Advertisement

       அத்தியாயம் முப்பத்தி நான்கு :

நிலையற்ற இவ்வுலகில் நிலையானது பற்று.. எதன் மீது என்பது நிலையற்றது.. ஆனால் பற்று நிலையானது!  

தாசிற்கு அஸ்வினைத் தெரியவில்லை.. அஸ்வினின் தோற்றம் பெருமளவு மாறி இருந்தது. நன்கு தெரிந்தவர்கள் என்றால் கண்டுபிடிக்க முடியும்.. ஓரிரு முறை பார்த்தவன் என்பதால் தாடியுடன் இருக்கும் முகம் சுத்தமாய்த் தெரியவில்லை.

அந்தப் பெண்ணை வீட்டில் விட்டு தாஸை ஹாஸ்பிடல் அழைத்துப் போனாள், “நீங்க வீட்டுக்குப் போங்க இன்னைக்கு காலேஜ் வேண்டாம், நான் பார்த்துக்கறேன்” என்ற போதும் விடவில்லை.

“பாப்பா! நீங்க வர்றது தெரிஞ்சா அப்பா திட்டுவாங்க”

“பரவாயில்லை திட்டு வாங்கிகங்க!” என்று சொல்லி தாஸை அழைத்து சென்று அவனுக்கு ஒரு சீ டி ஸ்கேன் ஒன்று எடுத்து ஒன்றுமில்லை என்று சொன்ன பிறகு தான் விட்டாள். அதுவே நேரம் ஆகிவிட, வீட்டில் இறங்கி, “உங்களுக்காக நான் ரெண்டு நாள் எங்கயும் போகலை, நீங்க தைரியமா வீட்ல ரெஸ்ட் எடுங்க தாசண்ணா!” என்றும் சொல்லி அனுப்பினாள்.

வீட்டில் அந்த நேரதிற்கு வரவும், “என்ன?” என்று ஷாலினி கேட்க, வர்ஷினி சொல்ல, அப்போது கூட கமலம்மாவும் இருக்க, “எதுவும் பிரச்சனை இழுத்து விட்டுக்காத!” என்றார் கவலையாக.

“ஹய்யோ பெரியம்மா! எனக்கு இத்தனை பேர் பாதுக்காப்பா இருக்கீங்க யார் என்ன செய்ய முடியும், இப்படியிருக்குற நாம மத்தவங்களுக்கு உதவி செய்யலைன்னா எப்படி? நல்லதே நினைங்க பெரியம்மா, நல்லதே நடக்கும்!” என்று சொல்ல…

ஆனாலும் அவருக்கு மனது சமாதானம் ஆகவில்லை, தாஸை ஒருவன் தாக்கினான் என்றால், இவளையும் ஏதாவது செய்து விட்டால் என்ற பயம் ஓடியது.

அதை மக்களிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை.. கணவர் படுக்கையில் இருந்தாலும் அவரிடம் தான் சொல்லத் தோன்றியது. சொல்லி விட்டார்.

அவரின் எல்லா கடமைகளும் முடிந்து விட்டன என்று சொல்ல முடியாதபடி வர்ஷினி தான் நின்றாள்.

நாள் முழுவதும் யோசனை.  முரளி  வந்ததும் “ஈஸ்வர், வர்ஷினியைக் கல்யாணம் பண்ணக் கேட்கறான் சொன்ன, பின்ன கொஞ்ச நாள் போகட்டும் அவ சின்ன பொண்ணு சொல்றான்னு சொன்ன, இன்னும் அந்த சம்மந்தம் இருக்கா? இல்லையா?” என்றவர்,

“இல்லைன்னா வேறப் பார்க்கலாமே!” என்றார்.

“என்னப்பா திடீர்ன்னு?”

“காலேஜ் முதல் வருஷம் முடிக்கப் போறா.. அவ கல்யாணம் முடிக்காம போனா எனக்கு என்னோட சாவு நிம்மதியைக் கொடுக்காது” என்றார்.

“என்னப்பா இப்படி எல்லாம் பேசறீங்க?” என்றான் அதிர்ந்து..

