுன்னு எனக்குத் தோணுது! அவளோடதுன்னா உன்கிட்ட சொல்லியிருப்பா! வேற ப்ராப்ளமா இருக்கும், மத்தவங்களைப் பத்தி சொல்ல முடியாம தனியா போயிருப்பா!”

“சொல்லாம் கொள்ளாம போயிருக்கா, பார்த்தவுடனே ஒரு அறையாவது விட்டிருக்க வேண்டாம் நீ!” என்று திரும்பவும் பத்துவை முறைத்தான்.

ரஞ்சனி “நல்ல அண்ணன் டா நீ!” என்று பார்க்க,

“கணவன் மனைவிக்குள்ள எல்லாம் ரொம்ப நல்லவங்களா இருக்கணும்னு அவசியமில்லை. அவங்க அவங்க இயல்போட இருக்கணும் கோபமோ சந்தோஷமோ உடனே காட்டணும். ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்ஸோட இருக்கிறது கணவன் மனைவி உறவு கிடையாது”

“எமோஷன்ஸ் ஃபீலிங்க்ஸ் எல்லாம் கண்ட்ரோல் பண்ணி காட்டிக்கிட்டீங்கன்னா அப்புறம் என்ன உறவு இது. ரொம்ப நல்லவனா இருந்து எல்லோரும் உன்னை மாதிரியே இருக்கணும்னு நினைக்காத கொஞ்சம் கெட்டவனா இருக்கலாம்! தப்பில்லை!” என்று சொல்லிக் கிளம்ப,

பத்துவிற்கு சத்தியமாகப் புரியவில்லை, என்ன சொல்கிறான் என்றே!

“டேய், அண்ணா!” என்ற ரஞ்சனி, “சும்மா என்ன ஓவராப் பேசற, அவர் என் வீட்டுக்காரர் ஞாபகம் வெச்சிக்கோ!” என சமாதான முயற்சியில் இறங்க,

“ஞாபகம் இருக்கறதால தான் இதோட மட்டும் நிறுத்தறேன்!” என்றான் ஈஸ்வர் கடுப்பாக.

“இல்லைன்னா, என்ன பண்ணுவ?” என்று ரஞ்சனி விளையாட்டுப் போல கிளம்ப,

“வாயை மூடு!” என்று அவ்வளவு கோபமாகப் பேசினான் ஈஸ்வர், “என்ன சும்மா உன் வீட்டுக்காரர்ன்னு சப்போர்ட் பண்ற. எனக்குப் பொண்ணு குடுக்க வேண்டாம் சொன்னானாமே!” என்ற கேட்ட ஈஸ்வரின் பாவனையில் இருந்த தீவிரம் பத்துவிற்கு முற்றிலும் புதிது. ஒரு வருடத்திற்கு முன் அவன் பெண் கேட்ட சமயம் நடந்த விஷயம். ஆனாலும் ஈஸ்வர் அதை மறக்கவில்லை.

ஈஸ்வரைப் பற்றி நன்கு அறிந்த முரளி, “ஈஸ்வர் என்ன பேசிட்டு இருக்க, வா!” என்று கைப் பிடித்து வெளியே அழைத்துப் போக முயல,

“ஷ், விடுடா!” என்றவன், “சொல்லு! ஏன் குடுக்க வேண்டாம்னு சொன்ன!” என்று பத்துவின் முன் கை கட்டி நின்ற தோரணை யாரையும் பயம் கொள்ளச் செய்யும்.

முரளியும் ரஞ்சனியும் கவலையோடுப் பார்த்திருந்தனர்.

பத்து எதுவும் பேசினால் தப்பாகி விடும் என்று அமைதியாக நிற்க,

ரஞ்சனிக்கு, ஈஸ்வருக்கு மிகவும் கோபம் என்று புரிய “விஷ்வா! என்ன இது?” என்று அண்ணனுக்கும் பத்துவிற்கும் இடையில் நின்றாள்.

“உன் வீட்டுக்கரார்ன்னு சொன்ன தானே! சொல்லு அவர் கிட்ட! ஒரு வருஷமா இவர் அப்பா அவர் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடறார். எதுவுமே அமையலை. இப்போ நான் திரும்ப வந்திருக்கேன் அப்படின்னா அவர் கூப்பிட்டதால தான் நான் வந்தேன்”

“இப்போக் கூட ஒன்னுமில்லை, என்னை விட பெஸ்ட்டா ஒரு மாப்பிள்ளையைக் கொண்டு வந்து உன் வீட்டுக்காரரை நிறுத்தச் சொல்லு! நான் விலகிக்கறேன்” என்றவனது குரலில் அவ்வளவு கோபம், ஒரு இளக்காரமும் கூட,

அந்த இளக்காரம் பத்துவை உசுப்ப, “ஓஹ்! நீங்க எந்த வகையில பெஸ்ட்?” என்றான் ஈஸ்வரின் அதே தொனியில்.

“பத்து!” என்று ஏகக் குரலில் ரஞ்சனியும் முரளியும் அதட்டினர்.

பதிலுக்கு ஈஸ்வர் பத்துவைப் பார்த்த பார்வையில் என்ன இருந்தது என்று பத்துவிற்கு புரியவில்லை.

