Advertisement

அத்தியாயம் முப்பத்தி ஏழு :

நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்!!!

பத்து மெதுவாகச் சென்று ரஞ்சனியின் அருகில் அமர்ந்தான்.  யாரோ அமரும் அரவம் உணர்ந்து திரும்பியவளின் முகம் பத்துவைப் பார்ததும் ஆச்சர்யமாக ஒரு சோர்வோடு மலர்ந்தது.

“இங்க எப்படி வந்தீங்க?” என்றவளின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை ஆனால் அது கண்களை எட்டவில்லை. பத்து அவளுக்கு பதில் சொல்லாமல் வர்ஷினிக்கு அழைத்தவன், “உங்க அண்ணி இங்க தான் சாந்தோம் சர்ச்ல இருக்கா!” என்றவன்,

வர்ஷினி வேறு கேட்கும் முன் அழைப்பை துண்டித்தான். பின்பு ரஞ்சனியிடம் திரும்பி “போகலாமா! இன்னும் நேரம் ஆகுமா?” என்று கேட்க,

பத்துவின் முகத்தில் தெரிந்த கடினத் தன்மையில் “போகலாம்” என்று பதில் சொல்லி அவளை எழவும் வைத்தது.

“இப்படி முகத்தை வைத்து அழைத்துப் போக இவன் ஏன் வரவேண்டும், நான் இங்கே இருப்பேன் என்று எப்படித் தெரிந்தது, நான் இப்போதுதானே இவனை அழைக்கலாமா என நினைத்துக் கொண்டிருந்தேன்” என்ற கேள்விகள் மனதில் ஓடினாலும்,

எதுவும் கேட்கவில்லை. காரில் அமர்ந்ததும் கார் வேகம் எடுத்தது. இருவருமே பேசவில்லை. அதுவரையிலும் எதோ தானே ஐஸ்வர்யாவை ஏமாற்றி விட்ட உணர்வில் அமர்ந்திருந்தாள். பத்துவைப் பார்த்ததும் தான் நினைவலைகள் அறுபட, எதற்கு இவ்வளவு கோபமாக இருக்கின்றான் என்று புரியாமல் அவனைப் பார்ப்பதும் ரோடை பார்ப்பதுமாக இருந்தாள்.

வர்ஷினி “அண்ணி, அங்க தான் இருக்காங்களாம்!” என்று ஈஸ்வரைப் பார்த்து சொன்னவள்,

“சாரி! இவங்க எல்லாம் ஓவர் ரியாக்ட் பண்ணிடாங்க! இவருக்காக நான் சாரி கேட்கிறேன்!” என்றாள் அஸ்வினைப் பார்த்து,

“இவனுக்காக இந்தப் பொண்ணு ஏன் சாரி கேட்கணும்?” என்று தான் அஸ்வினிற்குத் தோன்றியது.

உச்ச பட்ச கோபத்தில் ஈஸ்வர் இருந்த போதும், “இவருக்காக நான் சாரி கேட்கிறேன்!” என்ற வர்ஷினியின் வார்த்தை ஈஸ்வரை தேக்கி நிறுத்தியது.

ஈஸ்வரை பார்த்து “சாரி கேளுங்க” என்று சொல்லாமல், இவருக்காக நான் கேட்கிறேன் என்றாள். ஆம் ஈஸ்வர் கேட்க மாட்டான் என்று தெரியும். அதனால் அந்த யோசனையே இல்லை.

ஆனால் தாஸைப் பார்த்து “இவர் கிட்ட சாரி, கேளுங்க!” என்றாள் அஸ்வினைக் காட்டி.

தாஸ் ஈஸ்வரைப் பார்க்க, அதைப் பார்த்த வர்ஷினி “தாஸண்ணா நான் சொல்றதைச் செய்வீங்களா? மாட்டீங்களா?” என்று பெரிய அதட்டல் போட,

“சரிங்க, பாப்பா!” என்றவன், “மன்னிச்சிக்கோ” என்ற வார்த்தையை உதிர்க்க,

“நீங்க கார்ல இருங்க!” என்றாள், ஈஸ்வர் “போ” என்று கண்ணசைக்க தாஸ் வெளியேறினான்.

“நீயும் போ!” என்றான் வர்ஷினியைப் பார்த்து ஈஸ்வர், “நான் போக மாட்டேன்!” என்றெல்லாம் சொல்லவில்லை, “நீங்க வாங்க, நான் போறேன்!” என்று நின்றாள். என்னவோ ஈஸ்வரை தனியாக விட்டால் கைகளில் இல்லாவிட்டாலும் வார்த்தைகளிலாவது அஸ்வினை துவம்சம் செய்து விடுவான் என்ற ஸ்திரமாக தோன்றியது.