“ஏதோ ஒன்னு எனக்கு சொல்லுது, அவளைத் தனியா விட்டுப் போகாதன்னு!”

“அப்பா! நாங்கல்லாம் இருக்கோம்! அவளை நல்லாப் பார்த்துக்குவோம்!”

“இது அப்படியில்லை முரளி, நான் சொல்றது அவக் கல்யாணம்!” என்றார்.

“அப்பா!” என்று அருகில் அமர்ந்தவன், ஈஸ்வர் முடிவுல எந்த மாற்றமும் இல்லை” என்றவன், “நம்ம பதிலுக்காகத் தான் காத்திருக்கான்!” என்றான்.

“நம்ம பதிலுக்கா?”

“அது… வர்ஷினி பதிலுக்கு!” என்று சொல்ல,

“எப்போ பேசினான் அவக் கிட்ட, பேச வேண்டிய அவசியம் என்ன?” என்று கோபப்பட..

“அது, அவன் பேசலை! வர்ஷினி தான் பேசியிருக்கா!” என்று தயங்கி சொல்ல,

“எதுவும் என்கிட்டே சொல்லலை! ஏன் படுக்கையில இருந்தா அப்பா ஒன்னுத்துக்கும் உதவாதவன்னு நினைச்சியா?” என்று சொல்ல, படுக்கையில் இருந்தாலும் பேசும் கம்பீரம், கோபம் எதுவும் குறைவில்லை.

“அப்படியெல்லாம் இல்லை அப்பா” என்று பதறியவன், “அது அப்போ, நான் உங்கக் கிட்ட பேசினப்போவே. அதுக்கு அப்புறம் இதைப் பத்தி யாரும் பேசலை” என்றான்.

“வர்ஷினியைக் கூப்பிடு!” என்றார், அவர் சொன்ன விதமே கோபம் என்று காட்ட..

“எதுக்குப்பா?”

“சொன்னதைச் செய்!”

கூப்பிட்டு விட, “என்ன பாப்பா? பெரிய வேலையெல்லாம் அப்பாக் கிட்ட சொல்லாம செய்யறீங்க..” என கோபமாகச் சொல்ல,

பார்த்திருந்த முரளிக்கு பயமாக இருந்தது, ஆனால் வர்ஷினி சிறிதும் கவலைப்படவில்லை

“எதைப் பா சொல்றீங்க?” என்றாள் கூலாக,

“எதையெல்லாம் செய்யற?”

“நிறையச் செய்றேன் எதைன்னு சொல்ல?” என்றாள், அவருக்கு மிகுந்த கோபம் என்று புரிந்தது. எதைச் செய்தோம் புதிதாக என்று யோசனையும் ஓடியது. அதனாலேயே எப்போதையும் விட கூலாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாள்.

அதற்குள் கமலம்மாவும் வந்தார், மூன்று பேரும் இருப்பதை பார்த்து அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்த பத்துவும் வந்தான்.  ஷாலினி வரவில்லை, ரஞ்சனி வீட்டில் இல்லை, தாத்தா உறக்கத்தில்.

வர்ஷினியின் பேச்சில், அந்த வயதுக்கு உரிய துடுக்குத்தனம்.

“நீ ஈஸ்வர் கிட்டப் பேசினியா?”

“இது எப்பொழுது?” என்ற யோசனைகள் ஓட, ஈஸ்வர் ஏதும் சொன்னானோ என்றும் தோன்ற, “ஐயோ, திரும்ப வந்து விட்டானா!” என்ற பதட்டம் ஏறியது.   “இல்லையே!” என்று அவள் ஸ்திரமாக பேச,

வர்ஷினியின் முகத்தில் புரியாத தன்மை பார்த்து, “அப்பா, ரொம்ப முன்னாடி பேசினதை சொல்றார்!” என்று முரளி சொல்ல,

பத்து இப்போது எதற்கு இந்தப் பேச்சு என்பதுப் போல பார்த்தான்.