“சாரி கேளுடா!” என்று முரளி பத்துவிடம் கோபப் பட,

“ஷ்!” என்று முரளியை அடக்கிய ஈஸ்வர்,

“என்ன வகையில பெஸ்ட்டா?” என்று நிறுத்தியவன்,

“என் பேர் கொண்டு இல்லை! என் குடும்பம் கொண்டு இல்லை! என் படிப்பு கொண்டு இல்லை! என் பதவி கொண்டு இல்லை! என் பணம் கொண்டு இல்லை! என் தோற்றம் கொண்டும் இல்லை! என்னோட புத்திசாலித்தனம் எதுவுமே இல்லை! அதைக் கொண்டு நான் பேசலை” என்று மீண்டும் நிறுத்தினான்.

“விஷ்வா! ப்ளீஸ்! கோபப்படாத! அவருக்காக நான் சாரி கேட்கறேன்!” என்று கெஞ்சலில் இறங்க,

“ப்ச்! இது சாரி சொல்ற விஷயம் இல்லை. அவனுக்கு எப்படி பெஸ்ட்ன்னு நான் புரிய வைக்கணும்!” என்ற ஈஸ்வரின் குரலில் இருந்தது ஆற்றாமை மட்டுமே! ஆம்! ஈஸ்வர் என்ற கர்வம் பிடித்த மனிதனைப் பார்த்த இந்த கேள்வி அவனின் தன்மானத்திற்கு பெரிய அடி!

“எனக்கு அவனுக்குப் புரிய வைக்கணும்ன்னு எந்த அவசியமும் கிடையாது. ஆனா இதைப் புரிய வைக்கிறது, உனக்காக, முரளிக்காகக் கிடையாது. ராஜாராம்ன்ற ஒரு மனுஷருக்காக!”

“நான் உதவின்னு கேட்ட நிமிஷம் மறுக்காம செஞ்சார். எவ்வளவு பணம் தெரியுமா? நான் அந்த மாதிரி எல்லாம் யாருக்கும் செய்வனா தெரியாது. அந்த நன்றி எனக்கு நான் இந்த உலகத்துல இருக்குற வரை  இருக்கும். அந்த மனுஷரோட பையன் அப்படின்றதால தான் சொல்றேன். கேட்டுக்க சொல்லு!” என்றவன்,

“எதுல பெஸ்ட்னா, வர்ஷினியை யாரும் என்னை விட புரிஞ்சிக்க முடியாது. என்னை விட நல்லா பார்த்துக்க முடியாதுன்றதுல பெஸ்ட்!” என்று நிறுத்தியவன்,

சுற்றிலும் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தான், அவர்களைத் தவிர ஷாலினி மட்டுமே! வர்ஷினி இருக்கின்றாளா, மேலே இருந்து பார்க்கின்றாளா என்று பார்த்தான். அவள் இல்லை என்று உறுதி படுத்திக் கொண்டு,

“உங்க வீட்ல, இங்க இருக்குற போது, அவளுக்கு எவ்வளவு பணம் இருந்தாலும், ஒரு மரியாதை இருக்கில்லையா இந்த சமூகத்துல, அதை விட என் மனைவின்ற ஒரு ஸ்தானத்துக்கு அவ வரும் போது, அவளுக்கு இந்த சமூகத்துல கிடைக்கப் போற மரியாதைல பெஸ்ட்!” என்று சொல்ல,

பத்து வாயடைத்து நின்றான்.

திரும்ப முரளியைப் பார்த்தவன், “நான் பேசின இந்த வார்த்தைகளை யாராவது வர்ஷினிக்கிட்ட சொல்லி அவளைக் கஷ்டப்படுத்துனீங்க, என்ன பண்ணுவேன்னு தெரியாது!” என்று சொல்லி சென்றான்.

மனதில் ஒரு பதைப்போடு செல்லும் ஈஸ்வரைத் தான் அத்தனை பேரும் பார்த்து நின்றனர்!   அவன் சென்ற நிமிடம் எல்லோரும் பத்துவை முறைத்து பார்க்க,

ஷாலினி ஒரு படி மேலே சென்று, “என்ன தம்பி இப்படிப் பண்ணிட்டீங்க? யார் கிட்ட என்ன பேசணும்னு தெரியாதா? நீங்க பேசினது ரொம்ப தப்பு!” என்று சொல்ல, யாருக்கும் பதில் சொல்ல பத்துவால் முடியவில்லை.

“அதையும் விட ஈஸ்வரின் பேச்சுக்கள் அதற்கு என்ன பதில் சொல்ல முடியும்! சொல்லவே முடியாது! அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மை! அதையும் விட இதைச் சொல்லி அவளை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று மிரட்டிச் சொல்கின்றான்”

நிச்சயமாய் அவன் பெஸ்ட் தான்! ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்!

நான் காதல் மதுவைக் குடித்து விட்டேன்!                                                                     கிண்ணம் உடையும் முன் நானே உடைத்து விட்டேன்!                                                             ஒரு நொடியில் ஞானம் அடைந்து விட்டேன்!                                                                   அந்த ஞானத்தில் யுகங்களை கடந்து விட்டேன்!                                                   

நான் காதல் யோகி! நான் காதல் யோகி! யோகி!!    

 

Advertisement