“என்ன பிடிவாதம் இது? போ முதல்ல!” என்று ஈஸ்வர் அதட்ட, அதற்கெல்லாம் அசருவேனா என்று கை கட்டி அசையாமல் வர்ஷினி நிற்க,

“வர்ஷி! நான் அஸ்வின் கிட்டப் பேசணும்!” என்றான் ஈஸ்வர் பற்களை கடித்து கோபத்தை அடக்கி,

“என் முன்னாடி பேசுங்க!” என்று அவள் நிற்க,

அஸ்வின் வர்ஷினியைத் தான் பார்த்து இருந்தான். அவர் ஒன்னும் பண்ணி இருக்க மாட்டார் என்று தைரியமாக ஈஸ்வரைப் பார்த்து சொன்னவளை அஸ்வினுக்கு மிகவும் பிடித்து விட்டது.

“அம்மா, அக்கா, தங்கை, ரஞ்சனி என்று அத்தனை பேரும் தன்னை நம்பாத போதும் யார் என்றே தெரியாத இவள் நம்புகின்றாள். ஆனால் ஈஸ்வரை அசிங்கப்படுத்த இந்தப் பெண்ணை நான் இழுத்து விட்டேன் என்ன சொல்ல?” என்று மனது வருத்தப்பட பார்த்திருந்தான்.

“என்னால் ஒரு வருடம் இவன் ஜெயில் போனானா?” என்று பார்த்திருந்தாள் வர்ஷினி.

இருவரும் பார்த்துக் கொள்வதை ஈஸ்வரும் உணர்ந்தான். ஆனால் பார்க்கின்றார்களே என்ற ஒரு பயமோ பதட்டமோ அவன் மனதில் உதிக்கவேயில்லை. இவளிடம் அதட்டல் செல்லுபடியாகாது என்று புரிந்து, “ப்ளீஸ் வர்ஷி! எல்லா விஷயமும் உன் முன்னால பேச முடியாது!” என்றான் தழைந்து.

“அது நான் கேட்கக் கூடாத விஷயம்ன்னு ஃபீல் பண்ணினா அடுத்த நிமிஷம் போயிடுவேன்” என்றாள் பெரிய மனுஷியாக.

ஈஸ்வர் ஒரு பெண்ணிடம் இவ்வளவு பணிவாகப் பேசுகின்றானா என்று அஸ்வின் ஆர்வமாகப் பார்க்க ஆரம்பித்தான். அதுவே காட்டிக் கொடுத்தது வர்ஷினி ஈஸ்வருக்கு எவ்வளவு முக்கியம் என்று. அவனுக்கு தெரிந்த ஈஸ்வர் பெண்ணிடம் என்ன, யாரிடமும் இப்படிப் பேச மாட்டான். ஒரு அலட்சியம், ஒரு அகந்தை, ஒரு மமதை, எப்போதும் பேச்சில் செயலில் மட்டுமல்ல நடை உடை பாவனை என்று அத்தனையிலும் இருக்கும்.

அந்த உடல் மொழி வர்ஷினியுடன் இருக்கும் அந்தப் பொழுதில் இல்லை என்று அஸ்வின் நன்கு உணர்ந்தான். அவனுக்குத் தெரியாதா ஈஸ்வரை, ஒரு வருடம் சில மாதங்கள் முன்பு வரை ரூபாவிற்கு திருமணம் ஆனா நாள் முதலாக ஈஸ்வரின் வீட்டில் தானே அதிக நேரம் இருப்பான். அவர்களின் பணமும் படாடோபமும் அவ்வளவு அஸ்வினை ஈர்க்கும்.

அவர்கள் வீடு அவனுக்குப் பிரமிப்பாக இருக்கும். எல்லோரும் நன்றாக சகஜமாக பேசினாலும் ஈஸ்வர் மட்டும் மதித்துப் பேச மாட்டான். எப்போதும் ஒரு அலட்சியம் இருக்கும் அஸ்வினைப் பார்க்கும் பொழுது. ஜகனுடன் தானே எப்போதும் அஸ்வின் சுற்றுவான். அதனால் அஸ்வினைப் பற்றி ஈஸ்வருக்கு அதிகம் தெரியாத போதும் ஈஸ்வரைப் பற்றி அஸ்வினிற்கு நன்கு அத்துப்படி.