அதை வாய்விட்டு கேட்கச் செய்தாள் வர்ஷினி, “அதை எதுக்கு இப்போக் கேட்கறீங்க” என்று,

“நீயே ஈஸ்வர் கிட்ட கல்யாணம் வேண்டாம் சொன்னயா? ஏன் சொல்லணும்? எதுன்னாலும் எங்ககிட்ட தானே சொல்லணும்! நீ நேரடையா சொல்வியா பாப்பா? நாங்க எதுக்கு இருக்கோம்!” என்று ராஜாராம் பேச,

“அப்பா! நீங்கல்லாம் சொன்னா கேட்க மாட்டாங்க! சோ, நான் சொன்னேன், அவ்வளவு தான்!  உங்ககிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்லை” என்று வர்ஷினி சொல்ல.

“என்ன பேசுகிறாள்?” என்று ராஜாராம் தீர்க்கமாகப் பார்க்க, பத்து குழம்பிப் போனான். “அவ்வளவு இவளுக்கு ஈஸ்வரைப் பற்றித் தெரியுமா?” என்று முரளி பார்த்திருந்தான்.

திரும்ப அப்பாவிற்கும் மகளிர்க்கும் நிறையப் பேச்சுக்கள், எல்லாம் வேடிக்கை தான் பார்த்திருந்தனர். இடையில் புகும் தைரியமுமில்லை, நிறுத்துங்கள் என்றும் சொல்ல முடியல்லை.

“அப்பா! ரொம்ப நேரமா பேசறீங்க டயர்ட் ஆவீங்க, அப்புறம் பேசலாம்!” என்று வர்ஷினியாகப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைக்க, அதை மகன்களும் மனைவியும் தொடர, அப்போதைக்கு பேச்சை விட்டார், ஆனால் விஷயத்தை விடும் எண்ணம் இல்லை.

மகளின் திருமண விஷயத்தை அவர் நிறுத்த வெல்லாம் இல்லை. அவ்வப்போது என்னணம் தோன்றும் போது அப்பா மூலமாக வரன் பார்ப்பார் தான். மகன்களுக்கு தெரிவிக்க மாட்டார். அவருக்கே யாரையும் பிடிக்கவில்லை. அவருக்கு பிடிக்கும் என்ற நிலை வரும்பொழுது எதிரில் இருப்பவர் வர்ஷினியின் அம்மாவைப் பற்றிய கேள்வியை எழுப்ப.. ஒதுங்கி விடுவார்.

ஆனாலும் இதுவரை ஈஸ்வரின் பக்கத்தில் கூட யாரும் நெருங்கியதில்லை.. அழகு, படிப்பு, பழக்க வழக்கம், கம்பீரம் இப்படி.. பணம் அதிகம் என்று சொல்ல முடியாது. ஈஸ்வர் பைனான்ஸ் வேண்டாம் என்று சொல்லிச் சென்று விட்டானே! ஆனாலும் ஒன்றுமில்லாதவன் என்ற சொல்லுக்குள் வரமாட்டான் என்று தெரியும்.

மிகுந்த யோசனை அவருக்கு.. அந்த யோசனைகளில் உடல் நலம் பின்னடைய.. மறுநாள் காலையில் மருத்துவமனைக்கு மாற்றினர்.

சற்று நிலைப்பட்டதுமே சொன்ன முதல் வார்த்தை “எனக்கு ஈஸ்வரைப் பார்க்கணும்.. அவன் கிட்ட சொல்லு!” என்றார்.

“அப்பா, அவன் சிங்கப்பூர்…” என்று மகன் ஆரம்பிக்க.. “சொன்னேன்னு சொல்லு முரளி!” என்றார்.

முரளி ஈஸ்வரிடம் சொல்ல… ஏன் எதற்கு என்ற கேள்வியெல்லாம் கேட்கவில்லை.. இவன் மதியம் சொல்லல.. நள்ளிரவு சென்னை வந்து விட்டான்.

வந்தது நேரே ஹாஸ்பிடல் தான்.. அங்கே ராஜாராம் படுத்திருக்க.. கூட கமலம்மா மட்டுமே! அவர் உறக்கத்தில்..

வெளியில் வீட்டு வேலையாள் ஒருவன் அமர்ந்திருந்தான். கதவு திறக்கும் சத்ததிர்கே அங்கே பார்த்தார் ராஜாராம்.. ஈஸ்வரை அந்த நேரத்தில் எதிர் பார்க்கவில்லை, அவ்வளவு விரைவிலும் எதிர் பார்க்கவில்லை.

“எப்படி இருக்கீங்கப்பா?” என்றான்..

“இருக்கேன்!” என்பது போலத் தலையை ஆட்டினார். அவருக்கு இருந்த வலி வாதனைகள் அவருக்கு உலக விடுதலையை தான் வேண்டின.

அந்தப் பேச்சிற்கும் கமலம்மா விழிக்கவில்லை.. ஈஸ்வரின் பார்வை அவரைத் தீண்ட.. “இப்போ தான் தூங்கினா!” என்றார்.

“எதுக்குப்பா பார்க்கணும் சொன்னீங்க.. இப்போ பேசலாமா? காலையில வரட்டுமா?” என்றான்.

எந்தக் காரியத்தையும் உடனுக்குடன் செய்ய வேண்டும்.. ராஜாராமிற்குத் தள்ளிப் போடும் பழக்கமில்லை..

“ஒரு தடவை வர்ஷினியைப் பொண்ணு கேட்ட இல்லையா? இன்னும் அது அப்படியே இருக்கா? இல்லை நான் வேறப் பார்க்கட்டுமா?” என்றார். என்னவோ பேச்சில் ஒரு இறுக்கத்தை உணர்ந்தான். கூடவே ஒரு ஒட்டாத தன்மையையும்.

“ஏன்பா இப்போ திடீர்ன்னு கல்யாணப் பேச்சு.. எதுவும் பிரச்சனையை இழுத்து விட்டுக்கிட்டாளா?” என்றான் உடனே.

“இல்லையில்லை!” என்றவர்.. “என்னவோ எனக்குப் பண்ணிட்டா பரவாயில்லைன்னு தோணுது.. சரி உன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வேற பார்க்கலாம்னு.. முறையா அப்பா அம்மாக்கிட்டத் தான் பேசணும்.. ஆனா உன்கிட்ட ஒரு வார்த்தை பேசிடலாம்னு, பின்ன வேற பார்த்துகலாம்னு!” என்றார்.

“வேற பார்க்கறதுக்கு என்னை எதுக்குப்பா கூப்பிடணும்!” என்றான் புன்னைகையுடனே.. “உங்களுக்கு என் மேல என்ன கோபம்?” என்றான் நேரடியாக..

“சொல்லத் தெரியலை!” என்றவர்.. “நீ சொன்ன அடுத்த நிமிஷம் வந்துட்ட எப்படி..  ஏன்?”

“அப்பா! நீங்க முதல்ல எனக்கு முரளியோட அப்பா! அப்புறம் எங்க சாம்ராஜ்யத்தை நிலை குலையாம காப்பாத்திக் கொடுத்தவர், அப்புறம் ரஞ்சனியோட மாமனார்.. அதுக்கு அப்புறம் வர்ஷினியோட அப்பா! உங்க சந்தேகம் தீர்ந்ததா?”

“சோ! உங்களைப் பார்க்க வந்தது முரளிக்காக தான் முதல்ல..  ஆனா எனக்கு வர்ஷினி தான் முதல்ல!” என்றான் திரும்பவும் நேரடியாக, எந்த பயமோ தயக்கமோ இன்றி.

“வர்ஷி உங்கக்கிட்ட என்ன பேசினான்னு எனக்குத் தெரியாது.. முரளி கிட்டயும் இதைத்தான் சொன்னேன், உங்கக்கிட்டையும் இதைத்தான் சொல்றேன்”

“கமலம்மா நிலைமை என்னைக்கும் அவளுக்கு வராது.. என்னோட வாழ்க்கைக்கு வர்ஷினி மட்டும் தான். நீங்க எனக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்தாலும் சரி, குடுக்கலைன்னாலும் சரி”

என்ன தைரியமாகப் பேசுகிறான் என்று பார்த்திருந்தார்.