அஸ்வின் ஒரு வருடத்திற்கு முன் அவர்களுக்குத் தெரியாமல் ஃபோட்டோ எடுத்த பொழுதே ஈஸ்வரின் கண்களில் வர்ஷினிக்கான மயக்கம் தெரிந்தது தான். அதன் கொண்டே அந்தப் படங்களை எடுத்தான். ஆம்! அதை அஸ்வின் தானே சுயமாக எடுத்தான்.

ரஞ்சனியின் ரிஷப்ஷன் அன்று மனது கேளாமல் கண்களிலாவது அவளைப் ஒரு முறை பார்ப்போம், இனி அவன் அடுத்தவன் மனைவி. பிறன்மனை நோக்குதலை விட பெரிய பாவம் என்ன இருக்கின்றது என்று புரிந்தவனாக அவன் அந்த ஹோட்டலிற்கு செல்ல, ஈஸ்வர் பாரிலிருந்து வெளியே வந்த போது பார்த்தான். தங்கையின் திருமணம் இவன் குடிக்க சென்றானா? தள்ளாடி இருந்தால் அவனை அடிக்கவாவது செய்வோம் என்று பின் தொடர, வர்ஷினியைப் பார்த்ததும் ஈஸ்வரின் முக மாறுதல் கண்டு மறைந்து அவனைப் புகைப்படம் எடுக்க வைத்தது.

லிஃப்டில் அவர்கள் செல்ல, இவன் படியில் ஓடியது இன்னும் அவன் நினைவில் அவ்வளவு பசுமையாய் இருந்தது. மனதில் அப்போது இருந்த வெறியில் அப்படித்தான் ஓடினான். அவர்கள் வெளியே வரும் போதும் புகைப்படம் எடுத்தான்.

ஆனால் வர்ஷினி உள் போகவும் ஈஸ்வர் வெளியே நிற்கவும், இனி கண்ணில் பட்டால் ஈஸ்வர் தொலைத்து விடுவான் என்று ஹோட்டலை விட்டு வெளியேறி விட்டான். அதனால் அதன் பிறகு ஈஸ்வரின் தலையில் கட்டு வந்த மாயம் அவனுக்குத் தெரியவேயில்லை.

ஆனால் ஈஸ்வர் போன்ற ஒருவன் ஒரு பெண்ணின் பேச்சைக் கேட்டு எதிரியான தன்னை எதுவும் செய்யாமல் நிற்கின்றான். அதுவும் எதிரில் இருப்பவன் தன்னைப் பற்றி என்ன நினைப்பான் என்ற எந்தக் கவலையும் இன்றி. இதை நம்புவது கடினமாக இருந்தது. வேறு யாராவது சொன்னால் நம்பி இருக்க மாட்டான், தானே நேரில் கண்ணில் பார்ப்பதனால் நம்புகின்றான்.

வர்ஷினி எல்லோரையும் விட ஈஸ்வருக்கு மிகவும் ஸ்பெஷல் என்று புரிய வைத்தது!!

அதுவே அஸ்வினை இன்னும் ஊன்றி வர்ஷினியைக் கவனிக்க வைத்தது!!!

இவள் நகர மாட்டாள் என்று புரிந்தவனாக ஈஸ்வர் “போகலாம் வா!” என்றான் வர்ஷினியைப் பார்த்து,

“நீங்க பேசணும் சொன்னீங்க?”

“வா!!!” என்று ஒற்றை வார்த்தை உதிர்க்க,

பேசாமல் அவன் புறம் சென்றவள், சிறிது தூரம் நடந்தவுடனே “ஒரு நிமிஷம்” என்று ஈஸ்வரிடம் சொல்லி அஸ்வினிடம் ஓடி வந்தவள்,

“யாராவது ஏதாவது ட்ரபிள் பண்ணினா எனக்குச் சொல்லுங்க” என்று அவளின் தொலைபேசி எண்ணை சொன்னவள், “ஜஸ்ட் ஒரு ஹாய் மெசேஜ் போடுங்க!” என்று சொல்லிப் போக,

ஈஸ்வர் அதைப் பார்த்தாலும் வர்ஷினியிடம் எதுவும் கேட்கவில்லை! இதைச் செய்யாதே! என்றும் சொல்லவில்லை, அப்படி சொன்னால் இன்னும் தீவிரமாக அஸ்வினிடம் பேசுவாள் என்று தெரியும், ஆனாலும் அஸ்வினைப் பார்ப்பாளோ? அஸ்வின் இவளை ஏதாவது செய்வானோ? என்ற பயம் துளிக் கூட வரவில்லை.