“ஆனா ஒன்னு சொல்றேன், அவளை சமாளிக்கறது ரொம்ப கஷ்டம் கூட.. எனக்குக் குடுத்துடுங்களேன்..” என்றான். அவனின் வாய்மொழியில் இருந்த உண்மை அவனே அறியாமல். “எங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கும். உங்க பொண்ணு சந்தோஷமா இருப்பா!” என்றான்.. எல்லாம் சிறு புன்னகையுடனே.

“வர்ஷினி கிட்டப் பேசறேன். பேசும் முன்ன உன்கிட்ட கேட்கணும் தான் கூப்பிட்டேன்!”

“உடனே பேசாதீங்க! ஒரு வாரம் போகட்டும்! நான் இங்க தான் ஒரு பத்து நாள் இருப்பேன். நீங்க தூங்குங்க, காலையில வர்றேன். நீங்க பேசின பிறகு நான் எங்க வீட்ல பேசறேன்!” என்று சொல்லிச் சென்றான்.

ஈஸ்வரைப் பார்த்ததும் வீட்டினருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. “விஷ்வா!” என்று பாட்டி கட்டிக் கொண்டார். “ஏன்டா, போற காலத்துக்கு என்னை ஒரு வழி பண்றே? இங்கயே வந்துடேண்டா?” என்றார்.

“நீ என்கூட வந்துடு பாட்டி” என.. “அப்போ நானு?” என்று அம்மா சொல்ல, பெரியம்மா என்று எல்லோரும் சொல்ல,

அதற்குள் சரண் வந்தவன் “சித்தப்பா!” என்று ஏறிக்கொள்ள, பிரணவி அன்ன நடையிட்டு வந்தவள், சித்தப்பாவைப் பார்த்ததும் அப்படியே பாட்டியின் பின் மறைந்தாள். பின்னே அவனின் ஸ்டைலை மாற்றி இருந்தானே.. பெரிய கிருதா விட்டு, தொங்கு மீசை விட்டு..

ரூபா அவனைப் பார்த்ததும் “இதென்ன கொள்ளைக் கூட்டத் தலைவன் மாதிரி இருக்க?” என்று கண்களை விரித்தாள்.

“அடப்பாவி! என்னைப் பார்த்தா உனக்கு அப்படித் தெரியுதா ரூப்ஸ்? இது லேட்டஸ்ட் ஸ்டைல்”  என,

“பரவாயில்லை, என்னோட பப்ளிக்கு பிடிக்குதான்னு பார்க்கலாம்!” என்று மனதிற்குள் நினைத்தான்.

“நிஜம்மா, எப்படி நீட்டா ஹேண்ட்சமா இருப்ப.. இப்போ ஏன் இப்படி ஒரு லுக்?”

“சும்மா!” என்றான்.. அவனின் தோற்றத்தை மாற்ற விரும்பினான்… அவன் தவறி நடந்த போது இருந்த தோற்றம் வர்ஷினியின் நினைவுகளில் ஒரு வேளை இருந்து விட்டால் என்ற நினைவு தான்.

அவன் வந்ததில் வீடே அல்லோலகல்லோப்பட்டது.

ரஞ்சனிக்கும் தகவல் பறக்க, “ஓஹ்! வந்திருக்கின்றானா?” என்று ஓடியது. ஆம்! இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை என்பது இல்லை.. இந்த ஒரு வருடமாக..

அவளின் அம்மா வீட்டில் தெரியும்.. ஈஸ்வர் என்ன காரணம் என்று சொல்லியதில்லை.. ரஞ்சனி நான் சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணினதுல கோபம்!” என்று சொல்லி வைத்திருந்தாள். ஆனால் பத்துவின் வீட்டில் இருவரும் இதை யாருக்கும் தெரியவிடவில்லை. ஏன் பத்துவிற்குக் கூடத் தெரியாது…

எப்படி ஐஸ்வர்யாவை அவனால் ஏமாற்ற முடிந்தது. ரஞ்சனியால் அதைத் தாள முடியவில்லை.

ஐஸ்வர்யாவிடம் பேசிய போது, “நான் முடிக்கலை! உங்க அண்ணா தான் முடிச்சிக்கிட்டாங்க.. முடிஞ்சு போனது முடிஞ்சு போனதாவே இருக்கட்டும்.. நீயுமே இப்போ தள்ளி தானே போன, அப்படியே இருந்துக்கோ.. முடிஞ்சவரை நான் இதுல இருந்து வெளில வரப் பார்க்கிறேன். என்னைத் தொந்தரவு பண்ணாத!” என்றவள் தான், அதன் பிறகு ரஞ்சனியிடம் பேசவில்லை.

“எதுக்கு இப்படிப் பண்ணின?’ என்று ஈஸ்வரிடம் சண்டையிட்ட போது ,

“நான் பதில் சொல்ல வேண்டிய ஒரே ஆள் ஐஸ்வர்யா மட்டும்தான். நீ என்க்கிட்டே எந்தக் கேள்வியும் கேட்கத் தேவையில்லை” என்று முகத்தில் அடித்தார் போலச் சொல்ல..

அந்த பதிலை விட, பதில் சொன்ன விதம்  காயப்படுத்தியது.

அதே சமயம், “இதை யார்க்கிட்டயாவது சொல்லி ஐஸ்வர்யாவை அசிங்கப்படுத்திடாத. இது எங்க பெர்சனல்!” என்றும் சொல்ல..

“பெர்சனல்லா அப்போ நான் யாருமே இல்லையா உனக்கு”

“அப்படி நீ என்னை நினைச்சு இருந்தா, உனக்கு ஒரு பிரச்சனைன்னப்போ என்கிட்டே வந்திருப்ப.. அதை விட்டு எவனையோ கல்யாணம் செஞ்சிருக்க மாட்ட!” என்றான்.

“விஷ்வா!” என்று கத்தியவள், “பத்துவை மரியாதை இல்லாம பேசற வேலை வேண்டாம் புரியுதா!”

“ஓகே! பேசலை, நீ உன் இஷ்டம் போல செஞ்ச. இப்போ எதுக்கு என்னைக் கேள்வி கேட்கற, கேட்காத! உனக்கு பதில் சொல்லணும்னு எனக்கு இல்லை!”

இன்னும் காயப்பட்டு போனாள்.. “என்ன மாறினாலும் உன்னோட ஆணவம் மட்டும் மாறலை விஷ்வா!” என்றவள், அதன் பிறகு ஈஸ்வரிடம் பேசவில்லை..

சில மாதங்கள் ஏதாவது சமாதானம் வைத்திருப்பானா? வந்து பேசுவானா? என்று எதிர்பார்த்திருக்க.. பத்துவிடம் கூடப் பேசினான், அவளிடம் பேசவில்லை.. இதெல்லாம் அவளின் மன அழுத்தத்திற்குக் காரணம்…

இப்போது இதெல்லாம் மனதினில் ஓட.. சோர்ந்து போனாள்.. அதுவும் அவள் ஹாஸ்பிடல் செல்ல அங்கு ஈஸ்வர் இருந்தான்.

இவளைப் பார்த்ததும் ஆர்வமாகப் பார்த்தான்.. எப்படி இருக்கிறாள் என்பதுப் போல கண்களில் ஆராய்ந்தான். ஆனால் அவனாகப் பேசவில்லை. அவளிடம் தான் பேசவில்லை. பத்துவிடம் ஈஸ்வர் தானாக சென்றுப் பேசினான்.

பிடிக்கிறதோ? பிடிக்கவில்லையோ? வீட்டு மாப்பிள்ளை என்ற மரியாதைக் குறைய எதுவும் செய்ய மாட்டான்.

ஈஸ்வர் தன்னிடம் பேசாதது ரஞ்சனிக்கு இன்னும் கோபத்தைக் கிளப்பியது.. அந்தக் கோபத்தையெல்லாம் பத்துவிடம் திருப்பினாள். வேறு அவளும் தான் என்ன செய்வாள்.

“உங்க அண்ணா வந்திருக்காங்க இருக்கியா? இல்லை எதோ ஹாஃல்ப் டே இம்பார்டன்ட் செமினார் சொன்னியே, போறியா?” என்று கேட்க..

“எனக்கு டிரைவர் வேலை பார்க்கறதை விட்டு உருப்படியா ஏதாவது வேலை இருந்தா பாருங்களேன்!” என்று வார்த்தையைக் கடித்து துப்ப..