“என்னையேப் பார்க்கலை! இவனையெல்லாம் கண்டிப்பா பார்க்க மாட்டா!” என்று தான் தோன்றியது, கூடவே “என்னையே சமாளிச்சா! இன்னும் அவளை யார் என்ன செய்ய முடியும்!” என்ற எண்ணமும்.

திரும்பி அஸ்வினைப் பார்க்க அஸ்வினும் ஈஸ்வரைப் பார்த்தான். இருவர் பார்வையுமே ஒருவரை ஒருவர் மிகவும் தீவிரமாக அளந்தது.

அஸ்வினிற்கு அப்படி ஒரு ஆச்சர்யம் மனதினில், ஈஸ்வர் இருக்கும் பொழுது அஸ்வின் ரஞ்சனியின் புறம் பார்வையைச் சற்றும் திருப்பக் கூட மாட்டான், அவ்வளவு பயம், கண்டுகொண்டால் தொலைத்து விடுவான் என்று.

“ஆனால் அவனுக்கு மிகவும் பிடித்த பெண்ணைப் பார்க்கின்றேன், என்னை கெட்டவனாக தான் மனதினில் நினைத்துக் இருக்கின்றான். ஆனால் ஒரு கண்டனப் பார்வைக் கூட இல்லையே! எப்படி இது?” என்று யோசித்துப் பார்க்க,

அவனைப் பார்த்த ஈஸ்வர் திரும்பி நடையை வேகமாக போட்டு வெளியேற, வர்ஷினி ஈஸ்வரின் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஏறக் குறைய அவன் பின் மெதுவாக ஓடினாள் என்று தான் சொல்ல வேண்டும்.

அஸ்வினிற்கு புரிந்தது இதுதான்! ரஞ்சனியை நான் ஏதாவது செய்து விடுவேனோ என்று இருக்கும் பயம் வர்ஷினியிடம் இல்லை. அதாவது வர்ஷினியை என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்ற திண்ணமான எண்ணம். அதுதான் என்னை ஒன்றும் செய்யாமல் போகின்றான். அதற்கு காரணம் அவளைச் சுற்றி இருக்கும் ஆட்கள் இல்லை வர்ஷினியின் மேல் இருக்கும் நம்பிக்கை என்று புரிய,

முகத்தில் ஒரு கசப்பான முறுவல், இவனுக்கு மட்டும் எப்படி எல்லாம் சிறப்பாய் அமைகின்றது. சொத்தை முழுவதும் ஜகன் மாவிற்கும் ரஞ்சனிக்கும் கொடுத்து விட்டான் என்று கேள்வி. ஆனாலும் திமிர் குறையவில்லை. இந்தப் பெண்ணிற்கு இவனிற்கும் ஏதோ? அவளின் வார்த்தைக்குக் கட்டுப் பட்டு ஒன்றும் செய்யாமல் நிற்கின்றான்.

அதனால் ராஜாராமின் பணமும் பலமும் இவனோடு சேரும்!!!

“எனக்கு மட்டும் ஏன் எதுவும் சரியாக அமையவில்லை. மனது வெறுத்துப் போனது. ஆனாலும் ஈஸ்வரை அப்படியே விடுவதா? ஏதாவது செய்ய வேண்டுமே!” என்ற எண்ணமும் கூட.

ஒரு வருடம் குண்டர் சட்டத்தில் ஜெயில் போயிருக்கின்றேன் என்ற ஞாபகம் மனதில் ப்ரவாகமாகப் பொங்க, அதற்குக் காரணமான இவனை விடுவதா, இவனைப் சீண்டப் போய்த் தானே தேவையில்லாமல் அந்தப் பெண்ணை இழுத்து ஜெயில் போனேன். நினைவே கசந்தது. என்னை மேலும் மேலும் இந்த ஈஸ்வர் தவறு செய்ய வைத்து விட்டான். நான் இப்படி ஒன்றுமில்லாமல் போய் விட இவன் திரும்ப நிம்மதியாக இருப்பதா?

யோசிக்க ஆரம்பித்தான்.

தாஸ் காரை ஓட்ட, அமைதியாக ஒரு பேச்சும் பேசாமல் ஈஸ்வர் வந்தான். இந்த அஸ்வின் திரும்ப வந்து விட்டான் இன்னும் என்ன செய்யப் போகின்றான் என்ற கேள்வி தான்.