பத்துவின் முகம் சுருங்கியது. அதுவும் ரஞ்சனிக்கு வருத்தத்தை கொடுக்க..

“சாரி, ரொம்ப சுயனலாவதி ஆகிட்டேன் இல்லை நான்?”

“ப்ச், கணவன்கிட்ட சுயநலமா தான் இருக்கணும், அப்படி இருக்க முடியலைன்னா அது என்ன வாழ்க்கை! பொது நலமா இருக்கணும்னு அவசியமில்லை” என்றவன், “என்ன பிரச்சனை இப்போ?” என்றான் நல்ல விதமாகே..

“தெரியலை! ஐ திங்க் ஐ அம் ட்ரபிலிங் யு!” என்று சொன்ன போதே கண்களில் நீர் திரண்டது.

“நீ வா, எங்கயும் போகாத! முதல்ல வீட்டுக்குப் போகலாம்!” என்று சொல்லி உடனே அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.. ரஞ்சனி சாதரணமாக அழுபவள் எல்லாம் இல்லை. அவளின் முகமும் சரியில்லை.

இதை எல்லாம் ஈஸ்வர் கவனிக்கவில்லை.. அவன் முரளியிடம் பேசிக் கொண்டிருந்தான்.  வாய் தான் பேசிக் கொண்டு இருந்ததே தவிர..

எதுவுமே அப்போதைக்கு ஈஸ்வரின் ஞாபகத்தில் இல்லை… அவனுக்கு வர்ஷினியைப் பார்க்க வேண்டும்.. அவன் எப்படி உணருகிறான் என்று சுய ஆய்வு செய்து கொள்ள வேண்டும். இப்போதைக்கு அவனின் எண்ணங்கள் எல்லாம் அதைச் சுற்றியே.

ஆம்! மிகுந்த பயிற்சிக்கள் மனதிற்கும் உடலிற்கும். முதல் மூன்று மாதங்களில் ஆன்மீகம், யோகா, தீர்த்த யாத்திரை.. ஹிமாலய பயணம், கைலாஷ் மானசரோவர் பயணம் என்று சுற்றினான்.  மனதைக் கட்டுக்குள் வைத்திருக்க முயன்றான். வர்ஷினியைப் பார்க்கும் போது முன்பிருந்த எந்தத் தடுமாற்றதையும் அவன் விரும்பவில்லை.

க்ஷண தடுமாற்றங்கள் அவன் வாழ்வை மட்டுமல்ல, வர்ஷினியின் வாழ்வையும் பொருளில்லாமல் செய்ய வல்லவை என்று புரிந்தவன்.  இங்கே பொருள் எனப்படுவது சுயத்தைக் குறிப்பது. இச்சகத்தின் பொருள் அல்ல.

பின்பு தான் சிங்கப்பூர் பயணம்..அங்கு வசிப்பிடத்தை மாற்றிக் கொண்டான்.. தொழில் ஈஸ்வர் பைனான்ஸ் அட்வைசர்..  அவன் நேரடியாக அங்கு இல்லை.. ஆனாலும் முக்கிய முடிவுகள் அவனின் சம்மதம் பெற்ற பிறகே! அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் ட்ரேடிங்.. பங்குச் சந்தை வர்த்தகம் என நிறைய..

கண்கள் ஆட்கள் உள் வரும் பாதை பார்த்து இருக்க.. அதன் வழியாக வெளியே சென்ற ரஞ்சனியோ பத்துவோ கவனத்தில் பதியவில்லை.

ஒரு கால் பேசுவது போல, முரளியிடம் இருந்து விடுபட்டு மெதுவாக வெளியில் வந்தான்.

அய்யாவிற்கு உடம்பு சரியில்லை என்றதுமே தாஸ் அன்று வந்திருந்தான். அவன் தான் வர்ஷினியை அழைத்து வந்தான். வர்ஷினி இறங்கவும் பத்துவும் ரஞ்சனியும் அவர்களின் காரை நெருங்கவும் சரியாக இருந்தது.

வர்ஷினி அவர்களைப் பார்த்ததும் அருகில் சென்று, “அப்பா, எப்படி இருக்கார்?” என்றுக் கேட்க.. ரஞ்சனி எதுவுமே பதில் சொல்லவில்லை. பத்து தான் “இப்போ நல்லா இருக்கார்” என்று சொல்ல.. ரஞ்சனியை ஆராய்ந்த வர்ஷினி பத்துவிடம் சைகையில், “அழுதார்களா”, என்பது போலக் கேட்க,

“ஆம்!” என்று தலையாட்டினான்..

“நீங்க என்ன பண்ணுனீங்க?” என்று மிரட்டும் வகையில் இடுப்பில் கைவைத்து சைகையில் கேட்க..

“நான் ஒன்னும் பண்ணலை!” என்று கையசைத்தவன், “நாங்க போறோம்!” என்று சைகையில் சொல்லிக் கார் ஏறினான். .

இது எதுவுமே ஈஸ்வரின் கவனத்தில் பதியவில்லை.. அவன் வர்ஷினியைப் பார்த்தது பார்த்தபடி நின்றான். அந்த நீல நிறக் கண்களை அருகில் பார்க்க வேண்டி.. பார்த்தாலும் முன் போல உணர்வுகள் தன்னுள் பிரவாகமாக எழுகிறதா, இல்லை ரசிக்க முற்படுகிறதா என்று.

ஈஸ்வர் வருவான் என்று கனவா கண்டாள் வர்ஷினி. ரஞ்சனி அழுதது மனதினில் ஓட, அவள் தன் வேக நடையுடன் ஈஸ்வரைக் கடந்து செல்ல முயன்றாள். அவள் அவனைக் கவனிக்கவேயில்லை.

அவள் கடக்கும் போது, “ஹாய் வர்ஷ்!” என குரல் கேட்க, “எவன்டா அவன், என் பேரை இப்படி உரிமையாச் சொல்றான்” என்று நினைத்தபடி வர்ஷினி திரும்பினாள். ஈஸ்வரின் எண்ணம் சற்றும் இல்லை, அங்கு ஈஸ்வரை எதிர்பார்க்கவேயில்லை.

“அச்சோ, வந்துவிட்டானா!” என்ற உணர்வு..  ஆம்! விட்டு விலகிவிடுவான் என்று நினைத்ததில்லை. மனதின் ஒரு மூலையில் அவன் ஞாபகம் கூட. ஆனால் இப்படி திடீரென்று குதிப்பான் என்று நினைக்கவில்லை.

விழிவிரித்து அவனைப் பார்த்தாள்… அந்த நீல நிறக் கண்களை பார்க்க தவமிருந்தவன்.. இப்போது அதையேப் பார்த்தான்.

“ஹாய் சொன்னா, சொல்ல மாட்டியா நீ!” என்று சுவாதீனமாகக் கேட்டபடி அவளின் கண்களைத் தான் பார்த்தான். உணர்வுகளும் முன் எழவில்லை, ரசிக்கவும் முடியவில்லை.. மூழ்கவும் தோன்றவில்லை.

ஏதோ ஒரு வித்தியாசம்.. விடாமல் பார்த்தான்.

“என்ன ஆச்சு உன் கண்ணுக்கு?” என்று கேட்க,

“என்ன? என்ன ஆச்சு? ஒன்னும் ஆகலையே!” என்றாள் அவசரமாக.

“இல்லை, என்னவோ வித்தியாசம்” என்று ஈஸ்வர் விடாமல் சொல்ல,

வர்ஷினியின் மனதினில் ஒரு பதட்டம், ஈஸ்வரின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல்.. “ஒன்னுமில்லை!” என்றுச் சொல்லி வேகமாக உள் விரைந்தாள்.

ஈஸ்வரின் மனதினில் ஒரு கலவரம் மூண்டது.

என்னைக் கெடுப்பதற்                                                                                  கெண்ணமுற்றாய்                                                                                                         கெட்ட  மாயையே!  –  நான்                                                                                                                                                                                                        உன்னைக் கெடுப்ப துறுதியென்றே                                                                                        யுணர்  மாயையே! 

( பாரதி )                                                                                        

 

Advertisement