வர்ஷினியின் பொருட்டு இங்கே வந்தோம் என்பது பின்னுக்குப் போய், அஸ்வின் மீண்டும் எந்த வேலையும் செய்து விடக் கூடாது என்பதில் கவனம் வைக்க ஆரம்பித்தான்.

வீடு வந்தனர், அப்போதும் பத்துவும் ரஞ்சனியும் வந்திருக்கவில்லை. ஷாலினி தவிப்போடு இருந்தாள். தாத்தா இவர்களைப் பார்த்ததும் “அந்தப் பயலா?” என்று கேட்க,

“இல்லை தாத்தா! அஸ்வின் எல்லாம் இல்லை! அவனுக்கு எந்த சம்மந்தமும் இல்லை!” என்றான் ஈஸ்வர்.

இனி அவனின் எதிரி அவனின் எதிரி மட்டுமே! வேறு யாரும் நுழைவது அவனை கையாலாகாதவன் என்று காட்டிக் விடும். அதனால் ஈஸ்வர் தாத்தாவிடம் அஸ்வினிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தான்.

முரளி ராஜாராம் ஹாஸ்பிடலில் இருக்க அங்கே சென்றிருந்தான். பத்து நேராக ஹாஸ்பிடல் சென்று அப்பாவைப் பார்க்க, ரஞ்சனி டாக்டரிடம் பேச, நாளை அல்லது மறுநாள் ராஜாராம் வீட்டிற்கு சென்று விடலாம் என்று டாக்டர் கூற, அதன் பிறகே மூவரும் கிளம்பினர்.

வீடு வரும் வரையிலும் கூட நிலைமையின் தீவிரம் ரஞ்சனிக்கு புரியவில்லை.

தாத்தா படுக்கப் போய்விட, அங்கே கால் மேல் கால் போட்டுத் தோரணையாக ஈஸ்வர் அமர்ந்து இவளைப் பார்த்த பார்வையே அவளை குற்றம் சாட்டியது. எதற்கு இப்படிப் பார்க்கின்றான் என்று நினைத்த போதும், ஈஸ்வரின் பார்வை பயத்தைக் கொடுத்தது.

சரி செய்ய முடியாத தப்பை எப்பொழுதாவது ரஞ்சனி செய்யும் போது தான் இந்தப் பார்வை வரும். அனிச்சையாய் பத்துவின் பின் நின்றாள்.

“உன் ஃபோன் எங்கே?” என்றான் ஈஸ்வர்.

“இங்க!” என்று அவளின் கையினில் காட்ட,

“சார்ஜ் இல்லையா?”

“இருக்கே!”

“அப்போ எதுக்கு அதை ஆஃப் பண்ணின!” என்று பற்களுக்கு இடையில் வார்த்தைகளை கடித்து துப்பி ஈஸ்வர் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்த விதம், ரஞ்சனி பயந்து பத்துவின் கையை பிடித்துக் கொண்டாள்.

வர்ஷினியும் அங்கே தான் இருந்தாள், ஈஸ்வரின் கோபத்தை விழிவிரித்து  பார்த்திருந்தாள்.

முரளிக்கு ஈஸ்வரின் கோபம் அறிமுகமான ஒன்றே! ஆனால் பத்துவிற்கும் புதிது தானே. அவனும் ஈஸ்வர் எழுந்த விதத்தைப் பார்த்து ரஞ்சனியை அடித்து விடுவானோ என்று தோன்ற பார்த்து நின்றான்.

பத்து ரஞ்சனியைத் திருமணம் செய்த பிறகு தான் இன்னும் நன்றாக ஈஸ்வரை தெரிந்து கொள்ள முயன்றான். ஆனால் அப்போது ஈஸ்வர் பிரச்சனைகளின் இடையில் இருந்தான், அதோடு மட்டுமல்லாமல்  மனதில் மட்டுமல்லாது செயலிலும் சறுக்கி இருந்ததால் அவனின் இயல்பில் இல்லை.

ஆனால் இப்போது மீண்டு இருந்தான்.

ஈஸ்வரின் கோபத்தை சற்று சுவாரசியமாக பார்த்து இருந்தாள் வர்ஷினி!!!

அந்த நீல நிறக் கண்கள் தன்னை பார்ப்பதை ஈஸ்வர் அறியவில்லை. அவனின் கவனம் எல்லாம் ரஞ்சனியின் மேல் மட்டும் தான்!!!

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணமா!!!

 

 

 

Advertisement